பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

 
11.
 
நான் பந்தநல்லூருக்கு வந்த புதியதில் கிராமம் என்றால் நடுங்கிக் கொண்டிருந்தேன்.  நான் சென்னை போன்ற இடத்தில் இருந்து பழகியவன்.  கிராமம் என்றால் மனிதர்களே இருக்க மாட்டார்கள்.  சாப்பிட நல்ல ஓட்டல் கிடைக்காது.  நல்ல மருத்துவமனை இருக்காது என்றெல்லலாம் பல குறைபாடுகள் கிராமத்தில் உண்டு.  என் நண்பர் ராஜேந்திரன் ஏன் பந்தநல்லூரிலேயே தங்கலாமே என்ற அறிவுரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  கிராமாத்தைச் சுற்றி அருகாமையில் இருக்கிற ஒரு நகரத்தைத்தான் நான் பெரிதும் நம்பினேன்.  முதலில் சாப்பாடு.  இது பெரிய பிரச்சினை.  என் வீட்டில் நான் வெந்நீர் கூட சுடவைத்துப் பழகாதவன். 
 
ஆனால் பந்தநல்லூர் என்ற ஊர் கும்பகோணத்திற்கும், மயிலாடுதுறைக்கும் நடுவில் உள்ளது.  மயிலாடுதுறை 28 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.  கும்பகோணம் 30 கிலோமீட்டர் மேல் இருந்தது.  நான் கும்பகோணத்தில் இருப்பதைவிட மயிலாடுதுறையில் இருப்பதையே பெரிதும் விரும்பினேன்.  காரணம் என் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள்.  எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால் அவர்கள் உதவி செய்வார்கள் என்று நம்பினேன்.
 
தினமும் மயிலாடுதுறையிலிருந்து பந்தநல்லூருக்கு வருவதற்கு தமிழ் பஸ் என்ற ஒன்றைப் பிடித்துக்கொண்டு வரவேண்டும்.  அதைத் தவறவிட்டால் பின்னால் வரும் பஸ்ஸைப் பிடித்தால் அலுவலகம் வர தாமதமாகும்.  சிடுமூஞ்சி மேலாளரைப் பார்க்க வேண்டும்.  ஏதோ உலகத்தில் நான்தான் பெரிய குற்றம் செய்துவிட்டதுபோல் பார்த்துத் தொலைப்பார்.  ஆனால் உண்மையில் வேற யாரையும் அவரால் குறை சொல்ல முடியாது.  ஒரே பெண் கிளார்க்கிடம் வழிவார்.
 
அவர் வாழ்க்கையில் பெரிய சோகம் நடந்துவிட்டது.  ஆனால் அது மாதிரியான சோகம் நிகழ்ந்துவிட்டதற்கான அறிகுறியே அவர் முகத்தில் தெரியாது.  அவர் மனைவி அவருடன் ஸ்கூட்டரில் பயணிக்கும்போது ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். இது அவருடைய இடமான கோயம்புத்தூரில் நடந்தது. 

அவர் அந்தச் சம்பவத்தைச் சொல்லும்போதுகூட உணர்ச்சியே இல்லாமல் சொல்வார்.  கேட்கும் நாம்தான் வருத்தப்பட வேண்டும். 
 
பஸ்ஸில் வருவது சரிபடாது என்று எண்ணி ஊரிலிருந்து டூ வீலரை எடுத்துக்கொண்டு வர ஏற்பாடு செய்தேன்.

                                                                                                                         (இன்னும் வரும்)
 
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

10.
 
 
நான் இங்கு வந்தபிறகு அழகியசிங்கர் என்னைப் பற்றி சில கவிதைகள் எழுதினார்.  ஒரு கவிதை பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு என்ற கவிதை.  அந்தக் கவிதை எழுதும்போது நான் என் பெண்ணிற்குத் திருமணம் ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லாமல், மயிலாடுதுறையில் அல்லல்பட்டுக் கொண்டிருந்தேன்.  என் பெண் அப்போது சொன்ன ஒரு விஷயம் எனக்கு உறுத்தலாக இருந்தது. 

”ஏன்ப்பா..என் கல்யாணம் நடக்கும்போதுதான் நீ அங்கே போகவேண்டுமா?”  சொல்லும்போது அவள் குரலில் வருத்தம்.

உண்மையில் பெண்ணின் திருமணம்போது நான் சென்னையில் இருந்தால் பலவிதங்களில் நான் பயன்படுவேன்.  திருமணம் என்கிற பதைப்பு ஒருவரை ஒருவர் பார்க்கும்போது குறையும் வாய்ப்பு அதிகம்.

என் விதி அந்தச் சமயத்தில் நான் அங்கில்லை.  பின் திருமணத்திற்கு லீவு.  அது கொடுப்பார்களா என்ற அச்சம் என்னிடம் இருந்துகொண்டே இருந்தது. 
எனக்கு ஒரு மாதமாக லீவு வேண்டியிருக்கும்.  அதற்கான முனைப்பை செய்து கொண்டிருந்தேன்.

அழகியசிங்கர் என்னைக் கிண்டல் செய்ததுபடி, லீவு கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.  ஏன்எனில் மானேஜருக்கும், எனக்கும் ஒருவித ஒழுங்கு உறவு ஏற்படவில்லை.  தவிரவும் நான் என்ன தவறு செய்வேன் என்பதைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் எனக்குப் பட்டது.

பஸ்ஸைப் பிடித்து மயிலாடுதுறையிலிருந்து நான் பந்தநல்லூருக்கு உடனடியாக வர முடியாது. ஒரு ஐந்து நிமிடம் பத்து நிமிடம் தாமதமாக வரும்படியாக நேரிடும்.  நான் உள்ளே நுழையும்போது, வட்டார அலுவலகத்திலிருந்து போன் வந்துள்ளதாக போனை என்னிடம் கொடுப்பார் மானேஜர்.  மானேஜரே அதைச் செய்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றும்.  ”ஏன் லேட்?” என்று அவர்கள் கேட்பார்கள்.  ”வேற வழியில்லை.. பஸ்ஸைப்பிடித்து வரும்போது இப்படி ஆகிவிடுகிறது.”

”நீங்க சீக்கிரம் வரணும்..”

”ஏன் இங்க வந்து மாட்டிக்கொண்டேன் என்பது தெரியவில்லை.  வேலையை விட்டுப் போய்விடலாமாவென்று யோசிக்கிறேன்..”என்று எரிச்சலுடன் பதில் சொல்வேன்.

இதைத்தான் மானேஜர் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்.  மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கும் குணம் அவருக்கு. 
                                                                                                                          (இன்னும் வரும்)

காக்கைச் சிறகினிலே (சிறுகதை)

                                                        
 
 
 
 
 
செல்வராஜ் ஜெகதீசன் 

 
 
அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது,மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது.தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை.அருகில் போய் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம்.ஒரு பதினைந்து வருடத்திற்கு முன், தன் வீடே பழியாய்க் கிடந்தவனை,இப்போது அவருக்கு நினைவில் இருக்குமா?
 
அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்.மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வந்திருந்த புது ஹெட் மாஸ்டர்.சொந்த ஊர்காஞ்சிபுரம்பக்கம் ஒரு கிராமம். வேலையில் சேர்ந்த புதிதில் சென்னைக்கு தினமும் பஸ்சில் வந்து போய்க் கொண்டிருந்தார். ‘தில்லு முல்லு’படத்தில் வரும் ரஜினிக்குமீசை வைத்த மாதிரி இருப்பார்.எப்போதும் வெள்ளை பாண்ட் வெள்ளை முழுக்கை சட்டையுடன் பளபளக்கும் பெல்ட் ஒன்று அணிந்துதான் அவரை பெரும்பாலும் காண முடியும். விரைப்பான முகம். கண்கள் மட்டும் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும்.அந்த சிரிப்புதானா நடந்த அத்தனைக்கும் காரணமென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.
 
தினமும் வந்து போவது முடியாமல்,வீடொன்று வாடகைக்கு எடுத்து தங்க அவர் தேர்ந்தெடுத்தது, எங்களுக்கு அடுத்த வீட்டை. எப்படி அவர் வீட்டோடு ஒன்றிப் போனேன் என்பது இப்போது சரியாய் நினைவில் இல்லை.மைக்கேல் சார் வீட்டில் தான் எந்நேரமும் இருப்பேன்.ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்து பையை போட்டுவிட்டு சார் வீட்டுக்கு போவேன். திரும்பி வர ராத்திரி எட்டு மணிக்கு மேல் ஆகும்.
 
எங்கள் பள்ளி எட்டாவது வரை மட்டுமே இருந்த ஒரு நடுநிலைப் பள்ளி.மைக்கேல் சார் ஏழாவதுக்கும் எட்டாவதுக்கும் வரலாறு பாடம் மட்டும் எடுப்பார்.அவர் பாடம் சொல்லித் தருவது அத்தனை சுவாரசியமாக இருக்கும்.படித்து முடித்தபின், அவரை போல் ஆக வேண்டுமென்று,நான் உட்பட,நிறைய பேர் ஆசைப்பட்ட அளவிற்கு. மைக்கேல் சார் கையால் திருக்குறள் புத்தகமொன்று நான் பரிசாய் (பேச்சுப்போட்டி முதல் பரிசு) பெறும் புகைப்படம் ஒன்று இப்போதும் என் வசம் வைத்திருக்கிறேன்.இப்போதென்றால் இந்த இருபத்தாறு வயதில்.
 
அதை விட மைக்கேல் சார் உபயத்தில் ரேடியோ ஸ்டேஷன் போய் வந்த கதை தான் ரொம்ப தமாசான விஷயம். இப்போ நினைத்தால் தமாசாக தோன்றும் விஷயம், அப்போதைக்கு அதிகம் சோகப்படுத்திய ஒன்று.
 
நீங்கள் ரேடியோவில் ஞாயிற்றுக்கிழமை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும்“சிறுவர் சோலை”நிகழ்ச்சியைக் கேட்டதுண்டா?அதில் நாமும் ஒருநாள் பேசுவோமென்று நினைத்ததுண்டா?
அன்றுவரை, அதாவது மைக்கேல் சார் எங்கள் பள்ளிக்கு வரும் வரை, வெளியே ஏதாவது சுற்றுலாகூட்டிப் போவதென்றால், பெரும்பாலும் மகாபலிபுரம்,வண்டலூர் ஜூ அல்லது முதலைப் பண்ணை இப்படித்தான் இருக்கும்.
 
ஒருநாள் சுகுணா டீச்சர் வந்து, “ரேடியோ நாடகத்துல நடிக்க யாருக்கெல்லாம் இண்டரஸ்ட் இருக்கோ, கை தூக்குங்க” என்றார். ஒன்றும் புரியாமல் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க ஆரம்பித்தோம். பின் அவரே ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளிவரும் சிறுவர் சோலை நிகழ்ச்சி பற்றி சொன்னார். நன்றாக படிப்பவன் என்ற வகையில் என் பெயர் டீச்சராலேயே சேர்க்கப்பட்டது. அதற்கு இரண்டொரு நாள் கழித்து நாடகத்திற்கான ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டது. சுகுணா டீச்சரும் டிராயிங் மாஸ்டர் முருகேசன் சாரும் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க,திருப்பித் திருப்பி அந்த வசனங்களை நாங்கள் சொல்லிப் பார்ப்போம். அவ்வப்போது மைக்கேல் சார் அங்கு வந்து பார்வையிடுவார். அவர் ஏற்பாட்டில்தான் அந்த ரேடியோ நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. 
 
இரண்டு வார ஒத்திகைக்குப் பிறகு,ரிகர்சலுக்காக ரேடியோ ஸ்டேஷன் போவோம் என்று சொல்லியிருந்தார் சுகுணா டீச்சர். ஒரு சனிக்கிழமை அன்று நாங்கள் எட்டு பேரும்,சுகுணா டீச்சர் மற்றும் முருகேசன் சார் சகிதம் கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்னதாகவே மைக்கேல் சார் அங்கு நின்று கொண்டிருந்தார். பின் எல்லோரும் பல்லவன் பஸ் பிடித்து,தங்கசாலை பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினோம். அங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து ரேடியோ ஸ்டேஷன் போக வேண்டுமென்று சுகுணா டீச்சர் சொல்லிக்கொண்டிருந்தார்.
 
அப்போது,அதுவரை அமைதியாக வந்து கொண்டிருந்த நான், “உவ்வே” என்ற சத்தத்துடன் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன். அதுவரைக்கும் அவ்வளவு தூரம் நான் பஸ்ஸில் பயணம் செய்ததில்லை.முருகேசன் சார் ஓடிப் போய் அருகிலிருந்து ஒரு லெமன் ஜூஸ் வாங்கி வந்தார். அதைக் குடித்த பிறகு சற்று தெம்பாக இருந்தது. பின் இன்னொரு பஸ்ஸில் ஏறி ரேடியோ ஸ்டேஷன் போய் சேர்ந்தோம்.
 
வானொலி அண்ணாவை நேரில் சந்தித்தோம். அங்கு வருவதற்கு முந்தைய ஞாயிறுகளில் ஒளிபரப்பான சிறுவர் சோலை நிகழ்ச்சிகளில் கேட்ட வானொலி அண்ணாவின் குரலை வைத்து நான் கற்பனை பண்ணி வைத்திருந்த முகத்திற்கும் நேரில் கண்ட வானொலி அண்ணாவின் முகத்திற்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தன.
 
இரண்டு மணி நேர ரிகர்சலுக்குப் பிறகு, திரும்பவும் இரண்டு பஸ் பயணம். என்ன ஆயிற்றோ தெரியவில்லை. இரண்டு பஸ்சிலும் “உவ்வே உவ்வே” என்று கக்கி வைத்ததன் விளைவாக, வேறொருவன் எனக்குப் பதிலாக போய் ரெகார்டிங் முடித்து வந்தான். ரேடியோவில் குரல் கேட்கும் பாக்கியத்தை அடியேன் இழந்தேன்.
 
இப்போதும் எனக்கு சரியாக ஞாபகம் இருக்கிறது. (எல்லாம் அந்த ரேடியோ நாடக அனுபவத்தால்). அன்று ஞாயிற்றுக் கிழமை. நான் மைக்கேல் சார் வீட்டில் ரேடியோவில் எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற சிறுவர் சோலை நிகழ்ச்சி கேட்டு முடித்த நேரம்தான்,சீனு,அவன் அக்கா கொடுக்கச் சொன்னதாக, ஒரு புத்தகத்தைக்கொடுத்து விட்டுப் போனான்.சீனு எங்கள் பள்ளியில் தான் நான்காம் வகுப்பு படிக்கிறான்.முழுப் பெயர் சீனிவாசன்.அவன் அக்கா மாலா எட்டாவது படித்துக் கொண்டிருந்தாள். மாலாவைப் பற்றி சொல்வதென்றால், தக்காளி,மாலா மாதிரி சிவப்பாய் இருக்கும். (நன்றி சுப்ரமண்ய ராஜூ ).
 
புத்தகத்தைக் கொடுத்து விட்டு,ஒரே ஓட்டமாக ஓடிப்போனான் சீனு. நான் புத்தகத்தை உள் அறையில் இருந்த மைக்கேல் சாரிடம் கொண்டு போனேன்.
 
“சார்,சீனுவோட அக்கா இந்த புக்கை கொடுத்தனுப்பி இருக்காங்க”
 
சாருக்கு ஒரே ஆச்சர்யம்.
 
“யார்ரா அது சீனுவோட அக்கா?”
 
“மாலா சார். எட்டாவது பி செக்சன்”
 
“நான் எதுவும் புக் கேட்கலையே. சரி அப்படி வை. நாளைக்கு என்னன்னு கேட்போம்”
சரி சாரென்று அப்படியே அந்த புத்தகத்தை வைத்து விட்டுப் போயிருக்கலாம். அங்கு தான் என் ஆர்வக் கிறுக்கு வேலை செய்ய ஆரம்பித்தது.
 
அப்போதெல்லாம் எனக்கு ஒரு விஷேசமான பழக்கம் உண்டு. அட்டை போடப்பட்டிருக்கும் புத்தகங்களின், மேல் அட்டையைப் பிரித்து, உள்ளே பார்ப்பது. சீனு கொடுத்துவிட்டுப் போன புத்தகத்தின் உள் அட்டையை பார்ப்பதற்காக, தினத்தந்தி பேப்பரால் போடப்பட்டிருந்த அட்டையை பிரித்தேன். உள்ளிருந்து கோடு போட்ட பரீட்சை தாள் போல ஒன்று கீழே விழுந்தது.எடுத்துப் பிரித்து பார்த்தேன். 
 
இரண்டு பக்கமும் ஏதும் எழுதாத வெறும் தாள். ஆனால் பேப்பர் சற்று கனமாக இருந்தது. இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்ததில் ஒன்றைக் கண்டுபிடித்தேன்.இரண்டு தாள்கள் ஒன்றாக ஒட்டப்பட்டிருந்தன. கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ஒட்டப்பட்ட ஈரம் இன்னும் இருந்தது.
 
மேலே சற்று உயர்த்தி வெளிச்சத்தில் பார்த்தபோது,உள்ளே எழுதப்பட்டிருந்த எழுத்துகள் தெரிந்தன. நகங்களைக் கொண்டு மிக மெதுவாக இரண்டு தாள்களையும் பிரித்தேன். பிரிக்கப்பட்ட தாள்களின் இரண்டுபக்கங்களிலும் உள் பகுதியில் ஏராளமான வரிகள் நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்டிருந்தன.
 
“என் ப்ரியமானவருக்கு,
 
இந்தக் கடிதம் உங்களுக்கு ஆச்சரியம் தரலாம். ஒரு சில சினிமாக்களில் வருவது போல் ஒரு மாணவி ஆசிரியருக்கு எழுதும் காதல் மடல்……”
 
காதல் என்ற வார்த்தை எல்லாம் அந்த வயதில் எனக்கு எந்த அளவிற்கு புரிந்தது என்று இப்போது சொல்லத் தெரியவில்லை. பேப்பர்களை எடுத்துக் கொண்டு,உள் அறைக்கு ஓடினேன்.
 
“சார்,சீனு குடுத்துட்டுப் போன புஸ்தகத்தோட அட்டையில இந்த பேப்பர் இருந்துச்சு சார்”என்று பேப்பர்களை நீட்டினேன். எப்படிக் கண்டுபிடித்தேன் என்பதையெல்லாம் சொன்னேன்.
 
தாள்களைக் கையில் வாங்கியவர்,அடுத்த அரைமணி நேரத்திற்கு அதை மறுபடி மறுபடி படித்துக் கொண்டிருந்தார்.
o
மைக்கேல் சார் அவராகப் போய் மாலாவின் சித்தப்பா ஒருவருடன் பேசியதும்,அடுத்த சில நாட்களில் மாலா எங்கள் பள்ளியில் இருந்து வேறொரு பள்ளிக்கு மாற்றப்பட்டாள்.
அங்கிருந்தும் இன்லேன்ட் லெட்டரில் கடிதங்கள் வந்தது.பின்பு எங்கள் ஊரை விட்டே வேறெங்கோ கொண்டு செல்லப்பட, கொஞ்ச நாட்களில் மாலா எங்கிருக்கிறாள் என்றே யாருக்கும் தெரியாமல் போனது. அந்த இடத்தையும் கண்டுபிடித்து மைக்கேல் சார் மாலாவுடன் பேசி உறுதியளித்துவிட்டு வந்தார். (“பதினெட்டு வரை பொறு,
 
ப்ருதிவிராஜ் மாதிரி கொத்திக் கொண்டு போய் மணந்து கொள்கிறேன்”).பின் வந்த நாட்களில் நடந்தவைகள், எனக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.
 
நானும் ஒன்பதாவது படிக்க வேறொரு பள்ளிக்குப் போனதில், மைக்கேல் சார் தொடர்பு முற்றிலும் விடுபட்டுப் போனது.
 
பதினைந்து வருடத்திற்குப் பின், இன்று கண்ட, மைக்கேல் சாரின் மனைவியிடம் மாலாவின் ஜாடை சிறிதும் இல்லாவிட்டாலும், நிறம் ஏறக்குறைய அதே தக்காளி சிவப்பில் இருந்தது.
எதையாவது சொல்லட்டுமா….78
 
அழகியசிங்கர்
 

 செப்டம்பர் மாதம் ஐந்தாம்தேதி என் மாமியார் சுப்புலட்சுமி அம்மாள் இறந்துவிட்டார்.  அவருக்கு வயது 89.  உலகில் எல்லா மூலைகளிலும் இப்படி எத்தனையோ சுப்புலட்சுமிகள் இறந்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் முதியவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பது முக்கியமான விஷயமாக எனக்குப் படுகிறது.  ஒருமுறை ஜீ எஸ்டி ரோடில் உள்ள சாலை ஓரத்தில்  ஒரு முதியவர் யார் கவனிப்பின்றி கிடக்க, போலீஸôர் அவரை விஜாரித்தபோது யார் அவரை அப்படி தள்ளிவிட்டுப் போனார்கள் என்பதை அவர் சொல்ல மறுத்துவிட்டார்.

 என் வீட்டில் கீழே இருந்த ஒருவர், அவர் அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாது என்ற நிலைக்கு வந்து அவரும் அவர் மனைவியும் சேர்ந்து தாம்பரத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார்கள்.  அங்குபோய் சேர்ந்த சில வாரங்களுக்குள் அவர் தாயார் இறந்து விட்டார்.  அம்மாவைப் பார்த்துக்கொள்ள முடியாத  கொடுமையாக இது என் மனதில் பட்டது.  அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் கொஞ்சநாட்கள் அவர் உயிரோடு இருந்திருக்கலாம்.  ஏன் நமக்கு இந்தப் பொறுமை ஏற்படுவதில்லை? நம்மை வளர்த்த அம்மாவைக்கூட நம்மால் ஏன் பார்த்துக்கொள்ள முடியவில்லை?

 எங்கள் வீடு இருக்கும் தெரு முனையில் ஒரு முதிய ஆசிரியை தனியாக வசித்து வந்தார்.   அவர் ஏன் தனியாக இருந்தார் அவ்வளவு பெரிய வீட்டில் என்ற கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை.  ஆனால் ஒரு தீபாவளியின்போது  அவர் வீட்டிற்கு திருட வந்தவன்.  அசிரியையின் நகைகளைப் பறிக்க முயற்சித்தான்.  அவன் எடுத்துக்கொண்டு போகட்டும் என்று விட்டுவிடாமல்  போராடியதால், இரக்கமே இல்லாமல் அந்த முதியப் பெண்மணியைக் கொன்றுவிட்டு நகைகளைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டான்.  அந்த தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது. 
   
 நினைவுத் தப்பிப்போய் மரணப்படுக்கையில் பிரமிள் இருந்தார்.  அவரும் ஒரு தனிமைவாசி.  அவரை வேலூர் அருகிலுள்ள கரடிக்குடி என்ற கிராமத்திலுள்ள சிறிய அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி நேரிட்டது.  அந்த மருத்துவமனையைப் பார்த்துக்கொள்பவர் பிரமிளின் விசிறி. பிரமிள் நினைவுத் தப்பிப்பேய் கிடக்கிறார்.  அப்படியே சில தினங்களில் மரணம் அடைந்து விடுகிறார்.  அவரைப் பார்த்த செவிலிப்பெண்களுக்கு அந்த மருத்துவமனையில் அவருடைய மரணம்தான் முதல் மரணம்.  நினைவுத் தப்பிப்போன பிரமிளுடன் அவர்கள் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை.  புதிதாக அப்போதுதான் மருத்துவமனையில் சேர்ந்திருந்த  செவிலிப் பெண்கள் பிரமிளின் மரணத்தை முதன்முறையாக சந்திக்கிறார்கள்.  அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அவர்கள் வாய்விட்டு அழுததை இன்னும்கூட என்னால் மறக்க முடியாது.

 2050-ல் உலகில் 60 வயது கடந்த முதியவர்கள் அதிக அளவில் இருப்பார்கள் என்று ஐ.நா அறிக்கையில் ஒரு தகவல் வெளியிட்டிருக்கிறார்கள்.  ஆனால் 60 வயதில் எத்தனைபேர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.  பலர் வியாதிகளுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.  உலகில் சர்க்கரை நோயுடனும், ரத்த அழுத்த நோயுடனும் மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு பலர் இருப்பார்கள்.  இறக்கவும் முடியாமல், இருக்கவும் முடியாமல். 
 எனக்கு நகுலன் கவிதைதான் ஞாபகம் வருகிறது.  =இருப்பதற்காக வருகிறோம..இல்லாமல் போய் விடுகிறோம்.+ படிப்பவர்கள் மனதை கிலிகொள்ள வைக்கும் கவிதை.

 சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் தேவதச்சன் என்ற கவிஞரின் கவிதையை என்னிடம் படிக்கக் கொடுத்தார்.  அந்தக் கவிதையின் முதல் வரி, =உயிர் பிரிவதற்கு ஒரு நிமிடம்தான் இருக்கிறது+ என்று இருக்கும். இந்தக் கவிதையைப் படிக்கும்போது என்ன இப்படி எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது.  ஏன்எனில் படிப்பவரை தேவையில்லாமல் சலனப்படுத்தும் கவிதை இது.  இப்படி சலனப்படுத்துவது அவசியமா என்ற கேள்வி என் மனதில் எழும். நம் வாழ்க்கையில் எத்தனையோ அதிர்ச்சிகளை தினம் தினம் செய்தித்தாள்கள் மூலம் அறியாமல் இல்லை.  ஆனால் அந்த அதிர்ச்சியை உணர்ந்த நாம் அந்த நிமிடமே மறந்தும்விடுவோம்.       திருவல்லிக்கேணியில் ஒரு கட்டடம் இடிந்து தரை மட்டமானது என்பது முதல் நாள் அதிர்ச்சி தகவல்.  அடுத்தநாள் அது சாதாரண நிகழ்வாக மாறி அந்த இடத்தைப் போய்ப் பார்க்கிறோம். அதிர்ச்சி நிகழ்வு வேடிக்கைப் பார்க்கும் நிகழ்வாக மாறி விடுகிறது.  ஆனால் தேவதச்சனின் கவிதையைத் திரும்பவும் படித்தால் அந்த அதிர்வை சலனத்தை எப்போதும் அது உண்டாக்கும். படிப்பவருக்கு இது தேவையா என்றும் நினைக்கலாம.

 நான் சீர்காழியில் இருக்கும்போது, =என்ன மூதியோர் இல்லம் நடத்துகிறாயா?+ என்று என் மனைவியைக் கிண்டல் செய்வது வழக்கம்.   89 வயதான என் மாமியார், 90 வயதான என் அப்பா, 75 வயது நிரம்பிய என் வீட்டில் பணிபுரிபவர் என்று வயதானவர்களின் ஆதிக்கம் என் வீட்டில் இருந்தது.  மனைவியால் தனியாக சமாளிக்க முடியாது என்பதால் நான் இங்கு வர நேர்ந்ததா என்றெல்லாம் யோசிப்பேன்.  என் மாமியார் 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடன் வாழ்ந்தவர்.  குடும்பத்துடன் நாங்கள் வெளியூருக்குப் பயணம் செய்தால் எங்களுடன் தெம்பாக வருபவர்.  மே மாதத்தில் என் புதல்வனின் திருமணத்தில் உற்சாகமாகக் கலந்துகொண்டவர். 

 கார்லஸ் காஸ்டினேடா ஒரு புத்தகத்தில், மரணம்தான் ஒரு மனிதனின் எதிரி என்று எழுதியிருக்கிறார்.  வேறு யாரும் எதிரி இல்லையாம்.  அவருடைய புத்தகங்கள் எல்லாம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்றன.  இன்னும் விற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படியெல்லாம் எழுதி புகழ்பெற்ற காஸ்டினேடா இறந்த விஷயம் ஒரு மாதம் கழித்துத்தான் டைம் பத்திரிகையில் வெளிவந்தது.  அவர் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இடையே அவர் சம்பாதித்த சொத்தின்மீது கோர்ட்டில் உரிமைக் கொண்டாடி சண்டை.

AT THE HOUR OF DEATH  என்ற புத்தகம் படித்தேன்.  அந்தப் புத்தகத்தில் மரணம் அடையும் தறுவாயில் அவர்கள்  கண் முன்னால் அவருக்கு முன்னால் இறந்தவர்கள் கண்ணில் படுவார்களாம்.  சிலருக்கு யேசு தென் படுவார் அல்லது முருகன் தென் படுவார்.  என் பாட்டி இறந்துபோகும் தருணத்தில் எப்போதோ இறந்துபோன அவருடைய கணவர் வந்ததாக சொல்லியிருக்கிறார். அதைக் கூறியபோது அவர் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. நல்ல நினைவு இருக்கும்போது, =போனால் தேவலை..+ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.  ஆனால் இதுமாதிரி ஏற்படுவதற்குக் காரணம்.  உடம்பில் சோடியம் பொட்டாசியம் குறைந்து போவதால் உண்டாகிறது என்று மருத்துவ உண்மை குறிப்பிடுகிறது. என் மாமியார் மரணம் அடையும் தருணத்தில்தான் இதை உணர்ந்தேன்.  நடக்க முடியாத வலியுடன் என் மாமியார் சில தினங்கள் நாற்காலியைத் தள்ளி தள்ளி நடந்து தன் தேவைகளை  ஜாக்கிரதையாகப் பூர்த்தி செய்துகொண்டார்.  ஆனால் ஒரு தருணத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் மிகக் குறைந்த உயரத்தில் இருந்த திவானிலிருந்து கீழே விழுந்துவிட்டார்.  அடிப்பட்டு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.  அவருக்கு வலியும் தெரியவில்லை. கத்தவும் இல்லை.

 மகேஷ்பட் என்கிற ஹிந்திப் படத் தயாரிப்பாளர்- டைரக்டர்,  யூ ஜி கிருஷ்ணமூர்த்தியிடம் அளவுகடந்த மதிப்பும்  மரியாதையும் கொண்டவர்.  யூ.ஜியைச் சுற்றி சுற்றி வருபவர்.   A TASTE OF LIFE என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.  அப்புத்தகம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தியின் கடைசி தினங்களை விவரிக்கிறது.  ஓரிடத்தில் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்.  ‘நான் இறந்தபிறகு என் உடலை என்ன செய்யப்போகிறீர்கள்.  அதைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுங்கள்’ என்று. 

 டிசம்பர் 1ஆம் தேதி எனக்கு 60 வயது ஆரம்பமாகிறது.

(அம்ருதா நவம்பர் 2012 இதழில் வெளிவந்த கட்டுரை)
 
 
V GANESH

வட்டம்
 
 

சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு
ஓடி வந்த நாயொன்றின் மேல்
கல் வீசப்பட
அது வள்ளென்று குரைத்தவாறு
கண்ணாடி ஜாடியின் மேல் வந்து மோத
ஜாடியின் உள்ளிருந்து விழுந்து
சிதறிய
மாமிசத் துண்டங்களைத் திண்பதற்கு………
ஆரம்பம் எது முடிவெது
என்ற குழப்பத்தில்
ரங்கராட்டினம் போல்
ஒரு வட்டத்தில் இலக்கின்றி
சுழன்று கொண்டிருந்த அது என்ன?
எண்ணவோட்ட்மா? நினைவுப்பெருக்கா?.
சுழன்று கொண்டிருந்த எண்ணத்தை
அல்லது நினைவை
நேர்படுத்துவதற்காய்
இன்னொரு தளத்தில்
செலுத்தும் போது
இயந்திரக் கோளாறு
காரணமாக
தரையிறக்குவதாக
அறிவிப்பு.
தரை தட்டும் முன்னர்
நீர் தட்டியது.
தலைகீழ் “ட” வடிவில்
விமானத்தின் சிறகுகள் வளைந்து
துடுப்பு போல இயங்கின
மூழ்காத விமானம்
நீரில் பேருந்தாக
அசுர வேகத்தில்,
வட்டப் பாதையில் ஓடியது
வட்டத்திலிருந்து குதிக்காமல்
கரையை அடைதல் சாத்தியமா?
பதற்றத்துடன் நகர்ந்த
காலத்துளிகளில்
மாமிசத்துண்டுகளை திண்ண வந்து
அடிபட்ட நாயின் அவஸ்தையுடனும்
கண்ணாடி ஜாடியுள்ளிருந்து
விழுந்த மாமிசத் துண்டுகள் போல
எல்லா திக்குகளில் சிதறியும்
ஒய்வற்று சுற்றியது.
சடக்கென விழித்தெழுந்தது உடல் பிரக்ஞை.
அடிவயிற்றில் ஒர் இறுக்கம்.
கழிப்பறை சென்று
விசையுடன் வெளிவரும் குழாய் நீரென
சிறுநீரை கழித்து ஆசுவாசமடைந்த பின்னர்
உறக்கத்தை நிம்மதியாய் தொடர்கையில்
உடல்பிரக்ஞை மீண்டும் மாயமாய் மறைந்து
சுழற்சிக்குள் நுழைந்து
வண்ணத்துப்பூச்சி உருவில்
ஒவ்வொரு மலராக
உட்கார்ந்து உட்கார்ந்து
நீள்வட்டப் பூப்பாதையில்
போய்க் கொண்டிருந்தது..


 

வீழ்தலின் நிழல்

 

ஒரு கோட்டினைப்
போலவும்

பூதாகரமானதாகவும்
மாறி மாறி

எதிரில்
விழுமது

ஒளி
சூழ்ந்த

உயரத்திலிருந்து
குதிக்கும்போது

கூடவே
வந்தது

பின்னர்
வீழ்ந்ததோடு சேர்ந்து

ஒரு புள்ளியில்
ஐக்கியமாகி

ஒன்றாய்க்
குவிந்ததும்

உயிரைப் போல

காணாமல்போன நிழலில்

குருதியொட்டவே
இல்லை


எம்.ரிஷான் ஷெரீப்
பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
 
 
அழகியசிங்கர்

9.
 

நன்றாக கவனித்துக்கொண்டார்கள்.  யாரும் இப்படி கவனித்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  நான் யார்? அவர்கள் யார்? இந்தக் காலத்தில் உறவுமுறைகள் எல்லாம் கேலிக்குரிய ஒன்றாக மாறிவிட்டது.
 
உற்சாகமாக எனக்கு வனஜா சமையல் செய்து போட்டதை நான் மறக்க முடியாது.  எனக்குத் தோன்றியது.  இந்த பெரியம்மா, பெரியப்பா உயிரோடு இருந்திருக்கும்போது நான் வந்திருக்கக் கூடாதா என்று.  அப்போது வந்திருந்தால் அவர்களை என் கூடவே இருந்திருக்கச் சொல்லியிருப்பேன்.

வனஜாவைப் பற்றி எப்படிச் சொன்னாலும், அவள் என்னிடம் அன்பாக இருந்தாள். ஒவ்வொரு முறையும் வாய்நிறைய ”அண்ணா, அண்ணா” என்று கூப்பிடுவாள்.  என் பெரியப்பா பையன் மூர்த்தி அவ்வளவாகப் பேச மாட்டான்.  ஏன் பேசத் தெரியாது.

 
நான் பந்தநல்லூருக்கு வந்த அடுத்தநாள், மயூரநாதர்  கோயிலுக்குக் காலையில் சென்றேன்.  தனியாகத்தான்.  அந்தக் காலை நேரத்தில் அந்தக் கோயில் ஹோ என்றிருந்தது.  அம்மன் சந்நிதிக்குப் போய் நின்றேன்.  யாருமில்லை.  கோயிலின் அந்தகாரம் பயமுறுத்தியது.  அந்த இடத்திலிருந்து ஓடி வந்துவிடலாமென்று நினைத்தேன்.  ஏன் இந்தத் தனிமையில் அம்மனைப் பார்க்கும்போது பயம் புகுந்துவிடுகிறது.
 
இது குறித்து அழகியசிங்கரிடம் பேசவேண்டுமென்று நினைத்தேன்.
 
வள்ளலார் கோயில் சந்நிதித் தெருவில் வனஜா குடியிருக்க நல்ல இடமாக வாடகைக்குப் பார்த்துக் கொடுத்தாள். அவள் முன்பு குடியிருந்த இடம்தான்.  நான் வங்கியில் பணிபுரிகிறேன் என்பதால் வாடகை கொஞ்சம் அதிகமாக கேட்டார்கள்.  நானும் சரி என்றேன்.  எனக்கு என்னமோ அந்த இடத்தை விட முடியவில்லை.  மேலும் கோயில் இருக்கும் இடத்தில் வீடு.
 
அழகியசிங்கரை ஒருமுறை வரும்படி கூப்பிட்டேன்.  பெரியப்பா பையன் வீட்டில் இருந்தபோது இரவு நேரங்களில் யூரின் போக நான் அவதிப்பட்டேன்.  மேலும் பல கதவுகளைத் திறந்துதான் பாத்ரூம் போக வேண்டும்.  இரவு நேரத்தில் கதவுகளைத் திறந்தால், பயங்கரமாக சத்தம் போடும்.  பின் நான் யூரின் போவது எல்லோருக்கும் தெரிந்துவிடும்.
 
 
(To be continued)
 
 
 
 
 
நானும் அசோகமித்திரனும்….
 
 
அழகியசிங்கர்
 
 
அசோகமித்திரனை நான் எப்போது சந்தித்தேன்.  அவரை முதலில் சந்தித்தேனா அல்லது அவரைப் பற்றி எப்போது எந்தச் சந்தர்ப்பத்தில் அறிந்துகொண்டேன்.  இந்தக் கேள்விகளுக்குமுன்னால், நான் நூல்நிலையத்தில் அதிகமாகப் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளவன்.  ஒவ்வொரு முறையும் நூல் நிலையம் போகும்போது எனக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் படித்துக்கொண்டிருப்பேன்.  ஒருமுறை என்ன சிறுகதைத் தொகுப்பு என்பது ஞாபகம் இல்லை.  அசோகமித்திரன் என்ற பெயரில் ஒரு சிறுகதைத் தொகுதியைப் பார்த்தேன்.  மிகத் தயக்கத்துடன் எடுத்து வைத்துக்கொண்டேன்.  அத் தொகுப்பில் கதைகள் எல்லாம் சின்ன சின்ன கதைகளாக இருக்கும்போல் தோன்றியது.  அப்போது எனக்கு அறிமுகமான எழுத்தாளர்கள்.  சுஜாதா,இந்திரா பார்த்தசாரதி, கல்கி, நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், ஜெயகாந்தன், அகிலன் போன்ற எழுத்தாளர்கள்தான்.  முதன் முதலாக அசோகமித்திரனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  ஆரம்பத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ஆனால் வித்தியாசமாக இருப்பது போல் தோன்றியது.  ஒவ்வொரு சிறுகதையிலும் ஆரம்பமும் முடிவும் இல்லாததுபோல் தோன்றியது.  ஆனால் படிக்கத் தூண்டியது.  என் முதல்வாசிப்பிலேயே அகிலன், ந.பா எழுத்துக்களைப் படிக்க முடியவில்லை. 

 அடுத்த வாசிப்பில் இன்னும் சிலபேர்கள் விலகிவிட்டார்கள்.  ஆனால் இன்னும் சிலபேர்கள் சேர்ந்தார்கள்.  அசோகமித்திரன் தொடர்ந்து இருந்து கொண்டு வந்தார்.  அவர் பெயரைக் கண்டால் அப்புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்து விடுவேன்.  அசோகமித்திரன் எதை எழுதினாலும் அவர் ரசித்து எழுதுவதாக தோன்றும்.  வாசகர்களும் அந்த ரசிப்புத் தன்மையை நிச்சயமாக உணர்வார்கள்.

 அசோகமித்திரன் கணையாழியில் எழுதிக்கொண்டிருந்தார்.  அதனால் அவர் என்ன எழுதுகிறார் என்பதைப் படிக்க கணையாழியை வாங்குவேன்.  இந்த கணையாழி மூலமாக அவர் சொல்கிற பலவற்றை நான் புரிந்துகொண்டேன்.  எத்தனையோ நல்ல சினிமாக்களை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  எத்தனையோ நல்ல புத்தகங்களை, பத்திரிகைகளை அவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  அவர் சொல்கிற உத்தியும் ஒரு சிறுகதையை எழுதுவதுபோல் இருக்கும். அவர் மூலம்தான் ஐ பி ஸிங்கரை நான் தெரிந்துகொண்டேன். அவருடைய புத்தகங்களை அமெரிக்கன் லைப்பரரியில் தேடிக் கண்டுபிடித்து படிக்க ஆரம்பித்தேன்.  நான் அழகியசிங்கராக மாறுவதற்கு அது ஒரு காரணம்.

 நானும் அந்தச்சமயத்தில் கொஞ்சம் கொஞ்சம் எழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன்.  நான் எழுதி அனுப்பிய சிறுகதைகளை பிரபல பத்திரிகைகள் பிரசுரம் செய்யவில்லை. எல்லாம் திரும்பி திரும்பி வந்துவிடும்.  ஒருமுறை ஆனந்தவிகடனுக்கு எழுதிய கதை ஒரு வருடம் கழித்து திரும்பி வந்துவிட்டது.  வெறுத்துவிட்டேன். 

 இன்னும் பல எழுத்தாளர்களை நான் கணையாழி மூலமாகவும், அசோகமித்திரன் மூலமாகவும் தெரிந்து கொண்டேன்.  ஒரு முறை =கவனம்= என்ற பத்திரிகையைப் பற்றி ஒரு குறிப்பு கணையாழில் வந்தது. அந்தப் பத்திரிகையை வாங்குவதற்காக மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் வந்து கவனம் பத்திரிகை நடத்தும் இடத்திற்கு வந்தேன்.  அது ராஜகோபாலன் என்பவரின் வீடு என்பதைத் தெரிந்துகொண்டேன்.  இப்படி ஒரு பத்திரிகை நடத்த தனி அலுவலகம் என்பது தேவையில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். 

 கவனம் பத்திரிகை மூலம், ஞானக்கூத்தன், ராஜகோபாலன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், காளி-தாஸ், வைத்தியநாதன் முதலிய நண்பர்களைச் சந்தித்தேன்.  ஒரு சந்தர்ப்பத்தில் ஆத்மாநாமும் என் கண்ணில் பட்டார்.  சம்பத்தையும் அறிவேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பீச்சில் ஏதோ ஒரு சிலைக்குப் பக்கத்தில் நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.  ஏதோ ஒரு சிலை என்று ஏன் சொல்கிறேன் என்றால் பாரதியார் சிலைக்குப் பக்கத்தில் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.

 ஆனால் அசோகமித்திரனை என்னால் மறக்க முடியாது.  அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஒரு முறை பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளை தி நகரில் நிகழ்ந்தது.  அந்தச் சந்திப்பு அவர் ஞாபகத்தில் இருக்க வாய்ப்பில்லை.

 அடுத்தமுறை அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் என்னுடைய குறுநாவல் ஒன்று கணையாழியில் பிரசுரம் ஆக இருந்தது.  அந்த குறுநாவலில் வங்கியில் பணிபுரிபவர் ஒருவர் கதாபாத்திரமாக வந்திருப்பார்.  நானும் வங்கியில் பணிபுரிவதால் யாராவது படித்து பிரச்சினை ஆகிவிடுமோ என்று நினைத்துப் பயந்து அசோகமித்திரன் வசிக்கும் தி நகர் வீட்டிற்கு சென்றேன்.  நான் அவரைப் பார்த்த சமயம் அவருக்கு உடம்பு சரியில்லை.  படுத்துக்கொண்டிருந்தார்.  என்னைப் பார்த்தவுடன் நான் அவரிடம் =வங்கியில் பணிபுரிபவர்+ என்பதை நீக்கி விடலாமா என்று கேட்டேன்.  அவர் அதெல்லாம் மாற்ற வேண்டாம்.  ஒரு பிரச்சினையும் வராது என்று கூறிவிட்டார். 

 மேலும் அவர் என் குடும்பத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் விஜாரித்தார்.  அசோகமித்திரன் அவரைப் பார்த்துப் பேச வருபவர்களிடம் அக்கறை உள்ளவர்.  கல்லூரிப் படிக்கும் மாணவர்கள் யாராவது கதை எழுதுபவர்களாக இருந்தால் படிப்பை முடித்துவிட்டு எழுதுங்கள் என்று கூறக்கூடியவர்..  அதேபோல் வேலை தேடிக்கொண்டிருப்பவர் கதை எதாவது எழுதினால் முதலில் வேலையைத் தேடுங்கள் எழுதுவது அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லக் கூடியவர்.  அதே சமயத்தில் போரடிக்கும்படி அவரிடம் பேசிக்கொண்டிருந்தால், பேச வந்தவரின் மனம் கோணாதபடி அனுப்பி விடுவார்.

 அசோகமித்திரன் ஒரு எளிமையான மனிதர்.  அவர் எழுத்தில் காணப்படும் எளிமை அவர் பேச்சிலும் காணப்படும். நகுலன் எழுத்தில் தூக்குதலாக தெரியும் தன் உணர்வுத் தன்மை அசோகமித்திரனிடம் இருக்காது.  அதேபோல் மிகை உணர்ச்சித் தன்மையும் அவர் எழுத்தில் காணப்படாது.  ஒரு தினசரி பத்திரிகையை எடுத்துப் படிப்பதுபோல அவர் எழுத்து சரளமாகப் போய்க் கொண்டிருக்கும்.  ஆனால் அந்த எழுத்தில் ஒரு ஆழம் இருக்கும். 

 முதலில் நவீன விருட்சத்திற்கு எதாவது எழுதித் தருவாரா என்ற சந்தேகம் இருந்தது.  அவரிடம் தயங்கி தயங்கி கேட்டுக்கொண்டபோது அவர் தொடர்ந்து எழுதிக் கொடுக்க ஆரம்பித்தார்..  கேட்ட ஒரு வாரத்தில் எல்லாம்  எழுதி அனுப்பி விடுவார்.  ஆனால் என் பத்திரிகையைக் கொண்டுவர நான் இன்னும் பல நாட்கள் எடுத்துக்கொள்வேன்.  இரண்டு பக்கங்களுக்கு மேல் அவர் எழுதித் தரமாட்டார்.  சரியாக அளவு எடுத்து அனுப்புவதுபோல் அவர் கட்டுரை அமைந்திருக்கும். 
  

  (நவீன விருட்சம் சார்பாக 22.09.2012 அன்று நடந்த அசோகமித்திரன் 82 என்ற கூட்டத்தில் பேசிய கட்டுரை.  கூட்டம் 200க்கும் மேல் கூடியுள்ள கூட்டம்.  சிறப்பாக நடந்தது. )

சிறுவன்

முடிவேயற்று
மிகவும் நீண்ட

அந்தப் பேரூந்துப்
பயணத்தில் வாந்தியெடுத்த,

காய்ச்சலுக்கு
தெருவோரக் கடையொன்றில்

தேயிலைச் சாயம்
குடித்த,

அப்பாவைத் தேடி
அம்மாவுடன்

*பூஸாவுக்குச்
சென்ற…

கல்லெறிந்து
மாங்காய்ப் பிஞ்சுகளை

பையன்கள்
பறித்துப் போகையில்

அவர்களுக்கொரு
பாடம் புகட்டிட

அப்பா
இல்லாததால்

உதடுகளைக்
கடித்து

பெருமூச்சைச்
சிறைப்படுத்திக் கொண்ட…

ஒருபோதும் தான்
காண அழாத அம்மா

மறைவாக அழுவதைக்
கண்டு

உறங்காமல்

உறங்குவது போல்
தலையணை நனைய அழுத…

ஆற்றில் சுழிகள்
உடையும் விதத்தை

இரவுப் பூக்கள்
மலரும் விதத்தை

நட்சத்திரங்கள்
உதிர்ந்து வீழும் விதத்தை

தன்னந்தனியாகப்
பார்த்திருந்த…

எவ்வளவு
துரத்தியும் போகாத

அந்தக் கருத்த,
ஒல்லியான, விடலைச் சிறுவன்

இருக்கிறான்
இன்னும்

நள்ளிரவில்
விழித்து அவன்

அவ்வப்போது
தனியாக அழுகிறான்

ஈரமாகிறது எனது தலையணை

*பூஸா – இலங்கையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களின் சிறைச்சாலை அமைந்திருக்கும் இடம்

இஸுரு
சாமர சோமவீர

எம்.ரிஷான் ஷெரீப்,