எதையாவது சொல்லட்டுமா….77
 

அழகியசிங்கர்
 

 ஜே. கிருஷ்ணமூர்த்தி யார் மூலம் எப்படி அறிமுகம் என்பதை சில நாட்களாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.  புரியவில்லை. ஆனால் கிருஷ்ணமூர்த்தி சென்னை வரும் ஒவ்வொரு ஆண்டும் நான் அங்கே போய் நின்றுவிடுவேன்.  ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில் என் பொழுது கிருஷ்ணமூர்த்தி பேச்சைக் கேட்பதில் போய்விடும்.  சில சமயம் அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு காலை நேரத்தில் நடக்கும்  உரையாடல்களில் என் கவனம் செல்லும்.  எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.  இன்னும்கூட ஞாபகம் இருக்கிறது.  கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் நான் படிக்காமல் இருந்தது.

 பிரமிளும் நானும் பல தடவைகள் சந்திக்கும்போது கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.  ஒரு முறை பிரமிளுடன் நான் தி நகரில் நடேசப் பூங்கா உள்ள எதிரில் உள்ள  ஒரு பெரிய விளையாட்டு மைதானத்திற்குச் சென்றோம்.  பிரமிள் ஒருவரைச் சுட்டிக் காட்டினார்.

 “யார் அவர்? ” என்று கேட்டேன்.

 “உங்களை மாதிரி வங்கியில் ஒரு காலத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தவர்..”

 “ஏன் இப்போது இல்லையா?”

 “இல்லை.  அவரை வேலையை விட்டுத் துரத்தி விட்டார்கள்…”

“எதாவது பணம் திருடினாரா?”

 ”இல்லை..ஆனால் ஜே கிருஷ்ணமூர்த்திதான் அவர் வேலை போவதற்குக் காரணம்..”

 பிரமிள் சொன்னது எனக்கு திகைப்பாக இருந்தது.  ”எப்படி?” என்று கேட்டேன்.

 ”அவருக்கும் ஜே கிருஷ்ணமூர்த்தி மாதிரி மாற வேண்டும்போல் தோன்றியது.  வங்கிக் கிளையில் கிருஷ்ணமூர்த்தி மாதிரி பிரசங்கம் செய்யப் போவதாக சொல்லி அலுவலகத்தில் சத்தமாகப் பேச ஆரம்பித்தார்.  பின் நிலைமை மோசமாகி வங்கிக் கிளையில் உள்ள லட்ஜர்களைக் கிழிக்க ஆரம்பித்தார்…அவர் குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து முதலில் விட்டுவிட்டார்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு செய்யாமல் வேலையை விட்டு போக சொல்லி விட்டார்கள்…”

எனக்கு  கேட்க வருத்தமாக இருந்தது.  ஆனால் பிரமிள் இன்னும் சில சம்பவங்களை கிருஷ்ணமூர்த்தி பற்றி சொன்னார். 

 ”புத்தரைவிட கிருஷ்ணமூர்த்தி மேலானவர்..அவருடைய தத்துவம் நவீனத்துவமானது…புத்தரை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் கிருஷ்ணமூர்த்தி..” என்றெல்லாம் பிரமிள் என்னிடம் சொல்லியிருக்கிறார்.   

 நானும் அவர் சொல்வதில் உண்மை இருப்பதாக நினைப்பதுண்டு.. நானும் அவரும் கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு வராத சமயத்தில்கூட வசந்தவிஹாருக்கு சனிக்கிழமை செல்வோம்.  அங்கு காட்டும் வீடியோ பார்க்காமல் இருக்க மாட்டோம்.

 கிருஷ்ணமூர்த்தி சென்னைக்கு வரும்போதெல்லாம் சென்னை கலகலவென்று இருக்கும்.  பல எழுத்தாளர்களை நான் இங்கு சந்தித்திருக்கிறேன்.  ஆத்மாநாம் கையை குலுக்கியிருக்கிறேன்.  குலுக்கும்போது அவர் கை நடுங்கிக் கொண்டிருக்கும். 

 கிருஷ்ணமூர்த்தி கூட்டம் முடிந்து நானும் பிரமிளும் ஒரு நாள் திரும்பி வரும்போது, ”என்ன பாஸ்..” என்று கூறியபடி ஒரு நண்பர் பிரமிள் பாக்கெட்டில் பணத்தைத் திணித்தார்.  எனக்கு திகைப்பாக இருந்தது.  பிரமிளுக்கு இப்படி பலர் உதவி செய்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

 அந்த நண்பர் போனபின் பிரமிள் அவரைப் பற்றி சொன்னது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.  ”கிருஷ்ணமூர்த்திதான் அவரை மரணத்திலிருந்து காப்பாற்றினார்..”

”எப்படி?”
 ”இவரும் இவருடைய தம்பியும் பயங்கர கஞ்சா பிடிப்பவர்கள்.  ஒரு நாள் தீவிரமாகப் போய் இவர் தம்பி இறந்து விட்டார்..இவரும் மருத்துவமனையில் சேர்ந்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு தப்பித்தார்..அப்போது இவரை கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு அழைத்துப் போனேன். அவர் கஞ்சா பக்கமே அதன்பின் போகவில்லை. ”

 எனக்குக் கேட்க ஆச்சரியமாக இருந்தது.  என் அலுவலகத்தில் நான் கிருஷ்ணமூர்த்தி படிப்பேன் என்று யாருக்கும் தெரியாது..ஆனால் நான் கிருஷ்ணமூர்த்தி படிப்பதால் கர்வமாக இருப்பேன்.  ஏன் என்றால் கிருஷ்ணமூர்த்தி என்றால் யாருக்கும் தெரியாது..புரியவும் புரியாது.  ஒருவர் கிருஷ்ணமூர்த்தி படிக்கிறார் என்றால் அவர் மேதாவி என்ற குருட்டுத்தனமான எண்ணம் எனக்குள் இருப்பதுண்டு.  நான் பிரமிளை மதித்ததுகூட கிருஷ்ணமூர்த்தியால்தான். 

 க்ரியாவில் அறிமுகமான ‘வேலி மீறிய கிளைகள்’ என்ற கவிதைத் தொகுதியை எழுதிய நாராணோ ஜெயராமன் என்ற கவிஞரை எனக்கு தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில் பிரமிள் அறிமுகப்படுத்தினார்.  ஜெயராமன் என்ற பெயரை பிரமிள்தான் நாராணோ ஜெயராமன் என்று மாற்றினார்.  இப்படி பலருடைய பெயர்களை எண் கணிதப்படி பிரமிள் மாற்றி இருக்கிறார்.  சங்கர் என்ற பெயரை சுப்பரபூ சங்கர் என்று மாற்றி இருக்கிறார். இப்படி பிரமிள் பெயரை மாற்றியதால் எழுத வேண்டியவர்கள் தொடர்ந்து எழுத முடியாமல் போய் ஓட்டம் பிடித்ததாக எனக்குத் தோன்றுகிறது.  
 
ஜெயராமன் அப்போது சொன்னது எனக்கு இப்போது கூட ஞாபகத்தில் இருக்கிறது. ”ஏன் அசோகமித்திரன், ஞானக்கூத்தனெல்லாம் படிக்க வேண்டும்.. இப்போது எழுதுகிற எந்த எழுத்தாளனும் ஜே கிருஷ்ணமூர்த்தி என்ற ஆகிரிதையை மீறி ஒன்றும் செய்து விட முடியாது.”

 இன்னொரு எழுத்தாளர் சொல்வார்.  கிருஷ்ணமூர்த்தியை யாரும் படிக்கக் கூடாது.. அவரைப் படித்தால்..எழுதுபவர்களுக்கு ஏன் எழுத வேண்டுமென்று தோன்றும்..
 எனக்கு ஆத்மாநாமின் பல கவிதைகள் ஜே கிருஷ்ணமூர்த்தியை ஞாபகப்படுத்தும்.. ‘இல்லாத தலைப்பு’ என்ற கவிதையில் ஆத்மாநாம் இப்படி எழுதுகிறார்..நான் இருக்கிறேன்/ நான் இருக்கிறேன்/ என்பது தெரியாமலே/ இருக்கிறேன்.
 
உண்மையில் ஜே கிருஷ்ணமூர்த்தி படைப்பாளியின் மனதை ஊடுருவி நுழைந்து விடுகிறார்.  அவரிடமிருந்து படைப்பாளி தப்பிக்க வேண்டியது அவசியமாகிறது.
 ஒருமுறை கிருஷ்ணமூர்த்தியின் கால நேர கூட்டத்திற்கு வந்திருந்தேன்.  கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துக் கேட்டார்.  ”நீங்கள் ஒரு துறவி..ஏன் இப்படி அலங்காரமாக ஒப்பனை செய்து கொள்கிறீர்கள்?” எனக்கு அதைக் கேட்கும்போது திகைப்பாக இருந்தது.  கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து இப்படி கேட்டுவிட்டாரே என்று கூட தோன்றியது.  ஆனால் அதற்கு கிருஷ்ணமூர்த்தி சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
”நண்பரே உங்களை மதிப்பதற்குத்தான் இப்படி ஒப்பனை செய்து கொள்கிறேன்…” என்று. 
 என் அலுவலக நண்பர் ஒருவர் சபரிமலை கோயிலுக்குப் போய்க் கொண்டிருப்பார்.  போய்விட்டு வந்தபின் அந்தப் பயணத்தைப் பற்றி போரடிக்கும்படி அளந்து கொண்டிருப்பார்.  அவருக்கு கிருஷ்ணமூர்த்தியை அறிமுகப்படுத்திúன்.  அடுத்த ஆண்டு அவர் சபரிமலை கோயிலுக்குப் போவதையே நிறுத்தி விட்டார். 
 கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம்.  எல்லாவற்றையும் மாற்றக்கூடிய வல்லமைப் படைத்தவர் அவர்.  அவர் வாழ்ந்த காலத்தில் அவரைச் சந்தித்ததை மறக்க முடியாத அனுபவமாகக் கருதுகிறேன். ***
            
                          (அக்டோபர் 2012 அம்ருதா இதழில் பிரசுரமாகி உள்ளது.) 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன