ஓர் உரையாடல்

ஓர் உரையாடல் 
அழகியசிங்கர்


பால்கனியிலிருந்து வேடிக்கைப் பார்ததுக் கொண்டிருந்தார் அழகியசிங்கர்.  தெருவில் தூரத்தில் ஜெகனும், மோகினியும் வந்து கொண்டிருந்தார்கள்.  அவர்களைப் பார்த்து கையை ஆட்டினார்.  அவர்களும்.
வீட்டிற்குள் வந்தவுடன் முதல் கேள்வி ஜெகனிடமிருந்து.   ஒரு முக்கியமான விஷயத்திற்காகத்தான் வந்திருக்கிறோம்.
அழகியசிங்கர் :   என்ன? 
மோஹினி :  100வது இதழ் நவீன விருட்சம் குறித்துப் பேசுவதற்குத்தான்.  
அழகியசிங்கர் :  கூடிய விரைவில் வந்துவிடும்.  அதற்கான முயற்சியை கடுமையாக செய்து கொண்டு வருகிறேன்.  இதுவரை 150 பக்கங்கள் வரை டம்மி தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
ஜெகன் :  அப்படியென்றால் 200 பக்கங்கள் வரை வந்து விடுமா?
மோஹினி :   இதுவரை நீங்கள் கொண்டு வராத அளவிற்கு பக்கங்கள் அதிகம் உள்ள விருட்சம் வெளிவருகிறதா?
அழகியசிங்கர் :  கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எனக்கே பயமாகத்தான் இருக்கிறது.  200 பக்கமா?  நான் எப்போதுமே மிகக் குறைவான பக்கங்களில் நம்பிக்கைக் கொண்டவன்.
(அழகியசிங்கர் அமர்ந்திருந்த அறையை அவருடைய மனைவி எட்டிப் பார்க்கிறார்.  அழகியசிங்கரைப் பார்த்து, üயாருடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்,ý என்று கேட்கிறார்.)
அழகியசிங்கர் :  ஏன் ஜெகன் மோஹினியுடன்தான்.
அழகியசிங்கர் மனைவி :    யாரும் உங்கள் முன் இருப்பதாக தெரியவில்லையே..
அழகியசிங்கர் :  இதோ இந்த நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பது உனக்குத் தெரியவில்லையா?
அழகியசிங்கர் மனைவி : யாரும் தெரியவில்லை.  நீங்கள் சொல்ற நண்பர்களை நான் பரர்த்ததே இல்லை.  
அழகியசிங்கர் :   உன் கண்ணிற்கு அவர்கள் தெரியவவே மாட்டார்கள்.  அவர்கள் என் மானஸீக நண்பர்கள்.  என் நலம் விரும்பிகள்..விருட்சத்தில்தான் தென்படுவார்கள்.
அழகியசிங்கர் மனைவி :     100வது இதழ் விருட்சமா?
அழகியசிங்கர் :   ஆமாம். விருட்சம்தான் என் மூச்சு..
(அழகியசிங்கர் மனைவி அந்த இடத்தைவிட்டு போகிறார்..)
ஜெகன் :  சார், என்ன திடீரென்று மூச்சுன்னு டயலக் அடிக்கிறீங்க..
அழகியசிங்கர் :  நம்ப பேசறதை நம்ப மாட்டேங்கறாங்க…
மோஹினி :   நீங்க என்னமோ நினைக்கிறீங்க…இந்த அளவிற்கு உங்களுக்கு அவங்க சுதந்திரம் கொடுத்திருக்காங்க.. அதனால்தான் விருட்சம் நூறாவது இதழ் வரை வந்திருக்கிறது.
ஜெகன் :  இந்தக் காலத்திலே நம்மள மாதிரி பத்திரிகை புத்தகம்னு சுத்தறவங்களை யாருமே பொறுத்துக்க மாட்டார்கள். 
அழகியசிங்கர் :  அவங்க உலகம் வேற.. ஏன் என் வீட்டில உள்ள எல்லோருமே என் மனைவிக்குத்தான் சப்போர்ட்.  
மோஹினி :   இப்ப தமிழ்ல புத்தகம் பத்திரிகை படிக்கிறவங்க ரொம்ப குறைச்சல்.
அழகியசிங்கர் :  அன்னிக்கு ரொம்ப வருஷம் கழித்து என் அலுவலக நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.  அவர் கேட்டார்:  என்ன விருட்சம் இன்னும் வரதா என்று.  ஆமாம்.  எனக்கே தெரியாம 99வது இதழ் வரை வந்து விட்டது.  இப்போது 100 வரப் போகிறதுன்னு சொன்னேன்…  üஅப்படியா…ý என்று ஆச்சரியப்பட்டார்.  அவரைப் பார்த்து இன்னொன்றும் சொன்னேன் : இப்ப துரத்திக்கிட்டே இருக்கேன்.  யாரு விருட்சம் படிப்பார்கள் என்று..
ஜெகன் :  உங்கள் நண்பர் உடனே ஓடிப் போயிருப்பாரே?
அழகியசிங்கர் :  அப்படித்தான் நடந்தது….ஓடியே போய் விட்டார்..
மோஹினி :   உங்கள் பத்திரிகை அமைப்பை மாத்தறீங்களா?  
ஜெகன் :  எப்போதும் கொண்டு வர மாதிரி கொண்டு வந்தால்தான் நன்றாக இருக்கும்.
மோஹினி :  முதல்ல மாத்தத் தெரியுமான்னு தெரியணும்..
அழகியசிங்கர் :  நான் அமைப்பை மாத்தலை.  ஆனா பக்கங்களை 200ஆ கூட்டியிருக்கேன்…அவ்வளவு பக்கங்கள் சரியா வருமான்னு தெரியலை.
மோஹினி :  உங்களால் பக்கத்தைக் குறைக்க முடியாதுன்னு தோணுது..
ஜெகன் :  நான் கூட தடம்னு ஆனந்தவிகடன் பத்திரிகையைப் பார்த்தேன்… புரட்டித்தான் பார்த்தேன்.  படிக்க முடியவில்லை. 
அழகியசிங்கர் : எதையும் படிக்க வேண்டும். 
ஜெகன் :     உண்மைதான்.  
அழகியசிங்கர் :   நான் வாங்கி வைத்திருக்கும் பல பத்திரிகைகளை உடனே படிப்பதில்லை.ஆனால் பத்திரிகை உள்ளே யார் யார் எழுதியிருப்பாங்கன்னு புரட்டிப் பார்ப்பேன்..
ஜெகன் :   எதற்கும் நேரம் ஒன்று வேண்டும்…
அழகியசிங்கர் :  நேரம் மட்டுமல்ல..மூடும் வேண்டும்.  அது இல்லை என்றால் படிக்க முடியாது.  நான் கல்லூரியில படிக்கும்போது சென்னையில் உள்ள எல்லா லைப்ரரியிலும் போய் புத்தகம் எடுப்பேன்.  தியோசாபிகல் சொûஸயிட்டியில் ஒரு லைப்ரரி உண்டு..அங்கும் போவேன்.  எடுத்த வந்த எல்லாப் புத்தகங்களையும் ஒரு இடத்தில்  குவித்து வைத்திருப்பேன். வீட்டில் உள்ளவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள்.  ‘படிக்கவே மாட்டான்..அப்படியே கொண்டு போய் கொடுப்பான்,’ என்பான் என் சகோதரன். தினமும் என் முன்னால் உள்ள புத்தகங்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். எந்தப் புத்தகத்தை எடுத்து முதலில் படிப்பது என்பதில் குழப்பமாக இருக்கும்.  ஒரு புத்தகம் எடுப்பேன்.  புரட்டிவிடடு வைத்துவிடுவேன். அப்புறம் அவசரம் அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு திருப்பிக் கொடுக்க ஓடுவேன். அப்படி கொடுக்கும்போது அமெரிக்கன் லைப்ரரி புத்தகங்களை பிரிட்டிஷ் லைப்ரரிக்குக் கொண்டு போய் விடுவேன்.  எனக்கே என்னை நினைச்சா சிரிப்பா இருக்கும்..
மோஹினி :  அப்படி கொண்டு வர புத்தகங்களில் எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியாதா….
அழகியசிங்கர் :    ஏன் முடியாது என்று தெரியாது?  சில சமயம் சில புத்தகங்களை எடுத்துப் படிப்பேன்…..ஆனால் முழுக்க முடிக்க முடியாது. பாரதியார் எழுதிய கட்டுரைகளை நான் படித்த கல்லூரியில் உள்ள லைப்ரரியிலிருந்து எடுத்துப் படித்திருக்கிறேன். பெ தூரன் தொகுத்தது.  முக்கால்வாசி நான் படிப்பது மின்சார வண்டியில்தான். 
ஜெகன் :    இப்போது எப்படி? 
அழகியசிங்கர் :   அப்போது மாதிரி இல்லை.  ஆனால் லைப்ரரி போய்ப் புத்தகம் எடுத்துப் படிப்பதில்லை… என்னிடம் உள்ள புத்தகங்களையே படிக்கிறேன்.  புதுமைப்பித்தன் புத்தகத்தை வைத்துக்கொண்டு எதாவது ஒரு கதையை எடுத்துப் படித்துவிட்டு வைத்துவிடுவேன்.  பின் மௌனி கதைகளில் எதாவது படிப்பேன்…எனக்கு எதிலும் அவசரமில்லை.  எப்ப வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் யாரிடமும் இரவல் மட்டும் கொடுக்கக் கூடாது.  புதுமைப் பித்தன் கதைகளில் ஒரு கதையைப்  படித்து முடித்தப்பின் அந்தக் கதையைப் பற்றிய குறிப்பு கதை கீழேயே எழுதி விடுவேன்.  இது ‘மிஷின் யுகம்’ என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையின் கீழே இப்படி எழுதி உள்ளேன்.  ‘ஓட்டலில் பணிபுரிபவர் எப்படி மிஷின் மாதிரி ஆகிறார் என்பதுதான் கதை.  திறமையாக எழுதி உள்ளார்,’ என்று.  படித்தத் தேதி வியாழக்கிழமை 28.04.2016 என்று குறிப்பிட்டுள்ளேன். 
                                                                             (இன்னும் வரும்…)

வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பு

அழகியசிங்கர் 


சாகித்திய அகாதெமி நடத்திய வடகிழக்கு மற்றும் தென்னிந்திய எழுத்தாளர்கள் சந்திப்பிற்கு இன்று சென்றேன்.  சிறுகதை வாசிப்பை அமர்ந்திருந்து கேட்டேன்.  அஸ்ஸôமியிலிருந்து மணிகுண்டல பட்டாச்சார்யா, மணிபுரியிலிருந்து ஹவோபம் சத்யபதி, தமிழிலிருந்து கீரனூர் ஜாஹிர் ராஜா தெலுங்கிலிருந்து சம்மெட உமாதேவி முதிலிய எழுத்தாளர்கள் அவர்கள் எழுதிய கதைகளை ஆங்கிலத்தில் வாசித்தார்கள்.  
ஆங்கிலத்தில் வாசித்த எந்தக் கதையையும் உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை.  என் பக்கத்தில் அமர்ந்திருந்த கிருபானந்தன் என்ற நண்பர் புரிந்தது என்று தலை ஆட்டிக் கொண்டிருந்தார்.  எனக்கு சந்தேகம் அவருக்குப் புரிந்திருக்குமாவென்று.  
தெலுங்குக் கதையை ஆங்கிலத்தில் வாசித்த விதம் படு மோசமாக இருந்தது. ஏன் இந்தக் கதைகளை எல்லாம் தமிழிலும் வாசிக்கக் கூடாது? வாசித்திருந்தால் ரொம்பவும் ரசித்திருக்கலாம்.  ஆங்கிலத்தில் கேட்க நரக வேதனையாக இருந்தது.   
எனக்கு கூட்டம் திருப்தியாக இல்லாவிட்டாலும்,  சாகித்திய அகாதெமி கூட்டத்திற்கு வந்தால் எப்போதும் புத்தகம் வாங்காமல் இருக்க மாட்டேன். இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற தலைப்பில் ஆர். வெங்கடேஷ் எழுதிய ராஜாஜியைப் பற்றிய புத்தகமும், ஜி நாகராஜன் பற்றி சி மோகன் எழுதிய புத்தகத்தை வாங்கினேன்.  இரண்டுமே படிக்க வேண்டிய புத்தகங்கள். 
இதிலும் ஒரு குறை.  புத்தகம் உள்ளே அரிதாக உள்ள புகைப்படங்களைச் சேர்த்திருக்கலாம்.  128 பக்கங்கள் கொண்ட ராஜாஜி புத்தகத்தில் புகைப்படங்கள் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.  அதேபோல் ஜி நாகராஜன் புத்தகத்திலும்..
  

விட்டுப் போன கவிதைகள்…..

விட்டுப் போன கவிதைகள்…..
அழகியசிங்கர்


நான் முதலில் யாருடனும் இல்லை என்ற கவிதைத் தொகுதி கொண்டு வந்தேன்.  அப்போது அந்தத் தொகுதியை யாரும் திட்டவில்லை.  தமிழவன், வெங்கட்சாமிநாதன், நகுலன், ஞானக்கூத்தன், ரிஷி பாராட்டி எழுதியிருந்தார்கள்.  அதன்பிறகு இன்னொரு கவிதைத் தொகுதி கொண்டு வந்தேன்.  தொலையாத தூரம் கவிதை நூலின் தலைப்பு.  பெரும்பாலோருக்கு அப்படி ஒரு தொகுப்பு வந்ததே தெரியவில்லை. 
இந்த இரண்டு கவிதைத் தொகுதியில் உள்ள கவிதைகளைச் சேர்த்து இன்னும் கவிதைகளைச் சேர்த்து ஒரு முழுத்தொகுதியாக அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகம் கொண்டு வந்தேன்.  ஓவியர் வரதராஜன் பிரமாதமாக அட்டைப் படம் அளித்திருந்தார்.  இந்தக் கவிதைத் தொகுதியைக் கொண்டு வரும் போது ஒரு பிரச்சினை ஏற்பட்டது.   மொத்தம் 180 கவிதைகள்.  ஒரு கவிதைத் தொகுதி 18ல் முடிவதில் எனக்கு விருப்பமில்லை.  அப்போது பிரமிளுடன் பேசிக் கொண்டிருந்ததால் 18ல் முடியும் எண் ஓமனின் எண்.   அது கவிதைத் தொகுதிக்கு நல்லதிலலை என்ற முடிவுடன், இன்னும் சில கவிதைகளைச் சேர்த்துக் கொண்டு வந்தேன.  அத் தொகுப்பில் உள்ள கடைசிக் கவிதை எங்கள் கிராமத்து வீரனைப் பற்றி எழுதிய கவிதை.
காலையில் தற்செயலாக ஒரு பைலைத் தேடும்போது எப்போதோ நான் எழுதிய இரண்டு கவிதைகள் என் கண்ணில் தட்டுப்பட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. இரண்டு கவிதைகளையும் எழுதிய பிறகு மறந்தே போய்விட்டேன்.  
முன்பு போல் ஒரு பக்கம் அளவிற்கு என்னால் இப்போதெல்லாம் கவிதை எழுத முடிவதில்லை.  ஆனால் நான் இன்னும் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறேன்.  இப்போது எழுதுகிற கவிதைகள் எல்லாம் ஐந்து வரி அல்லது ஆறு வரிகளில் முடிந்து விடுகின்றன.
பைலில் கண்டுபிடித்த அந்தக் கவிதையின் ஒன்றின் பெயர் சிரிப்புக்குப் பின்னால்..
முதலில் குடிக்கும்போது
வேண்டாம் என்றேன்
குடிக்க ஆரம்பித்த பிறகு
வேண்டும் வேண்டும் என்றது மனசு

கழுத்துக்கு மேல் தலையில்
பாயும் வெள்ளமாய்
ஏதோ ஒன்று சுழல
பின் எழுந்து நின்று
நடந்து பார்த்தேன்
தள்ளாட்டம் மூளையிலா
என் அசைவிலா
இல்லை தள்ளாட்டம்
என்று நினைத்தபோது
நிதானமான ஒரு பார்வையை
எல்லோர்முன் வீசினேன்
ஆனால் 
பார்வை நிதானமாக 
அவர்களுக்கும் தெரியவில்லை

குடித்ததைப் பற்றி
உபதேசம் செய்வதெல்லாம் ஒன்றுமில்லை
பிறகு
எதாவது சொல்லலாமென்றும் தோன்றியது
ஒன்றும் சொல்ல ஒன்றுமில்லை
என்றும்
சொல்லலாம் சொல்லலாம்
என்றால்
சொல்வதற்கு வார்த்தைகளைத்
தேட வேண்டுமென்று தோன்றியது
நடந்து சென்று 
படிக்கட்டில் தடுமாறி 
விழப் பாரத்தபோதுதான்
நிதானம் நிதானமன்று
மனம் அரற்றியது
விழுந்தால் செம்மையாய்
அடிப்பட்டிருக்கும்
குறிப்பாக கண்ணாடியில் 
பாரத்த என் முகம்
சிதைந்து ஓலமிட்டிருக்கும்

திரும்பவும்
உட்கார்ந்தபோது
எதிரில்
இன்னொரு
அரை கப்
பீர்
எல்லோருடைய சிரிப்புக்குப் பின்னால்..

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 

அழகியசிங்கர்

இன்றைய கவிதையின் முன்னோடி க. நா. சு.  ஆனால் எல்லோரும் க நா சுவை மறந்து விடுகிறார்கள்.  அப்படிப்பட்ட ஒருவர் கவிதை ஒன்றை எழுதினாரா  என்பதுகூட பலருக்குத் தெரிவதில்லை.பூனைக் குட்டிகளைப் பற்றி க நா சு அற்புதமாக கவிதை எழுதியிருக்கிறார்.  அதைத்தான் இங்கு அளித்துள்ளேன்.

‘கவிதையின் சரித்திரத்தை நோக்கினால் அது மிகவும் சிக்கலான மொழிப் பண்பாட்டு மதச் சிக்கலிலிருந்து விடுபட்டு மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரத்தை நாடியே செல்ல முயன்றிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.  குறுகிய அளவில் இலக்கணம், செய்யுள் போக்கு என்று ஏற்பட்ட விதிகள் மட்டும் மொழி எல்லைகள் அல்ல.  நல்ல கவிஞன் எவனும் இலக்கிய விதகளாலோ, செய்யுள் மரபிலோ தடுத்து நிறுத்தப்படுவதில்லை.  அதை சுலபமாகவே அவனால் மீறிவிட முடியும்.  ஆனால் மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம் விதிக்கிற விதிகளை, எல்லைகளை மீறுவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியம் அல்ல என்றெல்லாம் குறிப்பிடுகிறார் க.நா.சு.  இன்றைய கவிதையின் தந்தை க நா சுதான்.  

பூனைக்குட்டிகள்


க நா சு


மேஜை மேல் படுத்துறங்கும்
கருப்புக் குட்டி
என்னைப் பேனா
எடுக்க விடாமல்
தடுக்கிறது.


நாற்காலியில்
படுத்துறங்கும்
கபில நிறக்குட்டி
என்னை உட்கார
அனுமதிக்க
மறுக்கிறது.
அடுப்பிலே
பூனைக்குட்டி
உறங்குகிறது
சமையல்
இன்று நேரமாகும்
என்கிறாள்
என் மனைவி.


ஐந்து பூனைக்குட்டிகளே
அதிகம் என்று
எண்ணும் எனக்கு
பாற்கடலில்,
வைகுண்டத்தில்,
எத்தனை பூனைக்குட்டிகள்
இருக்கும் என்று
கணக்கெடுக்கத் தோன்றுகிறது.
கசடதபற ஏப்ரல் 1972

அங்கும் இங்கும் 3………..




அழகியசிங்கர் 

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் நடத்துவதாக இருந்தேன்.  திடீரென்று தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமண வரவேற்பு விழா ஞாபகத்திற்கு வந்தது.  கதை கவிதைக் கூட்டத்தை அடுத்த வாரம் தொடரலாம் என்று விட்டுவிட்டேன்.  
வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம்.  மணமக்களை வாழ்த்த பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.  பல எழுத்தாள நண்பர்களைப் பார்த்தேன்.  என் பக்கத்தில் இரா முருகன் இருந்ததால் பேசிக்கொண்டே வந்தேன்.  நான் இதுவரை அவருடைய மூன்று நாவல்களை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்க நினைத்துக்கொண்டிருக்கிறேன்.   ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்து விட்டேன்.  திறமையான எழுத்தாளர். நான் தற்போது ஆங்கில நாவல்கள் சிலவற்றைப் படித்துக் கொண்டு வருகிறேன்.  ஒன்று  ITALO CALVINO  எழுதிய      IF ON A WINTER’S NIGHT A TRAVELER  இன்னொன்று   அதேபோல்    If Tomorrow comes என்று பரபரப்பாகப் பேசப்படும் எழுத்தாளரின் 
புத்தகமும், அதேபோல் KISS  –  ED MCBAIN புத்தகமும்  96 பக்கங்கள் வரை படித்துவிட்டேன்.  கேட்பவரே என்கிற லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைத் தொகுதியும், பழனிவேளின் தவளை வீடும், குவளைக் கண்ணனின் பிள்ளை விளையாட்டும், இன்னும் பல புத்தகங்கள்.
மேடையில் வீற்றிருந்த தமிழச்சி தங்கபாண்டியன் என்னை ஞாபகப்படுத்திக்கொண்டு வரவேற்றது பெரிய விஷயமாக இருந்தது.  ஏன்என்றால் மூச்சு விடக்கூட முடியாதபடி கூட்டம். 
விருந்து முடிந்தவுடன் வெளியே செல்லும் முன் ஒரு தாம்புலப் பை கொடுத்தார்கள்.  அதில் பெட்டகம் நம் கையில் என்ற புத்தகம் இருந்தது.  உபயோகமான மருத்துவக் குறிப்புகள் கொண்ட புத்தகம்.  உண்மையிலே இது ஒரு பெட்டகம்.  எப்போதும் பத்திரமாக பாதுகாக்க  வேண்டிய புத்தகம். 
அதில் வெற்றிக்கு 20 கட்டளைகள் என்ற பகுதியில் :
முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது என்று எழுதியிருந்தது. 
ஆடியோ ஒலிபரப்பு – ஒரு கதை ஒரு கவிதை கூட்டம்
10.07.2-16 அன்று நடந்த ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தில் நாங்கள் பேசியதை ஒலிபரப்பு செய்துள்ளேன்.  உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

மறந்து போன பக்கங்கள்….

அழகியசிங்கர்

தி சோ வேணுகோபாலனின்  கோடை வயல் என்ற தொகுதி மட்டுமல்ல, மீட்சி விண்ணப்பம் என்ற தொகுதியிலிருந்தும் கவிதைகளை மறந்து போன பக்கங்கள் என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டு வர எண்ணம்.

விசாரணை

தத்துவம்தானே?  வெங்காயம்…!
போடா! போ!
மூடியதை மூடிப்
பின்மூடி?….முடிவா?….
உரித்தால்?  மேலும் உரித்தால்?


கண்ணீர் கொட்டும்
முட்டாளுக்கு உருக்கம்;
மூளை மோதினால்
தலைக்குத் தேங்காய்!


உனக்கும் எனக்கும் 
முடிந்தால்
இதயத்துக்கு மருந்து;
அநேகருக்கு
வயிற்றை நிரப்ப
வேகும் கூத்துத்தான்!


வெட்டித் தனமாய்
வேடிக்கையாய்
அட வீம்புக்குத்தான்
வைத்தாலும்
தோலுரிக்கும் தொல்லையின்றி
வேறென்ன கண்டபயன்?


முட்டிமோதி முடிந்தமட்டும்
பார்த்து
முக்கித் திணறி முடிவில்
சிக்காத சிக்கல் என்று
நடையைக் கட்டும்
வேலை!

ஞாபகச் சிற்பம் என்கிற பிரம்மாராஜனின் கவிதைகள்…..

அழகியசிங்கர்



பிரம்மராஜனின் ஞாபகச் சிற்பம் என்ற கவிதைத் தொகுதியை தற்செயலாக மிகவும் தற்செயலாகப் பார்த்தேன்.  1988 ஆம் ஆண்டு வந்த இந்தப் புத்தகத்தின் விலை ரூ 12 தான்.  தன்யா பிரம்மா பதிப்பகம் மூலம் வந்திருக்கிறது.  இதில் முக்கியம் நாகார்ஜøனனின் முன்னுரை.  அந்த முன்னுரையைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அவருடைய அனுமதியைப் பெற வேண்டுமென்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  
ஒருவர் பிரம்மராஜன் புத்தகத்திற்கு நாகார்ஜøனன் முன்னுரையைப் படிப்பதற்கு அலாதியான திறமை பெற்றவராக இருக்க வேண்டும்.
ஒரு காலத்தில் வேகம் என்றால் அதை பிரம்மராஜன் என்றுதான் குறிப்பிடுவார்கள்.  கவிதைகளாக எழுதிக் குவிப்பவர் பிரம்மராஜன்.  அழகான அவர் கையெழுத்தில் அவர் அனுப்பிய பல கவிதைகளைப் படித்திருக்கிறேன்.
ஆனால் சமீபத்தில் அவர் கவிதைகள் எழுதுகிறாரா என்பது தெரியவில்லை.  தன்னை கவிதை மூலம் வெளிப்படுத்திக் கொண்டவர், இப்போது மௌனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. 
அவர் கவிதை எழுதுவதோடல்லாம் இரண்டு முக்கியமான புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார்.  ஒன்று ஆத்மாநாம் கவிதைத் தொகுதி.  இரண்டாவது சமகால உலகக் கவிதை.  உயிர்மை வெளியீடாக இப் புத்தகம் டிசம்பர் 2007ல் வெளிவந்த தொகுப்பு.
அவருடைய மீட்சி என்ற கவிதைக்கான சிற்றேடு.  அந்த மாதிரி தரமான உயர்வான அச்சில் ஒரு சிறுபத்திரிகை கொண்டு வருவது சிரமம்.  ஆனால் அவர் துணிந்து கொண்டு வந்தார்.  
பொதுவாக பிரம்மராஜன் கவிதைகளை வாசகர்கள் அவ்வளவு எளிதில் அனுக முடியாது.  எனக்கு பிரம்மராஜனின் கவிதைகளைப் படிக்கும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாய்ப் புரியும்.  சில புரியாமலே போய்விடும். சிலவற்றைப் படிக்கும்போது வேறு அர்த்ததத்தில் தாவி விடும்.
தற்செயலாக என் கண்ணில் பட்ட ஞாபகச் சிற்பம் என்ற புத்தகத்தில் ஒரு கவிதை.  கவிதையின் தலைப்பு அய்யனார்.
மொத்தமே 3 வரிகள்தான் கவிதையே…
அய்யனார்
அப்பனுக்கு கல்குதிரைகள்
மகனுக்கு மண்குதிரைகள்
எனக்கு மனிதக் குதிரைகள்
மாலை நேரத்தில் இக் கவிதையைப் படித்துவிட்டு நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.  இங்கு எனக்கு என்பது என்ன?
அய்யனாரே அவர் முன் உள்ள மனிதர்களைப் பார்த்துச் சொன்னதா?
இந்தக் கவிதையில் கூறுவது யார்?  அய்யனாரா?  அவர்தான் மனிதர்களைப் பார்த்து அப்படி சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.
கல்குதிரை, மண் குதிரை என்று சொல்லும்போது. மனிதர்களும் ஒரு விளையாட்டாக அய்யனார் போன்ற சாமிக்கு ஆகிவிடுகிறது.  
இந்தக் கவிதைத் தொகுதியில் வெளிவந்திருக்கும் மற்ற கவிதைகளையும் படிக்க படிக்க சுவாரசியமாக இருக்கிறது.  ஆனால் திட மனதுடன் நீங்கள் நாகார்ஜøனன் பிரம்மராஜன் கவிதைகளைக் குறித்து எழுதியதைப் படிக்க வேண்டும்.     

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

அழகியசிங்கர்

ஒருநாள் காலையில் வாயில் ஒரு எலியைக் கவ்விக்கொண்டு  ஒரு பூனை எங்கள் அடுக்கக வளாகத்தில் நுழைந்து விட்டது. பூனையைத் துரத்தும்போது வாயில் வைத்திருந்த எலியைப் போட்டுவிட்டு ஓடிவிட்டால் என்ன செய்வது?  ஜாக்கிரதையாக பூனையை வெளியே எலியுடன் துரத்தவேண்டும்.  அப்படித்தான் மெதுவாக துரத்தி விட்டேன்.  
நாயைவிட பூனை மனிதர்களிடம் எளிதில் பழகாது.  மேலும் ஒருவர் வீட்டில் நாய் வளர்க்கிறார்கள் என்றால் அவர்கள் வீட்டிற்குப் போவதற்கே விரும்ப மாட்டேன்.  தெருவில் நாய்கள் நடமாடினால், நாய்களை உற்றுப் பார்க்க மாட்டேன்.  உற்றுப் பார்த்தால் போதும் நம்மைத் தொடர்ந்து வர ஆரம்பிததுவிடும்.  பிஸ்கட் கட்டாயம் வாங்கிப் போட மாட்டேன். அதே சமயம் பூனையைப் பார்த்தால் அதை அடித்துத் துரத்துவதுதான் என் முதல் வேலை. அதன் முன் பெரிய சத்தத்துடன் குதிப்பேன்.  என் சத்தத்தைக் கண்டு அது ஒன்றும் கவலைப் படாது.  அப்போதுதான் கையில் எதாவது கிடைக்கிறதா என்று பார்ப்பேன்.  இந்தச் சமயத்தில்தான் அது நகர ஆரம்பிக்கும். 
காலையில் தெருவில் மீனு மீனு என்று கூவி விற்கும் கிழவி முன் தெருவில் உள்ள அத்தனைப் பூனைகளும் சூழ்ந்து கொள்ளும்.  காக்கைகளும் ஆவலுடன் உலாவும்.
தற்செயலாக வைதீஸ்வரனின் நிழல் வேட்டை என்ற கவிதையைப் படித்தேன். பூனையைப் பற்றியும் எலியைப் பற்றியும் எழுதியிருந்தது.  உடனே இங்கே வாசிக்க அளிக்கிறேன்.
நிழல் வேட்டை

இலையிடையில்
எலி நினைவால்
பூனை நீண்டு
புலியாகும்.
செவிகள் கொம்பாகி
வாலில் மின் பாயும்
நகங்கள் கொடும்பசி போல்
மண்ணைத் தோலுரிக்கும்.
காற்றின் கண்ணிமைப்பில்
இலைகள் நிலைமாறி
எலிகள் நிழலாகப்
புலி மீண்டும் பூனைக்குள் ஒடுங்கி
முதுகைத் தளர்த்தும்.
கிட்டாத கசப்பை
மியாவால்
ஒட்டி, ஓட்டில்
வளைய வரும்
வீட்டுப் பூனை.
அதற்கு மட்டும் ஒரு ஆகாயம் என்ற வைதீஸ்வரன் கவிதைத் தொகுப்பில் வெளிவந்த கவிதை இது.  இந்தப் புத்தகம் ஒரு விருட்சம் வெளியீடு.

ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 7

வழக்கம் போல் நடைபெறும் ஏழாவது கூட்டம் இது.  நடேசன் பூங்கா இல்லை.  வேற இடத்தில் கூட்டத்தை மாற்றி உள்ளோம்.  யாவரும் வந்திருந்து கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
புதியதாக எழுதுபவர்கள் அவர்களுடைய படைப்புகளையும் படிக்கலாம்.  அதற்கு முக்கியத்துவம் தரப்படும்.
மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரன் பூங்காவில் கூட்டம் நடைபெறுகிறது.  மாலை நான்கு மணியிலிருந்து ஐந்தரை வரை.
சிறுபத்திரிகைகளால் கதைகளின் தன்மை மாறியிருக்கிறதா என்ற தலைப்பில் உரையாடல் நடக்கிறது.
கலந்து கொள்பவர்கள் : அழகியசிங்கர், கிருபானந்தன், சுந்தர்ராஜன், நீங்களும்.