ஒரு மாதமாய்…….

கடந்த ஒரு மாதமாய்
நாங்கள் மூவரும்
இந்த வீட்டில் இருந்தோம்
பல ஆண்டுகளாய்
அப்படி இல்லை
புதல்வன் தூர தேசத்தில் இருந்தான்
நானோ இன்னொரு கோடியில் இருந்தேன்
வீட்டில் அடைப்பட்டிருந்தாள் மனைவி
இங்கே –
மூவரும் ஒரே நேரத்தில்
ஒரே இடத்தில் கூடியிருந்தோம்
உண்டு உறங்கினோம்
வெளியே கிளம்பி
ஊர்ச் சுற்றத் தொடங்கினோம்
வாழ்க்கையில்
இந்தத் தருணம் கிடைத்தது குறித்து மகிழ்ந்தோம்
எங்களின் வார்த்தைகளின் பரிமாற்றம்
சில நொடிகளே….
இதோ
ஒவ்வொருவாய்
ஒவ்வொரு திசைக்குப் பயணமாகிறோம்….
(12.08.2011 / Florida 1.20 pm)

நியுயார்க்

நான் தெருவில்
காலடி எடுத்து வைத்தபோது
உயரமான அந்தக் கட்டிடங்கள்
என்னை வியக்க வைத்தன
ஒன்றொடு ஒன்று ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதுபோல்
கட்டிடங்கள்
ஒவ்வொன்றையும் அண்ணாந்து
பார்க்க பார்க்க தட்டாமாலை
சுற்றுவதுபோலிருந்தது.
தெருவெல்லாம் கூட்டம் கூட்டமாய்
ஆண்களும் பெண்களும்
நடந்தவண்ணம் சென்று கொண்டிருந்தார்கள்
மாலை வேளையில்
டைம் ஸ்கெயர் என்ற இடத்தில்
கூட்டமாய் கூடியிருந்தார்கள்.
ஒருவர் சத்தமாய் கிதாரை வைத்துக்கொண்டு
பாட்டு பாடிக் கொண்டிருந்தார்
பலர் கூட்டமாய் கூடி
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
ஓவியர்கள் சுற்றி இருந்தவர்களை
உட்காரவைத்து ஓவியம் வரைந்து கொண்டிருந்தார்கள்
வயதானவர்கள்
நடக்கமுடியாமல் அங்கிருந்த நாற்காலிகளில்
அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்
கட்டிடங்கள் மேல்
வண்ணமயமான விளக்குகளின் வெளிச்சத்தில்
விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
எங்கும் ஹோ ஹோ என்ற சத்தம்
கேட்டுக்கொண்டிருந்தன.
பெண்கள் அரைகுறை உடைகளுடன்
மிதந்த வண்ணம் இருந்தார்கள்.
திசை தெரியாத திசைக்கு
நாங்களும் சுழன்று கொண்டிருந்தோம்.

பதினேழாம் வயது

எனது ஐ.க்யூ’வை கணக்கிலெடுத்து,
என்னுயரத்திற்கு சரியானவன்
எனக்கணித்து ,
என் வாழ்நாள் முழுதும்
துணையாக உடன் வரத்தக்க
பொருத்தமான ஒருவனை
தேர்ந்தெடுத்தால்,
அவன் ஏற்கனவே
பல சலிப்பூட்டும் இளம்பெண்களின்
காதலனாகவே இருந்திருக்கிறான்
அவன் தனது நீண்ட காலக்கனவை
என்னுட்ன் விவாதிக்கிறான்
இவனும் மற்ற இளைஞர்கள்
போலவே நிகழ்காலத்தில்
வாழ மறுக்கின்றவனாகவே
இருக்கிறான்.
சலித்துத்தான் போகிறது
எனக்கும்.

எதையாவது சொல்லட்டுமா – 56

 
ஒரு சம்பவம் நடந்தது.  அதாவது 28ஆம் தேதி ஜூலை மாதம். ஞாயிற்றுக்கிழமை.  வழக்கம்போல் சென்னையிலிருந்து மாயூரம் கிளம்ப வழக்கம் போல் இரவு 8 மணிக்குமேல் e-ticket ஐ பிரிண்ட் எடுத்தேன். எனக்கு டிக்கட் எப்போதும் என் உறவினர் ஒருவரால் புக் செய்யப்படும்.  அவரும் என்னைப்போல் ஞாயிறு இரவு கிளம்பி திங்கள் மாயூரம் வந்து பின் திருக்கடையூர் பயணம் செய்வார். 
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையிலும் அவருக்கும் எனக்கும் டிக்கட் எடுப்பார். எப்போதும் நாகூர் விரைவு வண்டியில்தான் நாங்கள் செல்வோம்.  அது காலையில் மாயூரம் 4.50 மணிக்குச் செல்லும்.  நாங்கள் இருவரும் கொஞ்ச தூரம் நடந்து ஒரு டீக் கடையில் காப்பி குடிப்போம். பின் நடந்து சென்று ஒரு பஸ்பிடித்து நான் என் இடத்திற்கும், அவர் திருக்கடையூரிலுள்ள அவர் இடத்திற்கும் செல்வார்.
28ஆம் தேதி அவர் என் கூட வரவில்லை.  எனக்கு மட்டும் டிக்கட் அவர் பதிவு செய்திருந்தார்.  நான் வழக்கம்போல இரவு 9.45க்குக் கிளம்பி மாம்பலம் ரயில்வே நிலையம் சென்று எக்மோர் டிக்கட் வாங்கி மெதுவாக வந்து சேரும் மின்சார வண்டியில் தொற்றிக்கொண்டு எக்மோர் சென்றேன். 
நாகூர் வண்டியைத் தவிர எல்லா வண்டிகளும் போய் விட்டன.  மெதுவாது s4 கோச்சில் 6 எண்ணைப் பார்த்தேன்.  என் பெயர் இல்லை.  திகைத்தேன்.  எப்படி இந்தத் தவறு நடந்தது? யோசித்தேன்.  பின் டிக்கட்டை ஆராய்ந்தேன்.  தேதி சரியாகப் போட்டிருந்தது.  ஆனால் நாகூர் வண்டிக்குப் பதில் மதுரை எக்ஸ்பிரஸ் என்று போட்டிருந்தது.  அந்த வண்டி 10.45க்குக் கிளம்பிப் போய்விட்டது.  என்னடா இது இப்படி ஒரு தவறு நடந்துவிட்டது என்ற பதறினேன். கடைசிவரை என் உறவினர், ரயில் மாறி டிக்கட் பதிவு செய்ததைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.  பின் ரயில்வே டிடிஆரைப் பார்த்து அந்த டிக்கட்டை வைத்துக்கொண்டு போக முடியுமா என்று கேட்டேன்.  அந்த டிக்கட் இனிமேல் செல்லாது என்றார்.  திரும்பவும் ஒரு டிக்கட் வாங்கிக்கொண்டு வர ஓடினேன்.  அலுவலக சாவிகளை வைத்திருப்பதால் நான் போகத்தான் வேண்டும்.  ரிசர்வ் செய்யாத டிக்கட்டை 75 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு, ஓட்டமாய் ஓடி s1ல் ஏறினேன்.  டிடிஆர் இரக்கமே இல்லாமல், ‘நீங்கள் unreserve coachல் ஏறிப்போங்கள்,’ என்றான். 
வேறு வழியில்லை அங்கு ஏறினேன்.  ஏகப்பட்ட கூட்டம்.  லட்ரின் பக்கத்தில் உள்ள இருக்கையின் கீழ்தான் அமர வேண்டியிருந்தது.  நாற்றம் குடலைப் புடுங்கியது.  காலை மடக்கி உட்கார்ந்தேன்.  ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை.  பின் நீட்டி உட்கார்ந்தேன். அப்படியும் முடியவில்லை.  உண்மையில் அந்த நேரத்தில் பஸ்பிடித்துப் போக முடியாது.  மேலும் வேளாங்கண்ணி கூட்டம் வேறு.  ஒரு வழியாக இப்படியே போனால் சரி என்று நினைத்துக்கொண்டேன். பொதுவாக எனக்கு ரயிலில் தூக்கம் வராது.  இன்னும் தூக்கம் வரப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன்.  மேல் மருவத்தூரில் வண்டி நின்றது. சிகப்பு ஆடை அணிந்த பெண்கள் கூட்டம் புடை சூழ, நான் உட்கார்ந்த இடத்தில் என் மீதே ஏறி மித்ததார்கள்.  ஒரே சத்தம். அதன்பின் நான் எழுந்து நிற்க ஆரம்பித்தேன்.  காலை இங்கேயும் அங்கேயும் நகர்த்தக் கூட முடியவில்லை.  இரவி 1.30 மணியிலிருந்து காலை 5 மணிவரை நின்று கொண்டே காலை நகர்த்தமுடியாமல் நகர வேதனையில் வந்தேன். 

வீடு வந்து சேர்ந்தபோது, பொத்தென்று படுக்கையில் படுத்துக்கொண்டேன்.  2 மணிநேரம் தூங்கியிருப்பேன்.  ஆனாலும் கால் வலி தாங்க முடியவில்லை.  அலுவலகச் சாவி மட்டுமில்லாமலிருந்தால், வந்திருக்கவே மாட்டேன்.  கால் வலி அலுவலகச் சாவியால் மாட்டிக்கொண்டதாக தோன்றியது.  அலுவலகம் சென்று சாவியைக் கொடுத்துவிட்டு, திரும்பவும் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்துக்கொள்ள நினைத்தேன்.  என்னைப் பார்த்தவுடன் என்னை விடவில்லை மேலாளர்.  வலி இருந்தாலும் பரவாயில்லை.  சும்மா உட்கார்ந்துவிட்டுச் செல்லுங்கள் என்றார்.  வேறு வழியில்லாமல் தலைவிதியை நொந்துகொண்டு அமர்ந்தேன்.  மாலை சீக்கிரமாகக் கிளம்பி 7.30 மணிக்கு வீடு போய்ச் சேர்ந்து, படுத்தவன்தான் அடுத்த நாள் காலையில்தான் எழுந்து கொண்டேன்.  
அன்றுதான் முதன்முதலாக நிற்பவர்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.  மயூரா விலாஸில் நின்றுகொண்டே எல்லோருக்கும் காப்பிப் போட்டுக்கொடுக்கும் முதியவரைப் பற்றி நினைத்துக்கொண்டேன்.  பின் பார்சல் பண்ணி தரும் ஒருவரைப் பற்றியும் நினைத்தேன்.  என் அலுவலகத்தில் நின்றுகொண்டே இங்கேயும் அங்கேயும் சென்று வவுச்சர்களை எடுத்துத் தருபவர்களைப் பார்த்து, ”தினமும் நிற்கிறியே, உனக்குக் கால் வலிக்காதா?’ என்று கேட்டேன்.  ‘வலிக்கும்.. ஆனால் காலையில் சரியாகிவிடும்,’ என்றான் அவன். 
நின்றுகொண்டே இருப்பவர்களைப் பார்த்து நான் தலை வணங்குகிறேன்.  நான் அமெரிக்கா போய்வந்தது கூட பெரிய விஷயமாகத் தோன்றவில்லை.  ஆனால் ரிசர்வ் செய்யாதப் பெட்டியில் பயணம் செய்வது கொடுமையான விஷயமாக எனக்குத் தோன்றியது.

வானத்தில் இரண்டு நிலாக்கள்

கணினித் திரையில்
அடோப் ஃபோட்டோ
ஷாப்பில் ஒரு
அழகான நிலாவை
வரைந்தேன்.

வானத்து நிலா

எனக்கு மாடலாக
இருக்க இன்னும்
வண்ணமயமாக்கினேன்
கணினித் திரையில்..
அந்த லேயரை
நகலெடுத்து
இன்னொரு நிலாவாக
ஒட்டினேன்.
அந்த நிலாவில்
மௌஸை வைத்து
தேர்வு செய்து அதனை
அப்படியே டிராக்
அன்ட் டிராப்பில் இழுத்து
வானத் திரையில்
விட்டேன்.
பூமியில் நன்றாய்
தெரிய தேவைக்கேற்ப
என்லார்ஜ் செய்தேன்.
அடுத்த நாள்
எல்லா செய்தித்
தாள்களிலும்
வானத்தில் இரண்டு
நிலாக்களென்பதே
தலைப்பு செய்தியாக
இருந்தது.
தேநீர் கடைகளில்
தேநீரை விட
சூடாக இருந்தன
நிலாச் செய்தி.
பரபரப்பான ஊழல்
விசாரணைகளும்
பாராளுமன்ற
சலசலப்புகளும்
மக்களுக்கு மறந்தே
போயிற்று.
அலுவலகங்களில்
அன்றாட அலுவல்களை
நிலா கிரகணமாய
மறைத்தது.
நாசா விஞ்ஞானிகளும்
இந்திய விஞ்ஞானிகளும்
விதவிதமாய் விளக்கம்
தெரிவித்தார்கள்.
நான் வரைந்து
வானத்தில் ஒட்டியதை
யார்தான் நம்பப்

போகிறார்கள். 

தரிசனம்

பரிச்சயமற்ற நகரின்
பிரதான பெண்தெய்வத்தின் 
தரிசனம் வேண்டுமென்றாள்
வயோதிகத்தால் நிதானமானவள் 
என் கைப்பிடித்து நடந்தாள்
ஒரு முக்கிய நாற்சந்தியின்
ஏதோ ஒரு திருப்பத்தில்
திரண்டிருந்த மக்களுடன்
கடவுளை நெருங்குகையில் 
வழி மாறியதை
உணர்ந்து கொண்டாள்
வேற்று மார்க்கத்தின்
பிரத்தியேக இறைவனை
குளிரூட்டும் பசுமையை
வேறு மனிதர்களை
சிறுமியின் ஆர்வத்துடன்
பார்த்தாள்.
தவறுக்கு வருந்தி
அவள் தெய்வத்திடம்
கூட்டிச் செல்ல விழைந்தேன்
பணிவாக மறுதலித்த
அவள் கண்களில்
மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்
ஆனந்தமும் அமைதியும் கண்டேன்
பேருந்தில் திரும்புகையில்
கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த
கட்டிடங்களின் உச்சி விளக்குகள்
அணைந்து எரிந்து அளவளாவுவது
புரியத் தொடங்கியது அன்றுதான்

எதையாவது சொல்லட்டுமா……….55

கடந்த ஒரு மாதமாக நாங்கள் சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் சுற்றிக்கொண்டிருப்போம்.  நயக்கரா பயணத்தின்போதுதான் அரவிந்த் 4 நாட்கள் எங்களை அழைத்துச் சென்றான்.  ப்ளோரிடா வந்திறங்கியபோது களைப்பு அசாதாரணமாகவே இருந்தது.  மலைப்பாகவும் இருந்தது.  நடக்கும்போது நான் பின் தங்கி நடப்பேன்.  அரவிந்தனுக்கு அதுவே படபடப்பாக இருக்கும்.  ”அப்பா, இவ்வளவு மெதுவாக நடப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை,” என்பான் என் மனைவியிடம்.  திருமணமானபோதில் நான் மனைவியை விட வேகமாக நடப்பேன்.  கிண்டல் செய்வேன்.  ஆனால் இப்போதோ வேறு மாதிரி ஆகிவிட்டது.  பெரும்பாலும் இங்கே கார் எடுத்துக்கொண்டுதான் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.  ஒரு பால், ஒரு தயிர் வாஙகக் கூட கார்தான்.  அமெரிக்காவில் சினிமா தியேட்டர்கள் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆசை.  2 சினிமாக்களைப் பார்த்தேன். இரவு 10 மணிக்குமேல்தான் சினிமாவே போக முடிந்தது. சினிமார்க் என்ற இடம்.  அந்த ஒரு இடத்திலேயே 24 தியேட்டர்களில் சினிமாக்கள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒரு டிக்கட்டை வாங்கிக்கொண்டு எந்த சினிமாவையும் பார்க்கலாம்.  புதிதாக வந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்த்தேன். நம்ம ஊர் விட்டலாச்சாரியரே தேவலை என்று தோன்றியது.  அதிக செலவு இல்லாமல் மாயஜால வித்தை காட்டுபவர்.  தியேட்டரில் விளம்பரங்கள் ஓடிக் கொண்டிருந்தன.  ஆனால் தியேட்டரில் யாருமில்லை.  நாங்கள்தான் உள்ளே நுழைந்தோம்.  பின் மெதுவாக பத்து பேர்கள் வரை வந்தார்கள். 
இங்கு வங்கிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பார்க்க Bank of America வின் கிளைக்குச் சென்றேன்.  கூட்டமே இல்லை.  இதே சீர்காழியில் கூட்டம் அப்பிக்கும்.  பணிபுரியும் ஒருவர் வரும் வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்கிறார்.  பின் அவர் தேவையைப் புரிந்துகொண்டு உடனடியாக செய்து முடிக்கிறார்.  மொத்தமே வங்கியில் 4 அல்லது 5 பேர்கள்தான் இருக்கிறார்கள். குச்சி முட்டாயை பல இடங்களில் வைத்திருக்கிறார்கள்.  வாடிக்கையாளர் விருப்பப்பட்டால் எடுத்துச் சாப்பிடலாம்.  சேஸ் வங்கிக்கிளையில் ஒரு மூலையில் காப்பி எடுத்துச் சாப்பிட கருவியெல்லாம் வைத்திருப்பார்கள். 
பொதுவாக இங்கே யாரையும் இன்முகத்துடன் வரவேற்பார்கள்.  புதியவர்களைப் பார்த்தால் குட் மார்னிங் என்று சொல்ல தவற மாட்டார்கள்.  அதேபோல் கார்கள்.  வேகமாக வரும் கார்கள் பாதசாரிகளைப் பார்த்தவுடன் நின்று விடுவார்கள்.  பாதசாரிகள் கடந்து சென்றபின்தான் நகர்வார்கள்.  இங்கு டால்பின் ஷோ பிரபலமானது.  அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.  நியுயார்க்கில் வாடகைக் கார்கள் அதிகம்.  அதை ஓட்டிக்கொண்டு செல்பவர்கள் பெரும்பாலும் நம்ம நாட்டு பஞ்சாபிகாரர்கள்.  சீனர்கள் வாழுமிடம் என்று தனியாகவே ஒரு இடம் இருக்கிறது.
ப்ளோரிடாவில் ஒரு இடத்தில் சிவா விஷ்ணு கோவில் இருந்தது.  அதில் பெரும்பாலோர்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். பரந்த பரப்பளவில் கட்டிய கோவில். பெரும்பாலும் தென்னிந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் வருவார்கள். 
அமெரிக்காவில் தபால் நிலையம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க ஆவல்.  ஒரு தனி கட்டிடத்தில் தபால் நிலையம் பிரமாதமாக இருந்தது.  தபால் நிலையத்திற்கு வந்துவிட்டால் போதும், தபாலை அனுப்ப எல்லா வசதிகளும் இருக்கின்றன.  முக்கியமாக அனுப்புவதற்கு தோதாக விதம் விதமான அஞ்சல் உறைகள். நாம் இந்தியாவிலிருந்தால் கடைக்கு ஓடுவோம் உறைகளை வாங்க.  அட்டைப் பெட்டியில் அனுப்புவதாக இருந்தாலும் அட்டைப் பெட்டி இருந்தது. 
நாங்கள் சென்னை கிளம்புவதற்குமுன் மியாமி கடற்கரைக்குச் சென்றோம்.  இங்கே மாலை வேளைகளில் மழைப் பெய்து கொண்டிருந்ததால், காலையில் சென்றோம்.  சூரிய உதயம் பார்க்க நினைத்தோம்.  மேகம் புண்ணியத்தைக் கட்டிக்கொண்டது.  அந்த கடற்கரை மண்ணை கொஞ்சம் கட்டி எடுத்துக்கொண்டு வந்தேன்.  எங்கள் அலுவலக நண்பர் சொன்னதால் எடுத்துக்கொண்டு வந்தேன்.  பின் பல இடங்களுக்குச் சென்ற நான் மண்ணை எடுத்துக்கொண்டு வராமல் போய்விட்டேன்.  மியாமியில் ஒரு தெருவின் பெயர் ஐ பி சிங்கர் பெயர் இருந்தது.  எனக்குப் பிடித்த எழுத்தாளர் இவர். ப்ளோரிடாவில் உள்ள மியாமியில்தான் அவர் வாழ்ந்திருக்கிறார் என்று நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. 
13ஆம்தேதி சென்னையை நோக்கி நாங்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸில் ஏறியபோது, பையனை விட்டு வர மனமே இல்லை.
நான் இதுவரை எழுதியதை பயணக் கட்டுரையாக எடுத்துக்கொள்ள வேண்டாமென்று தோன்றுகிறது.  அல்லது பயணக் கட்டுரை மாதிரி தோற்றம் தருகிற ஒன்றாக வேண்டுமானால் நினைத்துக்கொள்ளலாம்.  அமெரிக்கா போய்விட்டு வந்ததைப் பற்றி 2 விதமான கருத்துக்களை என்னால் கொண்டு வர முடியும்.  நான் விமானத்தில் ஏறி பயணம் செய்தபோது, அதன் தூரம் பெரிய பிரமிப்பையும், இவ்வளவு தூரம் கடந்து விட்டோ மா என்கிற பயமும் ஏற்பட்டது.  திரும்பவும் யோசிக்கும்போது, அப்படி போய் வருவது பெரிய விஷயமல்ல என்றும் தோன்றியது. 
நான் சென்னைக்கு வந்தபிறகும் அமெரிக்காவின் பிரமிப்பு சற்றும் குறையாமல்தான் இருக்கிறது.  

நாளை.

 
 
நாளைக்கு ஒரு நாடகம்
நடிக்க வேண்டியிருக்கிறது
நாடக ஸ்க்ரிப்ட் கைக்கு வரவில்லை
நாள்முழுவதும் ஒத்திகை செய்ய வழியில்லை
கதாபாத்திரம் அதே தான் என்றாலும்
இன்றுபோட்டது நாளைக்கு இறந்ததாகிவிடும்
புத்தம்புது நாடகம்தான் நித்தம்!
க்ரீன் ரூமைவிட்டு வெளியே வந்து
விளக்குபோட்டதும்
வெளிச்சத்தில்தான்
வசனம்பேசவேண்டும்
இன்றையநாடகத்திற்கான ஒத்திகையை
நேற்றைக்குப்பார்க்கவில்லை
இன்றுதான் நேற்றின் நாளையாகி இருந்ததே.
கைநழுவும் பாதர்சமில்லைதான் நாளை
ஆனாலும் கைபிடிக்க இயலா காற்று
நாளை பிறந்ததும்  மேடை ஏறியதும்
தானாய் வருகின்றன வசனங்கள்
நாளையின் தலை எழுத்ததினை
அசலைப்பத்திரப்படுத்திக்கொண்டு
நகலையாவது இறைநாயகன்
நம்கைக்கு அனுப்பி வைத்தால்
சரிபார்த்து நடிக்கலாம்
அதற்கு வழி இல்லாததால்
நாளை கதி என்ன என்று தெரியாமலே
மேடை ஏறி நடிக்கத் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறோம்!

கல்லில் உள்ள மீன்

 
 
கல்லில் உள்ள மீன்
கடலுக்குத் திரும்ப
விழைகிறது
ஆய்வு, சிறிய
ஊகிக்க முடிகிற உண்மைகள் குறித்து
அது அலுப்புற்றிருக்கிறது
வெண்ணொளியால் அழுத்தம் பெற்ற
பக்கவாட்டுத் தோற்றத்தோடு
பகிரங்கமாகக் காத்திருப்பது குறித்து
அது அலுப்புற்றிருக்கிறது.

கடலில் மௌனம்
மீண்டும் மீண்டும் அலைகிறது
அவ்வளவு – தேவையற்றதுமே!

தன் எலும்புக் கூட்டு மலர்ச்சியை
பதிக்கும் கணம் வரும் வரை
அது மிதக்கிறது –
பொறுமையாக.

கல்லில் உள்ள மீனிற்குத் தெரியும்
வீழ்வது என்பது
வாழ்பவருக்குச் செய்யும்
உபகாரமென.

அதற்குத் தெரியும் – ஏன் ஒரு எறும்பு
ஒரு கடத்தல்காரனின்  எரியூட்டு போல
பகட்டாகவும், துல்லியமான அம்பரிலும்
தன்னுடயதைக் கட்டமைத்துக் கொள்கிறதென.

அதற்குத் தெரியும் – ஏன் ஒரு விஞ்ஞானி
பெரணியின் இச்சையூட்டும் ப்ரைலியை
இரகசிய உவப்பில்
வருடுகிறார் என.

குறிப்பு: புதைபடிவம் (fossil) குறித்த இந்த  ஆங்கிலக்கவிதையின் தலைப்பு The Fish in the Stone.  எழுதியவர், ஆப்ரிக்க-அமெரிக்க எழுத்தாளரான Rita Dove.
                              – மிருணா.

நிலவும் குட்டி முதலைகளும்

 

சலனமற்ற இரவில்
சல்லாபமாய்
மிதந்து கொண்டிருந்தது
பிறைநிலா
அந்தப் பெரிய குளத்தில்…
குத்து வாள் போலிருந்த

அதன் கூர்பகுதிகளிரண்டிலும்
குட்டி முதலைகள் தனது

முதுகைச் சொறிந்து
கொண்டன.