ஆத்மாநாம் கவிதைகள் இரண்டு

கவிதை தலைப்பிடப் படாதது

இந்தக் கவிதை
எப்படி முடியும்
எங்கு முடியும்
என்று தெரியாது.

திட்டமிட்டு முடியாது
என்றெனக்குத் தெரியும்
இது முடியும்போது
இருக்கும் (இருந்தால்) நான்
ஆரம்பத்தில் இருந்தவன் தானா

ஏன் இந்தக் கேள்வி
யாரை நோக்கி

இன்றிரவு உணவருந்தும்
நம்பிக்கையில் இங்கிருப்பேன்

இப்படியும் ஒரு நம்பிக்கை

இருந்த நேற்று
எனக்கிருண்ட கணங்கள்

அவற்றின் தவளைக் குரல்கள்
கேட்கும் அடிக்கடி

அதனை ஒதுக்கத் தெரியாமல்
தவிக்கையில்

நிகழ்ச்சியின் சப்தங்கள்
செவிப்பறை கிழிக்கும்

நாளை ஓர் ஒளிக்கடலாய்
கண்ணைப் பறிக்கும்

இருதயம்
இதோ இதோ என்று துடிக்கும்.

இன்னும்

புறாக்கள் பறந்து போகும்
கழுத்திலே வைரத்தோடு
கிளிகளும் விரட்டிச் செல்லும்
காதலின் மோகத்தோடு
காக்கைகள் கரைந்து செல்லும்
தானியம் தேடிக்கொண்டு
குருவிகள் கிளுகிளுப் பூட்டும்
கிளைகளில் தவழ்ந்து கொண்டு
பாசிக் கரை படர்ந்த
தாமரைக் குளத்து நீரில்
நீளக்கால் மெல்ல அளையும்
கரை நிழல் கீழமர்ந்து.
பழங்களைக் கடித்துத் தின்ற
அணில்களும் அவ்வப்போது
கேள்விகள் கேட்டாற் போலத்
தலைகளைத் தூக்கிக் காட்டும்
சிவனருள் பூசாரி
குடத்தில் நீரெடுப்பார்
மந்திரம் சொல்லும் வாயால்
தம்மையே நொந்து கொண்டு
கற்புடைப் பெண்டிற் கூட்டம்
அக்கரைக் கற்கள் மீது
ஊர்க் கதை பேசிக்கொண்டு
துணிகளைத் துவைத்துச் செல்லும்
வயல்களுக்கப்பால் இருந்த
சூரியன் மேலே சென்றான்
எருமைகள் ஓட்டிச் சென்ற
சிறுவனின் தலையில் வீழ்ந்தான்.

“ஆத்மாநாம் கவிதைகள் இரண்டு” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. பலமுறை வாசித்திருந்தாலும்… ஆத்மாநாம்!!

    அதிலும்
    "வயல்களுக்கப்பால் இருந்த
    சூரியன் மேலே சென்றான்
    எருமைகள் ஓட்டிச் சென்ற
    சிறுவனின் தலையில் வீழ்ந்தான்."

    இந்த வரிகளின் வசீகரம் வாசிக்க வாசிக்க அதிகம்தான் ஆகிறது.

    அனுஜன்யா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன