அறியாப் பிறவி

நான் கோபக்காரன்

கொலைகாரன்

காட்டுச் சிங்கமென்று

எனது கவிதை

நாயகனுக்குத் தெரியாது.

அப்பாவியாய்

அபகரிக்க வல்லவனாய்

எண்ணி என்னை

அன்றாடம் அலைக்கழிக்கும்

சூன்யக்காரனான

அவனறிய மாட்டான்

நான் அவனை

அவ்வப்போது எழுத்தால்

கண்டந்துண்டமாய்

வெட்டிப் பிளப்பதை.

பாவம் அவன்

என் கவிதைகளைப்

படிப்பதில்லை.

கவிதைகளும்

அவனுக்குப் பிடிப்பதில்லை.

சில க.நா.சு கவிதைகள்

நல்லவர்களும் வீரர்களும்

கடவுளுக்கு கண்ணூண்டு. அவனுக்கு
வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்ப
ரொம்பப் பிடிக்கும். உண்மையில்
வீரர்களையும்.சமாதான காலத்தில்
நல்லவர்களையும் அதிகமாக
இப்பாழான உலகத்தில் உலவ
விடாமல் சீக்கிரமே கடவுள்
தன்னிடம் அழைத்துக் கொண்டு
விடுகிறான். கடவுளுக்கு உண்மையில்
கண்ணுன்டு. நல்லவர்களையும்
வீரர்களையும் அவனுக்குத் தெரியும்
என்று நிச்சயமாக நம்பலாம் !

எதையாவது சொல்லட்டுமா – 42

வெயில் கடுமையாக இருப்பதால், நான் எதையாவது சொல்லட்டுமா பகுதியில் எதையும் சொல்லாமல் விட்டுவிட்டேன். பல கற்பனைகளை செய்து வைத்திருந்தேன். பெருந்தேவி, நேசன் கவிதைத் தொகுதிகளைப் பற்றி எழுதுவது. பின் பிரமிள் கட்டுரையைத் தொடர்வது என்றெல்லாம் நினைத்திருந்தேன். கவிதையைப் பற்றிய என் கட்டுரையைத் தொடரலாம் என்றெல்லாம் நினைத்திருந்தேன். வெயில் என் எண்ணத்தைச் சிதற அடித்துவிட்டது. என் இயலாமையை வெயில் மீது கொட்டுகிறேன் என்றுகூட தோன்றுகிறது.

நாம் எந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது, அதை நிறுத்துவது எப்படி என்றும் யோசிக்க வேண்டும். எப்போதும் எதையாவது படிப்பதை நிறுத்திவிட்டு, பேசாமல் இருந்தால் என்ன என்றுகூட தோன்றுகிறது. நம்முடைய பிரச்சினை நாம் எதையும் நிறுத்தமுடியாமல் அவதிப் படுகிறோம். வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டிருக்காது. எதையும் தொடர்வதை நிறுத்திப் பார்த்து என்ன நடக்கிறது என்று ஆராய வேண்டும். ஒரு பத்திரிகையைப் புரட்டிப் பார்த்தேன். ஒவ்வொரு இதழிலும் அவர் ஏகப்பட்ட கவிதைகளை எழுதிக்கொண்டே போகிறார். அதைப் பார்த்தபோது, இவர் ஏன் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டே போகிறார் என்று தோன்றியது. எழுதிக் கொண்டே போகும்போது எழுதவதை நிறுத்த வேண்டும். படித்துக்கொண்டே போகும்போது படிப்பதை நிறுத்த வேண்டும். யாரும் அதைச் செய்வதில்லை. டிவியில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் மாதிரி எல்லோருடைய வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது.

********

கணையாழி ஸ்தாபகர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் மரணம் அடைந்த செய்தி sms ல் வந்தபோது, வருத்தமாக இருந்தது. கணையாழில் என் குறுநாவல் ஒன்று வரும் தருணத்தில் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவர் அலுவலகத்தில் போய்ப் பார்த்தேன். தனியாக இருந்தார். பழைய கணையாழி இதழ்கள் சிதறிக் கிடந்தன. ஒரு தட்டச்சுப் பொறி முன் அமர்ந்து எதையோ டைப் அடித்துக்கொண்டிருந்தார். என் குறுநாவலைக் குறித்து பக்கங்களைக் குறைக்கச் சொன்னார். அவர் சொன்னபடி செய்தேன். கணையாழி சம்பந்தப்பட்ட அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா மூவரையும் பார்த்திருக்கிறேன். கஸ்தூரி ரங்கன் அதிகமாகப் பேச மாட்டார். கணையாழி கொண்டுவருவதில் உள்ள அவருடைய தீவிரத்தை அறிவேன்.

ஒருமுறை விருட்சம் வெளியீடாக வந்துள்ள ஒரு கவிதைத் தொகுப்புக்கு அவரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக்கொண்டேன். வந்திருந்து சிறப்பாக உரையாற்றினார். ஆனால் என்ன எல்லாவற்றையும் பதிவு செய்யும் பக்குவம் என்னிடமில்லை. அதனால் தெளிவாக என்னால் எதையும் குறிப்பிடமுடியவில்லை. தனி மனிதராக கணையாழி இதழைத் தொடர்ந்து நடத்தியது அசுர சாதனை. இன்று எழுதிக்கொண்டிருக்கும் பெரும்பாலான படைப்பாளிகளுக்கு கணையாழி வழி காட்டியாக இருந்தது. ஒரு காலத்தில் நான் இரண்டு சிறுகதைகளை எழுதி ஒன்றை ஆனந்தவிகடனுக்கும், இன்னொன்றை கணையாழிக்கும் அனுப்பினேன். கணையாழில் என் கதை உடனே வந்துவிட்டது. ஆனந்தவிகடன் ஒரு ஆண்டு கழித்து கதையைத் திருப்பி அனுப்பியது.

ஒரு கட்டத்திற்குப் பின் யாராலும் எதையும் தொடர முடியாது. கணையாழியை அவரால் தொடர முடியவில்லை. வேறு ஒரு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டார். அந்த கணையாழி வந்தாலும், கஸ்தூரி ரங்கன் கொண்டு வந்த எளிமையான கணையாழி இல்லை. மசாலா போட்ட அது வேறு ரகம்.

எளிமையான தோற்றம் கொண்ட கஸ்தூரி ரங்கனை மறக்க முடியாது. அவரை இழந்து நிற்கும் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சில க.நா.சு கவிதைகள்

போ

எட்கார் ஆலன் போவின் கதைகளைப் படிக்கும்போது
மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதாக இருக்கிறது.
ஏதாவது ஒரு வார்த்தையின் இடத்தையும் அர்த்தத்தையும்
கவனிக்காமல் விட்டு விட்டால், அவன் என்னதான் சொல்ல
வருகிறான் என்பது தெரியாமலே போய் விடுகிறது. இத்தனைக்கும்
அவன் எழுதியதெல்லாவற்றையும் பத்திரிகைத் தேவைக்காக
அவசர அவசரமாக எழுதினான் என்றுதான் தெரிகிறது.
கவனமாகப் படிக்காவிட்டால் அவன் அர்த்தப்படுத்துவதற்கு
எதிர் மறையாக வேறு விதமாக அர்த்தப்படுத்திக்கொள்ள
ஏதுவாகியிருக்கிறது. லிஜீயா என்கிற கதையில் அவன்
தனது இரண்டாவது மனைவியைக் கொன்றானா; ஆகாயத்
திலிருந்து கொட்டிய விஷத்துளிகள் மனப்பிராந்தியா
உண்மையின் எதிரொலியா பிரதிபலிப்பா என்று
கண்டுகொள்ள முடியாமல் திணறிப் போவோம்.
தன் கூடப்பிறந்தவனைக் கொன்றானா? யாரையோ
நட்புடன் உயிரோடு புதைத்து சாக விட்டுவிட்டு
தான் செய்த தவறுக்குத் தண்டனை வேண்டி
நின்றானா?-கவனித்துப் படித்தால்தான் தெரியும்
வேறு விதமாகவும் பதினாறு விதங்களாகவும்
அர்த்தப்படுத்திக்கொள்ள அவன் உபநிஷத்துக்கள்
எழுதினானா? வெறும் கதைகள்தான் எழுதினானா?
போவின் எழுத்துக் கலையின் பூர்ணத் தன்மை
உனக்குப் புரிகிறபோது இலக்கியத்தின் அமைதியும்
அமைதியின்மையும் பலித்து விட்டதுபோல
ஒரு நினைப்பு ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மஹானுபவர்

எங்கள் வங்கிக்கிளையில்
மஹானுபவர் வந்திறங்கியிருக்கிறார்
அவதார புருஷர் அல்லர்
தினமும்
அவருக்கு யாரிடமாவது
பிரசங்கம் செய்யாமலிருக்க முடியாது
பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்க
செய்யத் தவறிய காரியங்களைச்
செய்ததாகச் சொல்லும் அவர்
சொல்லில் வல்லவர்
செயலில் வில்லங்கர்
அவரைப் பார்த்தால்
கவர்ந்திழுக்கும் தோற்றம்
பேசினால் போதும்
இழு இழு
மஹானுபவரைத் தாண்டி
நான் அப்படிப் போனால்
வாங்கி வாருங்கள்
தயிர்சாதமென்று கட்டளை இடுவார்
பாக்கெட்டில் கையை விட்டு
பணம் எடுக்க முயற்சிமட்டும் செய்வார்

அவருக்கும் எனக்கும்
அலுவலகத்தில் ஒரே பதவிதான்
ஏழுமணிக்குமேல் அலுவலகத்தைவிட்டுப்
போக நெளிவார்
பதைபதைப்பார்
தினசரி ஒன்றை எடுத்துக்கொண்டு
படித்துக்கொண்டிருப்பார்

எனக்கோ எட்டுமணிக்குமேல்
இருப்பு கொள்ளாது

நானும் மஹானுபவருடனும்
மஹானுபவர் என்னுடனும்

தினம் தினம் அலுவலகம்
வர நாங்கள் இருவரும் தவற மாட்டோ ம்..

அன்பு மழை

அலைபேசியில் அன்பின்

பரிமாற்றங்கள் குறுஞ்செய்திகளாய்

குவிந்தும் குழைந்தும்

சிந்தி சிதறிக் கொண்டிருக்க

அவளுக்கொரு அழைப்பு

வந்தது.

ஹாய் என்றாள்..

அவசரமாய் எங்கோ

செல்வதாகச் சொன்னாள்.

அப்படியா என்று

ஆச்சரியப் பட்டாள்..

சுதாவுக்கு ஹாய் சொல்லு..

சந்தோஷுக்கும் ஒரு ஹாய் சொல்லு..

மல்லிகாவுக்கு ஹாய் சொல்லு

மஞ்சுவுக்கும் ஹாய் சொல்லு

வர்ஷூக்கும் ஹாய் சொல்லு

லாரன்ஸ்க்கும் ஹாய் சொல்லு

ஜெயஸ்ரீக்கும் ஒரு ஹாய் சொல்லுடி..

என்று எத்தனையோ பேருக்கு

ஹாய் சொல்ல சொன்னவள்

இடையில்…

கொஞ்சம் நில்லுடி

இன்னொரு கால் வருது

என்று சொல்லி

ஒரே நிமிடம் லைனில்

காத்திருக்கச் சொன்னாள்..

இன்னொரு பழைய

பெரிய நைந்து போன

அலைபேசியில்

எரிந்து விழுந்தாள்

இன்னப் பாரு..

திருப்பி திருப்பி

என்னக் கூப்பிடாதே..

நான் ரெம்ப

பிசியா இருக்கிறேன்.

எனக்கு எதுக்கும்

நேரமே இல்லை.

இப்போ எனக்கு

ஊருக்கு வரவே முடியாது.

வயசானா பேசாம

இருக்க மாட்டே..

தொந்தரவு பண்ணாதே என்று

அந்த அழைப்பை

அழுத்தி நிறுத்தி விட்டு….

தொடர்ந்து ஹாய்

பாடினாள்.. அடுத்து

ஒரு அப்படியா என்று

ஆச்சரியப்பட்டு விட்டு

ரியலி இண்ணைக்கு

உங்களையெல்லாம்

மிஸ் பண்ணறேன்டீ

என்று கூறி

பை சொல்லிவிட்டு

எதிரே வந்த

இன்னொரு பெண்ணிடம்

ஹை சொன்னாள்.

அரங்கு நிறையாக் காட்சிகள்

நண்டுகளோடு ஓடிப்பிடித்து
விளையாடிக் கொண்டிருந்தன
வெள்ளலைகள்

ஆளுயர அலைகளுக்கு அகப்படாமல்
பறந்தெழும்பித் தணிந்தமர்ந்தன
மீண்டும் மீண்டும் சாமர்த்தியமாய்..
நண்டைப் பிடிக்கவோ நீர் பருகவோ
குழுமியிருந்த கடற்பறவைகள்

எண்பதெழுபது கிலோ
எடை மனிதர்களை
அநாயசமாய் இழுத்தோடி
உற்சாகமாய் வலம் வந்தன
உடற்பயிற்சி ஆசான்களாகி..
அழகான நாய்க்குட்டிகள்

கடலுக்குள் இறங்கும்
சூரியனின் கதிர்வீச்சில்
நிஜத்தை விட பன்மடங்கு
நீண்டு விழுந்து
பிரமிப்பைத் தந்தன
கரையோர நிழல்கள்

இணக்கமாய் கோர்த்துக் கொண்ட
இரு கரங்களிலிருந்து விடுப்பட்டு
உப்புக் காற்றோடு கரைந்தன
சில பிணக்கங்கள்

அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன
எவ்விடத்திலும் ஏதேனும்
அற்புதக் காட்சிகள்

அவசரகதியில் சுழலும் பூமியரங்கில்
அமர்வாரின்றிக் காத்தேக் கிடக்கின்றன
அநேக நாற்காலிகள்.
*** ***

வன்முறையின் சாட்சி

எட்டுக்காலம் அளவில்
அந்தச் செய்தி வந்திருந்தது.

ரத்தம் வழியும் புகைப்படங்களுடன்
பேருந்தும்
பேருந்தும் பேருந்தும் மோதி
முப்பத்தாறு பேர்
சம்பவ இடத்தில் பலி

பிய்ந்த கைகள்
உடைந்த கால்கள்
சிதைந்த தலை

ஆதி வன்முறையின்’
கடைசி சாட்சியென
இன்னும் அதிகமாய்
இரண்டு லட்சம் பிரதிகள்
விற்றிருக்கிறது பத்திரிக்கை.

ஒளிவட்டம்

மழை வலுத்தது
உனது குடைக்குள்
என்னை அழைத்தாய்
ஏனோ அன்று
குடைக்குள் இருந்தும்
நனைந்து போனேன்
நாய்களுக்குப் பயந்து
என்னை துணைக்கழைத்தாய்
என்னைக் கண்டதும்
நாய்கள் வாலாட்டியதைக்
கண்டு
மெலிதாக இதழ் விரித்துச்
சிரித்தாய் நீ
நூறு ரூபாய் கொடுத்து
சில்லறை கேட்டாய்
கொடுத்தேன்
நன்றி என்றாய்
அன்று முதல்
உண்டியலில் போட்டு வைத்த
சில்லறைகளை உடைத்தள்ளி
வருகிறேன்
இருசக்கர வாகனம்
ஸ்டார்ட் ஆக மறுக்கிறது
என்றாய்
பழுது நீக்கிக் கொடுத்தேன்
வண்டியில் அமர்ந்து
விடைபெற்றாய்
நான் ஆயில் கறை படிந்த
கைகளையே வெகுநேரம்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அன்றைய
பத்திரிகை செய்தியைப் பற்றி
அலுவலகத்தில் பரபரப்பாக
பேசிக் கொண்டார்கள்
உன்னையும் பரபரப்பு
தொற்றிக் கொள்ள
என்ன செய்வதென்று
தெரியாமல்
நீ என்னை பெயர் சொல்லி
அழைத்தாய்
உனது சிரசை சுற்றி
ஒளிவட்டம் தோன்றலாம்
நீ எனக்கு ஞானமளித்ததால்.

சில க.நா.சு கவிதைகள்

இன்னொரு ராவணன்

இன்னொரு ராவணன் தோன்ற வேண்டும்.
இன்றுள்ள ராவணர்கள்-ராவணர்களுக்கு
என்றுமே பஞ்சமில்லை-சினிமா வில்லன்களாக
லங்கைக்குப் போகும் வழியிலேயே காரியத்தை
முடித்துக்கொண்டு விடுகிறார்கள். üüஐயகோ
என் பெண்மையைக் குலைத்து விட்டார்களே
என் கற்பை உறிஞ்சி விட்டார்களே,ýý என்று
கதறும் சீதைகளைப் பார்த்து அனுதாபப்
படுபவர்கள்போல இன்றைய ராவணர்கள்
கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விளம்பரம்
தேடுகிறார்கள். ராமனின் அணையைக் கட்ட
முன்னேற்றம் என்கிற பெயரால் அவர்களே
உதவுகிறார்கள். ராமனின் வரவை எதிர்
நோக்கிக் காத்திருக்கும் சீதைகளும்
இன்று இல்லை. அவன் இல்லாவிட்டால்
இவன்-இருவரும் அரசர்களே என்று
திருப்தியுற்று விடுகிறார்கள்.
ராமன்
ராமனாகவும் ராவணன் ராவணனாகவும்
சீதை சீதையாகவும் இருக்க ஒரு
லங்கைத் தெம்பு வேண்டும் இன்று
லங்கையே லங்கையாக இல்லையே!
எப்படி ராமனும் சீதையும் ராவணனும்
தோன்றுவார்கள்? தோன்றினாலும்
தெரிந்து சொல்லும் வால்மீகிகள் எங்கே?