மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 45

அழகியசிங்கர்  

உனக்காக என் அன்பே

ழாக் ப்ரெவெர் 

தமிழில்: வெ ஸ்ரீராம்

பறவைகள் சந்தைக்குப் போனேன்
பறவைகள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

மலர்கள் சந்தைக்குப் போனேன்
மலர்கள் வாங்கினேன்
உனக்காக
என் அன்பே

இரும்புச் சாமான்கள் சந்தைக்குப் போனேன்
சங்கிலிகள் வாங்கினேன்
கனமான சங்கிலிகள்
உனக்காக
என் அன்பே

பிறகு அடிமைகள் சந்தைக்குப் போனேன்
உன்னைத் தேடினேன்
ஆனால் உன்னைக் காணவில்லை
என் அன்பே.

நன்றி : சொற்கள் – ழாக் ப்ரெவெர் – தமிழில் வெ ஸ்ரீராம் – வெளியீடு : க்ரியா – அலியான்ஸ் ஃபிரான்சேஸ், – முதல் பதிப்பு : 2000 – விற்பனைக்கு இந்தப் புத்தகம் இல்லை.


மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 44

அழகியசிங்கர்  

 மறு பரிசீலனை

தபசி


கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.

அதிகமகாக் குடித்தால்
மறுநாள் காலை
தலையை வலிக்கிறது.

நண்பர்களோடு குடித்தால்
காசு செலவாகிறது

தனியாகக் குடித்தால்
பழக்கமாகிவிடும் என்கிறார்கள்

காதலிக்கத் தொடங்கும்போது..
கல்யாணம் கூடி வரும்போது..
பிறந்தநாள் இரவன்று..
டிரான்ஸ்ஃபர் ஆகும்போது…

எத்தனை வாய்ப்புகள்
குடிப்பதற்கு.

கள்ளும் சாராயமும்ü
செரிமானத்தைக் குறைக்குமாம்.

பீர் குடித்தால்
தொப்பை விழுமாம்.

ஜின்னுடன்
இளநீர் கலக்க வேண்டும்
என்கிறார்கள்

பிராந்தி, விஸ்கிக்கு
கோலா, பெப்ஸிக்குப் பதில்
தண்ணீர்தான் உசிதமாம்.

குடிக்கும்போது
நொறுக்குத் தீனி வேண்டாம்
என்கிறார்கள்
முறுக்கு, காராபூந்தி, பகோடா இத்யாதி..

வெங்காயம், தக்காளி, வெள்ளரிü
குடலுக்கு நல்லதாம்

எச்சரிக்கை உணர்வு
எல்லாவற்றிலும் அவசியம்தான்

எங்கு குடிக்க வேண்டும்
எப்படிக் குடிக்க வேண்டும்
யாருடன் குடிக்க வேண்டும்
என்றெல்லாம்
தீவிரமாக ஆராயும்
மனதிடம்
ஏன் குடிக்க வேண்டும்
என்று கேட்டால்
ஏதோ
மழுப்பலான விடை சொல்லித்
தப்பிக்கப் பார்க்கிறது

நன்றி : இன்னும் இந்த வாழ்வு – தபசி – கவிதைகள் – யாழ் வெளியீடு, திருக்கோவிலூர் 605 757 – பக்கங்கள் : 76 – விலை : ரூ40 – வெளியான ஆண்டு : ஆகஸ்டு 2000

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 43


அழகியசிங்கர்  

 தீர்வு

சி மணி


என்ன செய்வ திந்தக் கையை
என்றேன்.  என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி.  கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங் கல்.தாங் காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன்.  கையைக் காலாக் கென்றான்

நன்றி : இதுவரை – சி. மணி – கவிதைகள் – வெளியீடு : க்ரியா –
முதல் பதிப்பு : அக்டோபர் 1996 – விலை : ரூ.100

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 42



அழகியசிங்கர்

 என்ன தவம் செய்தேன்!

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)



கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்….
இன்னும் பல துலக்கியவறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
அற்புதத்திலும் அற்புதமாய்
ஊருக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் நிலவு.
சின்னஞ்சிறு  செவ்வகத்திறப்புக்கு  வெளியேயிருந்து
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது!
எத்தனையோ காலமாய்
நான் ஏறெடுத்துப் பார்க்கவும் மறந்துபோயிருந்தது
புன்னகையில் கன்னங்குழிய
மின்னும் கண்களில் கனிந்துவழியும் அன்போடு
என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம்
இன்னும் எத்தனையெத்தனை பேருக்குத்
தண்ணொளியால்
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறதோ….!
வெண்ணிலவே வெண்ணிலவே
உன் மௌனப் பண் கேட்டு என்னிரு விழிகளில்
தளும்பும் கண்ணீர்
சொல்லிடங்கா சுகம், சோகம் எல்லாவற்றிற்கும்.

நன்றி : இப்போது – கவிதைகள் – ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) – அனாமிகா ஆல்பாபெட்ஸ் – பக்கம் : 110 – விலை : ரூ.90 – வேறு விபரம் இல்லை.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 41


அழகியசிங்கர்  

 உனக்காக இவ்வுலகம்

மா தக்ஷிணாமூர்த்தி


பெண் வேண்டும்.
பெண்ணுக்குப் பண்ணிசைக்கப்
பொன் வேண்டும்.
பொன்னுக்கு மண் வேண்டும்.
மண்ணுக்கு விதை வேண்டும்.
விதை வளர நீர் வேண்டும்.
செழுமை மிக்க முலை வேண்டும்.
தேர் போன்ற அல்குல் வேண்டும்
தேரைச் செலுத்திடக் குதிரை வேண்டும்.
தேரில் புகுந்திட நான்முகன் வேண்டும்.
பாற்கடல் வேண்டும்.
தாமரை வேண்டும்.
சூர்ப்பணகை வேண்டும்.
மாற்றான் மனைவி வேண்டும்.
ஆற்றாத துயர்க்கடல் நீந்திப் பின்
மீளாத துயில் வேண்டும்.
பெண்ணே, எனக்காக நீ.
பின் உனக்காக இவ்வுலகம்.

நன்றி : திவ்யதர்சனம் – மா தக்ஷிணாமூர்த்தி – கவிதைகள் – விற்பனை : ஜெயகுமாரி ஸ்டோர்ஸ், கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629 001 – விலை : ரூ.7 – முதல் பதிப்பு : பிப்ரவரி 1976

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 40





அழகியசிங்கர்

 உறவு

பசப்பல் கே ராஜகோபால்


நட்டநடுக் கனவினிலே
நான் விழித்து நோக்கினால்
தொட்டுவிட்ட கையெங்கோ,
தொடுவித்த உளமெங்கோ?
பட்டப் பகலென்றால்
பற்றிய கை விடுவேனோ?
முட்ட முழு மோனத்தில்
மூழ்காமல் நிற்பேனோ?
தொட்டெழுப்பித் துடிக்க விட்டுத்
தூரநின்று சிரித்திருந்தால்
தொடுவித்த உறவதுதான்
தொடராமற் போய்விடுமோ?
எத்தனை நாளானாலும்,
எத்துயரம் பட்டாலும்,
இப்படியே காத்திருப்பேன்
ஆற்றலென்று உனக்கிருந்தால்,
ஆலவிதை பழுக்காதோ?
பார்வையென்று உனக்கிருந்தால்
பழுத்த விதை தெரியாதோ?

நன்றி : பசப்பல் கவிதைகள் – கே ராஜகோபால் – எழுத்து பிரசுரம் – முதல் பதிப்பு : 1974 – பதிப்பாளர் : எழுத்து பிரசுரம், 19-எ பிள்ளையார் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5 – விலை : ரூ.3.50

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 39

அழகியசிங்கர்  

வாழ்த்துப்பா

ப்ரியம்

ஆடம்பரமில்லை. தோற்றத்தில் ஆணவமில்லை. உலகில்
சைக்கிளைப் போல் ஓர் எளிதான வாகனம் எதுவுமில்லை.
மிதித்தால் உடல் நலத்திற்கும் கேடில்லை.  விழுந்தால் பெரிய
விபத்தேற்படுவதில்லை.  சுகாதாரத்திற்கு தீங்கில்லை.
சுற்றுப்புறச் சுழலுக்கும் கேடில்லை.  சைக்கிள் பழகாதவர்
இன்று எவருமில்லை.  சைக்கிள்களால் புவிக்கு எந்நாளும்
தொந்தரவில்லை.  வீட்டின் குஞ்ஞுட்டிகள் மிதித்துப் பழகும்போது
பார்த்து இரசிக்காத கண்களும் கண்களில்லை.

நகரசாலைகளில் சைக்கிள் செல்ல தனிவழியுண்டு.  மேற்கில்
சிலவிடம் சைக்கிளைத் தவிர, மற்ற வாகனங்கள் செல்ல
தடையுண்டு.  சைக்கிள் ஒரு தத்துவமாம்.  பூக்கள்போல
அதுவும் ஒன்றாம்.  எளிமையான வாழ்விற்கு எடுத்துக்காட்டாம்.

சைக்கிள்களால் வாழ்பவர் புவியில் பலகோடி.  சைக்கிளைப்போல்
வாழ்பவர் புவியில் சில கோடி.

சைக்கிளை நீயும் வாழ்த்துப்பா

நன்றி : அலைகளின் மீதொரு நிழல் – கவிதைகள் – ப்ரியம் -எழில் வெளியீடு, 21 மாதவரம் நெடுஞ்சாலை வடக்கு, பெரம்பூர், 
சென்னை 11 – முதல் பதிப்பு : டிசம்பர் 2001 – விலை : ரூ.35



மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 38



அழகியசிங்கர்  

பொய்க்கடை

மாலதி



தெரிந்தவர் யாரும் சுற்றும் முற்றும் கண்ணில் படாத
சடக்கென்ற கணத்தில் நுழைந்தேன்.
பொய் விற்கும் கடைக்குள்.

நெடு நாளைய சேமிப்பு நிறைய கனவு
பொய்களின் அழகை வடிவை
பைக்குள் அமுக்கிவிட.

ஒவ்வொன்றாய் உபயோகித்து என்
உலகை அலங்கரிக்க
தேடினேன்.

இது வரியிட்ட பொய்
கட்டமிட்டது,
ஓரம் மட்டும் பொய்.
அரை வெளுப்பில் பொய்
பாதிப்பொய் அரைக்கால் பொய்

இது மதப்பொய், இது நம்பிக்கைப்பொய்
மதிமில்லாத மதர்ப்பின் பொய்
இருக்குமிடம் தெரியாத,
லேசாய் இது இலக்கியப் பொய்.

உண்மையிடத்துப் பொய். வாதத்துக்காய்
பொய்.  உயிர்காக்கும் நியாயத்துக்காய்
பொய்.  இப்படி நிறைய
முழுப் பொய் கிடைக்குமா? கேட்டேன்.
என்னை ஏற இறங்க பார்த்தார்
கடைக்காரர்.

கனப் பொய் முடக்கி வைத்திருக்கிறோம்
கனவான்களுக்காக.
பாதுகாக்க ஒன்றுமில்லாத
பைத்தியங்களுக்கு நாங்கள்
பொய் விற்பதில்லை என்றார்.
அப்போது தான் உணர்ந்தேன்
என் ஆடையின்மையை

நன்றி : மரமல்லிகைகள் – கவிதைகள் – மாலதி – வெளிவந்த ஆண்டு : 2003 – சாந்தினி பதிப்பகம், ஆர்என் 6 பட்டினப்பாக்கம் குடடியிருப்பு, சென்னை 600 028 – புத்தகத்தில் விலையே குறிப்பிடப்படவில்லை – தொலைபேசி : 044 24941111

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 37

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 37

அழகியசிங்கர்  

 மரிக்கும் உயிர்க்கும் ஓசைகள்

கோ ராஜாராம்


“ஹலோ”
வழக்கம் போல்
கையுயர்த்தி நானிரைந்தேன்
தூரத் தெரிந்த நண்பனிடம்.
அருகிருந்த ஃபாக்டரியின்
மெஷினிரைச்சல் ஓசைகளில்
என் ஓசை கரைந்தது.

என்
உயர்த்திய கைக்குப் பதில்
அவனசைக்கும் கையும்
வாயசைப்பும் தெரிகிறது.
வழக்கம் போல்.

மெஷின்களில் ஓசைகளில்,
பழக்கமில்லா உயிர்ப்பு.

நன்றி : அலுமினியப் பறவைகள் – கவிதைகள் – கோ ராஜாராம் – வெளியீடு : அன்னம் பிரைவேட் லிமிடெட், சிவகங்கை 623 560 – முதல் பதிப்பு : டிசம்பர் 1982 – விலை ரூ.4 – அட்டை : ஞான. இராசசேகரன்

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 36

அழகியசிங்கர்  

வீடு                              

இளம்பிறை




சன்னலுக்கு வெளியே                        
சாய்ந்திருப்பது யார்?
நள்ளிரவு விழிப்பில்
பயந்தபின்பு
நினைவிற்கு வரும்
மாடிப்படிகள்.

கைக்கெட்டா தூரத்தில்
பழுத்து உதிரும்
பப்பாளிப் பழங்களைப்
பார்த்து நின்றதில்
இன்றைக்கு…..

பொங்கி வழிந்துவிட்டது பால்!
“சன்னல் கம்பிகளில்
சிலந்தி வலையைக்கூட
தட்டிவிடாமல….
என்னதான் குடித்தனம்
நடத்துகிறாயோ…..?”
திட்டிப் போகிறாள் சுமதி.
சன்னலை
மெள்ள மூடி
திறந்து கொண்டிருப்பதையும்
காற்று,
பலமாக வீசும்போது
பதறிக்கொண்டிருப்பதையும் சொன்னால்
“பைத்தியம்” என்பாள்.

நன்றி : முதல் மனுசி – கவிதைகள் – இளம்பிறை – ஸ்நேகா – 348 டி டி கே சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 – விலை : 75