பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
8.
நான் அலுவலகத்தில் நுழைந்தவுடன், ‘பெரிய முட்டாள்தனம் செய்து விட்டாய்,’ என்றான் மூர்த்தி. ”என்ன” என்றேன்.  ”பிரமோஷனில் வந்ததைத்தான் சொல்றேன்..”  மூர்த்தி மயிலாடுதுறையைச் சார்ந்தவன்.  பதவி உயர்வுப் பெற்று வடக்கு இந்தியாவிற்குச் சென்றுவிட்டு ஓய்ந்துபோய் பந்தநல்லூரில் ஒடுங்கி உள்ளவன்.  நான் வந்ததால் அவனை வேறு எங்காவது மாற்றி விடுவார்கள்.  
வங்கி மேலாளர் சற்று உற்சாகமில்லாமல் இருந்தார்.  ஒரே ஒரு பெண்மணியைத் தவிர வேற யாருமில்லை அந்தக் கிளையில்.  நான் சென்னையிலிருந்து வந்த பரபரப்பில் இருந்தேன்.  மனம் தெளிவில்லாமல் இருந்தது.  ஊர் சற்றுக்கூட பிடிக்கவில்லை. நெரிசல் மிகுந்த சென்னையை விட்டு வந்து விட்டோமே என்று தோன்றியது. மேலும் நான் சுருக்கெழுத்தாளராக இருந்துவிட்டு வந்திருப்பதால், கிளை அலுவலகத்தைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
ஜானகி என்கிற அந்தப் பெண்மணி சற்று ஆறுதலாகப் பேசினாள்.  ”ஏன் சார் இங்க வந்து மாட்டிண்டீங்க?” என்றாள்.  எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.  கும்பகோணம் வட்டாரத்தைப் பொறுத்தவரை பதவி உயர்வுப் பெற்று வந்த பெண்களை கிராமத்துக் கிளைகளில் போடவில்லை.  என்னைப் போன்ற சிலர்தான் மாட்டிக்கொண்டோம்.  நான் மயிலாடுதுறை வேண்டுமென்று சொன்னதால்,பெரிய மனது பண்ணி என்னை பந்தநல்லூரில் பணி நியமனம் செய்துள்ளார்.
ஐந்துமணிக்கெல்லாம் கிளார்க்குகள் சிட்டாகப் பறந்துபோய் விட்டார்கள்.  சிலர் தஞ்சாவூரிலிருந்து இங்கு வருகிறார்கள். அதில் ஒருவருக்கு காது கொஞ்சம் கேட்காது.
வீட்டிலிருந்து போன் வந்தது.  போய் சேர்ந்து விட்டாயா என்று அப்பா கேட்டார்.  அவருக்கு 83 வயது.  மாமியாருக்கு 80 வயது.
நான் தமிழ் பஸ் பிடித்து மாயவரம் சேருவதற்குள் மணி எட்டாகிவிட்டது.  என் பெரியப்பா பையன் வீட்டில் நான் தங்கியிருந்தேன்.  ஒரு வீடு எடுத்துத் தங்குவதற்குள் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன்.  அவர்களுக்கு நல்ல மனது.  என்னை ஏற்றுக் கொண்டார்கள்.
(இன்னும் வரும்) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *