ஆத்மாநாம் கவிதைகள் இரண்டு

கவிதை தலைப்பிடப் படாதது

இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது.

திட்டமிட்டு முடியாது
என்றெனக்குத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன் தானா

ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி

இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்

இப்படியும் ஒரு நம்பிக்கை

இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்

அவற்றின் தவளைக் குரல்கள்
கேட்கும் அடிக்கடி

அதனை ஒதுக்கத் தெரியாமல்
தவிக்கையில்

நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்

நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்

இருதயம்
இதோ இதோ என்று துடிக்கும்.

இன்னும்

புறாக்கள் பறந்து போகும்
கழுத்திலே வைரத்தோடு
கிளிகளும் விரட்டிச் செல்லும்
காதலின் மோகத்தோடு
காக்கைகள் கரைந்து செல்லும்
தானியம் தேடிக்கொண்டு
குருவிகள் கிளுகிளுப் பூட்டும்
கிளைகளில் தவழ்ந்து கொண்டு
பாசிக் கரை படர்ந்த
தாமரைக் குளத்து நீரில்
நீளக்கால் மெல்ல அளையும்
கரை நிழல் கீழமர்ந்து.
பழங்களைக் கடித்துத் தின்ற
அணில்களும் அவ்வப்போது
கேள்விகள் கேட்டாற் போலத்
தலைகளைத் தூக்கிக் காட்டும்
சிவனருள் பூசாரி
குடத்தில் நீரெடுப்பார்
மந்திரம் சொல்லும் வாயால்
தம்மையே நொந்து கொண்டு
கற்புடைப் பெண்டிற் கூட்டம்
அக்கரைக் கற்கள் மீது
ஊர்க் கதை பேசிக்கொண்டு
துணிகளைத் துவைத்துச் செல்லும்
வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.

எதையாவது சொல்லட்டுமா / 32

நான் கடைசியாக நாராணோ ஜெயராமனைப் பார்த்தது தி நகரில் உள்ள ஒரு துணிக்கடையில். அப்போது அவர் எழுதுவதை almost நிறுத்திவிட்டார். பிரமிள்தான் அவர் அங்கு இருப்பதை சொல்லி என்னை நா ஜெயராமனுக்கு அறிமுகப்படுத்தினார். ஜெயராமன் ஜெயின் கல்லூரியில் கெமிஸ்டிரி டிபார்ட்மெண்டில் டெமான்ஸ்டிரேட்டராகப் பணி ஆற்றிக்கொண்டிருந்தார். பின் ஒரு நண்பருடன் சேர்ந்து பார்ட்டனராக ஒரு துணிக்கடை வைத்திருந்தார். அது அவருக்குப் பொருத்தமில்லாத பணி. மேலும் அந்த இடத்தில் எதுவும் போணி ஆகாது. சில பதிப்பாளர்கள் அங்கு புத்தகக் கடை வைத்துக்கூட போணி ஆகாமல் கடையை இழுத்து மூடி விட்டார்கள்.

வேலி மீறிய கிளை என்ற 48 கவிதைகள் கொண்ட தொகுப்பை க்ரியா 1976 நவம்பரில் நாரோணோ ஜெயராமன் புத்தகம் ஒன்றை வெளியிட்டது. அதன் பின் அவர் பெரிதாக எதுவும் எழுதவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் எழுத முடியவில்லை என்பதற்கு சொன்ன காரணம்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

‘எதற்கு எழுத வேண்டும்? ஜே கிருஷ்ணமூர்த்திதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாரே?’ என்றார். ‘ஏன் ஞானக்கூத்தன், அசோகமித்திரன் கூட எதுவும் எழுத வேண்டாம். அதுதான் ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரு மாற்று மாற்றி விட்டாரே உலகத்தை.’ நா ஜெயராமனின் இந்தப் பேச்சு சங்கடமாக இருந்தது. ஜெயராமன் 48 கவிதைகளுடன் நின்றுவிட்டார். குறிப்பிடும்படியாக சில கதைகளும் எழுதி உள்ளார். சா கந்தசாமி நாவல் போல் தொலைந்து போனவர்களில் ஜெயராமனும் ஒருவர்.

அவர் புத்தகம் இனி வருவதற்கு வாய்ப்பில்லை. க்ரியா இன்னொருமுறை அவர் கவிதைத் தொகுதியை வெளியிடுமா என்பது தெரியவில்லை. அப்படி வெளியிட்டாலும் யார் இந்த ஜெயராமன். ஜெ கிருஷ்ணமூர்த்தியை தப்பாப் புரிந்துகொண்டு பல எழுத்தாளர்கள் எழுதாமல் போய்விட்டார்கள். பிரமிளால் ஒரு நாவல் எழுத முடியவில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி தத்துவம் உள்ளே புகுந்து எழுத்தை எழுதவிடாமல் பண்ணிவிட்டது. அல்லது எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விட்டது.

எனக்கு ஜெயராமனின் 48 கவிதைகளாவது இதைப் படிப்பவர்கள் படிக்க வேண்டுமென்ற எண்ணம். அதனால் நான் கொஞ்சம் ஜெயராமனை இதில் இயங்க வைக்கிறேன்.

1. அமிழல்

ஆடாத கிளைமேல்

கரையாமல், சிறகு பரத்தி,

தலை தாழ்த்தி, நீட்டிய அலகால்

இடம், வலமெனச் சொறிந்து நின்றது – காகம்

இருகூறு என இருபக்கம் பிரிந்த

இறகுகள் தொய்ந்து விழும்நிலை பெற்றன-

அகம் பார்க்கும் நிலை இதுவெனத் தெளிவு.

2. நிலை

அமர்ந்திருக்கும் வரப்பு.

வரப்பின் மேல் சிலுக்கும் செடி.

அரக்குச் சிவப்பாய்

ஒளிரும்

மேற்குச் சிதறல்கள்.

அண்ணாந்த கண்

தொலைவில் அதிசயிக்க

வேகம் கொள்ளும் பறவைகள்.

வடப்புறத்தில் நீர்த்தடங்களாய்

முயங்கிக் கிடக்கும் உருவங்கள்.

தொலைவில் மேயும் மாடு.

கன்று

எல்லாமே ஸ்தம்பித்து நிற்கின்றன.

எங்கோ மூலையில்

கட்டிப் போட்ட

வீட்டு நாய் மட்டும்

குரைத்துக்கொண்டே யிருக்கிறது.

3. வானளாவி நின்று

இந்த வானிற்கும்

என் முகம்தான் போலும்!

குளுமையாய் கொஞ்சம் பச்சை.

அல்லது

இள நீலம்.

நரம்பு முறுக்க செஞ்சிவப்பு.

துக்கம் முட்டச் சாம்பல்

நுரை ததும்ப வெள்ளை என

நிறம் காட்டி

வெளியாய் விரிந்து…….

(இன்னும் வரும்)

இரண்டு கவிதைகள்

பிறந்தநாள் 58

ஓடிவிட்டன

நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும்

கழுத்தில் சுருக்கம்

இளமை இன்னும் மாறவில்லை

என்று அப்போதிருந்து சிந்தனை

ஓட்டம் ஒரே மாதிரிதான்

வானத்தில் நட்சத்திரம் மின்ன

தூரத்தில் தெருநாய் குரைத்தது

வேடிக்கையாக யாரோ

கொட்டாவி விட்டனர்

இன்று 58

@@@@@@@@

ஒரு ரோஜாப்பூவை

சூடிக்கொண்டிருந்த பெண்

என்ன நினைக்கிறாள்

சீர்காழி பஸ்ஸில் ஏறி

சிதம்பரம் போகிறாளா?

வழியில் எங்காவது

இறங்கி விடுவாளா?

அலுவலகம் போகிறாளா?

வகுப்பிற்குச் செல்கிறாளா?

வீட்டிற்குத்தான் போகிறாளா?

ஒற்றை ரோஜா

புத்தம்புது மலராய் மினுமினுக்க

அவள் கன்னத்திலும்

சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?

அவர்கள்..

*
அதன் பிறகு அவர்கள் வரவேயில்லை

ஒரு மௌனத்தை உடைத்து
நிழலை வெயிலில் ஊற்றிய பிறகு

ஒரு கோரிக்கையை
கிழித்துக் குப்பையில் எறிந்தபிறகு

ஒரு புன்னகையின்
அகால மரணத்துக்குரிய
ஈமக் காரியங்களுக்கு பிறகு

கனவின் கூச்சல்களை
மொழிப்பெயர்த்து வாசித்துக் காட்டிய
மனப் பிறழ்வுக்கு பிறகு

ஒவ்வொன்றின் உதிர்விலும்
தடயமற்று போவதிலும்
இருந்த அவர்கள்

அதன் பிறகு
வரவேயில்லை..

சாட்சிகளேதுமற்ற மழை

கதவு யன்னல்களிலிருந்து

வழிகின்றன முகங்கள்

கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல

கைகளில் கட்டப்பட்டிருக்கும்

நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு

பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில்

நிழலாக அசைகின்றன

பாதையோர மரங்களும்

ஈரப் பறவைகளும் மழையும்

ஒரு தெருச் சண்டையும்

புன்னகையும் சிரிப்பும் எள்ளலும்

சுழிப்பும் முணுமுணுப்பும்

அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள்

மழைச்சாரலிடையில்

அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல

அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட

பேய்களின் வாய்களுக்கெனவே

பிறப்பெடுத்தவை போல

வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன

பிணங்களின் வாடையுடனான

அழுக்கு மொழிகள்

இடி வீழ்ந்து

இலைகள் கிளைகள் எரிய

மொட்டையாகிப்போன மரமொன்றென

நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள்

மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி

புதைக்கப்பட்ட விரல்களில்

புழுக்களூர்வதைப் போல

நேச உணர்வேதுமற்றவன்

தன் தாக்குதலைத் தொடர்ந்தான்

நத்தைகள் ஆமைகளைப் போல

தங்களை உள்ளிழுத்து

கதவுகளைப் பூட்டிக்கொண்டன

தெருவில் நிகழ்ந்த

கொலையைக் கண்டமுகங்கள்

எதையும் காணவில்லையென்ற

பொய்யை அணியக்கூடும்

இனி அவர்தம் நாவுகள்

பூனைகள்…..பூனைகள்…….பூனைகள்…..பூனைகள்…30

சாபம்

வைதீஸ்வரன்

என்
காலடியில் ஒரு பூனை
கடவுளை வேண்டித்
தவம் இருக்கிறது
என் கை தவறி விழும்
இட்டிலிக்காக.

அதன்
தவத்தை உண்மை யாக்க
நான் குட்டிக் கடவுளாகி
இட்டிலியைத்
தவற விடுவேன்.
பல தடவை நான்
கோணங்கிக் கடவுளாகி
இட்டிலியை கைவிடாமல்
கட்டை விரல் காட்டுவேன்

பொறுமை வறண்ட பூனையின்
அரை வெள்ளைக் கண்களில்
ஒரு நரகம் தெரியும்
விரல் முனையால் சிறிது
பல் முளைக்கும்.

நள்ளிரவில்
இருள் அறுக்கும் ஓலம்
பூனைக் குரவளைக்குள்
ஓரெலியின் இரத்தம்
பீச்சி யடிக்கும்.

கனவுக்குள் நான்
எலியாகி இறந்த பின்பும்,
விழித்துப்
பதறிக் கொண்டிருப்பேன்.
ஏனென்று தெரியாமல்

லதாமகன் கவிதை

அந்த நிலத்தில்
ஒரு பொம்மை இருந்தது.

பிறகு
ஒரு குடில் இருந்தது

பிறகு
ஒரு இடிபாடு இருந்தது

பிறகு
சில பிணங்கள் இருந்தது

பிறகு
ஒரு பங்கீடு இருந்தது

பிறகு
நிறைய சமாதி இருந்தது

பிறகு
ஒரு பிரளயத்தில் எல்லாம் அழிந்தது

பிறகு
அங்கு கடவுள் வந்தார்.

நான், பிரமிள், விசிறி சாமியார்….16

பிரமிள் அடிக்கடி என்னை சந்திக்காமலே பல மாதங்கள் இருப்பார். சில சமயம் அடிக்கடி சந்தித்துக் கொண்டும் இருப்பார். பக்கத்தில் சந்திக்கும் தூரத்தில் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் சந்திக்காத சமயத்தில் நான், குவளைக்கண்ணன், யுவன், தண்டபாணி நால்வரும் டிரைவ் இன்னில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பிரமிள் வேறு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை கவனிக்கவில்லை.

அப்போதுதான் பிரமிள் என்னைப் பார்க்க விரும்புவதாக அவருடன் இருந்த ஒரு நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். நான் அவர் வந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பிரமிள் இருக்குமிடத்திற்கு வந்தேன்.

அவரைத் திரும்பவும் பார்க்கும்போது, என்னை அறியாமலேயே ஒருவித பரிதாப உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதுமாதிரி அனுபவம் எனக்கு ஆத்மாநாமை ஒரு முறை ஞாநி இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் சந்திக்கும்போது ஏற்பட்டது. அதேபோல் கோபிகிருஷ்ணனைப் பார்க்கும்போது ஏற்படும். காரணம் புரியாது.

பிரமிள் அப்போது தேவதேவன் உடல்நிலை பாதிப்பு அடைந்ததைப் பற்றி சொன்னார். கேட்கும்போது வருத்தமாக இருந்தது. தேவதேவன் மென்மையான மனிதர். அழகான கையெழுத்தில் அவர் அதிகமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார். ஆரம்பத்தில் விருட்சம் ஒவ்வொரு இதழிலும் அவர் கவிதைகள் அனுப்பாமல் இருக்க மாட்டார். பிரமிள் மதிக்கக்கூடிய கவிஞர்களில் தேவதேவனும் ஒருவர்.

”சரி, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள்…நான் உங்களைக் கூப்பிட்டு தொந்தரவு செய்துவிட்டேன். நீங்கள் போங்கள்…” என்று என்னை அனுப்பி விட்டார்.

நான் திரும்பவும் என் நண்பர்களிடம் வந்து, அவர்தான் பிரமிள் என்றேன். அவர்களுக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. எல்லோரும் கிளம்பும்போது, பிரமிளும் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பி விட்டார். அப்போது என் பக்கத்தில் வந்தவரை, ‘இவர்தான் குவளைக்கண்ணன்,’ என்று குவளைக் கண்ணனை அறிமுகப் படுத்தியதாக நினைப்பு. பிரமிள் அவரைப் பார்த்து,’இப்போது அமெரிக்காவில் உறவு என்பது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது…எல்லாம் பணம்…பணம் கொடுத்தால் பேசுவதற்கு நண்பர்கள் கிடைப்பார்கள். சிறிது நேரம் பேசுவதற்கு பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் நம்முடன் இருந்துவிட்டுப் பேசிவிட்டுப் போய்விடுவார்கள்…வயதானவர்களுக்கு யாரும் பேசுவதற்குக் கிடைக்க மாட்டார்கள். குறிப்பாக இளைஞர்கள் கிடைக்க மாட்டார்கள்….” என்றார்.

பின் நாங்கள் வாசல் பக்கமாக நகர்ந்து வந்தோம். எதிரில் பிரமிளுக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் வந்தார். அவர் பிரமிளைப் பார்த்து, ‘ஹலோ..’ என்றார். உடனே பிரமிள் அவரைப் பார்த்து பயந்து ஓடுவதைப் போல் ஒதுங்கிப் போனார். அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. இதுதான் பிரமிள். அவருக்குச் சிலரை சிலசமயம் பிடிக்கும். சிலசமயம் பிடிக்காது.
(இன்னும் வரும்)

அது என்ற ஒன்று..

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் ஒன்றைத் தவறவிடுவீர்கள்
அது
உங்களின் ஒரு பகுதி என்பதை
நம்ப மறுப்பீர்கள்

அதை
ஏற்றுக் கொள்வதில் இருக்கும்
அசௌகரியத்தை
வாதிட்டு வென்று விடுவீர்கள்

பாதுகாப்பைக் கோரும்
ஒரு அபலையின் நடுங்கும் விரல்களைப் போல்
அது
உங்கள் அறைக்குள் ஓர் இடம் தேடி
அலைவதை
கவனிக்க மறந்து விடுவீர்கள்

உங்கள் துயரத்தின் பாடலை
அது ரகசியமாய் சேமித்து வைத்திருக்கும்

உங்கள் தோல்வியின் குறிப்புகளை
அது உங்கள் முதுகுக்குப் பின்புறமிருந்து
எழுதிக் கொண்டிருக்கும்

உங்கள் மௌனங்களுக்குள் நீங்கள் கேட்டிராத
முனகல்களை
இழைப் பிரித்துக் கோர்த்து வைத்திருக்கும்

அது ஒரு
சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும்
உங்களை நோக்கி ஒரு பிரகடனத்துக்காக
உங்கள் மீதான ஒரு புகாருக்காக
நீங்கள் தான் உங்களின் அவமானம்
என்பதை உரைப்பதற்காக

அது
காத்துக் கொண்டிருக்கும்

ஒவ்வொரு துரிதக் கணத்திலும்
நீங்கள் தவற விடும்
அந்த ஒன்று
உங்களின் ஒரு பகுதி என்பதை
இப்போதும்
நம்ப மறுப்பீர்கள்..!

வீடு

மூதாதையர்கள் வாழ்ந்த இடம்
நாங்களனைவரும் வளர்ந்த இடம்
ஓடிவிளையாட நிறைய மறைவிடங்கள்
இருந்த இடம்
எப்பொழுதும் சந்தன வாசம்
கமழும் இடம்
சமையலறையில் விறகு அடுப்பு
அணைக்கப்படாமல்
சதா எரிந்து கொண்டேயிருந்த இடம்
தாத்தா, பாட்டி புழங்கிய பொருட்களால்
அவர்களது ஞாபகங்களை மீட்டெடுக்கும்
பணிகளைச் செய்த இடம்
வீசிய புயலுக்கு தாங்காமல்
ஆங்காங்கே விரிசல் கண்டது சுவர்கள்
இதோ பொக்லைன் இயந்திரம்
தரைமட்டமாக்கிக் கொண்டுள்ளது
எங்கள் பொக்கிஷத்தை
இனி எங்கள் ஞாபகங்களில் தான்
வாழும் இந்த வீடு.