பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 

அழகியசிங்கர்

இன்றைய கவிதையின் முன்னோடி க. நா. சு.  ஆனால் எல்லோரும் க நா சுவை மறந்து விடுகிறார்கள்.  அப்படிப்பட்ட ஒருவர் கவிதை ஒன்றை எழுதினாரா  என்பதுகூட பலருக்குத் தெரிவதில்லை.பூனைக் குட்டிகளைப் பற்றி க நா சு அற்புதமாக கவிதை எழுதியிருக்கிறார்.  அதைத்தான் இங்கு அளித்துள்ளேன்.

‘கவிதையின் சரித்திரத்தை நோக்கினால் அது மிகவும் சிக்கலான மொழிப் பண்பாட்டு மதச் சிக்கலிலிருந்து விடுபட்டு மொழிக்கு அப்பாற்பட்ட ஒரு சுதந்திரத்தை நாடியே செல்ல முயன்றிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.  குறுகிய அளவில் இலக்கணம், செய்யுள் போக்கு என்று ஏற்பட்ட விதிகள் மட்டும் மொழி எல்லைகள் அல்ல.  நல்ல கவிஞன் எவனும் இலக்கிய விதகளாலோ, செய்யுள் மரபிலோ தடுத்து நிறுத்தப்படுவதில்லை.  அதை சுலபமாகவே அவனால் மீறிவிட முடியும்.  ஆனால் மொழி, பண்பாடு, கலாச்சாரம், மதம் விதிக்கிற விதிகளை, எல்லைகளை மீறுவது அத்தனை சுலபத்தில் நடக்கிற காரியம் அல்ல என்றெல்லாம் குறிப்பிடுகிறார் க.நா.சு.  இன்றைய கவிதையின் தந்தை க நா சுதான்.  

பூனைக்குட்டிகள்


க நா சு


மேஜை மேல் படுத்துறங்கும்
கருப்புக் குட்டி
என்னைப் பேனா
எடுக்க விடாமல்
தடுக்கிறது.


நாற்காலியில்
படுத்துறங்கும்
கபில நிறக்குட்டி
என்னை உட்கார
அனுமதிக்க
மறுக்கிறது.
அடுப்பிலே
பூனைக்குட்டி
உறங்குகிறது
சமையல்
இன்று நேரமாகும்
என்கிறாள்
என் மனைவி.


ஐந்து பூனைக்குட்டிகளே
அதிகம் என்று
எண்ணும் எனக்கு
பாற்கடலில்,
வைகுண்டத்தில்,
எத்தனை பூனைக்குட்டிகள்
இருக்கும் என்று
கணக்கெடுக்கத் தோன்றுகிறது.
கசடதபற ஏப்ரல் 1972

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *