எதையாவது சொல்லட்டுமா?……..41

இன்று மதியம் சாய்பாபா மறைந்த செய்தியை டிவி மூலம் அறிந்தேன். அவர் உடல்நிலை குன்றி மருத்துவமனையில் படுத்துக் கிடந்தசெய்தியை அறிந்தபோது எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனால் அவருக்கு 85 வயது. பெரிய மகான்கள் மரணம் அடையும்போது ஒன்று புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போவார்கள். ரமணர், யோகி ராம்சுரத்குமார், ஜே கிருஷ்ணமூர்த்தி. பலருடைய கவலைகளை, பிரச்சினைகளை கேட்டு கேட்டு தீர்வளிக்கும் மகான்கள், தங்கள் மரணத்தைப் பற்றி சரியாக கணிக்க முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

சாய்பாபா படுத்த படுக்கையாக ஆனபோது, அவருக்கு இதுமாதிரி ஒரு மரணம் நிகழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் 98 வயது வரை வாழப்போவதாகத்தான் சொல்லிக்கொண்டிருந்தார் என்று செய்தி சொல்கிறது.

கடவுளின் அவதாரமாகத்தான் சாய்பாபாவை எல்லோரும் பார்த்தார்கள். ஒரு முறை ஒயிட் பீல்டில் என் குடும்பத்தோடு சாய்பாபாவை தரிசனம் செய்யச் சென்றேன். ஒரே கூட்டம். ரஷ்யாவிலிருந்து பலர் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்தவே போதும் போதும் என்றாகிவிட்டது.
சாய்பாபா மெதுவாக நடந்து வந்தார். எல்லோருடைய குறைகளையும் கடிதம் மூலம் எழுதித் தந்ததை வாங்கிக் கொண்டு மெதுவாக வந்தார். பின் கையை வீசினார். எல்லோர் முன்னும் சாக்லேட்டுகள் வந்து விழுந்தன. நான் அவரை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் பக்கம் வராமல் போய்விட்டார்.

என் நண்பர் ஒருவர் சாய்பாபாவைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் மற்றவர்கள் மனதை உடனடியாகப் புரிந்து கொண்டு விடுவார், என்று குறிப்பிட்டார். எனக்கும் அது உண்மை என்று பட்டது. அவருடைய சுருள் சுருளான தலைமுடியும், அகன்ற முகமும் மனதிலிருந்து அகலவே அகலாது. கோடான கோடி மக்கள் உலகம் முழுக்க அவருக்கு பக்தர்களாக இருந்திருக்கிறார்கள். அவர் யாரை குறை கூறியது கிடையாது. நன்மைதான் செய்திருக்கிறார். சென்னை மக்களுக்கு எப்போதும் குடிநீர் கிடைக்கும் வசதியை ஒரு அரசாங்கத்தால் செய்ய முடியாத ஒன்றை, அவரால் செய்து முடிக்க முடிந்தது.

அவரைப் பற்றி பல குற்றச்சாட்டுகளும் உண்டு. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்வதில்லை. அவர் மரணம் அடைந்தாலும், தொடர்ந்து எல்லார் மனதிலும் இருந்துகொண்டுதான் இருப்பார்.

நீதிக்கிளி

என் நெஞ்சுக்குள் உட்கார்ந்துகொண்டு
நான் எதையும் செய்து முடித்துவுடன்
இது தப்பு, இது சரி, இது ஏன் தப்பு இது
ஏன் சரி என்று ஒலிக்கும் அருவமாக
டிக் டிக் கென்று ஏதேதோ சொல்லிக்
கொண்டிருக்கும் நீதிக் கிளியே!

நீ உன் வாதத்தையெல்லாம் அறிவுடன்
எடுத்து நான் எதையும் செய்ய
ஆரம்பிக் குமுன் சொல்வதற் கென்ன?
ஏன் எதையும் செய்த பின்
சொல்லித் தொலைத்து என் அமைதியையும்
தொலைக்கிறாய்? சரி தப்பு
என்று நான் செய்து விட்டது பற்றித்
தீர்மானிக்க முடியாமல்
தவிக்கும்போது நீ வேறு குட்டையைக்
குழப்புகிறாயே – அது ஏன்?
செய்யலாமா வேண்டாமா? எப்படிச்
செய்யலாம் என்று நான்
யோசிக்கும் வேளையில் நீ எங்கேதான் போயிருந்தாய்? அப்போது
உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும்
இல்லாததுபோல் இருந்து
விட்டாயே! – அது ஏன்? உன் பொறுப்பு
அப்போது உனக்குத் தெரியவில்லையா?

என் உள்ளத்தில் ஓயாத சந்தேகங்கள்
எழுந்து இது இப்படி நடந்திருந்தால்
சரியாகியிருக்குமா இப்படி ஏன் நடக்க
வில்லை. ஏன் இப்படி நடந்தது என்று
சஞ்சலப்பட்டு ஊசலாடிக்கொண்டு என்னை
அலக்கழிக்கும்போது நீயும் உன்
குற்றம் சாட்டும் குரலை எழுப்புகிறாயே
சனியனே – நீ ஏன்
துருத்திக்கொண்டு வருகிறாய்?
உன்குரலை அமுக்குவது எப்படி?

வாழ்க்கை என்பது சிக்கலில்லாமல் சுலபமாக
இருந்துவிடக் கூடாதே என்பதற்காகவே
நீ உன் குரலை எழுப்பி எனக்கு எதிராக
உலகமெல்லாம் பரவத் தீ மூட்டுகிறாய்?
எதிலுமே சரி – தம்மை சரிவர அறிந்து
கொள்ளமுடியாது என்பதை
அறிந்துதான் நீ ஒதுங்கி இருந்தாயா?
காரியம் முடிந்து மாற்ற இனி ஒரு போதும்
முடியாது என்று ஏற்பட்டபின்தான்
உனக்கும் உன் நீதிக்கும் நேர்மைக்கும்
உயிர் வருகிறதா? சாக்ஷியம் சந்தர்ப்பங்களையும்
பொறுத்ததா அல்லது நிரந்தரமானதா?

எந்த வழியில் சென்றாலும் ஏற்கத் தகாத
முடிவையே எட்டமுடியும் என்பது
சரித்திர அனுபவமா? அல்லது எந்த முடிவுமே
ஒரு முடிவற்ற முடிவுதான் வேறு வித
மாகவும் இருக்கலாம் என்கிற நினைப்பில்
ஆறுதல் அளிக்கிறதா?
குழப்பத்தை விளைவிக்கிறதா?
முடிவெடுப்பதைத் தடுக்கிறதா?

நீதிக் கிளியே! உனக்கு இதெல்லாம்
தெரியாது, சரி தப்பு என்று
கிளிப்பிள்ளை மாதிரி மாற்றி மாற்றி
சொல்லத்தான் தெரியுமே தவிர
வேறு எதுவும் தெரியாது
உன்னை கழுத்தை முறித்துப்போட்டு விட்டால்
வாழ்க்கை வழி சுலபமாகிவிடும்.

திருஷ்டி

உனது வார்த்தைகளை
எந்த அகராதியிலிருந்து
எடுத்தாள்கிறாய்
பெய்ய மறுக்கிறது மழை
முதல் துளியை
உனது ஸ்பரிசத்தில்
விழச் செய்து
ஜென்ம சாபல்யம்
அடையத் துடிக்கிறது
உனது திருவடிகளை
எனது வீட்டை நோக்கி
திருப்ப மாட்டாயா
உன்னை உரசிய தென்றல்
மண் மீது ரதியைக் கண்டேன்
என துள்ளிக் குதிக்கிறது
தேவதை உலகம்
களையிழந்து போயிருந்தது
தேவி அவள் பிறந்து
பூமிக்கு வருகை தந்ததினால்
கோயில் பிரகாரத்தை
வலம் வருகிறாய்
தெய்வம் உனது வீட்டில்
குடியிருப்பதை அறியாமல்
ஊர் கண்ணெல்லாம்
உன் மீது தான்
அத்தையிடம் சொல்லி
வைக்க வேண்டும்
தினமும் திருஷ்டி
கழிக்கச் சொல்லி.

அவனின் தேடல்

சில்லென உடையும்

உன் சிரிப்பில்

அரசியல்வாதியின் சில்லரை

சப்தம் கேட்கிறது..

பகட்டான உன் வாசம்

என்னை பயமுறுத்துகிறது..

உன் உபச்சாரத்தை

பலரும்

விபச்சாரம் என்கின்றனர்.

உன்னில் விழும்

வார்த்தைகளில்

விதவிதமான ஆயுதங்கள்.

உன் பேச்சின் முடிச்சுக்களில்

பரிதாபமாய் இறுகித்

துடிக்கும் பலரின்

இளங் கழுத்துக்கள்

ஒண்ணும் வேண்டாம்

எனக்கு…

ஒண்ணுமில்லாத

வெறும் இதயம்

ஒன்று போதும்

என் மனசாட்சியை

வைப்பதற்கு.

ஆறாவது அறிவு

கிழக்கு மேற்காய் வடக்கு தெற்காய்
நேர்க் கோட்டில் சில கணங்கள்

வளைந்து திரும்பி,
இராட்டினக்குதிரை போல்
உயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள்

கைக்கெட்டும் தூரத்தில்
கைக்கெட்டா கனவொன்றைப் போல்
பறந்து கொண்டிருந்த பருந்தினை

விடாமல் பின்தொடர்ந்தது
அங்குல இடைவெளியில்
இரண்டாம் பருந்து.

மேகங்கள் கூடிக் கூடி
வேடிக்கை பார்த்திருக்க

மூன்றாவதாய் ஓர் பருந்து
வேகமாய் இவற்றைக் கடக்க

ஆவலாய் முதல் பருந்து
அதனைத் தொடர ஆரம்பிக்க

விக்கித்து விலகிய இரண்டாவது
செய்வதறியாத நிலையில்
உயர உயர எழும்பி
சுற்றிச் சுற்றி வந்தது
தன்னந்தனியாகக் காற்றுவெளியில்..

தாழப் பறந்து கொண்டிருந்த
புறாவொன்று கண்ணில் படவும்

அதிவிரைவாய்
காற்றைக் கிழித்துக் கீழிறங்கி
ஆக்ரோஷமாய்
துரத்தத் தொடங்கியது

வாழ்வோ பணியோ
பதவியோ பந்தயமோ

ஏமாற்றத்தின் வலியை
தோல்வியின் துயரை

எளியோனிடம் கடத்தும்
மனிதனைப் போலவே.
***

சின்னஞ்சிறு கதைகள்…..

அகாலம்

நான் பத்து வயதாக இருக்கும்போது, என் சித்தப்பாவோடு மாயூரத்தில் இருந்து வரும் கடைசிப் பஸ் போய்விட நெடுஞ்சாலையில் இரண்டு மணிநேரம் நின்று, லாரி ஒன்றில் இடம் பிடித்து, இரவு 1 மணிக்கு வீடு வந்து சேர்ந்தபோது, வெளிச்சத்தில் கண்களை இடுக்கிக்கொண்டு, வந்த கூன் பாட்டி கேட்டாள் : வாங்க, வாங்க ரொம்ப அகாலமாயிடுச்சு…கொஞ்சம் உப்புமா கிண்டித் தரச் சொல்றன…” பேசியபடி அடுப்பைப் பற்ற வைத்து, சூடான உப்புமாவையும், தொட்டுக்கொள்ள (வேறு ஒன்றும் இல்லாததால்) சீனியும் சுபையோ சுவை.

என் முப்பதாவது வயதில் இரவு 12.30க்கு ஸ்கூட்டர் பஞ்சர் ஆனதால், இருட்டில் தேடி, பஞ்சர் ஒட்டிக்கொண்டு பிறகு, வந்து சேர்ந்தேன். மனைவி சரிந்த வயிறோடு மெதுவாக நடந்து வந்து, “தயிர் சாதம் சாப்பிடறீங்களா?” என்றாள்.

ஐம்பத்தெட்டாவது வயதில் முதல் மருமகள் தூக்கம் கலைந்து விடும் என்ற பயத்தில் மகன் வாசலிலேயே விளக்கைப் போட்டுக்கொண்டு காத்திருந்தான். “தம்பி, தூங்கலியாப்பா?” என்று துவங்குமுன்பே, “பகல் டிரெயினில் வந்திருக்கலாமே, அப்பா?” என விளக்கை அணைத்துவிட்டு ஓசையின்றி நடந்து சென்றான்.

இன்று எழுபத்தொன்பதில் இரவு 12.30 மணிக்கு விமானம் வந்து சேர்ந்தாலும் கூட, வெளியே செல்லவில்லை. காலை பொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன். பேரனும், அவன் மனைவியும் குடியிருக்கும் மூடிய சமூகம் இரண்டு அடுக்கு பாதுகாப்பு கொண்டது. இரவு 10 முதல் காலை ஆறு வரை கதவு திறக்க அவர்களே எழுந்து வந்து அனுமதி தர வேண்டும். எனவே அகாலம் ஆகாது.

இது அகாலம்தான்…

சில க.நா.சு கவிதைகள்

மழை பெய்யும்போது அதில் நனைந்தால்
சளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்
காற்று அடிக்கும்போது தொண்டையில்
புழுதிபடியும் இருமல் வந்து துôங்க
விடாது துன்புறுத்தும் என்று
ஜன்னல்களைச் சாத்தி விட்டேன்
யாரோ எழுதிய நூல்களைக் கிடைக்கும்போது
படித்துப் படித்துப் பார்வை
குறுகிப் போகிறதே தவிர ஞானம்
பிறக்கவில்லை என்று படிப்பதை
நிறுத்தி விட்டேன் புஸ்தகங்களைத்
தலைமாட்டில் வைத்துக்கொண்டு
படிக்காமல் இருக்கப் பழகிவிட்டேன்
காதலிகள் தேடி வந்தபோது ஆசை
அடித்துக்கொண்டாலும்
ஊரார் ஏதாவது சொல்வார்கள்
ராஜி ஆúக்ஷபிப்பாள் என்று
பயந்து ஒதுங்கி ஒதுங்கிப்
போய் விட்டேன். காதலி
வேறு யாரையோ நாடிப்
போய் விட்டாள். அவள்
போவதை சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.
சாவு என்கிற அனுபவம் ஏற்படும்போது
மறுபடி அதை விவரிக்க ஒரு
சந்தர்ப்பம் ஏற்படும் என்று
இரண்டாவது சாவுக்கும்
காத்து நிற்கிறேன்.

இலக்கியத் தரம் உயர

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசியவர்களைக் கேட்கும்போது எனக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. பல பேர் பரவலாகப் பத்திரிக்கைகளில் வெகு ஜன ரஞ்சகமாக வரும் எழுத்துக்களின் உண்மைத் தரத்தை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த எழுத்துக்கள் திருப்தி தருவதாக இல்லையென்பதும் தெரிகிறது.
ஆனால் நல்ல இலக்கியமும் எழுத்தும் எங்கே கிடைக்கும், யார் யார் எழுதுகிறார்கள் என்பதும் அவ்வளவாகத் தெரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதைத் தேடிப் போவதற்கு அவர்களுக்கு வழிவகைகள் தெரியவில்லை.
எல்லா மொழிகளிலும், எல்லாப் பிராந்தியங்களிலும் இலக்கியமல்லாதது. போலி இலக்கியம் செழித்து கொண்டுதான் இருக்கிறது. ஷேக்ஸ்பியர் காலத்திலும் அப்படித்தான்: ஹோமர் காலத்திலும் அப்படித்தான். கம்பர் காலத்திலும் காதுக் குறும்பை அறுக்கும் விமரிசகக் கவிகள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. நல்லது, நல்லதல்லாதது என்கிற நினைப்பு தொடர்ந்து வந்துகொண்டே தான் இருக்கிறது. அச்சு இயந்திர சாதனங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், போலிகளும் பெருகிவிட்டன் ; போலிகளின் ஆதிக்கமும் பெருகிவிட்டது.
இலக்கியத்தில் அக்கறையுள்ளவர்கள், நல்ல இலக்கியத்திலிருந்து போலியைத் தரம் பிரித்துக்காண முயன்று வெற்றி பெறவேண்டும், தரமானதைத் தரமில்லாததிலிருந்து பிரித்துக் காண ஒரு இலக்கிய ஆர்வமும், ஒரு இலக்கியத் தேர்ச்சியும் தேவையாக இருக்கிறது. இந்த இரண்டையும் தமிழர்களில் ஒரு இரண்டாயிரம் மூவாயிரம் பேர்வழிகளுக்கிடையே உண்டாக்கிவிட முயலுபவன், தமிழ் இலக்கியத்துக்கு இன்று மிகவும் சிறப்பான அளவில் சேவை செய்தவன் ஆவான் என்று எனக்குத் தோன்றுகிறது.
நல்ல இலக்கியத்தைத் தெரிந்து கொள்வதற்கும் பரப்புவதற்கும் ஒரு பரவலான இலக்கிய இயக்கம் நம்மிடையே தேவைப்படுகிறது. பாரதியில் தொடங்கி இன்றுவரை எழுதியுள்ளஎத்தனையோ சீர்குலைவுகளுக்கும் ஈடுகொடுத்துக் கொண்டு எழுதிவந்துள்ள பத்திருபது முப்பது நாற்பது ஐம்பது இலக்கியாசிரியர்களைப் பட்டியல் போட்டுப் பார்க்கும்போது பெருமையாகத்தான் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐம்பது பேர் வரையில் பெயர் சொல்லக் கூடியவர்கள் இருப்பதைப் பெருத்த இலக்கிய வெற்றியாகக் கருதவேண்டும். இந்த ஐம்பது பேர் தரமாக எழுதினார்கள் என்பதுடன், இதில் குறைந்தபட்சம் இரண்டு மூன்று நான்கு ஐந்து பேர்வழிகளாவது அடுத்த நூற்றாண்டிலும் நினைக்கப்படுவார்கள். படிக்கப்படுவார்கள் என்று நம்புகிற தெம்பு நமக்கு வேண்டும்.
தாக்ஷண்யத்துக்காக, சொந்த விருப்பு வெறுப்பு பயிற்சி மனக்குறுகல் கோணல்களினால் விமரிசகன் நாலைந்து பேர்வழிகளைத் தன் பட்டியலில் அதிகமாகச் சேர்த்துச் சொல்லிவிடலாம். காலம் கொஞ்சம்கூடத் தாக்ஷண்யமில்லாமல் பல பெயர்களைத் தட்டி விட்டுவிடும். மிஞ்சுவது எல்லாம் கூட நல்ல இலக்கியம்தான் என்று சொல்லிவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் தேவையினால், ஒருசிலருடைய எழுத்துக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுவிடலாம். ஒரு நூறாண்டு முழுவதும் நிலைத்து விடுகிற எழுத்தைக் கூட அப்படியொன்றும் பிரமாதமான இலக்கியம் என்று முடிவுகட்டிவிட முடியாது. ஒரு தலைமுறைக்கு உகக்கிற இலக்கியம் மறு தலைமுறைக்கு அவசியமில்லாது போய்விடலாம்தான். இதையெல்லாம் ஊன்றிப் பார்க்கிறபோது, இரண்டு முக்கியமான விஷயங்கள் தெளிவாகத் தெரிகின்றன.
ஒன்று: இலக்கிய மதிப்பீடு செய்து தராதரம் உணர்ந்து படிக்கக்கூடிய வாசகர்கள் ஒரு üஐயாயிரம் பேர்வழிகளாவது இருக்கிற சமுதாயத்தை இலக்கியப் பிரக்ஞையுள்ள சமுதாயம் என்று சொல்லலாம். தமிழில் இன்று கணக்கெடுக்கப் போனால் ஒரு ஐநூறு பேர்வழிகள் தேறுமா என்பது சந்தேகமே 1 1930 முதல் 1980 வரையுள்ள ஐம்பது ஆண்டுகளில் இது எண்ணிக்கையில் கூடாததற்குத் தமிழ்ச் சமுதாயத்தில் காரணம் தேடிச் சொன்னால் அது ஐனரஞ்சகப் பத்திரிகைகளினால் ஏற்பட்ட ஒரு சூழல் என்றுதான் சொல்ல வேண்டியதாக இருக்கிறனது.
காசு பண்ணுவதற்காகத் தோன்றிச் செயல்படுகிற ஒவ்வொரு ஐனரஞ்சகமான பத்திரிகையும், வெகுஐன ஆதரவுக்காகவும் வாசகர்களின் அடிமட்ட அறிவு நினைவுக்கு ஏற்பவும் (கர்ஜ்ங்ள்ற் இர்ம்ம்ர்ய் ஹஸ்ங்ழ்ஹஞ்ங் ர்ச் ண்ய்ற்ங்ப்ப்ண்ஞ்ங்ய்ஸ்ரீங் ண்ய் ற்ட்ங் நர்ஸ்ரீண்ங்ற்ஹ்) எழுத்து என்று தேடி ஒவ்வொரு இதழிலும் எட்டு எட்டுப் பக்கங்களாவது வெளியிடாத பத்திரிகைகளைச் சமுதாயம் தெரிந்தே பகிஷ்காரம் செய்ய வேண்டும் இதற்குச் சட்டம் இயற்ற இயலாமல் இருக்கலாம். ஆனால்ல் சமுதாய அபிப்ராயத்தை உருவாக்கி, இந்த மாதிரிப் பத்திரிகைகள் இலக்கியத் தரத்தைக் குறைப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிற வியாபார ரீüதியில் மட்டும் செயல்படுகிற பத்திரிகைகளை இலக்கியத்தையும் ஏற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தலாம் சமுதாய ரீதியாக.
பத்திரிகைகளை விட்டுவிட்டு இலக்கியம் செயல்பட முடியாதா என்று கேட்கலாம். பத்திரிகைப் பிரக்ஞை என்பது மிகவும் கீழ்த்தரமானதாக இன்று இருக்கிறதே என்று கேட்கலாம். உண்மையில் பத்திரிகைகள் இன்று வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அம்சம். புஸ்தகங்களை விடவும் அதிகமாகவே பத்திரிகைகள் உலகெங்கும் விற்பனையாகின்றன. புஸ்தகப் படிப்பு என்பது ஓய்வு நேரம் குறைந்து கொண்டிருப்பதாலும் வேறு நேரம் போக்கும் சாதனங்கள் – சினிமா, டிவி, போன்றவை வந்துவிட்டதாலும் – ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை படிப்பவர்கள் அதிகமாகவும், நூல்களைத் தேடிப் படிப்பவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள். முக்கியமாகத் தமிழில் இது கண்கூடாகக் காண்கிற விஷயம். இதை மிக மோசமான அளவில் சாத்தியமாக்கியவர்கள் என்று பல்கலைக்கழகத் தமிழ்த்துறை ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் சொல்லலாம். அவர்களும் படிக்கமாட்டார்கள்; பிறரையும் நல்லதைத் தேடிப் படிக்க விடமாட்டார்கள்.
தரமான இலக்கியத்துக்கான ஒரு இயக்கத்தைப் பத்திரிகைகள் ஏற்று நடத்துவதுதான் நியாயமான காரியம் என்று இன்னொரு காரணத்துக்காகவும் எனக்குத் தோன்றுகிறது. இந்த இலக்கியத் தரம் தெரியாத நிலைமையைப் பரவலாகத் தோற்றுவித்தவர்கள் இந்தப் பத்திரிகைகள் தான். அந்தக் குற்றத்தை இப்பொழுது சரிப்படுத்த அவர்களே செயல்படுவது தான் நியாயம். இலக்கியத் தரமான விஷயங்களை, எண்பது பக்கங்களில், எட்டுப் பக்கமாவது தராத பத்திரிகைகளை வாங்குவதில்லை, படிப்பதில்லை என்று ஒரு ஐம்பதாயிரம்,லட்சம் வாசகர்களாவது உடனடியாக விரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அது சாத்தியமா? யார் அந்த எட்டுப் பக்கத்தின் இலக்கியத் தரத்தையும் தரமின்மையையும் நிர்ணயிப்பது என்பதெல்லாம் மிகவும் சாதாரணமான கேள்விகள். இலக்கியத் தரத்தை உணர்ந்து செயலாற்றத் தீர்மானித்து விட்டால், தானே தீர்ந்துவிடக் கூடிய பிரச்னைகள் இவை. இப்போது எந்த விஷயத்தைப் பிரசுரித்தால் வாசகர் எண்ணிக்கை குறையும் என்று எண்ணுகிறார்களோ அந்த விஷயத்தை வெளியிட்டு, எண்பதில் எட்டுப் பக்க அளவிலாவது வெளியிட்டு வந்தார்களானால், அதுவும் பரவலாகப் படிக்கப் படுகின்ற விஷயமாகிவிடும்.
இதை முதல் காரியமாக ஏற்றுக் கொள்வது வேண்டும். சமூகச் சீர்திருத்தவாதிகளில் பலரும் இலக்கிய அறிவு, இலக்கிய ரசனை இவையும், மொழி சம்பந்தபட்ட விஷயங்கள் என்பதனால் மட்டுமல்லாமல் அந்த மொழி பேசுகிற சமுதாயத்தின் ட்ங்ஹப்ற்ட் சம்பந்தமான விஷயம் என்பதனால், சமுதாயத்தில் முக்கியம் பெறுகிறது. இலக்கிய அறிவும் இலக்கியத் தேர்ச்சியும் இல்லாத ஒரு சமூகம் ஒரு கலைச் சூன்யத்தை நாடிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது உண்மை.
இரண்டாவது விஷயமாகச் சொல்ல வேண்டியது, சென்ற ஒரு நூற்றாண்டு கால கட்டத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு நாற்பது ஐம்பது நூல்களின் கட்டாய அறிவு மக்களிடையே பரவலாக ஏற்படச் செய்வது என்பதாகும். விமரிசகர்கள் கூடிச் செய்கிற காரியம் அல்ல இது. ஏனென்றால் இரண்டு மூன்று வாசகர்கள் கூட ஒரே நூலைப்பற்றிப் பலவிதமான அபிப்ராயங்கள் சொல்லக்கூடும்தான். ஆனால் பல விமர்சகர்கள் தனித் தனியாகச் சொல்லி இந்த ஐம்பது நூல்கள் பட்டியலில் எந்தெந்த நூல்கள் இருக்க வேண்டும் என்ற பொதுஐன அபிப்ராயத்தை ஏற்படுத்தலாம். இந்தப் பட்டியலில் தமிழ் நூல்கள் மட்டும் இடம் பெற்றால் போதாது. கட்டாயமாகச் சில மொழி பெயர்ப்புகளும் இருக்க வேண்டும். உதாரணத்துக்குச் சம காலத்திய இரண்டு நூல்களை நான் சொல்கிறேன்-இரண்டையும்சேர்த்துச் சொல்கிறேன் என்பதும் இன்றுள்ள நிலையில் கவனிக்க வேண்டிய விஷயம். சாவர்க்காரின்üஎரிமலைý அதேபோல காந்தியின் üசத்திய சோதனைý.
பொதுவாக மொழி பெயர்ப்புகளைப்பற்றி ஒரு தப்பான அபிப்ராயம் தமிழ் வாசகர்களிடையே இருந்துவருகிறது. தமிழ் தானாகத் தழைத்துவிடும் என்று கால்டுவெல்ஐயர் அன்று சொன்ன விஷயத்தை உடும்பாகப் பற்றிக் கொண்டு, மொழி பெயர்ப்புகள் இல்லாத ஒரு சமுதாயத்தை நம் ஊரில் ஸ்தாபிக்க முயலுகிறார்கள். அது இலக்கிய ரீதியில் தவறான காரியம் ஆகும். மொழியின் வளர்ச்சிக்கு, இலக்கியத்தின் தாக்கத்துக்கு மொழி பெயர்ப்புகள் மிகவும் அவசியமானவை.
பழசும் புதுசுமாக ஒரு நூறு நூல்கள் எப்போதும் படிக்க விரும்புகிறவர்களுக்குக் கிடைக்கும்படியாகச் சர்க்கார் தரப்புப் பிரசுரலாயங்களோ அல்லது தனியார் தரப்புப் பிரசுராலயங்களோ செயல்பட வேண்டும். இது மிகமிக அவசியம். யாரும் இந்தக் குறிப்பிட்ட நூல் கிடைக்கவில்லை, அதனால் படிக்கவில்லை என்று சொல்கிற நிலை ஏற்படக் கூடாது.
மூன்றாவதாக ஒரு விஷயம். சினிமாவை ரசிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்துகிறார்கள். அதேபோல இலக்கிய ரஸனையை வளர்ப்பதற்கும் வகுப்புகள் – பொது ஐன வகுப்புகள் இந்தக் கால கட்டத்தில் மிகமிக அவசியம் என்று எனக்குத் தோன்றுகிறது. படிப்பது எப்படி, எதையெதைப் படிக்க வேண்டும். படித்ததில் தரம் பிரித்துக் காண்பது எப்படி என்றெல்லாம், ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு ஊரிலும் சொல்லித் தர ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இது கல்வி இலாகாக்கள் கையில் சிக்கிக்கொள்ளாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ABC of Reading என்று எஸ்ரா பவுண்டு, இலக்கியாசிரியர்களுக்காக ஒரு நூல் எழுதினார். அதுமாதிரியான ஒரு அடிப்படை நூல் இன்று தமிழில் அவசரத் தேவை என்று எனக்குத் தோன்றுகிறது.

எதையாவது சொல்லட்டுமா……..40

முதியோர்களை நாம் எப்படி நடத்துகிறோம்? இந்தக் கேள்வி சமீபத்தில் தோன்றி கொண்டிருந்தது. 89 வயது முடிந்து அப்பாவிற்கு 90வது வயது நடந்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. கடந்த 2 மாதங்களாக அவர் என்னுடைய சகோதரன் வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறார். அங்கு எல்லா வசதிகளுடனும் அவர் தங்கிக் கொண்டிருக்கிறார். தேவைக்கு அதிகமாக சாப்பாடு. 24 மணி நேரமும் டிவி என்று பொழுது போவதற்கு எல்லா அம்சங்களும் உண்டு. ஆனால் அவர் அந்த வீட்டிலிருந்து எங்கும் செல்ல முடியாது. சகோதரன் குடும்பத்தைத் தவிர வேறு யாருடனும் உரையாட முடியாது.

90 வயதில் இது ஒரு பிரச்சினை. யாரிடமாவது எதாவது பேசாமல் அவர்களால் இருக்க முடியாது. 90 வயதில் நான் எப்படி இருப்பேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நிச்சயமாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்த நோய் என்று போராடிக் கொண்டிருப்பவன் நான். 90 வயதைத் தொடக் கூட முடியாது. அப்பாவிற்கு எந்த நோயும் கிடையாது. முதுமையைத் தவிர.

காலையில் அவர் எழுந்தவுடன் ஒரு சொம்பு நிறையா தண்ணீர் குடிப்பார். பின் எழுந்து நிதானமாக மாடிக்குச் செல்வார். நடை நடை என்று 1 மணி நேரம் மேல் நடப்பார். பல்லே இல்லை என்பதால் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் நிதானமாக சாப்பிடுவார்.

என் பெண்ணிற்கு உதவி செய்ய மனைவி போய் விட்டதால், நான் இருக்கும் போஸ்டல் காலனி வீட்டில் யாருமில்லை. ஞாயிறுகளில் நான் மட்டும் வந்து தங்கிவிட்டுப் போய் விடும். அப்பா என்னுடன் இருக்கும்போது தினமும் போன் செய்யாமல் இருக்க மாட்டார். ”ஒண்ணுமில்லை. சும்மாதான் போன் செய்தேன்,” என்பார். என் நண்பர்கள் என்று யாராவது என்னைத் தேடி வந்துவிட்டால் போதும். அப்பாவிடம் கட்டாயம் மாட்டிக்கொண்டு விடுவார்கள். அவர்களிடம் அப்பா ஹோமியோபதியைப் பற்றி பேசி பேசி அலுக்க அடித்துவிடுவார். பின் அரசியலைப் பற்றி பேசுவார்….அந்தக் காலத்தில் அவர் லஞ்சம் வாங்காத அதிகாரியாக இருந்ததைப் பெருமையாகப் பேசுவார். ..எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அந்தக் கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதில் வல்லவர். சமீபத்தில் கலைஞர் மு.க மாதிரி பேசுவதில் ஒருவித திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். எல்லோரிடமும் அப்படிப் பேசிக் காட்டுவார்.

தம்பி வீட்டிலும் அவர் அப்படிப் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கெல்லாம் கடுமையாக கோபம் வந்துவிட்டது. அப்படியெல்லாம் யாராவது வந்தால் பேசக் கூடாது என்று தடை உத்தரவு போட்டுவிட்டார்கள். அவர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால், அவர்களுடன் பேசக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். அதனால் அப்பாவிற்கு தெம்பு குறைந்து விட்டதுபோல் தோன்றியது.

போன ஞாயிற்றுக்கிழமை, தெலுங்கு வருஷம் ஒட்டி திங்களும் விடுமுறை என்பது அப்பாவிற்கு தெரிந்து விட்டது. ‘கழுத்து வலி தாங்க முடியவில்லை. ஹெல்த் சென்டருக்குப் போய்க் காட்ட வேண்டும்.’ என்று நான் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார். தம்பி வீட்டில் சொகுசை அனுபவித்தவர், இங்கு குறுகிய இடத்தில் கட்டிலில் அவருக்கு சரியாக தூங்க முடியவில்லை. என் வீட்டில் அவருக்கு உள்ள சுதந்திரம். எல்லா இடத்திற்கும் அவர் எளிதாக செல்வது. யாரைப் பார்த்தாலும் எதையாவது பேசுவது? டெலிபோன் மணி ஒலித்தால் போதும், போனை கையில் எடுத்து God Bless You என்று சொல்லாமல் இருக்க மாட்டார். திங்கள் காலையில் ஹெல்த் சென்டருக்கு தானாகவே நடந்து செல்ல ஆரம்பித்து விட்டார். பரபரப்பாக இருக்கும் ஆர்யா கவுடா தெருவில் நடப்பதைப் போல் ஆபத்து எதிலும் இல்லை. ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்க மாட்டார். இங்குதானே இருக்கிறது. நடந்தே போய் விடலாம் என்று பிடிவாதமாக கூறுவார். ஜெய் சங்கர் தெருவில் இருக்கும் சாய்பாபா கோயிலுக்கும் அவர் இப்படித்தான் நடந்தே போய்விடுவார். பலமுறை கண்டித்தும் அவர் கேட்க மாட்டார்.

எப்போதும் தெருவில் நடக்கும் போது, தெருவில் யாராவது புகை பிடித்துக் கொண்டு சென்றால், அவர்களை நிற்க சொல்லிவிட்டு, ‘சிகரெட் உடம்பிற்குக் கெடுதல், பிடிக்காதீர்கள்,’ என்பார். ஒருமுறை ஒருவர் கோபத்துடன், Mind your business என்று கூற அதைக் கேட்டு I mind my business. but you mind your health என்று கூறினாராம்.

என் வீட்டைச் சுற்றிலும் இருக்கும் மற்ற குடியிருப்போர்கள், அப்பா வரவில்லையா என்று கேட்காமல் இருக்க மாட்டார்கள்.

‘ஒன்றுமில்லை. கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது’ என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள். ‘ஒன்றுமில்லை. கழுத்தைத் தூக்கி டிவியைப் பார்க்காமல் இருந்தால் சரியாகிவிடும்,’ என்றான் என் சகோதரன்.

‘செவ்வாய்க் கிழமைதான் எக்ஸ் ரே தருவதாக சொல்கிறார்கள்….வாங்கிக்கொண்டு வந்து விடுகிறேன்…” என்றார் அப்பா. நான் சீகாழி போய்விட்டால் அப்பாவை தனியாக எப்படி விட்டுவிட்டுச் செல்வது. ‘நீ பயப்படாதே…போ..’ என்றார் அப்பா. என் சகோதரன், ‘என் வீட்டிற்கு வந்து விடு…அங்கிருந்து கார் வைத்து உன்னை ஹெல்த் சென்டருக்கு அனுப்புகிறேன்,’ என்றான் சகோதரன். அங்கு போகத் தயாராய் இல்லை அப்பா.

மார்ச்சு மாதம் அலுவலகக் கெடுபிடியால் என்னால் லீவு எடுத்துக் கொள்ள முடியவில்லை. ‘வேறு வழியில்லை. நான் போய்த்தான் ஆக வேண்டும்.’ என்றேன். சகோதரன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான். அப்பாவோ என்னிடம், ‘அவனிடம் எதுவும் சொல்லாதே…நான் ஹெல்த் சென்டருக்கு போய்விட்டு மாலை அடையார் சென்று விடுகிறேன்,’ என்றார். நான் சீர்காழி வந்தவுடன் அப்பாவைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். காலையில் அப்பா போன் செய்தார். ‘ஏன் அவனிடம் சொன்னாய்…அவன் லீவு எடுத்துக் கொள்வதாக சொல்கிறான்…’ என்றார் அப்பா. திரும்பவும் அப்பா சகோதரனையும் லீவு எடுத்துக்கொள்ள வேண்டாமென்று சொல்லிவிட்டார். பின் தானாகவே ஆட்டோ வைத்துக்கொண்டு ஹெல்த் சென்டருக்குச் சென்றுவிட்டு மாத்திரிகைளை வாங்கிக்கொண்டு ஆட்டோ வில் வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு பத்திரமாக வந்துவிட்டேன் என்று எனக்கு போன் செய்தார்.

மாலை சகோதரனுடன் அடையார் சென்று விட்டார். நான் அப்பாவிற்குப் போன் செய்தேன்..’வந்துவிட்டேன்…..இனிமேல் போர்….சாப்பிட வேண்டியது…டிவி பார்க்க வேண்டியது…’என்றார் அப்பா.

(இன்னும் வரும்-.)

எதையாவது சொல்லட்டுமா……..39

குளிர் காலத்தைவிட கோடைகாலம் மிகக் கடுமையானது. அதுவும் என் அலுவலகக் கட்டிடத்தை விட மட்டமானது எதுவுமில்லை. காலையில் மயிலாடுதுறையில் 6 மணிக்கு மின்சாரத்தை நிறுத்தினால் 9 மணிவரை ஆக்கி விடுகிறார்கள். சூடு பறக்கும் தேர்தல் நேரம் வேறு. யாருக்கு நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானே கேட்டுக்கொள்கிறேன். போனமுறை என் பெயரும், நடிகர் கமல்ஹாசன் பெயரும் வாக்களர் பட்டியலில் இல்லை. என் பெயர் இல்லை என்பதைப் பற்றி யாரும் கவலைப் பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் பெயர் விடுப்பட்டிருந்தது எல்லாப் பத்திரிகைகளிலும் வந்துவிட்டது. நான் சாமான்யன் என்பதை அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

சரி யாருக்கு ஓட்டுப் போடுவது. ஒவ்வொரு முறையும் நான் ஓட்டுப் போடும்போது எல்லாக் கட்சிகளிலும் ஓட்டுப் போடுவேன். சிலசமயம் முகம் தெரியாத தனித்து நிற்கும் நபர்களுக்கு ஓட்டுப் போடுவேன். அல்லது ஓட்டே போடாமல் போய்விடுவேன்.

ஓட்டுப் போட்டு எதாவது கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களுடைய குறையைத் தீர்க்க முடியாது. பெரிய புரட்சியை செய்து விட முடியாது. ஆனால் நியாயமான நிர்வாகத்தை வெளிப்படுத்தினால் போதும். அது மாதிரி தரக்கூடிய கட்சி எது?

திராவிடக் கட்சிகளை விட மாற்று எதாவது உண்டா என்றால் இல்லை. காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எல்லோரும் தலைவர்களாக தமிழ் நாட்டில் இருக்கிறார்கள். கட்சிக்குள்ளேயே கொடும்பாவி எரிக்கும் சம்பவம் காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் நடக்காது. பாரதிய ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சிதான். இந்துத்துவா முத்திரை பலமாக விழுந்துவிட்டதால் அதற்கு ஓட்டு கிடைப்பது கடினம்.

பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சியாகப் போய்விட்டது. தமிழ் நாட்டில் பரவலாக உள்ள மற்ற ஜாதி மக்களுக்கு அவர்கள் சேவை போய்ச் சேராது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அப்படிப்பட்டதுதான். எல்லா மக்களுக்குமான கட்சியாக அவர்களால் மாற முடியாது. அதனால் அவர்கள் ஓட்டும் குறிப்பிட்ட வகுப்பினரின் ஓட்டுகளாகவே இருக்கும்.

நான் விரும்புவது தோழர்கள் கட்சியைத்தான். குறிப்பாக மார்க்கிஸ்ட் கட்சி. ஆனால் அவர்களாலும் தனிப் பெரும் கட்சியாக தமிழ் நாட்டில் உருவாக முடியவில்லை. திரும்பத் திரும்ப திமுக, அதிமுக கட்சிகளையே பார்த்தாயிற்று. ஒரு மாற்றம் வேண்டும். விஜய்காந்த் கட்சியான தேமுதிகவை எடுத்துக்கொண்டால், அவர் கட்சிக்கு என்ன கொள்கை இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் விஜய்காந்த் பேசுவதைக் கேட்டால், ஒரே ஆவேசமாகப் பேசுகிறார். அப்படி ஏன் பேச வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. பொதுவாக நான் விஜய்காந்த் படம் அவ்வளவாகப் பார்க்க மாட்டேன்.

சரி யாருக்கு ஓட்டுப் போடுவது? ஒவ்வொருமுறையும் மக்கள் நிதானமாகத்தான் தீர்பளிக்கிறார்கள். ஒருமுறை திமுக என்றால், அடுத்தமுறை அதிமுக. ஒவ்வொரு முறை ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்காக செய்யும் திட்டங்கள் பார்க்கும்போது, பிரமிப்பாக இருக்கிறது. இதையே அவர்கள் முழு வீச்சாக செய்தால் எப்படி இருந்திருக்கும் என்று தோன்றியது. கலைஞர் ஆட்சி பாலங்கள் ஆட்சி என்று சொல்லலாம். எல்லா இடங்களுக்கும் எல்லோரும் போய்வருவதற்கு பாலங்களை அசுர சாதனையாக செய்திருக்கிறார்கள். ஆனால் மின்சாரம் இல்லை. விலைவாசி கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது. எல்லோரும் லஞ்சம் வாங்குகிறார்கள். அடையாரில் அண்ணா நூலகத்தைப் பார்த்து அசந்து விட்டேன்.
அதிமுகாவும் முக்கியமான கட்சிதான். அவர்கள் காலத்தில் மின்சாரம் கட் ஆகவில்லை. அந்தக் கட்சியின் தலைவி எல்லா விஷயங்களிலும் பிடிவாதம் பிடிப்பதைத் தளர்த்திக் கொண்டால் நன்றாக இருக்கும். ஒரு ஆட்சி 5 ஆண்டுகள் ஆண்ட பிறகு, வேறு கட்சிதான் வரவேண்டும். அப்போதுதான் ஒருவித மாற்றம் தெரியும். முக்கியமான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு எல்லோருக்கும் இலவசமாக அளிப்பதாக வாக்குறுதியைக் கொடுத்திருக்கிறார்கள். சரி மக்களிடம் வாங்கும் வரிப் பணத்தில்தானே எல்லாம் கொடுக்க முடியும்?

வங்கிகளில் நாங்கள் கடன் தருகிறோம். அரசாங்கத்தின் இலவசத் திட்டத்தால், வங்கியிலிருந்து கிடைக்கும் கடனும் இலவசமாக நினைத்துக் கொள்கிறார்கள். டிபிஎன்னில் கையெழுத்து வாங்க ((கையெழுத்துப் போடவில்லை என்றால் கடனே தள்ளுபடி ஆகிவிடும்) a) சாலிகிராமில் ஒருவரைப் பார்க்கப் போயிருந்தேன். ஒரு கையெழுத்துதான் போட்டார். கடன் எவ்வளவு தள்ளுபடி ஆகும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார். பணம் கட்டும் நோக்கம் சிறிதும் இல்லை.

அரசாங்கம் இலவசமாக எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க ஆரம்பித்தால், கடன் என்ற பெயர்கூட இலவசம் என்று ஆகிவிடும். சரி, நானும்தான் க.நா.சு நூற்றாண்டை முன்னிட்டு அவருடைய சில கவிதைகள் புத்தகத்தை அளிக்கிறேன் என்று கூறினாலும் கூட, யாரும் இலவசமாகக் கூட வாங்கி வைத்துக்கொள்ள தயாராக இல்லை. ஏன்?

(இன்னும் வரும்)