மூன்று கவிதைகள்





செஞ்சுடராகி…

மழையாய் இருந்திருக்க வேண்டிய ஓர் இரவில் நிலவு இருந்தது வெளிச்சதை சிந்திக்கொண்டு எதிர்பாராதவிதமாய் வந்திருந்தாள் மழையின் சீதளத்துடன் மொட்டைமாடியில் நிலாச்சாரலில் இருந்தோம் அவ்வொளியில் நிலவின் ஒரு துகளென விழிகளை கூசச்செய்யும் விதத்திலிருந்தாள் பின்புறத் தோட்டத்துச் சருகுகளில் எங்களுக்கிடையேயான காதல் சரசரத்தது பறந்து திரிந்த மின்மினிப்பூச்சிகள் அவள் விழிளோ என வியந்தேன் வானில் முகம் புதைத்தவளிடம் கூடடையும் ஜோடிப்பறவைகள் மையலைப் பாடிச் சென்றது உதிரும் ஓர் இலையொன்றில் தோன்றிய இசையோடு இளஞ்சிவப்பு உதடுகள் மெதுவாய் சேர்ந்திசைத்தன இதயத்தின் இசைவுகளை புனலின் விரைவென என் உடலில் குருதியின் பாய்ச்சல் கட்டுக்கடங்காமல் விரல்கள் தாவி விரல்களைக் கவ்வ நாணம் புற்றீசல்களாய்ப் பறந்ததும் தலையைக் கவிழ்த்துக்கொண்டாள் வெட்கம் வியாப்பித்த காற்றோடு நழுவும் கால்கள் படிகளில் இறங்கிச் செல்ல செஞ்சுடராகிய நான் பின் தொடர்ந்து மழையற்ற ஓர் இரவில் சூல்பிடித்த மேகங்களென கலந்துவிட்டோம் சந்திரவதனத்தின் கொத்துகொத்தான ஒளிக்கதிர்களிடையே.

கருஞ்திராட்சைகளின் கண்கட்டுவித்தை
பரந்த மண் குடிலில் நாணிக் கண்புதைத்தப் பருவப்பெண் மந்த மாருதத்தின் காலத்தில் பசலையில் மருகிக்கொண்டிந்தாள் வேலின் கூர் பதத்துடனிருக்கும் ரதிதேவி நீள்விழியில் கணைக்கால் சதை திமிறி புழுதி கிளப்பிக் கொற்றவன் வீதிகள் மிரளும் பவனியிலிருந்தான் நூலிடையாள் மூங்கிலாய் வளைந்து வாசலில் சர்ப்பமென ஊர்ந்தாள் மையலில் கூடலையும் கலவியில் இறவாமையையும் போதத்தில் உட்புகுந்து அதலபாதலமாய் ஆராய்ந்திருந்தாள் தம் விழிச்சுடர் எரிந்து தணலாகும் வதனமதில் செந்தீ பரவி திளைக்கும் வேந்தன் கயல்விழியாள் இமைத் துடிப்பில் ஒருமிக்கும் மிதப்புடன் நடை பயின்றான் எதிரிகள் வீழ்ந்த பறை அறிப்பில் தலைகள் கொய்த பதம் சிதையா வாளின் செருக்கில் வேங்கையென பிரசன்னமானான் கலையா மோனத்திலிருக்கும் வாடாமல்லி நுகர்ந்திட வீரமகன் கால்தண்டை யானை நடை ஒலிபோல் அதிர முன்கதவை கூச்சத்தால் அறைந்து மூடினாள் வெள்ளிக் காற்சதங்கை ஒளிரும் ஞாயிற்றின் ஒளியோடிய மண்சுவரில் சாய்ந்திருந்து சஞ்சலத்தில் கனத்திருந்தாள் திடகாத்திரன் சுவடுகளில் மண்படிகள் அதிர அப்பேதையவள் மருளினாள் தேக்குக்கதவு வெண்கலப்பிடி கோயிலின் முரட்டுமணியென ஒலிக்க தாழ்பாளில் வைத்தகண் எடுக்காதவேளை திரும்ப ஓங்கி மோதியப் பிடி ஒடியும் காலம் காதலில் ஊறியவள் ஆகிருதி கதவுத் தேகம் திறந்து மீளும் பிரக்ஞை அறவே ஒழித்து மன்மதனில் அரூபமானாள்.

புற்றுநோய் மற்றும் மரணம்
சவஊர்தியையே சவம்போலாக்கியிருந்தன சவத்தில் விழுந்த பூமாலைகள் சந்திற்குள்ளிருந்த சிச்சிறு சதுரங்களாலான வீடு நேற்றைய இரவிலிருந்து கண்கள் வீங்கிக் கிடந்தது கண்ணாடிப்பேழையினுள்ளிருந்தவன் ஆகப்பெரும் வீறிடல்களில்கூட காத்திரமிழக்காது இமைகளைச் சிறு துளியளவும் திறக்காதிருந்தான் நன்றாக நலமாக நடை உடையுடனிருந்தவன் சில நாட்கள் முன்பு மூளைக்குள் வலியென்றான் புற்றுநோய் என்றதும் பாதி இறந்திருந்தான் மரணம் நெருங்கியதறியாமல் மருத்துவமனை போயிருந்தான் இரவில் தூங்கியவன் மறுநாள் விழிப்பானா என்றிருந்தான் இரவுகளோ கழிந்தது ஒரிரவு வந்தது அவ்வுயிரோ போனது உடலுக்குள் ஒளிந்திருந்த மரணத்தைக் கீறினார்கள் மாமிசத்தைக் கொடுத்தார்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பீறிட்ட துக்கங்களின் நடுவிலிருந்து சுழலாமல் நின்றிருந்த சக்கரங்கள் சுழன்றபோது உள்ளிருந்தவன் மயானத்திற்கு மாற்றலாகினான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன