குருவின் துரோகம்

 எழுத்தாளர்களைப் பாத்திரங்களாக அமைத்துப் புனைகதைகள் எழுதுவதில் எனக்கு அதிகம் நம்பிக்கை இல்லை.  எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண மனிதர்கள்.  அநேகமாக அவர்கள் எல்லாருக்கும் அவர்களைப் பற்றிப் பிறரிடம் சொல்லும்போதோ எழுதும்போதோ நிஜமல்லாதது மிகவும் இயல்பாக வந்து விடுகிறது.
 மனித இயல்பின் தன்மை அது.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அன்று மிகவும் செல்வாக்கோடு இருந்த எழுத்தாளர் அவர் பணிபுரிந்த வானொலியில் அவருடைய மேலதிகாரியைக் கரிய பாத்திரமாகக் கதை எழுதியதைப் பெருமையோடு சொல்லிக்கொண்டிருந்தார்.  அது தவறு என்று நான் சொன்னேன்.  அவர் வானொலியில் இருந்தவரை என் மூச்சு கூட அப்பக்கம் வீச முடியவில்லை.
 கிட்டத்தட்ட என் அபிப்பிராயம்தான் அழகிரிசாமி வைத்திருந்தார்.  ஆனால் நண்பர் நா பார்த்தசாரதிக்குக் கதாநாயகனை எழுத்தாளனாக அமைப்பதில் மிகுந்த விருப்பம்.  நகுலனின் முதலிரு நாவல்கள் எழுத்தாளர்களைப் பற்றியல்ல.  அதன் பிறகு எழுதியதெல்லாம் அவர் நேரடியாக அறிந்த எழுத்தாளர்களைப் பற்றித்தான்.  சில இடங்கள் வேடிக்கையாக இருக்கும்.  ஆனால் பெரும்பாலும் வருத்தத்தைத் தருவதாக இருக்கும்.  பலரைப் பற்றி அவருடைய மதிப்பீடு தவறாக இருக்கும்.
 வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்துக்கொள்வதுற்காக சக எழுத்தாளர்களைப் பற்றி எழுதுவது நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.  நீண்ட காலமாக இருப்பதே அதை நியாயப்படுத்தாது.  எழுத்துத் துறையின் ஒரு சாபம் குருத்துரோகம்.  ஷெர்வுட் ஆண்டர்சன் என்ற எழுத்தாளர் மனப்பூர்வமாக இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பார்.  சிபாரிசுக் கடிதங்கள் எழுதித் தருவார்.  முதுகில் நிறையக் குத்து வாங்கிக்கொள்வார்.  அப்படிக் குத்தியவர்களில் ஹெமிங்க்வேயும் ஒருவர்.  ஆண்டர்சன் சிபாரிசில் ஒரு பதிப்பாளர் ஹெமிங்க்வேயின் முதல் நாவலைப் பிரசுரிப்பதாகக் கையெழுத்துப் பிரதியை வாங்கி வைத்துக்கொண்டார்.  அதன்பிறகு இன்னும் அதிகசெல்வாக்குடைய பதிப்பாளர் ஒருவர் ஹெமிங்க்வேயுடைய படைப்புகளைப் பிரசுரிப்பதாக ஒத்துக்கொண்டார்.  முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியை எப்படித் திரும்பப் பெறுவது?  அவசரம் அவசரமாக ஹெமிங்க்வே ஆண்டர்சனைக் கிண்டல் செய்து ஒரு சிறு நாவல் எழுதி அந்த முதல் பதிப்பாளரிடம் கொடுத்தார்.  அவர் மிகுந்த கோபத்துடன் அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். ‘அப்போது அந்த முதல் நாவலின் கையெழுத்துப் பிரதியையும் திரும்பக் கொடுத்து விடுங்கள்,’ என்று ஹெமிங்க்வே சொன்னார்.  இவ்வளவு கபடமாக நடந்துகொண்டபோது அவருக்கு வயது 25 ஆகவில்லை.
 இன்று தமிழ் எழுத்துலகத்தில் சிஷ்யர்களும் குருவாக உலவுபவர்களும் துரோகம் செய்யக்கூடும் என்று நினைக்க வைக்கிறது.  இதை மிகுந்த வருத்தத்துடன் எழுத வேண்டியிருக்கிறது.
 குருத்துரோகம் பற்றி இரு நாவல்களை நினைவு படுத்தலாம் என்று தோன்றியது.  ஒன்று, சாமர்செட் மாம் எழுதிய’கேக்ஸ் அண்ட் யேல்.’ இரண்டாவது ஸôல் பெல்லோ எழுதிய’ஹம்போலட்ஸ் கிஃப்ட்.’ அந்த நாளில் நோபல் பரிசு அறிவிக்கும்போது ஒரு படைப்பையும் குறிப்பிடுவதுண்டு.  ஸôல் பெல்லோ, ‘தி டாங்கிலிங் மான்,’அட்வென்சர்ஸ் ஆஃப் ஆகி மார்ச்,’ சீஸ் தி டே,’என மிகச் சிறந்த படைப்புகள் படைத்திருக்கிறார். ‘கிஃப்ட்’பரபரப்பும் ஓரளவு சினிமாவில் உள்ளளது போன்ற தீர்வுகளும் உடையது.  ஆனால் அதுதான் நோபல் பரிசுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது.  மாமை யாரும் ஸ்வீடன் பக்கமே திரும்ப விடவில்லை.  ஆனால் நிறை வாழ்வு, நீண்ட வாழ்வு, நிறை மறைவு.  எனக்குச் சிக்கலாக எழுத முடியும், ஆனால் வாசகன் எனக்கு முக்கியம் என்றிருந்தார். ‘கேக்ஸ் அண்ட யேல்’சுவாரஸ்யமாகவே இருக்கும்.  இரு நூல்களும் எளிதில் படிக்கக் கிடைக்கும்.  தமிழ் வாசகர்கள், குறிப்பாகத் தீவிர வாசகர்கள் பிரிவில் தம்மை அடையாளம் கண்டுகொள்பவர்கள், படிக்க வேண்டும்.  இன்றைய தமிழ்ப் புனைகதைப் படைப்புலகம் துல்லியமாக அர்த்தமாகும்.
    *******
 ஒரு நூலுக்கு அட்டை முக்கியம்.  அட்டை அளவுக்கு அட்டை மீதுள்ள வாக்கியம் அல்லது வாக்கியங்களும் முக்கியம்.  அந்த நூலைப் படிக்கத் தூண்டுவதில் இந்த வாக்கியங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.  நூல் வாசகனை எட்ட வேண்டும் என்ற அக்கறை கொண்ட பதிப்பாளர் இந்த அட்டை வாக்கியங்களை எழுத ஒரு நிபுணரிடம் தருவார்.
 தமிழ் நூல்களில் சிலவற்றில் மட்டுமே இந்த அட்டை வாக்கியங்கள் அவற்றுக்குரிய முக்கியத்வத்தை உணர்ந்து எழுதப்படுகின்றன.  இந்த வாக்கியங்களில் பத்திரிகை விமரிசனத்திலிருந்து அல்லது ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் கூறியதிலிருந்து ஓரிரு வரிகள் இருக்கும்.
 இப்படிப்பட்ட வரிகளில் ஜெயகாந்தன் பெயர் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.  அவருடைய கட்டுரைகளிலோ உரைகளிலோ சமகாலத்து எழுத்தாளர் எவரைப் பற்றியும் அவர் அபிப்பிராயம் கூறியதாக எனக்கு நினைவு இல்லை.  பாராட்டு என்றில்லாது பாதகமாகவும் அவர் கூறியதில்லை.  ஆனால் அவருடைய முன்னுரைகளில் யாராவது தாக்கப்படுவதை உணர முடியும்.  அந்த முன்னுரைகளே ஏதோ முந்தைய ஜன்மத்தில் எழுதியது என்று அவர் கூறக்கூடும்.  என்வரையில் அது உண்மையும் கூட.
 இதர இந்திய மொழிகள் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியாது.  ஆனால் ஆங்கிலத்தில் அவருடைய படைப்புகளின் மொழிபெயர்ப்பு விசேஷமாக இருந்ததில்லை. ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ஆங்கில மொழிபெயர்ப்பை நான் சுமார் முப்பதாண்டுகள் முன்பு படித்திருக்கிறேன். ‘இந்தியன் ரிவ்யூ’வெளியிட்ட அந்த மொழிபெயர்ப்பு செய்திருந்த பேராசிரியருடன் சமீபத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது.  அதை நன்கு திருத்தி அமைத்த பிறகே நூல் வடிவில் அச்சுக்குக் கொடுக்கக் கூறினேன்.
 ஐந்தாண்டுகள் முன்பு அமெரிக்காவில் உள்ள ஆண்டி சுந்தரேசன் என்பவர் மொழிபெயர்த்த சிறுகதைகளைப் படித்தேன்.  நன்றாக இருந்தது.  சமீபத்தில் கே எஸ் சுப்பிரமணியன் மொழிபெயர்த்த’ஒரு மனிதன், ஒரு வீடு’படித்தேன்.. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
 கே எஸ்ஸின் மொழிபெயர்ப்பு வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் சில தமிழ்ச் சொற்களை அப்படியே பயன்படுத்தியது.  மொழிபெயர்ப்பு நூல்களைப் படிக்க விரும்புவார்கள்.  ஓரளவு முயற்சி எடுத்துக்கொள்ளத் தயங்க மாட்டார்கள்.  எப்படியும் நூலின் இறுதியில் ஆங்கில இணைச்சொற்கள் தரப்பட்டிருக்கும்.  மூலப் படைப்பில்,’மகனே’என்பது அடிக்கடி வருகிறது.  இந்தியச் சூழலில் குழந்தாய், மகனே என்பதற்கு ஆங்கில இணை இணையாகாது.  கே.எஸ்’மகனே’என்றே ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.  நாவலே நல்ல மனம் படைத்த மனிதர்கள் பற்றியது. ‘மகனே’என்று அழைப்பது ஆழமான உறவையும் குறிப்பது.  இன்று எவ்வளவு பேர் தம் பிள்ளைகளை,’மகனே’என்று அழைக்கிறார்கள்?
 கே.எஸ் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.  அவருக்கும் எனக்கும் ஆறே வயது வித்தியாசம்.  அதுவே பன்னிரண்டாக இருந்தால,’உன் பணியை நீ மிகவும் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறாய், மகனே!’ என்று கூறியிருப்பேன்.
(A Man, A Home and A World – Jayakanthan – Translation from Tamil
by K S Subramanian, Sahatiya Akademi, New Delhi – Price Rs.150) 
Please note this article appeared in Navina Virutcham 70th Issue
      

எதையாவது சொல்லட்டுமா……….50

ஜூலை 29,30,31, ஆகஸ்ட் 1 என்று 4 நாட்கள் வருகிற மாதிரி அரவிந்த் (என் பையன் பெயர்) லீவு எடுத்திருந்தான்.  வாஷிங்டன், நியுயார்க், நயகரா அருவி என்று மூன்று இடங்களுக்கு அழைத்துப்போக திட்டமிட்டிருந்தான். நான் யோசித்தபோது இந்த முறை இடத்தைச் சுற்றிவிட்டு வருவது கொஞ்சம் சோதனையைக் கொடுக்கும் என்று தோன்றியது.  வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் அரவிந்த் எங்களை விட பரபரப்பாக இருந்தான். வாஷிங்டன் செல்வதற்கு ப்ளோரிடா அருகிலுள்ள ஒரு ஏர்போர்டிலிருந்து செல்வதாக திட்டமிட்டிருந்தோம்.  ஒரு வாரம் முன்பே அரவிந்த் நெட் மூலம் டிக்கட் எடுத்திருந்தான். விமானப் பயணம் இரவு 8.30 மணிக்கு.  நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்பிவிட்டோ ம்.  அரவிந்த் எடுத்த வாடகைக் கார் மூலம் ஏர்போர்ட் சென்று அங்கு வாடகைக் காரைத் திருப்பிக் கொடுத்தான்.  இந்த ஊரில் கார் இல்லாமல் எங்கும் செல்லமுடியாது என்பதால் காரை வாடகைக்கு எடுத்திருந்தான்.  வாடகைக்கு எடுக்கும் கார்கள்கூட ஏர்போர்டில் இருந்தது.   வாடகைக்குக் கார் கொடுக்க ஏகப்பட்ட கார் கம்பெனிகள் இருக்கின்றன.  அது பெரிய நெட்வொர்க். 2  வழக்கம்போல் நாங்கள் எங்கு சென்றாலும் எதாவது தாமதம் இல்லாமல் இருக்காது.  இங்கும் தாமதம்.  விமானப் பயணம் ஒரு மணி நேரம் தாமதம்.  இதனால் நாங்கள் வாஷிங்டன் போய்ச் சேரும் நேரம் இரவு 12 ஆகிவிடும்.  12 மணிக்குமேல் ஏற்கனவே பதிவு செய்த ஓட்டலுக்குச் செல்ல வேண்டும்.  விமானத்தில் 2 மணிநேரம் பயணம் என்பது சென்னையிலிருந்து டில்லி செல்லும் தூரம்.  கொஞ்சம் சிறிய விமானமாக இருந்தது. 
வாஷிங்டனில் இறங்கி, கார் பிடித்து விடுதிக்குச் செல்லும்போது மணி 1 ஆகிவிட்டது.  கொஞ்ச தூரம்போய்த்தான் இடம் பிடிக்க வேண்டியிருந்தது.  அங்குதான் வாடகை குறைச்சல்.  காலையில் 7.45 மணிக்கெல்லாம் கிளம்பித் தயாராக இருந்தோம்.  எங்களைப்போன்ற பயணிகள் கிளம்ப அதுதான் சரியான நேரம். விடுதியில் அந்த நேரத்தில்தான் shuttle ஏற்பாடு செய்தார்கள்.  ஒரு Metro ரயில் பிடித்து, அதில் பயணம் செய்தோம்.  மெட்ரோ ரயில் பார்க்க கம்பீரமாக இருந்தது.  அது மட்டுமல்ல கூட்டமே அதிகமில்லை.  இதுமாதிரியான மெட்ரோ ரயில் சென்னை போன்ற மாநகரத்திற்கு எப்போது வரும் என்று தெரியவல்லை.
வாஷிங்டனின் சுற்றும்போது, சைவச் சாப்பாடு சாப்பிடுவது பெரிய பிரச்சினையாக இருந்தது. இங்கு வந்தபோது எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பதாகப் படுகிறது. மேலும் இந்த நாட்டைச் சுற்றிப் பார்க்கும்போது பல நாட்டு மக்களும் வருகிறார்கள். மொழி, நிறம் எல்லாம் வேறுபட்டதாக இருந்தாலும், எல்லோரும் ஒரே வித குண அதிசயங்களாக எனக்குத் தெரிந்தார்கள்.  அமெரிக்கர்கள் பார்க்க சற்று ஆகரிதிகளாக இருந்தார்கள்.
நாங்கள் முதன் முதலாக வாஷிங்டனில் பார்த்த இடம் National Museum of Natural History என்ற இடம். நாங்கள் சுமந்து வந்த பைகளை அந்தக் கட்டிடத்தில் ஓரிடத்தில் பத்திரமாக வைத்து பூட்டிவிட்டு அப்புறம் சுற்றத் தொடங்கினோம்.  பிரம்மாண்டமான கட்டிடத்தில் தலைச் சுற்றும்படி பல இடங்கள். பல நாடுகளைச் சேர்ந்த கலாச்சாரங்களை தனித்தனியாக அடையாளம் காட்டியிருந்தார்கள்.  அதை நேர்த்தியான முறையில் ஒழுங்கு செய்தவிதம் ஆச்சரியமாக இருந்தது.  நாங்கள் அங்கயே பாதிநாளைக் கடத்திவிட்டோ ம்.  அப்படியும் முழுக்க முழுக்கப் பார்க்க முடியவில்லை.  பின் வெள்ளை மாளிகையைச் சுற்றத் தொடங்கினோம்.  நாங்கள் சென்றபோது அமெரிக்கா பாராளுமன்றத்தில் debt crisis ஓடிக்கொண்டிருந்தது.  கடுமையான வெயில்.  என்னால் தாங்க முடியவில்லை.  வெள்ளை மாளிகையின் முன்னால் பல குழுக்கள் அணு ஒழிப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதுவும் வேடிக்கையாக நடத்துவதுபோல் தோன்றியது.  அதை போலீசே தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.  வெயில் தாங்க முடியாமல் எனக்கு தட்டாமாலைச் சுற்றுவதுபோல் சுற்றத் தொடங்கியது.  நான் ஒரு மாதிரி சமாளித்துக்கொண்டேன்.  அரவிந்த் பதைத்துவிட்டான்.  வாஷிங்டன் முழுவதும் நினைவு மண்டபகங்கள்.  National Galler of Art என்ற இடத்திற்குச் சென்றபோது, மாலை நுழைந்துவிட்டது.  நேரம் இல்லாமல் எல்லா கலை நுட்பங்களையும் அவசரம் அவசரமாகப் பார்க்க வேண்டியிருந்தது.  இரவு 8.30 மணிக்கு நியுயார்க் செல்வதற்கு ரயிலைப் பிடித்தோம்.
                                                                                                                                                                   @@@@@@@@
நான் எடுத்து வந்த இன்னொரு புத்தகம் Carlos Castenadaவின் The Active Side of Infinity என்ற புத்தகம். காஸ்டினாடாவின் முதல் புத்தகம் வெளிவந்தபோது 10 மில்லியன் பிரதிகள் விற்றதாம்.  பெரிய புகழ் அடைந்தவர், யார் கண்ணிற்கும் படாமல் மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.  அவருடைய மரணமும் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை.  1 மாதம் கழித்துதான் காஸ்டினாடா இறந்து விட்டார் என்ற செய்தி டைம் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.  அப்போது காஸ்டினாடாவுடன் இருந்த 5 பெண்களும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள். The Active Side of Infinity புத்தகம் வெளிவந்தபோது காஸ்டினடா உயிரோடு இல்லை.  முதன் முறையாக அப்புத்தகம் படித்தபோது ரமணரின் உபதேசங்கள் சாரம் இருந்ததுபோல் பட்டது.  இருந்தாலும் காஸ்டினாடாவின் புத்தகம் ஒரு நாவல் படிப்பதுபோல் பரபரப்பாக இருக்கும்.

மிகை

                                                                                                                               
   
 பெண்பார்க்கப் போனபோதே அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்திரிகாவை ரொம்பப் பிடித்துவிட்டது.  புத்தம் புது மலரைப் போல பளிச்சென்றிருந்தாள் சந்திரிகா.  அவர்கள் பெண்பார்க்க வருகிறார்கள் என்றதும் சந்திரிகாவை மதியத்துக்குப் பின் விடுப்பு எடுத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்து வரச்சொல்லி விட்டார்கள்.  அலுப்பின் சுவடே இல்லாமல் எப்படி கிரணங்கள் விகசிக்க புன்னகைக்கிறாள் இவள், என்று சுதாகரனின் அம்மாவுக்கு அப்பவே அவள்மீது ரொம்ப இஷ்டமாச்சு.  பெண்ணை ஏற்கனவே புகைப்படத்தில் பார்த்திருந்தார்கள், என்றாலும் சிலது நேரில் வேறுமாதிரி இருக்கும்.  ஃபோட்டோஜெனிக் அல்லாத முகங்கள் நேரில் இன்னும் அழகாகக் கூட அமையக்கூடும்.
 “என்னடா?”அப்பா இவனைப்பார்க்க புன்னகையுடன் திரும்பினார்.
 “என்னப்பா….”
 “பொண்ணு லெட்சணமா இருக்கா.”
 “அம்மாவைப் போல…”
 “குணம்தான் எப்படி…அதுவும் அம்மா மாதிரியா, தெரியல…”என்றார் குறும்பாக.
 “என் கதை இப்ப எதுக்கு, கெடக்கறதெல்லாங் கெடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணைல வையின்னாப்போல…”என்று அம்மா இடைவெட்டினாள்.  என்றாலும் அப்பா அம்மாவின் பேச்சுபாவனையில் இருந்தே அவர்களுக்கு இந்த சம்பந்தத்தில் திருப்தி என்று சுதாகரனுக்குப் புரிந்தது.
 “ஏண்டா? உனக்குப் பிடிக்கலியா?”என்று அம்மா அவனிடம் கேட்டாள்.
 “அம்மாமாதிரின்னு நான் சொன்னேன்…”என்றான் சுதாகரன்.    “எனக்கு எங்கம்மாவை ரொம்பப் பிடிக்குமே.”
 “நல்லவேளை, நீ அப்பாமாதிரி இல்லை…”என்றாள் அம்மா.
 “எனக்கும் எங்கம்மாவைப் பிடிக்கும்!”
 “எங்க வந்தாலும் இவர் பஞ்சாயத்தை ஆரம்பிச்சிர்றார்றா…”
என்று அம்மா முகம் திருப்பிக் கொண்டாள்.
 ஓடும் நதியில் மழைத்துளி விழுந்தாப்போல அவ்வப்போது இப்படி அவர்களுக்குள் ஊடல் நிகழும்.  ஊடுதல் காமத்துக்கு கூடுதல், üகூடுதல் இன்பம்’.  செக்சில் பத்தியம் இல்லாத தாம்பத்தியம் அவர்களுடையது.  காதுப்பக்கங்களில் அப்பாவின் கிருதா முடிகள் நரைத்திருக்கு.  கேசப்பிரிகள் அடர்த்தி குறைந்து கம்பிகம்பியாய் புதராட்டம் காணும்.  அதுவே தனி எடுப்பாய் இருக்கும்.  அப்பாவோ அம்மாவோ இன்றுவரை தலைச்சாயம் என்றோ, புற அழகு சாதனங்களின் துணையையோ தஞ்சம் நாடவில்லை.
 “என்னடா? இந்தப் பெண்ணுக்கு என்ன குறைச்சல்?  அழகா இருக்கா…”என்றாள் அம்மா.
 “இல்ல, அதான் பிரச்சனை.  ரொம்ப அழகா இருக்கறதா அவளுக்கே பாவனை… அந்தப் புன்னகையில் ஒரு அதிகாரம் தெரியறாப்ல இருக்கேம்மா…”
 “அட அது அந்தவயசின் அடையாளம் தானே?  இப்பதான் பறிச்ச பூவின் மலர்ச்சி, அல்லது கொண்டை விரைத்த ஒரு மயிலின் கழுத்து நிமிர்த்திய ஒயில்னு சொல்லிக்கலாம்…ஒரு குழந்தைன்னு ஆயிட்டா அதும் முகத்தைப் பார்க்கற கிறுகிறுப்புல இதெல்லாம் அலையடங்கிரும்..”என்றபடியே அப்பா பக்கம் பார்த்தாள்.  “உடனே என்னைப் பத்தி இவருக்கு ஏதோ சொல்ல வாய் துறுதுறுத்தாச்சு.  கேன் யூ ஜஸ்ட் ஸ்டாப் இட்?”
 “ஃபுல் ஸ்டாப்”என்றார் அப்பா.  “நாங்க ரெண்டுபேரும் ஸ்டேஷன் மாஸ்டரும், கார்டும் மாதிரி….பச்சைக்கொடி காட்டிட்டம்.  நீதான் இன்ஜின் டிரைவர்.  வண்டியைக் கிளப்பறது உன் முடிவுதான்.
 தூரத்தில் இருந்து சந்திரிக்காவின் பெற்றோர்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும், எங்க பெண்ணைக்கூட பிடிக்காமல் ஆகுமா, என அவர்களுக்கு முகத்தில் பெருமிதம்.  நிஜமாகவே சந்திரிகா அன்றைக்கு அத்தனை லெட்சணமாய் இருந்தாள்.  டிசைனர் புடவையும், பின்னலைச் சேர்த்த வெண்முத்து நட்சத்திர அலங்காரமுமாய் இருந்தாள்.  இதெல்லாம் எங்கே கற்றுக்கொண்டாள் தெரியவில்லை.  அழகான பெண்கள் தங்கள் அழகுபாவனையை மெருகேற்றிக் கொள்ளும் வித்தகம் தெரிந்துகொண்டு விடுகிறார்கள்.  அட கண்ணுக்கு மைதீட்டினாலே ஒரு பெண்ணின் அழகு  எங்கேயோ உச்சாணிக்கிளையில் போய் உட்கார்ந்து கொள்கிறது…
 எத்தனையோ இடங்கள் வந்தன.  புகைப்படங்கள் பார்த்துவிட்டு நிறைய இடங்களை அவள் மறுத்துவிட்டாள்.பெண்பார்த்தல் என்று சம்பிரதாய அளவில் முன்னேறினாலே, அதுவே கல்யாணத்தை நோக்கி வழிநடத்துவதாக இருக்க வேண்டும் என அவள் அபிப்ராயப் பட்டாள்.  கல்யாணம் என்பது சந்தை வியாபாரம் அல்ல.  அது ஒரு தனிநபரின் வாழ்க்கைக்கான தேர்வு அல்லவா?…
 பெரிய அரசுவங்கியின் ஏ.ஜி.எம்.மின் பிள்ளை. பேர். சுதாகரன்.  நல்ல தன்மையான மனிதர்கள் அவர்கள்.  பையன் தங்கக் கம்பி. 24 காரட்.  குழந்தைநல மருத்துவன்.  காலை மாலை அவன் கிளினிக்கில் பெரும் பட்டாளம் காத்திருக்கிறது.  நல்ல கைராசி, முகராசி, அவர்களுக்கு ஒரே பிள்ளை…என்றெல்லாம் விவரங்கள் தாங்கி, புகைப்படமும் கிடைத்தது.
 மிகுந்த எளிமையுடன் வெண்முத்துப் பற்கள் திறந்து, வஞ்சகமில்லாத புன்னகையைச் சிந்தியபடி, அம்மா அப்பாவைத் தோளணைத்தபடி நிற்கிறாள் இந்திர சந்திர சுதாகரன்.
 “என்னடி?”என்று கேட்டாள் அம்மா.
 “நம்ம படத்தையும் அவங்களுக்கு அனுப்பி வைக்கலாம்மா…”என்றாள் சந்திரிகா.
 “அதை கொஞ்சம் சிரிச்சிட்டே சொல்லப்படாதா?”
 “ஈ”என்று காட்டினாள்.  “பல் எல்லாம் சரியா இருக்கா, எண்ணிக்கோ அம்மா…”
 “உன்னை அடக்க ஜல்லிக்கட்டுலதான் ஆள் பிடிக்கணும்,”என்றாள் அம்மா.
 தன் அறைக்குள் போய் முகம் கழுவிக்கொண்டதும், திரும்ப அந்தப் புகைப்பட முகம் அவள் நினைவில் வந்தது.  இன்னுங் கொஞ்சம் தீர்க்கமாகப் பார்த்திருக்கலாமாய் இருந்தது இப்போது.  மீசை இருந்ததா இல்லையா?  ம்ஹீம், இல்லை.  மழுமழு தினசரி ஷேவ் முகம்…அப்படி முகங்களை பிளேடு விளம்பரங்களில் பார்த்திருக்கிறாள்.  அவன் நடந்துவரும்போது எதிரில்வரும் பெண் அவனைநிறுத்தி கன்னத்தில் கன்னத்தில் மழுமழுவை வருடிப் பார்ப்பாள்.  திடுதிப்பென்று அந்நிய ஆம்பளை கன்னத்தை வருட அவளுக்கு எப்படி மனசு வந்தது?  என்னவேலையாய்ப் போய்க்கொண்டிருந்தாள்?  போன காரியத்தை முடித்தாளா?…விளம்பரங்களில் பல் தேய்த்தவுடன் காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
 தலையை உதறி நிகழ்காலத்துக்கு வந்தாள்.  சுதாகரன் எம்.டி. குழந்தை நலம். ஏய்.எம்.டி. என் குழந்தையை, அல்லது குழந்தைகளை, சமத்தா பாத்துக்குவியா?  என்ன எளிமையான முகம்.  வாழ்க்கையின் கரடு முரடுகளை சந்தித்திராதவன் போலிருந்ததது.  தினசரி ஷேவ் என்றால் கன்னத்தின் கரடு முரடே தெரியாதவன்1
 அடியே, நீ மாத்திரம் எல்லா இடர் இக்கட்டுகளிலும் உருண்டு புரண்டு எழுந்து வந்திருக்கிறாயாக்கும், என் மனசு கேள்விபோட்டது என்றாலும் நாங்கள் பெண்கள்.  இயற்கைதந்த சூட்சமங்கள் எங்களுக்கு ஒரு சிட்டிகை அதிகம்.  எல்லாவற்றிலிருந்தும் ஒரடி தள்ளிநின்று ஒரு நோட்டம் பார்க்கிறது பெண்மை.  கவனப்படுகிறது.  உன்னிக்கிறது.  அதற்கு பழக்கப்படுத்தப்பட்டு, அப்படியே வளர்க்கப் பட்டிருக்கிறது பெண்மை.
 டாக்டர் படிப்புக்கு என்று ஆசைப்பட்டு நாலு வருடம் எம்.பி.பி.எஸ்., பிறகு ஹவுஸ் சர்ஜன் ஒரு வருஷம், அப்படியே எம்.டி. படிக்கவுமாய் காலம் அவனை உருட்டிப் போயிருந்தது.  படித்து வெளியேவந்து தனியார் மருத்துவமனை ஒன்றில் ரெண்டுவருஷம் பயிற்சிக்காக வேலைபார்த்து தனியே üகுழந்தை மருத்துவர்’ என்று கிளினிக் வைத்து, பெயர்ப்பலகை மாட்டியபோது, சுதாகரனுக்கு வயது 28.
 சாக்லேட்டுடன் குழந்தைகளை வரவேற்று பரிசோதிக்கும் சுதாகரனை குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் பிடித்திருந்தது.
 “கன்சல்டிங் ஃபீஸ் போக மீதி சில்லரை இல்லேன்னா, சாக்லேட் குடுப்பீங்களோன்னு நினைச்சேன்….”என்றபடியே ஒரு பையன் சாக்லேட்டை வாங்கிக் கொண்டான்.
 குழந்தைகளுடன் கலகலப்பாகப் பேசுவான் அவன்.  கைவசம் அதற்காகவே நிறைய நகைச்சுவைத் துணுக்குகள் வைத்திருந்தான்.
 -ஏ பி சி டி ஈ எஃப்னு சொல்லிட்டே மாடிப்படிலேர்ந்து இறங்கிவந்த குழந்தை கீழ விழுந்திட்டது….
 -அப்புறம் என்னாச்சி?
 -ஜி ஹெச்சுக்குக் கூட்டிட்டுப் போனாங்க.
 பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தான். கண்ணைக் கட்டிப்போடுவதான, மூச்சுத் திணறுவதான அழகு அது.  அலங்காரத்திலும், உடையுடுத்துதலிலும் ஒரு சிறப்பு கவனம் தெரிந்தது.  காமெராவைப் பார்த்த பாவனையில் ஒரு திட்டமிடல் கூட தெரிந்தாப் போலிருந்தது.  மனசின் தெறிப்பை அடக்கினான்.  எனக்கு எத்தனை பெண்களைத் தெரியும்…ஒருவேளை எல்லா பெண்களுமே இப்படி உள்கவனமானவர்கள்தானோ என்னமோ?  கூடத்து ஆளுயரக் கண்ணாடி அம்மாவை எப்படி பரவசப் படுத்துகிறது.  கண்ணாடி கண்டுபிடிக்கு முன் ஸ்திரீகள் எப்படி புழுங்கி வந்தார்களோ தெரியவில்லை.
 மனைவிகளுக்கு ஓர் அதங்கம் உண்டு.  அப்பல்லாம் என்னை அத்தனை அழகாக் காட்டும்…
 “கண்ணாடி வயசாறதில்லையா இவளே…”என்று அப்பா கிண்டலடிக்கிறார்.
 முதுகுப்பக்கம் இருந்து அம்மா “என்னடா படத்தை பாத்திட்டிருக்கே…நேர்ல போய்ப் பார்த்திறலாமா?”என்று கேட்கிறாள் புன்னகையுடன்.
 “கொஞ்சம் பிரமைகளோட இருக்காளோன்று இருக்கேம்மா…”என்றான் யோசனையுடன்.
 “அழகுன்ற நினைப்பு இல்லாத பெண்ணோ லோகத்தில் இல்லை.  அவர்கள் படைப்பு உடல்சார்ந்த அளவில் கட்டமைப்பு கொண்டது தானே சுதா?  அதன்படியான கனவுகள், ஆசைகள்….நீ சொல்றாப்போல, பிரமைகள்…இல்லாமல் எப்பிடி இருக்கும்?”
 சுதாகரன் தலையாட்டினான்.
 “எந்த உணர்விலும் அவர்கள் ஒருபடி தீவிரம் அதிகம்தான் காட்டுகிறார்கள்…பாசத்தில், கோபத்தில், தியாகத்தில்…இது சரியா தவறா, என்பது இல்லை.  சரியாக அதை அவளும் கையாளணும்.  அவளைக் கைப்பிடித்தவனும் அதைப் புரிஞ்சிக்கிட்டு கையாளணும்னு தோணுது…”
 “எனக்கு என்ன தோணுதுன்னா…”
 “என்ன?”
 “பேசாமல் பிரம்மச்சாரியாவே இருந்திர்லாமான்னு தோணுது…”
 “இவதான் மேனகையா வந்து உன் தவத்தைக் கலைச்சிட்டாளே.  நல்ல நாள் பார்க்கிறேன்…போயிப் பொண்ணைப் பார்த்திட்டு வருவம்”என்றாள் அம்மா.
 ஆனால் நண்பர்கள் மத்தியில், நீ அதர்ஷ்டக்காரன்டா, இப்பிடி அப்சரஸô ஒரு பெண்டாட்டி அமைய குடுத்து வெச்சிருக்கணும், என்று கிறுகிறுப்பான வசனங்கள் வந்தன.
 சுதாகரனுக்கு கூடப்பிறந்த அக்காவோ தங்கையோ கிடையாது.  அவன் அக்காஸ்தானத்தில் பெரியம்மா பெண் தீபிகா.  அவள் கணவனும் டாக்டர்தான்.  திருவான்மியூரில் இருக்கிறாள்.  எல்லாரையும் விட தீபிகா சொன்னதுதான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கிறாப் போலாச்சு.
 “சுதா, எனக்கு உன்னைத் தெரியும். ரொம்ப அலட்டிக்கற ஆள் இல்லை நீ.  எல்லாமே நல்லதுதான் நடக்கிறதாக உனக்கு ஒரு எளிமையான அப்ரோச் வெச்சிருக்கே இல்லியா?”என்றாள் தீபிகா.
 “ஆமாங்க்கா…”என்றான் சுதாகரன்.
 “பின்ன என்ன ? இவ விஷயத்தில் மாத்திரம் ஏன் இவ்வளவு யோசிக்கறே சொல்லு…”
 அவன் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.
 “கீப் ஸ்மைலிங்.  நோ இஃப்ஸ் அன்ட் பட்ஸ், ஆல் தி பெஸ்ட் சுதா”.
 “இவன்தான் உன்னாண்ட மாட்டிக்கப்போற அப்பாவியா?”என்று பாவனா சந்திரிகாவிடமிருந்து அந்தப் புகைப்படத்தை வாங்கிப் பார்த்தாள்.
 “ம். வந்து குவிஞ்ச படங்கள்ல கிளி ஜோசியம் மாதிரி இதை உருவினால்….நாட் பேட்னு பட்டதுடி”என்றாள் சந்திரிகா.
 “இவனா நாட் பேட். நீ வேணான்னா சொல்லு. நான் தூக்கி இடுப்புல வெச்சிக்கிறேன் இவனை…”
 “அலையாதடி…”சந்திரிகா சிரிக்கிறாள்.
 “மனசுலயே ஃபஸ்ட் நைட் முடிஞ்சாச்சா? எதுவரை வந்திருக்கே?”
 “ஐய அதெல்லாம் ஒண்ணில்ல…”என்றபோது அவள் முகம் சிவந்துவிட்டது.
 “இப்ப உன்னை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்…”என்று செல்ஃபோனை அவளைப்பார்க்க நீட்டினாள்.
 “சும்மா இருடி, இனி பொண்ணு பார்க்க வந்து, அவனுக்கு என்னைப் பிடிச்சி…”
 “அப்புறந்தான் ஃபஸ்ட் நைட்ன்றியா…அடாடாடா, இந்த அல்ட்டல்லாம் எங்ககிட்ட வேணாம் மகாராணி.  உன்னைக்கூட ஒருத்தன் வேணான்னுருவானாக்கும்…”
 அவள் பேச்சை மாற்ற விரும்பினாள்.  “வர்ற வெள்ளிக்கிழமை வர்றாங்கடி, நீயும் வரியா, மேக் அப் போட்டுவிட…”
 “ஐயோ வேணாம்.  வர்றவன் என்னைப் பார்த்துட்டு உனக்குப் பதிலா என்னைப் பிடிச்சிருக்குன்னுறப் போறான்…”என்றுவிட்டு எழுந்துபோனாள் பாவனா.அவள் போனபின்பும் லேசாய் ஒரு அதிர்வு சந்திரிகாவிடம் இருந்தது.  ஃபஸ்ட் நைட் வரை போயிட்டியா?…என்ன  இப்பிடிக் கேட்டுவிட்டாள்.
 சொன்ன நேரம் பிசகாமல் அவர்கள் காரில்வந்து இறங்கினார்கள்.  மாப்பிள்ளை தங்கக் கம்பியோ என்னவோ, மாமனார் தலையில் வெள்ளிக் கம்பியாய் இருந்தார்.
 மலையாள பாணியில் நெற்றியில் கீற்றாய் சந்தனம் பூசியிருந்தான்.  ஜீன்ஸ் பேன்ட் இன் பண்ணி முழுக்கை சட்டை போட்டிருந்தான்.  காலை ஷேவ் செய்தது போதாதென்று கிளம்புமுன் ஒரு இழுப்பு இழுத்துவிட்டு வந்தாப் போலிருந்தது.  விளம்பரங்களில் …ஷ் அதைப்பத்தி இப்ப என்ன…
 இயல்பாகவே சந்தோஷமான ஆள் போலத் தெரிந்தது.  புகைப்பழக்கம் இல்லாத உதட்டுச் சிவப்பு சாயம்பூசிய பிரமையைத் தந்தது.  ச். அப்பா அம்மாவுடன் இல்லாமல், கூட அப்போது பாவனாச் சனியன் இருந்தாலும் தேவலாம், எதும் கேட்கலாம்…அந்நிய ஆடவனைப் பற்றி அப்பா அம்மாவிடமே பேசுவது என்னவோ போலிருந்தது அவளுக்கு.  அடிகள்ளி, உனக்கு அவனிடம் இஷ்டந்தான்.  அதனால்தான் அந்த யோசனைகளே அலையடிப்புகளாக உன்னை மூச்சுமுட்ட அடிக்கின்றன…சட்டென தன் முகத்தில் செம்மை பரவுவதை உணர்ந்தாள்.  இதுதான் பெண்மை என்பதா, என்று அவளைப்பற்றி அவளுக்கே புதுசாய் இருந்தது.  இரு  ஃபோட்டோ எடுத்துக்கறேன், என செல்ஃபோனை நீட்டும் பாவனா.  இருக்கட்டும், அவ கல்யாணத்தில் அவளை யார் விட்டா?
  சற்று அலட்சியமாய் வளைய வந்தாலும், எல்லாப் பெண்ணுக்குமே ஆண்கள் சார்ந்து ஒரு கவனம் இருக்கத்தான் செய்கிறது.  ஒரு ஆணின் அங்கிகாரம் என அதைச் சொல்லலாமா….
 சற்று தள்ளிப்போய்ப் பேசிவிட்டு வந்தவர்கள், ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள்.  “எங்களுக்கு சம்மதம், பெண்ணுக்கு சம்மதமான்னு ஒரு வார்த்தை கேட்டுருங்க…”என்றான் சுதாகரன்.  சட்டென்று ஒரு கூடை பூவை கவிழ்த்தாப்போல அவளுக்கு உடல் சிலிர்த்தது.  குப்பென்று மல்லிகைக்காட்டின் மணம்.  வாழ்க்கையில் இப்படியெல்லாம் தருணங்கள், அதுவும் ஒரு ஆண்சார்ந்து வாய்க்கும் என்பதே தெரியாமல் இருந்ததே.  உலக அழகி என்று கிரீடம் சூட்டியபோது, அந்தப் பெண்கள், சனியன் என்று பெரிதாய் அழுகிறார்கள் இதென்ன பைத்தியக்காரன்.  இதற்கு அழுவார்களா, என்றிருந்தது அவளுக்குஇப்போது அவளுக்கே கண் பனித்தது. 
 சந்திரிக்காவின் அம்மா கிட்டவந்து அவள்தோளைத் தொட்டாள்.  தலைநிமிர்த்தி புதுவெள்ளமாய் வளையவந்த பெண்  இப்போது வழியடங்கி சலசலத்து ஓடுகிறாப் போலிருந்தது அவளுக்கு.  மதுரை மீனாட்சி கொட்டமடித்துத் திரிந்தபோது, சுந்தரேஸ்வரரைப் பார்த்த கணம், மூணாவது தனம் கரைய பெண்மை உருக் கொண்டாளாமே. “சொல்லுடி…”என்றாள் காதருகே.
 கனவில்போல சந்திரிகா தலையை நிமிர்த்தினாள்.
 “என்னடி?”
 “என்னம்மா?”
 “சரின்னு சொல்லிறலாமா?”
 “ம்”என தலையசைக்கிறபோது கழுத்தில் தலை நிற்கிறாப் போலவே தெரியவில்லை.
 காதல் என்பது தன்னைக் கரைக்கிற விஷயம், என்பதே புதுசாய் இருந்தது.  குதிரைப் பாய்ச்சலாய் ரத்தவோட்டம்.  தாயக்கட்ட சோழிகள் உள்ளே உருள்கின்றன.  காலம் கணக்கு போடுகிறாப் போல.  அடியே இதில் நீ செய்ய என்ன இருக்கிறது?  காதல் ஓர் உணர்ச்சி நிலை.  அதில் வெறுதே போக்குநீச்சல் அடிப்பது தவிர மனுசாளால் கூடுவதுதான் என்ன?
 கல்யாண நாளுக்குக் காத்திருக்கிறாப் போலாச்சு.  குழந்தையாய் இருந்தபோது எதைப்பார்த்தாலும் கேட்டாலும், புதுசாய் எதைக் கண்டாலும், ஆ அம்மா…என்று ஓடோடிப்போய்ச் சொன்ன காலங்கள் திரும்ப வந்தன.  ஆனால் ஒரு வித்தியாசம்.  இது ரகசியங்கள் பூக்கிற வேளை.  இவற்றைப் பகிர்ந்துகொள்ள பெண்ணுக்கு ஆணும் ஆணுக்குப் பெண்ணும் வேண்டியிருக்கிறது.  மற்றவர்முன் இவை, ரகசியங்கள் கூட ஆகா.  இதெல்லாம் ஒரு விஷயம் என்று கூட சபை ஏறாம்ல போகக் கூடும்.
 மனக்கதவைத் திறந்து அறைகூசும் வெளிச்சத்துடன் வளைய வருகிறது காதல்.  ஒரு விடியலின் சாயம் பூசிக்கொண்ட கணங்கள்.
 “அடேய் சுதாகரா, இந்தப் புடவை எனக்கு நல்லாருக்காடா?”என்று கேட்கத் துடித்த கணங்கள்.  என் அழகு உனக்காக.  என் அலங்காரம் உனக்காக.  என் சர்வமும் உனக்காக.  என கர்வம் காலடிநிழலாய்ப் பதுங்கிய கணங்கள்.
 ஆணைப் பெண்ணிடமும், பெண்ணை ஆணிடமும் காதல ஒப்படைத்து விடுகிறது.
 மிஸ்டர் சுதாகரன் குழந்தை நலத்தில் எம்.டி என்றால் நான் அவனால் காதலில் பிஹெச்.டி. ஆயிருவேன் போலருக்கேடி.
 அந்த சுதாகர் கடங்காரன் ஒருநாள் திடுதிப்பென்று அலுவலகத்தில் வந்து அவள் எதிரில் அமர்ந்தான்.  தலையை நிமிர்…
குப்பென்றாகி விட்டது.  இவளது தடுமாற்றத்தைப் பார்த்தே பாவனா விஷயத்தை யூகித்துவிட்டாள்.  அவள் ஆள் சரியான லண்டி.
 எழுந்து ஒப்பனை அறைக்குப்  போனாள், கூடவே வீட்டு நாயாட்டம் இவள்…பாவனா.
 “யார்றி, இவன்தான் உன்னைக் கட்டிக்கப்போற அந்த துரதிர்ஷ்டசாலியா?”என்று காதில் பாவனா.
 “அந்தப் பாவி இவர்தான்.”
 “பாவின்றே, ன் இல்ல ர் வருதே…ம் ஸ்மார்ட்டா இருக்கார்.  நான் முன்னாடி பார்த்திருந்தால், நானே வளைச்சிருப்பேன்.”
 “உன் வளவளப்பை அப்பறம் வெச்சிக்கலாம்.  எப்பிடியும் வந்து உன்னாண்ட தனியா ராமாயணம் இருக்கு, எனக்குத் தெரியும், இப்ப நான் கிளம்பறேன்…”
 “என்ன, இன்னிக்கு ரிகர்சல் இருக்கா?”
 “ரிகர்சலா?…ச்சீ…”என்று உடல் சிலிர்த்தாள் சந்திரிகா.  நடக்கவிட்டு காலில் குச்சியைக் கொடுத்து விழுத்தாட்டினாப் போலிருந்தது அவளுக்கு.
 “ச்சீயாவது ஜாயாவது…என்னென்ன பிளான் வச்சிட்டு வந்திருக்கானோ?  பசிச்சி வந்திருப்பான்.  கனவுலயே தலைகாணியைத் திங்கிற பருவம்டி இது….”
 மேலே அவள்பேசக் காத்திருக்க நேரமில்லாதபடி வெளியே பரபரவென்று வந்தாள் சந்திரிகா.
 மேனேஜரிடம் “என் வுட்பி வந்திருக்கார் சார். கொஞ்சம் வெளிய கிளம்பறேன்…”என்று அனுமதி கேட்கும் முன் உள்ளே ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது.  நானே நானா யாரோ தானா, என உள்ளே வாணி ஜெயராம் பாடுகிறாள்.
 வெளியே ஏற்கனவே உங்கவீட்ல தகவல் சொல்லிட்டுதான் உன்னைப் பார்க்க வந்தேன்…”என்றான் பரந்த புன்னகையுடன்.
 பெரியவர்களை மதிக்கிற பிள்ளை.  நான் இந்தத் தலைமுறை, என்கிற தலைவீக்கம் இல்லை அவனிடம் என்று கவனித்தாள்.  பெற்றவர்களும் நல்ல சுதந்திரத்துடனேதான் அவளை வளர்த்திருக்கிறார்கள், அதையும் சொல்ல வேண்டும்.
 இங்க நிக்காதே, அங்க தங்காதே, காலாகாலத்ல, இருட்டறதுக்குள்ள வீட்டுக்கு வா…என்றெல்லாம் பொத்திப் பொதிந்து வளர்க்கப்படும் பெண்மை.  அது பெரியவர்கள் காட்டும் அக்கறையின் கரிசனத்தின் வெளிப்பாடுதான்.  அதெல்லாம் இந்த சந்திப்பில், இந்த திகட்டல் கிட்டுமா என்ன?
 “எதும் சாப்பிடறியா”?
 “இல்ல, இப்பதான் ஆபிஸ்ல காஃபி சாப்பிட்டேன்,  உங்களுக்கு எதும் வேணுமா?”என்று இதமாய்க் கேட்டாள்.
 “இல்ல, உனக்காகத்தான் கேட்டேன்…”என அவன் சொன்னது கிறுகிறுப்பாய் இருந்தது.
 சட்டென ஒரு அந்நிய ஆடவனுடன் இத்தனை சகஜமாய்ப் பழகிவிட முடியுமா, என்று அவளுக்குத் திகைப்பு.  நம்ப முடியாத கணங்களாய் அது இருந்தது.  காதுக்குள் கோழிஇறகுக் குடைச்சல்.  ஒரு புதையல் காலில் தட்டினாப் போல என்ன இது, மணமும் உடலும் ஒருசேர அவனைச் சார்ந்து சரிகிறதாக கசிகிறதாக குவிகிறதாக ஒரு மயக்கம்.
 ஆட்டோவில் இருந்து இறங்கும்போதே கடல்காற்று ஜிலுஜிலுவென்று வந்து தழுவியது.  முந்தானைக் கொடியேற்றினாள்.  கடல் தண்ணீரை அலையாட்டல் போல காற்று அவளைச் சற்றே தாலாட்டியபோது, இயல்பாய் அவன் அவளை, அவள் கைகளைப் பற்றினான்.  விளம்பரங்களிலும், சினிமாவிலும் அந்தக் கட்டத்தில் உடனே இசைக் கூச்சல் கேட்கும்.  அல்லது யாராவது ஹம்மிங் தருவார்கள்.  அல்லது சுற்றிலும் பன்னிக்குட்டிகள் போல வதவதவென்று தேவதைச் சனியன்கள் சூழ்ந்துகொண்டு ஆடிப்பாடி கும்மாளமிடுவார்கள்.  வாஸ்தவத்தில் இது தனிமையின் நேரம் அல்லவா?  அமைதியின் நேரம் அல்லவா?  சப்தங்களுக்கு, கொண்டாட்டங்களுக்கு அங்கே என்ன வேலை?
 இதமான அந்த ஸ்பரிச மொழி புது அனுபவமாய் இருந்தது.
 “சந்திரிகா…”
 “ம்”
 “என்னைப் பிடிச்சிருக்கா?”என்று கேட்டான் தாபமாய்.
 க்ளுக் என்று சிரித்தாள்.
 “என்ன சந்திரிகா?”
 “நீங்க உளர மாட்டீங்கன்னு நினைச்சேன்…”
 “ஹா நானே அப்படித்தான் நினைச்சேன்.  இங்கே அறிவுக்கு வேலைதான் இல்லை.  உளரல்கள் கொண்டாடப்படும் வேளை இது…”
 “சார் கவிதை எழுதுவீங்களோ?’
 ‘”இனிமேல் எழுதக் கூடும்.”
 “அல்லது குறையும்…”
 “ஆ குறையவும் கூடும்”என்றான்.  “நான் என் கவிதையைக் கண்டடைந்தேன்.”
 “இத்தனைநாளா எங்க இருந்தீரய்யா நீர்?”என்றாள் அதே தாப வியூகத்துடன்.
 “மனசின் ஒத்திசைவு திருமண வாழ்க்கையின் அற்புதம்…”என்றான் சுதாகரன்.  “சரி. நாம் சற்று நிதானப்படலாம்…”
 “வேண்டாம்”என்றாள் சந்திரிகா.  “இந்தக் கணங்கள் பொய்யானவை அல்ல. அதிதமானவை என ஒத்துக்கொள்ளலாம் தான்.  அதனால் என்ன?  அதிகம் என்பது கூட என்ன…வாழ்வின் வெண்ணெய்த் திரட்டு அல்லவா?”
 “மேலே பார் நிலா, பகலின் வெண்ணெய் திரளல்….”என்றான் சுதாகரன்.  “எனக்குள் எதோ நிகழ்கிறது சந்திரிகா.  நான் கவிஞனாகி வருகிறேன்…”
 “சொற்கள் உம்மிடம் வலைபின்ன ஆரம்பித்து விட்டன.”
 கடகடவென்று சிரிக்கிறான் சுதாகரன்.  “நாம சராசரியாப் பேசிக்கலாம்…காதல் பிரசாதம் வேணுமா?”
 “என்ன அது?”
 “சுண்டல்”என்கிறான் அவன்.
 வழியில் ஆட்டோவை நிறுத்தி ரெண்டுமுழம் மல்லிகை வாங்கித் தந்திருந்தான்.  காற்று அவள் கூந்தலை அளைந்து ஒரு அடர்த்தியான வாசனையை அவன் முகத்தில் கொண்டுவந்து வீசி மோதியது.  பேப்பர் போடும் பையன் தாளை வீசிச் சொல்கிறான் -.தலைப் பூ செய்திகள்….
 “நாம் அதிதமானவர்கள் அல்ல.  இது ஒரு இறுக்கந் தளர்ந்த நிலை, அவ்வளவுதான் சந்திரிகா…”என்கிறான் சுதாகரன்.  “நெரிசலான பேருந்துக்குள் புகுந்துகொண்ட பின் சற்று இறுக்கந் தளர்த்தி ஆசுவாசப் படுவது போல. காலத்தின், நியதிகளின் நெருக்கடிகளில் இருந்து மானுடத்துக்கு இத் தளர்வு தேவையே போலும்.”
 “அறிவைத் தாண்டி இதயம் விழித்த கணங்களாக இவற்றைச் சொல்லலாமா?”என்கிறாள் அவள் கனவுச்சாயை விலகாமல்.
 “அறிவு இதயத்துக்கு வழியொதுக்கி ஒதுங்கிக் கொண்ட கனங்கள்…”
 “இவை நமக்கேயான கணங்கள், அல்லவா?”
 “சரி, அந்த முகூர்த்த பவித்ரத்தில் நாம் நம்மைப் பற்றி அறிமுகம் செய்துகொள்ளலாம் அல்லவா?”என்று கேட்டான் புன்னகை மாறாமல்.
 “அதற்கென்ன..”
 “உன்னைப் பற்றிச் சொல் சந்திரிகா.”
 “அவை உண்மையல்லாமல் போகலாம்…நான் என்பது நான் அல்ல.  பிறர் என்னைப்பற்றி என்ன கணிக்கிறார்களோ அது சரியாக இருக்கலாம்…அல்லவா?”என்றாள் குறும்புடன்.
 “நீ நீயாக எப்படி உணர்கிறாயோ, அப்படி நான் உன்னை வைத்துக்கொள்ள முயல்வேன்…”
 “என் தங்கமே”என்றாள் கண் விரிய. “ஐ லவ் யூ சுதா”
 “மனதை விரித்துக் குடைபோலாக்கி என்னை அதனடியில் அழைக்கிறாய்.  நாம் இப்படியே நினைவுகளை இதமாய் அளைந்துகொள்ள ஆரம்பித்தால் எத்தனையோ முரண்களைக் களைந்து கொள்ளலாம் என நம்புகிறேன் சந்திரிகா.  இப்போது ஒரு கேள்வி…”
 “ம்”
 “என்னை நேரில் பார்க்கும்முன், என் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு…என்ன நினைத்தாயோ?”
 “ஏன்?”
 “ஏன் என்றால், என்னைப் பற்றி நான் நினைப்பதை விட மற்றவர் நினைப்பது சரியாக இருக்கும், என ஒரு மேதை சொல்லியிருக்கிறாள்….அவள் பேர் சந்திரிகா..”
 “சரி.  ரொம்ப வெகுளி.  அப்பாவி..”
 “ம். அவ்வகையில் ஏமாளியும் கூட…”
 அவள் சிரித்தாள்.  “நீங்கள் சொல்லுங்கள்…என் படத்தைப் பார்த்தபோது…”
 “சொல்லட்டுமா?”
 “நீ அழகி.  சரி. அழகு பிரமைகள் கொண்டவள்..”
 “அழகி என்று ஒத்துக்கொள்ளும் பட்சம், அவை பிரமைகளாக ஏன் நினைக்க வேண்டும் நீங்கள்?”
 “ஹா, என் பெண்ணே…உலகில் அழகற்றவர் இல்லை.  அழகு பிரமைகள் நம்மை நாமே தனித்துப்போக தரித்துக்கொள்ளத் தூண்டுகின்றன.”
 அவள் முகம் சற்று வாடியதை கவனித்து பதறிப்போனான்.
 “சக மனிதரிடம் முதல் புன்னகை என் பழக்கம்..அவர் எனக்கு, என் குணநலன்களுக்கு ஒவ்வாதவர் என்று நானே பிரித்துக்கொள்வது கிடையாது.  ஒருவரை எதிர்கொள்கையில் அவரது நல்ல குணங்களை முன்னிறுத்தி அவரை அணுகினால் என்ன, என்பது என் வழி.”
 “சரி”என்றாள் அவள்.
 “முன் கை நீண்டால் முழங்கை நீளும், என்பது பழமொழி.”
 அவள் அவனைப் பார்த்தாள்.
 “ஒருவனை அவனது நல்ல குணங்களோடு மரியாதையுடன் அணுகும்போது, அவன் என் நல்லம்சங்களை கணக்கில் கொள்ள முடிகிறது அல்லவா?”
 “எல்லா சந்தர்ப்பங்களும் அப்படி அமையாது சுதாகரன்…”
 “நீ பேச முன்வந்தது பிடித்திருக்கிறது சந்திரிகா…அமைய வேண்டிய தேவை இல்லை.  எனக்கு உடனடி தீர்வு. வலி நிவாரணிகளில் நம்பிக்கை இல்லை.  காத்திருப்பது அழகான விஷயம்தான்…”
 “ம்”என்று தலையாட்டினாள் சந்திரிகா.
 “எல்லா கணங்களையும் அடுத்த கணத்தோடு முடிச்சிட்டு சிக்கலாக்கிக் கொள்வது வேண்டாம் என நினைக்கிறேன்..”
 “வேண்டாம்”என்றபடி அவனை அருகே அழைத்தாள்.    “இந்தக் கணங்கள் இதோ பத்திரமாக என்னுள் அழியாவரம் பெற்று அமர்ந்துவிடும்”என்றாள்.  சற்றுப் புன்னகையுடன் அவனது மழுமழு கன்னங்களை வருடித் தந்தாள்.
(Appeared in Navina Virutcham 89-90th issue released in the mnth of July)

காணாமல் போன அம்மிக்கல்

                                                                                                                    

பெருநாள் பிறை
பனி உறங்கும் தோட்டத்து மருதாணி
அம்மிக் குழவி தழுவிச் சிவப்பேறிய உம்மாவின் கை
பச்சை வாசனை பக்கத்தில் நான்
நசியும் துருவல் தேங்காய்,பச்சை மிளகாயோடு
நறுக்கென உப்பும் அரைபடும் நொடிகளில்
ஐம்புலன்கள் விழித்துக் கொள்ளும்
அந்த அரைத்த சம்பலுக்காய்
உயிர் விடத் தோணும்.
அவித்த இறைச்சி தட்டிப் பொரிக்கவும்
வறுத்த சீரகம் அரைத்தெடுக்கவும்
பூண்டும் இஞ்சியும் விழுதாய் மசிக்கவும்
தோதாய்க் குழிந்த அம்மிக்கல் அது.
அம்மிக்கல்லுக்காய் தனியொரு மேடை
தண்ணீர் விட்டுக் கழுவவும்
கழுவும் தண்ணீர் வழிந்தோடவும்
சின்னதாய் ஏற்பாடுகள்
அம்மிக்கல்லின் பின்னால்
நீள் கம்பி வைத்த
சில் காற்று ஜன்னல்
கருங்கல் அம்மிக்குள்
மெல்லிய அதிர்வுடனான
உயிர் ததும்பலை அதன் வெதுவெதுப்பு மேற்பரப்பு
பல சமயங்களில் உணர்த்தி நின்றது.
முன்றல் கொய்யாமரம்
வளையங்கள் கூட்டிக்கொண்ட
பின்னொரு கோடை நாளில்..
சமையல் உள் வெறுமையாய் இருக்கிறது.

அம்மிக்கல்லும் இல்லை
சில் காற்று ஜன்னலும் இல்லை
பதிலாய் இடத்தை அடைத்துக் கொண்டு
ஒரு
மின்சார மிக்ஸி….

சீனத்தில் அரக்குக் கலை

                                                                                                                           

அரக்கு என்பது மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கையான பொருள் என்பதைப் பெரும்பாலோர் அறிந்திருப்பர். ஆனால், சீனத்தில் அதற்கிருக்கும் நெடிய வரலாறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஷான்ஸி, ஹூபேய், ஸிச்சுவான், குய்ஜோவ், யுன்னான் போன்ற 23 மாகணங்களின் 550 மாவட்டங்களிலிருந்து பெருமளவில் அரக்கு உற்பத்திக்கான கச்சாப் பெருளைப் பெறும் சீனா உலகிலேயே அரக்கு உற்பத்தியில் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அரக்கு பிசினைக் கொடுக்கும் மரங்களை வளர்க்கக்கூடிய சீதோஷண நிலையைக் கொண்டிருக்கின்றன. நட்டதிலிருந்து 3-5 வருடத்தில் பலன் தரும் இம்மரத்திலிருந்து பெறப்படும் பிசினானது காற்று பட்டதும் இறுகித் திடமாகிறது. ஜூன் ஜூலை மாதங்களில் தான் சூரிய ஒளி காற்றின் ஈரப்பததைக் குறைத்து விடுமென்பதால், விடிவதற்கு முன்பாகவே ரப்பர் பால் எடுப்பதைப் போல அரக்குப் பால் எடுப்பார்கள். உலர்காற்று பட்டு இறுக்கம் கொண்டால், அரக்குப் பிசின் மரத்திலிருந்து ஒழுகுவதும் நின்று போகும். அரக்குக்கு ஈரம், வெப்பம், அமிலம், காரம் போன்ற எதாலும் பாதிக்கப்படாத அரிய தன்மையுண்டு. ஆகவே, அரக்கினால் செய்யப்படும் பொருட்கள் அழகாக இருப்பதுடன் மிக நீண்ட நாள் உழைக்கக் கூடிய உறுதி மிக்கவையாகவும் உள்ளன. அரக்கு மிதமாகப் பயன்படுத்தும் போது சிவப்பாகவும் கூடுதலாக உபயோகிக்கும் போது கருப்பு நிறமும் கொள்ளும். ஆகவே தான், அரக்கினால் செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் கருப்பு அல்லது சிவப்பு நிறத்திலேயே இருக்கின்றன.
வரலாற்றுப் பதிவுகளின் படி கிமு 770 முதலே அரக்கு மரங்கள் நடப்பட்டு வருகின்றன. தாவோ மதத்தை நிறுவிய ஜுவாங் ஜி இவ்வகை மரங்கள் நடப்பட்ட தோப்புகளைக் கண்காணித்த அதிகாரியாக இருந்திருக்கிறார். அக்காலத்தில் மீன், மல்பர்ரி, உப்பு போன்ற பொருட்களுக்கு நிகரான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்திருக்கிறது அரக்கு. அதுமட்டுமில்லாமல், அரக்கு சாதனத் தயாரிப்பும் அதன் மீது செய்யப்பட்ட கலையும் தொடர்ந்து வளர்த்தெடுக்கப் பட்டிருக்கின்றன. செயற்கை இழையாலான துணியைக் கொண்டு அடிப்படை உருவம் வடிக்கப்பட்டு, அரக்கு பூசப்பட்டு இறுகியதும் செதுக்கி அலங்கரிக்கப்படும். இப்பாத்திரங்களுக்கு எந்த மாதிரியான உருவமும் கொடுக்க முடிந்தது.
இன்னொரு பிரபல தத்துவஞானி ஹான் கபெய்ஜி. கி.மு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது பதிவின் படி சீனாவின் 4000 வருடப் பழமை மிக்க மிக முக்கிய உயர்குடியைச் சேர்ந்த ஷுன் என்பவர் தான் முதன்முதலில் அரக்கைப் பயன்படுத்தியவர். இருப்பினும், 1970களில் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்கள் அக்கூற்று தவறென்று நிரூபித்துவிட்டது. ஜேஜியாங் மாகாணத்தின் யுயாவ் நகரின் ஹெமுடு புதைபொருள் தலத்தில் கண்டுக்கப்பட்ட வெளிச்சத்தில் மின்னிய அன்றாடம் பயன்படும் பாத்திரங்கள், மரக்கிண்ணம் ஆகியவை அரக்கினால் செய்யப்பட்டிருந்தன. அகழ்வாய்வாளர்களை மிகவும் அதிசயிக்க வைத்தன.  6000 வருடங்கள் பழமை கொண்ட இந்தக் கிண்ணங்கள் தான் ஆகப் பழைய அரக்கு சாதனங்கள் என்று சோதித்தறிந்துள்ளனர்.
மரத்துடன் அரக்கைச் சேர்த்து செய்யும் சீனத்து பழுக்காக் கிண்ணங்களும் சொப்புகளும் அதே போன்ற நெடிய வரலாற்றைக் கொண்டிருக்கின்றன. சிவப்பும் கருப்பும் மட்டும் கொண்ட அவை எளிமையாக இருந்தன. எழுதப் பயன்படும் சீன மை கண்டுபிடிக்கும் முன்னரே அரக்கைக் கொண்டு எழுதியிருக்கிறார்கள் என்பதையும் அகழ்வாராய்ச்சியினர் கண்டு பிடித்துள்ளனர். கி.மு 475-221 காலத்தைச் சேர்ந்த இருபத்தெட்டு மூங்கில் விளாறுகள் ஹென்னன் மாகாணத்தின் ஸின்யாங்கிற்கு அருகில் ச்சாங்தாயுவான் என்ற இடத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவற்றில் விலங்குகள், மேகங்கள் போன்ற மிகத் தேர்ந்த கலைநுட்பத்துடனான சித்தரிப்புகளை அரக்கினால் உருவாக்கியிருந்தார்கள். அதேபோல, 2000 ஆண்டு பழமை வாய்ந்த மாயங்டுய் ஹான் கல்லறையில் அரக்கினால் செய்யப்பட்ட பண்டபாத்திரங்களை அகழ்ந்தெடுத்திருந்தனர். இப்பாண்டங்களின் நல்முத்தைப் போன்ற பளபளப்பும் மினுமினுப்பும் காண்பவரை மிக ஆச்சரியப்பட வைக்கும். ச்சின் (கி.மு 221-206) முடியாட்சியைச் சேர்ந்த மீன்வுரு வண்ணமாகத் தீட்டப்பட்ட அரக்குப் பாத்திரம் மிக முக்கிய அரிய கண்டுபிடிப்பு.  யுவான், மிங், ச்சிங் முடியாட்சி காலங்களில் 400 அரக்குவகைகள் ஆபரணங்கள் மற்றும் பண்டபாத்திரங்களில் பயன்படுத்தியுள்ள அன்றைய சீனம் கலாசார வளர்ச்சியிலும் செல்வத்திலும் மிகச் செழுமையுடனிருந்திருக்கிறது.
இன்றைய தேதியில் பேய்ஜிங், கபூச்சோவ், யாங்ஜோவ் ஆகிய மூன்று நகரங்கள் தான் அன்றாடம் புழங்கும் பொருட்கள் தொடங்கி அலங்காரத்துக்கென்றே செய்யப்படும் விலையுயர்ந்த கைவினைப்பொருட்கள் வரை ஏராளமான சீன அரக்குச் சாமான்களை உற்பத்தி செய்கின்றன.  யாங்ஜோவ் பொருட்கள் செதுக்குப்பாணியில் மட்டுமின்றி பதிக்கப்படும் கற்கள், மணிகளாலும் வேறுபடுகின்றன. அரிய கற்கள், தங்கம், தந்தம், முத்து என்று பலவும் பதிக்கப்பட்ட அலங்காரப் பொருட்கள் மிக விலை உயர்ந்தவையும் கூட. பெருஞ்செல்வந்தர்கள் பயன்படுத்தும் அறைத் தடுப்புகள், பேழைகள், அலமாரிகள், நகைப்பெட்டிகள், இருக்கைகள், நாற்காலிகள், மேசைகள், சுருட்டு சாம்பல் தட்டுகள் என்று பல அறைகலன்கள் (furniture)  உருவாக்குகிறார்கள்.
பாரம்பரிய பேய்ஜிங் அரக்கு சாதனங்களில் நாற்காலிகள், இருக்கைகள், அறைத் தடுப்புகள், தேநீர் மேசைகள், ஜாடிகள் ஆகிய அறைகலன்கள் (furniture) முக்கியமானவை.  பேய்ஜிங் பாணியில் அடிப்படையாக வெண்கல அல்லது மரம் உபயோகிக்கப்பட்டு உருவான பொருள் மீது பல முறை அரக்கு பூசப்படுகிறது. சில சமயம் நூறு முறை கூடப் பூசுவார்கள். பாண்டங்கள் இயற்கையாக தானே நன்றாகக் காயும் வரை கலைஞர்கள் காத்திருப்பர். அப்போது தான் எதிர்காலத்தில் சிறு விரிசல் விழாமல் அப்படியே இருக்கும். 5-18 மில்லிமீட்டர் தடிமனுக்கு உலர்ந்து இறுகிய பூச்சின் மீது செதுக்கு கலைஞர்கள் இயற்கைக் காட்சிகள், பூக்கள், பறவைகள், புராண பாத்திரங்கள், மனித உருவங்கள் என்று பலவற்றைப் பொருத்தமாக வசீகரிக்கும் நுட்பத்துடன் செதுக்குகிறார்கள். ஒரு கலயத்தை இவ்வாறு உருவாக்க 6-8 மாதங்கள் வரைகூட எடுக்கும். இவற்றை உருவாக்குவதில் அதிக செலவும் உழைப்பு தேவை இருப்பதால் இவற்றின் விலைகள் மிக அதிகம். விலை கூடி வந்ததில் இவற்றுக்குச் சந்தையில் நிலவிய தேவை மிகவும் குறைந்து படிப்படியாக மிகத் தேய்ந்தும் போனது. 1980கள் முதல் பேய்ஜிங் அரக்கு சாதனங்களின் உற்பத்தித் துறை சரிய ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். இளையோரில் இக்கலையைக் கற்க ஆர்வம் காட்டுவோரும் அதிகமில்லை. கலையை அறிந்த முதியோர் எண்ணிக்கை குறைந்து இந்தப் பொருட்களின் கலை மற்றும் வணிகம் மிகவும் பாதிக்கப் பட்டு வருகிறது. இன்றைய தேதியில் சுமார் 20 தேர்ந்த கலைஞர்களே மீதமிருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தமளிக்கக் கூடிய விஷயம்.
கலைநயத்துடன் செதுக்கப்பட்ட அரக்குப் பொருட்கள் உருவாக்கும் ஜி கூ ஜாய்ஒ என்ற பயிற்சி நிலையம் 1904லில் ஸியாவ் லேன் மற்றும் லி மாவ்லோங் ஆகியோரால் நிறுவப்பட்டது. அதனாலேயே, இவ்விருவரும் இக்கலையை அழியாமல் காப்பாற்றியவர்களாக அறியப்பெறுபவர்கள். சீனக் குடியரசு உருவான காலட்டத்திற்குப் பிறகு அரசாங்கமே பேய்ஜிங்கில் ஜி கூ ஜாய் வழித் தோன்றல்களைக் கொண்டு ஒரு தொழிற்சாலையை நிறுவியது.  அது தான் இன்றைய ஒரே தொழிற்சாலை. இந்தப் பழமை வாய்ந்த கலை அழிவின் விளிம்பில் இருக்கிறது.
சீனமெங்குமிருந்து சேகரிக்கப்பட்ட பல அரிய ஓவியங்களையெல்லாம் திரட்டி 19 ஏப்ரல் 2008ல் ஜியாங்ஸு மாகாணத்தின் யாங்ஜோவ்வில் அரக்கு ஓவியக் கண்காட்சி நடை பெற்றது. கலாரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருந்தது இந்தக் கண்காட்சியில் ஓவியங்கள் மட்டுமின்றி பல்லாயிரமாண்டுகள் பழமை வாய்ந்த அரக்கிலான பண்டபாத்திரங்களும் மற்ற வெண்கல பீங்கான் பாத்திரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கிண்ணங்கள், பானைகள், பெட்டிகள் போன்ற அன்றாடம் பயன்படும் பொருட்களைச் செய்ய மட்டுமின்றி அழகிய வண்ணங்களும் நிகரற்ற மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கலாரசனையுடனான அலங்காரப்பொருட்களையும் அரக்கைக் கொண்டு செய்திருக்கிறார்கள். 
கபூச்சோவ் தான் அரக்குப் பொருட்களில் பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ள பாணி. இந்தப் பாணியில் செய்யும் போது மரமோ வெண்கலமோ அடிப்படை உருவமாக அமைந்து எடையைக் கூட்டுவதில்லை. சீனாவின் மூன்று கைவினைப் பொக்கிஷங்களுள் ஒன்றான (மற்ற இரண்டும் ஜிங்தேஜென் பீங்கான் மற்றும் பேய்ஜிங்கின் நுண்ணிய எனாமல் செய்யப்படும் உலோகக் கைவினை) இந்தப் பாணியில் முதலில் மரமோ உலோகமோ எடுத்துக் கொண்டு வேண்டிய உருவாத்தைச் செய்து கொள்கிறார்கள். அதன் மேலே மெல்லிய பட்டுத் துணியால் இறுக்கி சீராகப் படியும்படி ஒட்டி வைத்துக் கொள்கிறார்கள். அதன் மீது அரக்கைப் பூசுகிறார்கள். இறுக இறுக மீண்டும் மீண்டும் எண்ணற்ற முறை அரக்கு பூசுகிறார்கள்.  பூசப்படும் அரக்கு இறுகியதும், செதுக்கு அலங்காரங்கள் செய்வார்கள். பிறகு, உள்ளிருக்கும் மர அல்லது உலோகத்தை அகற்றி விடுகிறார்கள். மிக மெல்லிய எடை கொண்ட இது தான் மிக உறுதியுடன் மிகக் குறைந்த எடையுடன் அன்றாடம் புழங்கப்படும் பழுக்காப் பொருள். ஷான்ஸி மாகாணத்தின் பிங்யாவ் என்ற பழம்பெருமை வாய்ந்த ஊரில் இந்தப் பொருட்களின் வரலாற்று வேர் இருக்கிறது. மிகத் தேர்ந்த கலை நுட்பத்துடன் மிளிரும் அந்தப் பொருட்கள் கலைஞர்களையே விழிவிரித்து வியக்க வைக்கின்றன.
ஷான்ஸி மாகாணத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான மரத் தடுப்பு அரக்கினால் செய்யப்பட்டது. ஹான் முடியாட்சியைச் சேர்ந்த இதில் தீட்டப்பட்டிருந்த ஓவியம் அக்காலத்து சேர்ந்த தீரப்பெண்களின் குறிப்புகளின் அடிப்படையின் அமைந்துள்ளது. ஹுன்னான் மாகாணத்தின் ச்சாங்ஷா என்ற ஊரில் மாவங்தியூ ஹான் கல்லறையிலும் அரக்கு பாண்டங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்தலம் இரட்டை மலைகளைக் கொண்டிருக்கின்றது. அங்கே ஹான் (கி.மு 206 – கி.பி 24) முடியாட்சியைச் சேர்ந்த மூவரது கல்லறைகள் உள்ளன. கி.மு 189ல்  இறந்த  ஑தாய்ஒ என்றறியப்பெற்ற ஊரைச் சேர்ந்த மார்க்விஸ், கி.மு 165ல் இறந்த அவரது மனைவி ஸின்ஜூயி, கி.மு 168ல் இறந்த அவர்களுடைய மகன் ஆகியோரது கல்லறைகள் 1972 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. 
ஸின்ஜூயியின் கல்லறைக்கு மாவங்தியூ கல்லறை எண்.1 என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் பதப்படுத்திய மம்மியாக இருக்கக் கண்டனர். சிறப்பாகப் பதப்படுத்தப்பட்டிருந்ததால் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ள முடிந்தது. அதன் மூலம் அவர் மாரடைப்பினால் இறந்து போயிருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.
கல்லறைக்குள் கிடைத்த அவரது சவப்பெட்டியின் அரக்குச் சித்திரம் தான் காணக்காண கருத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. ஒன்றுக்குள் ஒன்றாக நான்கு அலங்காரப்பெட்டிக்குள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. முதல் பெட்டி எந்த அலங்காரமுமில்லாமல் வெறுமே அரக்கினால் பூசப்பட்டிருந்தது. அடுத்தது, சிவப்பு அரக்கு பூசப்பட்டு தங்க நிற மேகச் சித்திர வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  மேகங்களுக்கிடையில் 111 வகையான பூதகணங்களும் தெய்வங்களும் தீட்டப்பட்டிருந்தன. இவற்றைப் பார்க்கும் சீனர்களுக்கே ஆச்சரியம் மிகும். மூன்றாவது பெட்டி தான் ஆக அதிக அழகிய வேலைப்பாடுகளுடன் சிவப்பு அரக்கு பூசப்பட்டு சுப்ச்சகுனமாகக் கருதப்படும் யாளி, புலி, மூன்று மான்கள், அக்னிப் பறவை மற்றும் ஒரு தெய்வம் ஆகியவை தீட்டப்பட்டிருந்தது. ஆகக் கடைசி பெட்டி வெறுமன கருப்பு அரக்கினால் பூசப்பட்டு சரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட பட்டுத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. 
இது தவிர ஆயிரக்கணக்கான ஏடுகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தன. 700 வெவ்வேறு விதமான அரக்கு பாண்டங்கள் கிடைத்துள்ளன. மிகச் சீரிய முறையில் பாதுகாப்பாக இருந்தவற்றில் பெரும்பாலானவை பண்டபாத்திரங்கள், நாற்காலிகள் போன்ற அன்றாடம் புழங்கும் அறைகலன்கள் (furniture). ஒருசேரக் கிடைத்த சின்னஞ்சிறிய மேசையும் அதன் மேல் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களும் குறிப்பிடக்கூடியவை. அதுதவிர, ஐந்து தாம்பாளங்களில் மிக அழகிய கருமை மற்றும் சிவப்பு அரக்கால் சித்திரங்கள் தீட்டப்பட்டிருந்தன.  அரக்கினால் அலங்காரம் செய்யப்பட்ட தட்டுகளுக்குள்ளே ‘அன்புகூர்ந்து உணவருந்துங்கள்’ என்ற பொருளிலும் இரண்டு மதுக் கிண்ணங்களில் ‘அன்புகூர்ந்து மதுவருந்துங்கள்’ என்ற பொருளிலும் சீனச்சித்திர எழுத்துக்களில் ‘ஜுன் ஸின் ஷி’ என்றெழுதப்பட்டிருந்தன.
‘ஹான்’ முடியாட்சிக்குப் பிறகு பீங்கான் பாண்டங்கள் அதிகமாகப் புழங்கப்படவே அரக்கு வெறும் ஓவிய மற்றும் கலைச் சாதனமானது. அப்போதெல்லாம் அரசவை மற்றும் மேட்டுக்குடியினர்களிடம் அரக்குப் பொருட்கள் அந்தஸ்து மற்றும் செல்வத்தின் சின்னமாகக் கருதப் பட்டன.  தன் விருப்பத்தையும் கலைதாகத்தையும் தீர்த்துக் கொள்ள எக்கச்சக்கமான உழைப்பும் பொருளும் அரக்குக் கலையில் செலவிடப்பட்டன. தங்கத்திலும் வெள்ளியிலும் ஏற்பட்ட நுட்பமும் ஆழமும் கொண்ட அலங்கார உத்திகளிலும் வளர்ச்சி அதிகரித்தது. 
‘ஜின்’ காலத்திலும் (கிபி 265-420) வடக்கு-தெற்கு முடியாட்சிகளிலும் (கிபி 420-589) சீனாவில் அறிமுகமாகி மளமளவென்று விரிந்து பரவிய பௌத்தம் அரக்குக் கலைக்கு உதவியது. முக்கியமாக, பௌத்த சூத்திரங்களைப் பொறிப்பதற்கு அரக்கு பயன்பட்டிருக்கிறது.
‘ஹூபேய்’ மாகாணத்தின் ‘ஸ்யூஜோவ்’ நகரில் 1978ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட அரிய கண்டுபிடிப்பு பல அரிய அரக்கு சாமான்களை வெளியுலகத்திற்குக் காட்டியது. கி.மு 475-221 காலத்தைச் சேர்ந்த அவரது கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட உயரிய கலை நுட்பத்துடன் அமைந்த பொருட்களில் அரக்கின் தரத்தையும் நிறத்தையும் அலங்கார உத்திகளையும் பாண்டங்களின் உருவத்தையும் ஆராய்ந்தனர். அன்றைய ஜெங் நாட்டின் அரசர் பெயர் ஜென்கௌயீ. அகழ்வின் போது முதலில் அகப்பட்டது மாண்டரின் வாத்து உருவில் ஓர் அலங்கார அரக்குப் பெட்டி. 16.5 செமீ உயரம் கொண்டிருந்த இந்தப் பெட்டி முழுக்க கருப்பு அரக்கினால் பூசப்பட்டு அதன் மீது மிக லேசாக மஞ்சள் சித்திரங்கள் தீட்டப் பட்டிருந்தது. வாத்தின் வயிற்றுப் பகுதியில் பறவை முகங்கொண்ட ஓர் இசைஞர் சிறுமணிகளை இசைப்பதைப் போலவும் மத்தளம் கொட்டியவாறே இரு பூதங்கள் நர்த்தமாடுவதும் சித்தரித்திருந்தது. அன்றாடப் பயன்பாட்டுப்பொருட்களும் அலங்காரப் பொருட்களும் சேர்த்து கண்டெடுக்கப்பட்டவை மொத்தம் 220 அரக்கு சாமான்கள். அத்தனையும் அன்றைய மேட்டுகுடியினரின் வாழ்க்கைத் தரத்தைப் பிரதிபலிப்பவை.
அரசன் ‘ஜென்கௌயீயின்’ கல்லறையில் கண்ணையும் கருத்தையும் கவரும் முக்கியமான விஷயம் சடங்குகள் செய்யும் பீடம். ஷாங் முடியாட்சியின் (கி.மு 1600-1000) போதும் ஜோவ் முடியாட்சியின் (கி.மு 1000-256) போதும் வெண்கலத்தில் அமைந்திருந்த இந்தப் பெட்டிகள் இக்காலகட்டத்தில் மரத்தால் செய்யப்பட்டு அலங்காரங்களும் பூச்சும் முழுக்க அரக்கினால் செய்யப்பட்டிருந்தன என்று கண்டறிந்துள்ளனர். பல்வேறு மாதிரியான யாளிகள் பீடப்பெட்டியின் கைபிடியிலும் காதுகளிலும் செதுக்கப் பட்டிருந்தன. அரசகுடும்பத்தினரின் உயர் வாழ்க்கைத் தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்றாற்போல அமைந்து நுட்ப வேலைப்பாடுகள் மிகவும் வசீகரிப்ப்பவை.
‘ஜூ ரன் (கிபி 182-248)’ என்பவர் வூ நாட்டின் (கிபி 222-280) ஓர் இராணுவத்தளபதி. இராணுவத்தில் பல போர்த் தொடுப்புக்களின் போது அவர் ஆற்றிய பணிக்காக மிகவும் பாராட்டப் பெற்றவர். 140 புதைபொருட்கள் இவரது கல்லறையினின்று அகழ்ந்தெடுத்திருக்கிறார்கள். அவற்றில் 80 பொருட்கள் அரக்கில் செய்யப்பட்டவை. சில தட்டுகளில் அவருக்கு முந்தைய காலம் வரையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள் அரக்கினால் ஓவியமாகத் தீட்டப்படிருந்தன.  வேறு சில தட்டுகள் அவருக்கு முன்பிருந்த வீரர்களையும் தீரர்களையும் கொண்டாடும் வகையிலான ஓவியங்களைக் கொண்டிருந்தன. அதில் ஓர் ஓவியம் பாய்லிஸி என்பவரையும் அவரது துணைவியாரையும் பற்றியது. இவர் ச்சின் முடியாட்சியின் கொண்டாடப் பெற்ற அமைச்சர். கணவனும் மனைவியும் இளவயதிலேயே பிரிந்தவர்கள்.  இருப்பினும், முதுமையில் ஒன்று சேர்ந்தவர்கள். அரக்கினால் தீட்டப்பட்ட இவ்வோவியத்தில் பாய்லிஸி மிகுந்த ஆனந்தத்தில் தன் கையை மார்பின் மீது வைத்திருக்க, அருகில் இருக்கும் மனைவி உருகிக் கண்ணீர் வடிக்கிறார்.
டாங் முடியாட்சிகாலத்தில் (கிபி 618-907) தான் ஸிச்சுவான் மற்றும் யுன்னன் மாகாணங்களில் இந்தக் கலை மறுபிறப்பெடுத்திருக்கிறது. மிக நேர்த்தியான கலை நுட்பங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு பிரபலப்படுத்தப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் தங்கம் வெள்ளித் துண்டுகள் பல்வேறு அழகிய வடிவங்களில் வெட்டப்பட்டு அரக்குப் பூச்சின் மீது பதிக்கப்பட்டு பாலிஷ் செய்யப்பட்டது.
அதன்பிறகு ஸோங் காலங்களில் (960-1279) வேக வளர்ச்சியடைந்து யுவான் காலத்தில் (1271-1368) தான் பேய்ஜிங்கையே அடைந்திருக்கிறது. அப்போது தான் பேய்ஜிங் நாட்டில் தலைநகராகியிருந்த சமயம். உடனே, ஏராளாமான அரக்குக் கலைஞர்கள் பேய்ஜிங் நோக்கிப் படையெடுத்தனர். செழித்து உயர்ந்த பொருளாதார வளர்ச்சியும் உறுதியான நிலைத்தன்மையும் சமூகத்தில் எல்லா விஷயங்களையும் மேம்படுத்தியதைப் போல அரக்குக் கலையையும் முன்னெடுத்தது. ஏராளமாக உருவான ஒற்றை நிறக் கலைப்படைப்புகள் மிக நுண்ணிய கலை வெளிப்பாடுகளுடனிருந்தன.
அரண்மனை வளாகத்திலும் குடிமக்களிடையேயும் அரக்கு பொருட்களின் தேவை கூடிய மிங் காலத்தின் (1368-1644) தொடக்கத்தில் அரசரே ஓர் அரக்கு தொழிற்காலையை நிறுவினார்.  திறனாளர்கள் நாடெங்கிலுமிருந்து வரவழைக்கப்பட்டனர். வந்தவர்கள் கைத் திறனில் போட்டா போட்டிகளை வெளிப்படுத்தினர். இயல்பாகவே, கலை வளர்ந்து செழித்தது. மிகப் பிரபலமான கலைஞர் ஹுவாங் ச்செங் தனது மற்றும் தனது முன்னோடிகளின் அனுபவங்களைச் சேகரித்துத் தொகுத்து அரக்குக் கலையைப் பற்றிய முதல் நூலை எழுதினார். இந்நூல் பின் வந்த பல கலைஞர்களின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாங் மற்றும் ஸோங் முடியாட்சி காலங்களில் அரக்கின் பயன்பாடும் தொழில் நுட்பமும் மிகவும் முன்னேறிவிட்டிருந்தன. கருப்பு அல்லது சிவப்பு நிறப் பின்னணியில் பயன்படுத்தப்படும் கண்ணைப்பறிக்கும் பளீர் வண்ணங்கள் அதிகரித்தன. ஷான்ஸி மாகாணத்தின் கபூகபெங் வட்டாரத்தின் கபாமென் என்ற ஊருக்கு அருகில் இருக்கும் பௌத்த ஆலயத்தில் எடுக்கப்பட்ட டாங் காலப் புதை பொருட்கள் மிக நுணுக்கமான கலையழகுடன் இருந்தன. ஸோங் முடியாட்சி (கிபி 960-1279) காலத்திலோ அரக்கு சாதனங்களில் கருப்பு நிறமே ஆதிக்கம் செலுத்தியது. அதன் பின்னர், யுவான் முடியாட்சி காலத்தில் (கிபி 1271-1368) தான் மீண்டும் சிவப்பு நிறத்தின் பயன்பாடு அதிகமானது.
முன்பெப்போதும் விட அதிகமாக அரக்கைப் பயன்படுத்திய மிங் மற்றும் ச்சிங் அரக்கு பாண்டங்களில் அரச முத்திரைகள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த இரு ஆட்சிகாலங்களில் அரக்கு பொருட்களின் தொழில் நுட்பம் வளர்ந்து அதற்கான துறையே உருவாகி முன்னெடுக்கப்பட்டது. அரக்கு சாதனங்கள் உருவாக்குவதில் நுண்ணிய கலைவேலைப்பாடும் மிகப் பரவலாக வளர்ந்தது. ச்சிங் காலத்திலும் அரசகுலத் தொழிற்சாலை இருந்திருக்கிறது. அரசவையிலும் அரக்குக் கலை ஆச்சரியத்தக்க அழுத்தமான அங்கீகாரத்தைப் பெற்றது. ச்சிங் முடியாட்சியின் அரசர் ச்சியாங்லோங் அரக்கு பொருட்களின் காதலர். அரசரே ஒரு கலைஞர் என்றதால் அவரது ஆட்சியில் தான் இக்கலை உச்சத்தை எட்டியிருக்கிறது. அவர் தனது சவப்பெட்டியைத் தானே வடிவமைத்து அரக்கு பூசச் செய்து மிக அழகாகச் செதுக்கித் தானே அலங்கரித்தார். ச்சிங் முடியாட்சி காலம் முடியும் போது இக்கலை சரியத் தொடங்கியது. டோ வாஜெர் அரசி சிஸியின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கே கூட தலைநகரில் போதிய கலைஞர்கள் இருக்கவில்லை. மீண்டும் 1970களிலிருந்து தான் பரந்து புறப்பட்ட சீனாவுக்கு வந்த வெளிநாட்டினரின் ஆழ்ந்த ஈடுபாட்டினாலும் விருப்பத்தினாலும், பாரம்பரிய அரக்குக் கலயங்கள் மறுபடியும் உருவாக்கப்பட்டன.
கலாசாரப்புரட்சியின் போது மௌ சோ துங்கின் ஆணைப் படி ஏராளமான அரக்கினாலான செதுக்கு கலைப்பொருட்கள் நவீன சிந்தனைகள் என்ற பெயரில் கட்சியின் கோட்பாடுகளைச் சொல்லும் விதத்தில் வடிவமைப்பட்டன.  மௌ சோ துங்கின் மனைவி, தான் இறக்கும் முன்னரே ஒரு ரயில்வே அதிகாரியையும் அவரது மகளையும் பற்றிய கதையைச் சொல்லும் ‘சிவப்பு லாந்தர்’ என்றறியப்படும் அரக்கு வேலைப்பாடுடனான 15 கல்வெட்டுகள் உருவாக்கும் பணியைத் துவங்கி வைத்தார். இருப்பினும், அதே மனைவி மௌ சோதுங் இறந்ததும் அவரது கொலைக் குற்றத்துக்காகக் கூண்டிலும் ஏற்றப்பட்டார்.  கலாசாரப் புரட்சிக்குப் பிறகு பாரம்பரியத்துடன் புரட்சியை இணைப்பதாகப் பிராசாரம் செய்யப்பட்ட இவை கிடங்கில் கடாசப் பட்டன. இன்றைய காலகட்டத்தில் தான் புதுப்பிக்கப் பட்டன. அந்த அரக்கு செதுக்கோவியத்தில் இருந்த மௌ சோதுங்கின் முகம் சுரண்டி அகற்றப்பட்டது. அதை உருவாக்கிய கலைஞரிடம் மீண்டும் அவரது முகத்தைச் செதுக்கியுருவாக்க வேண்டிய போது மறுத்து விட்டார்.
பின்னர், அந்தப் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்படாமலே இருந்தன. சமீபத்தில் தான் மீட்கப்பட்டு லண்டனில் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு கலைப்பாண்டம் 200 அரக்குப் பூச்சுகளையும் பச்சைப்பவளம் மற்றும் அரிய மணிகள் கொண்டு அலங்கரிக்கப் பட்டுள்ளது. சீன அரும்பொருட்கள் சேகரித்துப் பாதுகாக்கும் பீட்டர் வெயின் என்பவர், ஓஇதை உருவாக்க இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அனைத்து பொருட்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். பூச்சுக்கு மேல் பூச்சாக இருந்தாலும் செதுக்கு வேலைகளும் அழகுறப் பதித்திருக்கும் நவமணிகளும் தான் வசீகரம் அதிகம் சேர்க்கின்றன. தொழில்நுட்பமாகவே இருப்பினும், இது கலைநயம் மிகக் கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல், 2000 வருட சீனக் கலையின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கின்றதுஔ, என்கிறார். 
ஏராளமான செதுக்கோவியக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. ஒரு கல்வெட்டில் கொரியப் போரின் போது மலைகளேறிச் சென்று ஆயுதங்களைக் கொடுத்த பெண்கள் சித்தரிக்கப் பட்டுள்ளனர்.  ஓராயிரம் கிலோமீட்டர் தூர ரயில் தண்டவாளத்தைக் கட்டும் பணியில் 10,000 தொழிலாளிகள் உயிரிழந்தனர். அவர்களின் உழைப்பும் திறனும் பற்றி ஒரு கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோருமே 60களிலும் 70களிலும் கிராமப்புறங்களுக்கு வலுக்கட்டாயமாகத் துரத்தப்பட்டவர்களில் அடங்குவர். இன்றைக்கும் சில கலைப்பொருட்கள் சீனர்களால் அபசகுனமாகக் கருதப்படுகின்றன. ஒபாலம்ஒ செதுக்கப்பட்ட கல் பாளம் அவ்வகையைச் சேர்ந்தது. இதை உருவாக்கி தயாராகக் கொண்டு வருவதற்கு முன்தினம் மௌ சோதுங்கின் இராணுவ அமைச்சர் லின் பியாவ் விமான விபத்தில் இறந்து போனார். சீனர்களில் பெரும்பகுதியினருக்கு கலாசாரப் புரட்சி நாட்டைப் பல பத்தாண்டுகளுக்குப் பின்தங்க வைத்து விட்டது என்ற ஆற்றாமை. இந்த அரக்கு செதுக்கோவியங்கள் மிகவும் அரிய அழகுடன் விளங்குவது உண்மை என்றபோதிலும் சீனர்கள் முற்றிலும் மறக்க விழையும் வரலாறைக் குறிப்பதால், வீரதீரச் செயல்களாகவும் தியாகங்களாகவும் சித்தரிக்கப்பட்ட போதிலும் கூட அவர்கள் அவற்றை ஏற்க விரும்புவதில்லை.  

எதையாவது சொல்லட்டுமா……..49

நான் இங்கே வந்தபிறகு 2 கவிதைகள் எழுத முடிந்தது.  கவிதை என்று சொல்லும்போது ஒரு விஷயம் ஞாபகவருகிறது.  இப்படி ஒரு இடத்திற்கு வந்தால், அந்த இடத்தை வைத்து கவிதை எழுத முடியும்? எழுத முடியும் என்றால் என்னவென்று எழுதுவது? 
க்ளியர் வாட்டர் பீச் என்ற இடத்திற்குச் சென்றேன்.  மதியம் நேரத்தில் படபடக்கும் வெயிலில், எல்லோரும் சத்தம்போட்டபடி நீச்சல் அடித்துக்கொண்டிருந்தார்கள்.  நானும் கடல்நீரில் நின்று கொண்டிருந்தேன்.  என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நண்பர், இந்தக் காட்சியை வைத்துக்கொண்டு கவிதை எழுத முடியுமா என்று கேட்டார். முடியும் என்று சொல்ல முடியாது.  இப்போது இல்லாவிட்டால் பின்னால் எழுதலாம் என்றேன்.  பாரதியார் காலத்தில் பாரதியாருக்கு கவிதை எழுதுவது எளிது.  தேசம் விடுதலை ஆவதைப் பற்றி எழுதலாம்.  பக்தி பாடல்கள் எழுதலாம்.  மேலும் பாரதியாரே அவருடைய கவிதைகள் சினிமா பாடல்களாக பாட ஆரம்பித்தபிறகுதான் புகழ் அடைந்திருப்பார்.
 இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பலருக்கு எந்தப் புகழும் கிடைக்குமா என்பது சந்தேகம்.  கவிதைத் தொகுதி அச்சிட்டால் அவர்களே வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.  கவிதை எழுதுவதும் ஒரு சவால். நவீன விருட்சம் blogspot ல் எழுதுபவர்கள் குறித்து எனக்கு விமர்சனம் உண்டு. அந்த விமர்சனத்தை வெளிப்படுத்தினால், அவர்கள் எழுதுவதை நிறுத்தி விடலாம். 
2008லிருந்து தொடர்ந்து வரும் blogspotலிருந்து வெளிவந்துள்ள கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகமாகப் போட்டாவ் பின்னால் எழுதுபவர்களுக்கு உபயோகமான ஒன்றாக அத் தொகுப்பு அமையும்.
நான் நடந்துவிட்டு மாடிப்படிக்கட்டுகளைக் கடக்கும்போது ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்தேன். சிறிது நேரம் அது சுற்றுவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.  அதன் நிறம் அதன் லாவகம் என்னைப் பெரிதும் ஈர்த்தது.  பின் சுற்றி சுற்றி அது எங்கோ போய்விட்டது.  நான் எழுதிய இரண்டாவது கவிதையில் ஈக்களே ஈக்களே எங்கே போனீர்கள்? என்று எழுத மறந்து விட்டேன் என்று நினைத்தேன்.  உண்மையில் ஈக்களே இங்கு காணோம் என்பதைச் சொல்லத்தான் அப்படி எழுதலாம் என்று நினைத்தேன்.  ஆனால் நான் அமர்ந்த சோபாவில் ஒரு ஈ எப்படியோ வந்து விட்டது.  என்னை சுற்றி சுற்றி மொய்த்துத் தள்ளிவிட்டது.  நான் எழுதாமல் விட்டுப்போன வரிகளில் அது தொற்றிக்கொண்டு விட்டது. 
இங்கு ஒரு தபால் அலுவலககத்தைப் பார்த்தேன்.  அது மாதிரி ஒரு தபால் அலுவலகம் சென்னையில் பார்ப்பது அரிது.  தபால் அலுவலகம் முழுவதும் குளிர்பெட்டி பொருத்தப்பட்டிருந்தது.  ஒரு தபாலை அனுப்ப வேண்டிய கவர் முதல் எல்லாம் இருந்தது.  ஒட்டுவதற்கு கோந்தைத் தடவ வேண்டாம். பணியாளர் சிரித்த முகத்துடன் வரவேற்றார்கள்.  சென்னையில் எரிந்து எரிந்து விழுவார்கள். கூட்டம் மொய்த்துத் தள்ளும். 
குளிக்கும் அறையில் ஒரு பெரிய டப்பு இருக்கும்.  அந்த டப்பில்தான் குளிக்க வேண்டும்.  தண்ணீர் அப்படியே போய்விடும்.  ஒரு தண்ணீர் துளிகூட டப்பைத் தாண்டி வெளியே விழாது.  மயிலாடுதுறையில் காலையில் குளிக்கும்போது மின்சாரம் இருக்காது.  பின் குளியல் அறையில் நுழையும்போது பல்லி எங்காவது சுவரில் இருக்கிறதா என்று பார்த்து துரத்தி விட வேண்டும்.  எனக்கு இந்தப் பல்லியைக் கண்டால், அருவெறுப்பு.  ப்ளோரிடாவில் குளிப்பது நல்ல அனுபவம்.
@@@@@@@@@
ஜே கிருஷ்ணமூர்த்தி அவரைச் சுற்றி உள்ள பள்ளி சிறார்கள் முன்னால் மிகப் பொறுமையாகப் பேசுகிறார்.  ஊழல் எப்படியெல்லாம் உலகம் முழுவதும் இருக்கிறது என்பதைப் பற்றி பேசுகிறார். இந்தியாவில் அதன் ஆதிக்கம் அதிகம் என்று பேசுகிறார்.  அதை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார். டேபிள் அடியில் ஒரு காரியத்தைச் சாதிக்க பணம் கொடுக்கக்கூடாது என்று சொல்கிறார்.  ஊழலை எதிர்த்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்களை நிராகரிக்க வேண்டுமென்று பேசுகிறார்.  அதனால் நாம் பணத்தை இழந்தாலும் பரவாயில்லை என்கிறார்.  பள்ளி சிறார்கள் எந்த அளவிற்குப் புரிந்து கொண்டார்கள் என்பது தெரியவில்லை. 
இன்னொரு பக்கம் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் ஜே கேயிலிருந்து எல்லோரையும் திட்டுகிறார்.  பார்க்க வருபவர்களிடம், ‘என்னைப் பார்க்க வந்துவிட்டு, உங்கள் comfortக்கு யாரையாவது பார்ப்பீர்கள்.  உங்களால் யாரையாவது பார்க்காமல் இருக்க முடியாது,’ என்கிறார்.  அவர் இசையைப் பற்றி சொன்னது யோசிக்க வைத்தது.  இசையைக் கேட்பதை விட இந்த நாய் குலைப்பது இயல்பாய் இருக்கும் என்கிறார். நான் பேசுவதும், நாய் குலைப்பதும் ஒன்றாக இருக்கும்.  ஏன் என்னைத் தேடி வருகிறீர்கள் என்கிறார். நேற்று நன்றாகவே பொழுது போய்க் கொண்டிருந்தது.
குறிப்பு :
எதையாவது சொல்லட்டுமா 48ல் என் பையன் தயாரித்த Drummers என்ற டாக்குமெண்டிரி படத்தை இணைத்துள்ளேன் (You tube மூலமாக).  பார்க்கவும்.

தாகம்

                                                                                                    

                                                                                                        

காக்கை பறந்து வந்து
என் வீட்டுத்திண்டில் அமர்ந்தது.
அருகில் இருந்த குடுவையில்
அடியில் மட்டுமே கொஞ்சம் நீர்.
எப்படித்தான் எடுக்கும்
என்று பார்த்துக்கொண்டிருந்தேன்
அது குடுவையின் அருகே
வந்தமர்ந்து வெறுமனே
பார்த்து விட்டு
பின் நடை பழகியது,
எதையும் எடுத்து
குடுவைக்குள் போடவுமில்லை
நீரும் மேலே வரவில்லை
பறக்கும் காக்கைக்கு
ஒரு சிறிய குடுவையும்
அதன் நீரும் பெரிதா ?
காக்கை பறந்து சென்றுவிட்டது
இப்போது எனக்குத்

தாகம் எடுக்கிறது. 

நிலாவைத் தின்ற எறும்பு

நீரில் மிதந்த எறும்பு
அலையினில் அசைந்து
கொண்டிருந்த நிலாவை
கடித்து கடித்து இழுத்தது.
எறும்பின் கூர்வாய்க்குள்

நிலாவின் விழும்பு

இழுபடுவது போல் தோன்ற
இன்னும் உற்சாகமாய்

இழுக்க முனைகையில்

நிலாவைத் தின்ற
எறும்பின் சுவையறிந்த
ஒரு பறவை
எறும்பைக்
கவ்விப் பறந்தது.

இரண்டாவது இரவு

தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள்
களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன்.

மூத்ததைப்போல் மூக்கில்லை
முன்நெற்றி ரோமமில்லை
அவள் அசல் நான் நகல்
அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில்
அவள் அணிந்து அரைப்பழசாய் போன ஆடைகள்
அவள் விளையாடி காது பிய்ந்த கரடி பொம்மை
அவள் புதுவாசம் நுகர்ந்து,ஓரம் சுருண்ட ‘ஏழுநிறப்பூ’
பல் பதிந்த அழிறப்பர்,கம்பீரமிழந்த பென்ஸில்
அவள் திருமணம் குதியுயர் காலணியாய் அதிர நடக்க
என் மணமோ ஏழைச்செருப்பாய் நொய்ய நடந்தது.
ஒவ்வொரு விரலிலும் இவ்விரண்டு பரிசு மோதிரமாய் அவள்
மருதாணி விரல்களில் பாதி தேய்ந்தோர் மோதிரம் வெட்க நான்

அதிகமாய் வலித்ததன்று.
அவள் பார்த்து நிராகரித்த ஆண்மகனுடன் என் முதலிரவு.
அது முதலிரவன்று, ‘இரண்டாவது இரவு’

எதையாவது சொல்லட்டுமா……..48

                                                                                                                                                                                                             
ப்ளோரிடாவில் இரவு 8 மணி என்பது பகல்மாதிரி தெரிகிறது.   அதேபோல் காலை எட்டுமணிக்குத்தான் சூரியன் தன் கிரணங்களை வீசுகிறான்.  வீட்டில் 24 மணிநேரமும் ஏ.சி என்பதால் ஒரே குளிர்.  நான் அடிக்கடி ஏ சியை அணைக்க வேண்டி உள்ளது.  இங்கு ஒரு பால், தயிர் வாங்கக்கூட காரில்தான் செல்லவேண்டும்.  பஸ், டிரெயின் என்பதே கிடையாது.  சைகிளை யாரும் பயன்படுத்தவில்லை. டூ வீலர் யாரும் ஓட்டுவதில்லை.  வெயில் சென்னையில் அடிப்பதுபோல் சுள்ளென்று அடிப்பதில்லை. பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியவில்லை.  Publix என்ற கடையில் ஒரு குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாம் கிடைத்து விடுகிறது.  ஒவ்வொரு சனி ஞாயிறுகளில்தான் வெளியே சுற்ற முடியும்.  மற்ற நாட்களில் மிகச் சிறிய இடங்களுக்குச் சுற்ற முடிகிறது.  சென்னையில் அண்ணா மறுமலர்ச்சி நூல் நிலையம் மாதிரி, இங்கு
Broward County Library என்ற நூல்நிலையத்தைப் பார்த்தேன்.  பிரமிப்பாக இருந்தது.  ஆனால் சென்னையில் அமெரிக்கன் நூல்நிலையம் மாதிரி புத்தகங்கள் இருந்தன. அமெரிக்கன் நூல்நிலையத்தில்பெரும்பாலான நூல்களை நாம் படிக்காமல் தள்ளி விடலாம். Library யில் கணிணிகள் அதிகமாக இருந்தன. 
தினமும் காலையில் 30 நிமிடங்கள் நடை பயிற்சி செய்வேன்.  எட்டு மணிக்குக் கிளம்பி. அந்த நேரத்தில் எந்த மனித உருவமும் தென்படாது.  இந்த இடம் முழுவதையும் திட்டமிட்டு திறமையாக வைத்திருப்பதாக தோன்றுகிறது.  இப்படி திட்டமிட்டு ஒரு இடத்தை சென்னையில் பார்க்க முடியாது.  தினமும் மாலை 6மணிக்குமேல்  மழை பெய்வதுபோல் இருந்தாலும் மழை பெய்வதில்லை.  நான் இங்கு வந்த முதல் சனி ஞாயிறில் sanibell என்ற இடத்திற்கு பையன் எங்களை அழைத்துக்கொண்டு சென்றான்.  அவனே 70 மைல் வேகத்தில் வேகமாக வண்டியை ஓட்டிக்கொண்டு அழைத்துக்கொண்டு போனனான்.  எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  இங்கு முக்கியமாக டால்பின் விளையாட்டை ரொம்பவும் ரசித்தோம்.  மனித முயற்சிக்குக் கட்டுப்பட்டு டால்பின் செய்யும் சேஷ்டைகள் ஆச்சரியத்தைத் தந்தன.  இந்த இடமெல்லாம் கூட்டம் அதிகம்.  விதவிதமான மனிதர்கள்.  பெண்கள் யாரும் அவர்கள் உடை அணிவதைப் பற்றி கவலைப்படவில்லை.  அவ்வளவு சுதந்திரமாக அவர்கள் தென்பட்டார்கள்.  பிறகு பெரிய படகில் டால்பின் இருக்குமிடத்தைப் பார்க்கச் சென்றோம்.  ஒன்றிண்டு தவிர அதிகமாக தட்டுப்படவில்லை.  நாங்கள் அவதிப்பட்டது சாப்பாட்டிற்குதான்.  வாய்க்கு ருசியாக ஒரு காப்பியைக் கூட குடிக்க முடியவில்லை. 
அங்கிருந்து நாங்கள்  sanibell கடற்கரைக்குச் சென்றோம்.  அங்கு மண் கறுப்பு நிறத்தில் பவுடர் மாதிரி இருந்தது.  எந்த நேரத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  சிலர் கடலில் பீர் குடித்தபடி குளித்தபடி இருந்தார்கள்.  
        

   @@@@@@@@

தெரியாமல் 3 புத்தகங்கள் மட்டும் எடுத்துக்கொண்டு வந்தேன்.  Carlos Castenada வின் The Active Side of Infinity என்ற புத்தகமும், யு ஜி கிருஷ்ணமூர்த்தியின் Stopped in our tracks என்ற புத்தகமும்.  யு ஜியைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது.  சந்திரசேகர் என்பவர் யு ஜியைப் பற்றி எழுதிய புத்தகம்.  பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.  நான் மேலும் netல் சென்று இன்னும் அதிகமாக யு ஜியைப் பற்றி தெரிந்து கொண்டேன்.  அவருடைய வீடியோ டேப்பெல்லாம் பார்த்தேன்.  அவர் சொன்னதையெல்லாம் எதாவது எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.