பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……

7

பூனைகள்………

செல்வராஜ் ஜெகதீசன்

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை.

பூனைகள் பொதுவில் வாழும்

பூனைகள் கூட்டமாய் திரிதல்
பொதுவினில் காண்பதரிது.

பூனைகள் தனித்தும் வாழும்.

வசிக்கமிடம் பற்றியெதுவும்
வரையறைகள் பூனைகளுக்கில்லை.

தகிக்கும் சூழலில் தனித்து
தாழ்தள இடங்களில் நிற்கும்
கார்களுக்கிடையே வாழும்

பூனைகளுக்கென்று பொதுவாய்
புகலிடங்கள் ஏதுமில்லை

நிலை குத்தும் பார்வை கொண்டு
நெருங்கும் வரை நின்று வெறிக்கும்.

நேரெதிரே குதித்துக் கடக்கும்
நெடுஞ்சாலை வாகனங்களுக்கிடையில்

இருத்தல் இறத்தல் குறித்தெந்த
முகாந்திரமின்றி முடிந்து போகும்
பூனைகளின் எளிய வாழ்வு.

எனக்குப் பிடித்த இரண்டு விருதுகள்

இந்த ஆண்டு மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்ய அகாதெமி விருதும், வைதீஸ்வரனுக்கு விளக்கு விருதும் கிடைத்துள்ளது. மேலாண்மை பொன்னுசாமி, பொன்னீலன், கந்தர்வன், சமுத்திரம், தமிழ்ச்செல்வன், பா ஜெயப்பிரகாசம் முதலிய படைப்பாளிகள் முற்போக்கு முகாமைச் சார்ந்தவர்கள் என்று முத்திரை குத்தினாலும், அவர்கள் அதையும் மீறி படைப்பாளிகள். முதன் முதலாக மேலாண்மை பொன்னுசாமி கதை ஆனந்தவிகடனில் பிரசுரமானபோது, பரவாயில்லை ஆனந்தவிகடன் இவர் எழுதுகிற கதையெல்லாம் போட ஆரம்பித்துவிட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. செய்திகளுக்குக் கொடுக்கும் மதிப்பு படைப்புகளுக்குக் கிடைப்பதில்லை. படிக்கிற சுவாரசியத்தையே அடிப்படையாகக்கொண்டு செய்திகளை வெளியிடுகிற பெரும் பத்திரிகைகள் படைப்பாளிகளைக் கண்டுகொள்வதில்லை. ஐந்தாம் வகுப்புவரை படிக்கார மேலாண்மை பொன்னுசாமி 22 சிறுகதைத் தொகுதியும், 6 நாவல்களும், 6 குறுநாவல் தொகுதியும் எழுதியுள்ளார். இது அசாத்தியமான முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது. கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி, இந்த விருது கிராமத்து எழுத்தாளர்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாக நினைக்கிறார்.
ஜெயகாந்தன் மாதிரி மேலாண்மை பொன்னுசாமியும் தனக்கான கல்வியை தானாகவே பெற்று ஒரு படைப்பாளியாக மிளிர்ந்தள்ளார். அவருக்கு விருட்சம் சார்பில் வாழ்த்துகள்.

சாகித்ய அகாதெமி பரிசு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் உரிய தருணத்தில் கிடைப்பதில்லை. அதனால் ‘விளக்கு’ என்கிற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உரிய படைப்பாளிகளுக்கு விருது கொடுத்து கெளரவம் செய்கிறது. அந்த முறையில் இந்த ஆண்டு கவிஞர் வைதீஸ்வரனை கெளரவித்துள்ளது. கவிஞர் வைதீஸ்வரன் ‘எழுத்து’ காலத்திலிருந்து எழுதி வரும் கவிஞர். யாராலும் கண்டுகொள்ளாத கவிஞர். 70வயதுக்குப் பிறகு அவருக்கு இந்தப் பரிசு கிடைத்துள்ளது. விளக்கு அமைப்பு சாகித்ய அமைப்பு அளிக்கும் தொகையை கிட்டத்தட்ட அளிக்கிறது. அமெரிக்காவில் வசிக்கும் சிலரால் இந்தப் பரிசு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பரிசு குறித்து ஒரு குறை எனக்குண்டு. ஏன் விளம்பரப்படுத்தாமல் இந்தப் பரிசை கொடுக்கிறார்கள் என்பதுதான் அந்தக் குறை. அதைபோல் விழாவை ஏற்பாடு செய்வதும் எல்லோருக்கும் தெரியாமல் செய்கிறார்கள். ஒரு படைப்பாளியை கெளரவிக்கும்போது ஒரு பெரிய விழா மாதிரி நடத்த வேண்டாமா? வெறும் சடங்கு மாதிரி நடத்தினால் என்ன அர்த்தம்? வைதீஸ்வரனுக்கும் விருட்சம் சார்பில் வாழ்த்துகள்.

சின்னத்திரையில் மும்பை பயங்கரம்.

டெக்கான் முஜாகிதின் என்று அது வரை கேட்டிராத பெயரில் நவம்பர் 26ம் தேதியன்று மும்பையில் பயங்கரவாதச் செயல்களைத் துவக்கிய கும்பலின் உண்மையான பின்னணிகள் என்ன, லஸ்கர் இ தொய்பாவான அதன் சதித்திட்டங்கள் யாவை என்பனவற்றை உயிருடன் பிடிப்பட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப் போலீஸிடம் கக்கத் தொடங்கியவுடன் மும்பைத் தாக்குதல் எத்தகைய முன்னேற்பாடுகள் கொண்டவை என்பது தெரியவந்தது.
முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்ட பயங்கரவாதிகளுக்கு இணையாக தேசிய பாதுகாப்பு காவலர்கள், கடற்படை தரைப்படை வீரர்கள் போலீஸ்காரர்கள் ஆகியோர் அப்போதைக்கப்போது திட்டமிட்டு செயல்பட்டு அந்த கோர சம்பவத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தனர். என்னசெய்வதென்று அறியாமல் இவற்றையெல்லாம் கையைப் பிசைந்த நிலையில் அரசியல்வாதிகள் பார்த்துக்கொண்டிருந்தனர். அதே சமயத்தில் எவ்வித முன்னேற்பாடோ முன் அனுபவமோ இல்லாத தொலைக்காட்சி சேனல்கள் அந்த ஐம்பத்து ஒன்பது மணி நேரங்களை வினாடி வினாடியாகப் பகுத்து மக்களுக்கு அங்கே நடப்பவற்றை வழங்கிக் கொண்டிருந்தனர்.
தொலைக்காட்சி தகவல் ஒளிப்பரப்பு என்பது இந்தியாவில் ஒரு பக்குவ நிலையை எய்திருப்பதை அவை காட்டின. Head Lines Today, NDTV, Times Now, CNN-IBN, News X போன்றவை உடனுக்குடன் தாஜ், ஓபராய் ஓட்டல்கள் மற்றும் நரிமன் இல்லம் ஆகியவற்றின் நடப்புகளை ஒளிப்பரப்பிக்கொண்டிருந்தன. CNN, BBC World ஆகிய சேனல்கள் ஓட்டல்களில் சிக்கிக்கொண்டிருந்த அமெரிக்க ஆங்கிலேயர்களின் நலன் பற்றியே அதிக அக்கறை செலுத்திக் கொண்டிருந்தன. அவை தவிர மேல பெயர்தரப்பட்டுள்ள பிற சேனல்கள் அனைத்து மனிதர்களின் பாதுகாப்பு பற்றியும் அக்கறை கொண்டிருந்தன. சேனல்களின் கேமரா மனிதர்கள் மற்றும் செய்தியாளர்கள் நெரிசலான கூட்டங்களிடையே அநாயாசமாக ஊடுருவிக் கொண்டிருந்தனர். பல சமயங்களில் தங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை வந்த போதிலும் அவர்கள் சற்றும் பின்வாங்கவில்லை. நிலையத்திலிருந்த அறிவிப்பாளர்கள் களத்திலிருந்த செய்தியாளர்களைக் கேள்விகள் கேட்பதும் நிகழ்வுகளைத் தொகுப்பதுமாக இருந்தனர்.
சமயோசிதம், பொதுஅறிவு, ஆங்கில மொழிவன்மை ஆகியவற்றுடன் அவர்கள் கண்ணியமான நடத்தை உடையவர்களாக விளங்கினர். விளைவுகளைப் பற்றி கவலைப்படாது பரபரப்பைத்தூண்டும் விதமாக அவர்கள் ஒரு போதும் நடந்து கொள்ளவில்லை. எதையும் உறுதிப்படுத்த இயலாத சூழ்நிலையில் யூகங்களை விரைந்து கொண்டாலும் அவற்றை முடிவுகளாக ஆணித்தரத்துடன் வெளிப்படுத்த சற்றும் முயலவில்லை. சொல்லப்படுகிறது, எண்ணப்படுகிறது, நம்பப்படுகிறது போன்ற சொற்பிரயோகங்கள் மலிந்து காணப்பட்டன. அரசியல் வாதிகள் மீதும் அரசாங்கத்தின் மீதும் தார்மீக சினத்தை வலிந்து வரவழைத்துக் கொண்டு குற்றம் சாட்டவில்லை. இவையெல்லாம் தமிழ் சேனல்கள் கற்றுக் கொள்ளவேண்டியவை. சென்னையை சுனாமித்தாக்கிய அரை மணி நேரத்திற்குள்ளாகவே அதைப்படம் பிடித்து காட்டிய ஒரு தமிழ் சேனலின் செய்தியாளர்கள் அவதிக்குள்ளாகியிருந்த மக்களிடம், ‘அதிகாரிகள் உங்களை வந்து பார்த்தார்களா?’ ‘நிவாரணம் கிடைத்ததா?’ என்கிற பாணியில் அரசியல் லாபத்தை குறிவைத்து கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்தனர். மாறாக, காங்கிரஸை குறை கூறிவிட்டு பயங்கரவாதிகளின் குண்டடிப்பட்டு உயிர்நீத்த போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அறிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் சந்தர்ப்பவாத அரசியலை அவை உடனேயே கடுமையாகக் கண்டித்தன.
இரவு பகல் பாராமல் பயங்கரவாதிகளின் முற்றுகைகள் பற்றித் தொடர்ந்து ஒளிபரப்பி அச்சூழலின் பரபரப்பை லாபகரமாக்கிக் கொண்டதாக அவை மீது விமர்சனம் எழுந்தது. அது முறையானதல்ல. மும்பை பயங்கரம் உலகையே உலுக்கிய நிகழ்வு. முற்றுகையின் போது பலியானவர்கள் யார் உயிர் பிழைத்தவர்கள் யார் நரிமன் வீட்டில் இருந்த யூதப்பாதிரியின் குடும்பத்தினர் நிலைமை என்ன என்பது பற்றி எல்லோரும் பதைபதைத்துக் கொண்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்புகள் நேரிடையாக தொடர்புகளை அளித்துக் கொண்டிருந்தன. வருடத்திற்கு நூறு நாட்கள் கிரிக்கெட் மாட்சை ஒளிபரப்புவதில் உள்ள வியாபாரமும் அங்கு இல்லை. விளம்பரப்படங்களுக்கான இடைவெளிகள் எதுவுமில்லை.
பல்வேறுவிதமான தொடர்புகளை இந்நிகழ்ச்சிகள் சாத்தியமாக்கின. ஓட்டல் அறைகளில் அடைபட்டிருந்த மக்கள் செல்போன்கள் மூலமாக சேனல் நிகழ்ச்சியாளர்களுடன் தொடர்புகொண்டார்கள் இதன் வாயிலாக அவர்களது நிலைமையை அறிந்துக் கொள்ள முடிந்தது. ஒரு சேனல் ஓட்டலில் ஆயுதங்களுடன் திரிந்துக் கொண்டிருந்த பயங்கரவாதியுடனும் தொடர்பு கொண்டது. ஹோட்டல் அறைவாசிகள் தொலைக்காட்சி பெட்டிகள் வாயிலாக தங்களை காப்பாற்ற என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றான என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.இது அவர்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கும். பயங்கரவாதிகளும் தங்கள் ப்ளாக்பெரி செல்போன்கள் மூலம் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர்கள் தங்கள் மீது எடுக்கப்படுகிற நடவடிக்கைகளை அறிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் வியூகங்களை மாற்றி அமைத்துக் கொள்ள உதவியிருந்தால் அது பிணையாக வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும் முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்திருக்கும் என்று ஒரு வாதம் கிளம்பியது. அதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால் இது தகவல் யுகம் என்பதை மறந்துவிடக் கூடாது. தொலைக்காட்சிகள் அவற்றை ஒளிபரப்பு செய்திராத பட்சத்திலும் செல்போன்கள் வாயிலாக வெளிநடப்புகளை அவர்கள் வெளியிலுள்ள தங்கள் கூட்டாளிகள் மூலம் தெரிந்து கொண்டிருப்பார்கள். தொலைக் காட்சிகள் வாயிலாக தங்களுக்கு வெளியே எத்தகைய தாக்குதல் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதும் மக்களிடையே தங்களுடைய செயல்களுக்கு எத்தகைய எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டிருந்தார்கள். அது அவர்களை கொஞ்சமாவது வலுவிழக்கச் செய்திருக்கும். இதற்கெல்லாம் மேலாக லஸ்கர் இ தொய்பா இயக்கம் தனக்கும் இ஢தற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்ததையும் பாகிஸ்தான் அரசியல் வாதிகள் இச்செயலைக் காட்டுமிராண்டித்தனம் என்று வர்ணித்ததையும் அவர்கள் கேட்டிருப்பார்கள். இக்கொடூரச்செயல்களைத் தூண்டிவிட்டவர்களே தங்களை அநாதரவாகத் தவிக்கவிட்டதை அறிந்து மனச்சிதைவும் அடைந்திருக்க வாய்ப்புண்டு. லஸ்கர் இ தொய்பாவினால் ஏவப்பட்ட அந்த பயங்கரவாதிகள் எத்தகைய நிபந்தனையையும் கடைசிவரை முன் வைக்கவில்லை. திஹார் சிறை முதலாக பல இடங்களிலும் இந்தியாவில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் அடைபட்டிருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற நிபந்தனை கூட விதிக்கப்படவில்லை. அதாவது அந்த இயக்கத்திற்கு தன்னை நம்பி வந்தவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கூட இல்லை.
பார்ப்பவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளுவதற்காகவே அனுப்பப்பட்ட தற்கொலைப்படை அது என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. அந்த உத்தரவிற்கு கீழ்ப்படியத் தயாராக மனிதர்கள் எளிதாக மதத்தின் பெயரால் முன்வருகிறார்கள் என்னும் போது அந்த இயக்கத்திற்கு மனிதர்கள்- தங்கள் இயக்கத்தைச் சார்ந்த மனிதர்கள் உட்பட எவரும் ஒரு பொருட்டே அல்ல என்பதும் தெளிவாகிறது. எல்லாபக்கங்களிலும் ராணுவம் சூழ்ந்துவிட்டதால் இனி ஒரு போதும் தப்பிக்க இயலாது என்ற நிலையில், தொடர்ந்து மூன்று இரவுகள் சற்றும் கண் அயராது ஓட்டல் அறைகளில் மாறி மாறி ஓடி ஒளிந்து தாக்குதல் புரிந்து கொண்டிருந்த அந்த பயங்கரவாதிகள் இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்திருக்கக் கூடும். இது போன்று செயல்களுக்கு அழைக்கப்படுபவர்களுக்கு இவை ஒரு எச்சரிக்கை உணர்வையும் அளிக்கும். தொலைக்காட்சி ஊடகம் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி கவனம் கொள்ளவில்லை என்று குறை சொல்லப்பட்டது. அங்கே வன்முறை பயங்கரம் முடிந்துவிட்ட ஒன்று என்பதனால் தொலைக்காட்சிகள் அங்கு செல்லவில்லை என்று கொண்டாலும் அங்கு உயிர்நீத்தவர்கள் பற்றியும் காயம் பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பற்றியும் செய்திகளே தராமல் போனது கண்டிக்கத்தக்கதுதான். அதைப்போலவே அந்த மூன்று நாட்களிலும் உலகத்தில் நடக்கும் எந்தசெய்தியையும் அவைகள் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. டயானா இறந்தபொழுது பிபிசி ஒன்பது நாட்களுக்கு டயானா பற்றிய செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி உலகத்தையே இருட்டடிப்பு செய்தது.
மும்பை அரசாங்கமும் சரி தேசிய பாதுகாப்பு படையினரும் சரி ஊடகங்களைப் பெரிதும் மதித்தனர். ஊடக மனிதர்கள் தங்களுடைய வேலையை செய்கிறார்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் களத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில அபாயகரமான இடங்களில் மட்டும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாஜ் ஓட்டலின் பின்புறத்தைப் படம் பிடிக்க ஊடகங்களுக்கு ஆரம்ப முதலே அனுமதி தரப்படவில்லை. ஆனால் பயங்கரவாதிகள் அனைவரும் தீர்த்துக்கட்டப்பட்டார்கள் என்பது உறுதியான அடுத்த அரைமணி நேரத்திலேயே அவர்கள் கேமராக்களுடன் எவ்வித எதிர்ப்புமின்றி அங்கு படையெடுத்தனர். இது போன்ற ஒரு பயங்கரம் சென்னையில் நடை பெற்றிருந்தால் அதை நமது ஊடகங்கள் படம் பிடிக்கச் சென்றிருந்தால் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். ஆட்சியில் எந்தக் கட்சி இருக்கிறதோ அதற்கு சொந்தமான அல்லது சாதகமான சேனல்கள் மட்டும் அங்கு இருக்கும். மற்றவர்களுடைய கேமராக்கள் சேதப்படுத்தப்படும். முதலில் போலீஸிடம் அடிவாங்குவது கலவரங்களைப் படம் பிடிக்கும் புகைப்படக்காரர்களும் மற்றும் செய்தியாளர்களும் தான் என்பது தெரிந்த ஒன்று.
மகாராஷ்டிர முதல் மந்திரியிலிருந்து பாகிஸ்தான் சர்தாரிவரை எல்லோரையும் சேனல்கள் பேட்டி எடுத்து ஒளி பரப்பின. மக்கள் மனதில் என்ன கேள்விகள் தோன்றுமோ அவற்றைத் துணிவுடன் கேட்டன. சட்டத்திற்கு முன் மட்டுமல்ல ஊடகங்கள் முன்பாகவும் எல்லோரும் சமம்.

பூனைகள் பூனைகள் பூனைகள்

ஒரு பொருளை தயாரிப்பதுபோல, ஒரு தொழிலில் ஈடுபடுவதுபோல, கவிதையை உருவாக்க முடியுமா? கவிதை எழுதுவது தானாகவே வரவேண்டுமா? அல்லது பயிற்சி எடுத்துக்கொண்டு வர வேண்டுமா? முதலில் கவிதை எழுதுபவர்களுக்கு கவிதை மீது ஒருவித ஈடுபாடு வேண்டும். கவிதையை ரசிப்பதற்கு மனம் செல்ல வேண்டும். மேலும் எது சரியான கவிதை என்பதை அடையாளம் காணத் தெரிய வேண்டும். கவிதையை எங்கே எப்படி எழுத முடியும்? எழுதும்போது என்ன மனநிலை ஒருவருக்கு இருக்கும். கவிதை மனதிலிருந்து உருவாக்கியபிறகு வருமா? அல்லது அந்தச் சமயத்தில் என்ன தோன்றுகிறதோ அது கவிதையாக வருமா? ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா? கவிதையின் தலைப்பு கவிதை எழுதியபிறகு கிடைக்குமா? அல்லது தலைப்பே இல்லாமல் கவிதை உருவாகுமா? இதுபோன்ற பல விஷயங்களை கவிதைக் குறித்து நாம் யோசித்துக்கொண்டே இருக்கலாம்.

பின் எது நல்ல கவிதை? எது கவிதை இல்லை? இந்த ஆராய்ச்சிக்குப் போனால் கவிதை எழுதுபவர்களில் ஒருவருக்கு ஒருவர் சண்டை வந்து விடும். கவிதை எழுதுபவதைவிட அதை ரசிக்க மனம் வேண்டும். சமீபத்தில் என் அலுவலகத்தில் உள்ள ஒருவருக்கு ஒரு கவிதையை எடுத்துப் படித்துக் காட்டினேன். அடுத்த நிமிடம் அவர் என் பக்கத்திலேயே வந்து நிற்காமல் ஓடிவிட்டார். இது குறித்து யோசிக்கும்போது யார் கவிதையைக் கேட்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலோர் கவிதையை ரசிப்பதற்கு மனமில்லாமல் இருக்கிறார்கள். கவிதை எழுதுபவர்களுக்கு கவிதையை ரசித்துப் படிப்பதற்கு ஆளில்லாமல் போய்விட்டால் பெரிய துன்பமாக மாறிவிடும். பின் யாருக்காக எதற்கு எழுத வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். ஆனால் கவிதை ஒரு அற்புதமான விஷயம்.
முன்பெல்லாம் தினமும் மின்சார வண்டியில் மாம்பலம் ரயில்வே நிலையத்திலிருந்து கடற்கரை ரயில்வே நிலையம் வரை செல்லும்போது எதாவது ஒரு கவிதையை எடுத்துப் படித்துக்கொண்டு போவேன். அது ஒரு நல்ல அனுபவமாக எனக்குத் தோன்றும்.

ஒரு படைப்பாளியின் ஒரு கவிதைத் தொகுதியை நாம் எடுத்துப் படிக்கும்போது முழு புத்தகத்தை உடனே எடுத்துப் படிக்கக் கூடாது. கவிதைப் புத்தகத்திலிருந்து ஒரு கவிதையை மட்டும்தான் படிக்க வேண்டும். பின் படிப்பதற்கு கால அவகாசம் கொடுத்துவிட்டுப் படிக்க வேண்டும். ஒரு சிறுகதையை அப்படிப் படிக்கலாம். ஒரு நாவலை முழு மூச்சாகப் படிக்கலாம். ஆனால் கவிதை வாசிப்பதற்கு அவகாசம் தேவை. மேலும் ஒருவர் எழுதிய கவிதைகளையே முழுதாகப் படிக்காமல் வேறு வேறு கவிஞர்கள் எழுதிய கவிதைகளைப் படிக்கலாம்.

ஆரம்ப நிலையில் கவிதை எழுத வேண்டுமென்று நினைப்பவர்கள். எல்லோருடைய கவிதைகளையும் ரசிக்கும் பயிற்சியை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும். கவிதை எழுதுவதில் உள்ள நுணுக்கத்தையும், கவிதை மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

இதெல்லாம் ஏன் சொல்ல வருகிறேனென்றால், பூனையைப் பற்றி யாராவது கவிதை எழுத வேண்டுமென்று நினைத்தால் கவிதை உடனே எழுத வந்துவிடும். பூனை ஒரு ஆன்மிக மிருகம். எளிதில் பழகவும் பழகாது. அதனால்தான் பூனையைப் பற்றி யார் எழுதினாலும் எப்படியும் அது கவிதையாக மாறிவிடும். இந்த ஆச்சரியம் எனக்கு பல நாட்கள் உண்டு. அதனால்தான் பூனையைப் பற்றி ஒரு தொகுப்பு கொண்டு வரலாமென்றிருக்கிறேன்.

இதைப் படிப்பவர்கள் யாராவது பூனையைப் பற்றி கவிதை எழுதியிருந்தால் எனக்கு அனுப்புங்கள். அல்லது நீங்கள் பூனையைப் பற்றி கவிதை வாசித்தால் உடனே அனுப்புங்கள். நான் பூனையைப் பற்றி மொத்தமாக ஒரு கவிதைத் தொகுதி கொண்டு வரும் எண்ணத்தில் உள்ளேன். நீங்களும் உங்கள் பங்குக்கு உதவி செய்யுங்கள்.

6.
பூனைப் பெருமாட்டி

குவளைக்கண்ணன்

சிறுவயது முதலே
அவற்றுடன் விளையாட்டுத் தோழமை கொண்டிருந்தாலும்
இளமையின் இறுதியில்
மனச் சோர்வினால் ஏற்படுத்திக்கொண்ட
தனி ஒதுக்கத்தின்போது
அவரது வீட்டில் வளர்ந்து கொண்டிருந்தவை
துரத்தத் துரத்த மடியில் ஏறி அமரும்
அவரைக் கடக்கும் போதெல்லாம்
மென்மயிர் போர்த்திய உடலால் உரசிச் செல்லும்
உணவுண்ணும்போது அருகில் அமர்ந்திருக்கும்
துயர் மிகுந்து அழும்போது
முத்தமிட வருவதுபோலக் கிட்டே வரும்
காலையில் விழிக்கும்போது
கால்களின்மேல் மெத்தெனப் படுத்திருக்கும்
இவ்வாறெல்லாம் ஆரம்பித்தது
பூனைகளுடனான நெருக்கம்
அவற்றைக் கூர்ந்து கவனித்தவர்
தனி ஒதுக்கத்திலிருந்து மீண்டு
பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார்
ஆக உயரங்களுக்குச் சென்றார்
அவரது திட்டமிடல் காத்திருப்பு பதுங்கல்
பாய்ச்சல் வேட்டை அலட்சியம்
இவை கண்ட மக்கள்
ஆயிரம் ஆண்களை அழித்து ஆண்டவன்
அவரைப் படைத்திருக்க வேண்டுமென்று பிரமித்தனர்
அடுத்து என்ன எனப் பயந்தனர் எதிரிகள்
அறிஞர்களுக்குப் புதிராக இருக்கும்
அவரது வெற்றியின் ரகசியம்
என்னவெனில்

(‘பிள்ளை விளையாட்டு’ என்ற தொகுப்பிலிருந்து எடுத்தது)

சில குறிப்புகள் – 13

ஸ்டெல்லாபுரூஸ் காப்பாற்றி விட்டார்

இந்த மாதம் 7ஆம் தேதி எனக்கு விஜய் டிவியிலிருந்து போன் வந்தது ஸ்டெல்லாபுரூஸ் பற்றி விஜாரித்தார்கள். அவர் இருக்குமிடம் பற்றியெல்லாம் கேட்டார்கள். சொன்னேன். பின் நீங்கள் அவரைப் பற்றி எதாவது சொல்ல வேண்டும் என்று கேட்டார்கள். டிவியில் அவரைப் பற்றி சொல்ல சொல்கிறார்கள். சரி என்றேன்.
டிவி மோகம் யாரையும் விடுவதாயில்லை. பலர் டிவியை வைத்துக்கொண்டுதான் பொழுதைக் கழிக்கிறார்கள். நான் 200க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறேன் என்றாலோ 50 சிறுகதைகளுக்குமேல் எழுதியிருக்கிறேன் என்றாலோ என் வீட்டில் உள்ள யாருக்கும் ஒரு பொருட்டல்ல.
ஒரு பத்திரிகையை விடாப்பிடியாக 21 ஆண்டுகள் நடத்தி வருகிறேன் என்றாலும் ஒரு அலட்சியம். டிவியிலும் இத்தனை சேனல்கள் இருந்தாலும் இலக்கியவாதிகளுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. சினிமா நடிகர்கள் நடிகைகள்தான் அவர்களுக்கும் முக்கியம். நான் டிவி சேனல் அதிபதியாக இருந்தால் கவிதை வாசிப்பதை தினமும் வைத்திருப்பேன். குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் நாட்டில் உள்ள எல்லா கவிஞர்களும் தினம் தினம் கவிதை வாசிக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருப்பேன். ஆனால் டிவியிலோ சீரியல்தான் ஓடும். விதம் விதமான மனதைக் கெடுக்கும்படி இந்த சீரியலை எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கிறார்கள். சீரியலைப் போல பல நிகழ்ச்சிகள். உலகம் முழுக்க பல பாதகமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. இந்தப் பாதகமான நிகழ்ச்சிகளிலிருந்து ஒவ்வொரு நாளும் நாம் தப்பித்துக்கொண்டு வர வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன் இலக்கிய நண்பர்கள் டிவியில் வர ஆரம்பித்தபோது, அவர்கள் அவ்வப்போது எனக்கு செய்திகள் அனுப்பிக்கொண்டிருப்பார்கள். சிலர் sms அனுப்புவார்கள். உண்மையில் அந்த நேரத்தில் அவர்களை டிவியில் பார்க்கமுடியாமல் அவசரமாக அலுவலகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பேன். அப்படியும் சிலவற்றைப் பார்ப்பேன். பின் எனக்கும் இதுமாதிரி சந்தர்ப்பம் வராதா என்று என் மனதில் தோன்றாமலில்லை. ஆனால் அதுமாதிரியான சந்தர்ப்பம் எளிதில் எனக்குக் கிட்டவே இல்லை. என் இலக்கிய நண்பர் ஒருவர் ஒவ்வொரு இலக்கிய நண்பராகக் கூப்பிட்டு ஒரு நிகழ்ச்சியை தினசரி காலை நேரத்தில் நடத்திக்கொண்டு வந்தார். போனால் போகிறதென்று எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை அந்த இலக்கிய நண்பர் ஏற்படுத்திக்கொடுத்தார். எனக்கோ பரபரப்பு அதிகமாகிவிட்டது. அந்த டிவி ஸ்டேஷனுக்கு குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேர்ந்தேன். நிகழ்ச்சியைத் தயாரிப்பவர்கள் மெதுவாக வந்தார்கள். என்னைப் பேட்டி காண்பவர்கள் அட்டகாசமாக மேக்கப் செய்து வந்தார்கள். யாருக்கும் நான் எதுமாதிரி எழுத்தாளன் என்பது தெரியவில்லை. என்னைப் பார்த்தாலே நான் எழுதுபவனா என்ற சந்தேகம் கூட வந்திருக்கும். அவர்கள் என்னுடன் பேச ஆரம்பித்த பிறகு அந்த சந்தேகம் உறுதி ஆகியிருக்கும். அவர்கள் என்னிடம் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டார்கள்.
நான் எல்லாவற்றையும் சொன்னேன். அதை வைத்துக்கொண்டு அதிகம் மேக்கப் இல்லாமல் இருந்த என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். நானோ டிவியில் தோன்ற போகிறேன் என்ற பதட்டத்துடன் காத்திருந்தேன். ஒரே இடத்தைப் பார்க்கச் சொன்னார்கள். சிறிது குரலை உயர்த்திப் பேசச் சொன்னார்கள். தலையை அப்படியும் இப்படியும் அசைக்க வேண்டாம் என்றார்கள். கைகள் மூலம் சைகை செய்ய சொன்னார்கள். என் கால்களில் மாட்டியிருந்த செருப்பு தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொல்ல சொல்ல எதுவும் எனக்கு சரியாக வரவில்லை. ஆனால் என்னைக் கேள்வி கேட்டவர்கள் அட்டகாசமாக இருந்தார்கள். ஒரு பெண்மணியும் பார்க்க நன்றாக இருந்தார். அவர்கள் சிரித்து சிரித்து கேள்விகள் கேட்டார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் கேள்வி கேட்கும்போது படம் எடுக்கும் இடத்தை நோக்கி ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். படம் பிடிக்க வந்திருப்பவர் வேறு மொழியைச் சேர்ந்தவர். அவர் அவர்களுக்கு ஏதோ ஒரு சிக்னல் கொடுப்பார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு அதிலிருந்து தப்பித்தேன். பின் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டேன். நன்றாக வந்திருக்கிறது என்றார்கள். எப்போது டிவியில் வரும் என்று கேட்டேன். ஏதோ ஒரு தேதியை நேரத்தைச் சொன்னார்கள். குறித்துக்கொண்டேன்.

பின் வீட்டிற்கு வந்து எல்லோரிடமும் சொன்னேன். அலுவலக, இலக்கிய நண்பர்களிடம் சொன்னேன். ஒருவரை ஏற்பாடு செய்து டிவியில் வருவதை சீடியில் பதிவு செய்ய சொன்னேன். அதற்கு இவ்வளவு செலவாகும் என்றார்கள். சரி என்றேன்.

எனக்கு சிபிச்செல்வன் என்ற இலக்கிய நண்பர் உண்டு. அவருடன் காலை நேரத்தில் நான் வாக் செல்வேன்.
”என்ன ஒரு மைசூர் பாக் பாக்ஸ் கொடுத்தார்களா?” என்று அவர் கேட்டார்.
”ஆமாம்,” என்றேன். பின் அவரைப் பார்த்து, ”நீங்களும் அடுத்த முறை அந்த நிகழ்ச்சிக்கு வருவீர்கள்,” என்றேன்.
”எங்களைப் பற்றியெல்லாம் சொன்னீர்களா?” ”சொன்னேன். சொன்னேன். உங்கள் பெயரைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். ”எனக்கே ஆச்சரியம் எப்படி தைரியத்தோடு இவ்வளவும் சொன்னேன் என்று…முதலில் ஒரு மாதிரி இருந்தது. அப்புறம் ஒன்றுமில்லை..” என்றேன்.
என் நிகழ்ச்சியைப் பலர் பார்த்தார்கள்.
குறிப்பாக என் உறவினர்களைச் சொல்ல வேண்டும். நான் டிவியில் வருவதால் அவர்கள் மத்தியில்தான் நான் முக்கியமான ஆளாக இருந்தேன். நான் பேசியதைக் கேட்டு அவர்கள் போன் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். நான் கவிதை கதை எழுதி என்ன பிரயோசனம்? யாரும் படிக்கக்கூட மாட்டார்கள். ஆனால் நான் டிவியில் பேசியதைப் பார்த்து என் குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஒரு சில தினங்களுக்கு அவர்கள் மதிப்பில் உயர்ந்து இருந்தேன். அலுவலகத்திலும் இவர் டிவியில் வந்தார் என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தார்கள். சிடியில் வந்தபிறகு நான் அடிக்கடி போட்டு போட்டு பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு தப்பை கண்டு பிடித்தேன்.
நான் தைரியமாகத்தான் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னேன். ஆனால் ‘வந்து..’ என்ற சொல்லை அடிக்கடி உபயோகித்திருந்தேன். கேட்கும்போதெல்லாம் இந்த ‘வந்து’ ரொம்ப தொந்தரவு செய்வதுபோல் தோன்றியது. எனக்கு டிவியில் வருவதைப் பற்றி மறந்தும் போய்விட்டது.
இந்த ஆண்டு மார்ச்சு மாதம் ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் அவருடைய நண்பர் என்ற முறையில் என்னை சன் டிவியில் பேட்டி கண்டார்கள். சந்தோஷமில்லாமல் அவர் தற்கொலையை துக்கத்துடன் சொல்லும்படி ஆயிற்று. டிவியில் வருவதை யாரிடமும் நான் குறிப்பிடவில்லை. சந்தோஷமில்லாத நிகழ்ச்சி அது. ஆனால் பலர் என்னை டிவியில் பார்த்ததாகச் சொன்னார்கள்.
மார்ச்சு, ஏப்ரல் என்று அந்த நிகழ்ச்சியும் பறந்து போய்விட்டது. ஸ்டெல்லாபுரூஸ் என் நினைவிலேயே இருந்து கொண்டிருந்தார்.
நான் எதிர்பார்க்காத எதிர்பாரத மனிதரிடமிருந்து ஏற்பட்ட மரணம் இது. எனக்கு அவர் மீது கோபம் கூட ஏற்பட்டது. கோழை தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் என் இன்னொரு இலக்கிய பெண்மணி, ‘அவர் தற்கொலை செய்து கொண்டதுபோல ஒரு தைரியம் யாருக்கும் வராது என்றார். அவர் கோழை இல்லை. அவர் தெரிந்துதான் தன் முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்குப் பயங்கர துணிச்சல் வேண்டும்,’ என்றார் அந்த இலக்கிய பெண்மணி.
எனக்கு அவர் சொன்னதைக் கேட்டவுடன் ஆச்சரியமாக இருந்தது. ஏன்எனில் புத்திக் கூர்மையுள்ள இலக்கிய பெண்மணி அவர். ஆனாலும் ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலையை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அவர் நடந்துபோகும் போது விபத்தில் இறந்தாலும் எதாவது நியாயம் இருக்குமென்று நினைத்தேன்.
இதெல்லாம் நடந்து முடிந்தபின், இந்த டிசம்பர் மாதம்தான் எனக்கு விஜய் டிவியிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் சிலர் பேசினார்கள். ‘ஸ்டெல்லாபுரூஸ் பற்றி நீங்கள் சொல்ல வேண்டும்’ என்றார்கள். என் பெயரை வேறு ஒரு இலக்கிய நண்பர் பிரபல பத்திரிகையில் இருப்பவர் சிபாரிசு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சி என்னவென்று தெரியாமல் சரி என்று சொல்லிவிட்டேன். எப்படியும் என்னை பேட்டி எடுப்பது என்ற தீர்மானத்தில் அவர்கள் இருந்தார்கள். வீடு தேடி மூன்று பேர்கள் வந்தார்கள். அதிக மேக்கப் இல்லாமல் என்னை ஒரு கோணத்தில் பார்த்தபடியே அமர்ந்து இருக்கச் சொன்னார்கள். பிறகு ஸ்டெல்லாபுரூஸ் பற்றி பேசுங்கள் என்றார்கள். ஏன் அவர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று சொல்ல சொன்னார்கள். நானும் ஸ்டெல்லாபுரூஸ் பற்றி பேச ஆரம்பித்தேன். திரும்பத் திரும்ப நான் சொன்னதையே சொல்வதுபோல் பட்டது. ஒரு இடத்தில் ருத்திரன் என்று உச்சரித்தேன். பின் ஸ்டெல்லாபுரூஸ் போட்டோ எதாவது இருக்குமா என்று கேட்டார்கள்.
‘அவர் தற்கொலை செய்துகொள்ளுமுன் எடுத்த போட்டோ உள்ளது,’ என்று கம்ப்யூட்டரில் காட்டினேன். நான் சமீபத்தில் டிஜிட்டல் காமெரா ஒன்று வாங்கியிருந்தேன். அதில் பலரை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தேன். ஸ்டெல்லாபுரூஸையும் ஒரு சந்தர்ப்பத்தில் படம் பிடித்திருந்தேன். என்னைப் பேட்டி எடுத்தவர்கள்,
‘திங்கள் இரவு பத்துமணிக்குப் பாருங்கள்,’ என்றார்கள். அதுவும் நான் கேட்டபிறகுதான் அவர்கள் சொன்னார்கள். உடனே எல்லோருக்கும் இந்தச் செய்தியைத் தெரியப்படுத்தினேன். அலுவலகத்தில் பலருக்குச் சொன்னேன். எனக்கு உள்ளுக்குள் ஒரு வருத்தம் இருந்தது. ஸ்டெல்லாபுரூஸ் தற்கொலையைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும் என்று. மரணத்தை அவர் ஏற்றுக்கொண்ட விதம் சரியில்லை. ஆனால் அவர் மரணத்திற்கு மரியாதைத் தர வேண்டுமென்று நினைத்தேன். பொதுவாக எந்த நிகழ்ச்சியையும் நான் விரும்பி டிவியில் பார்க்க மாட்டேன். டிவியில்லாமல் என்னால் இருக்க முடியும். ஆனால் புத்தகமும், கம்ப்யூட்டரும் இல்லாமல் இருக்க முடியாது. எதாவது எழுதுவது என்று நினைத்தால் கம்ப்யூட்டரில்தான் என்னால் முடியும். திங்கள் அன்று பத்து மணிக்கு விஜய் டிவி முன் அமர்ந்தேன். ‘நடந்தது என்ன?’ என்ற அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, சகிக்க முடியவில்லை. மனைவி இறந்துபோனதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவனைப் பற்றி, கணவன் இறந்துபோன துக்கம் தாங்க முடியாத மனைவியின் தற்கொலை..இதை விவரிக்க பலருடைய பேட்டி. ஸ்டெல்லாபுரூஸ் பேர் வந்தவுடன் நான் வருகிறேனா என்று பார்த்தேன். நான் வரவே இல்லை. என்னைப் பேட்டி எடுத்துச் சென்றவர் என்னை கட் செய்து விட்டார். ஆனால் நான் குறிப்பிட்ட ருத்ரன் வந்திருந்தார். அதே நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக சாருநிவேதிதா வந்திருந்தார். எனக்கோ ஒரு மாதிரியாக இருந்தது. அடுத்த நாள் அலுவலகத்தில் சில நண்பர்கள் கிண்டல் செய்தார்கள். என் உறவினர்களெல்லாம் இரவு பத்துமணிக்குமேல் விழித்திருந்து பார்த்து ஏமாந்து விட்டார்கள். விஜய் டிவிகாரர்களுக்கு என்னிடம் நான் வரவில்லை என்பதைச் சொல்ல வேண்டுமென்ற நாகரீகம் கூட இல்லை. ஸ்டெல்லாபுரூஸுற்கே நான் அவரைப் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்று நினைத்தேன். அதனால்தான் வர விடாமல் செய்து விட்டார். எனக்கோ நிம்மதியாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் நான் வராமல் இருந்தது ரொம்ப நல்லது என்று நினைத்துக்கொண்டேன். ஸ்டெல்லாபுரூஸ் என்னைக் காப்பாற்றி விட்டார்.

பரிமள விலாஸ்

சிறுகதைபாங்காக்கில்தமிழ்ப் பெண் என்று கேட்டதும் சட்டென்று உள்ளே பரபரப்பானது. அதுவரை பெண் விஷயத்தில் அசட்டையாக, சமர்த்தாக இருந்தவன்தான். தாக சாந்தி என்று பார்ட்டிகளில் கிடைக்கும். அளவாக அருந்துவான். எதாவது வாய் தவறிவிடுமோ, கேலியாக ரகளையாக கிவிடுமோ, என்று பயத்துடன், அத்தோடு அன்றைய நாளை முடித்துக்கொண்டு, அறைக்குத் திரும்பி, தாள் போட்டுக்கொண்டு படுத்துவிடுவான். காலையில் மூளை தெளிய எழுந்து கொள்வதில் கவனமாய் இருப்பான். தலைவலி என்று இழுத்துப் போட்டுக் கொள்ளமாட்டான். முந்தைய நாள் இரவு அவனுக்கே கனவு போலிருக்கும். ஆனால் தாக சாந்தி இல்லை, இது தேக சாந்தி! வேண்டாம் …என மறுக்க சட்டென வாய் வரவில்லை. வேண்டும் என்று சொல்லவும் கூச்சமாய், தயக்கமாய் இருந்தது. இன்னும் முழுசாய் ஒருநாள் இருந்தது கையில். கான்டிராக்ட் விவாதங்களில் இழுபறி இருக்கலாம். பேசித் தீர்க்க, சரிசெய்ய வேண்டிய நிறைய விஷயங்கள் இருக்கலாம்… கூட ஒருநாளாகும் என அவன் அலுவலகத்தில் எதிர்பார்த்திருந்தார்கள். இவன் காட்டிய செக்யூரிட்டிகள் அவர்களுக்குப் போதுமானதாய் இருந்தன. ம். பிசினெஸ் பங்குதாரர்களில் ஒருத்தராக அமைச்சர் ஒருவரின் பினாமி இருந்தார். அந்நியச் செலாவணிகளுக்கு வசதி. ஓகோ.. புதிய தயாரிப்பை விற்கிற வளாகங்கள் பற்றிய அலசல், அதன் விளம்பர உத்திகள் எல்லாவற்றையும் விலாவாரியாக விளக்கினான். (கல்லூரி நிகழ்ச்சிகளை ஸ்பான்சர் செய்யலாம்.) அடேடே. தாய்லாந்து மாடல் ஒருத்தியை வைத்து உருவாக்கிய ஒரு மாதிரிவிளம்பரத்தையும் காட்டினான்… கா! மிகக் குறைவாக போதைவஸ்து கலந்த குளிர்பானம். நட்வில் இங்கிலாந்து பூர்விகப் பிரஜை என்றாலும் மூணு தலைமுறையாக அவர்கள் பிசினெசில் பாங்காக்கில் கொடிகட்டிப் பறந்தார்கள். புது மோஸ்தரில் மேஜை நாற்காலிகள் என்று ஆரம்பித்து, வீட்டு அலங்காரம் வரை வியாபாரத்தை அகலப்படுத்தியிருந்தார்… மனுசன் புகழுக்கு அடிமை. பேச்சுவார்த்தையில் சில நல்ல வார்த்தைகள் அவரைப் பற்றியும், அவரது சாதனைகள் பற்றியும் தெளித்துப் பேசியபோது அவர் முகம் பிரகாசமானதை கவனித்தான். அவரைப் பாராட்டினால், என்னை அறிவாளி என நம்புகிறார்!… அப்பவே வந்த காரியம் பழம் என்று தெரிந்து விட்டது. உற்சாகமாய் இருந்தது. 2 கட்டுப்பெட்டியான குடும்பம் இவர்களுடையது. அப்பா ரொம்ப ஆசார சீலர். தினசரி காலை சந்தி பண்ணாமல் காரியங்களைத் துவக்க மாட்டார். பெருமூச்சு விடும்போது கூடவே, என்னப்பனே ஈஸ்வரா, என்று நாமகரணம் இருக்கும். நம்ம கைல என்ன இருக்கு, என்று மேலே காயத்தைக் காட்டிப் பேசுவார். பொழைச்சிக் கிடந்தா நாளைக்கு சந்திக்கலாம், என்பார். தாத்தாவின் பெயரே அவனுக்கு வாய்த்தது. தட்சிணாமூர்த்தி. நாசூக்காக தட்ஷிண் என்று சுருக்கிக் கொண்டான். அதுவே அவன் தாத்தாவின் பெயர். தாத்தாவுக்குத் தாத்தாவின் பெயரும் அதுதான். மரபும் பழம் பெருமையுமான குடும்பம். அப்பாவுக்குத் தாத்தா காலத்திலேயே வயிற்றுப்பாட்டு அடிப்படையில் நகரம் நோக்கிப் பெயர்ந்த குடும்பம் என்றாலும், ”நாங்கள்லாம் கும்போணத்துக் காரா,” என்று சொல்கையில் ஒரு மிடுக்கு, ஒரு நிமிர்வு காணும். தோப்பு துரவு கட்டி ண்ட குடும்பம்… குலப்பெருமை வழிய வழியப் பேசுவதில் மனம் சிலிர்க்கும், நுரைக்க நுரைக்க பீர் அருந்துகிறாப்போலதாத்தாவுக்குத் தாத்தாவின் – தட்சிணாமூர்த்தியின் நாலடி அளவிலான பெரிய படம் இன்றும் வீட்டில் இருக்கிறது. யாரோ ஓவியன் முன்னமர்ந்து போஸ் கொடுத்து வரைந்து வாங்கியது. ஒட்டடையா மீசையா என்று தெரியாமல் உயரப் பரணில் பார்க்கலாம். பணம் வந்துவிட்டால் மீசை இல்லாமல் எப்படி?… அவரோடு குடும்பம் சரிவு கண்டது. நிலம் நீச்சு தோப்பு துரவு என்று பரிபாலனக் குடும்பம். தோப்புக்குள் குலதெய்வ பூஜை வெகு அமர்க்களமாய் நடக்கும். ஜட்கா வண்டி. அதில் விருந்தாளிகளை அழைத்துப் போய் வயல்பக்கம் ”அதோ பாத்தேளா? அந்த எல்லை…. அதுவரை நம்மது…” அப்பா ஹைவே இன்ஞினியர். ஜி போட்ட ஜீப் பிராப்தி உண்டு. ஊரே சாமி சாமி, என்று சலாம் போட்டது. இப்பவும் நகரத்தில் அதை எல்லாம் எதிர்பார்க்கிற நப்பாசை உண்டு. ஒரு சின்ன உருமலுக்கும் ஓடி சேவகர்கள் வந்து நிற்பார்கள், அது ஒரு காலம் – என்பார். இப்ப கைத்தடி இல்லாமல் நடக்கேலாது. என்றாலும் கைத்தடியைத் தரையில் அழுத்தும் அழுத்தத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். அப்படி அவர் நினைத்துக் கொள்கிறார்!… உலகமும் போக்கும் அறியாமலேயே, அதை சட்டை செய்யாமலேயே, ஒத்துக்கொள்ளாமலேயே வளர்ந்து விட்டிருந்தார்கள். நான் ஏன் அறிந்துகொள்ள வேண்டும்? உலகம் என்னுடையது. எனக்குக் கீழ் உலகம்! என்னை அண்டி, என்னைச் சுற்றி இயங்கும் உலகம்… தட்சிணுக்கு பாதி வேடிக்கை. பாதி பிடித்தும் இருந்தது. கும்பகோணத்துக்கு ஒருமுறை போய்ப் பார்த்துவிட்டு வரக்கூட ஆசைப்பட்டான். அப்பா அதில் இஷ்டப்படவில்லை. ”இப்ப அங்க எதும் இல்லடா, எல்லாம் போயாச்சு” என்கிற குரலின் துக்கம் சங்கடமாய் இருந்தது. சொத்தும் அதிகாரமும் மனுசனுக்குச் சட்டையில் பணம் மாதிரி, தேவையில்லாவிட்டாலும் வேண்டித்தான் இருக்கிறது. அது ஒரு தோரணை… மல்லிகைப்பூவாய் வெளுத்த கதர்ச்சட்டைக்கு, நடுவில் பள்ளம் விட்ட பித்தளை உடுக்கைப் பித்தான்களை மாட்டிக் கொள்வார்கள். மேல் பட்டன் போடாமல் புலிநக செய்ன் தவழும் நெஞ்சுமயிர்க்காடு. சந்தனம் மணத்துக் கிடக்கும். சட்டைக்குள் தெரிகிறாப் போல புத்தம் புதிய ஒத்த ருவ்வாய்க் கொத்து. தேவை இல்லாவிட்டாலும், ஒரு தங்கமுலாம் பூசிய பார்க்கர் பேனா. மீசையை அடிக்கடி ஒதுக்கிக் கொள்ளும் பந்தா. தனக்குக் கீழே உலகம் என்கிற பாவனைதான் எத்தனை சுகமானது. அதிகாரப் பித்து. நில உச்சவரம்புச் சட்டம் ஒரு இடி. அதைவிடப் பெரிய இடி ஒன்று விழுந்தது… பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சடித்து வெளியிட்டு வந்தார்கள். ஆட்சி மாறாது, பாடத் திட்டங்கள் மாறாது, என்ற நம்பிக்கையில் பத்து வருடத்துக்குத் தேவையான நூல்களை அச்சிட்டுத் தயாராய் வைத்திருந்ததில் திடீரென்று ஆட்சியும் மாறி, பாடத்திட்டமும் மாறி…. மொத்தமும் வீணாய்ப் போனது. ஒரு பெரிய பங்களா முழுதும் புத்தகம். லாரி லாரியாக எடைக்குப் போட எடுத்துப் போனது பரிதாபம். போர்க்களத்தின் பிண வண்டி போல! மிஞ்சியது ஒட்டடை படிந்த சுவரில் தாத்தா படம்தான். தூக்கிச் சுருட்டிய அந்த மீசை அப்போது சற்று கீழே வளைந்ததாக சரித்திரம். அத்தோடு முடியவில்லை விவகாரம். கருப்புப் பணம் நாட்ல ஏராளமாய்ப் போச்சுன்னதும் ஆர்டர் போட்டான் கவர்மென்ட் – ஆயிர்ரூவா நோட்டு செல்லாது! அப்பத்தைய ஆயிர்ருவ்வா பாத்திருக்கேளா? பலசரக்குக் கடை ஜாபிதா மாதிரி நீளமான கோவணத்துண்டு. கருப்புப் பணம் வெச்சிருக்கறவன் எல்லாம் சில்ரச் சில்ரயாவாயா பதுக்கி வெச்சிருப்பான்? ஆயிர்ரூவாயாத்தானே வெச்சிருப்பான்னு ஒரு கணக்கு. வெள்ளைப் பணமா? வா வந்து பேங்கல கணக்குக் காட்டி இத்தனாம் தேதிக்குள்ள மாத்திக்க – அடுத்த வாரம் முதல் ஆயிர்ரூவா புழக்கத்திலேயே கிடையாதுன்னான்… மாமா முகத்தப் பாக்கணுமே. (தன் மாமனாரைப் பற்றிக் கதை சொல்லும் பாட்டி முகத்தைப் பார்க்கணுமே.) பாடப் புத்தகம் வெச்சிருந்த குடடீன்லியே பெட்டி பெட்டியா வெச்சிருந்தாங்க. பூரா ஆயிர்ரூவா நோட்டு… சலவைத்தாள். டிரங்குப் பெட்டி சவப்பெட்டியாச்சு… எங்கயும் தர முடியாது, வெச்சிருந்து என்ன செய்ய? ஒரு கணக்கும் கிடையாது. கால காலத்துக்கும் பூட்டியே உள்ளே கிடந்த பணம். புஸ்தகங்களையாவது பழைய பேப்பர்க்காரன் எடுத்துக்கிட்டான். இதுக்கு அந்த விதியும் அத்துப் போச்சே! எடுத்து சூரை விடலாம்… மாமா சுருட்டுப் பத்த வெச்சிக்கிட்டு ஒரு சிரிப்பு சிரிச்சார், அழறாரா சிரிக்கிறாரா? நெஞ்சு ஏறியேறி இறங்குது… நாங்கள்லாம் வெந்நீர் அடுப்புல பணத்தைப் போட்டுக் குளிச்சம். கிளியோபாட்ரா பால்ல குளிப்பாளாமே? அதைவிடப் பணக்காரக் குளியல்! – பாட்டிக்கும் பெருமைப்பட விஷயங்கள் இருந்தன! பொம்பளைங்களுக்கு, அழகான மத்த பொம்பளைங்க விஷயம் எப்படியும் தெரிஞ்சிருது, நாடுவிட்டு கண்டம் விட்டு வந்து சேர்ந்திருதே3 முழுசாய் ஒருநாள் இருந்தது கையில். பூட்டிய தனியறையில் எப்படியும் அடைந்து கிடக்க முடியாது. புத்தர் கோயில் அது இது என்று பண்பாட்டு சமாச்சாரங்களிலும் ஆர்வம் இல்லை. நட்வில் அவன் தவிப்பை வேடிக்கை பார்த்ததாய்த் தெரிந்தது. கான்டிராக்ட் முடிந்த ஜோரில் நட்சத்திர ஹோட்டலில் விருந்து அமர்க்களங்கள் இருந்தன. சும்மா இல்லை – இந்தியப் பணத்தில் நாற்பது கோடி கான்டிராக்ட். மிதமாக சோமபானம் அருந்திக் கொண்டாடலாம் தப்பில்லை. அவனே இத்தனை சுளுவாய் வேலை முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. முதல் பார்வையிலேயே அவனை நட்விலுக்குப் பிடித்திருக்க வேண்டும். ஆச்சர்யம் காத்திருந்தது அப்போது அவனுக்குத் தெரியாது. மெல்லிசை என்று ஒரு பெண் மேடையேறினாள். புடவைக்கட்டும் முகவெட்டும் இந்தியச் சாயலில் இருந்தது. கண் இடுங்கிய கிழக்கத்தியச் சாயல் அறவே இல்லை. எதும் கசல் போலக் கேட்போமே என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். மிதமான பவுடர் பூச்சுதான். உதட்டுச்சாயம் இத்தனைதூரத்திலும் பளபளப்பாய்த் தெரிந்தது. லிப்கிளாஸ் போட்டிருப்பாளாய் இருக்கும். அழ(ஹா!)ய்த்தான் இருக்கிறாள் என நினைத்தான். அழகு சார்ந்த தன்னம்பிக்கை. கூந்தலைத் தளரவாரியிருந்தாள். பாய்போல் விரிந்த நீளக் கூந்தல் கிறங்கடிக்கிறதாய்… என்ன ஆச்சு எனக்கு? இத்தனை கவனிக்கிறோமே என நினைத்தான்… அழகில்லாத பெண்கள் எத்தனை குரல்வளமும் சங்கீதஞானமும் இருந்தாலும் மேடையில் எடுபடாது என்று தோன்றியது. புன்னகைத்துக் கொண்டான்… தமிழ்ப்பாடல்! எதிர்பார்க்கவேயில்லை. வெள்ளிக்கிழமை விடியும் நேரம் வாசலில் கோலமிட்டேன். வெள்ளிக்கிழமை அது இரவு நேரம். மனசினில் கோலமிட்டாள்… சுசீலாவின் எளிய சங்கதிகள் ஆனால் பாடும்போதுதான் ருசி தெரியும். எளிமையாய்ப் பாடுவதுதான் சிரமம். எளிமையில் பாவம் முக்கியம். அந்தப் பார்ட்டியே அவனுக்காக என்று தெரியாது. பிரத்யேகமாக அவள் வரவழைக்கப் பட்டிருக்கிறாள். நட்வில் புன்னகைத்துக் கொண்டார். இன்னொரு மடக். இன்று அதிகம் என்று பட்டது. அலட்சித்தான். இது தேவவேளை! அழகான இரவு. தெரியாத ஊரில் தமிழ்ப்பாடல். அழகான பெண். பெண்ணே உன் பெயர் என்ன? ”சம்யுக்தா” என்றார் நட்வில். புன்னகைத்துக் கொண்டார். கான்டிராக்ட் விவாதத்தில் என்னை அயர்த்திய தட்சிண். இப்போது என் முறை… என நினைத்துக்கொண்டார். அப்படியொன்றும் பெண் விஷயத்தில் சலனப்படுகிறவன் அல்ல, என்று சொல்லியிருந்தார்கள். பெண் விஷயத்தில் சபலம் இல்லாத ஆண்கள் இல்லை, என்பது அவர் அபிப்பராயம். வழுக்கைத்தலையைத் தடவி புன்னகைத்துக் கொண்டார். கிறங்கிக் கிடந்தான் அவன்… அலுப்பான அவன் உலகம் சட்டென்று புதுப்பிக்கப்பட்டு விட்டது. கான்டிராக்டை மற. அவன் வந்ததில் மறக்க முடியாத அனுபவம் ‘இது’ என்றிருந்தது. சம்யுக்தா! எப்படியெல்லாம் பேர் வைக்கிறார்கள். பாட்டே மறந்து போனான். என்னவோ உதடசைக்கிறாள்… நட்வில் காதருகில் ”நீங்கள் விரும்பினால்…” என்னும் போது சட்டென நா உலர்ந்துவிட்டது பதில் சொல்ல. ஆனால் மனப் படபடப்பு அதிகரித்து விட்டது. பூ மலர்ந்து தேன் கசிகிறாப் போல. என்ன அசட்டுத்தனமான கிளர்ச்சிகள். 4 பிரதிபா என நினைக்க மனம் துணுக்குற்றது. பொதுவாக வெளியூர் என்று வேலைவிஷயமாக அவன் போயிருந்தால் எந்த அவசரத்துக்கும் வீட்டிலிருந்து அவனைக் கூப்பிட அவன் அனுமதிப்பதில்லை. என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியாது, என்று சமாளித்தாலும், உண்மையில் தான் தாக சாந்தி செய்துகொண்டிருக்கும் வேளைகளில் வீட்டு அழைப்புகள் சங்கடப்படுத்தி விடும், என பயம் இருந்தது. தானே தொலைபேசியில் கூப்பிட்டு பிரதிபாவுடனும் அப்படியே பிள்ளை `ஹரியுடனும் நாலு வார்த்தை பேசுவான். முன்னெல்லாம் அப்பா ஹரியுடனும் பேசிக் கொண்டிருந்தான். இப்போது அவருக்குக் காது மந்தமாகி விட்டது. பிரதிபா பிறகு அவரிடம் தகவல் சொல்வாள். அலுவலகப் பயணங்களின் போது அவன் சிநேகிதர்கள் எல்லாம் மனைவியை அழைத்துப் போனார்கள். கம்பெனி அதனை அனுமதித்தது. என்றாலும் ஏனோ இதுவரை அந்த நினைப்பு அவனில் வரவில்லை. ஒருவேளை உள்ளூற மனசுக்குள் இந்தத் தனிமையான சந்தர்ப்பத்துக்காக ஏங்கிக் கிடந்தானோ தெரியாது! நிறைய ஆசையும் அதைவிட நிறைய பயமுமாய் உள்ளே குலுங்கியது. பொன்னாசை பெண்ணாசைல நம்ம குடும்பம் சீரழிஞ்சது போதும்டா, என்று அப்பா அலுப்புடன் சொல்லிக் கேட்டிருக்கிறான். அப்ப கூட வேடிக்கையாய் அப்பாவிடம் – ”ஆடும்போது ஆடிட்டு ஓய்ஞ்சப்பறம் வேதாந்தமா உங்க குடும்பத்துக்கு…” என்று சிரிப்பான். பிறகு அவர்பார்க்கக் குனிந்து ”அந்தக் காலம்லாம் போச்சுப்பா. இது உழைக்கிற தலைமுறை… அப்டியெல்லாம் ஆகாது,” என அவரை சுவாசப் படுத்துவான். பார்ட்டி முடிந்து படுக்கையில் தூங்க முடியவில்லை. ”பார்ட்டி உங்களுக்குத் திருப்தியாய் அமைந்ததறிய மகிழ்ச்சி” என்றார் நட்வில் கைகுலுக்கி. ”உங்களை மகிழ்விப்பது எங்கள் கடமை. நாளை காலை பத்து மணிக்குக் கார் அனுப்புகிறேன்” என்றார் புன்னகையுடன். ”ம்?” என்றான் விளங்காமல். தரையில் கால் பாவாத நேரம் அது. மனசு தளும்பிக் கொண்டிருந்தது. ”இரவில்தானே ஊர் திரும்ப வேண்டும். பகலை ரம்மியமாக்கிக் கொள்ளுங்கள். பகலில் சம்யுக்தா உங்களுடையவள்… நல்வாழ்த்துக்கள்.” குபீரென்று யாரோ தூக்கினாற் போல வயிற்றில் கிளுகிளுப்பு. 5 பாடப் புத்தகம் அடித்த பரம்பரை. நேர் எதிர்மறையான வாழ்க்கை வாழ்ந்தார்கள். கைநிறையப் பணம். தேவைக்கு மேலான, அபரிமிதமான பணம், கௌரவம். தட்சிணாமூர்த்தி ஊர்ப் பெரிய மனிதர். கோவில் பொது நிகழ்ச்சிகளில் அவர் முக்கியப் பிரமுகராக அழைக்கப் பட்டார். கச்சேரிக்காரர்கள் நாட்டியக்காரிகள் என்று கலைஞர்கள் அந்த ஊருக்கு வந்தால் இங்கேதான் தங்குவார்கள். அவர்களை இறக்க தனி வீடே இருந்தது. அறுவடை முடிந்த ஜோரில் திடீரென்று உன்மத்தம் அதிகமாகி சினிமாக்காரர்களைப் பார்க்க பட்டணம் போய்வருவதும் உண்டு. திரைப்படம் எதோ ஆரம்பித்து நிறுத்தி விட்டதாகக் கேள்விப் பட்டான்… பாட்டிக்குப் பாட்டி (அப்போது பாட்டி அல்ல!) எல்லாம் பார்த்தபடி பொருமுவாள் தனக்குள். அவர்கள் வந்து மீண்டும் கிளம்பிப் போகும்வரை தாத்தா அந்த வீட்டில்தான் இருப்பார். ‘பரிமள விலாஸ்’ – என்றால் பஸ் ஸ்டாண்டு குதிரை வண்டிக்காரனே கொண்டுவந்து விட்டு விடுவான். தனி சமையல்காரன் உண்டு. ஒரே வேடிக்கை, கேளிக்கை, அமர்க்களம்… வாழ்வது ஒருமுறை என்று தத்துவம் பேசியாகிறது… இவன் தாத்தாவில் இருந்து குடும்பம் சுதாரித்ததாக அப்பா சொல்வார். விட்ட குறை தொட்ட குறை என்று, கோவில் காரியங்களில் முன்கை இன்றைக்கும் அப்பாவுடையதுதான். தவறாமல் பெருந்திருவுக்குப் பணம் போகிறது. தன் கையால் மணியார்டர் அனுப்புவதும் ரசீதைப் பத்திரப்படுத்தி மகிழ்வதும். அப்பாவின் பிறந்த நாளுக்கு இன்றைக்கும் அர்ச்சனை நடத்தி தபாலில் பிரசாதம் வருகிறது. இதுவரை இப்படி ஒரு படபடப்பு ஆர்வத்துடிப்பு அவனிடம் இருந்ததில்லை. ஆனாலும் பெயர் தெரியாத இடத்தில் சற்றும் எதிர்பாராமல் கேட்ட தமிழ்ப்பாடல். சம்யுக்தா, என்ன பேர்! இந்தியாவுக்குள் என்றால் ஒருவேளை தீர்மானமாக மறுத்திருப்பான் என்று தோன்றியது. இவளை… இவளை மறுக்க முடியுமா உன்னால், எனக் கேலியடித்தது மனம். லேசான புன்னகையுடன் அவனைப் பார்த்துப் பார்த்து அவள் பாடினாள். கையில்லாத ரவிக் அவனைத் திணறடித்தது. அவன் சுற்றுக் சூழலையே மறந்து போனான். பெண், பார்ட்டி எல்லாம் மீறிய ஒரு கொஞ்சல் இருந்தாப் போலிருந்தது அவளிடம். அழைப்பு இருந்தது. மனசை மயிற்பீலியால் வருடினாப் போல… இவளைச் சந்தித்த கணங்களுடன் மீதி வாழ்க்கை வாழ்வதா, சந்திக்காத ஏக்கத்துடன் நாடு திரும்புவதா, என்று யோசித்தான். யாருக்குத் தெரியப் போகிறது, என ஒரு சமாதானம். தெரிந்தாலும் இந்த சந்தர்ப்பம் பொறாமையைத்தான் ஏற்படுத்தும், அலுவலகத்தில் தவறாக யார் இதைச் சொல்வார்கள், என்றிருந்தது. ஒருவேளை சகாக்களுக்கு முன்பே இது அனுபவப்பட்டும் இருக்கலாம்! மனம் எப்படியெல்லாம் தனக்கு சாதகமாக கணக்கு போடுகிறது… மணி பார்த்தான். விறுவிறுவென்று குளியலறைக்குப் போனான். வெள்ளிக்கிழமை விடியும் நேரம்… என்னமாய்ப் பாடினாள். 6 சந்திக்குமுன்பே பரபரப்பாயிருந்தது. நேற்றைய அவளது முகம் கண்முன்னே வந்தது. இன்றைய அவள் அலங்காரம் எப்படியிருக்கும் என ஒரு கற்பனை. தெரிந்தும் மனிதர்கள் எப்படித் தப்பு செய்கிறார்கள்! திருட்டு ருசிக்காரர்கள். திருட்டே ஒரு ருசிதான். அதுதரும் கிளர்ச்சி. தனக்குமட்டுமேயான ஒரு ரகசியம் என்பது வேண்டியிருக்கிறது போலும். சட்டென்று இந்தப் பயணம் எத்தனை முக்கியமானதாக ஆகிவிட்டது. பொழுதுகளுக்கு றெக்கை முளைத்ததாய்த் தெரிகிறது. ஆர்டர்லி கொண்டுவந்து வைத்த காபி ஆறிக்கிடந்தது. மறந்திருந்தான். புன்னகையுடன் எடுத்துக் குடித்தான். அவன் சூடாய் இருந்தான். கதவை யாரோ மெலிதாகத் தட்டியதும் துள்ளியெழுந்தான்… எதையும் நினைக்காமல் இந்த நிமிஷத்தையே நினைடா அப்பனே, என மனசுக்கு உற்சாகமாய்க் கட்டளை பிறப்பித்தான். பயமாய் தயக்கமாய் இருந்தது. பழகிவிடும்… புன்னகையுடன் கதவைத் திறந்தான். தெரியாத ஊர். வண்டி ஓடுகிறது. வாழ்க்கை தனக்கு மாத்திரமேயானதாய் ஒரு மயக்கம். பயந்த மனசை ஷ் என அடக்கினான். தனக்கேயான உலகம், ரகசியமான உலகம். தாத்தாவிடம் பேசினால் எத்தனையோ ரகசியங்கள் இப்படிக் கிடைக்கலாம். அவர் நினைப்பு இப்ப எதுக்கு, என்று கட்டுப்படுத்தினான். பாட்டிக்குத் தெரிந்தது கொஞ்சம், தெரியாதது கடல் அளவு. முடிந்தவரை பயத்தை ஒளித்து மனசை வேடிக்கை காட்டிக்கொண்டே போக முயற்சித்தான். பிரதிபா என நினைத்து நாக்கைச் சுருட்டிக்கொண்டான். தெரியாது, அவளுக்குத் தெரியாது. இந்த ரகசியம் என்னோடு புதையுண்டு போகும். அப்பாவரை கூட இது வெளிவராது. நட்வில் பெருந்தன்மையானவர். அவரைத் தாண்டி விஷயம் வெளிவராது. காரைத் திருப்பச் சொல்லிவிட்டால் நிம்மதியாய் இருக்கும், என்று பட்டது. ஆனால் அவனுக்கு முன்னால் மனசு துள்ளி முன்னால் ஓடுகிறதே, என்ன செய்ய. இன்னும் கொஞ்ச நேரத்தில் சம்யுக்தா – உனக்கே உனக்கானவள், என்ற நினைவு எத்தனை இதம். பளபளப்பான அந்த உதடுகள். சட்டென திரும்பி அவனைக் கூர்ந்து பார்த்து சிறிய புன்னகையுடன் அவள் பாடியது, அந்த உதடுகளைக் கடிக்க வெறி வந்தது நிஜம். கதவைத் திறந்தவளைக் கண்டதும் திக்கென்றது மனசு. பிரத்யேகமாய் அவனுக்கெனவே ஓர் அலங்காரம். காரம் போல எச்சிலை உள்ளிழுத்துக் கொள்ள வைத்தது. தயங்கிய அவன் கையைப் பிடித்து – – வாங்க, என உள்ளே அழைத்த இதம். கண் படபடத்தது. அடேய் நாற்பது கோடி வர்த்தகத்தை அலட்சியமாய்க் கையாண்டவன் நீ. இவளிடம் சரணடைவதா? வெகு சகஜம் போல நடந்து கொள்… ள முடியவில்லை. பிரமிப்பாய் இருந்தது. நாய்க்குட்டிபோல அவள் பின்னால் போகிறான். மனசுக்குள் அசட்டுச் சிரிப்பு. ஷ் அவளுக்குத் தெரிந்துவிடப் போகிறது, என்று கூச்சமாய் இருந்தது. ”நம்ம ஊர்ச்சமையல்தான். அவியல். பிடிக்குமோல்யோ?” என்றாள். உன் கையால எது பண்ணினாலும் பிடிக்கும், என உளற நினைத்தான். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாள். சுவரில் நவீன ஓவியம் ஒன்று தொங்கியது. ரசனை உள்ளவள்தான் போலிருக்கிறது. சற்று சுதந்திர சிந்தனை உள்ள பெண்போல நினைத்தான். முன்பே அவனை முற்றாக அறிந்தவள் போல எத்தனை மெலிதாய் என்னைக் கையாள்கிறாள் என நினைத்தான். பெண்கள் சாகசக்காரிகள்தான். குளித்து வாசனைபூசி கிட்ட வந்து பாரிமாறும்போதே உள்க்கொந்தளிப்பாய் இருந்தது. குனிந்தபோது கன்னத்தில், வெட்கத்தை விட்டு வாசனை பிடித்தான். சிரித்தாள். மறுக்கவில்லை. ”அவசரமா?” என்றாள். அவனது தன்னடையாளத்தைக் கூரை கூரையாய்ப் பிரித்து சூரையாடிவிடுவாள் போலிருந்தது. ”நீ ஒண்ணு குடுடி” என்றான் பித்தத்துடன். ”எங்க?” என அவள் சீண்டினாள். கன்னத்தைக் காட்ட நினைத்தவன் உதட்டைக் காட்டினான். எனக்கு என்னவோ ஆகிவிட்டது, என நினைத்துக் கொண்டான். வெண்முத்துப் பற்கள். கலகலவென எப்படிச் சிரிக்கிறாள். ”கூடவே சாப்பிட்டிரு. லேட்டாகுதில்ல?” என்றான். ”உடனே போயி ஷப்ளைட் பிடிக்கணுமா?” என்றாள் கண்ணைப் பார்த்து. அப்படிக் கண்ணைப் பார்த்துப் பேசாதேயேன், என நினைத்தான். பேசியதும் பிடித்துத்தான் இருக்கிறது. விநாடி ஒவ்வொன்றும் இத்தனை அழகாய் அவன் அதுவரை உணர்ந்ததேயில்லை… பிரதிபாவுடனான கணங்கள்… அது தனிக்கதை. திருட்டு மாங்காய் இது. பின் திரும்பிக்கொண்டு தன் உடைகளுக்கு விடுதலை தர அவனை ஒத்தாசைக்கு அழைத்தபோது கண்கள் சிரித்தன உள்ளே. பிரகாசமான கணங்கள். தைரியத்துக்கு ஒரு பெக் இருந்தால் நல்லது, என்னுமுன்னே அவன் முன் ஊற்றித் தந்தாள். அடிப்பாவி ஊருக்கு விமானமேற விடுவாளா என்றே தெரியவில்லை. நவீன ஓவியம்போல புரிந்தும் புரியாத கணங்களாய் இருந்தன அவை. அவளைப் பற்றிக் கேட்கலாமாய் நினைத்து உடனே மறந்தான். அல்வாத் துண்டில் மயிர் – வேண்டாம். அட ஆண்பிள்ளையே உன்னைப்போல ஒருவனைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன், என்றாள். எல்லாரிடமும் பேசுகிற வசனமா தெரியாது. அவனுக்கு வேண்டியிருந்தது அது. உன்னைப் போல ஒருத்தியை நான் சந்திக்கவேயில்லையடி பெண்ணேகலவியில் இத்தனை வேடிக்கை உண்டா என்று திகைத்துத் திகட்டியது. அவன் மூழ்கினான். மனமோ மிதந்தது… இது இப்படியே நின்றுவிடாது, தொடர வேண்டும் என்று சங்கல்பம் பிறந்தது. சுவாசம் வந்து மல்லாக்கச் சாய்ந்தபோது ”நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சம்யுக்தா…” என்றான். ”நானும்” என்றாள் அவன் மார்பு முடிகளை அளைந்தபடியே. ”திரும்ப எப்ப வருவீங்க?” என்று கொஞ்சினாள். ”எதாவது வாய்ப்பு ஏற்படுத்திக்கிட்டாவது வருவேன்…” என அவளை இழுத்து மேலே போட்டுக் கொண்டான். ”ரொம்ப நல்லாத் தமிழ் பேசறே…” ”இப்பதான் உங்ககிட்ட தமிழ் பேசறேன். இந்த ஊர்ல தமிழ் பேச யார் இருக்கா?” என்றாள். ”தமிழ்நாட்டுக்கு வருவியா?”
”கூட்டிட்டுப் போங்க!” என்று, என்ன அழகாய்ச் சிரித்தாள். ”எந்த ஊர் உனக்கு?” ”கும்பகோணம். இப்ப யாரும் இல்ல அங்க, ஒரு காலத்துல சொந்த வீடு இருந்தது எங்களுக்கு. பெரிய வீடு. பரிமள விலாஸ்” என்றாள் அவள்.

சில குறிப்புகள் 12

மேடைப் பேச்சும் நானும் / 1
எனக்கு மேடையில் பேச வேண்டுமென்ற ஆசை என் பள்ளிக்கூட நாட்களிலேயே தொடங்கி விட்டது. ஆனால் ஆசை மட்டும்தான் உண்டு. தைரியமாக சொல்ல வேண்டியதை மேடையில் ஏறி பிறர் முன் சொல்ல முடியுமா என்பதில்தான் சிக்கல். அந்தக் காலத்தில் பள்ளிகளில் மேடையில் பேசும் திறனுக்கு பரிசு கொடுப்பார்கள். நான் படித்த ஒரு ஆரம்பப் பள்ளியில் பேசும் போட்டி வைத்திருந்தார்கள். நானும் துணிச்சலாகப் பேச பெயர் கொடுத்துவிட்டேன். பேர் கொடுத்துவிட்டேனே தவிர அவர்கள் கொடுத்தத் தலைப்பில் பேசுவதற்கு பெரிய போராட்டமே நடத்த ஆரம்பித்தேன். என்ன பேசப் போகிறேன் என்பதை ஒரு தாளில் எழுதி வைத்துக்கொண்டேன். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் கலந்துகொண்டு பேசுபவரின் பெயர்களை வாசித்து வந்தார்கள். கூடவே ஒரு கட்டளையும் இட்டார்கள். 2 நிமிடத்திற்குமேல் பேசக் கூடாது என்பதுதான் அந்தக் கட்டளை. நான் பேசுவதற்கான தருணம் வந்தது. அதற்குள் என் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது. நான் பேசி எல்லோரும் கேட்டு எல்லோரும் என் பேச்சில் மயங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியது. என் பெயரைக் கூப்பிட்டார்கள். எனக்கோ உதறல். கையில் எழுதியிருந்ததைப் பார்த்துப் படித்தேன். படிக்கும்போது ஒரு தப்பு செய்துவிட்டேன். மாணவ மாணவிகளே என்று குறிப்பிடுவதற்குப் பதில் மாணவ மனைவிகளே என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான் ஒரே சிரிப்பு. ஏன் சிரிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே பல நிமிடங்கள் ஆயிற்று. வேகமாக மீதி எழுதியிருப்பதையும் படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. தேர்தல்போது பல அரசியல்வாதிகள் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்களெல்லாம் ஒரே மாதிரியான விஷயத்தை ஒரு மேடையில் பேசியதை எல்லா மேடைகளிலும் பேசுவார்கள். ஒப்பிப்பதுபோல் எல்லோரும் திறமையாகப் பேசுவார்கள். மேடையில் திறமையாகப் பேசும் படைப்பாளிகள் பலர் என் நண்பர்கள். க.நா.சுப்பிரமணியம் மேடையில் பேசும்போது எந்தத் தலைப்பிலும் பேசுவார். ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசக்கூடிய திறமையானவர். எந்தத் தலைப்பு குறித்தும் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் பல மணிநேரம் பேசக்கூடிய திறமையானவர். சென்னையில் அவர் இருந்தபோது என்னை இலக்கியக் கூட்டம் ஒன்றை மாதம் மாதம் நடத்துங்கள் என்று தூண்டியவர். முதன்முதலில் மாதம் ஒருமுறை அவரை வைத்தக்கொண்டு கூட்டம் நடத்த வேண்டுமென்று எனக்குத் தோன்றிகொண்டே இருக்கும். அப்போது எப்படி ஒரு கூட்டம் நடத்துவது அதற்கு எத்தனைப் பேர்கள் வருவார்கள் என்றெல்லாம் குழம்பிக்கொண்டிருந்தேன். க.நா.சு பேசுவதைப் போல் எழுதுவும் செய்வார். அதேபோல் படிக்கவும் செய்வார். படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் ஒருநாள் பொழுதைக் கழிப்பார். படிக்க ஆரம்பித்தால் கையில் எது கிடைத்தாலும் படிக்காமல் இருக்க மாட்டார். நான் முதன் முதலாக நவீன விருட்சம் இதழிற்கு எதாவது எழுதுங்கள் என்று க.நா.சுவிடம் போய் கேட்டேன். உடனே எழுதிய ஒரு கட்டுரையை என்னிடம் கொடுத்தார். எனக்கு ரொம்ப ஆச்சரியம். கேட்டவுடன் கொடுத்துவிட்டார் என்பது. அவரை வைத்துக்கொண்டு மேடையில் பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைத்த எனக்கு பெரிய ஏமாற்றம். அவர் தில்லிக்குச் சென்றவுடன் இறந்தும் விட்டார். நான் கூட்ட நடத்தவேண்டுமென்ற விதி என்னை விடவில்லை என்று தோன்றியது. லையன் சீனிவாசன் என்ற நண்பர் ஒருவர். அவர் சபீனா போன்ற ஒரு பொருளை செய்து காயின் என்ற பெயரில் விற்க ஆரம்பித்திருந்த தருணம். அப்போது ஹிந்துவில் Engagement என்ற பகுதியில் வரும் விளம்பரத்திற்கு என்னை இலக்கியக்கூட்டம் நடத்தும்படி தூண்டினார். எல்லா செலவையும் அவரே பார்த்துக்கொள்வதாக வேறு குறிப்பிட்டார். முயற்சி செய்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் விருட்சம் இலக்கியக் கூட்டம். முதன்முதலில் காசியபன் என்ற படைப்பாளியை வைத்துக்கொண்டு நடத்தினேன். கூட்டம் நடத்தத் தொடங்கியபோதுதான் தெரிந்தது. எனக்கு மேடையில் சரியாகப் பேச வரவில்லை என்பது. நான் கூட்டத்தில் பேச ஆரம்பித்தபோது, இப்படி ஆரம்பித்தேன், ‘எல்லோருக்கும் வணக்கம்….இப்போது காசியபன் பேசுவார்,’ என்று கூறிவிட்டு போய் உட்கார்ந்து கொண்டேன். காசியபன் யார்? அவர் என்னன்ன எழுதியிருக்கிறார் போன்ற பல விபரங்களைப் பற்றி பேசவில்லை. கூட்டத்தில் செய்ய வேண்டிய ஜாலவித்தையும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் காசியபனோ அவருக்கே உரித்தான பாணியில் பல விஷயங்களைப் பற்றி பேசினார். முதல் கூட்டம் நிறைவாகவே நடந்தது. சொற்பமானவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். அவர்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் ஒரு நோட்டில் குறித்துக் கொண்டேன். (இன்னும் வளரும்)

மூன்று கவிதைகள்


நகரம் தொலைத்த வானம்

வானத்து நட்சத்திரங்களை
பகலில்
சூரியன் விழுங்கிக்கொள்கிறான்.

சாலை விளக்குகளும்
குண்டு குழிகளும்
சக ஊர்திகளும்
இல்லத்திரைக்
காட்சிகளும்
மேல் வீட்டுக்காரனின்
கட்டாந்தரையும்
இரவில்
மறைத்துக்கொள்கின்றன.

இறுதி ஊர்வலம்…

இதோ புறப்பட்டுவிட்டது
இறுதி ஊர்வலம்…

மகள் கதறி
தரையில் அழுது புரள…

மனைவி கடைசிக் கடைசியாய்
முகம் பார்த்துத் தவிக்க…

உறவினர்களல்லாத சஹ்ருதயர்களும்
கண்களில் கரைமீறாமல் நீர் துளிர்க்க.

வாரியிறைக்கப்படும் சில்லறைக் காசுகளை பொறுக்குபவன்
குறுக்கிடும் கேபிள்களைத் தள்ளி
வழியேற்படுத்தித் தருகிறான்.

தெருவோரப் பிச்சைக்காரி ஏனோ
தன்குழந்தையின் முகத்தின் முன் துண்டுவிரித்து
காட்சியை மறைக்கிறாள்.

இணையாக வந்த யாரோ இரு இளம்பெண்கள்
மூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

இரண்டு தெரு கடந்ததும்
யாரோவாகிப்போன மனிதர்கள்
சலனமற்று வேடிக்கைப் பார்க்கின்றனர்.

தெருவெங்கும் இறைக்கப்பட்ட
சிவப்பு ரோஜாக்களைப் பார்க்கையில்
ஊர்வலம் போய்க்கொண்டிருந்த ஒருவன் நினைவில்
காதலி கூந்தலின் ஒற்றை ரோஜா
நினைவுக்குவர
அவசரமாய் நினைவை அழிக்கிறான்.

பிணத்தின் காலடியில் கட்டப்பட்ட
மிரண்ட கண்களுடனானக் கோழியின் கத்தல்
யாருக்கும் கேட்காமல் போக
கோழிக்கும் இதுவே இறுதி ஊர்வலம்.

3 சிறுமிகள்

பல வருடங்கள் கழித்துப்
பார்க்க நேர்ந்த என்
பள்ளித் தோழியின்
இடுப்பில் ஒன்றும்
கைப்பிடித்து ஒன்றுமாய்
இரு பெண்கள்.

என் கண்களுக்குத் தெரிகிற
அக்குழந்தைகளின் அம்மாவுக்கு
மூத்த மகளைவிட
ஓரிரண்டு வயதே
அதிகமிருக்கும்.

36 W

36 W- வில்
எனது இருக் கை.
சன்னலுக்கு வெளியே
மாறும்
நிலக்காட்சிகள்..
மனிதர்கள்,பொழுதுகள்..

யார் சொல்வது?
ஒரே இடத்தில்
அமர்ந்திருக்கிறேனென்று

கடிதங்கள்

.
வெ.நாராயணன் இலக்கியவட்டம் காஞ்சிபுரம் 21.08.1989விருட்சம் 3வது இதழில் பக்கம் 23ல் நகுலன் அவர்களுடைய குறள் மூலம் கவிதை பின்வருமாறுவெளியாகியுள்ளது. ‘நில் – போ – வா/வா – போ – நில்/போ – வா – நில்/நில் – போவா?’ இதற்குஎன்ன அர்த்தம் என்று புரியவில்லை என்று சென்ற கூட்டத்திற்கு வந்த நண்பர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர. கவிதை புனைந்தவரின் கருத்தறியவும் விரும்புகின்றனர்.
நகுலன் பதில்
நில் போ வா
இப்பொழுது இயங்கிவரும் அதிநூதன இலக்கிய விமர்சன இயக்கத்தில் ஒவ்வொரு வாசகனும் ஒரு படைப்பைத் தானே சிருஷ்டித்துக் கொள்கிறான் என்றும், சிருஷ்டி கர்த்தாவைவிட வாசகன்தான் முக்கியம் என்ற ஒரு இயக்கம் உலவி வருகிறது. மேலும் ஒரு சிருஷ்டிகர்த்தாவின் விளக்கம் அதிகார பூர்வமானது என்று சொல்வதற்கும் இல்லை. இதைத் தொடர்ந்து சிந்திக்கையில் ஒரு சிருஷ்டிகர்த்தாவும் தான் எழுதியதைப் பற்றி விளக்கம் தருவது என்பது அவனுக்கு அவ்வளவு உவப்பான ஒரு காரியமும் இல்லை.என்றாலும் …………….என் படைப்புகளைப் படித்தவர்களுக்கு, நீல பத்மனாபன் ஒரு இடத்தில் கூறியமாதிரிநான் ஒரு மரபுவாதி – புதுக் கவிதை எழுதினாலும், என் நாவல்கள், கவிதைகள் முதலியவற்றைப் படித்தவர்களுக்கு எனக்கு “குறள்” மீதுள்ள பிடிப்புத் தெரிந்திருக்கும். வேறொரு இடத்தில் வேறொரு சிநேகிதர் கூறியமாதிரி கவிதை எழுதியவனுக்கு அது முடிந்தபிறகு அவனே அதன் முதல் வாசகன் ஆகிறான் – தானே எழுதியதைத் தானே தெளிவு படுத்திக்கொள்வதற்கு.
மறுபடியும் தொடர்கிறேன். காஞ்சிபுரம் இலக்கிய வட்டத்தைச் சார்ந்த நண்பர் வெ நாராயணனின் கேள்வி என் கவிதையின் அர்த்தம் என்ன என்று. இது ஒரு அடிப்படையான கேள்வியை எழுப்புகிறது. கருத்துக்காகக் கவிதையா அல்லது கவிதைக்காகக் கருத்தா? யோசித்துப் பார்க்க வேண்டும்.
மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என்னைப் பற்றியவரையில் நான் எதை எழுதினாலும் என்ன எழுதுகிறோம் என்ற பேதமின்றித்தான் எழுதுகிறேன் – எழுதி முடித்த பின்தான் என்ன எழுதினேன் என்று எனக்கே தெரிகிறது. இதே மாதிரிதான் ஒரே விதமான கவிதைகளைப் படித்துப் பழகிய பிறகு, வேறு வகையில் எழுதப்பபட்ட கவிதைகளைப் படிக்கும்பொழுது அது நமக்குப் பிடிபடாமல் போவதில் ஆச்சரியப் படுவதற்கில்லை. இத்தகைய அனுபவம் வரும்பொழுது அக் கவிதையைப் படிக்காமல் விட்டு விடுவது என்பது ஒரு நிலை. அதைக் கட்டாயப்படுத்திக் கொண்டு படிப்பதில் ஒரு பயனுமில்லை. ஆனால் ஒரு கால இடையீடு விட்டுப் படிக்கையில் அது நமக்கு ஒரு குறிப்பிட்ட அனுபவத்தைக் கொடுக்கலாம்/கொடுக்கிறது. இங்குதான் எலியட் கூறியமாதிரி புரியாமல் இருக்கும் நிலையிலேயே ஒரு கவிதை நமக்குப் பிடிக்கலாம்/பிடிக்கிறது.
இனி விஷயத்திற்கு வருகிறேன். அடிப்படையான தகவல்கள் உருவ வேறுபாடுகள் கொள்கின்றன. இங்கு கா.நா.சு சொன்ன மாதிரி ஒரு வார்த்தை. ஏன் ஒரு மொழியே, ஒரு படிமமாக மாறலாம், மாறுகிறது. “குறள் மூலம் ஒரு கவிதை” என்பது என் கவிதையின் தலைப்பு – இந்த மூலம் குறளில் எங்கு இருக்கிறது? குறளில் பழக்கம் உள்ளவர்களுக்கு “கற்றப்பின் அதற்குத் தக நிற்க” என்ற வரியில் கடைசி வார்த்தையில் இருந்து “நில்” என்பது, பழைய உரை ஆசிரியர்கள் கூறிச் சென்ற மாதிரி பெறப்படுகிறது. “வா போ” என்பது “மயன்””போவென்று அழைத்து வாவென்று வெருட்டி”என்ற வரியிலிருந்து வந்தது. மேலும் ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் வார்த்தைகளைக் கொண்டு விளையாடுவது என்பதில் ஒரு ஈடுபாடு. ஏன் எலியட் கூறியமாதிரி கவிதை எழுதுவது என்பதே ஒரு உயர்தர விளையாட்டு என்பதன்றி வேறென்ன? பிறகு எனக்கு ஒரு தொடர்ந்து வரும் பிரக்ஞையில் குறள் ஒரு நீதி போதனை நூல் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியே நீதி போதனையாக இருக்கும் என்றாலும் அதன் பின்னால் ஒரு அனுபவச் சூழல், அதன் கட்டுக்கோப்பின் இறுக்கம், அதன் வார்த்தைச் சிக்கனம், அதன் நுட்பம், இவைகளெல்லாம் அதை ஒரு உயர்தரக் கலைப் படைப்பாகச் செய்கிறது. என் கவிதையின் மையம் “நில்” என்பது, ஆனால் இந்த ஒரு நிலை பேருனை ஒரு தத்துவ நிச்சயத்திலிருந்து, நாம் தடுமாறிக்கொண்டே இருந்தாலும், அதை விட்டு நம்மால் நகர முடியவில்லை. எனவே இந்த மூன்று வார்த்தைகளுக்கு வேறு வேறு உருவங்கள் கொடுத்து, கடைசியாக வேறு ஒரு உருவம் கொடுத்து அதை ‘நில் – போ – வா’ என்ற ஒரு அர்த்தமற்ற வார்த்தையைச் சிருஷ்டி செய்து வாழ்க்கையே ஒரு விடுபடாத புதிராக அதைத் தெளிவிக்க நாம் கொள்ளும் முயற்சி எப்பொழுதுமே தோல்வியில் முடிகிறது என்றாலும், இந்த முயற்சியே நமக்கு வாழ்க்கையின் கவர்ச்சியில் ஈடுபடச் செய்கிறது. இரு வேறு உலகங்களில் சஞ்சரிக்கும் இந்த நிலையிலிருந்து நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடிவதில்லை. எந்தவிதச் சித்தாந்தத்துக்கும் வாழ்க்கை வழங்கிக் கொடுப்பதில்லை என்பதே அதன் ஆழ்ந்த ரகசியம் போலும். ஒரு வகையில் வாழ்க்கையைப் போல் ‘நில் – போ – வா’ என்பது ஒர அர்த்தமற்ற சொல் தொடராக நம்மைக் கவ்வுகிறது. எனவே ‘நில் – போ – வா’?
இவ்வளவுதான் என் கவிதையைப் பற்றி நான் சொல்லக் கூடியது.

சில குறிப்புகள் / 12

நண்பர்களே,
நவீன விருட்சம் இதழுக்கு பலர் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும் இதழ் ஆரம்பித்த சமயத்தில். தனிப்பட்ட முறையிலும் சிலர் எழுதுவார்கள். அக் கடிதங்களைப் படிக்க சுவாரசியமாக இருக்கும். கடந்த 80வது இதழ் நவீன விருட்சத்தில் அப்படி சில கடிதங்களைப் பிரசுரம் செய்தேன். இங்கேயும் தர விரும்புகிறேன். சும்மா சும்மா கவிதையே போரடிக்கிறது.
விருதுநகர் – ஜூலை 3 1991
அன்புள்ள அழகியசிங்கர்,
விருட்சம் இதழ் இங்கு கிடைத்தது. ஏன் இத்தனை பக்கங்கள். இத்தனை எழுத்துத் திணிப்புகள்? அறிமுக எழுத்தாளர் என்ற விவரிப்பெல்லாம் தேவையற்ற முகாந்திரங்கள். விருட்சம் பக்கங்கள் குறைத்து வெளியிடலாம். பக்க அதிகரிப்பு மட்டுமே இதழை ‘கனமானதாக’ ஆக்கி விடாது. பிரமிள் எழுதிய கவிதை ‘அமெச்சூர்’ தனமாக தொனிக்கிறது. சா. அரங்கநாதன் கவிதை ‘தச்சூர்’ போனேன் பரவாயில்லை. ஞானக்கூத்தனின் ‘மதிப்புக் கூறுதல்’ கட்டுரை மிக எளிமையாக நல்ல உண்மை ஒன்றை சொல்லிக் காட்டி உள்ளது. அங்கீகாரம் வேண்டியிருப்பதில் சிறு பத்திரிகையில் எழுதும் இலக்கிய கொம்பர்களும் உட்பட்டவர்கள்தான். ‘சிறு பத்திரிகை’ என்ற பிரமைக்கு இமேஜ்க்கு இறுதிவரை உட்படாமல் ‘ழ’ வெளிவந்தது. விருட்சம் படிப்படியாய் அத்தகைய இமேஜ்க்கு உள்ளாகி ஒரு
typical Tamil Little Magazineன் பரிபூர்ண லட்சணங்களின் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது…’வீடு திரும்புதல்’ கவிதையின் அற்புத கவித்வம் மொழி பெயர்ப்பில் காணாமல் போயிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. விரைவில் சென்னை திரும்ப இருக்கிறோம்
அன்புடன்
ஸ்டெல்லா புரூஸ்

ச இராகவன் யாழ்ப்பாணம்
பெருமதிப்பிற்கும் வணக்கத்திற்குரிய அழகியசிங்கர் அவர்கட்கு,
நீங்கள் வெளியிட்டு வரும் நவீன விருட்சம் இதழ்கள் சில தொடர்ச்சியாக வாங்கிக் கிடைத்ததில் மெய்சிலிர்த்து இக்குறிப்பை எழுதுகிறேன். ஆர்ப்பாட்டமில்லாமல் கைக்கடக்கமாக ஒரு கனதியான சிற்றிதழாக நவீன விருட்சம் வெளிவருவதை கண்டு, உங்கள் மீது பெருமதிப்புக் கொண்டுள்ளேன். தவிரவும் உங்களது சிறுகதைகள் ஒருசிலவற்றை வாசித்ததில் பெருமகிழ்வுற்றேன். எளிமையான முறையில் அலாதியான நடையில் நவீனத்துவத்தைப் பிரதிபலிக்கும் சமூகப் பார்வையுள்ள உங்களது சிறுகதைகள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. மேலும் ஜெகன், மோகினி, அழகியசிங்கர் ஆகியோருக்கிடையிலான உரையாடல் சலிப்பினைத்தராத வரவேற்புக்குரிய உத்தி. அசோகமித்திரன் எழுதிவரும் பத்தி பல்வேறு விடயங்களை அறிமுகப்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. அண்மைக்காலமாக கொம்பன் எழுதிவரும் பத்தியும் சுவாரசியமாகத்தானிருக்கிறது. ராஜேஸ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்று ஒரு பாக்கெட் நாவல் எழுத்தாளராக இதுவரை நான் எண்ணியிருந்த ஸ்டெல்லா புரூஸ் ஒரு தீவிரமான சிற்றிதழ் எழுத்தாளன் என்பதை நவீன விருட்சம் மூலமாகத் தெரிந்து கொண்டேன். இங்கு யாழ்ப்பாணத்தில் நவீன விருட்சம் அளவுக்கு எளிமையானதும் நேர்த்தியானதும் கனதியானதுமான சிற்றிதழ் இதுவரை வெளியானதில்லை என்பதையும் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
My Dear Mouli, (Azhagiyasingar), Card I Monday
Jaundice relapsed. Recovering. I need ¸கிழானல்லி Please get this from High Court grounds. In front of ‘Laxmy Narain’, on the Telephone Bill Office side, near the footwear repairs, there is Palmist by name subramanian.
Mention my name. He will help you find the herp.
Subbu was here twice regarding his job within 7 days. He must come again.
No news from Amirtharaj. Perhaps he does not want to call without bringing some money or other. This is absurd. Tell him to come. I need people to talk to. It helps.
I have a poem for you. But this must be published only
under the pen name I have given for it.
Am sending a friend who called at this point in writing this letter. He is sure to do the work.
With love,
T Ajithram Premil