Category: Uncategorized
அறிவிப்பு
நவீன விருட்சம் 91வது இதழ் ஒரு வழியாக ஓராண்டிற்குப் பிறகு அச்சில் வெளிவந்துவிட்டது. இதழில் பங்குகொண்ட படைப்பாளிகளின் அட்டவணை இதோ-
1. முகப்போவியம் எஸ் வைதீஸ்வரன்
2. பூனைக்குட்டியும் நிலாவும் – கவிதை – குமரி எஸ் நீலகண்டன்
3. தாகம் – கவிதை – சின்னப்பயல்
4. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறுவெளி – கவிதை – ப தியாகு
5. கடந்தது – கவிதை – எஸ் வைத்தியநாதன்
6. கார்க்கால ஞாபகங்கள் – கவிதை – சமீலா யூசுப் அலி
7. புதிய அத்தியாயம் – கவிதை – ராமலஷ்மி
8. சில நேரங்களில் – கவிதை – மிருணா
9. பூனை – கவிதை – அழகியசிங்கர்
10. ஒரு – கவிதை – அழகியசிங்கர்
11. தேடிப்பற – கவிதை – ஷைலஜா
12. குட்டி குட்டி அழகு – ப ஜெயபால்
13. எது கவிதை…. – கட்டுரை – அழகியசிங்கர்
14. கறுப்பு – வெள்ளை – கவிதை – நீலமணி
15. பானகம் – சிறுகதை – ஷைலஜா
16. இருபது ரூபாய் – சிறுகதை – அழகியசிங்கர்
17. எப்போதும் உனக்குத் தேவை அமைதியான மனம் – நிஸகர்தத்தா மஹாராஜா
18. எனக்குப்பிடித்த முன்னுரை
19. என் எம் பதி என்கிற நண்பர்…. அழகியசிங்கர்
20. ஐராவதம் புத்தக விமர்சனம்
உரையாடல்
91வது இதழில் கலந்துகொண்ட படைப்பாளிகளுக்கு என் நன்றி. இதழ் அனுப்ப முகவரிகளை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். சீர்காழியிலிருந்து சென்னை மாறி வரும்போது பலருடைய முகவரிகளைத் தொலைத்துவிட்டேன்.
அழகியசிங்கர்
ஜே. கிருஷ்ணமூர்த்தி யார் மூலம் எப்படி அறிமுகம் என்பதை சில நாட்களாக யோசித்துக்கொண்டிருக்கிறேன். புரியவில்லை. ஆனால் கிருஷ்ணமூர்த்தி சென்னை வரும் ஒவ்வொரு ஆண்டும் நான் அங்கே போய் நின்றுவிடுவேன். ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில் என் பொழுது கிருஷ்ணமூர்த்தி பேச்சைக் கேட்பதில் போய்விடும். சில சமயம் அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு காலை நேரத்தில் நடக்கும் உரையாடல்களில் என் கவனம் செல்லும். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இன்னும்கூட ஞாபகம் இருக்கிறது. கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் நான் படிக்காமல் இருந்தது.
பிரமிளும் நானும் பல தடவைகள் சந்திக்கும்போது கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். ஒரு முறை பிரமிளுடன் நான் தி நகரில் நடேசப் பூங்கா உள்ள எதிரில் உள்ள ஒரு பெரிய விளையாட்டு மைதானத்திற்குச் சென்றோம். பிரமிள் ஒருவரைச் சுட்டிக் காட்டினார்.
“யார் அவர்? ” என்று கேட்டேன்.
“உங்களை மாதிரி வங்கியில் ஒரு காலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்..”
“ஏன் இப்போது இல்லையா?”
“இல்லை. அவரை வேலையை விட்டுத் துரத்தி விட்டார்கள்…”
“எதாவது பணம் திருடினாரா?”
”இல்லை..ஆனால் ஜே கிருஷ்ணமூர்த்திதான் அவர் வேலை போவதற்குக் காரணம்..”
பிரமிள் சொன்னது எனக்கு திகைப்பாக இருந்தது. ”எப்படி?” என்று கேட்டேன்.
”அவருக்கும் ஜே கிருஷ்ணமூர்த்தி மாதிரி மாற வேண்டும்போல் தோன்றியது. வங்கிக் கிளையில் கிருஷ்ணமூர்த்தி மாதிரி பிரசங்கம் செய்யப் போவதாக சொல்லி அலுவலகத்தில் சத்தமாகப் பேச ஆரம்பித்தார். பின் நிலைமை மோசமாகி வங்கிக் கிளையில் உள்ள லட்ஜர்களைக் கிழிக்க ஆரம்பித்தார்…அவர் குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து முதலில் விட்டுவிட்டார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு செய்யாமல் வேலையை விட்டு போக சொல்லி விட்டார்கள்…”
எனக்கு கேட்க வருத்தமாக இருந்தது. ஆனால் பிரமிள் இன்னும் சில சம்பவங்களை கிருஷ்ணமூர்த்தி பற்றி சொன்னார்.
”புத்தரைவிட கிருஷ்ணமூர்த்தி மேலானவர்..அவருடைய தத்துவம் நவீனத்துவமானது…புத்தரை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி..” என்றெல்லாம் பிரமிள் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
நானும் அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக நினைப்பதுண்டு.. நானும் அவரும் கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு வராத சமயத்தில்கூட வசந்தவிஹாருக்கு சனிக்கிழமை செல்வோம். அங்கு காட்டும் வீடியோ பார்க்காமல் இருக்க மாட்டோம்.
கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு வரும்போதெல்லாம் சென்னை கலகலவென்று இருக்கும். பல எழுத்தாளர்களை நான் இங்கு சந்தித்திருக்கிறேன். ஆத்மாநாம் கையை குலுக்கியிருக்கிறேன். குலுக்கும்போது அவர் கை நடுங்கிக் கொண்டிருக்கும்.
கிருஷ்ணமூர்த்தி கூட்டம் முடிந்து நானும் பிரமிளும் ஒரு நாள் திரும்பி வரும்போது, ”என்ன பாஸ்..” என்று கூறியபடி ஒரு நண்பர் பிரமிள் பாக்கெட்டில் பணத்தைத் திணித்தார். எனக்கு திகைப்பாக இருந்தது. பிரமிளுக்கு இப்படி பலர் உதவி செய்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.
அந்த நண்பர் போனபின் பிரமிள் அவரைப் பற்றி சொன்னது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. ”கிருஷ்ணமூர்த்திதான் அவரை மரணத்திலிருந்து காப்பாற்றினார்..”
”எப்படி?”
எனக்குக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. என் அலுவலகத்தில் நான் கிருஷ்ணமூர்த்தி படிப்பேன் என்று யாருக்கும் தெரியாது..ஆனால் நான் கிருஷ்ணமூர்த்தி படிப்பதால் கர்வமாக இருப்பேன். ஏன் என்றால் கிருஷ்ணமூர்த்தி என்றால் யாருக்கும் தெரியாது..புரியவும் புரியாது. ஒருவர் கிருஷ்ணமூர்த்தி படிக்கிறார் என்றால் அவர் மேதாவி என்ற குருட்டுத்தனமான எண்ணம் எனக்குள் இருப்பதுண்டு. நான் பிரமிளை மதித்ததுகூட கிருஷ்ணமூர்த்தியால்தான்.
க்ரியாவில் அறிமுகமான ‘வேலி மீறிய கிளைகள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதிய நாராணோ ஜெயராமன் என்ற கவிஞரை எனக்கு தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் பிரமிள் அறிமுகப்படுத்தினார். ஜெயராமன் என்ற பெயரை பிரமிள்தான் நாராணோ ஜெயராமன் என்று மாற்றினார். இப்படி பலருடைய பெயர்களை எண் கணிதப்படி பிரமிள் மாற்றி இருக்கிறார். சங்கர் என்ற பெயரை சுப்பரபூ சங்கர் என்று மாற்றி இருக்கிறார். இப்படி பிரமிள் பெயரை மாற்றியதால் எழுத வேண்டியவர்கள் தொடர்ந்து எழுத முடியாமல் போய் ஓட்டம் பிடித்ததாக எனக்குத் தோன்றுகிறது.
இன்னொரு எழுத்தாளர் சொல்வார். கிருஷ்ணமூர்த்தியை யாரும் படிக்கக் கூடாது.. அவரைப் படித்தால்..எழுதுபவர்களுக்கு ஏன் எழுத வேண்டுமென்று தோன்றும்..
குண்டும் குழியும் தாண்டிய
களைப்பில் நின்று போனது கார்.
ஓட்டுனர் போராடினார்
மற்ற வாகனங்கள் சத்தமிட்டன.
புதிதாக முளைத்திருந்த
மாலை நிலா
பின்னிருக்கையில் இருந்த
என்னைப் பார்த்து.சிரித்தது
இருட்டு பரவிய
நெடுஞ்சாலையில்
வழி நெடுக
வந்தது முழு நிலா.
நகர எல்லையில்
காரணம் புரியாமல்
ஸ்தம்பித்திருந்த போக்குவரத்தில்
முதலெது முடிவெது என்றறியாமல்
நீண்டிருந்த வாகனவரிசையில்
ஓய்வற்று காத்திருக்கையில்
பார்வையிலிருந்து
தொலைந்து போனது
பால் நிலா.
தொட்டுத் துழாவி
இருட்டான மாடிப்படிகளில் ஏறி
வீட்டுக் கதவை திறந்து
உள்ளே செல்கையில்
மின்னொளியில்லாமலேயே
வரவேற்பறையெல்லாம் வெள்ளொளி.
ஜன்னல் வழி தெரிந்த துண்டு வானத்தில்
சிரித்துக் கொண்டிருந்தது அழகு நிலா.
V GANESH
அரேபிய ராசாக்கள்
துணையிழந்த
நோய்மையுடனான முதியவனின்
பார்வையாய்
வ்டிந்து சொட்டுகிறது தனிமை,
ஒருபொழுதும்
உங்களது மழையுடன்
ஒப்புக்கு வராதீர்கள்
மணற்காட்டில் நிச்சயக்கப்பட்ட வெயில்
எங்கள் பெருவானம்.
ஆறுமுகம் முருகேசன்
நெடுஞ்சாலையோரத்தில்
ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்
நடை பாதைவாசிகள்.
அவ்வுறக்கத்தின் மீது
ஓடிக்கொண்டிருக்கின்றன
எண்ணற்ற வாகனங்கள்.
ஒரு வினாடி
வெறுப்புத்தோன்றி மறைகிறது.
விழித்தபடிவாகனம்
ஓட்டுபவர்களுக்கு
உறங்கும்நடை பாதைவாசிகளின்
உறக்கத்தின் மீது.
ரவிஉதயன்