உரையாடல் தொடருகிறது….

அழகியசிங்கர்


அழகியசிங்கர், ஜெகன், மோஹினி மூவரும் சோகமாக அமர்ந்திருந்தார்கள்.  அவர்களுடைய சோகத்தை நீண்ட மௌனம்தான் உணர்த்திக் கொண்டிருந்தது. 
அழகியசிங்கர் :   வருத்தமாக இருக்கிறது.  
மோஹினி :  ஆமாம்.  நான் கூட எதிர்பார்க்கவில்லை.
அழகியசிங்கர் :  பிதாமகர் ஸ்தானத்தில் நமக்கு அறிவுரை கூறுபவரை இழந்து விட்டோம்.
ஜெகன் :  அவரைப் பார்க்கும்போது அவர் இறந்து விடுவார் என்பது தெரியவில்லை. 
மோஹினி :   78வயது வரை இருந்து விட்டார்.  78 என்பது சாதாரண வயதில்லை
அழகியசிங்கர் :  நான் ஞானக்கூத்தனைப் பார்க்கும்போதெல்லாம் உடல்நிலை சரியில்லாதவரைப் பார்ப்பதாக தோன்றாது.  அவ்வளவு உற்சாகமாக இருப்பார். 
ஜெகன் :  சமீப காலத்தில் அவர் டயட்டில் இருந்தார்.  குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதில் ஒழுங்காக இருப்பார்.  யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும் இதில் உறுதியாக இருபபார்.  
அழகியசிங்கர் :  நான் பார்க்க வருகிறேன் என்று சொன்னால் அவர் யோஜனை செய்வார்.  மாம்பலத்திலிருந்து நான் வருகிறேன் என்பதால் சிலசமயம் வேண்டாம் என்று சொல்லி விடுவார்.
மோஹினி :   என்னைப் பொறுத்தவரை அவர் கவிதைகளை விட்டுச் சென்றிருக்கிறார்.  அவர் கவிதைகள் உலகத் தரத்தில் ஆனவை. 
ஜெகன் :  அவர் கவிதைகள் படிப்பவரை யோசிக்க வைக்கும்.
அழகியசிங்கர் :  இன்று கவிதைகள் எழுதும் பெரும்பாலோர் ஞானக்கூத்தனை டச் செய்துவிட்டுத்தான் வந்திருக்க வேண்டும்.  
மோஹினி :  அவருக்கு உரிய கவனம் தரவில்லை என்பது என் வருத்தம். 
அழகியசிங்கர் :  வாசகர் கவனத்தில் அவர் இருக்கிறார்.  அவர் எழுதி விட்டுச் சென்ற கவிதைகள் அவருடைய பெயரை காலம் காலமாகச் சொல்லிக் கொண்டிருக்கும்.  
ஜெகன் :  எப்போது நீங்கள் அவரை முதன் முதலாக சந்தித்தீர்கள்.  
அழகியசிங்கர் :  நான் சந்தித்து நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும்.  நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், படிப்பதிலும், எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் என் உற்சாகம் அளவு கடந்து இருக்கும்.
மோஹினி :   நவீன விருட்சம் என்ற பத்திரிகையை நீங்கள் 88ல் தான் கொண்டு வந்தீர்கள்..
ஜெகன் :  ஆத்மாநாமின் ழ மாதிரிதான் அதைக் கொண்டு வர வேண்டுமென்று கொண்டு வந்தீர்களா…
மோஹினி :  ழ மாதிரி உங்கள் முதல் இதழில் கவிதைகள் மட்டும் இருக்கும்.  வேற எதுவும் இருக்காது.
அழகியசிங்கர் :  ஆமாம். கவிதைகள் மட்டும் இருக்கும்.  ஆத்மாநாமிற்குப் பிறகு ழ பத்திரிகை ஞானக்கூத்தன் ஆசிரியப் பொறுப்பில் திரும்பவும் வந்தது.  அந்தப் பத்திரிகையைத் திரும்பவும் கொண்டு வர நானும் எனனால் முடித்த உதவியைச்  செய்தேன்.
மோஹினி :  ஆனால் சில இதழ்களுக்குப் பின் அவர்களால் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை 
ஜெகன் :  அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்..
அழகியசிங்கர் : அலுப்பு.  திரும்பத் திரும்ப இதுவேவா என்று அதில் ஈடுபட்டவர்களுக்குத் தோன்றிகொண்டே இருக்கும்.  முதலில் அவர்களுக்கு அந்தப் பத்திரிகை முதன்மையாக தோன்றியது.  ஆத்மாநாமின் தறகொலை அவர்களை வேறு மாதிரி யோசிக்க வைத்திருக்கும். அவர்களுக்கு லௌகீக தாக்கம் அதிகமாக இருந்தது.    ஆனால் ஞானக்கூத்தன் வேறுவிதமாக இருந்தார்.  அவர் முழுக்க முழுக்க கவிதைகளைப் பற்றிய சிந்தித்தார்.  கவிதை எழுதுபவர்களை எழுதத் தூண்டினார்.  ழ பத்திரிகை வராத சமயத்தில் நான் கேட்டேன்.  நான் முயற்சி செய்யட்டுமா என்று.  ஞானக்கூத்தன் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ü நீங்க வேறப் பத்திரிகை ஆரம்பித்து விடுங்கள்,ý என்றார்.  விருட்சம் பத்திரிகை அப்படித்தான் வந்தது 
ஜெகன் :     உண்மைதான்.  
அழகியசிங்கர் :  . அந்தச் சமயத்தில் ஞானக்கூத்தன் ஒவ்வொரு இதழிலிலும் ஒரு கவிதை பிரசுரிக்கக் கொடுப்பார்.  சில இதழ்களுக்குப் பிறகு கவிதை என்றில்லாமல் வேறு விதமாக பத்திரிகை மாறியது.  கதைகள் எல்லாம் வரத் தொடங்கின.  பக்கம் அதிகமாக வந்தது.  நான் ஒருவனே எல்லாச் செலவுகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டடேன். அட்டை என்ற ஒன்று இருந்தது.  
ஜெகன் :   இப்படித்தான் விருட்சம் 99வது இதழ் வரை வந்துவிட்டது. 
அழகியசிங்கர் :  1988ல் இதன் முக்கியத்துவம் பெரிதாக இருந்தது.  இப்போது சிறுபத்திரிகையின் முகம் மாறிவிட்டது.  இருந்தாலும் ஒரு தனி மனிதனின் குரலாகத்தான் இது இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  வெறும் பத்திரிகை மட்டுமல்லாமல் புத்தகங்களும் கொண்டு வந்தேன்.  அப்போது ஞானக்கூத்தனின் கவிதைகள் சிறு சிறு புத்தகங்களாக வந்திருந்தன.  ஒரு முழுத் தொகுதி வேண்டுமென்று ஒரு முயற்சி செய்தேன்.  ஞானக்கூத்தனின் பல கவிதைகளை தீபம் என்ற பத்திரிகைகளிலிருந்து தனிப்பட்ட முறையில் ந பா புதல்வரின் வீட்டிற்குச் சென்று தீபம் பத்திரிகைகளைப் பார்த்து ஒரு தாளில் எழுதி சேர்த்தேன்.  இன்னும் பல பத்திரிகைகளிலிருந்து விட்டுப் போன கவிதைகளையும் சேர்த்தேன். ஞானக்கூத்தன் கவிதைகளின் மீதான ஈடுபாடால் இதையெல்லாம் செய்தேன்.புத்தகம் கொண்டு வந்தேனே தவிர புத்தகம் விற்கும் வழிமுறை சரியாக தெரியாது.  அத் தொகுதியின் பெயர் ஞானக்கூத்தன் கவிதைகள். மொத்ம் 196 கவிதைகள்.  ஞானக்கூத்தன் வரைந்த ஓவியங்களுடன் அப்புத்தகம் வந்தது.  
மோஹினி :  ஞானக்கூத்தன் கவிதைகள் புத்தகம் வரும்போது முப்பெறும் விழா நடத்தினீர்கள் போலிருக்கிறது.
அழகியசிங்கர் :    ஆமாம்.  ஆதிமூலம், சா கந்தசாமிக்கும் சேர்த்து நடத்தினோம்.  
ஜெகன் :    பென்சில் படங்கள் என்ற புத்தகம் கூட கொண்டு வந்தீர்கள்..
அழகியசிங்கர் :   நான் ஒருவனே கணினியில் அடித்துக் கொண்டு வந்த புத்தகம்.  கிட்டத்தட்ட 87 கவிதைகள் கொண்ட புத்தகம்.  அதன்பின் கவிதைக்காக என்ற கட்டுரைத் தொகுதியும் கொண்டு வந்தேன்.  .இதோ இப்போது இன்னொரு கவிதைத் தொகுதி ஒன்று கொண்டு வர உள்ளேன். அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு அவர் கவிதைகள் மீது உள்ள ஈர்ப்பு  அலாதியானது.  அவர் உலகம் முழுவதும் போற்றப்பட வேண்டிய கவிஞர்.  இது குறித்து ஒரு கட்டுரை எழுத உத்தேசம். இத் தருணத்தில் அவர் உயிரோடு இல்லை என்பது வருத்தமாக உள்ளது. அவர் நினைவாக ஒரு  மலர் கொண்டுவர நினைத்துள்ளேன்.  
(மூவரும் ஞானக்கூத்தனுக்காக மௌன அஞ்சலி செலுத்துகிறார்கள்.)
                                                                            (இன்னும் வரும்…)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 2

அழகியசிங்கர் 
 ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது

    கண்டராதித்தன்

நான் பெண்ணாகப் பிறந்திருந்தால்
யாரைப்போல இருப்பேனோ
நேற்று அவளை நான் பார்த்தேன்
பேருந்தின் கடைசியில் நின்றிருந்த
அந்த பெண்ணிற்கு என் வயதிருக்கும்
அந்த நாசி,
அந்தக் கண்கள்,
கருங்கூந்தல்,
மாநிறம்,
சற்றே திமிரான பார்வை
வடிவான தோற்றமென
நான் பெண்ணாய் பிறந்தால்
வடிவெடுக்கும் தோற்றம்தான் அது.
இரண்டெடிôருமுறை யதேச்சையாக இருவரும்
பார்த்துக்கொண்டோம்
இரண்டொருமுறை யதேச்சையாக இருவரும்
பார்ப்பதைத் தவிர்த்தோம்
இப்போது பேசும் தொலைவில் நிற்கும் அவளிடம்
நீங்கள் இளங்கோவா என்றேன்
ஆமாம் என்ற அவள்
நீங்கள்
ஞானப்பூங்கோதைதானே என்றாள்.
நன்றி : திருச்சாழல் – கண்டராதித்தன் – கவிதைகள் – விலை : ரூ.70 – வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112 தொலை பேசி : 98426 47101

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 1

அழகியசிங்கர் 

புத்தர் அழுதார்




வெய்யில்


யாரோ தினமும்
ஒரு பூவைக் கொன்று
புத்தரின் கையில் வைத்துவிடுகிறார்கள்
விரல்கள் நடுங்க…
பூ அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
நேற்று அதிகாலையிலும் கூட
கண்ணீர் கசிவதாய் பதறினேன்
பனித்துளிகள் என்று சிரித்தார்கள்
மாலை நேரத்து
மந்திர உச்சாடனத்தில்
புத்தரின் விசும்பல் யாருக்கும்
கேட்காமல் போக
இன்றும் கூட யாரோ
ஒர பூவைக் கொன்று.

நன்றி : குற்றத்தின் நறுமணம் – வெய்யில் – கவிதைகள் – விலை : ரூ.80 – வெளியீடு : புது எழுத்து,  2/205 அண்ணா நகர். காவேரிப்பட்டினம் 635 112
தொலை பேசி : 98426 47101

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 22

அழகியசிங்கர்

இந்தக் கூட்டம் விருட்சம் நடத்தும் 22வது கூட்டம்.  ஏன் இதுமாதிரி கூட்டங்கள் நடத்த வேண்டுமென்ற கேள்வியை நானே கேட்டுக்கொண்டேன்.  கீழ்க்கண்டவாறு அதற்கான பதில்களை சொல்ல விரும்புகிறேன் :

1. எழுத்தாளர்கள் அவர்களுடைய நண்பர்களை சந்திப்பதற்கு.   நான் வாசகர்கள் என்று சொல்வதைத் தவிர்க்கிறேன்;

2.  ஒரு படைப்பாளியின் படைப்புகளைப் பற்றிப் பேச;

3.  ஒரு படைப்பாளி அவர்களுடைய படைப்புகளைப் பற்றி அவர்களே அறிமுகப் படுத்திக்கொள்ள;

4. இதுமாதிரியான கூட்டங்களை எப்படி எதிர்கொள்வது என்று பார்வையாளர்கள் தங்களுக்குள் பயிற்சி எடுததுக்கொள்ள

கடந்த 22 கூட்டங்களாக இதை ஓரளவுக்கு நடைமுறையில் சாத்தியப் படுத்த முயற்சி செய்துள்ளோம் என்று நினைக்கிறேன். இப்போது நடைபெறுவது பெருந்தேவியின் கவிதைகள் குறித்த கூட்டம். கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஞானக்கூத்தன் இனி இல்லை

அழகியசிங்கர்


இன்றைய தினமணி இதழில் ஞானக்கூத்தன் குறித்து ‘ஞானக்கூத்தன் இனி இல்லை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். படிக்கவும். இன்னும் விரிவாக ஒரு புத்தகம் போடும் அளவிற்கு அவரைப் பற்றி எழுத முயற்சி செய்ய உள்ளேன். 
அதேபோல் நான், பிரமிள், விசிறி சாமியார் என்ற புத்தகத்தை 65 பக்கம் முடித்துள்ளேன்.  80 பக்கங்களில் அந்தப் புத்தகத்தை முடிப்பதாக உள்ளேன்.  

படித்ததில் பிடித்தது…..1

அழகியசிங்கர்

புதுமைப் பித்தன்

புதுமைப் பித்தன் இருந்த
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச்
செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து
எத்தனையோ நாட்கள் போக்கியாகி
விட்டது. எத்தனையோ கதைகள் சொல்லி
புஸ்தகங்கள் படித்து முடித்தாகி விட்டது
ரெண்டு கப் காபிக்கு காசு இருக்கிறதா
என்று பார்த்துக்கொண்டு காபியும்
சாப்பிட்டுவிட்டு மீதி கையில் காசிருந்தால்
வீட்டுக்கும் எதாவது வாங்கிக்கொண்டு
பேசிக்கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
பேசிப்பேசி பொழுதைத் தீர்த்த இடம் இது
இரவாகியும் வீடு திரும்பாமல் பேச்சின்
சுவாரஸ்யத்திலே இரவு பூரா தங்கிவிட்டு
காலையில் காபி சாப்பிட்டு விட்டுத்
திரும்புவதுண்டு !

இப்போது இந்த
வீட்டுக்குள்ளே போனால் எங்கள் பேச்சை
கேட்டிருந்த அந்த சாஷி பூதமான சுவர்கள்
எங்கள் பேச்சை எனக்குத் திருப்பி
சொல்லுமா…? சொல்வதாக வேண்டுமானால்
நான் கதை யெழுதலாம் சுவர்கள் பேசாது.
நன்றி கெட்ட சுவர்கள் – அவை வீட்டுக்
காரன் கட்சி தான் – எழுத்தின் அருமை
தெரியாதவை, உலகமே எழுத்துக்கு – நல்ல
எழுத்துக்கு எதிரியாய் இருக்கும்பொழுது  –
வேறு சொல்ல என்ன இருக்கிறது ..?

எழுதாதே எழுதாதே என்று உலகம் கூடி
சொல்ல நன்றாக எழுதினால் ஆபத்துதான்
அதற்கு நானே உதாரணம் என்று
புதுமைப் பித்தன் சொல்லிப் போனாரோ

என் சிந்தனை எங்கேயோ தொடர்கிறது.

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம்

ஒரு கதை ஒரு கவிதை கூட்டம் அல்லது ஐந்து பேர்கள் கூட்டம்
அழகியசிங்கர்

இனி இக்கூட்டத்தின் பெயரை மாற்ற உள்ளேன்.  ஐந்து பேர்கள் கூட்டம் என்று.  ஒரு இடத்தில் கூடி ஐந்து பேர்கள் மட்டும் அமர்ந்து கதை கவிதைகள் வாசிக்கும் கூட்டமாக இது இருக்கும்.  பெரும்பாலும் போஸ்டல் காலனியில் உள்ள என் இடத்தில்தான் இருக்கும்.  இலக்கியக் கூட்டம் என்று (வர மாட்டார்கள் என்பதில் நம்பிக்கை உள்ளவன்) அதிகம் பேர்கள் வந்தால் சமாளிப்பது கடினம். 
ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் நாங்கள் பேசியதை இங்கே ஆடியோவில் உங்களுக்கு பதிவு செய்து அனுப்பி உள்ளேன். கேட்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அங்கும் இங்கும் 4………..

அழகியசிங்கர்
24.07.2916 (சனிக்கிழமை) அன்று குவிகம் என்ற இலக்கிய அமைப்பு கதை சொல்லும் கூட்டம் ஒன்று நடத்தியது.  10 பேர்களுக்கு மேல் கதை சொன்னார்கள்.  எல்லோரும் உற்சாகமாக  சொன்னார்கள். ஒவ்வொருவரும் விதம்விதமாக கதை சொன்னது  நன்றாக இருந்தது.  முடிவில் ஒரு சிறுமி அவளுக்குத் தெரிந்த கதையைச் சொன்னாள். எனக்குத் தெரிந்து இரண்டு முக்கிய நண்பர்கள் கதை சொன்னதுதான் தனிப்படட முறையில் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.  ஒருவர் என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்.  சுரேஷ் என்ற பெயர்.  அதேபோல் இன்னொருவர் உமா பாலு. அலுவலக நண்பர். அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தை உருக்கமாக விவரித்தார். இருவரும் தனிப்பட்ட அனுபவத்தை கதைபோல் சொன்னார்கள்.  ஆனால் இருவராலும் சொன்னதை கதையாக எழுத முடியுமா என்பது தெரியவில்லை.  எழுதுவது என்பது வேறு; கதை சொல்வது என்பது வேறு.  இதுமாதிரியான கூட்டத்திற்கு நிச்சயமாக அதிகமாக கூட்டம் வரும். ஏன்என்றால் பார்வையாளர்களே கூட்டத்தில் பங்கு பெறுகிறார்கள்.  விடாமல் தொடர்ந்து இலக்கியக் கூட்டம் நடத்தும் குவிகம் இலக்கிய அமைப்புக்கு என் வாழ்த்துகள். ஒவ்வொரு முறையும் கதை சொல்லும் கூட்டங்களை தொடர்ந்து நடத்தினால் போதும்.
முன்னதாக வாசக சாலை என்ற அமைப்பு பத்தாம் தேதி பரிசல் புத்தக  அலுவலகத்தில்   கதையாடல் நடத்தியது.  சிறு பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளைப் பற்றி விமர்சனப் பார்வையை பலர் வைத்திருந்தார்கள்.   பத்திரிகையில் எழுதியவர்கள் அங்கு பேசியவர்களின் கருத்துக்களைக் கேட்டால், இனிமேல் எழுத வேண்டாம் என்று ஓட்டமாக ஓடிப் போய்விடுவார்கள்.                      
   
ஒவ்வொரு மாதமும் சுப்பு என்பவர் நடத்துகிற தமிழ் வளர்த்த சான்றோர் என்ற கதையாடல் கூட்ட நிகழ்ச்சியைக் கேட்டேன்.  வ வே சுவும். மாலனும் அமர்ந்துகொண்டு உரையாடிக் கொண்டிருந்தார்கள். எழுத்தாளர் அழகிரிசாமியைப் பற்றி பேசினார்கள்.  அழகிரிசாமி மௌனியையும் லாசராவையும்   மோசமாக விமர்சனம் செய்திருப்பதாக மாலன் குறிப்பிட்டார்.  அதைக் கேட்கும்போது சற்று சங்கடமாக இருந்தது.   முன்பே ஐராவதம் சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.  எழுபது வாக்கில் இலக்கியச் சங்கம் என்ற அமைப்பு கோணல்கள் என்ற சிறுகதைப் புத்தகம்  கொண்டு வந்தது. அதன் பிரதி ஒன்றை அழகிரிசாமியிடம் காட்டியபோது, ஆரம்பத்திலேயே  இப்படியா தலைப்பு வைக்கிறது என்று கிண்டல் செய்தாராம். 
                                                                                  **************                                 
25.07.2016 (ஞாயிறு) ஒரு கதை ஒரு கவிதை கூட்டத்தை வீட்டில் வைத்துக் கொண்டேன்.  போஸ்டல் காலனியில் நாங்கள் முன்பு இருந்த வீடு.  முக்கிய விருந்தாளியாக எஸ் வைதீஸ்வரனை அழைத்திருந்தேன்.  அவருடைய கவிதைத் தொகுதியும், கதைத் தொகுதியும் சமீபத்தில் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.  தெளிவாக வைதீஸ்வரன் அவருடைய கதைகளையும் கவிதைகளையும் வாசித்தார்.  இந்தக் கூட்டத்தைப் பற்றி முகநூலில் முன்னதாக தெரிவிக்கவில்லை.   இனிமேல் தெரிவிக்க வேண்டாமென்று தோன்றுகிறது.  ஒரு ஐந்து இலக்கிய நண்பர்களை மட்டும் கூப்பிட்டு கூட்டம் நடத்துவதாக எண்ணம். வழக்கம்போல் கிருபானந்தனும், சுந்தர்ராஜனும் எனக்கு துணை நின்றார்கள். தரையில் அமர்ந்து கூட்டத்தை ரசிப்பது சற்று சிரமமாக இருந்தது.  ஹாலில் தொங்கிக்கொண்டிருந்த சீலிங் பேன் படபடவென்று சத்தம் போட்டபடி இருந்தது. நான் புதுமைப்பித்தன் கதையையும், சில க நா சு கவிதைகளையும் படித்தேன்.  கூட்ட நேரம் முடிந்து விட்டது.  அடுத்த முறை ஐந்து பிளாஸ்டிக் நாற்காலிகள் வாங்க வேண்டும்.
                                                                                   ***********
ஆத்மாநாம் தொடங்கிய ழ என்ற சிற்றேட்டின் கடைசி இதழான 28ல் ஞானக்கூத்தனின் மேசை நடராசர் என்ற கவிதை உள்ளது.  அப்போது அதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.  அக் கவிதையை இங்கு தருகிறேன்.
மேசை நடராசர்


மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்கள் அல்ல.  கிங்கரர் அல்ல.
எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கருத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப் படுத்துக் கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுது பார்க்கப்பட
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி; மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்

ஆனால் நடராசர்
ஆடிக் கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்;கள் இல்லையென்றாலும்

எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவிறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்.

எனக்குப் பிடித்த தலையங்கம்….

அழகியசிங்கர் 


அக்டோபர் 1988 ஆம் ஆண்டிலிருந்து 28வது இதழுடன் ழ என்ற பத்திரிகை நின்று விட்டது.  1978 ஆம் ஆண்டு மே மாதம் கவிதை மாத ஏடு என்ற பெயரில் ஆத்மாநாம் ஆசிரியர் பொறுப்பில் தொடங்கப்பட்ட இதழ்.  ஒவ்வொரு மாதமும் சரியாக வந்திருந்தால் 120 இதழ்கள் வரை வந்திருக்க வேண்டும்.  தமிழில் இதுமாதிரியான இதழ் தொடர்ந்து வராமல் போனது துரதிருஷ்டம் என்று கூட சொல்லலாம்.
ழ பத்திரிகை தொடர்ச்சியாக வராமல் போன தாமதத்தால் அதையே பார்த்து இன்னும் சில பத்திரிகைகள் உருவாகமல் இல்லை.  பிரம்மராஜனின் மீட்சி, ராஜகோபாலன் அவர்களின் மையம் என்ற பத்திரிகை, என்னுடைய விருட்சம் பத்திரிகை எல்லாம் ழ பத்திரிகையைப் பார்த்துதான் உருவாகி இருக்க வேண்டும். ஸ்வரம் என்ற பத்திரிகைக் கூட ழ மாதிரி இருக்கும்.
ழ பத்திரிகையைப் போல் எளிமையான பததிரிகையை நான் இதுவரை பார்த்ததில்லை.  கடைசி இதழான 28வது இதழ் வெளிவந்தபோது அது மாத இதழா காலாண்டு இதழா என்று குறிப்பிடப்பட வில்லை.  
ழ வில் பொதுவாக கவிதைகளும், மொழிபெயர்ப்புக் கவிதைகளும், கவிதைகளைக் குறித்து கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.  மொத்தம் 16 பக்கங்களுக்குள் எல்லாம் முடிந்து விடும்.  ஒரே பேப்பரில் எல்லாம் அடித்திருக்கும்.  தனியாக அதற்கென்று அட்டையெல்லாம் அடித்திருக்காது.  ழ பத்திரிகையை அதைச் சார்ந்த நண்பர்கள் அம்மணப் பத்திரிகை என்று குறிப்பிடுவார்கள்.  
எபபோதும் ழவின் இரண்டாவது பக்கத்தில் அதனுடைய தலையங்கம் ஒரு அரைப்பக்க அளவிற்கு எழுதியிருக்கும்.  அந்த அரைப் பக்கத்தில் அதை எழுதியிருக்கும் விதம் அற்புதமாக இருக்கும்.  ஆத்மாநாமின் தற்கொலைக்குப் பிறகு நாலைந்து இதழ்கள் ழ பத்திரிகை வந்து 28வது இதழுடன் நின்றுவிட்டது. சிலசமயம் தலையங்கம் கூட இருக்காது.  ஆத்மாநாமின் ஆசிரியப் பொறுப்பில் வந்த ழ முதல் இதழில் தலையங்கம் கூட கிடையாது.  
எப்போதும் என்னுள் தோன்றும் கேள்வி. இவ்வளவு எளிமையாகக் கொண்டு வந்த ழ இதழ் ஏன் தொடர முடியாமல் போய்விட்டது என்பதுதான்.  என்னதான் அச்சடிக்கிற முறை சிரமமாக இருந்தாலும் 16 பக்கம் என்பது அந்தக் காலத்திலும் எளிதாக அடித்துவிடலாம்.  பின் ஏன் நின்று விட்டது? 
ஒரு சிறு பத்திரிகை என்றால் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள்தான் கொண்டு வர வேண்டும் என்ற விதி இருக்கிறதா? ழ வந்தபோதே அதன் விற்பனையைக் குறித்து யாரும் பெரிதாக கவலைப்பட வில்லை.  ஏன்என்றால் அவர்களுக்கு அந்தப் பத்திரிகையை விற்கக் கூட தெரியாது.  க்ரியாவில் அந்தப் பத்திரிகையைக் கொடுத்து விட்டு, விற்றப் பணத்தைக் கூட வாங்க போக மாட்டார்கள்.  ஏன் சந்தாதாரர்களுக்கு சில நூறு பேர்களுக்கு மட்டும் இந்தப் பத்திரிகை போய்க் கொண்டிருக்கும்.
இப் பத்திரிகையை ஒருவர் எளிதாகப் படித்து விடாலம்.  அதில் வெளியான ஒவ்வொரு கவிதையும் வாசகர்கள் உற்சாகப்படுத்தத் தவறாது.  இன்று ஒரு சிறுபத்திரிகையைப் படிப்பதே என்பதே தொந்தரவான விஷயமாக இருக்கிறது. ழவைப் பொறுத்தவரை அது ஒருவரால் நடத்தப்பட்ட பத்திரிகை இல்லை. அதனால்தான் அது வரமுடியாமல் போய்விட்டதாக எனக்குத் தோன்றும். அதை ஒருவர் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால், இன்னும் அந்தப் பத்திரிகை வந்து கொண்டிருக்கும்.  16 பக்கங்களில் இந்தப் பத்திரிகையைக் கொண்டு வருவதில் பெரிய நேரம் ஒன்றும் ஆகியிருக்காது.  எளிதாகப் படைப்புகளும் கிடைத்திருக்கும்…ஏன் வரவில்லை? 
க நா சு சொல்வார் ஒரு சிறுபத்திரிகையை கொஞ்ச இதழ்கள் கொண்டு வந்துவிட்டு உடனே நிறுத்தி விட வேண்டும் என்று.  அவரும் சில பத்திரிகைகளை அப்படி கொண்டு வந்து விட்டு நிறுத்தி விட்டிருக்கிறார்.  அவர் சொல்லும் காரணம் தொடர்ந்து செயல்பட்டால் பத்திரிகை ஜலம் மாதிரி ஆகிவிடும் என்று.  என்னால் அதை உறுதியாக சொல்ல முடியவில்லை.  பத்திரிகையின் தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மக்கி விடும் என்பதை ஏற்க முடியவில்லை.  ழவைப் பொறுத்தவரை அப்படியெல்லாம் ஒன்றும் ஆகவில்லை.  அதன் கடைசி இதழான 28ல் வெளிவந்த தலையங்கத்தை உங்களுக்கு படிக்க கொடுக்கிறேன்.  இந்தத் தலையங்கம் 1988ல் வெளிவந்தது.  
üகடந்த முப்பது ஆண்டுகளாக இலக்கியச் சிற்றேடுகளால் வெளியிடப்பட்டு வளர்க்கப் பட்ட புதுக்கவிதை இன்று வர்த்தக ஏடுகளிகலும் இடம்பெற்று விட்டது.  புதுக்கவிதை வெளிவராத ஏடுகளே இன்று தமிழில் இல்லை என்று சொல்லலாம்.
ஆனால் வர்த்தக ஏடுகளில் வெளியாகும் புதுக்கவிதை பெயரளவில்தான் அந்தப் பெருமையைப் பெறுகிறதே  தவிர உண்மையில் புதுக்விதையாக அது இல்லை.  இன்று புதுக்கவிதை எழுதும் ஏராளமான கவிஞர்களுக்குப் புதுக் கவிதையின் வரலாறும் தெரிந்திருக்கவில்லை.  அது ஏன் வந்தது என்பதும் எவரெவர் அதன் தொடக்கக்கால ஆதர்சங்களோடு எழுதுகிறார்கள் என்பதும் தெரியாது.  வர்த்தக ஏடுகளும் வழக்கம்போல அசலான புதுக்கவிதைகளையும் புதுக்கவிஞர்களையும் புறக்கணித்து விட்டு தனக்குப் பயன்படும்படியான எழுத்துகளையும் கவிஞர்களையும் வெளியிட்டு அதைத் தவிர வேற நிகழ்ச்சிகள் இல்லை என்பது போன்ற மயக்கத்தை உண்டு பண்ணி வருகின்றன.  இந்தப் பணியில் தொலைக் காட்சியும் வானொலியும் பங்கு பெற்று வருகிறது.
எண்பதுகளில் நிகழ்ந்து வரும் இந்தச் சீரழிவு, இலக்கியச் சிற்றேடுகளின் புதுக் கவிதையை நல்ல வேளையாகப் பாதித்து விட்வில்லை.  வர்த்க ஏடுகளில் மோகமுறாது தொடர்ந்து சிற்úறேடுகளில் வெளியிடுவது கடினமான காரியமாக இருந்தபோதிலும் தொடர்ந்துசிற்றேடுகளிலேயே வெளியிட்டு வரும் கவிஞர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லக் கூடி வருகிறது.  முப்பது ஆண்டுகால இருப்பினால் புதுக் கவிதை புதிய சராசரிகளைத் தோற்றுவித்து புதிய சராசரிக் கவிதைகளும் வெளியீடுகளுக்கு வருகின்றன.  அவற்றைக்  கடந்து புதுமையானவற்றையும், ஆழமானவற்றையும் இனம் கண்டு வெளியிடுவது அவ்வளவு எளிதானதல்ல.
‘ழ’ எப்பொழுது வந்தாலும் தனது கருத்தில் புதுமையையும், அருமையையும் இருத்திக் கொண்டு வரும். ‘
இந்தத் தலையங்கம் வெளிவந்தே 28 ஆண்டுகள் ஓடி விட்டன,.இன்னும் இதில் கூறப்படுகிற விஷயங்கள் எல்லாம் உண்மைதான்.  கிட்டத்தட்ட 60 ஆண்டு கவிதைக்கான சரித்திரத்தையே ழ சொல்லி விட்டது போல் தோன்றுகிறது.