ஜப்பான் பேனா நண்பி

முன்னர் அவள் அனுப்பியவை
நீண்ட கடிதங்களுடன்
காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும்

புகைப்படங்களில்
பனி நிறைந்த சோலைகளில்
ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள்
அனைத்து மடல்களிலும்
ஆங்கில வகுப்பினைக் குறித்தும்
குளிர்தினங்களில்
நீச்சலை விரும்பாத குளத்தின்
தங்க மீன்களைப் பற்றியுமே
எழுதியிருந்தாள்

காலம் செல்லச் செல்ல தற்பொழுது
என்றாவது வருகிறது கடிதம்
அதே இடம்தான் இது
பெரிய கட்டிடத்தின் அடியில்
வீட்டுக் குருவிப் பார்வையோடு
அவளிருக்கும் இப் புகைப்படம்
இப்பொழுதுதான் வந்தது எனக்கு
‘நித்திரையேயில்லை இரவில்
புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை
என்ன செய்ய வேண்டும்?’
புகைப்படத்தின் பின்னால்
அவளது உடைந்த கையெழுத்து

மூலம் – இஸுரு சாமர சோமவீர

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்



ஐயன்மீர்!
தொடக்கத்தில்
திரையில் காட்டப்பட்ட  
பாதுகாப்பு அட்டைகள் பற்றி
எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.
அடுத்து முன்வைக்கப்பட்ட  
வரவு செலவு கணக்கு பற்றியோ
எதிர்கால திட்டங்கள் குறித்தோ
நாங்கள் சொல்ல விரும்புவதும்
ஏதுமில்லை.
விடைபெறுவதற்கு முன்
விருந்தோம்பல் சகிதம்
திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே
எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.
எங்களைப் போலவே உங்களின்
வாகனங்களின் வருகைக்கும்
காத்திருக்கும்
எதிர்பார்ப்பின் கண்களுக்கு
என்னவிதமான உத்திரவாதத்தை
தரப் போகிறோம்

நாம்.

பறத்தலின் மீதான புரிதல்

உனக்கான இடம் இதுவல்ல
உள்ளுணர்வு சொல்லிய போது
உணர்கிறான் தோளோடு இருந்த
வலுவான இறக்கைகளை
அடைய வேண்டிய உயரமும்
போக வேண்டிய பாதையும்
வரைபடமாக விரிந்த போதும்
இறகுகளை நீவி அழகு 
பார்த்தபடி நிற்கிறான் 
எவருக்கும் தனை நிரூபிக்கும்
விருப்பங்கள் அற்றவனாய்
பறக்க அஞ்சுவதாக எழுந்த
பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான்
வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக
மேகங்களின் வேகமும்
மாறும் அதன் வடிவங்களும்
பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்
வானம் தாண்டிக் கோடானு கோடிக்
கோள்களைப் பார்க்க இயலும்
பிரபஞ்சத்தின் உச்சியை 
அடைகின்ற பொழுதில்..
விரிக்கக் கூடும் தன் சிறகுகளை
அளவற்ற ஆனந்தத்தில்.
***

உதிர்வு

நெடிதாய் பேசி களிக்க
ஆவலில் சோளமாய் பொறிந்திடுவேன்
பக்கத்து வீட்டக்கா வந்திருக்காங்க
அப்புறமென அணைச்சிச் செல்லவும்…
உன் மலர்ச்சியை
இந்நாள்வரை கண்டிலேன் எப்பூவிலுமெனும்
எஸ் எம் எஸ்களை ஒருவழிப்பாதையில் கிடத்திடவும்…
ஒரு இலையை உலர்த்தி
உதிரச்செய்யும் செடியாகவும்
மாற்றங்கொள்வதேன் மதுவாகினி.

நகுலனைப் பற்றி சில நினைவுக் குறிப்புகள்

    முதன்முதலாக நகுலனைப் பற்றி எப்போது நான் தெரிந்துகொண்டேன்.  ஒருமுறை வைத்தியநாதனுடன் (தீவிர வாசகர், ழ, விருட்சம் இதழ்களில் கவிதைகள் அதிகம் எழுதியவர்)
நான், ஆத்மாநாம், மூவரும் ஆனந்த் வீட்டிற்குச் சென்றோம்.  எனக்கு வைத்தியநாதனைத் தெரியும்.  அவருடைய கவிதைகள் சில ‘ழ ‘வில் அப்போது வெளிவந்து கொண்டிருந்தன.  நான் அப்போது வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். கதை, கவிதைகள் எழுதத் தெரிந்தவன்.  ஆனால் தமிழில் தீவரத்தன்மை கொண்ட படைப்புகளை ஆர்வமாய் தேடிப் போய் வாசிப்பவன்.  என்னை தீவிர எழுத்துக்கு அறிமுகப்படுத்தும் நோக்கமாகத்தான் வைத்தியநாதன் என்னை ஆனந்த் வீட்டிற்கு அழைத்து வந்தார்.  கூடவே எங்களுடன் வந்துகொண்டிருந்த ஆத்மாநாமிடம் என்னை அறிமுகப் படுத்தினார்.
    ஆனந்த் வீட்டிற்கு வந்தவுடன், வைத்தியநாதன் சொல்லியபடி, ஆனந்த் நாலைந்து ‘ழ’ வெளியீடு புத்தகங்களைக் கொடுத்தார்.  நான் மகிழ்ச்சியுடன் அவற்றை விலைக் கொடுத்து வாங்கினேன்.  ‘ழ’ புத்தகங்கள் எல்லாம் விலை குறைவாக இருந்ததோடல்லாமல் நல்ல தரத்துடன் தயாரிக்கப்பட்டிருந்தன.  உயர்ந்த தாளில் அச்சிடப்பட்டிருந்தன.  அதில் ஒரு புத்தகம், ‘கோட் ஸ்டான்ட் கவிதைகள்’.  அதை எழுதியவர் ‘நகுலன்’.  அப் புத்தகம் தயாரிப்பு முறையும், அதை அச்சிடப் பயன்படுத்திய தாளையும் கண்டு நான் வியந்து போனேன்.   ‘காகிதத்தில் ஒரு கோடு’ என்ற ஆத்மாநாம் புத்தகத்தில் அவருடைய கையெழுத்தையும் வாங்கி வைத்துக்கொண்டேன்.
   
நகுலன் இந்தப் புத்தகம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமாகிறார்.  அவருடைய கவிதைகள் படிப்பதற்கு எளிமையாக இருப்பதோடல்லாமல் ஆழமான உணர்வு அலைகளை எழுப்பாமல் இருக்காது.
                இருப்பதற்கென்றுதான்
                வருகிறோம்
                இல்லாமல்
                போகிறோம்
    என்ற வரிகளெல்லாம், மனதில் வேறு வேறு எண்ண அலைகளை எழுப்பாமல் இருப்பதில்லை.
   
நான் நகுலன் பெயர்கொண்ட புத்தகங்களையெல்லாம் வாங்கத் தொடங்கினேன்.  ‘க்ரியா’ என்ற புத்தக வெளியீடு அறிமுகமானபோது, நகுலனின் ‘நினைவுப் பாதை’ என்ற நாவலை வாங்கினேன்.
   
பொதுவாக நகுலனின் எழுத்துகள் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு எழுதிகிற எழுத்துகள்.  என்னால் முழுதாகவும் அவற்றைப் படிக்க முடிந்ததுமில்லை.  ஏனெனில் மனதை அதிகமாக ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டவை அவருடைய படைப்புகள்.
அவருடைய படைப்புகள் மூலமாக அவரை நான் அறிந்துகொண்டாலும், விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோதுதான் நேரிடையாக எனக்கு அவருடைய தொடர்பு ஏற்பட்டது.  அவர் படைப்புகளை அனுப்பும்போது, மறக்காமல் ஸ்டாம்பு, கவரெல்லாம் வைத்து அனுப்புவார்.  ஒரு குறிப்பும் எழுதி அனுப்புவார்.  ‘படைப்புகள் உங்களுக்குத் திருப்தியாக இல்லையென்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்,’ என்று.  நான் அவர் எழுதிய படைப்புகளை திருப்பியே அனுப்ப மாட்டேன்.
 
    ஒவ்வொரு விருட்சம் இதழையும் அவருக்கு அனுப்புவதில் அதிக ஆர்வம் காட்டுவேன்.  உடனுக்குடன் அவர் இதழ் குறித்து கருத்துக்களை ஒரு கார்டில் எழுதி அனுப்பி விடுவார்.  கார்டில் அவர் எழுத்தைப் படிப்பது என்பது பெரிய விஷயமாக இருக்கும்.  சிலசமயம் அவருடைய கையெழுத்து புரியும்படி நிதானமாக இருக்கும்.  சிலசமயம் புரியாமல் கிறுக்கப்பட்டிருக்கும். 
   
ஒரு சமயம் கார்டில் எனக்கு ஒரு கவிதை எழுதி அனுப்பினார் :
                நில்
                போ
                வா
                வா
                போ
                நில்
                போ
                வா
                நில்
                நில் போ வா?
    என்பதுதான் அக் கவிதை.  விருட்சம் இதழில் இந்த குறள் வழி கவிதையைப் பிரசுரம் செய்தேன்.  இது தரமான கவிதையா, பிரசுரம் செய்யப்பட வேண்டிய கவிதையா என்று கேட்டால், நான் பதில் சொல்ல மாட்டேன்.  நகுலன் எழுதியிருக்கிறார்.  அவர் எழுத்துக்களைப் பிரசுரம் செய்ய வேண்டியது, நான் மதிக்கும் எழுத்தாளருக்கு நான் கொடுக்கும் மரியாதை. இன்னும் சில படைப்பளாகளிடமும் நான் இதுமாதிரி நடந்து கொள்வேன்.
   இக் கவிதை பிரசுரம் ஆனவுடன், இரு இடங்களிலிருந்து எதிர்ப்பு வந்தன.  ஒன்று காஞ்சிபுரம் இலக்கிய நண்பர் வே நாராயணன் (காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கியக் கூட்டங்களை நடத்தியவர்.  அபாரமான ஞாபகச் சக்தி கொண்டவர்.  கூட்டம் முழுவதும் யார் பேசினாலும் அதை மனதில் வாங்கிக் கொண்டு திருப்பிச் சொல்லும் தன்மை கொண்டவர்).  எப்படி இக் கவிதையை விருட்சத்தில் புரசுரம் செய்தீர்கள்?  அக் கவிதைக்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? என்று கேட்டு எழுதியிருந்தார்.  நான் அக் கடிதத்தை நகுலனுக்கு அனுப்பியிருந்தேன்.  அவர் இரண்டு பக்கங்களுக்கு விளக்கம் கொடுத்து பதில் அனுப்பினார்.  அதையும் விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.
    
எதிர்த்தவர்களில் இன்னொருவர் பிரமிள்.  நகுலனின் இந்தக் கவிதையை ஏன் பிரசுரம் செய்தீர்கள்?  இது கவிதையா என்ற கேட்டார்.  ‘விருட்சம்’ இதழில் அரைப்பக்கம்தான் இக் கவிதை வந்திருக்கிறது.  வந்தால் என்ன?’ என்றேன்.
    ‘ஒரு சிறு பத்திரிகையின் அரைப் பக்கத்தில் பிரசுரம் விஷயம்கூட முக்கியம் உமக்கு இதெல்லாம் தெரியாதா?’ என்றார் பிரமிள்.  பிரமிள் இதைச் சாதாரணமாகப் பேசிவிட்டு விட்டுவிடுவார் என்று நினைத்தேன்.  ஆனால் அபத்தக் கவிதைகள் என்ற பெயரில் அவர் ஏராளமான கவிதைகள் எழுதியிருந்தார்.  அதில், ‘எந்துண்டி வஸ்தி?’ என்ற கவிதையில்,
           
                ‘நில் போ வா’
                என்பதை எழுதிக் கீழே
                கையெழுத்து வைத்து
                அனுப்பினார் சகா
                தேவனின் சகோ
                தர நாமி
                இதைக் கவிதை என்று
                போட்டுவிட்டது தன்
                இலையிலே ‘மரம்’
                ‘இதையே
                எழுதியது யாரோ
                ஏழுமலை ஆறுமுகம்
                என்றால் ‘மர’ இலையில்
                வருமா இது?’ என்றேன்.
                பதில் இல்லை இன்னும்.
    இப்படி ஒரு கவிதை பிரமிள் எழுதியிருக்கிறார் என்பது அது புத்தகமாக வரும்போதுதான் தெரியும்.நகுலன் ஒவ்வொரு முறையும் சென்னை அசோக்நகரில் உள்ள அவருடைய இளைய சகோதரர் வீட்டிற்கு வருவார்.  அப்படி வரும்போது மேற்கு மாம்பலத்தில் உள்ள என் வீட்டிற்குத் தகவல் தராமல் இருக்க மாட்டார்.  அவர் சென்னையில் இருக்கும்போதெல்லாம் அவரை அடிக்கடி சந்திப்பது என் வழக்கம்.  ஏன் தினமும்?
    
சிலசமயம் அவர் ஊரிலிருந்து வந்தபிறகு, அவர் சகோதரருடன் என் வீட்டிற்கு வருவார்.  அவரால் தனியாக வர முடியாது.  கூடவே அவருடைய சகோதரரை அழைத்துக்கொண்டு வருவார்.  யாராவது அவருக்குத் துணை வேண்டும்.  அவர் வரும் சமயத்தில் நான் தட்டுப்படவில்லையென்றால், என் தந்தையாருடன் பேசிக்கொண்டு இருப்பார்.  ஹோமியோபதி மருந்துகளைப் பற்றி என் தந்தை சொல்வதை புதிதாகக் கேட்பதுபோல ஒருவித மரியாதையுடன் நகுலன் கேட்பார். 
   
அவர் சகோதரர் என் வீட்டில் விட்டுவிட்டுப் போய்விடுவார்.  நான் நகுலனைப் பார்த்துவிட்டால் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பேன்.  என்னைப் பார்த்து, “நீங்கள் இவ்வளவு தூரம் எல்லாருக்கும் உதவியாக இருக்கிறீர்கள்.  ஆனால் உங்களைப் பற்றி யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது சரியில்லை,” என்பார்.  ‘யாருடனும் இல்லை’ என்ற என் கவிதைத் தொகுதியைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை என்னால் மறக்க முடியாது. 
    
பொதுவாக நகுலன் வரும்போது, நான் புதிதாக எழுதிய கவிதைகளைக் காட்டுவேன்.  அவர் சிரத்தையுடன் படித்துவிட்டு, அதில் உள்ள பிரச்சினைகளைக் குறிப்பிடுவார். சில கவிதைகளைப் படித்துவிட்டு, வரிகளை மாற்றினால் நன்றாக இருக்குமென்று குறிப்பிடுவார். சில கவிதைகள் நன்றாக வந்திருப்பதாகவும் குறிப்பிடுவார்.  வேறு விஷயங்களையும் நாங்கள் பேசுவோம்.  ஒருமுறை நான் அலுவலகத்திற்குச் செல்வதற்காக மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று கொண்டிருந்தேன்.  அப்போது ஐராவதத்தைப் பார்த்தேன்.  நகுலன் வந்திருப்பதைக் குறிப்பிட்டேன்.  பின் இருவரும் அலுவலகம் போகாமல் நகுலனைப் பார்க்கச் சென்று விட்டோம்.  நகுலனுடன் பேசும்போது ஒருவருடன் ஒருவர் பேசுவதுபோல்தான் இருக்கும். ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவர்.  
 அவருக்கு ஆல்பர்ட் மூலம் பரிசு கிடைத்தது.  அக் கூட்டத்திற்கு வந்த நகுலன், ரொம்ப கூச்சத்தோடு மேடையில் அமர்ந்திருந்தார்.  கூட்டத்துடன் நின்று பரிசு வாங்க எழுந்துகூட வர வெட்கப்பட்டார்.  ஆனால் மேடையில் தோன்றுவதையே பிரதானமாக விளம்பரப் பிரியராக ஒரு வங்கியின் தலைவர் இருந்தார்.   அவர்தான் அக்கூட்டத்தை நடத்த நன்கொடை கொடுத்திருக்கிறார்.  அவர் நகுலன் பக்கத்தில் அமர்ந்தும் அவருக்கு நகுலன் யார் என்பது தெரியாது.  இருவரும் ஒருவரைஒருவர் பேசாமல் அமர்ந்து கொண்டிருந்தார்கள்.
  
  நகுலனை அவர் சகோதரர் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போவேன்.  நடந்துதான் போவோம்.  அவர் சகோதரர் வீட்டிற்குப் போவதற்குள், பல முறை ‘இந்த வழியாகத்தானே உங்கள் வீட்டிலிருந்து வந்தோம்,’ என்று கேட்காமல் இருக்க மாட்டார்.  
‘ஆமாம்,’ என்று பலமுறை நான் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.  அவர் தனியாக எங்கும் போகமாட்டார்.  ஒரு சமயம் நகுலனின் திருவனந்தபுர நண்பர் காசியபன் மையிலாப்பூரில் இருந்தார்.  ‘அவரைப் போய்ப் பார்க்கலாமா? ‘என்று கேட்டேன்.  காசியபனும் அவர் வந்ததை அறிந்து பார்க்க ஆசைப் பட்டார். 
    ”என் வண்டி பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள்,” என்றேன்.  நகுலன் மறுத்து விட்டார்.  “பஸ்ஸில் போகலாம் வாருங்கள்,” என்றேன்.  அதற்கும் மறுத்துவிட்டார்.  “ஆட்டோவில் போகலாம்,”  என்றேன்.
  “அவ்வளவு பைசா செலவு செய்ய முடியாது.  வேண்டுமானால் காசியபன் என்னை வந்து சந்திக்கட்டும்,” என்று கூறி விட்டார்.  கடைசிவரை அவர் காசியபனை பார்க்கவே இல்லை.
    மிகக் குறைந்த பக்கங்களுடன் அவருடைய புத்தகமொன்றை கொண்டுவர நினைத்தேன்.  ‘இரு நீண்ட கவிதைகள்’ என்ற புத்தகம் அப்படித்தான் உருவானது.  நான் வங்கியில் இருந்தபடி பத்திரிகை நடத்துவதால், புத்தகம் போட எனக்குப் பணத் தட்டுப்பாடு இருக்கும்.  அதனால் நானும், நகுலனும் சேர்ந்து அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்தோம்.  பாதி நானும், பாதி நகுலனும் செலவு செய்தோம்.  பொருத்தமே இல்லாமல் புத்தகத்தில் நகுலன் வரைந்த ஓவியமும் இருக்கும்.  புத்தகம் வந்தபிறகு வழக்கம்போல்  கவிதைப் புத்தகம் விற்கவில்லை.  பொதுவாக நம் தமிழ் தீவிர சூழ்நிலையில் கவிதைப் புத்தகத்திற்குக் கொடுக்கும் அலட்சியம்போல் வேறு எந்தப் பிரிவு நூலிற்கும் இருக்காது.  ஆனால் நகுலன் தான் போட்ட பணத்தை உடனடியாகக் கேட்க ஆரம்பித்து விட்டார்.  ஏனெனில் அவர் இதற்கு முன்னால் பலரிடம் புத்தகம் போட பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்.  நான் அவர் பணத்தை மாத மாதம் என் சம்பளத்திலிருந்து கொடுத்து சரி செய்தேன்..  இன்னும் கூட விற்காத புத்தகப் பிரதிகள் என்னிடம் இருக்கிறது.  விலை ரூ.12/-தான்.
    நகுலனை திருவனந்தபுரத்தில் ஒருமுறையாவது போய்ப் பார்க்க வேண்டுமென்று னைப்பேன்.  ‘நான் உங்கள் ஊருக்கு வந்து உங்களைப் பார்க்க வேண்டும்,’ என்று ஒருமுறை குறிப்பிட்டேன்.  உடனே, நகுலன், ‘நீங்கள் என் வீட்டிற்கு வந்து தங்க முடியாது,’ என்று குறிப்பிட்டார். அவருக்கு ஏனோ புரியவில்லை.  நான் அவரைப் பார்க்க வந்தாலும், அவர் வீட்டில் வந்து தங்க மாட்டேன் என்பது.  ஏனோ திருவனந்தபுரம் போய் அவரைப் பார்க்கவே இல்லை. 
    வழக்கமாக அவருக்குப் பத்திரிகை/புத்தகம் அனுப்பிக் கொண்டிருப்பேன்.  ஒருமுறை அவர் எனக்குக் கடிதமொன்று எழுதியிருந்தார்.
    16.12.1996-ல் அவர் எழுதிய கடிதத்தை இங்கு குறிப்பிட்டு முடிக்கிறேன்.
    நண்பருக்கு,
    வணக்கம்.  எனக்கு இம்மாதம் 12.12.96தான் பென்ஷன் கிடைத்தது.  எனவே மையம் சந்தாவை இன்றுதான் அனுப்ப முடிந்தது.
    நான் உடல் மனம் சோர்வுற்று மிகத் தளர்ந்த நிலையில் இருக்கிறேன்.  இனி எனக்கு  மையமோ வேறு பத்திரிகைகளோ புஸ்தகங்களோ அனுப்ப வேண்டாம்.  உங்கள் யாருடனும் இல்லை என்ற புத்தகத்தை அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு காலமான என் சகோதரியிடம் கொடுத்துவிட்டேன்.  அதுவும் என் கையில் இல்லை.
    இனியும் எழுதவேண்டாம் என்ற நிலையில் யாராவது வந்து எழுதுங்கள் என்று துன்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.  எனக்கு 75-ஆவது தொடங்கிவிட்டது.  வெகு விரைவில் காலமாகிவிட்டால் என்ற நிலை.  உடல்-மன உளைச்சல்கள் அவ்வாறு.
    உங்களுக்கு நான் சொன்னதால் நாய்களற்ற வீதிகள் என்ற கவிதைத் தொகுதி கிடைத்ததா?
    உங்கள் தகப்பனாருக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும்.
    என்னவோ இருந்து கொண்டிருக்கிறேன்.
                                        அன்புடன்
                                        ‘நகுலன்’
    மேலே குறிப்பிட்ட கடிதத்தை நகுலன் அனுப்பிய பிறகு, நான் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ அனுப்புவதை நிறுத்தி விட்டேன்.  பிறர் மூலமாகத்தான் எனக்கு நகுலனைப் பற்றி தெரியும்.  நீல பத்மநாபனுடன் பேசும்போது, நகுலனைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன்.
    
கடிதத்தில் குறிப்பிட்டபடி அவர் மரணத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தாரென்று நினைக்கிறேன்.

காதலுக்குப் பின் என் அடையாளம்

                                                   

உன்னைச் சிந்தித்து
ஒரு பறவையின் சிறகினில் அமர்ந்திருப்பேன்
அது
உன் ஊருக்குள் வந்திடுமென்றால்
அங்கு நான் குதித்திடுவேன்

ஊர் வாசி ஒருவனின் தலையில்
காகம் பீச்சுவது எப்படி?
அப்படி என் வருகை
இராணுவ வீரனின் ஆடையில் அலையும்
சிறுவர்களிடம்தான்
உன் முகவரியை கேட்டு எழுதியெடுப்பேன்

ஊருக்குள் பறந்து திரிந்ததில்
பசியெடுத்துவிட்டது
பறவைகள் உண்பதையெல்லாம்
என்னால் உண்ண முடியாதுபோயிற்று
அதோ
மொட்டைத் தலை பொருத்திய ஒருவன்
சூடான கஞ்சி விற்றுவருகிறான்
கண்டு ஒரு கிளாஸ் அருந்திட
பயமெனக்கு

யாரோ!
என்னையும் சுட்டுப் பொசுக்கிவிடுவாரோ
என்ற பயமெனக்கு

இதையெல்லாம் கதைக்க
உன் அருகில் உரசி அமர்ந்திட முடியவில்லை
பஸ்ஸில் பயணிப்பதுபோல்
நடுவில்
சிறுவனுமில்லை,சிறுமியுமில்லை,பிள்ளைக்காரியுமில்லை

ஊரில் கடும் மழையாம்
வானொலி சொல்கிறது
பெய்யட்டும்
என் கடிதங்களையெல்லாம் நீரில் விட
இலேசாக இருக்குமுனக்கு

ஒரு காலம்
சோடா மூடிகளை தட்டையாக்கி,நூலும் கட்டி
மின்சாரமில்லாத மின் விசிறி செய்தாயே
அதன் காற்றில்
உன் கேசத்திலொன்று ஆடியது
என் மார்பினில் வளர்ந்திருக்கும் உரோமங்களோடு போட்டியிட்டு

இதையெல்லாம்
உன்னில் உரசி உரசி கதைப்பதற்கு
அதிக நேரமெடுக்கும்
அதற்குள் நான் இந்த ஊரில் இருக்கமாட்டேன்

அவர்கள்
அடையாள அட்டை பரிசோதனை நடத்துகிறார்கள்
என்னிடம் கேட்டால்
என்ன சொல்ல
என் அடையாளம் நீதான்

ஒரு கவிதை –

கடுகளவும் சந்தேகமில்லை
இது ஒரு பைத்தியக்காரவுலகம்
இதில் பலவித பைத்தியங்கள் வாழ்கின்றன.
காசுப் பைத்தியம் கார் பைத்தியம்
சினிமாப்பைத்தியம் சீட்டுப்பைத்தியம்
காதல் பைத்தியம் கவிதைப்பைத்தியம் என
நமக்கு முன்பும் பைத்தியங்களிருந்தன
அவை அப்பாவிகளாயிருந்திருக்கின்றன
அவை நிறையக் கதைகளைத்
தெரிந்து வைத்திருந்தன
அவைகள் சொல்ல நாம் கேட்டோம்
அவற்றிலொன்று
விறகுவெட்டி மூன்று கோடரிகள் கதை
அந்தக் கதையால் நாம் வீணாய் போனோம்
அதோ அவனைப் பார்த்தால் புரியும்
போட்டியாளனைப் போட்டுத் தள்ளுகிறான்
கவர்மெண்ட் பணத்தைக் களவாடுகிறான்
குபேரனாகிறான்
மண்ணைப் பொன்னாக்கும் மகானென்று
மண்டியிடுகிறதுலகம்
மகானின் தோட்டத்தில் மாடுகள் ரெண்டு
மூத்திரம் குடித்து பல்லிளிக்கின்றன
ஒன்றின் பற்கள் உனதைப் போலிருக்கின்றன
தோலிருக்கச் சுளைமுழுங்கித் தலைவன்
வாய் திறந்தால் பொய்யருவி- அவனை
கணினியுகத்தின் விடிவெள்ளியென்கிறதுலகம்
ஆட்டைப்போல் ஆளை வெட்டினவன் அரசனானான்
அடுத்தவன் கிடையில் ஆடு திருடி
அரசனுக்கத் தந்தவன் தளபதியானான்
கிலிபிடித்த ஒருவன் கடவுளைக் கற்பித்தான்
புசிக்க உணவில்லை பிட்டுக்கூலி
வசிக்க மனையில்லை சுடலைவாசி
உடுத்த உடையில்லை அம்மணாண்டி
முடிவெட்டக்காசில்லை சடாமுடி
அவனைக் கடவுளென்கிறதுலகம்

இப்போது சொல்
இது பைத்தியக்கார உலகமா இல்லையா?

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா

‘ஓ பரமபிதாவே’
துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தை
அதிரச் செய்திருக்கக் கூடும்
சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு
வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை
பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை
கண்டிக்கு அனுப்பியிருந்தது
வானமும் அதிர்ந்த நாளதில்
உயர் மருத்துவம்
மகளை எப்படியும் காப்பாற்றிடும்
நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக
ஆச்சியும் வந்திருந்தாள்
பார்வையாள விருந்தினராக
இருவர் மட்டுமே உள்ளனுப்பப்படும்
அவர்களுக்கென்று யாரும் வராத
வாயிலையே பார்த்தபடி
எப்பொழுதும் கட்டிலருகே
மெலிந்த ஆச்சி அமர்ந்திருப்பாள்
குழாய்கள் வழியே வரும்
உயிர்க்காற்று, மருந்து, கரைசல் உணவு
எல்லாவற்றையும் ஏற்றிருக்கும் ஆரோக்கியமேரி
வற்றிய உடல் சுவாசத்துக்கு மட்டுமே அசைய
கண்களில் மீதமிருக்கும் உயிர்
யாரையோ தேடியபடி கண்மணியாயசையும்
அவர்களறியாச் சிங்கள மொழியை
தமிழுக்கு மாற்றிச் சொல்ல உதவப் போய்
அவ்விருவர் துயர் கதையறிந்தேன்
பிறப்பிடம்
யாழ்ப்பாணத்தினொரு கடற்கரைப் பிரதேசம்
தற்பொழுது முகாம் வாசம்
மேரிக்கு ஒரே மகன்
சென்ற வருடம் கடத்தப்பட்ட அவனுக்கு வயது பதினேழு
கணவனும் மற்ற உறவுகளும் போரில் இறந்திட
ஆச்சியும் அவளும் மட்டுமே மிச்சம்
ஷெல் பட்ட தொண்டையில் சத்திரசிகிச்சை
அதனோடு சேர்த்து சளி கட்டி சிக்கலாகி
வவுனியா ஆஸ்பத்திரியோடு சில மாதங்கள் வாசம்
அங்கிருந்து கண்டிக்கு வந்து
இன்றோடு பத்துநாள்
‘தம்பி எங்களை வவுனியாவுக்கே
அனுப்பிவிடச் சொல்லுங்கோ
இஞ்ச மொழியும் தெரியேல்ல
கவனிக்கிறாங்களுமில்ல
பொட்டொன்றைக் கண்டால் போதும்
புலியென்று நினைப்பு இவங்களுக்கு
அங்கயெண்டாலும் அயல்கட்டிலுக்கு வாற சனம்
பார்த்துப் பேசிச் செல்லும்
மனசாரப் பேச்சை விட
மருந்தெல்லாம் எதுக்கு ராசா’
இரு வாரங்களின் பிற்பாடு
மீளப் போய்ப் பார்க்கையில்
அவர்களிருக்கவில்லை
மேரி ஃபிலோமினாவை மரணம் கூட்டிச் சென்று
ஒரு கிழமையாயிற்றென
மருத்துவத் தாதி கூறி நடந்தாள்
காப்பாற்ற வந்த உயிரைக்
காலனின் கையில் பறிகொடுத்த ஆச்சி என்னவானாள்
தெரியாத மொழி பேசும் சூனியப் பூமி
நெரிசல் மிக்க பெருநகரம் அவளை
எந்த வாய் கொண்டு விழுங்கியதோ….
எங்கே போனாளென
எவர்க்கும் தெரியாத  இருளை ஊடறுத்து
தளர்ந்த பாதங்களினால்
அழுதபடி நடந்தாளோ….
ஆரோக்கியமேரி என்றழைப்பட்ட மேரி ஃபிலோமினா
மரணித்தவேளையில்
‘ஓ பரமபிதாவே’
துளி நம்பிக்கையும் சிதறுண்ட அந் நாளில்
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தையே
அதிரச் செய்திருக்கும்

நதி ஈந்த எறும்பு

ஓய்விலிருந்தது மாமரம்
உதிர்ந்த இலைகளோடு நானும்
நழுவிய தினசரியிலிருந்த
அணைக்கட்டின் மீது ஊர்ந்தன
வெள்ளை நிறத்திலும் கருப்பு நிறத்திலுமாக
இரு சாரியாக எறும்புகள்
வெள்ளையின் பசியறிந்த கருப்பு
சுமந்துவந்த வயலை ஈந்தது
கருப்பின் தாகமறிந்த வெள்ளை
விழுங்கிவந்த நதியை கொடுத்து கொடுத்து
தன்போக்கில் நகர்ந்துகொண்டிருந்தன…

பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு….

பத்மநாபனாகிய நான் பேசுகிறேன்.  யார் இந்த பத்மநாபன்?  யாருமில்லை, சாதாரணத்திலும் சாதாரண மனிதன்தான் நான். என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன்.  ஒவ்வொருவருக்கும் அவரவரைப் பற்றி பேச எத்தனையோ இருக்கும்.  ஏன் உங்களுக்குக்கூட ஏதோ தெரிவிக்க ஆசைப் படுவீர்கள்.  யாரும் பேசத்தான் விரும்புவார்களே தவிர, மற்றவர்கள் பேசுவதைக் கேட்க விரும்ப மாட்டார்கள்.  ஆனால் ஒருவர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்க விரும்புகிறார்கள் என்றால் ஒன்று அவர்கள் மனோதத்துவ மருத்துவர்களாக இருப்பார்கள்.  ஏன்என்றால் அவர்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்.  கேட்டால்தான் அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இன்னும் சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் தங்களை கடவுளின் தூதுவர்களாக நினைத்துக் கொள்பவர்கள்.  அவர்கள் கேட்க மட்டும் செய்வதில்லை.  பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்வார்கள்.
நான் ஏதோ என்னைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன்.  நீங்களும் நான் சொல்வதைக் கேளுங்கள்.  வேறு எதுவும் சொல்ல வேண்டாம்.  சரி, எப்படி ஆரம்பிப்பது?  நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சொல்ல விரும்பவில்லை.  எனக்கு சொல்லவும் அலுப்பாக இருக்கும்.  உங்களுக்குக் கேட்பதற்கும் அலுப்பாக இருக்கும்.  நம் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோவிதமான முட்டாள்தனத்தைச் செய்து கொண்டிருப்போம்.  அதைப் பற்றியெல்லாம் நாம் பிறரிடம் சொல்லக்கூட ஆசைப்பட மாட்டோ ம்.  யாராவது நான் செய்தது முட்டாள்தனமான செயல் என்று சொல்ல விருப்பப்படுவோமா?  நிச்சயமாக மாட்டோ ம்.  ஆனால் பத்மநாபனாகிய நான் சொல்கிறேன்.  நான் சமீபத்தில் செய்த ஒரு முட்டாள்தனமான காரியத்தைப் பற்றி புலம்பாமல் இருக்க முடியாது.  அது நான் பதவி உயர்வு பெற்றதுதான். சென்னையில் குடும்பத்துடன் இருந்த நான், ஏன் இந்தத் தப்பை செய்தேன்.  எல்லாம் விதி.  மேலும் நான் தலைமை அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக 25 ஆண்டுகள் இருந்துவிட்டேன்.  மேலும் இருக்கப் பிடிக்காமல்தான்  இந்தத் தவறை செய்து விட்டேன்.  ஆனால் இதற்கு உண்மையில் சுரேஷ்தான் காரணம்.  எனக்கும் சுரேஷிற்கும் 17வயது வித்தியாசம். எனக்கு நண்பர்கள் அப்படித்தான் அமைவார்கள். 
50வயதான என்னைப் பார்த்து, சுரேஷ் சொன்னான்: ”சார், பதவி உயர்வுக்கு ஆசைப் படாதீர்கள்,” என்றான்.
”ஏன்?” என்று கேட்டேன். 
”உங்களால் முடியாது.”
”ஏன் முடியாது?”
”தனிமை. உங்களால் இருக்க முடியாது.”
”எப்படி சொல்கிறாய்?  தனிமையில்தான் இருந்து பார்ப்போமே?”
”உங்கள் குடும்பத்தை விட்டு ஒருநாள் கூட தனிமையில் நீங்கள் இருக்க முடியாது..”
”இல்லை.  இந்த முறை பதவி உயர்வு பெற்றுத்தான் தீர்வேன்…”
”உங்கள் தலையெழுத்தை மாற்ற முடியாது..”
ஐம்பது வயதில் எனக்குப் பதவி உயர்வு தருவதைத் தவிர நிர்வாகத்திற்கு வேறு வழியில்லை. என்னைப் போன்றவர்கள் பொறியில் எப்படிச் சிக்குவார்கள் என்று பார்த்துக்கொண்டிருந்தது நிர்வாகம்.  நிர்வாகம் எதிர்பார்த்தபடி பொறியில் என்னைப் போன்ற பலர் சிக்கினார்கள். 
                                                                                                                            (இன்னும் வரும்)
பின் குறிப்பு :
 
என் நண்பர் குமரி எஸ் நீலகண்டன் அவர்கள்,  வலைதளத்தில் என் அனுபவத்தைத் தொடர்கதையாக எழுதும்படி வற்புறுத்தினார். அதன் பொருட்டே இந் நாவலை வலைதளத்தில் எழுத முயற்சி செய்கிறேன்.