ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ்……



டந்த சில மாதங்களாகத் தொடர்ந்து நிகழ்ந்த மூவரின் மறைவு என்னைப் பெரிதும் நினைக்கும்படி தூண்டிக் கொண்டிருந்தது. ஒருவரின் மறைவு, ஒருவரைப் பற்றிய என் மனதில் தோன்றிய வரைபடமாக என்னை அடிக்கடி நினைக்கத் தூண்டி, ஒருவிதத்தில் என்னைச் சங்கடப்படுத்தியது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குமுன், நவீன விருட்சம் தொடக்கக் காலத்தில், ஆதிமூலம், மருது போன்ற ஓவியர்களைச் சந்தித்திருக்கிறேன்.பழகுவதற்கு அற்புதமானவர்கள்.
ஆதிமூலமும், மருதுவும் தேனாம்பேட்டையில் அரசாங்க அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சமயத்தில் பார்த்திருக்கிறேன். ஆதிமூலம் பழகுவதற்கு எளிமையான மனிதராகவும், கம்பீரமான மனிதராகவும் எனக்குத் தோற்றம் தருவார். எனக்கு அவரிடம் அளவுகடந்த மரியாதை உண்டு. சத்தமாகவே பேச மாட்டார்.
விருட்சம் முதல் இரண்டு இதழ்கள் வெளிவந்தபோது, எனக்கு அவரிடமிருந்து விருட்சம் எழுத்தை கையால் எழுதி வாங்க வேண்டுமென்ற எண்ணம் உருவானது. அந்தச் சமயத்தில் நடந்த ஒரு ஓவியக் கூட்டத்தில் ஞானக்கூத்தனுடன் நான் சென்றிருந்தேன்.
அக் கூட்டத்தில்தான் ஆதிமூலத்தைப் பார்த்து விருட்சம் என்ற பெயரை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டேன். நான் கேட்ட விதமோ, கேட்ட சூழ்நிலையோ அவருக்குச் சங்கடத்தைத் தந்திருக்குமென்று நினைக்கிறேன். இதனால் அவர் மறுத்துவிடுவார் என்றும், கேட்ட விதத்தால் கோபத்துடன் எதாவது சொல்வாரென்றும் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர் மாறாக, கேட்ட சில நிமிஷங்களில் எனக்கு விருட்சம் எழுத்தை வரைந்து கொடுத்துவிட்டார். அவர் கையால் வரைந்த விருட்சம் எழுத்துக்கள்தான் இன்னும் தொடர்ந்து அட்டையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
இன்னும் எத்தனையோ உதவிகளை அவர் மூலம் நிறைவேற்றியிருக்கிறேன். முதன் முதலில் ஸ்ரீனிவாஸனின் கவிதைத் தொகுதியை விருட்சம் வெளியீடாகக் கொண்டுவந்தேன். ஆதிமூலம்தான் அதற்கு ஓவியம். ஸ்ரீனிவாஸன் மீது அளவுகடந்த அன்பு அவருக்கு. உடனே ஸ்ரீனிவாஸன் கையெழுத்தை வைத்து ஒரு அட்டைப் படம் தயாரித்துக் கொடுத்தார். அந்தப் படத்தை வைத்துத்தான் புத்தகமே வந்தது. அதைத் தரும்போது, ஸ்ரீனிவாஸனைப் பற்றி ரொம்பவும் உயர்வாகவும், சீனு என்று உரிமையாகவும் அவர் உச்சரித்தது என் ஞாபகத்தில் இருக்கிறது.
பழகுவதற்கு அற்புதமான மனிதர் ஆதிமூலம், உலகளவில் போற்றுகின்ற ஒரு ஓவியர், எந்தவிதப் பந்தாவும் இல்லாமல, பழகுவது என்னைப் பொறுத்தவரை ஆச்சரியமான விஷயம். அதற்குக் காரணமாக நினைப்பது, சிறுபத்திரிகை சூழல். அன்றைய சிறுபத்திரிகைச் சூழலில் தங்களையும் வெளிப்படுத்திக்கொண்ட ஓவியர்கள் பலர். அதில் ஆதிமூலம் முக்கியமானவர். அவருடைய காந்தி ஓவியம் இன்னும்கூட மறக்கமுடியாத ஒன்று.
விருட்சம் மூன்றாவது இதழ் வரும்போது, க. நா. சு. இறந்துவிட்டார். அந்த இதழ் அட்டைப் படத்தை அலங்கரித்த ஆதிமூலம் வரைந்த க.நா.சுவின் ஓவியம்தான் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. என்னால் மறக்க முடியாத ஓவியத்தில் அதுவும் ஒன்று. ஆதிமூலமும் சரி, மருதுவும் சரி, விருட்சம் இதழிற்காகப் பல ஓவியங்களை மனமுவந்து நன்கொடையாக அளித்திருக்கிறார்கள்.
ஞானக்கூத்தனின் ‘கவிதைக்காக’ என்ற புத்தகத்திற்காக ஆதிமூலம் அவர்களைச் சந்தித்தேன் ஞானக்கூத்தனுடன். அன்று பொங்கல் தினம் என்று நினைக்கிறேன். ஆதிமூலம் அவருடைய பல ஓவியங்களைப் பார்க்கும் சந்தர்ப்பமும், பாக்கியமும் எனக்குக் கிட்டியது. அன்போடு வரவேற்று உபசரித்ததோடல்லாமல், சாப்பிட்டுப் போகும்படியும் சொன்னார்.
ஞானக்கூத்தன் கவிதைகள் எல்லாம் சேர்த்து ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற புத்தகத்தைத் தொகுத்து அதன் வெளியீட்டு விழா நடத்தும்போது, ஆதிமூலம் அவர்களின் 60வது வயது விழாவும், சா. கந்தசாமியின் சாகித்திய அக்காதெமி விருதுப் பெற்றதையும் சேர்த்து மூவர் விழாவாக விருட்சம் சார்பில் கொண்டாடினோம். அவ்விழாவிற்கு பேரறிஞர் சிவத்தம்பி, அனிதா ரத்னம், நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் வந்திருந்து சிறப்பு செய்தார்கள். விருட்சம் நடத்திய அக் கூட்டத்திற்குப் பிறகு, நடிகர்கள் போன்ற பிரபலமானவர்களை அழைத்து இலக்கியக் கூட்டம் நடத்துவது வழக்கமாகிவிட்டது.
கம்பீரமான தோற்றம் கொண்ட எளிய சுபாவம் கொண்ட ஆதிமூலத்தின் மரணத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவர் மரணம் அடைந்தபிறகுதான், அவர் சில ஆண்டுகளாக ரத்தப் புற்று நோயால் அவதிப்படுகிறார் என்பதை அறிந்தேன். அந் நோயைக் கூட அவர் யாரிடமும் கூறவில்லை என்பதையும் அறிந்தேன். மரணத்தை முன்கூட்டியே அறிந்ததால், அவரிடமிருந்து மரணத்தைப் பற்றிய எந்த அசைவும் நிகழவில்லை என்பதோடல்லாமல், அதை பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டார் என்று நினைக்கிறேன். இன்னும்கூட ஆதிமூலம் இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு சாயலில் எனக்கு ஆதிமூலத்தைப் பார்க்கும்போது, சா கந்தசாமியையும், சா கந்தசாமியைப் பார்க்கும்போது, ஆதிமூலமும் ஞாபகத்திற்கு வந்து கொண்டிருப்பார்கள்.
ஆதிமூலம் மரணத்துடன் போராடவில்லை. வெற்றிகரமாக மரணத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றுவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ****************
சுஜாதாவை சென்னையில்தான் முதன்முதலாகச் சந்தித்திருக்கிறேன். கணையாழி கவிதைக் கூட்டத்தில், நான் படித்த கவிதைகளைப் பற்றி கருத்துக்களை உடனடியாக வழங்கினார். இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர் நான் நடத்திய ஞானக்கூத்தன் கவிதைகள் கூட்டத்தில் கட்டுரை வாசித்தார். நான் அவர் வருவாரா என்று சந்தேகத்துடன் இருந்தேன். சுஜாதா எல்லார் பற்றியும், எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக் கொண்டிருப்பார். அவருடைய வேகம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் பங்களூரில் இருந்தபோதுகூட, பெரிய பதவியில் இருந்தும்கூட எழுதிக் கொண்டே இருந்திருக்கிறார். எல்லாப் பத்திரிகைகளும் அவர் எழுத்தை விரும்பி பிரசுரம் செய்யும். ஏன் அவரைக் கேட்டுக்கூட பிரசுரம் செய்யும். அவர் பெரிய பத்திரிகைகளில், சிறு பத்திரிகைகளைப் பற்றி தன் கருத்துக்களை எழுதாமல் இருக்க மாட்டார். ஒருமுறை அவர் குமுதம் பொறுப்பாசிரியராக இருந்தபோது, சிறுபத்திரிகையில் வெளிவந்த கவிதைகளை அதிகம் வெளியிட்டிருக்கிறார். அவருடைய தொடர்கதைகளில் என்னைப் பற்றியும், நவீன விருட்சம் பற்றியும் எழுதியிருக்கிறார். எனக்குத் தெரிந்து இவர் வேகத்திற்கு க.நா.சுவைத்தான் குறிப்பிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் க.நாசு வேறு, சுஜாதா முழுக்க முழுக்க வேறு. இன்று சுஜாதாவைப் போல எழுத முயற்சி செய்பவர்கள் என்று ஒரு லிஸ்டே போடலாம்.
சுஜாதாவும் கநாசு மாதிரி ஒரு ஆண்டில் அவருக்குப்பிடித்த பல விஷயங்களைக் குறித்து லிஸ்ட் போடுவார். இந்த ஆண்டின் சிறந்த சிறு பத்திரிகை நவீன விருட்சம் என்று ஒருமுறை சுஜாதா குறிப்பிட்டுள்ளார். அவருடைய எந்த எழுத்தையும் பிரசுரம் செய்ய பத்திரிகைகளும் தயாராக இருந்தன. சுஜாதாவைப் பிடிக்காத இலக்கிய நண்பர்களும் எனக்குண்டு. அதே சமயத்தில் சுஜாதா எழுதும் எந்த எழுத்தையும் படித்து திரும்பவும் அப்படியே மனப்பாடமாகச் சொல்கிற நண்பர்களும் எனக்குண்டு. அவர் மரணம் இட்டு நிரப்ப முடியாத மரணம்தான்.
ஆழ்வார்பேட்டையில் அவர் வீட்டிற்கு எதிரில் இந்திரா பார்த்தசாரதி இருந்தார். இந்திரா பார்த்தசாரதியைப் பார்த்துவிட்டு, சுஜாதாவையும் பார்க்கச் செல்வேன். 406 சதுர அடிகள் என்ற என் சிறுகதைத் தொகுதியை சுஜாதாவைப் பார்த்துக் கொடுக்கச் சென்றேன். அப் புத்தகத்தைப் பற்றி எதிலாவது எழுதும்படி அன்புடன் கேட்டுக்கொண்டேன். என் புத்தகத்திற்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு வேண்டிக்கொண்டேன். காரணம் பத்திரிகைகளுக்கு மதிப்புரைக்காக புத்தகம் அனுப்பினால், புத்தகத்தைப் பற்றி யாரும் மதிப்புரை செய்வதில்லை. அதனால் ஒரு புத்தகம் வந்தால் அதைப்பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. இன்றும் கூட தமிழில் இந்த நிலை தொடர்ந்து நிலவுகிறது. இப்போதெல்லாம் யாரிடமும் புத்தகம் கொடுப்பதில்லை. சுஜாதா என் புத்தகத்தைப் பற்றி எழுதாமலில்லை. ஆனால், ‘அழகியசிங்கரே விரும்பிக் கேட்டக்கொண்டதால்.’ என்று எழுதிவிட்டார். எனக்கு அவர் அப்படி குறிப்பிட்டது சற்று வருத்தமாக இருந்தது.
பின் சுஜாதாவை அவர் நோய்வாய்ப்பட்டு மீண்ட ஒரு சமயத்தில் ரவி சுப்பிரமணியனுடன் மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் பார்த்திருக்கிறேன். ரொம்பவும் ஒடுங்கி போயிருந்தார். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. அதிகமாகப் புத்தகங்கள் அவர் வீடைத் தேடி வருவதாகவும், அதனால் புத்தகங்களை யாரும் அனுப்ப வேண்டாமென்று சொல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனந்த விகடனில் அவர் உடல்நிலையைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். எந்தச் சந்தர்ப்பத்திலும் அவர் மரணத்துடன் போராடி போராடியே வெற்றி பெற்றிருக்கிறார். இறுதிவரை மரணத்துடன் சண்டைப் போட்டவர் சுஜாதா. மரணம் கடைசியில் அவரை வென்றது. ***************
ஸ்டெல்லா புரூஸ் எனக்கு காளி-தாஸ், ராம் மோஹன் என்ற பெயரில்தான் முதன்முதலாக அறிமுகம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், கடற்கரையில், ராம் மோஹன், வைத்தியநாதன், ராஜகோபால், ஆனந்த், ஸ்ரீனிவாஸன், ஞானக்கூத்தன் என்று பட்டாளமே சேரும். முதன் முதலில், அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு ஆர்வமுள்ளவனாகவே இருந்திருக்கிறேன். அவர்கள் பேசுவதைக் கேட்பேனே தவிர, வாய்த் திறந்து நான் பொதுவாக அதிகமாகப் பேச மாட்டேன். கவிதைகள் குறித்தும், உலக நடப்புக்களைக் குறித்தும் அதிகமாகவே பேசியிருக்கிறோம்.
ஸ்டெல்லா புரூஸ் தி.நகரில் ஒரு அறை வாசியாக பூங்கா மேன்சன் ஒன்றில் குடியிருந்தார். அப்போது எனக்கு அவரைப் பற்றிய ஒரு பிரமிப்பு எப்போதும் இருக்கும். எந்த வேலைக்கும் போகாமல், தனக்கென்று பெரிய எதிர்ப்பார்ப்பின்றி சேமிப்பிலிருந்து மிகக் குறைவான செலவில் சிக்கனமாகச் செலவு செய்துகொண்டு வருபவர் அவர். புத்தகங்களைப் பற்றியும், தனக்குப் பிடித்த மனிதர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். பெரும் பத்திரிகையில் குறிப்பாக ஆனந்தவிகடனில் அவருடையதொடர்கதைகள் வெளிவந்தவுடன், அவருக்குப் பல தொடர்புகள் ஏற்பட்டன. முதலில் வாசகியாக இருந்த ஹேமா அவருடைய மனைவியாக மாறினார்.
அறை வாசியாக இருந்த அவர், தனியாக வீடு பார்த்து குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.எளிமையான மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அவருடையது.
விருட்சம் ஆரம்பித்த சமயத்தில் உள்ள நிலை வேறு; இப்போதைய நிலை வேறு. இந்தக் காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திப்பது என்பது குறுகிப் போய்விட்டது. ஏன் பேசுவதுகூட நிகழாமல் போய்விடுகிறது.
ஸ்டெல்லா புரூஸின் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நண்பர்கள் வட்டமும் மாறிப் போய்விட்டது. ஹேமா உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில், ஹேமா இல்லாத வாழ்க்கையை ஸ்டெல்லாபுரூஸ் நினைத்துப் பார்க்காமல் இருந்திருக்க மாட்டார். ஆனால் அவரால் வாழ முடியவில்லை. ஆன்மீகத்தில் தனக்கு ஏதோவொரு சக்தி வந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு, நெற்றிமேடு என்ற பெயரில் அவர் பெரும்பாலும் யாராவது இறந்து போவதை மட்டும் குறிப்பிடுவார். ஒரு முறை அவருடன் பேசும்போது நான் கூட குறிப்பிட்டேன்: ‘ஏன் உங்கள் நெற்றிமேடு மரணத்தை மட்டுமே குறிப்பிடுகிறது,’ என்று.
ஸ்டெல்லாபுரூஸ் தவறுதலாகக் கருதிய ஆன்மீகம்தான் அவரை தற்கொலை செய்துகொள்ள தூண்டியதோ என்றும் தோன்றுகிறது. அவர் ஏற்கனவே பல தற்கொலைகளைச் சந்தித்திருக்கிறார். ஒரு முறை கடற்கரையில் ஒரு இளைஞன் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சிததைப் பற்றி சொல்லியிருக்கிறார். ஏன் ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டதுகூட கவனித்திருக்கிறார். அவர் உறவினர் கூட தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி எழுதியும் இருக்கிறார். அப்படிப்பட்டவர் தானே தற்கொலை செய்துகொள்வார் என்பதைத் துளியும் எதிர்பார்க்க முடியவில்லை.
ஆதிமூலம் மரணத்தைக் குறித்து எந்த முணுமுணுப்பும் இன்றி முழுக்க ஏற்றுக் கொண்டவர். சுஜாதாவோ மரணத்துடன் சண்டைப் போட்டு எதிர்த்து இறுதியில் வெற்றி கொள்ளமுடியாமல் தோல்வி அடைந்தவர். தானே மரணத்தைத் தேடி தழுவிக் கொண்டவர் ஸ்டெல்லாபுரூஸ்.
அழகியசிங்கர்
20.07.2008 at 10.25 pm

நமக்கிருப்பது


நமக்குத் தெரியும்
ஒரு பொம்மலாட்டத்தில்
நாம் மன்னர்களென்று.
நமக்குத் தெரியும்
உண்மையில் நாம்
சம்பள அடிமைகளென்று
நமக்குத் தெரியும்
மன்னர்கள், குறுநில மன்னர்கள்
பெருநில மன்னர்கள், மாமன்னர்கள்
பெரு மாமன்னர்களின் பிரஜைகள் நாமென்று.
நமக்குத் தெரியும்
மாமன்னராகும் கனவு
பலருக்குமிருக்கிறதென்று
நமக்குத் தெரியும்
அரசன் வசமும் அவன்
எதிரிகள் வசமும்
ஆளும் அம்பும் உண்டென்று.
நமக்குத் தெரியும்
பசுக்களை, இளங்கன்றுகளை
காளைகளை, பறவைகளை, மரங்களை
சாய்த்தது யாரென்று.
நமக்குத் தெரியும்
கண்ணால் கண்டதும்
காதால் கேட்டதும்
தீர விசாரித்ததும் மெய்யென்று.
நமக்குத் தெரியும்
நமதடுத்த கணம்
கத்தியின் கூராய்
அரிவாளின் மின்னலாய்
துப்பாக்கியின் உறுமலாய் வருமென்று.
நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று.
நமக்குத் தெரியும்
நமக்கிருப்பது ஒரே உயிர்
அதை எளிதில் விடக்கூடாதென்று.
தமிழில் அங்கத உணர்வுடன் கவிதை எழுதுவது எளிதான விஷயம் அல்ல. இதில் கை தேர்ந்தவர் ஞானக்கூத்தன். அவருடைய கவிதைகளில் sense of humour தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். எந்தக் கவிதையைப் படித்தாலும், படிப்பவரை சிரிப்பில் ஆழ்த்தும்படி இருக்கும். ஆனால் தீவிரமான கவிதைகளும் உண்டு. ஒருமுறை நவீன விருட்சத்திற்காக ஒரு கவிதை தரும்படி கேட்டேன். அவரும் எழுதிக் கொடுத்தார். அதைப் படித்தபிறகு எனக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வந்தது. குதிரை என்பது அக் கவிதையின் தலைப்பு.
குதிரை

மரத்துக்குக் கீழே குதிரை
அதற்குக் கொடுக்கப்பட்ட
புல்லைக் குனிந்து குனிந்து
தரையிலேயே தின்றவாறு நிற்க
குதிரைக்குப் பக்கம் இவன் போனான்
‘குதிரை,’ ‘குதிரை’ என்றான்.
இவனைக் குதிரை கவனிக்காமல்
தன்
பாட்டுக்குப் புல்லைக் கொரித்தது
மீண்டும் இவன் சொன்னான்
‘குதிரை, குதிரை, குதிரை’
விட்டது பட்டென் றொருஉதை
அந்தக் குதிரை.
தரையில் உருண்டான்
அப்பால் ஒருமுறைக்கூட
குதிரையென் னாமல் கிளம்பிப்போனான்.
பெரும்பாலும் பலருக்கு கவிதை மூலம் சிரிப்பை வரவழைக்கத் தெரியவில்லை. லாவண்யாவின் ‘நமக்கிருப்பது’ என்ற கவிதையில் சிரிப்பு வருகிறது. இந்தச் சிரிப்பை கடைசியில் கொண்டு வருகிறார்.
நமக்குத் தெரியும் நாம்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று……….
படிக்கும்போது நமக்குத் தாங்கமுடியாத சிரிப்பு வருகிறது. நவீன விருட்சம் 80ஆவது இதழில் இக் கவிதை பிரசுரம் ஆகி உள்ளது. 80 ஆவது இதழைப் படித்த நண்பர் ஒருவர், லாவண்யா ஆணா பெண்ணா என்று கேட்டார். ஆண் என்றேன். அவருக்கு அதைக் கேட்டவுடன் சுவாரசியம் குறைந்து விட்டது. திரும்பவும், என்ன வயது என்று கேட்டார். ’60க்கு மேல்’ என்றேன். நண்பர் என்னிடம் லாவண்யாவைப் பற்றி அப்புறம் பேசவே இல்லை.
– அழகியசிங்கர்
19.07.2008

என் ஏகாந்த வனம்


எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
என் அடர்ந்த வனங்களில்
படர்ந்த முதல் சூரியக் கிரணம் நீ
ஏனோ இப்போது
என் காட்டில் குயில்கள் எல்லாம்
கூவித் திரிகின்றன
உன் பெயரை….
உன் வருகைக்குக் காத்திருக்கும்
என் வாசனைப் பூக்கள்….
நீ கால் நனைக்க
கன்னம் சிவக்கும்
என் காட்டு நீரோடை…..

எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
ஏனோ இப்போது
என் வசமில்லை என் வனம்
ஏன் நுழைந்தாய் உன் புல்லாங்குழலுடன்
என் ஏகாந்த வனத்தில்……?

என் அம்மா


அவளுக்கு நன்றகவே தெரியும்
மகாபாரதமும் இராமயணமும்-
தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை
சொல்லுவாள் அவற்றிலிருந்து
தினமும் ஒரு புதிய கதை உண்டு –

அவற்றில் ஆயிரக்கணக்கில்
கதைகள் உண்டல்லவா?
எப்போதும் அவளுக்கு அவைதான்..
படித்துக்கொண்டிருப்பாள்-
பிரார்த்தனையின்போதும் அவைதான்
சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும்
ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று.
நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம்
அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய
என்று சொல்லப்பட்டுள்ளது….

சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள்
அவளுக்குத் தெரிந்திருந்தும்
அவற்றைச் சொல்லும் போது
கண்ணில் நீர் வந்தபோதும்-
இராமனின் மேல்.
சீதையின் மேல் சந்தேகித்து
அக்னிப்பிரவேசம் செய்யவைத்த
இராமனின் மேல்
அவளுக்கு கோபம் வந்ததாக
எங்களுக்குத் தெரிந்ததில்லை-

அந்த வயதில்
நாங்கள் கேட்டதுமில்லை
அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும்
எங்களுக்குத் தெரியாது..

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை
அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே-
அது.
ஒரு மாதிரியான,
பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி
நினைக்கையில் வருமே
அது போன்றவொரு
அருவருப்பு….

நான் வயதுக்கு வந்தபின்னர்
ஒருநாள்
அம்மா சொன்னாள்
ஏ அது அப்படித்தான்
பாஞ்ஞாலியை வைத்து
விளையாடியது
இதே கணக்கு தானே?

மற்றதெல்லாம் வெறும் கண்ணாமூச்சி
குழந்தைக்கு நிலா காட்டுவது-
ஒவ்வொரு அம்மாவும்
ஆங்கிலத்தில் சொல்வது போல
சர்ரகேட் மதர் ஒன்லி
(Surrogate mother only)
அவளது கர்ப்பப்பை வாடகை ஊர்தி மட்டுமே
வரும் கிராக்கி
அவளது கணவனேயானாலும் …ஏ

சரி,
புரியவேயில்லை…
ஆனாலும்
மகாபாரதமும் இராமாயணமும்
ஏன் கடைசிவரை
படித்துக்கொண்டேயிருந்தாளென்று.

நவீன விருட்சம் இதழில் சமீபத்தில் வெளிவந்த எ தியாகராஜனின் இன்னொரு கவிதை இது. மிக எளிமையாக எழுதப்பட்ட கவிதை. பொதுவாக ஒரு தொகுப்பை முழுவதுமாக வாசிப்பதைவிட பலருடைய கவிதைகள் அடங்கிய தொகுப்பை வாசிப்பது சிறந்த அனுபவத்தைத் தரும். ஒருவருடைய தொகுப்பபு மட்டுமே நிரம்பிய கவிதைகள் ஒரே விதமாகவும் படிக்க அலுப்பை உண்டாக்குவதாகவும் இருக்கும். எந்தக் கொம்பன் எழுதினாலும் இதுதான் உண்மை நிலை. யாருடைய கவிதை நூல்களாக இருந்தாலும், படிக்க படிக்க ஒரே வித mind process ஐப் படித்து படித்து நமக்குப் போர் அடித்துப் போய்விடும். என் சகோதரனுக்கு ஜே கிருஷ்ணமூர்த்தியின் Education and its significance என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் படிக்க இந்த ஒரு புத்தகமே போதும் என்று கூறிவிட்டு அவருடைய வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்காமல் இருந்துவிட்டான். கவிதையிலும் ஓரளவு சிறுகதைகளிலும் ஒரே மாதிரியான mind process போரடிக்கிறது. படிக்கிறவர்களுக்கு இது ஏற்படாமல் இருப்பதில்லை. அதனால் ஒருவரின் தனிப்பட்ட தொகுதியைவிட பலர் எழுதிய தொகுதி சிறப்பாக இருக்கிறது.
விருட்சம் முழுவதும் பலருடைய கவிதைகள் படைக்கப் பட்டிருப்பதால், வேறு வேறு அலைவரிசையை உண்டாக்குகிறது.
அழகியசிங்கர்
15.07.2008 (செவ்வாய்க்கிழமை)

புரிவதில்லை கவிதை

உன்னுடைய
இந்தக் கவிதைக்கு
என்ன அர்த்தம்
ஒன்றும் புரியவில்லை

ஆச்பிரின்
கடித்துப் பாதியாகக்
கிடக்கும்
ஒரு ஆப்பிள் துண்டு
காபியோ
அல்லது டீயோ
ஏதோ ஒன்றின்
ஒரு காய்ந்துபோன கோப்பை-
ஒரு இளம் பெண்
அரைகுறை ஆடையில்
ஒரு மூலையில்
சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது-
நாற்காலி மீது
ஜென் புத்தகம் பாதி
திறந்த நிலையில் –

தண்ணீர் கொட்டி
அது கோடிட்டாற் போல

இதுபோன்ற சில வார்த்தைகள்
வேறொன்றும்
இல்லை –

கேட்டால் –
புரியாது
உனக்கு என்கிறாய்

அது சரி
இது ஒரு
ஓவியமல்லவா
எனக்கு
கவிதைப் புரிவதில்லை தான்

நவீன விருட்சம் 79-80வது இதழில் வெளிவந்த எ தியாகராஜன் கவிதைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். பொதுவாக கவிதைகள் எளிதாகப் புரியவேண்டும். ஆனால் பாமரர்களுக்கு எப்படியாக இருந்தாலும் கவிதைப் புரியாது. ஆனால் கவிதைப் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு கவிதை புரியும்படியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். கவிஞர் எதையாவது எழுதி வாசகர்கள் எதையாவது புரிந்துகொள்ளவது சரியாக இருக்குமா என்பது எனக்குத் தெரியாது. பாரதியாரே எளிதாகத்தான் கவிதைகளை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எழுதியிருக்கிறார். க.நா.சு ஒருபடி மேல் போய்விட்டார். கவிதைக்கு படிமம், உவமை போன்ற சமாச்சாரங்கள் வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவருடைய கவிதைகளைப் படிப்பவர்கள். ‘என்ன வசனத்தை உடைத்துப் போட்டு எழுதி உள்ளாரே’ என்பார்கள். உண்மையில் அப்படி இல்லை. எழுதும்போது மனதில் என்ன தோன்றுகிறதோ அதேபோல்தான் வரி அமைப்பும் அமைகிறது. அதை அப்படியே வாசிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும். கவிதை முழுதாக மனதில் தோன்றி எழுதப்படுகிறதா? அல்லது எழுதும்போது அதுவே தோன்றுகிறதா என்பதெல்லாம் தெரியாது. கவிதையை எளிதாக வாசித்துவிடலாம். ஆனால் ஒரு கதையையோ நாவலையோ அப்படியெல்லாம் வாசித்துவிடமுடியாது. வாசிக்க அவகாசம் அதிகம் தேவைப்படும். கவிதை வாசிப்புக்க அவகாசம் தேவையில்லை. ஒரு பக்கம் அல்லது அரைப் பக்கம்தான் வரும். ஆனால் அதன் மூலம் சிந்திப்பது என்பது அலாதியான விஷயமாக இருக்கும். பெரும்பாலும் இப்போது எழுதப்படும் கவிதைகள் ஞாபகத்தில் வரிகள் வராது. அதன் தாக்கம்தான் மனதில் அலைகளை எழுப்பும். படிக்கும்போதுதான் அது தோன்றும். சரி, இப்போது எ தியாகராஜன் கவிதைகளுக்கு வருவோம்.
தியாகராஜன் சிதம்பரத்தில் மெளனி வீட்டிற்கு எதிரில் குடியிருந்தவர். விருட்சத்தில் மெளனியைப் பற்றி எழுதுவதாக கூறியுள்ளார். தற்போது மும்பையில் வாசம். ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுவதில் வல்லவர்.

ஒரு வேண்டுகோள்


சமீபத்தில் 79-80-வது இதழ் கொண்டு வந்துள்ளேன். நவீன விருட்சம் என்ற இதழ் ஜூலை மாதம் 1988 ஆம் ஆண்டு கொண்டு வரும்போது, கவிதைக்கான இதழாக மாறிவிடுமா என்ற கேள்விக்குறி தொக்கி நின்றது. இன்றும் அதிகமாக கவிதைகளைப் பிரசுரம் செய்யும் இதழாக நவீன விருட்சம் திகழ்கிறது. வாசகர்கள் வட்டமும் சரி, இதழுக்காக ஆகும் செலவும் அதிகமில்லைதான். முதல் இதழ் தயாரிக்கும்போது எனக்கு ரூ.500 வரை செலவு ஆனாது. 16 பக்கம். (தபால் செலவு சேர்க்கவில்லை) இப்போது ஒரு இதழ் (100 பக்கம்) தயாரிக்க ரூ10000 மேல் ஆகிறது (தபால் செலவும் சேர்த்து).

இந்த இதழ் 79/80 இதழ்களின் தொகுப்பு. காலாண்டு இதழாகவே இதைக் கொண்டுவர வேண்டும் என்ற என் எண்ணம் இன்னும் பசுமையாக இருக்கிறது. இதழ் தயாரிக்க எனக்கு 6 மாத கால அவகாசம் ஆகிவிடுகிறது. ஆனால் இரண்டு நாட்களில் அச்சாகி விடுகிறது. பின் அதை அனுப்ப 3 வாரம் ஓடிவிடுகிறது. இப்போதுதான் எல்லோருடைய முகவரிகளையும் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

சந்தா கட்டுங்கள் என்று முன்பு கேட்டு கடிதம் எழுதுவேன். இப்போது ஏனோ முடிவதில்லை? இந்த ஏனோ ஏன் என்பதும் புரியவில்லை. தற்போது கம்புயூட்டரில் அடித்து அதை பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் அனுப்பலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். முதலில் விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்பிய பிறகுதான் உடனடியாக அந்தப் பணியைத் துவங்க வேண்டும்.

இந்த வலை மூலம் எல்லோரிடம் ஆண்டுச் சந்தா கேட்கலாம் என்று பலவாறு யோசித்தே இதை எழுதுகிறேன். 21ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நவீன விருட்சத்திற்காக ஆண்டுச் சந்தா ரூ 40 ஐ அனுப்புங்கள். இந்த இதழ் ரூ 20 தான். இதைப் பெற விரும்பும் வெளி நாட்டில் உள்ள அன்பர்கள் ரூ50 அனுப்புங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

NAVINA VIRUTCHAM
6/5 POSTAL COLONY FIRST STREET
WEST MAMBALAM
CHENNAI 600 033
INDIA

எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
அழகியசிங்கர்
12.07.2008

துங்கபத்திரை


எனக்கு நினைவு மங்கிக்கொண்டு வருகிறது என்று சொன்னால் சட்டென்று நம்ப மறுக்கிறார்கள். நுண்ணிய தகவல்கள் நினைவுக்கு வராது. ஆனால் அனுபவம் நிலைத்திருக்கிறது.

பாவண்ணனின் ஆரம்பக் கதை ‘கணையாழி’ யில் வெளியானது. இரு எழுத்துக்களில் தலைப்பு என்ற ஞாபகம். ‘இந்த இளைஞன் எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறான்! தொடர்ந்து எழுதிப் புகழ் பெற வேண்டும்!’ என்று நினைத்துக் கொண்டேன். வெகு நேர்த்தியான கையெழுத்து. நல்ல கதையொன்று தபாலில் வந்தால் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அந்தக் கையெழுத்துக்குரியவர் எப்படி இருப்பார் என்று சில நிமிடங்கள் யோசிப்பேன். நான் அன்று நினைத்தது பொய்த்துப் போகவில்லை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து அமெரிக்க எழுத்தாளர்களுடன் கலந்து ஒரு படைப்புக்களம் புது டில்லியில் நடந்தது. அதற்குப் பாவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தமிழ்ப் பிரிவு நடந்தது போல எந்த மொழிப் பிரிவும் நடக்கவில்லை. அவற்றில் இருந்த மூத்த எழுத்தாளார்கள் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டு மூன்று நாளையும் முடித்தார்கள் என்று கூறினார்கள். ஒரு பயிற்சியாக ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இரு பக்கங்களில் ஒரு புனைகதை எழுதச் சொன்னேன். ஐந்து பேரும் ஐந்து வெவ்வேறு சிறந்த கதைகளை எழுதியிருந்தார்கள்.

இந்த மாதம் (ஏப்ரல் 2008) பாவண்ணனின் கட்டுரைகள் ஒரு தொகுப்பாக வந்திருப்பதைப் படிக்க நேர்ந்தது. பதினாறு கட்டுரைகள். பல கட்டுரைகள் நேரடியாகக் கர்னாடகத்தைக் களமாகக் கொண்டவை. பாவண்ணன் பயணம் மேற்கொள்ள தயக்கமில்லாதவர் என்றும் தெரிந்தது. ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான சிந்தனைகளில் வெளியானது. மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. ஓரிடத்தில்கூட அபசுவரம் இல்லாத பக்குவமான தேர்ந்த எழுத்து. நான் சமீபத்தில் பாவண்ணன் வசிக்கும் பெங்களூருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த இரு நாட்களிலும் உடல் நலமில்லை. நான் தங்கியிருந்த வீட்டினருடன் கூடச் சரியாகப் பேச முடியவில்லை. பாவண்ணனைச் சந்திக்கவில்லை. இன்னும் பல நண்பர்கள், உறவினர்களையும் பார்க்க முடியவில்லை. நான் தொலைபேசியில் கூடப் பேசவில்லை.

இன்று நான் படித்த ‘துங்கபத்திரை’ நூலை அன்று படித்திருந்தால் ஒரு வேளை பாவண்ணனைப் பார்க்க முயற்சி செய்திருக்கக் கூடும். அடுத்த முறை என்பது எனக்கு இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.
**********

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை துங்கபத்திரையைக் கடந்தேன். அது 1941-ம் ஆண்டு. நாங்கள் போய்த் தங்கப் போகும் வீடுகளுக்குக் கொடுப்பதற்காகத் துவரம்பருப்பையும் உளுத்தம்பருப்பையும் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி அவற்றைப் படுக்கைச் சுருளில் எடுத்துச் சென்றோம். அன்று தானியங்கள் ஓசூரிலிருந்து இன்னொரு ஊர் எடுத்துச் செல்வது குற்றம். என்ன சட்டம், என்ன விதி என்று தெரியாது. ஆனால் பிடிபட்டால் நடுவழியில் இறக்கி விட்டுவிடுவார்கள். இரயிலில் படுக்கையையே நாங்கள் பிரிக்க மாட்டோம்.

இரண்டாம் முறை ஹம்பி பார்க்கச் சென்றபோது பாவண்ணன் ஹம்பி பற்றி எழுதியிருப்பாரோ என்று எண்ணினேன். ஹம்பி என்ற விஜயநகரம் மிகப் பெரிய நகரம். குறுக்கே துங்கபத்திரை ஓடுகிறது. செங்கல் சுண்ணாம்புக் கட்டிடங்கள் முன்னூறு நானூறு ஆண்டு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிறையக் கட்டிடங்கள் கருங்கல்லால் கட்டப்பட்டவை. கோயில்களும். எவ்வளவு பெரிய நரசிம்மர்! ஆனால் ஒரு சிற்பம் ஒரு சிலை தப்பவில்லை. பாமினிஅரசர்கள் ஆறு மாதங்கள் கல்லுளியும், சுத்தியலும் கட்டப்பாரையும் கொண்டு ஆட்களை விட்டு ஓரங்குலம் விடாதபடி உடைத்திருக்கிறார்கள். அந்தப் பாமினி வம்சத்துக்குப் பெயரே ஒரு ‘பொம்மன்’ (பிராமணன்) ஆசியால் ஏற்பட்டது என்று ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாறிலேயே இருக்கிறது. விஜயநகர அரசனைத் தோற்கடித்துத் துரத்தியாகிவிட்டது. ஆனால் நகரத்தை வென்றவர்களே பயன்படுத்தியிருக்கலாமே?

சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியையே எவ்வளவு விதவிதமாக வெவ்வேறு குழுக்கள் சித்திரிக்கின்றன? ஐம்பது ஆண்டுகள் நூறு ஆண்டுகள் பற்றி எப்படி உறுதியாக இருக்க முடியும்? இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறைக் கூறியே யூதர்களை எல்லாருமே சேர்ந்து வேட்டையாடினார்கள். இரண்டாம் உலக யுத்த நாட்களில் மிகக் கொடூரமாக இயங்கிய யூத அழிப்புச் சாலையாக விளங்கிய ஆஷ்விச் அனுபவத்திலிருந்தும் தப்பியவர் ஒருவரின் செய்தி படித்தேன். அந்த 1944 ஆண்டில் அவருடைய வயது 15. ஆதலால் எல்லாம் தெளிவாகத் தெரியக் கூடிய பருவம். “இன்றும் நினைவுகள் துரத்துகின்றன. ஆனால் இந்த நினைவுகள்தான் எனக்குக் கவசமாகவும் தோன்றுகின்றன,” என்று அந்தக் கிழவர் கூறியிருக்கிறார்.

(நவீன விருட்சம் 79-80 வது இதழில் வெளிவந்த கட்டுரை – July 2008)

பெண்

கனவில் தெரிந்த பெண்ணொருவள்
நேரில் வரவில்லை
பலவாறு கற்பனையை
விரித்து விரித்துப் பார்த்தேன்
அவள் உருவம் மாறி மாறி தெரிந்ததே
தவிர எந்த மாதிரி அவள் என்று யூகிக்க முடியவில்லை
கனவில் தெரிந்தவள் மாதிரி
யாருமில்லை ஒருபோதும்
இன்னும் உற்றுப் பார்த்தேன்
மாறி மாறி அந்தப் பெண்போல
யாரும் தெரியவில்லை என்றாலும்
பெண்கள்
வேறு வேறு மாதிரியாகத்தான்
தெரிந்துகொண்டிருந்தார்கள்

தசாவதாரம்

தமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும் எதாவது ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்கள் தயாரிக்க ஆகும் செலவைக் குறித்து. நாமெல்லாம் சாதாரணமானவர்கள். மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள். தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் செலவைப் பற்றியும், அதற்காக தேவைப்படும் உழைப்பைப் பற்றியும் யாரால் என்ன சொல்ல முடியும்? விளையாட்டுத்துறை என்று எடுத்துக்கொண்டால் சச்சினைவிட, தோனி விளம்பரம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கிறார். எல்லாம் கோடிதான். என் வாழ்க்கையில் கோடியை நான் பார்க்கவே முடியாது என்று நினைக்கிறேன். வேண்டுமானால் தெருக்கோடியில் போய் நிற்கலாம். ஒருபக்கம் இந்தியா வறுமைக்கோட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தசாவதாரம் என்ற படத்தைக் குடும்பத்துடன் பார்த்தேன். 60 கோடி ரூபாய்க்குமேல் செலவாம். 33 ரூபாய் விலையுள்ள டிக்கெட்டில் ரூபாய் 60 என்று அச்சிட்டிருந்தார்கள். இரவு பத்துமணி படத்துக்குப் போயிருந்தோம். ஒரே கூட்டம். தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள் என்று தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. எல்லோர் முகங்களிலும் சினிமா பார்க்கப் போகிற உற்சாகம்.

டெக்னாலஜி என்ற விஷயம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை இப்படத்தைப் பார்த்தால் நமக்குப் புரியும். பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த நவராத்திரி என்ற படத்தில் எல்லா வேஷங்களிலும் சிவாஜிதான் தென்படுவார். ஆனால் தசாவதாரத்தில் கமல்ஹாசன் எந்தந்த வேடங்களில் வருகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்து பல காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றபடி கதை என்று பெரிதாக இல்லை. இடைவேளை வரை உள்ள விறுவிறுப்பு பின்னால் கொஞ்சம் குறைந்து விடுகிறது. கமல்ஹாசனே கதை, வசனம் என்றெல்லாம் எழுதி உள்ளார். சாதாரண ஜனங்களுக்குக் கதை புரிவது சந்தேகமாக உள்ளது. சென்னை உதயம் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். முதல் சில காட்சிகளில் ஒலியே இல்லை. வழக்கம்போல ரசிகர்கள் ஊ…ஊ..ன்னு கத்தியபிறகு நிலமை சரியாயிற்று. தெலுங்கு போலீசாக வரும் கமல் பழைய நடிகர் பாலையா மாதிரி பேசுவதாகத் தோன்றியது. வித்தியாசமான நடிப்பு. சுனாமியைக் கொண்டுவருவதும், அமெரிக்க அதிபரை கதாபாத்திரமாக மாற்றுவதும் தமிழில் புதிய முயற்சி. ஆரம்ப காட்சியில் கமல்ஹாசன் பேசுவது சரியாகப் புரிபடவில்லை.

ஆனால் இப்படத்திற்கு ஆரம்ப முதல் இவ்வளவு எதிர்ப்பு ஏன்? வைணவத்திற்கும், சைவத்திற்கும் உள்ள எதிர்ப்பெல்லாம் இப்போது பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஏன் இதை எதிர்க்க வேண்டும். என்ன இருந்தாலும் இது ஒருபடம் தானே என்று பார்க்க ஏன் முடியவில்லை.
தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய நடிகர்கள் தோன்றிகொண்டே இருப்பார்கள். ஒரு காலத்தில், சிவாஜி, எம்ஜியார். இப்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த். எனக்குத் தெரிந்து ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜியின் சிவந்தமண் என்ற படம். அப் படம் வெளிநாடுகளில் போய் எடுத்து அதிகமாக
ஸ்ரீதர் செலவு செய்தார். அந்தப் படத்தைவிட எம்ஜியார் நடித்த நம்நாடு என்ற படம் அதிகமாகப் பணம் சம்பாதித்துக் கொடுத்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுந்தரமூர்த்தி என்ற என் பள்ளிக்கூட நண்பன் ஒருவன், சிவாஜி ரசிகன். பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வின் போது வந்த சிவந்தமண் படத்தை 8 அல்லது 9 தடவைகள் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் பெற்று பார்டரில் வெற்றி பெற்றான். அவன் கையெழுத்து பார்க்க அழகாய் இருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது.

22.06.2008
9.30மணியளவில்

இன்று உலகப் புத்தக தினம்

எல்லாக் குப்பைகளையும் தூக்கி
தெருவிலுள்ள குப்பைத் தொட்டியில் போட்டாள்
என் புத்தகங்களைப் பார்த்து
மலைத்து நின்றாள்
என்ன செய்வதென்று அறியாமல்
பின் ஆத்திரத்துடன்
தெருவில் வீசியெறிந்தாள்
போவார் வருவார் காலிடற
புத்தகங்கள் சிதறிக் கிடந்தன தெருவெல்லாம்
ஒரு புத்தகம் திறந்தபடியே இருந்தது
அதிலுள்ள வரிகள் எல்லார் கண்களிலும்
படித்தவர்கள் சிரித்தபடியே சென்றனர்
எல்லார் முகங்களிலும் புன்னகை
நானும் ஆவலுடன்
மாடிப்படிக்கட்டிலிருந்து
தடதடவென்று இறங்கி
புத்தகத்தின் வரியை
ஒழுங்காய் நிலைகொள்ளாத
வேஷ்டியுடன் படித்தேன்
‘இன்று உலகப் புத்தக தினம்
இன்றாவது புத்தகம் படிக்க
அவகாசம் தேடுங்கள்’
நானும் சிரித்தபடியே
புத்தகத்தில் விட்டுச் சென்ற
வரிகளை நினைத்துக்கொண்டேன்
இடுப்பை விட்டு நழுவத் தயாராய் இருக்கும்
வேஷ்டியைப் பிடித்தபடி…..