நான், பிரமிள், விசிறிசாமியார்……12

காலையில் ஸ்ரீனிவாஸன் போன் செய்தபோதுதான் இந்தத் தொடரை ஏன் நிறுத்தி விட்டோ ம் என்று தோன்றியது. ஒருவரைப் பற்றி சொல்லும்போது அவர்களுடைய சாதகமான விஷயங்களைப் பற்றி மட்டும் கூற வேண்டும். எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் பலவீனமான அம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். நான் பிரமிளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரைப் பற்றி பல கதைகள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருக்கிறது என்றுதான் யோசிப்பேன். எனக்கு அவரைப் பார்க்கும்போது சில எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதையெல்லாம் வெளிப்படுத்த மாட்டேன். உதாரணமாக அவரைப் பார்க்கும்போது அவர் குளிக்கவே மாட்டாரா என்று தோன்றும். இதையெல்லாம் அவரிடம் கேட்டதில்லை.
அவருடன் பழகிய ஒரு எழுத்தாளருடன் அவர் மயிலாப்பூரில் உள்ள சங்கீத சபா அருகில் சண்டைப் போட்டதாக சொல்வார்கள். நான் ஒருமுறைகூட இதைப் பற்றி அவரிடம் பேசியதே இல்லை. நானும், ஸ்ரீனிவாஸனும் என் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, பிரமிள் ஒருநாள் வந்துவிட்டார்.அப்போதெல்லாம் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பார்க்கும்போது எதாவது குழுவுடன் இணைப்பார்கள். ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் பிரமிளுக்கு ஞானக்கூத்தன் கவிதை ஞாபகம் வந்து விட்டது. ”ஆமாம். பிறர் மேல மூச்சு விடத்தான் விடுவேன்….என்ன பண்ணுவே நீ..” என்று கத்த ஆரம்பித்துவிட்டார். ஸ்ரீனிவாஸனுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. நானும், ஸ்ரீனிவாஸனும் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் ஞானக்கூத்தனுடன் தொடர்புப் படுத்தி ஏன் பேசினார்?
இன்னொரு சம்பவம். ஆத்மாநாம் இரங்கல் கூட்டம் நடந்தபோது, பிரமிளும் திடீரென்று பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியம். ஞானக்கூத்தன் கூட்டத்திற்கு பிரமிள் எப்படி வந்தார் என்று. பிரமிள் ஆத்மாநாம் பற்றி பேச ஆரம்பித்தார். அப்படிப் பேசும்போது அவர் தொண்டை கரகரத்தது. கிட்டத்தட்ட அழக்கூட அழுதுவிட்டார். அந்த சமயத்தில் ஆத்மாநாமின் தற்கொலை பலரைப் பாதித்தது. பிரமிளையும். வெளியேற்றம் என்ற கவிதையை பிரமிள் படித்தார். அந்தக் கவிதை இதோ
சிகரெட்டிலிருந்துவெளியேதப்பிச் செல்லும்புகையைப் போல்என் உடன்பிறப்புகள்நான் சிகரெட்டிலேயேபுகை தங்க வேண்டுமெனக்கூறவில்லைவெளிச் செல்கையில்என்னை நோக்கி ஒரு புன்னகைஒரு கை அசைப்புஒரு மகிழ்ச்சிஇவைகளையேஎதிர்பார்க்கிறேன்அவ்வளவுதானே
பிரமிள் இந்தக் கவிதையைப் படிக்கும்போது விம்மலுடன் படிக்க ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் பிரமிள் பேசியதைக் கேட்டு நான் உணர்ச்சி வசப்பட்டேன். கூட்டம் முடிந்து வீட்டிற்குப் போகும்போது, விமலாதித்த மாமல்லன் என்னைப் பார்த்து, ‘பிரமிளை ஜாக்கிரதையாக அழைத்துக்கொண்டு போங்கள்,’ என்று குறிப்பிட்டார். நான் பிரமிளை அழைத்துக்கொண்டு ஒரு ஓட்டலுக்குச் சென்றேன். பிரமிள் டிபன் சாப்பிட்டுக்கொண்டே, ‘எல்லாம் ஆத்மாநாமைச் சுற்றி இருந்தவர்கள்தான், அவர் தற்கொலைக்குக் காரணம்,’என்றார். ஆத்மாநாம் சுற்றி இருந்த எழுத்தாள நண்பர்கள்தான் அவர் தற்கொலைக்குக் காரணம் என்ற ரீதியில் அவர் பேச ஆரம்பித்தார். நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு ஆத்மாநாமைவிட அவரைச் சுற்றி இருந்த நண்பர்கள் வட்டத்தை நன்றாகத் தெரியும். (இன்னும் வளரும்)

மூன்று கவிதைகள்





செஞ்சுடராகி…

மழையாய் இருந்திருக்க வேண்டிய ஓர் இரவில் நிலவு இருந்தது வெளிச்சதை சிந்திக்கொண்டு எதிர்பாராதவிதமாய் வந்திருந்தாள் மழையின் சீதளத்துடன் மொட்டைமாடியில் நிலாச்சாரலில் இருந்தோம் அவ்வொளியில் நிலவின் ஒரு துகளென விழிகளை கூசச்செய்யும் விதத்திலிருந்தாள் பின்புறத் தோட்டத்துச் சருகுகளில் எங்களுக்கிடையேயான காதல் சரசரத்தது பறந்து திரிந்த மின்மினிப்பூச்சிகள் அவள் விழிளோ என வியந்தேன் வானில் முகம் புதைத்தவளிடம் கூடடையும் ஜோடிப்பறவைகள் மையலைப் பாடிச் சென்றது உதிரும் ஓர் இலையொன்றில் தோன்றிய இசையோடு இளஞ்சிவப்பு உதடுகள் மெதுவாய் சேர்ந்திசைத்தன இதயத்தின் இசைவுகளை புனலின் விரைவென என் உடலில் குருதியின் பாய்ச்சல் கட்டுக்கடங்காமல் விரல்கள் தாவி விரல்களைக் கவ்வ நாணம் புற்றீசல்களாய்ப் பறந்ததும் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள் வெட்கம் வியாப்பித்த காற்றோடு நழுவும் கால்கள் படிகளில் இறங்கிச் செல்ல செஞ்சுடராகிய நான் பின் தொடர்ந்து மழையற்ற ஓர் இரவில் சூல்பிடித்த மேகங்களென கலந்துவிட்டோம் சந்திரவதனத்தின் கொத்துகொத்தான ஒளிக்கதிர்களிடையே.

கருஞ்திராட்சைகளின் கண்கட்டுவித்தை
பரந்த மண் குடிலில் நாணிக் கண்புதைத்தப் பருவப்பெண் மந்த மாருதத்தின் காலத்தில் பசலையில் மருகிக்கொண்டிந்தாள் வேலின் கூர் பதத்துடனிருக்கும் ரதிதேவி நீள்விழியில் கணைக்கால் சதை திமிறி புழுதி கிளப்பிக் கொற்றவன் வீதிகள் மிரளும் பவனியிலிருந்தான் நூலிடையாள் மூங்கிலாய் வளைந்து வாசலில் சர்ப்பமென ஊர்ந்தாள் மையலில் கூடலையும் கலவியில் இறவாமையையும் போதத்தில் உட்புகுந்து அதலபாதலமாய் ஆராய்ந்திருந்தாள் தம் விழிச்சுடர் எரிந்து தணலாகும் வதனமதில் செந்தீ பரவி திளைக்கும் வேந்தன் கயல்விழியாள் இமைத் துடிப்பில் ஒருமிக்கும் மிதப்புடன் நடை பயின்றான் எதிரிகள் வீழ்ந்த பறை அறிப்பில் தலைகள் கொய்த பதம் சிதையா வாளின் செருக்கில் வேங்கையென பிரசன்னமானான் கலையா மோனத்திலிருக்கும் வாடாமல்லி நுகர்ந்திட வீரமகன் கால்தண்டை யானை நடை ஒலிபோல் அதிர முன்கதவை கூச்சத்தால் அறைந்து மூடினாள் வெள்ளிக் காற்சதங்கை ஒளிரும் ஞாயிற்றின் ஒளியோடிய மண்சுவரில் சாய்ந்திருந்து சஞ்சலத்தில் கனத்திருந்தாள் திடகாத்திரன் சுவடுகளில் மண்படிகள் அதிர அப்பேதையவள் மருளினாள் தேக்குக்கதவு வெண்கலப்பிடி கோயிலின் முரட்டுமணியென ஒலிக்க தாழ்பாளில் வைத்தகண் எடுக்காதவேளை திரும்ப ஓங்கி மோதியப் பிடி ஒடியும் காலம் காதலில் ஊறியவள் ஆகிருதி கதவுத் தேகம் திறந்து மீளும் பிரக்ஞை அறவே ஒழித்து மன்மதனில் அரூபமானாள்.

புற்றுநோய் மற்றும் மரணம்
சவஊர்தியையே சவம்போலாக்கியிருந்தன சவத்தில் விழுந்த பூமாலைகள் சந்திற்குள்ளிருந்த சிச்சிறு சதுரங்களாலான வீடு நேற்றைய இரவிலிருந்து கண்கள் வீங்கிக் கிடந்தது கண்ணாடிப்பேழையினுள்ளிருந்தவன் ஆகப்பெரும் வீறிடல்களில்கூட காத்திரமிழக்காது இமைகளைச் சிறு துளியளவும் திறக்காதிருந்தான் நன்றாக நலமாக நடை உடையுடனிருந்தவன் சில நாட்கள் முன்பு மூளைக்குள் வலியென்றான் புற்றுநோய் என்றதும் பாதி இறந்திருந்தான் மரணம் நெருங்கியதறியாமல் மருத்துவமனை போயிருந்தான் இரவில் தூங்கியவன் மறுநாள் விழிப்பானா என்றிருந்தான் இரவுகளோ கழிந்தது ஒரிரவு வந்தது அவ்வுயிரோ போனது உடலுக்குள் ஒளிந்திருந்த மரணத்தைக் கீறினார்கள் மாமிசத்தைக் கொடுத்தார்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பீறிட்ட துக்கங்களின் நடுவிலிருந்து சுழலாமல் நின்றிருந்த சக்கரங்கள் சுழன்றபோது உள்ளிருந்தவன் மயானத்திற்கு மாற்றலாகினான்.

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை


வளைதலும்வளைந்து கொடுத்தலுமானநாணல்களின் துயர்களைநதிகள் ஒருபோதும்கண்டுகொள்வதில்லை
கூடு திரும்பும் ஆவல்தன் காலூன்றிப் பறந்தமலையளவு மிகைத்திருக்கிறதுநாடோடிப் பறவைக்கு
அது நதி நீரை நோக்கும் கணம்காண நேரிடலாம்நாணல்களின் துயரையும்
சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்துதான் கண்டுவந்தஇரயில்பாதையோர நாணல்களின் துயர்இதைவிட அதிகமெனஅது சொல்லும் ஆறுதல்களைநாணல்களோடு நதியும் கேட்கும்பின் வழமைபோலவேசலசலத்தோடும்
எல்லாத்துயர்களையும்சேகரித்த பறவைதன் துயரிறக்கிவரதொலைவானம் ஏகும்அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்கண்டுவரக் கூடும்

பூனைகள்…..பூனைகள்……..பூனைகள் – 24

ஐயப்ப மாதவன்
அணிற்பிள்ளைகள்…பூனைகள்
மாமல்லன் தெருவில் அதிகம் பூனைகள் இருக்கின்றன பல்வேறு நிறங்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு விநோதம் சில அணில்பிள்ளைகளை கொன்று தின்கின்றன பசியின் வெறியோடு சில எஜமானர்களின் அன்பு பிடிக்குள் கிடைக்கும் எலும்புகள் அதிகம் கலந்த மாமிசத் துண்டுகளை முட்களோடு ஒட்டிய சிறிய சதைப்பகுதியோடு கூடிய மீன்களை உண்டு மகிழ்கின்றன அவனது மாடியில் எப்போதும் ஒரு பூனை சதா அலைந்துகொண்டு விசுவாசத்தின் அடையாளமாக மேலும் அவன் உதடசைவுகளுக்கு ஏற்றவாறு தன் நடத்தையை மாற்றியவாறு அவனை விரும்பும் அது ஒரு பெண் பூனை குரல்வழியே துரத்தும் ஓரிரு சமயங்களில் எதாவது தேவைப்படின் அப்புறம் படுத்துக்கிடக்கிறது நிலவின் நிழல்போல பெரிதாயிருந்த அதன் வயிற்றின் எடை குறைந்தவேளை அதைச் சுற்றி மூன்று சிறு குட்டிப்பூனைகள் அவனுக்கு பொறுப்பு கூடிவிட்டதாக் நினைத்துக்கொண்டான் மாடிக்கு வரும் தருணங்களில் அவற்றிற்காக எதாவது தருகிறான் அவ்வாறான பொழுதில் வன்மத்திலிருந்து ஒரு கிழட்டு ஆண் பூனை அங்கு வந்துவிட்டது அவன் அதை அங்கிருக்கும் பொழுதுகளில் விரட்டியடிக்கிறான் அதன் பார்வை அவனை அச்சுறுத்துகிறது குட்டிகள் மாயமாய் போன வேளை தரையெங்கும் ரத்தக் கசிவு பின்னங்கால்கள் சிதைந்த பெண் பூனை பதறிய அவன் விழிகள் அசையாது உறைந்த குருதியை சிதைந்த பெண் பூனையை பார்த்துவிட்டு விலங்குகள் சரணலாயத்திற்கு போன் செய்துகொண்டிருந்தான்.

அறிவிப்பு

நவீன விருட்சம் 87வது இதழ் வெளிவர உள்ளது. navinavirutcham.blogspot.com ல் வெளிவந்த படைப்புகளைப் பிரசுரம் செய்ய உத்தேசம். பெரும்பாலும் கதைகளும் கவிதைகளும் இதழில் வெளிவர உள்ளது. நீண்ட கதைகள் பிரசுரம் செய்யும் சாத்தியம் மிகக் குறைவு. படைப்பாளிகள் புதிதாக எழுதி அனுப்பலாம். ஏற்கனவே blogspot வந்தவை வேறு எங்காவது பிரசுரம் ஆனால் குறிப்பிட மறக்க வேண்டாம்.
அன்புடன்
அழகியசிங்கர்

பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்….23

தாரா கணேசன்
அனாதை இல்லத்துசயாமிப் பூனைக்குக் கண்கள் குருடுஅறை மூலை மென்னிருக்கையில்தன் அரூபக்கனவின் மீசைகள் துடிக்ககைகள் தந்து சந்தித்ததுஅது என்னை முதன் முதலாய்தூக்கியெடுத்து மீசையுரசிக் கொஞ்சித்திரும்பபிரியத்தின் கண் இடுங்கச் சோம்பல்முறித்ததுஅங்குமிங்கும் அலைந்தன கண்ணாடிவிழிகள்தேவதையின் இறக்கைகளுடன்கனவின் அடுக்குகள் ஒளிரமதில் மேல் சயனித்திருந்த அதன்கூவலில் கலைந்தது உறக்கம்மருண்ட பார்வையில் நானும் அதுவும்மயங்கி நின்றவள்துயருற்று நடுங்கும் மென்கரத்தால்கண்கள் சுழற்றி அதற்குப்பொருத்தினேன் அந்தப் பூனை பறவையாகிப் பறந்ததுஅன்றிலிருந்து இரவுகளில்பூனைக்குரலில் பேசும் பறவையொன்றுபின் தொடரவிநோதங்கள் நிறைந்த பூனைகளின்தீவில்அலைகிறேன் கோமேதகக் கண்களுடன்.

குட்டிக்கதைகள்

புதிய ஒளி
புதுமைப்பித்தன்

அன்று இரவெல்லாம் நல்ல மழை.
காற்றும் மழையும் இருளுடன் சேர்ந்து ஒரு பெரிய கூத்து நடத்திவிட்டுச் சென்றன.
இரவு பூராவும் “ஹோ ஹோ” என்று ஓலம். பேயின் எக்காளச் சிரிப்பு. கத்திவீச்சு மின்னல்கள். சட சடா என்ற குமுறல்கள் குடலைக் கலக்கின.
மழை நின்றது.
காற்று ஓய்ந்தது.
சொட்டு சொட்டென்று நீர்த்துளிகள்.
வீட்டு வெளிச்சத்தில் ஒளிபெற்று, ஜன்னல் உயரம் உயிர் பெற்று மறுபடியும் துண்டமாக மறைந்தன.
வீட்டிலே நிசப்தம்….
இந்த ஓலத்திலே அதன் நிரந்தர சப்தத்திலே தூங்கிக் கொண்டிருந்த எனக்கு மழை ஓய்ந்ததும் விழப்பு வந்தது.
அந்த நிசப்தம்; அந்த மௌனம். என் மனத்திலே என்னென்னவோ குவிந்து மறைந்தன. ஒன்றோடொன்று ஓடித் தளர்ந்து மறையும் எண்ணக் குவியல்கள்.
திடீரென்று…
தூளியிலிருந்து குழந்தை…என் குழந்தை..
“அம்பி அம்பி குச்சியை எடுத்துண்டு வா…சீமா எடுத்துண்டு வா..” வீறிட்டு அழுகை.
“என்னடா கண்ணே…அழாதே…” என்று என் மனைவி எழுந்தாள்.
“அம்பி இந்தக் குச்சிதான் ராஜாவாம்…..சாமிடா…நீ கொட்டு அடி. நான் கும்படறேன்..நான்தான் கும்பிடுவேன்..” ஒரே அழுகை.
நான் படுக்கையைவிட்டு எழுந்திருந்தேன்..ஜன்னலருகில் சென்று நின்றேன்…
சிதறிய கருமேகங்களிடையே நட்சத்திரங்கள் கண் சிமிட்டின.
உள்ளே நிசப்தம்.
தாயின் மந்திரம்தான்
குழந்தை எந்தக் கனவு லோகத்திலோ முல்லைச் சிரிப்புடன் மகிழந்து தூங்கினான்.
தாய்….அவளுக்கு என்ன கனவோ
என்ன கனவு..என்ன ஆதரவு…அந்தத் தூக்கத்தின் புன்சிரிப்பு.
குழந்தையின் உதட்டிலே ஒரு களங்கமற்ற, கவலையற்ற மெல்லிய நிலவுச் சிரிப்பு.
தாயின் ஆதரங்களிலே கனிவு, ஆதரவிலே அவற்றின் கனியான சிரிப்பு…
என் மனதில் சாந்தி.
அன்று விடியற்காலம். கீழ்த்திசையில் தாயின் ஆதரவு. குழந்தையின் கனவு – இரண்டும் கலந்த வான் ஒளி.
என் மனதில் ஒரு குதூகலம்.
எனக்கு முன் என் குழந்தையின் மழலை…..
பூவரச மரத்தடியிலே….”இந்தக் குச்சுதாண்டாசாமி….நான்தான் கும்பிடுவேன்….”

குட்டிக்கதைகள்

இரகசிய வேதனை
அசோகமித்திரன்
இருமுறை பஸ் கட்டண விகிதத்தை மாற்றியபோதும் அவன் சங்கடம் தீரவில்லை. முதன்முறை அவன் போகும் இடத்திற்கு 1.75 என்று நிர்ணயத்திருந்தது. கால் ரூபாய் நாணயம் அவனிடம் இருக்காது. இரண்டு ரூபாயாகக் கொடுத்தால் பல நேரங்களில் பாக்கிச் சில்லறை வராது. சில நேரங்களில் வருவது பொதுப் பழக்கத்திலிருந்து மறைந்திட்டட இருபது காசு நாணயமாக இருக்கும். நாட்டில் உள்ள இருபது காசு நாணயங்களெல்லாம் பஸ் கண்டக்டர்களிடம் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
இரண்டாம் முறை மாற்றப்பட்ட கட்டணம் 1.25. கால் ரூபாய் சில்லறை இல்லையென்றால் பஸ்ஸில் ஏறவே பயப்பட வேண்டும். எவ்வளவு கால் நாணயங்களைச் சேர்த்து வைக்க முடியும்? இன்று ஒரு கால் ரூபாய் நாணயமும் இல்லை. ஆனால் நூற்றுக்கணக்கான தடவைகளில் கால் ரூபாய்க்காக கண்டக்டர்கள் கொடுத்த இருபது காசு நாணயங்கள் இருந்தன. ஒரு முறை, ஒரே ஒரு முறை, அவர் கொடுக்கும் இருபது காசை அவர்கள் கால் ரூபாயாக ஏற்றுக்கொள்ளக் கூடாதா?
பஸ்ஸில் பயணம் செய்வதே ஏதோ பிச்சைக்குப் போய் நிற்பது போலச் செய்து விட்டார்கள் கண்டக்டர்களும் டிரைவர்களும். பெரிய பஸ் நிலையங்களில் அந்தக் கேவலத்தைச் சொல்லி முடியாது. எல்லாரும் ஒரு பஸ்ஸில் ஏறி வியர்த்து விருவிருக்கக் காத்திருந்தால் வேறொரு பஸ் காலியாகக் கிளம்பிப் போகும். அப்படியே நிறுத்தி ஏற்றிக்கொண்டால் கால் வைக்க முடியாத குப்பை அல்லது சேறருகே பஸ் நிற்கும். குண்டுப் பெண்மணிகள் பையுடனும் குழந்தைகளுடனும் ஓடி வரும் காட்சி நரகத்தை நம்பாதவர்களையும் நம்ப வைக்கும். கையிலிருக்கும் ஒரு பெட்டியை அனுமதிக்க முடியாது என்று நிர்தாட்சண்யமாக இறக்கி விடுவார்கள். அல்லது ஏற்றவே மாட்டார்கள். இதெல்லாம் அவனை வாட்டி வதைக்க அவன் இம்முறை ஒரு ரூபாயையும் ஒரு இருபது காசு நாணயத்தையும் கண்டக்டரிடம் நீட்டினான். கண்டக்டர் அதை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சீட்டு கிழித்துக் கொடுத்தான்

குட்டிக்கதைகள்

நவீன விருட்சம் 40வது இதழில் (ஜூலை 1998) இப்படி எழுதியிருந்தேன் : குட்டிக் கதைகள் மற்ற எல்லா அம்சங்களுடன் சேர்ந்து பிரசுரமாகும்போது, உரிய கவனத்தை கவர்ந்திருக்குமா என்பது தெரியவில்லை. சமீப காலமாக ஒரு வணிக இதழ் குட்டிக் கதைகள் என்ற பெயரில் பலவற்றைப் பிரசுரம் செய்தும் அவற்றுக்குச் சன்மானமும் அளித்துள்ளது. வணிக இதழ் சந்தையில் வெளியாகும் எதுவும் நாசமாகிவிடும் என்பதற்கு ‘குட்டிக் கதைகள்’ என்ற பெயரில் வெளிவந்தவை உதாரணம். மாறாக சிற்றேடுகள் உரிய கவனத்துடன் கதைகளைப் பிரசுரம் செய்துள்ளன.
‘குட்டிக்கதைகள்’ எப்படி இருக்க வேண்டுமென்று யோசிக்கும்போது, நீதியைச் சொல்லும் ஒன்றாக முடிந்து விடக்கூடாது என்ற காரணத்தால், பாரதியாரின் நீதிக் கதைகளை இதில் சேர்க்கவில்லை. அதேபோல் நடைச்சித்திரமான வார்ப்பில் குட்டிக் கதைகளை அடைத்துவிடக்கூடாது. சம்பவத்தின் ஆழம் மாத்திரம் போதும், சம்பவத்தின் விஸ்தீரணம் தேவையில்லை. கதை ஆரம்பிக்கும் அவசரத்துடன் முடிந்துவிட வேண்டும். திரும்பவும் படிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்பட வேண்டும். அரைப் பக்கத்திலிருந்து இரண்டரை அல்லது மூன்று பக்கங்கள் வரை குட்டிக்கதைகளை எழுதி விடலாம்.
முழுவதும் குட்டிக்கதைகளால் 40வது இதழ் நிரம்பி உள்ளது. ஒரு சில படைப்பாளிகள் இதழுக்காக தந்த கதைகளுடன், சிற்றேடுகள்/புத்தகங்களிலிருந்தும் இன்னும் சில கதைகளும் எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
கண்ணாடிஅசோகமித்திரன்
ஈர்க்கில் பஞ்சைச் சுற்றி கிராம்புத் தைலத்தில் தோய்த்துப் பல் மீது தடவப் போனபோதுதான் தெரிந்தது, அது வெறும் தைலத்தில் போகக்கூடிய பல்வலியல்ல என்று. பல்லின் அடிப்பாகத்தில் கறுப்பாக ஒருவட்டம். அதேபோலப் பல்லின் பக்கவாட்டிலும் பெரிய கறுப்பு வட்டம். பல் சொத்தையாகத் தொடங்கி அடியிலிருந்து புரையோடி இப்போது பக்கங்களுக்கும் பரவியிருக்கிறது. பல் வைத்தியரிடம் போனால் பல் ஒரு சிறு இழப்புக்குத் தாங்காது. இந்த அளவு சொத்தை விழுவதற்குப் பல நாட்கள் தேவைப்பட்டிருக்கும். மாதக் கணக்கில் கூட. ஆனால் இப்போதுதான் கண்ணில் தென்பட்டிருக்கிறது. தினம் ஒருமுறை தலைவாரிக்கொள்ள கண்ணாடி முன் நிற்கிறேனே, அப்போது முகத்தைப் பார்ப்பது கிடையாதோ? இல்லை என்று இப்போது தெரிகிறது. கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக்கொள்ளும் பழக்கமே போய்விட்டது. எவ்வளவு பேர் சமயம் கிடைத்த போதெல்லாம் கண்ணாடி முன் நிற்கிறார்கள்? அவர்களுக்குக் கூச்சம் அதிகம் இருக்கும். அதனால்தான் திரும்பத் திரும்பத் தலையை வாரிக்கொள்கிறார்கள். முகத்தைத் துடைத்துக் கொள்கிறார்கள். பவுடர் போட்டுக் கொள்கிறார்கள். அவனுக்கு அவன் முகம் ஒரு பொருட்டாக இல்லாமல் போய்விட்டது. கூச்சம் எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. அப்படியும் கூறுவதற்கில்லை. பல்லைக் காப்பாற்றியிருக்கும்.

Circle

I was inside the circle
Within me was the circle.
No change in
Those looked as visions
I felt like jumping the circle
I stood near the line
The joy was cut off
Haste and restlessness struck me.
I set out the step to jump over
The circle appeared bigger
Without getting caught up in my leap
The joy that was cut off returned
There is the circle within me
I am within the circle
The circle itself goes on expanding.

(translated by RAA SRINIVASAN)