முதியோர் காயமுற்றோர் மற்றும் நோயாளிகள் குழந்தைகள் – வயதுவந்தோர் பிணக்குவியல்களை நிறைய நிறையக் கண்ணுற்றேன்
பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகளின் உருவங்களைக் கண்டேன் *பிரித் நூலும் கட்டப்பட்டது
‘நாட்டைக் காக்கும்’ எனக்கு காவல் கிட்டவென பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து
விழி சதை இரத்தமென தானம் செய்து உங்களிடம் வந்துள்ளேன்
ஆனாலும் புத்தரே உங்களது பார்வை மகிமை மிக்கது
கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும் மனைவி குழந்தைகளோடு நலம் வேண்டிப் பாடும் சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே எனது தலையை ஊடுருவும் உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள்
கண்ணெதிரே தோன்றுகின்றனர் என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள் ஆங்காங்கே வீழ்ந்துகிடந்த அவர்கள் மெலிந்தவர்கள் துயருற்ற ஏழைகள் ஒரே நிறம் ஒரே உருவம் எல்லோருக்குமே எனது முகம்
நூறு ஆயிரமென நான் கொன்றொழித்திருப்பது என்னையேதானா
பாளிச் செய்யுள்களை இசைக்கின்ற சிறிய பிக்குகள் பின்னாலிருந்து நீங்கள் தரும் புன்முறுவல் தென்படாதிருக்க இரு விழிகளையும் மூடிக்கொள்கிறேன்
கரங்கள் தென்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வணங்குவதற்குக் கூட உயர்த்தாமலிருக்கிறேன்
* பிரித் நூல் – பாதுகாவல் தேடி, புத்தரை வணங்கி, உடலில் கட்டப்படும் நேர்ச்சை நூல்.
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
வீடு பேறு
நத்தை ஒன்றுபோகிறதுமெல்லுடலில்பாரிய வீட்டைசுமந்தபடி.போகிறதா?ஆம்.உன்னை போல்என்னை போல்நம்மை போல்.அதுநகர்ந்து எஞ்சிய நீர்த்தடங்களில்வீடு குறித்தரகசிய கேள்விகளின் ரசம் மின்னிக்கொண்டு இருக்கிறது…
தொண்டையின் துயரம்
இனிப்பான பலகாரத்திலிருந்து
உப்பில்லா உணவு
கொதிக்கிற தேனீரிலிருந்து
குளிர்ச்சியான ஐஸ் க்ரீம்
எதிர் வீட்டு பால் அப்பம்
எதிரி சுட்ட பணியாரம்
சந்த்ருவின்
பிறந்த நாள் கேக்
ஆஞ்சநேயரின்
வடைமாலையில்
பிரசாதமாய்
எஞ்சிய வடை என
எல்லா உணவு
பதார்த்தங்களையும் தொண்டை
அனுமதித்து விடுகிறது.
திடீரென
வயிற்றில் தள்ளு முள்ளு
கலவரம் அடிதடி என
நடக்கிற போது
வயிற்றிற்காக இரக்கம் காட்டி
கலவரக்காரர்களை
வாய் வழியாக
தண்ணீர் பீய்ச்சி
வெளியேற்றியும் விடுகிறது.
ஆனால் வினோதமாய்
ஒரு உறங்கும்
உண்மை மட்டும்
தொண்டைக்குள் முள்ளாய்
குத்திக் குத்திக் குதறுகிறது
வெளியேற இயலாமல்..
பொய் தவத்தில் புண்ணாய்
தொண்டை நாறிக்
கொண்டிருக்கிறது
பல நேரங்களில்
ஓர் மடல்
*நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி இங்கும் இல்லாமலில்லை அம்மா ஆனாலும் அவற்றை மாற்றி மாற்றி புதிது புதிதாய்ச் செய்கிறார்கள்
விழாக்களும் இப்பொழுது அதிகமென்பதால் காட்சிகள் தொடர்ந்தபடி உள்ளன உறக்கமேயில்லாமல் இரவு முழுதும் ஆடுகிறேன் காலையில் ஒத்திகைக்கு ஓடுகிறேன்
உடலழகு தொலைந்துவிடுமென்று இரவுணவையும் தருகிறார்களில்லை இளம்பெண்கள் பத்துப் பேர் நாம் அவர்களறியாமல் தேனீர் தயாரித்துக் கொள்கிறோம்
பாடல் ஒளிப்பதிவுகளுக்குப் போனால் ஆயிரம் ரூபாயளவில் கிடைக்கும் மேலதிகமாக ஆனாலும் மூட்டுக்களிலும் முதுகெழும்பிலும் வலியெடுக்கும்
புதிய நடனமொன்றின் மெல்லிய ஆடையில் கவரப்பட்ட செல்வந்தனொருவன் பரிசுகள் தந்திட அழைக்கிறான் நான் முடியாதென்றே மறுத்து வருகிறேன்
விழா நாட்களில் எனக்கு எனது அம்மா சொன்னவை நினைவில் எழுகின்றன உண்மைதான் சில விழிகளில் பெரும் அந்நியத்தைக் காண்கிறேன்
ஒன்பது நாட்களுக்குக் காட்சிகள் தொடர்ந்திருக்க நேற்றென்னை அந்த வருத்தம் பீடித்தது ஆனாலும் அதனைக் கவனத்தில் கொள்ளாமல் வீட்டைப் பற்றி எண்ணி எண்ணியே ஆடினேன்
அம்மாவின் மருந்துகளையும் அப்பாவின் திதிக்கான பொருட்களையும் வாங்கத் தேவையான பணத்தை இதோ அம்மா இந்தக் கடிதத்துடனேயே அனுப்பியிருக்கிறேன்
சிகரங்களேறி உலகையே வென்றெடுத்து எப்பொழுதேனும் மகள் வருவாளென வேலிக் கம்பில் கைகளை வைத்தபடி அம்மா பார்த்திருப்பது எனக்குத் தெரிகிறது
* நெலும் கவி, லீ கெளி, ஒலிந்த கெளி – கிராமிய ஆடல், பாடல்வகைகள்
பின்குறிப்பு – பெரும்பாலானோர் அறிந்திராத மிகவும் அரிதான அனுபவமொன்று இக்கவிதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நகரத்தின் நாட்டியக் குழுவொன்றில் தனது நடிப்புத் திறனை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கும் இப் பெண் அவளது அன்னைக்கு அனுப்பும் கடிதப் பிரதியொன்றினூடாக அவளது நிஜ வாழ்வு வெளிப்படுகிறது. தொலைத் தொடர்பு சாதனங்களை அலங்கரித்தவாறு பளிச்சிடும் வாழ்வுகளின் பின்னணியில் புதைந்துள்ள அந்தகாரத்தின் நிஜம் மிகவும் முரண்நகையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
மெய்ப்பொருள்
ஆட்டோவின் ஓரத்திலிருந்து
சிறுமியொருத்தி புன்னகைக்கிறாள்
பெயர் தெரியா அப்பூக்களின் அழகை
கண்களில் நிறைத்தபடி செல்கிறேன்…
பின்னொரு நாள்
உடலாய் மட்டும் உணர வைக்கும்
பேருந்துப் பயணத்தில்
கூட்ட நெரிசலை சமாளித்தபடி
உள்ளங்கைகளில் ரோஜாவை
பாதுகாத்து கொண்டிருந்தாள்
அரும்புப் பெண் மகள் ஒருவள்.
தொலைகாட்சி மக்களை முழுங்கிய
ஆளரவமற்ற தெருக்கள் வழியே
துக்கத்தில் நெஞ்சு வெதும்ப
நடந்து வந்த அந்நேரம் கண்டது
அந்தியின் மென்னிருள் ஊடே
வண்ணங்களின் குளுமையை
அள்ளித் தெளித்த
நித்யகல்யாணி பூக்களை.
யோசித்தால்
வாழ்கையைப் பற்றிச் செல்ல
பிறிதொரு தேவை இல்லை.
எதையாவது சொல்லட்டுமா / 23
ஆகஸ்ட் 8ஆம்தேதி ராம் மோகனின் பிறந்த தினம். யார் இந்த ராம் மோகன். அவர்தான் ஸ்டெல்லா புரூஸ். அவர் இப்போது உயிரோடு இருந்திருந்தால், 70 வயது ஆகியிருக்கும். அவர் தானகவே தற்கொலை செய்துகொள்வதற்கு முன்புவரை சாதாரணமாகத்தான் இருந்தார். எந்தக் கொடிய நோய் எதுவுமில்லை. கண் பார்வை சற்று தடுமாற்றம்.
அவர் தற்கொலை செய்து கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மட்டுமல்ல இன்னும் பல நண்பர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் நம்ப முடியவில்லை. அவர் பல விஷயங்களில் தீர்மானமாக இருந்தார். அவர் குடும்ப வியாபாரத்தைத் தொடர்ந்து பார்த்தார். அதில் பெரிய வெற்றி பெற முடியவில்லை என்று தெரிந்ததும், அவருக்கு உரிய தொகையை வீட்டிலிருந்து பெற்றுக்கொண்டு வங்கியில் சேமிப்பில் வைத்திருந்தார். வங்கித் தரும் வட்டித் தொகையை எடுத்து குடும்பம் நடத்தினார். தனியாக இருந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்து, சென்னையில் அறைவாசியாக பல ஆண்டுகளாக இருந்தார். புத்தகம் படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, நினைத்தபோது ஊருக்குச் செல்வது என்று பொழுதைக் கழித்தார். ஆடம்பரமாக பணம் செலவு செய்யமாட்டார. ஆனந்தவிகடன் மூலம் தொடர்கதை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அவர் புகழ் பரவத் தொடங்கியது. ஹேமா என்ற பெண் கிடைத்தாள்.
பல ஆண்டுகளாக அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டாமென்று நினைத்தார். பின் திருமணம் செய்து கொண்டார். ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா, அவர் என்று மூவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தார்கள். பிரேமா ஒரு இதய நோயாளி. மயிலாப்பூர், ஆதம்பாக்கம் என்று முதலில் பல இடங்களில் வசித்து வந்தார்கள். பின் கோடம்பாக்கத்திலுள்ள யூனைடட் இந்தியா என்ற இடத்தில் உள்ள ஹேமாவின் சகோதரர் இல்லத்தில் வசித்து வந்தார்கள். இங்குதான் தொடர்ந்து பல ஆண்டுகளாக வசித்து வந்தார் ஸ்டெல்லா புரூஸ். அந்த இடத்திற்கு அடிக்கடி நான் சென்றிருக்கிறேன். நண்பர்கள் பலரும் சென்றிருக்கிறார்கள். அங்கே உட்கார்ந்தால் மணிக்கணக்கில் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம். புத்தகம் படிப்பது, பேசிக்கொண்டிருப்பது, எங்காவது செல்வது இப்படித்தான் பொழுதைப் போக்குவார்கள்.
ஹேமாவும், பிரேமாவும் எழதுவார்கள். பிரேமாவின் ஒரு கதை தொடர்கதையாக ஆனந்தவிகடனில் வெளி வந்திருந்தது. ஹேமா கவிதைகள் எழுதுவார். நான், வைத்தியநாதன், ராஜகோபாலன் மூவரும் சேர்ந்து அவர்கள் வீட்டிற்குச் செல்வோம். பிரேமா ரொம்ப நாட்கள் உயிரோடு இருக்க மாட்டார் என்பதை ஸ்டெல்லா புரூஸ் எங்களிடம் சொல்லியிருக்கிறார்.
ஒருநாள் அப்படித்தான் நடந்தது. பிரேமா இறந்துவிட்டார். பிரேமாவின் இழப்பு பெரிய அளவில் பாதிப்பை ஹேமாவிற்கு ஏற்பட்டு விட்டதாக ஸ்டெல்லா புரூஸ் சொல்லியிருக்கிறார். வெகுநாட்கள் இந்தத் துக்கத்தை வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளேயே குமைந்து கொண்டிருந்திருக்கிறார் ஹேமா. மிகச்சாதாரண உணர்வுகளுடன் எளிமையாக வாழ்ந்த வாழ்க்கையில் புயல். ஹேமாவிற்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்பு அடைந்து விட்டன. பெரிய அளவில் மருத்துவத்திற்காக செலவு செய்யாத சாதாரண குடும்பத்தில் ஹேமாவின் உடல் பாதிப்பு மனோ ரீதியான பாதிப்பையும் ஸ்டெல்லா புரூஸிற்கு ஏற்பட்டு விட்டது.
மனைவியை வாரம் இருமுறை டயலிஸிஸ் அழைத்துப் போகும்படியாக நேரிட்டது. கண் கலங்காமல் அவருடைய தேவைகளை உடனுக்குடன் கவனித்துக்கொண்டிருந்த ஹேமாவை அவர் கவனிக்கும்படி நேரிட்டு விட்டது. கடைக்குச் செல்வது, சமையல் செய்வது என்று எல்லாம் ஹேமாவாக இருந்த நிலை முழுவதும் மாறிவிட்டது. இது பெரிய அதிர்ச்சி. மேலும் மருத்துவ மனைக்குச் செல்வது. அங்கு சென்ற பிறகுதான் அவர் நிம்மதி இன்னும் போய்விட்டது. வாரத்திற்கு இரண்டு முறை செல்லும்படி நேரிட்டுவிட்டது. பணத்திற்கு என்ன செய்வது? எத்தனை நாட்கள் இப்படியே தள்ளுவது? அதைவிட நோயின் கொடுமை. இந்த இடத்தில் ஆன்மிகத்தை அவர் பெரிதும் நம்பினார். Healing Touch மூலம் ஹேமாவின் உடலை குணப்படுத்தலாம் என்றெல்லாம் நம்பினார். நான் அவரைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம், இது குறித்து அவர் பேச ஆரம்பித்து விட்டார். மனைவியைக் குணப்படுத்துவதோடல்லாமல் இன்னும் பலரை குணப்படுத்தி விடலாமென்று சொல்ல ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் என் நண்பர் தாஸ் அவர்களின் மாமனார் கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக டயலிஸிஸ் செய்துகொண்டு வருபவர் 91 ஆம் ஆண்டில் இறந்து விட்டார் என்று குறிப்பிட்டார். இது மெடிக்கல் சரித்திரத்தில் ஆச்சரியமான விஷயமாகக் கருதப் படுகிறது. மனைவியை இழப்பது உறுதி என்று அறியும்போது ஸ்டெல்லாபுரூஸ் அழக்கூட அழுது இருக்றார். இதெல்லாம் அவருடைய இயல்பு இல்லை.
மனைவியின் இழப்பு பெரிதும் அவரைப் பாதித்து விட்டது. படித்தப் புத்தகங்களும், எழுதிய எழுத்துக்களும் அவருக்கு உதவி புரியவில்லை. அவர் ஆன்மிகம் என்று பெரிதாக நினைத்ததெல்லாம் போய்விட்டது. இச் சமயத்தில் அவர் ஓரளவு ஆழமான depressionல் தவித்துக் கொண்டிருந்தார். நான் ருத்ரன் என்ற மனோ தத்துவ மருத்துவரைப் பார்த்தார். அவருக்கு யாராவது பக்கத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும். தனிமையில் இருந்தால் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்று சொன்னார்.
எல்லா உறவினர்களும் அவருக்கு இருந்தாலும், அவரால் அவர்களுடன் போய் இருக்க முடியவில்லை. இந்தத் தருணத்தில் தேவராஜ் என்ற நண்பர் அவருடன் இருக்க முயற்சித்திருக்கிறார். அவர் திரும்ப திரும்ப ஹேமாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்ததால், தேவராஜூற்கே அங்கு தொடர்ந்து இருக்க முடியவில்லை. அவரை அவருடைய வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போக நினைத்தார் தேவராஜ். ஆனால் அதுவும் முடியவில்லை. நான் ருத்திரனிடம் ஸ்டெல்லா புரூஸை அழைத்துக்கொண்டு போகலாமா என்று நினைத்தேன். என்ன பிரச்சினை என்றால் ஸ்டெல்லா புரூஸ் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்தத் தருணத்தில்தான் அவருடைய வீட்டிலுள்ள பொருட்களை எல்லோருக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டார். ஹேமாவின் நகைகளை திருப்பதி கோயில் உண்டியில் ஒரு நண்பர் மூலம் போட வைத்துவிட்டார். அவர் தங்கியிருந்த வீட்டையும் காலி செய்யும்படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டால். 69வயதில் இப்படி ஒரு காரியத்தை அவர் செய்திருப்பது வருத்தமாக இருந்தது.
எழுத்தாளர் சுஜாதா மரணம் அடைந்த மறுதினம் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டு விட்டார். மயானத்தில் அவரைப் பார்க்க மிகக் குறைவான பேர்களே வந்திருந்தார்கள். உயிரோடு இருக்கும்போது வராத உறவினர்கள் வந்திருந்தார்கள். ஒரு நல்ல நண்பரை இழந்து விட்டதாக சொல்வதைத் தவிர வேற சொல்ல ஒன்றுமில்லை.
சில நேரங்களில் சில மனிதர்கள்
–
கணீர் குரலுக்கு சொந்தக்காரர்கன்னையா ஓதுவார்.தேவாரம் பாடும் போதெல்லாம்கேட்பவருக்கு கண்ணீரேவருமென்பார் அப்பாஅவர் இறந்த நாளொன்றில்யார் கண்ணிலும் நீர் இல்லை.அவர் தேவாரம் பாடாததுதான்காரணம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்அந்த நாளில்.அசராமல் கரகம் ஆடக் கூடியவள்மேலத் தெரு மஞ்சுளாகரகம் அசையாமல்கண்ணில் ஊசியெடுத்தபடியேகாலில் படம் வரைபவள்.சமீபத்தில் ஜாக்கெட்டில் குத்தப் பட்டநூறு ரூபாய்களுடன் பார்க்கும் போதுஎடை அதிகமென இறக்கி வைத்திருந்தாள்கிளி மூக்கை நீட்டியிருக்கும் கரகத்தையும்இன்னும் சில ஆடைகளையும்உலகில் சூரியன் உள்ளவரைஉனை மறவேன் எனஎதுகை மோனையுடன்எழுதிக் கொடுத்தவனைவாரச்சந்தையில் பார்த்த பொழுதுஅவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.சூரியன் இல்லாத அவன் உலகை நினைத்துகொஞ்சம் வருத்தமாக இருந்தது.காரைவீட்டு பெரியசாமி அண்ணாச்சியென்றால்எல்லார்க்கும் பயம்மீசைக்காக சிறுவர்களும்காசுக்காக பெரியவர்களும் அடங்குவார்கள்.தளர்ந்த அவரைப் போனவாரம் பார்த்த பொழுது“கான்கிரீட் ஊருக்குள்ளகாரைவீட்டுக்கு மதிப்பில்லப்பா”என்றார்.கடனை அடைப்பதற்காய் சொல்லிதுபாய் போன சங்கிலிதிருமணம் முடிந்து திரும்பி வந்தான்.வெளியூர் வேலைக்குக்கூடஅனுப்ப மாட்டாள் மனைவிஅத்தனை பாசமென்றான்.யார் கண்டதுசக்களத்தி பயமாய் இருக்கலாம்.முந்நூற்றுஅறுபத்துஏழாவது முறையாய்மஞ்சள் சுடிதாரில் வருகிறாய்ஏன் வேறு நிறமில்லையாஎன்றேன் கெளரியிடம்.இப்படி நீநியாபகம் வைத்திருப்பதை கேட்பதற்காகத்தான்என்றாள்
புள்ளி என்ற கவிதைத் தொகுப்பு
இரவில் பேய்கள்
குருட்டுக் கண்களைத்திறந்து பார்த்தால்இருட்டு தான்பிரகாசமாய்த் தெரிகிறதுசெவிட்டுச் செவிகளைக்கூராக்கி முயற்சித்தால்நிசப்தம் தான்கூச்சலாய்க் கேட்கிறதுநுகராத நாசியைநுழைத்துப் பார்த்தால்சாக்கடை மணம்சுகந்தமாய் இருக்கிறதுஉருமாறிப் போனவன்உடல் மாறிமனம் மாறின பின்
இரவுக்குள் ஒரு இழப்பு
இங்கே குளிர் காலம். வெளிநாட்டுக் குளிரை முதல் முதலாக
அனுபவிக்கிறேன். இரவு தூக்கம் பிடிக்கவில்லை. புரண்டு புரண்டு
படுத்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்கும் மூளைக்கும் இடையிலுள்ள
பிரதேசத்தில் என்னென்னவோ காட்சிகள் தோன்றி மறைகின்றன. அது
கனவாகவும் இல்லாமல் உள்நினைவின் சிதறலாகவும் இல்லாமல்
குழம்பி இருக்கிறது.
திடீரென்று ஏழுகடல் தாண்டி..இடையிலுள்ள எவ்வளவோ தேசங்களைத்
தாண்டி போஸ்டல் காலனி முதல் தெருவில் ஆறாம் நம்பர் வீட்டின் முதல்
அடுக்ககத்தில் இருக்கிறேன். என் இனிய நண்பர் சந்திரமௌலி கூட
உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எங்கே இவ்வளவு தூரம் ? ” என்று
கேட்கிறார். ” சும்மாத் தான் ..” என்கிறேன். ” எனக்கு ஆபீஸுக்கு
நேரமாகி விட்டது.. இப்போது இலக்கியம் பேசமுடியாது.. அதுவும் என்
வாழ்க்கை மற்றவர்கள் போலில்லை.. நான் ஆபீஸிக்கு ரயிலில் சீர்காழிக்கு
போக வேண்டும் ” என்கிறார்…” நானும் வருகிறேன் பேசிக் கொண்டே
போகலாம்..” என்கிறேன். ” சரி ஆனால் எனக்கு நேரமாகி விட்டது..
நான் போய்க் கொண்டே இருக்கிறேன்.. பின்னால் வாருங்கள்..”என்கிறார்.
அவர் போய் விடுகிறார். நான் குளித்து விட்டு உடை அணிந்து கொண்டு
என் காலணியைத் தேடுகிறேன். இத்தனைக்கும் அது சின்ன அறை தான்
என் காலணி தென்படவேயில்லை.. பெஞ்சு நாற்காலி மேஜை அத்தனை
அடியிலும் தேடுகிறேன். மணி ஆகிக் கொண்டிருக்கிறது. காலணியைக்
காணவில்லை.. உள்ளே சமையல் கட்டில் சந்திரமௌலியின் மனைவி
இருக்கிறார்கள். அவர்களிடமும் தயங்கி இதைச் சொல்லுகிறேன் அவர்கள்
உடனே வந்து அறையிலுள்ள அட்டாளியின் மேலேறி அங்கிருந்து என்
காலணியை எடுத்துக் கொடுக்கிறார்கள். ” அது எப்படி அங்கே போச்சு? “
புதிராக இருக்கிறது.. திடீரென்று சிரிப்பொலி கேட்கிறது என் பின்னாலிருந்து…. அறையில் ஐராவதமும் சீனிவாஸனும் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.. என்னைப் பார்த்து சிரிப்பதற்காகவே
அவர்கள் அங்கு வந்து உட்கார்ந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.
நான் காலணியை அணிந்து கொண்டு வேகமாக வெளியேறுகிறேன்.
அப்போது என் கைப் பேசி ஒலிக்கிறது. காதில் வைத்து ” யாரென்று
கேட்கிறேன்? ” மௌலி ” நான் தான் .. இப்போது சீர்காழியில் இறங்கி
பஸ்ஸில் ஆபீஸுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்..நீங்கள் வந்தால் கூட
என்னால் பேச முடியாது..என் மண்டை முழுக்க லெட்ஜரும் கணக்கும்
ஆபீஸ் கடுதாசிகளும் தான் இருக்கின்றன..தவிர ஆபிஸில் மற்றவர்கள்
பேசும் கோள்கள் தான் கேட்கின்றன…இலக்கியம் இங்கே செல்லாது…”
என்கிறார்..
” என் காலணி சதி செய்து விட்டது .. உங்களை சந்திக்க வேண்டுமென்று
தான் ஓடி வந்தேன்.. வாழ்க்கையில் நினைத்தது நிறைவேறாமல் எல்
லோருக்கும் ஏதாவது ஒரு பிரச்னை..இதில் கொடுத்து வைத்தவர்கள்
ஐராவதமும் சீனிவாஸனும் தான்.. அவர்கள் தான் சிரித்துக்
கொண்டே வாழ்க்கையை கழிக்க முடிகிறது..” என்றேன்..
திடீரென்று மூளை ஊமையாகி கண்ணிமைகள் படபடத்தது.
நான் விழித்த போது கதகதப்பான கட்டிலில் ஆனாலும் எனக்கு
ஒவ்வாத சூழலில் விழித்துக் கொண்டிருந்தேன்..எனக்கும் மௌலிக்கும்
இடையே ஏராளமான தூரம் இருந்தது!!
சேகுவேராவின் சேற்று தேவதை
(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை – 2010)
யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர் முழுதும் அலைந்தபடியிருந்தாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவள் குளித்து வந்த அழுக்குச் சேற்று வாய்க்கால் மூடப்பட்டுவிட்டது. மூடப்பட்ட காலம் தொட்டு அவள் அள்ளிக்குளிக்கப் பயன்படுத்தும் அகன்ற பெரும் அழுக்குச் சிரட்டையைப் போல, அவளும் தலையில் ஈரம் படாமலே வீதிகள் தோறும் சுற்றி வந்தாள். இத்தனைக்கும் ஊரின் மத்தியில் பெரிய ஆறு, நாணல்களைத் தொட்டபடி ஓடிக்கொண்டிருக்கிறது.
அவளுக்கென்று தனி இருப்பிடம் இல்லை. இருட்டிவிட்டால் போதும். எந்த இடத்தில் நிற்கிறாளோ அதற்கு அண்மையிலுள்ள வீட்டின் திண்ணையில், மாட்டுக்கொட்டகையில், கிணற்றடியிலெனத் தங்கிவிடுவாள். அவளால் யாருக்கும் எந்தத் தொந்தரவுமற்ற காரணத்தால் ஊரார் எதுவும் சொல்வதில்லை. இன்னுமொரு காரணம் இருக்கிறது. விடியலின் முதல் கிரணம் கண்டு அவள் விழித்தெழுந்து, எந்த இடத்தில் தங்கினாளோ அந்த இடம், முற்றம், கிணற்றடி என எல்லா இடத்தையும் மிகவும் நேர்த்தியாகக் கூட்டிச் சுத்தம் செய்துவிட்டு நகர்வாள். சூழ இருக்கும் குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போவாள். தான் அழுக்காக இருந்தாளே ஒழிய சூழ இருந்தவைகளை ஒரு போதும் அழுக்கடைய விட்டதில்லை அவள்.
வீடுகளில் கொடுக்கப்படும் எஞ்சிய பாண், ரொட்டி, சோற்றுக்கென அவளது நீண்ட பொலிதீன் பைக்குள் ஒரு சிறிய பொலிதீன் பையிருந்தது. ஓரங்களில் கிழிந்து அழுக்கேறிய இன்னுமொரு உடுப்போடு ஒரு போர்வையையும் சுருட்டி அவள் அந்த நீண்ட பொலிதீன் பைக்குள் பத்திரப்படுத்தியிருந்தாள். அவ்வப்போது பார்த்துத் தனது அழகிய இறந்த காலத்தை மீட்டவென அந்தப் போர்வைக்குள் அவளது குடும்பப் புகைப்படமொன்றையும் ஒளித்துப் பாதுகாத்து வந்தாள்.
அவளது தங்கையின் பிறந்தநாளொன்றில் தனது கணவரோடு சேர்த்து மூவருமாக ஜானகி ஸ்டுடியோவில் போய் எடுத்துச் சட்டமிட்ட புகைப்படமது. யாரும் அருகில் இல்லாப் பொழுதுகளில் மட்டும் வெளியே எடுத்து அவ்வப்போது பார்த்துக் கண்ணீர் உகுப்பவள், பூனை அசையும் சிறு சலனத்துக்கும் பதறியவளாகப் படத்தை ஒளிப்பாள். மூளை பிசகிவிட்டதெனப் பெரியவர்களாலும், பைத்தியம் எனச் சிறுவர்களாலும் அழைக்கப்படுபவள் முன்னர் அழகானவளாகவும், அன்பானவளாகவும், மிகத்தூய்மையானவளாகவும் இருந்தவள்தான்.
எண்பதுகளின் இறுதிப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய கல்லூரி குவார்ட்டஸில் அவனும் யோகராணியும் தங்கியிருந்த காலப்பகுதியில்தான் ஜே.வி.பி குழப்பமென எல்லோராலும் அழைக்கப்பட்ட ஜே.வி.பி கலவரம் அவ்வூரிலும் உச்சத்தை எட்டியது. வசந்தனுக்கு ஆசிரியர் வேலை. அவ்வூரின் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்புக்களுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுத்துவந்தான். நல்லவன். அவர்களது சொந்த ஊர் இதுவல்லவெனினும் இங்கு மாற்றல் கிடைத்தவனுக்குத் துணையாகத் தனது வாசிகசாலை உதவியாளர் பணியையும் விட்டுவிட்டு வந்த யோகராணி தையற்தொழிலைச் செய்துகொண்டு வீட்டோடு இருந்து வந்தாள்.
இக் கலவரம் ஆண்டாண்டு காலமாக நீடித்தது. இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்திய அமைதிப் படையினரின் பயங்கரவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியது. ஏனைய திசைகளிலெல்லாம் ஜே.வி.பி. கலகக்காரர்களின் பயங்கரவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. தினமும் கலகக்காரர்களால் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தது. இரவுகளில் வீடுகளில் பெரும் வெளிச்சம் துப்பும் விளக்குகளை ஏற்றிவைப்பது கூடத் தடுக்கப்பட்டிருந்த காலமது. அதற்கும் மேலாக மின்மாற்றிகளும் மின்கம்பங்களும் கிளர்ச்சிக்காரர்களால் தகர்க்கப்பட தேசத்தின் ஊர்கள் தோறும் இருள்கள் சூழ்ந்தன. கம்யூனிசத்துக்கும், இடதுசாரிக் கொள்கைகளுக்கும் ஆதரவாகப் பெரும் படைகளாக பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் திரண்டனர். தபாலகங்கள், அரச நிறுவனங்கள், அரச கட்டடங்கள் பலவற்றையும் உடைத்தும் எரித்தும் அழிக்க முனைந்தனர். பஸ், ரயில் போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்தன. மீறி நகர்ந்தவை எரிக்கப்பட்டன. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின.
கலகக்காரர்கள் தாங்கள் சொல்வதைச் செய்ய மறுக்கும் அனைவரையும் கொன்றார்கள். தமது பணத்தேவைகளுக்காக வீடுகள் புகுந்து கொள்ளையடித்தார்கள். ஆட்களைக் கடத்திக் கப்பம் கேட்டார்கள். அவர்களை அழித்து ஒழிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும் தினமும் தொடர்ந்தன. தினந்தோறும் இரவுகளில் எல்லா வீதிகளிலும் காவல்துறையினர் மற்றும் கருப்புப்பூனைப் படையினர் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை வேட்டையாடவென வலம் வந்தனர். சந்தேகத்துக்குரியவர்களைக் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீண்டு வரமாட்டார்கள்.
யோகராணிக்கு ஒரு தங்கையிருந்தாள். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவள் கம்யூனிசக் கொள்கைகளில் கவரப்பட்டாள். அதன் கூட்டங்களுக்குத் தவறாது சென்றுவந்தவள் படையினரால் தேடப்பட்டு வந்த பொழுது எப்படியோ தப்பித்து சகோதரியிடம் அடைக்கலம் தேடிவந்தாள். நள்ளிரவொன்றில் அவளுக்கான பதுங்குகுழி வீட்டின் அருகேயிருந்த காட்டுக்குள் வசந்தனாலும் யோகராணியாலும் தோண்டப்பட்டது. மேலால் குறுக்கே தடிகளிட்டு தென்னோலை, வாழை இலைச் சருகுகள் என மூடப்பட்ட குழியில் உமாவின் நாட்கள் கழிந்தன.
பகல் வேளைகளுக்கும் சேர்த்து இரவில் தயாரிக்கும் உணவினை யோகராணி எடுத்து வருவாள். பல இரவுகள் தங்கையுடனே பதுங்குகுழி இருளுக்குள் கழித்தாள். இடையிடையே தங்கையைத் தேடிப் படையினர் வீட்டுக்கு வரும் நாட்களில் நெஞ்சு பதறியபடி அவள் தம் வீட்டில் இல்லையெனப் பதிலளித்தார்கள் வசந்தனும் யோகராணியும். மழை நாட்களில் குழியினோரமாக நீரும், சேறுமாக ஒழுகி வழியும். தூங்க விடாமல் விஷப்பூச்சிகளும், தேளும், தவளையும் குழிக்குள் ஒதுங்கும். குளிருக்கும் சகதிக்கும் மத்தியில் உயிரற்ற பிணம் போல அச்சத்தில் உறைந்து கிடப்பாள் உமா.
இப்படியாக மூன்று மாதங்களுக்கும் மேலாக இருந்துவந்த வேளையில்தான் கல்லூரியில் வசந்தன் கற்பித்து வந்த வகுப்பறைக் கட்டிடம் ஒரு இரவில் கிளர்ச்சியாளர்களால் எரியூட்டப்பட்டது. தீப்பற்றியெரிவதைக் கண்ட கல்லூரி வளாக குவார்ட்டஸில் தங்கியிருந்த அவன் ஓடிவந்து வீதியில் நின்று நெருப்பு , நெருப்பெனக் கத்தினான். செய்வதறியாத அல்லது ஏதும் செய்யப் பயந்த ஊராட்கள் வேடிக்கை பார்த்தனர். இது குறித்து முதலில் காவல்துறைக்கும் அதிபருக்கும் அவன் தான் அறிவித்தான். கிளர்ச்சியாளர்களின் கோபம் அவனில் சூழ்ந்தது. கால வரைமுறையற்ற விடுமுறை கல்லூரியில் விடப்பட்டது.
இச் சம்பவத்திற்குப் பிறகு ஊருக்குள் தினந்தோறும் காவல்துறை விசாரணைகளும் கரும்பூனைப்படையின் கடத்தல்களும் அதிகரித்தன. கிளர்ச்சிக்காரர்களெனக் கண்டறியப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் ஒவ்வொருவராகக் கரும்பூனைப் படையினரால் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் வீதிகளினோரமும், மின்கம்பங்களிலும் சுடப்பட்டும் , எரிக்கப்பட்டும் ,வதைக்கப்பட்டும் பிணங்களாகக் கிடந்தனர். நதிகளில் பிணங்கள் மிதந்துவந்தன. ஊரிலிருந்த கிளர்ச்சிகளோடு சம்பந்தப்பட்ட இளைஞர்கள் காடுகளுக்குள் மரங்கள் மேலும், பதுங்குகுழிகளுக்குள்ளும் ஒளிந்து வாழ்ந்தனர்.
இவ்வாறான நாட்களின் ஒரு பிற்பகலில் ஊரார் அனைவருக்கும் அடையாள அட்டைகளோடு கல்லூரி மைதானத்துக்கு வரச் சொல்லிக் காவல்துறையினரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. ஊரார் அனைவரோடும் வசந்தனும் யோகராணியுமாக எல்லோரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டார்கள். கரும்பூனைப் படையினரால் கண்களிரண்டும் இருக்குமிடத்தில் மட்டும் துளையிடப்பட்டு முழுவதுமாகக் கறுப்பங்கி அணிந்து சாக்கினால் தலை மூடப்பட்ட உருவம் ஒவ்வொரு வரிசையாக படையினரோடு பொதுமக்களைப் பார்த்தபடி நகர்த்தப்பட்டது. முன்னமே கைதுசெய்யப்பட்ட கிளர்ச்சியாளனாக இருக்கக்கூடுமான அது தலையசைத்துக் குறிப்பால் காட்டியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வாகனங்களில் அடைக்கப்பட்டனர்.
அவ்வுருவம் வசந்தனையும் பார்த்துத் தலையசைத்த கணத்தில் யோகராணி அதிர்ந்தாள். பெருங்குரலெடுத்த அழுகை அவளையும் மீறி வெளிப்பட்டது. பாரிய வெளிச்சம் சுமந்த இடி அவள் தலையில் வீழ்ந்து வாழ்வினை இருளாக்கியது. மயங்கிவீழ்ந்தவளை வீட்டுக்குத் தூக்கிவந்து மயக்கம் தெளிவித்து அகன்றது கூட்டம். சித்திரவதை தாங்காமல் சொன்னானோ, அவர்களாகக் கண்டுபிடித்தார்களோ அன்றைய இரவிலேயே உமா ஒளிந்திருந்த காட்டுக்குள் கரும்பூனைகள் நுழைந்தன. அவள் கதறக்கதறத் தாக்கிக் கடத்தப்பட்டாள். காப்பாற்றவென மறித்த யோகராணிக்கும் பல அடிகள் விழுந்து இறுதியாகத் துப்பாக்கியின் பின்புறத்தால் பின்மண்டையில் அடிவாங்கி அவ்விடத்திலேயே மயங்கிவிழுந்தாள்.
அவ்விரவில் பலத்துக் கத்தியும் கதறியும் ஊராட்கள் எவரும் காப்பாற்றவென வரவில்லை. எல்லோரிடத்திலும் மிகுந்த அச்சம் சூழ்ந்த நாட்களவை. அடிபட்டுக்கிடந்தவள் முற்றத்தில் அப்படியே கிடந்தாள். மறுநாட்காலை கல்லூரி வாசலருகே டயர் போட்டுப் பாதி எரிந்த நிலையில் வசந்தனின் சடலம் கிடந்தது. உமா குறித்தான எந்தத்தகவலும் யாருக்கும் இன்றுவரைக்கும் தெரியவரவேயில்லை. காகங்களால் குதறப்பட்ட சடலத்தின் சதைத்துணுக்குகள் கல்லூரிக்கிணற்றில் மிதந்தன.
அப்பொழுதிலிருந்துதான் அவள் சித்தம் பேதலித்திருக்கக்கூடும். ஆட்சிகள் மாறின. கிளர்ச்சிக்காரர்கள் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்பட்டனர். மீளப்பெற முடியாத்திசைகளில் அவளது வசந்தங்கள் தொலைந்தன. காலங்களுமாற்றாத் துயர்களைச் சுமந்து வாழத்திணிக்கப்பட்டாள். என்றோ உதித்து மறைந்த சேகுவேராவின் கருத்துக்களில் அவளது குடும்பம், வாழ்க்கை, சுயம் எல்லாம் அழிந்தது. நீண்ட அழகிய நதி நீரோட்டம், பழகிய வனங்கள், கடை வீதிகள், தெரியாத சனங்கள் அவளுக்கு அச்சமூட்டி அசைந்தன.
பகல் முழுதும் வயல்வெளிகளில் தங்கினாள். வயல்வரப்பினூடு ஓடும் சேற்றுநீரில் உடுத்த உடையோடு சிரட்டையால் அள்ளிக் குளிக்கப்பழகினாள். மழையென்றில்லை. வெயிலென்றில்லை. அவளுக்குக் குளிக்கவேண்டும். அதுவும் ஆனந்தமாகச் சிரித்துச் சிரித்து அவள் குளிப்பாள். வழியும் நீரின் சொட்டுக்களில் வசந்தனை, உமாவைக் காணுபவளாக இருக்கக்கூடும். குளித்துத் துடைத்து, உடை மாற்றி அதே வயல்வரப்பில் ஈர ஆடையைக் காயப்போட்டுவிட்டு அந்திநேரத்தில் ஊருக்குள் நடக்கத் துவங்குவாள்.
இப்பொழுது அவளுக்குப் பகலில் தங்கவும் குளிக்கவும் வாய்ப்பற்றுப் போனது. வயல்வெளிகள் மூடப்பட்டுப் பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குளிக்கச் சேற்றுநீர் தேடி ஊர் முழுதும் அலைந்தவள் ஓர் நாள் விடியலில் செண்பகமக்கா வீட்டுப் பாழடைந்த கிணற்றில் பிணமாக மிதந்தாள். குளிக்கவெனப் பாய்ந்திருக்கக் கூடுமென ஊருக்குள் பேசிக் கொண்டனர்.