சாராசரிக்கு​ம் சராசரி

இந்த அறை
இதற்கு முன்பு எத்தனை பேரைப்
பார்த்திருக்கும்

பேத்தியின்
அந்தரங்கங்களைத் தடவிப்பார்த்த
ஒருவன்

சுருக்குக் கயிற்றின்
முனையில்
காதலை முடித்துக் கொண்ட
ஒருவன்

சாராசரிக்கும் சராசரியில்
உறக்கத்தில்
இறந்த ஒருவன்

மற்றும்
இந்த அறையைப்போல்
வாழ்க்கை இறைஞ்சும்
உங்களுக்குத் தெரிந்த
ஒருவன்.

0

மரமொன்று நகரத் தொடங்குகிறது
இலைகளைச் சலசலத்தபடி

வேர்களின் நீளத்தை
அளந்தபடி

நிழல் குறித்த
பெருமிதங்களுடன்

கனிகளை வேடிக்கைபார்ப்பவன்
முகத்தில் எறிந்தபடி

நகரும் மரங்கள்
மரங்களாய் அறியப்படுவதில்லை
என
மரத்திற்கு தெரிவதில்லை.

0

பிறந்த குழந்தையை
ஏந்தும்
இன்னொரு குழந்தையின்
வாஞ்சையுடன்
இந்தக் கவிதையைச்
சுமந்து திரிகிறேன்.

இறக்கிவிடும்
இடம் நெருங்கும்போது
பாரமாகிறது கைகள்.

0

ஒரு கவிதைக்கு
எப்படிக் கவனித்தாய்
என்றான் நண்பொருவன்
எப்படி
யாரும் இதைக்கவனிப்பதில்லை
என்பதுதான்
எனது ஆச்சர்யம்.

0

பாலைவனத்தைச்
சுமக்கக் கொடுத்தீர்கள்
பிறகு கடலையும்
ஒரு சுடரை
என்னிடம் அளித்தது
உங்களுக்கு நினைவில் இல்லை
மண்ணைக் கிளறிப்போடும்
கோழியின் பாவனையில்
அடுக்கினீர்கள் எதைஎதையோ.
வைப்பதற்கு இடமில்லாத
நேரத்தில் தான் இந்தக் கவிதையை
அறிமுகம் செய்தீர்கள்

என்னைமீறி எல்லாம்
அடைகிறது இதில்.
oOo

எழுத்தின் சாரம்

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
பேனா மை கொட்டலாம்.
பேனா முனை உடையலாம்.
காகிதங்கள் கிழியலாம்.
எழுதியதைக் கிழித்து
கைக் குழந்தை எறியலாம்.

எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
நீங்கள் கணிப்பொறியில்
எழுதுபவராக இருந்தால்
தட்டச்சை தட்டிய போது
எழுத்தெல்லாம்
சதுரம் சதுரமாக வரலாம்.
வைரஸ் வந்து
உங்கள் எழுத்துக்களைத்
தின்று போகலாம்.
நினைவுத் தட்டின்
வெட்டுக் காயங்களில்
உங்களின் எழுத்து
உடைபடலாம். அல்லது
உங்கள் எழுத்துக்கு அங்கே
இடமில்லாமலும் இருக்கலாம்.

ஆனாலும்
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்.
அதில் எப்போதாவது
அபூர்வமாய் ஒளிவட்டத்துடன்
ஒரு நல்ல கவிதை வரலாம்.
அதன் விதையிலிருந்து
ஒரு மரம் வளரலாம்.
அதன் பூவிலிருந்து
ஒரு புதுக் கனி விளையலாம்.
அதைத் தின்ன
ஒரு தேவதை வருவாள்.
அவள் இன்னொரு கவிதையை
உங்களுக்கு தெரியாமலேயே
உங்கள் மனதில்
எழுதிவிட்டுச் செல்வாளாம்.
அந்த கவிதையை
உரக்க நீங்கள்
உச்சரிக்கையில்
பல்லக்கில் ஏற்றி அவள்
உலகமறியாத உன்னத
பரிசொன்றைத் தருவாளாம்.
அதென்ன பரிசு?

அதனை அறிவதற்கு
எழுதுவது பிடிக்குமென்றால்
எழுதிக் கொண்டே இருங்கள்

ரோகி

ரணத்தில் நிணம் கசிய
வீதியில் நின்றிருந்தேன்
பாதசாரிகளின் பார்வைகள்
விநோதமாயிருந்தது
தனக்கு வந்து விடுமோ
என அஞ்சி விலகினர் சிலர்
சிலர் அருவருப்புக் கொண்டு
மண்ணில் காறி உமிழ்ந்தனர்
புண்ணிலிருந்து வீசி்ய
வாடையை காற்று
வாங்கிச் சென்று
இன்னொருவர் நாசிக்குள்
நுழைத்தது
உச்சி வெயிலால்
காயங்கள் எரிந்தன
உடலின் மேல்
மற்றொரு உடல்
போர்த்தியது போலிருந்தது
உடலின் கனத்தால்
பாரம் தாங்க இயலாத
தோணி ஆடுவது போல
உடம்பு அங்குமிங்கும்
அசைந்தது
மரணம் வந்து விடுதலை
தரும் வரை
வேறு கதிமோட்சம்
இல்லையென்று
உள்ளம் புலம்பி அழுதது.

ராணித் தேனீ

தேனீக்கள் பற்றிய புதியபாடம்
நாளைக்கு

ஆசிரியர் நடத்தும் முன்
வாசித்துச் செல்லும் பழக்கம்
செல்வராணிக்கு

‘குடும்பமாய் வாழும் தேனீக்கள்..
குடும்பத்தின் தலைவி ராணீத்தேனீ ‘

படத்தில் கம்பீரமாகத் தெரிந்தது
ராணீத் தேனீ

“எப்போடி வந்தே, சாப்பிட்டியா?”
உழைத்த களைப்பைக்
குரலில் காட்டாமல் கேட்டாள்
வீட்டுக்குள் நுழைந்த அம்மா.

‘ராணியாக வளரவேண்டிய
புழுவுக்கான அறை
பிரத்தியேகமானது
நிலக்கடலை வடிவில்
அழகிய கிண்ணம் போன்றது’

“எந்திரிடி போயீ திண்ணயில
உக்காந்து படி”
உதைத்துத் துரத்தினார்
போதையில் வந்த அப்பா.

‘ராஜாக்களின் வேலை
உண்பது உறங்குவது
இனம் பெருக உதவுவது..
இவற்றுக்குக்
கொடுக்குகள் கிடையாது’

“அய்யோ விடு
புள்ளை பரீச்சைக்கி கட்ட
வச்சிருக்கம்யா”
உள்ளே பாத்திரங்களின் உருளல்
அம்மாவின் அலறல்

“சம்பாதிக்க திமிராடி
பொட்டக்குட்டி படிச்சு
என்னாத்தக் கிழிக்கப் போவுது”
அப்பாவின் உறுமல்
மீண்டும் டாஸ்மாக் நோக்கி
நகர்ந்தன அவர் கால்கள்

‘பஞ்சகாலத்தில் வெளியே
தள்ளப் படுவார்கள்
சோம்பேறி ராஜாக்கள்’

எத்தனை முறை வாசித்தாலும்
இதுமட்டும் மனதில் ஏறாமல்

கேட்கத் தொடங்கியிருந்தது
அம்மாவின் கேவல்

மேலே படிக்க இயலாத
செல்வராணியின் கண்களிலிருந்து
மெல்ல வழிந்திறங்கிய நீர்த்துளிகள்
புத்தகத்தில் விழுந்து நிற்க

முதன் முறையாய்
உப்புக் கரித்தத் திரவத்தை
உறிஞ்சிச் சுவைத்த ராணீத்தேனீ..

நன்றி சொல்லியது கடவுளுக்கு
ராஜாத் தேனீக்களுக்குக்
கொடுக்குகள் தராததற்கு.
***

சந்திப்பு

என்னை சந்திக்க வரும்
நீங்கள்
என்னைப் பற்றிய எந்த
யூகத்திற்கும் செல்லாமல்
நீங்கள் நீங்களாகவே
வாருங்கள்
நானும் நானாகவே
வருகிறேன்
உங்களைப் பற்றிய எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல்.

பழைய காதலிகள்

பழைய காதலிகளை
பார்க்க நேர்கையில்
நான்
பழைய காதலனாக
இருப்பதில்லை.

கோபுரம் தாங்கி

பழுத்த இலைகளை
உதிர்த்துச் சென்றது
காற்று
நரகல் தின்னும்
பன்றியின் மீது
ஒன்றுக்கிருக்கும் சிறுவன்
அடுக்களையில்
பாத்திரத்தை உருட்டும்
திருட்டுப் பூனை
விசேஷ நாட்களில்
காகங்களுக்கு ஏற்படும்
கிராக்கி
வண்ணத்துப்பூச்சி
பறக்கும் பாதைகளில்
உதிர்த்துச் செல்லும்
வண்ணங்களை
தங்கப் பரிதி
யாரும் களவாட முடியாத
உயரத்தில்
வெள்ளி நிலவு
ரசிக்க யாருமின்றி
காய்கிறது
திண்ணைகள்
ஒட்டுக் கேட்கின்றன
தெருவின் ரகசியங்களை
கோபுரம் தாங்கிகள்
கோபுரங்களை தாங்குவதில்லை.

செல்வராஜ் ஜெகதீசன் கவிதைகள்

01
கோலாகலம்

சுற்றிவிடப்பட்ட தட்டு
சுழன்று கொண்டிருந்தது
ஒவ்வொரு முறையும்
ஓரோர் மாதிரி.

குழந்தைக் கண்களின்
கோலாகலமோ
ஒவ்வொரு முறைக்கும்
ஒரே மாதிரி.
O
02
கண்ணாமூச்சி

அதற்குள்ளாகவா என்று
அகல விரியும் விழிகளுக்கு
இதற்குள்தான் என்று
இதழ் விரியுமுன்னே
எதற்குள் என்றபடி
எட்டிப் போடும் கால்களுடன்

இப்படித்தானே இருந்து கொண்டிருக்கிறோம்

இரவைத் தொடும் கனவுடன்
இளித்துக் கொண்டிருக்கும் பகல் மாதிரி.

ட்ரோஜனின் உரையாடலொன்று

இது என்ன விசித்திரமான தேசம்

கைக் குழந்தைகள் தவிர்த்து

ஆண் வாடையேதுமில்லை

எல்லோருமே பெண்கள்

வயதானவர்கள்

நடுத்தர வயதுடையோர்

யுவதிகள்

எல்லோருமே பெண்கள்

விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்ப

பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான

இவ் விசித்திர நகரில்

எஞ்சியுள்ள

எல்லோருமே விதவைகள்

எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்

சகோதரரைப் புத்திரர்களை

சீருடை அணிவித்து

வீரப் பெயர்கள் சூட்டி

மரியாதை வேட்டுக்களின் மத்தியில்

புதைத்திட்டோம்

செத்துப்போனவர்களாக

மூலம் – சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)

எதையாவது சொல்லட்டுமா……..38

க.நா.சு நூற்றாண்டை ஒட்டி நான் ஒன்று செய்தேன். ஒரு காலத்தில், மையம் ராஜகோபால், ஸ்ரீனிவாஸன், ஆனந்த் மூலம் கொண்டு வந்த க.நா.சு கவிதைகளை திரும்பவும் கொண்டு வந்தேன். 1986 ல் அது வந்தபோது, க.நா.சு நிகழ்த்திய உரை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சு கவிதை எழுதுவதில் தெளிவாகவே தன் கோட்பாட்டை வகுத்திருந்தார். கவிதையை உரைநடை வழியாகக் கொண்டு வருவதில் புரட்சியே செய்திருந்தார்.

இந்தப் புத்தகம் 1000 பிரதிகள் அச்சிட்டேன். மொத்தம் 32 பக்கம் அட்டையுடன் சேர்த்து. சேகர் ஆப்செட்டில் கொடுத்துவிட்டு 1000 பிரதிகள் வேண்டும் என்றேன். இப்புத்தகத்தை புத்தகக் கண்காட்சி போதே அடிக்க மறந்துவிட்டேன். முடியவில்லை. அச்சடித்திருந்தால், அதை எல்லோருக்கும் கொடுப்பதற்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணி போய் ஆட்டோ வில் புத்தகக் கட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பின் வீட்டில் பெஞ்ச் மீது அதை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக புத்தகக் கட்டைப் பிரித்து அதில் உள்ள புத்தகங்களை எடுத்துக்கொண்டேன். மகத்தான க.நா.சு போன்ற ஒரு கவிஞரைப் பற்றி இன்னொரு கவிஞருக்குத்தான் தெரியும்போல் தோன்றுகிறது. கடற்கரை என்ற கவிஞரின் புத்தக விழா சென்னை LLA கட்டிடத்தில் மாலை ஆறு மணிக்கு நடக்க இருப்பதை கடற்கரை எனக்குத் தெரிவித்திருந்தார். அதுதான் க.நா.சு கவிதைகளை எல்லோருக்கும் கொடுக்க உகந்த இடம் என்று தோன்றியது.

எனக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கிளம்புவது சிரமம். சீர்காழியிலிருந்து சனிக்கிழமை வந்து, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நான் எங்கும் அலையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அடுத்தநாள் அலுவலகம் செல்ல சரியாக இருக்கும். க.நா.சுவின் உத்வேகத்தால் நான் கிளம்பி விட்டேன். LLA கட்டிடத்திற்கு 5.30 மணிக்கே வந்துவிட்டேன். எல்லோருக்கும் கவிதைப் புத்தகத்தை எடுத்து நீட்டினேன். கவிஞர் ஜெயபாலன் அதற்கு பைசா கொடுக்க பாக்கெட்டில் கையைவிட்டார். நான் சொன்னேன். இது இலவசம் என்று. எனக்கும் அப்படி இலவசமாகப் புத்தகத்தைக் கொடுக்க மகிழ்ச்சியாக இருந்தது. பலர் வாங்கிக்கொண்டார்கள். என் நண்பர் இந்திரன் வந்திருந்தார். அவரும் நானும் ஒரே அலுவலகத்தை ஒரு காலத்தில் சேர்ந்தவர்கள். நான் புத்தகம் கொடுக்கும்போது,”உங்கள் புத்தகத்திற்கு பைசா தரமாட்டேன்,”என்றார். நான் பேசாமல் இருந்தேன். அதன் பின் தான் அவருக்குத் தெரிந்தது நான் கொடுத்தப் புத்தகம் இலவசம் என்று. நான் உடனடியாக கடற்கரை கூட்டத்திலிருந்து கிளம்பி வந்து விட்டேன்.

மயிலாடுதுறைக்கு நகூர் வண்டியில் கிளம்பி காலை 5 மணிக்கு வந்தேன். ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு பத்திரிகைக் கடையில் கடைக்காரர் பார்த்து க.நா.சு புத்தகத்தை நீட்டி஧ன். ‘புத்தகம் இலவசம். எல்லோரிடமும் கொடுங்கள்,’ என்றேன். வாங்கி வைத்துக் கொண்டார். பின் என்னுடன் வந்த உறவினரிடம் கொடுத்தேன்.

மயிலாடுதுறையில் மயூரா லாட்ஜ் என்ற ஓட்டல் ஒன்று உண்டு. அங்கு சில புத்தகங்களைக் கொடுத்தேன். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. க.நா.சு யார் என்று சொல்ல வேண்டியிருந்தது. எப்போதும் பத்திரிகை வாங்கும் கடைக்குச் சென்று கொடுத்தேன். அந்தக் கடைக்காரர் வாங்க மறுத்துவிட்டார். எனக்கு சற்று வருத்தமாக இருந்தது. பின் வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொண்டார். அவரிடம் க.நா-சுவைப் பற்றி சொன்னாலும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் அலுவலகத்தில் உள்ள சிலருக்குக் கொடுத்தேன். வாங்கி வைத்துக்கொண்டாலும் அவர்கள் யாரும் படிக்கப் போவதில்லை.

லட்சிமிபதியை கடற்கரை கவிதைக் கூட்டத்தில் பார்த்தபோது, கூட்டம் போடும் சாத்தியம் குறைவாக இருப்பதுபோல் பட்டது. முன்புபோல் இல்லை. கூட்டம் போட LLA கட்டிடத்தில் லோள் பட வேண்டும் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும். கூட்டம் போடும் தேதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின் எல்லோரையும் வரச்சொல்லி போன் மேல் போன் போட்டு கூப்பிட வேண்டும். அப்படியும் வர மாட்டார்கள். எல்லோருக்கும் வயதாகிவிட்டது. பேசுபவர்களுக் வயதாகி விட்டது. கேட்பவர்களுக்கு வயதாகி விட்டது. தினமும் ஜோல்னா பையில் க.நா.சு கவிதைகளை சுமந்துகொண்டு இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் புத்தகம் வழியாக அவருடைய நூற்றாண்டை தொடங்கி விட்டதாக தோன்றுகிறது.

(இன்னும் வரும்)

எது கவிதை……..2

ஓய்வுபெற்ற என் அலுவலக மேலதிகாரி ஒருவர் தமிழில் புலமை வாய்ந்தவர். சரளமாக இலக்கணத்துடன் கவிதை எழுதுபவர். ரொம்ப கஷ்டமான அரவிந்தரின் Perseus the Deliverer என்ற நாடகத்தை தமிழில் கவிதை வடிவமாக 286 பக்கங்கள் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார். கவிதையாக அந் நாடகம் தமிழில் வெளிவந்துள்ளது. அப்புத்தகத்தைப் பார்க்கும்போது எனக்கு திகைப்பாக இருந்தது. பின் அப்புத்தகத்தைப் படிக்கும்படி கேட்டபோது எனக்குப் பிரச்சினையாகப் போய்விட்டது. எனக்கு நேரம் கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம். அதை என்னால் படிக்க முடியவில்லை என்பது சங்கடமாகப் போய்விட்டது. அப்புத்தகத்தை என்னால் படிக்கவே முடியவில்லை. ஏன்?

கவிதையின் புது வடிவம் பிறந்தபிறகு பழைய மரபெல்லாம் போய்விட்டது. ஆனால் இன்னும் பலபேர் பழைய மரபிலேயே கவிதை எழுதிக்கொண்டு போகிறார்கள். அமுதசுரபி என்ற பத்திரிகையில் இன்னும் வெண்பா போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதுமாதிரியான கவிதைகளில் பெரும்பாலும் அதை அமைக்கும் முறையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால் சாராம்சம் போய்விடும். பின் நீண்ட கவிதை.
என்னால் நீண்ட கவிதைகளைப் படிக்கவே முடியவில்லை. கவிதையை நாடகமாக எழுதிப் படிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கவிதை என்பது ஒரு பக்கத்தில் நின்று விடவேண்டும். அதன் பின்னும் அதை நீட்டினால், கொஞ்சம் நீர்த்துப்போகக்கூடிய வாய்ப்புண்டு. நகுலனின் நீண்ட கவிதைகள் இரண்டை நான் விருட்சம் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளேன். ஆனால் முழுவதும் ரசித்துப் படிக்க முடியுமா என்பது தெரியவில்லை. கவிதையை அதிகப் பக்கங்கள் கொண்டு வந்தால், படிக்க தடுமாறும் இது என் அனுபவம். பலருடைய நீண்ட கவிதைகளை நான் படிப்பதில்லை. எங்காவது சில வரிகள். பாராக்கள் படிப்பதுண்டு. மனோன்மணியம், சிலப்பதிகாரம் கூட படித்ததில்லை. படிக்க விரும்பியதில்லை. ஏன்என்றால் அந்த அளவிற்கு பொறுமை இருந்ததில்லை. அதேபோல் ஹைகூ கவிதைகளைப் படிக்க விரும்பியதில்லை. கவிதை என்றால் கொஞ்சமாவது 6 வரிகளாவது வரவேண்டும்.

இந்த என் அனுபவத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதில்லை.

(இன்னும் வரும்)