மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 38அழகியசிங்கர்  

பொய்க்கடை

மாலதிதெரிந்தவர் யாரும் சுற்றும் முற்றும் கண்ணில் படாத
சடக்கென்ற கணத்தில் நுழைந்தேன்.
பொய் விற்கும் கடைக்குள்.

நெடு நாளைய சேமிப்பு நிறைய கனவு
பொய்களின் அழகை வடிவை
பைக்குள் அமுக்கிவிட.

ஒவ்வொன்றாய் உபயோகித்து என்
உலகை அலங்கரிக்க
தேடினேன்.

இது வரியிட்ட பொய்
கட்டமிட்டது,
ஓரம் மட்டும் பொய்.
அரை வெளுப்பில் பொய்
பாதிப்பொய் அரைக்கால் பொய்

இது மதப்பொய், இது நம்பிக்கைப்பொய்
மதிமில்லாத மதர்ப்பின் பொய்
இருக்குமிடம் தெரியாத,
லேசாய் இது இலக்கியப் பொய்.

உண்மையிடத்துப் பொய். வாதத்துக்காய்
பொய்.  உயிர்காக்கும் நியாயத்துக்காய்
பொய்.  இப்படி நிறைய
முழுப் பொய் கிடைக்குமா? கேட்டேன்.
என்னை ஏற இறங்க பார்த்தார்
கடைக்காரர்.

கனப் பொய் முடக்கி வைத்திருக்கிறோம்
கனவான்களுக்காக.
பாதுகாக்க ஒன்றுமில்லாத
பைத்தியங்களுக்கு நாங்கள்
பொய் விற்பதில்லை என்றார்.
அப்போது தான் உணர்ந்தேன்
என் ஆடையின்மையை

நன்றி : மரமல்லிகைகள் – கவிதைகள் – மாலதி – வெளிவந்த ஆண்டு : 2003 – சாந்தினி பதிப்பகம், ஆர்என் 6 பட்டினப்பாக்கம் குடடியிருப்பு, சென்னை 600 028 – புத்தகத்தில் விலையே குறிப்பிடப்படவில்லை – தொலைபேசி : 044 24941111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *