மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 4

அழகியசிங்கர் 

 4)    பூவொன்று

லாவண்யா சுந்தரராஜன் 

மழைத்துளியென
மஞ்சள் மலர்களை
உதிர்த்துக்கொண்டிருந்தது
அம்மரம்

நிழலுக்கென ஒதுங்கிய பேருந்து
அதில் சில மலர்களை
முன்கண்ணாடியில் ஏந்திச் சென்றது
கண்ணாடியில் வழுக்கிய பூக்கள்
சாலையில் விழுந்து நசுங்கின

வைப்பர் புறக்கணித்த பூக்கள்
ரோட்டோரம் சிதறின
பெண்டுலமாக ஆடும் வைப்பரில்
சிக்கிய பூக்கள்
நைந்து கிழிந்தன

பின்னும் வைப்பர்
கிட்டிய பூக்களை விடாது
அலைக்கழித்து
கசக்கிக்கொண்டிருக்கிறது

எதுவும் செய்யவியலாது
பூக்கள் சிதைவுறும் காட்சி
மனசுக்குள் குமைய
நிறுத்தம் வந்ததும் இறங்கி நடக்கிறேன்

நன்றி : இரவைப் பருகும் பறவை – கவிதைகள் – லாவண்யா சுந்தரராஜன் – விலை ரூ.70 – பக் : 80 – காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் – போன் : 04652 – 278525

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 3

அழகியசிங்கர் 

ராஜன் ஆத்தியப்பன் கவிதை 





   மிருக காட்சி சாலைக்கு
குழந்தை குட்டியோடு குடும்பமாய்
சென்றிருந்தோம்

சதுர வடிவிலான வானத்தில்
அலுப்புடன் தாவின பறவைகள்

பறவைகளை வளர்ப்பவர்கள்
இறுகிய முதுகுடையவர்கள் என்றானொருவன்

ஓவியத்தில்தான் சிங்கம் அழகு
சிறுமியொருத்தி

பெயரிட்டக்
கண்ணாடிப் பேழைகளில்
சீறித்தளர்ந்த பாம்புகள்
பாம்புகள் போலவேயிருந்தன

கல்லெறியாதீர்கள்
அறிவிப்புப் பலகை
கானக நதியொன்றை வெயிலில் தியானிக்கும்
முதலைகளை
கல்லெறிந்து உணர்விக்கலாமென
ஊமை மொழி சொன்னது

நன்றி : கருவிகளின் ஞாயிறு – கவிதைகள் – ராஜன் ஆத்தியப்பன் – 80 பக்கங்கள் – விலை ரூ.80 – படிகம் வெளியீடு, 4 – 184 தெற்குத்தெரு, மாடத்தட்டுவிளை. வில்லுக்குறி – செல் : 9840848681

ஒரு ஞாபகம்

அழகியசிங்கர்
ஒரு 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.  தமிழவன் – ஜி கே எழுதிய மர்மநாவல் என்ற ஒரு நாவல் எழுதி உள்ளார்.  அந்த நாவலின் விமர்சனக் கூட்டம் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி 2000 ஆம் ஆண்டில் நடந்தது.  நான்தான் ஏற்பாடு செய்தேன்.  அக் கூட்டம் பாரதியார் இல்லத்தில் திருவல்லிக்கேணியில் நடந்தது.  அன்று ஞாயிற்றுக்கிழமை.  காலை 11 மணி கூட்டம் ஆரம்பம் ஆயிற்று.  பொதுவாக நான் கூட்டத்தில் பேசுவதை காசெட் ரிக்கார்டரை வைத்துப் பதிவு செய்யும் வழக்கத்தில் உள்ளவன்.  அந்தக் கூட்டத்தையும் பதிவு செய்தேன்.  அக் கூட்டம் நேரடியாக மைக் மூலம் காசெட்டில் பதிவு செய்வதுபோல் செய்துள்ளேன்.  அதனால் வெளி சப்தம் காசெட்டில் ஏறவில்லை.
ரொம்ப தெளிவாக எல்லோரும் பேசியது அதில் பதிவாகி உள்ளது.  கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் ஞானக்கூத்தன்.  நான் திரும்பவும் அந்தக் காசெட்டை இன்று கேட்டபோது.  ஆச்சரியப்பட்டேன்.  என்ன ஆச்சரியம் என்றால் தலைமை தாங்கிய ஞானக்கூத்தன் பிரமாதமான முறையில் அக்கூட்டத்தை எடுத்து நடத்துகிறார்.
ஒவ்வொருவர் பேசி முடித்தவுடன் ஞானக்கூத்தனும் பேசுகிறார்.  அவருக்குத் தெரிந்த பல கருத்துக்களைத் தெரிவிக்கிறார்.  அக் கூட்டத்தில் பலர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.  அவர்களுடைய லிஸ்டை இங்கு தர விரும்புகிறேன்.
1. அ மங்கை 2. சா தேவதாஸ் 3. எஸ் சண்முகம் 4. அழகியசிங்கர் 5. பா வெங்கடேசன் கட்டுரையை செந்தூரம் ஜெகதீஷ் படிக்கிறார் 6. முரளி அரூபன் 7. பஞ்சு 8. பவா செல்லத்துரை.  இறுதியில் தமிழவன், நன்றி உரையை அந்தப்புத்தகத்தை வெளியிட்ட அலைகள் பதிப்பக அதிபர் சிவனும் உரையாற்றுகிறார். 
ஒவ்வொருவர் பேச்சும் கேட்க  கேட்க சுவாரசியமாக இருக்கிறது. உண்மையில் ஞானக்கூத்தனின் தலைமை உரையைக் கேட்டபோது, ஞானக்கூத்தனே நேரில் வந்து பேசுவதுபோல் தோன்றியது.  அவ்வளவு தெளிவாக ரிக்கார்ட் ஆகியிருக்கிறது.
அந் நாவலைப் பற்றி அ மங்கை அவர்களும், பவா செல்லத்துரையும் ஒன்றை குறிப்பிடுகிறார்கள்.  அந் நாவலில் பெண் பாத்திரமே வரவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.  இது ஏன் என்றும் கேள்வியை எழுப்புகிறார்கள்.  தலைமை பொறுப்பைக் கொண்ட ஞானக்கூத்தனும் தமிழவன்தான் ஏற்புரையில் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்கிறார். 
தமிழவன் பேசும்போது, ‘ஏன் பெண் பாத்திரம் வரவில்லை என்பது எனக்கே தெரியவில்லை’ என்கிறார்.
நான் இந்த காசெட்டில் பதிவானதை சோனி ரிக்கார்டில் பதிவிரக்கம் செய்து அதை அப்படியே சிடியில் பிரதி எடுத்துத் தரலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் யார் விருப்பப்பட்டு என்னிடம் கேட்பார்கள் என்பது பெரிய கேள்விதான்.  

ஒரு அறிவிப்பு

அழகியசிங்கர்


தமிழில் வித்தியாசமான முறையில் விமர்சன மரபை உருவாக்கியவர் தமிழவன். ரசனை முறையில் படைப்பிலக்கியத்தை அணுகியவர் க நா சு. சி சு செல்லப்பாவோ விமர்சனத்திற்கு ஒரு அலசல் முறையை உருவாக்கியவர். க நா சுவைத் தொடர்ந்து வெங்கட்சாமிநாதனும், பிரமிளும் விமர்சனத்தை அணுக, சி சு செல்லப்பாவைத் தொடர்ந்து தமிழவன் விஞ்ஞானப் பூர்வமான விமர்சனத்தை முன் வைத்தார். புதியதாக உருவான பல இஸம்களை தமிழிலும் கொண்டு வந்தார். மற்ற மொழிகளில் தமிழவன் மாதிரி ஒரு படைப்பாளி இருந்திருந்தால் பெரிதும் கொண்டாடப்பட்டிருப்பார். அவரைத் தொடர்ந்து பலர் அவர் பாதையில் விமர்சனத்தை அணுகி உள்ளனர். இன்று வரை அந்த மாதிரியான விமர்சனத்தை எதிர்கொள்வது சற்று சிரமமானது.

விமர்சனம் மட்டுமல்லாமல் படைப்பிலக்கியத்திலும் தமிழவன் பங்கு முக்கியமானது. நாவல்கள், சிறுகதைகள் என்று பலவற்றை புதிய முறை எழுத்தில் முயற்சி செய்துள்ளார. ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற புதுவகை நாவல் ஒன்றை அவர் 1985 ஆம் ஆண்டில் முதன் முறையாக உருவாக்கி உள்ளார்.

தற்போது வந்துள்ள சிறுகதைத் தொகுப்பு நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் என்ற தொகுப்பு, முன்பு வெளிவந்த அவருடைய கதை முறையை முற்றாகத் துறந்து வெளிவந்திருக்கிறது.

வரும் 21ஆம் தேதி ஞாயிறு தமிழவன் குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தை சிற்றேடும், நவீன விருட்சமும் ஏற்படுத்துகிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன். எல்லோரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


சில தகவல்கள்

அழகியசிங்கர்


நா முத்துக்குமார் மரணம் அடைந்த  செய்தி மதியம்தான் எனக்குத் தெரிந்தது.  சினிமா பாடலாசிரியராக பிரபலமடைந்தாலும் நல்ல நண்பர்.  காஞ்சிபுரத்தில் உள்ள வெ நாராயணன் இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்கு போனபோது முத்துக்குமார் அப்பாவை அறிமுகப்படுத்தினார்கள்.   அவர் வீட்டில் ஒரு லைப்பரரி வைத்திருப்பதாக சொல்வார்கள்.
அவருடைய புதல்வர். என்று நா முத்துக்குமார் சென்னையில் ஒரு முறை அறிமுகப்படுத்திக்கொண்டார்.  தான் கவிதைகள் எழுதுவதாகவும் அதையெல்லாம் புத்தகமாகக் கொண்டு வர என் அறிவுரையைக் கேட்டார். அப்போது அவர் சினிமாப் பாடலாசிரியராக பிரபலமாகவில்லை.  கவிதைப் புத்தகம் கொண்டு வந்தாலும் அதிகப் பிரதிகள் அச்சடிக்காதீர்கள் என்று அறிவுரை கூறினேன்.  
அவருடைய திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பியிருந்தார். சென்றிருந்தேன்.  குறுகிய காலத்தில் பிரபலமானவர்.  அவரை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  
                                                                                                                                         *******
ஞானக்கூத்தனின் அஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது.  கிட்டத்தட்ட 100 பேர்கள் கலந்து கொண்டார்கள்.  ஒரு மூத்த எழுத்தாளர் பேசும்போது அவரைவிட மூத்த படைப்பாளியை அவமரியாதையாகப் பேசினார்.  இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  எப்போதோ ஏதோ ஒரு நிகழ்வு நடந்து விடுகிறது. அதைக் குறித்து இப்போது கோபப் படுவதோ வருந்துவதோ தவிர்த்திருக்கலாம்.  மேலும் அஞ்சலி கூட்டம் என்று சொல்வதை விட ஞானக்கூத்தனை ஞாபகப்படுத்தும் கூட்டம் என்று மாற்றி அமைத்திருக்கலாம். அஞ்சலி கூட்டம் என்று சொல்லும்போது தேவையில்லாத சோகம் சூழ்ந்து விடுகிறது. ஞானக்கூத்தனே அதை விரும்பியிருக்க மாட்டார்.
                                                                                                                                          ********
நேற்று காலை ஐந்தரை மணிக்கு பெஸன்ட் நகர் பீச்சில் உள்ள கடற்கரைக்கு ஒரு கதை வாசிக்கும் கூட்டத்திற்குச் சென்றேன்.  எல்லோரும் இளைஞர்கள். 30 பேர்கள் வநதிருப்பார்கள்.   பெரும்பாலோர் ஆங்கிலத்தில் கதை வாசித்தார்கள்.  எப்படி ஒரு கதையை திரும்பவும் எழுத வேண்டுமென்று அதை நடத்துபவர் சொன்னதாக சொன்னார்.  அதெல்லாம் சரி.  ஆனால் சொன்னவருக்கு இதில் எந்த அளவிற்கு திறமை இருக்கும் என்பதும் சந்தேகம்தான்.  அவர்கள் வாசித்த கதைகளை உள்வாங்கிக் கொள்வதில் சிரமமாக இருந்தது.  

ழ – விருட்சம் இணைந்து நடத்தும் அஞ்சலி கூட்டம்

சமீபத்தில் காலமான கவிஞர் ஞானக்கூத்தன் நினைவைப் போற்றி அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது.

தலைவர் : எழுத்தாளர் அசோகமித்திரன்

கலந்து கொள்பவர்கள் : இந்திரா பார்த்தசாரதி, கி அ சச்சிதானந்தன், வைதீஸ்வரன்,சா கந்தசாமி, வி அரசு, ம ராஜேந்திரன், வெ ஸ்ரீராம். வெளி ரங்கராஜன், பாரவி, திருப்பூர் கிருஷ்ணன், ரவி சுப்பிரமணியன், ராஜ் கண்ணன், க்ருஷாங்கினி, பெருந்தேவி, ஆர் வெங்கடேஷ் இன்னும் பலரும் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

இடம் : விழாவேந்தன் என் கே டி முத்து ஹால்
4/எ டி பி கோயில் இரண்டாவது சந்து
(மெட்ரோ வாட்டர் அலுவலகம் எதிரில்)
ஐஸ் ஹவுஸ் பஸ் நிலையம் அருகில்
திருவல்லிக்கேணி, சென்னை 5

தேதி 13.08.2016 (சனிக்கிழமை)

நேரம் மாலை 5.30 மணிக்கு

அனைவரும் வருக,

அன்புடன்
(ழ ராஜகோபாலன் – அழகியசிங்கர்)

இன்னும் யாராவது பேச விருப்பப்பட்டால், கூட்டத்தில் கலந்துகொண்டு பெயர்களைக் கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இன்று சர்வதேச பூனைகள் தினம்

சிங்கள மொழிக் கவிதை
பூனையாகிய
நான்…


உங்களைப்
போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும்
உங்களைப்
போல என்னால் சிரிக்க இயலாது
உங்களைப்
போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும்
உங்களைப்
போல என்னால் அழ இயலாது
உங்களிடம்
கூறவென என்னிடம் நிறைய இருக்கின்றன எனினும்
உங்களிடம்
என்னால் அவற்றைக் கூறி விட இயலவில்லை
உங்களைப்
போலவே எனக்கும் வலிக்கும்
உங்களைப்
போலவே எனக்கும் பசிக்கும்
உங்களைப்
போலவே எனக்கும் துன்பங்கள், தொந்தரவுகள் நேருமெனினும்
உங்களைப்
போல என்னால் அவற்றுக்கெதிராக போராட இயலவில்லை
உங்களைப்
போல என்னால் உரிமைகளுக்காகப் போரிட இயலவில்லையெனினும்
உங்களைப்
போலவே நானும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டேயிருக்கிறேன்
உங்களைப்
போல என்னால் அவற்றை வர்ணித்துக் கூற இயலவில்லையாதலால்
உங்களை
விடவும் நான் நேர்மையாக இருக்கிறேன்

தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
தமிழில்
– எம்.ரிஷான் ஷெரீப்

கவிஞர் பற்றிய
குறிப்பு
தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி
சமூகம்
சார்ந்த விடயங்களை மிகுந்த அவதானிப்புடன் எழுதி வரும் பெண் கவிஞர். ஒரு ஆசிரியையாகக்
கடமையாற்றி வரும் இவர், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்,
இரண்டு சிறுவர் இலக்கியப் பிரதிகள், இரண்டு சமூகவியல் கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாவல்
என இதுவரையில் பத்து தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.

சில தகவல்கள்

அழகியசிங்கர்


கௌரி கிருபானந்தன் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தெலுங்கிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழி பெயர்ப்பு செய்யும் வித்தைக் காரர் அவர்.  முதன் முதலாக அவர்கள் அவர் கணவருடன் என் வீட்டிற்கு ஒரு முறை வந்திருந்தார்.  ஐராவதம் அவர்களின் மாறுதல் தொகுப்பிலிருந்த கதை ஒன்றை தெலுங்கிற்கு மொழி பெயர்க்க அனுமதி பெற. “ஐராவதம் கேள்விப்பட்டால் சந்தோஷப்படுவார்.  நீங்கள் மொழி பெயருங்கள்,” என்றேன்.  அந்தக் கதையை மொழிபெயர்த்த கௌரி கிருபானந்தன் அதை ஒரு தெலுங்கு பத்திரிகையில் பிரசுரமாக வழி வகுத்தார். 
ஒரு நாள் அவர்கள் ஐராவதத்தைச் சந்திக்க ஏற்பாடும் செய்தேன்.  ஆனால் அன்று அவரால் அவரைச் சந்திக்க முடியவில்லை.  ஐராவதமும் அவரைச் சந்திக்காமலயே இறந்து விட்டார். 
ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குடும்பம் ஒத்துழைத்தால்தான் எதுவும் சிறக்கும்.  கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு அவர் கணவர் கிருபானந்தன் முழு ஒத்துழைப்பு.  கிட்டத்தட்ட 100 நாவல்களுக்கும் மேலாக தமிழில் புத்தகங்களை தெலுங்கிலிருந்து கொண்டு வந்துள்ளார்.  ஆனால் தமிழிலிருந்து தெலுங்கில் கொண்டு வருவது அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார்.  தமிழில் உள்ள மாதிரி பதிப்பாளர்கள் தெலுங்கில் இல்லை என்கிறார்.
மீட்சி என்ற ஓல்காவின் தெலுங்கு சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்தற்காக கௌரி கிருபானந்தன் சாகித்திய அக்காதெமியின் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கான பரிசை வென்றுள்ளார்.  தெலுங்கிலும் அப் புத்தகம் ஓல்காவிற்கு தெலுங்கு மொழிக்கான சாகித்திய அக்காதெமி பரிசை அள்ளித் தந்திருக்கிறது. இப்படி இரண்டு பரிசுகளைத் தட்டித் தந்திருக்கும் புத்தகம் மீட்சியாகத்தான் இருக்கும்.
112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை  பாரதி புத்தகாலயம் பிரசுரம் செய்துள்ளது.  இப் புத்தகம் விலை ரூ. 70 தான்.  இவருடைய இன்னொரு முக்கியமான புத்தகம் கொண்டபல்லி கோடேஸ்கரம்மா எழுதிய ஆளற்ற பாலம் என்ற புத்தகம்.  காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப் புத்தகம் பற்றி எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எல்லோரிடமும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். நானும் இப்புத்தகத்தினல் 26 பக்கங்கள் வரை படிக்கத் தொடங்கி விட்டேன்.  
    
சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற ஓல்கா என்கிற மீட்சி என்ற கதைத் தொகுப்பு இராமயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகள்.  எப்படி வித்தியாசமாக ராமாயணக் கதைகளை யோசிக்கலாம் என்பதற்கு இப் புத்தகம் ஒரு உதாரணம். 
               கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு விருட்சம் சார்பில் என் வாழ்த்து.
 
    

மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர் 


சில கவிதைகளைப் படிக்கும்போது, படிப்பவர்க்கு ஒரு பங்காகவும், கவிதை எழுதுபவருக்கு இரண்டு பங்காகவும் பலன் தரும. கவிதை எழுதுபவர்கள் படித்து ரசிப்பதோடல்லாமல், இப்படியெல்லாம் கவிதை எழுதலாம் போலிருக்கிறது என்று முயற்சியும் செய்யலாம்.  
ஓசிப் மெண்டல்ஷ்டாம் கவிதைகள் அப்படிப்பட்டதுதான்,  இதை மொழி பெயர்த்தவர் பிரம்மராஜன். இந்தப் புத்தகம் முதல் முறையாக 2001லும் இரண்டாவது முறையாக 2013லும் வெளிவந்துள்ளது.  இப் புத்தகத்தின் தற்போதைய விலை ரூ.20தான்.  ஆனால் இதன் மூலம் ஏராளமான வரலாற்று விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். 32 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை எளிதில் படித்து முடித்துவிடலாம்.  
இருபதாம்ம நூற்றாண்டின் தலைசிறந்த ரஷ்யக் கவிஞரான ஓசிப் மெண்டல்ஷ்டாம் பற்றிய முதல் அறிமுக நூல் இது.  மெண்டல்ஷ்டாமின் 22 கவிதைகளைக் கொண்ட நூல் இது. அக்மேயிசம் என்ற கவிதை இயக்கத்தைப் பற்றி இப் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அக்மேயிஸ்டுகள் “சொல்” ஒரு குறியீடாக்கப்படுவதை விரும்பவில்லை. ஒரு சொல் அது இருக்கிறபடியே, அதன் வாழ்நிலையிலேயே அப்படியே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவரது கவிதைக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்தி கட்டுரை எழுதி உள்ளார்.  உங்கள் வாசிப்புக்கு ஓசிப் மெண்டல்ஷ்டாமின் கவிதை ஒன்றை இங்கு அளிக்கிறேன்.
– என்ன தெரு இது?
– மெண்டல்ஷ்டாம் தெரு
– என்ன நாசமாய்ப் போன பெயர் அது?
எந்தப் பக்கம் திரும்பினாலும் கூட
இது கோணல்மாணலாகவே வருகிறது
– அவரும் கூட நேரான ஆள் இல்லை துல்லியமான வகையில்.
அவரது அறநெறிகள் லில்லி மலர ஒத்திருக்கவில்லை
மேலும் அக் காரணத்தினால்தான் இத்நத் தெரவுக்கு (மாறாக,
நேர்மையாகச் சொல்வதானால், இந்த சாக்கடைக்கு)
மெண்டல்ஷ்டாம் என்று பெயர் தரப்பட்டது.