மொட்டைக் கடிதாசும் பின் விளைவும்

 

நான் பந்தநல்லூர் தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னையும் சேர்த்து அஙகு பணிபுரிந்த நான்கு ஊழியர்களுக்கு மொட்டைக் கடிதாசு எழுதப்பட்டு வட்டார அலுவலகத்திற்கும், தலைமை அலுவலகத்திறகும் அனுப்பி இருந்தார்கள்.  மொட்டையின் விளைவு என்னைத் தூக்கி கள்ளிமேடு என்ற கிளைக்கு மாற்றினார்கள். அதேபோல் இன்னொரு அலுவலரை கள்ளிமேடு பக்கத்தில் உள்ள கிராமக் கிளைக்கு மாற்றினார்கள்.   உண்மையில்  குமாஸ்தாக்களை ஒன்றும் செயயவில்லை. ஏன்?
அந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இதுமாதிரியான மொட்டைகடிதாசைத் தயாரித்திருக்க மாட்டார்கள்.  காரணம்.  அந்த மொட்டைக் கடிதம் டைப் அடித்திருநதது. இறுதியில் பந்தநல்லூர் வாசிகள் என்று கையெழுத்து எதுவும் போடாமல் அனுப்பியிருந்தார்கள்.  கிராமத்தில் யார் இதுமாதிரி  செய்வார்கள் என்று யோசிப்பேன். அலுவலகத்திலேயே பிடிக்காதவர்கள் செய்திருக்க  வேண்டுமென்று தோன்றியது.  கள்ளிமேட்டிற்குப் போகும்படி வற்புறுத்தினால் வேலையை விட வேண்டியதுதான் என்று நினைத்தேன்.  ஆனால் அதுமாதிரி ஒன்றும் ஆகவில்லை. என்னையும் இன்னொருவரையும் மிரட்டி ஆர்டரை ரத்து செய்தார்கள்.
அந்தத் தருணத்தில் நான் எழுதிய ஒரு கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.  ஜனவரி 2008ல் வெளிவந்த விருட்சத்தில் இந்தக் கவதையைப் பிரசுரம் செய்தேன்.
இதை அலுவலத்தில் உள்ள மேலதிகாரிகள் படித்துவிட்டு என் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று துளிக்கூட பயமில்லை எனக்கு. காரணம்.  விருட்சம் என்ற பத்திரிகையை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.  மேலதிகாரியைத் திட்டி பத்திரிகையை அனுப்பினாலும் அவர் படிக்கக் கூட மாட்டார்.  தொடக்கூட மாட்டார்.  என் கிளை அலுவலகத்திலேயே தமிழில்தான் பேசுவார்கள்.  தமிழ் புத்தகம், தமிழ் பத்திரிகை படிக்கக்கூட மாட்டார்கள். என் தொகுப்பில் சேர்க்க மறந்த அந்தக் கவிதையை இங்கு தர விரும்புகிறேன்.

மொட்டை லிகிதங்கள்

பத்மநாபன் கையில்
மொட்டைக் கடுதாசின் நகல்
அலுவலகத்தில்
கஸ்டமர் முன்னால் தூங்கிக்கொண்டிருக்கிறாரென்று
பத்மநாபன் திகைத்து விட்டார்
அவருக்குத் தூக்கம் சரியாக வந்து
ஆயிற்று பல மாதங்கள்
ஏன் இப்படி ஒரு மொட்டை..?

ஆடிமுன் நின்று தன்  முகத்தைப் பார்த்தார்
முகம் களையிழந்து போயிற்றா?
ஒரு சமயம் தூங்கிக்கொண்டிருக்கும்
முகமாய் மாறிவிட்டதா?
.

கேசவனுக்கு வேறுவிதமாய் மொட்டை
பெண் கஸ்டமரை மட்டும் தனியாகக்
கவனிக்கிறானென்று –
இம்சிக்கிறானா கவனிக்கிறானா
புடவைக் கட்டிக்கொண்டிருந்தால் போதும்
சேகரனுக்கு என்று இளித்தக்கொண்டே
சொன்னான் தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி மீதும் சந்தேகம் பத்மநாபனுக்கு
மொட்டை உருவாகுமிடம்
அவனிடம்தான் என்று. அலுவலகத்தைப் பற்றி
அவதூறாக மேலிடத்திற்குத் தவறாமல்
தகவல் தருவதைக் முக்கிய கொள்கையாகக் கொண்டவன்

இன்னொரு மொட்டையும் துளிர்த்தது
கோவிந்தன் மீது
லோன் பார்ட்டியை லோ லோவென்று
அலைய விடுவானென்று
மொட்டையைப் படித்துத் திருதிருவென்று விழித்தான்.
..

சந்தேகம் வராத மாதிரி தட்சிணாமூர்த்தியின் மீதும்
ஒரு மொட்டை. அவனே எழுதிக்கொண்டதா?
கஸ்டமர் வந்தால் லொள்லொள் என்று எரிந்து விழுவானென்று
üநான் அப்படியில்லை..அப்படியில்லைý என்று புலம்ப
ஆரம்பித்தான் மொட்டையைப் பார்த்து

பத்மநாபன் பின்னால் அமர்ந்திருக்கும்
குண்டு மகாலிங்கம் மீதுதான் எல்லோருக்கும்
எரிச்சல்.  அலுவலகம் வந்தால் விவஸ்தை இல்லாமல்
ஆர்ப்பரிப்பான். சிலசமயம் அசிங்கமாய்
உடலசைத்துப் பாட்டு பாடுவான்
கஸ்டமர் முன்னால் குஸ்திக்கு நிற்பான் என்றெல்லாம்
மொட்டையின் விபரீத வரி வடிவங்கள்
‘ப’  கிராமத்து வாசிகள் என்று
கையெழுத்து இல்லாமல், தேதி இல்லாமல்,
டைப் அடித்த மொட்டை லிகிதங்கள் துளிர்க்கும்.
யாரோ வேண்டாதவர்கள் செய்த சதி
என்று கத்தினான் மகாலிங்கம்

மாற்றினார்கள் குண்டு மகாலிங்கத்தையும், பத்மநாபனையும்
தூர இடங்களுக்கு
ஆபிஸர்கள் என்பதால் –
நினைத்துப் பார்க்க முடியாத தூரக் கிளைகள் –
இருவரும் ஓடினார்கள் சரணம் சரணமென்று மேலிடத்திற்கு

மேலிடம் முறுக்கிக்கொண்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன