மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர் 


சில கவிதைகளைப் படிக்கும்போது, படிப்பவர்க்கு ஒரு பங்காகவும், கவிதை எழுதுபவருக்கு இரண்டு பங்காகவும் பலன் தரும. கவிதை எழுதுபவர்கள் படித்து ரசிப்பதோடல்லாமல், இப்படியெல்லாம் கவிதை எழுதலாம் போலிருக்கிறது என்று முயற்சியும் செய்யலாம்.  
ஓசிப் மெண்டல்ஷ்டாம் கவிதைகள் அப்படிப்பட்டதுதான்,  இதை மொழி பெயர்த்தவர் பிரம்மராஜன். இந்தப் புத்தகம் முதல் முறையாக 2001லும் இரண்டாவது முறையாக 2013லும் வெளிவந்துள்ளது.  இப் புத்தகத்தின் தற்போதைய விலை ரூ.20தான்.  ஆனால் இதன் மூலம் ஏராளமான வரலாற்று விபரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். 32 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை எளிதில் படித்து முடித்துவிடலாம்.  
இருபதாம்ம நூற்றாண்டின் தலைசிறந்த ரஷ்யக் கவிஞரான ஓசிப் மெண்டல்ஷ்டாம் பற்றிய முதல் அறிமுக நூல் இது.  மெண்டல்ஷ்டாமின் 22 கவிதைகளைக் கொண்ட நூல் இது. அக்மேயிசம் என்ற கவிதை இயக்கத்தைப் பற்றி இப் புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அக்மேயிஸ்டுகள் “சொல்” ஒரு குறியீடாக்கப்படுவதை விரும்பவில்லை. ஒரு சொல் அது இருக்கிறபடியே, அதன் வாழ்நிலையிலேயே அப்படியே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவரது கவிதைக் கோட்பாடுகளைத் தெளிவு படுத்தி கட்டுரை எழுதி உள்ளார்.  உங்கள் வாசிப்புக்கு ஓசிப் மெண்டல்ஷ்டாமின் கவிதை ஒன்றை இங்கு அளிக்கிறேன்.
– என்ன தெரு இது?
– மெண்டல்ஷ்டாம் தெரு
– என்ன நாசமாய்ப் போன பெயர் அது?
எந்தப் பக்கம் திரும்பினாலும் கூட
இது கோணல்மாணலாகவே வருகிறது
– அவரும் கூட நேரான ஆள் இல்லை துல்லியமான வகையில்.
அவரது அறநெறிகள் லில்லி மலர ஒத்திருக்கவில்லை
மேலும் அக் காரணத்தினால்தான் இத்நத் தெரவுக்கு (மாறாக,
நேர்மையாகச் சொல்வதானால், இந்த சாக்கடைக்கு)
மெண்டல்ஷ்டாம் என்று பெயர் தரப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *