சில தகவல்கள்

அழகியசிங்கர்


கௌரி கிருபானந்தன் என்ற பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தெலுங்கிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழி பெயர்ப்பு செய்யும் வித்தைக் காரர் அவர்.  முதன் முதலாக அவர்கள் அவர் கணவருடன் என் வீட்டிற்கு ஒரு முறை வந்திருந்தார்.  ஐராவதம் அவர்களின் மாறுதல் தொகுப்பிலிருந்த கதை ஒன்றை தெலுங்கிற்கு மொழி பெயர்க்க அனுமதி பெற. “ஐராவதம் கேள்விப்பட்டால் சந்தோஷப்படுவார்.  நீங்கள் மொழி பெயருங்கள்,” என்றேன்.  அந்தக் கதையை மொழிபெயர்த்த கௌரி கிருபானந்தன் அதை ஒரு தெலுங்கு பத்திரிகையில் பிரசுரமாக வழி வகுத்தார். 
ஒரு நாள் அவர்கள் ஐராவதத்தைச் சந்திக்க ஏற்பாடும் செய்தேன்.  ஆனால் அன்று அவரால் அவரைச் சந்திக்க முடியவில்லை.  ஐராவதமும் அவரைச் சந்திக்காமலயே இறந்து விட்டார். 
ஒரு ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குடும்பம் ஒத்துழைத்தால்தான் எதுவும் சிறக்கும்.  கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு அவர் கணவர் கிருபானந்தன் முழு ஒத்துழைப்பு.  கிட்டத்தட்ட 100 நாவல்களுக்கும் மேலாக தமிழில் புத்தகங்களை தெலுங்கிலிருந்து கொண்டு வந்துள்ளார்.  ஆனால் தமிழிலிருந்து தெலுங்கில் கொண்டு வருவது அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார்.  தமிழில் உள்ள மாதிரி பதிப்பாளர்கள் தெலுங்கில் இல்லை என்கிறார்.
மீட்சி என்ற ஓல்காவின் தெலுங்கு சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்தற்காக கௌரி கிருபானந்தன் சாகித்திய அக்காதெமியின் தெலுங்கு மொழிபெயர்ப்புக்கான பரிசை வென்றுள்ளார்.  தெலுங்கிலும் அப் புத்தகம் ஓல்காவிற்கு தெலுங்கு மொழிக்கான சாகித்திய அக்காதெமி பரிசை அள்ளித் தந்திருக்கிறது. இப்படி இரண்டு பரிசுகளைத் தட்டித் தந்திருக்கும் புத்தகம் மீட்சியாகத்தான் இருக்கும்.
112 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தை  பாரதி புத்தகாலயம் பிரசுரம் செய்துள்ளது.  இப் புத்தகம் விலை ரூ. 70 தான்.  இவருடைய இன்னொரு முக்கியமான புத்தகம் கொண்டபல்லி கோடேஸ்கரம்மா எழுதிய ஆளற்ற பாலம் என்ற புத்தகம்.  காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இப் புத்தகம் பற்றி எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எல்லோரிடமும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். நானும் இப்புத்தகத்தினல் 26 பக்கங்கள் வரை படிக்கத் தொடங்கி விட்டேன்.  
    
சாகித்திய அக்காதெமி பரிசுப் பெற்ற ஓல்கா என்கிற மீட்சி என்ற கதைத் தொகுப்பு இராமயணத்தை அடிப்படையாகக் கொண்ட கதைகள்.  எப்படி வித்தியாசமாக ராமாயணக் கதைகளை யோசிக்கலாம் என்பதற்கு இப் புத்தகம் ஒரு உதாரணம். 
               கௌரி கிருபானந்தன் அவர்களுக்கு விருட்சம் சார்பில் என் வாழ்த்து.
 
    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *