மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 54

அழகியசிங்கர்  


54)  பாலம்


கள்ளழகர்                                                                     

அம்மா இறந்து ஓராண்டு கழித்து

திவசத்திற்காக

ஊருக்குப்போயிருந்தபோது

உணர்ந்தேன்

எனக்கும் என் உறவுகளுக்கும்

எனக்கும் என் ஊருக்கும்

இடையே

நீந்திக் கடக்க முடியாத

பெருவெள்ளம் ஓடிக்கொண்டிருப்பதையும்

இக்கரைக்கும் அக்கரைக்குமாக

நீண்டிருந்த பாலம்

இப்போது இல்லாமலிருப்பதையும்

அறிந்தேன்

என்னில் ஒட்டியிருந்த

ஊர்மண் உதிர்ந்திருப்பதையும்

இரத்தத்தில் ஊறியிருந்த

ஊர் உறைந்திருப்பதையும்

நன்றி : நதிநீர்த் தேக்கத்தின் முகங்கள் – கவிதைகள் – கள்ளழகர் – பக்கங்கள் : 48 – முதல் பதிப்பு : நவம்பர் 2000 – விலை : ரூ.20 – வெளியீடு : தாமரைச் செல்வி பதிப்பகம், 31/48 இராணி அண்ணா நகர், சென்னை 600 078

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 53

 

அழகியசிங்கர்

பார்க்கும் புத்தர்

பேயோன்

நேற்று புத்தர் வீட்டிற்கு வந்திருந்தார்

தள்ளுவண்டிக் கடையில் வாங்கியவர்

பீங்கானில் செய்த முனிபுங்கவர்

தாடி வைத்தால் திருவள்ளூவர்

போட்டிசெல்லி முகபாவி

சுருட்டைமுடிக் காந்தார உருவி

தொங்கட்டானை இழந்த காது

மூக்கென்னவோ கிழக்காசியம்

நகைச்சுவைத் துணுக்கொன்று

சொல்லி முடித்த புன்னகை

மனக்கண்ணில் எதையோ பார்க்க

விரும்பி மூடிய கண்கள்

கண் திறந்தால் தெரிந்துவிடுமோ

என்று மூடிய கண்கள்

எனக்கு புத்தரைப் பிடிக்கும்

பார்த்தால் அமைதி தருகிறார்

என்றெண்ணவைக்கும் ஆளுமை

கிளர்ந்தெழும் அன்போடு

கண்வாங்காமல் பார்க்கிறேன் அவரை

பிறவியிலேயே மூடிய கண்களால்

அவரும் என்னைப் பார்க்கிறார்

ஆனால் பீங்கானுக்குள்ளிருந்தல்ல

எங்குமில்லா ஓர் இடத்திலிருந்து

அவர் பார்ப்பது எனக்குத் தெரியும்

நான் பார்ப்பது அவருக்குத் தெரியாது.

நன்றி : வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை – பேயோன் – கவிதைகள் – பக்கங்கள் : 243 – விலை : 200 – வெளியீடு : சஹானா,  26/1 சிபிடபூள்யூடி குவார்ட்டர்ஸ், பெசண்ட் நகர், சென்னை 90

மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர்  

தவளைக் கவிதை

பிரமிள்

 

தனக்குப் புத்தி

நூறு என்றது மீன்

பிடித்துக் கோர்த்தேன்

ஈர்க்கில்

தனக்குப் புத்தி

ஆயிரம் என்றது ஆமை

மல்லாத்தி ஏற்றினேன்

கல்லை.

üஎனக்குப் புத்தி

ஒன்றேý

என்றது தவளை

எட்டிப் பிடித்தேன்

பிடிக்குத் தப்பித்

தத்தித் தப்பிப்

போகுது தவளைக்

கவிதை –

üüநூறு புத்தரே!

கோர்த்தரே!

ஆயிரம் புத்தரே!

மல்லாத்தரே!

கல்லேத்தரே!

ஒரு புத்தரே!

தத்தரே!

பித்தரே!

நன்றி : பிரமிள் கவிதைகள் – தொகுப்பு கால சுப்ரமணியம் – லயம் வெளியீடு, பெரியூர், சத்தியமங்கலம் 698 402 – 328 பக்கங்கள் – விலை : ரூ.130 – வெளியான ஆண்டு : அக்டோபர் 1998

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 51

 

அழகியசிங்கர்  

 

 

சாலைக் குயில்

 

         

நோயல் ஜோசப் இருதயராஜ் 

 

 

ஒரு பஸ்ஸிலிருந்து குதித்து

மறு பஸ்ஸ÷க்கு ஓடிக் கொண்டிருந்தேன்.

ஒரே இரைச்சல்;

சைலன்சர் கழட்டிய மோட்டார் சைக்கிள்.

ஏர் ஹார்ன்கள், போலீஸ் பொறுக்கி விசில்கள்,

ஹோட்டல் ரேடியோ, கேசட் லைப்ரரி ஸ்டீரியோக்கள்,

கைதட்டல் அழைப்புகள்,

சினிமா அரசியல் சேம விசாரங்கள்

திடீரென ஓர் ஸ்வபரம்;

குக்கூ குக்கூ

சாலை ஆலக்கிளை ஒளிவில்

அமர்ந்த கடவுள் குரல்.

ஞானம் விளித்தது

சந்தியில்

நானே செவியுற்றேன்,

கால் மனம் அற்றேன்

உள்மன முடுக்குகளில்,

ஞாபகத்தின் ஒருவழிகளில்

வெறிகள், நிராசைகள்

நெரிந்து மோதி

நின்றன

ஒரு நொடிக்குள்

அந்த ஈரசைச் சந்த எதிரொலி எங்கெங்கும்.

மறு நொடி

சந்தடி

நன்றி : மறுமொழி – கவிதைகள் – நோயல் ஜோசப் இருதயராஜ் –  முதல் பதிப்பு : ஜøலை 1997 – பக்கங்கள் : 80 – விலை : 30  – வெளியீடு : ரூபி பெலிசியா வெளியீடு, 63/64 மூன்றாம் குறுக்குத் தெரு, சுந்தர் நகர், மீட்டர் பாக்டரி ரோடு, திருச்சிராப்பள்ளி – 620 021  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 50

அழகியசிங்கர்

ஞாயிறு

ஷாஅ

இன்று ஞாயிறு

இல்லை ஆமாம் விடுமுறை

இல்லை இது ஒரு கிழமை

எதுவாக இருந்தால் என்ன

அற்வுதங்கள் இடம் பெயரும்

ஓர் கணம்

ஒரு தாவல்

ஒரு மீளல்

ஒரு சஞ்சாரம்

ஒரு ஓட்டம்

ஒரு சொல் மொழி

ஒரு வரி

ஒரு அசைவு

ஒரு மிடறு

ஒரு கவளம்

ஒரு நுகர்வு

ஒரு வீச்சு

ஒரு சரிவு

ஒரு விலகல்

ஒரு நடை

ஒரு சிமிட்டல்

ஒரு ஸ்பரிசம்

ஒரு அயர்ச்சி

ஒரு ஆசுவாசம்

ஒரு ஒப்பனை

ஒரு வீழ்ச்சி

ஒரு புகல்

ஒரு துயில்

ஒரு ம்

நன்றி : கண் புகா வெளி – கவிதைகள் – ஷாஅ – பக்கங்கள் : 96 – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 – வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629 001

சில கவிதைகள் சில குறிப்புகள்

அழகியசிங்கர்
புத்தகக் காட்சியில் 600வது விருட்சம் அரங்கில் சில கவிதைப் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருக்கிறேன். அவற்றிலிருந்து சில கவிதைகளை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

1. பழனிவேள்ளின் கஞ்சா

11
மழை பெய்யட்டும்
வெயில் கொளுத்தட்டும்
காற்று வீசட்டும்
குளிர் வாட்டட்டும்

மனம் இருக்கிறது இலைபோலக் காய்ந்து
ஆற்றுப்படத்தும் சக்தி இருக்கிறது பெருக்க
எல்லாமே நம்வசம்

(கஞ்சா – பழனிவேள் – ஆலன் பதிப்பகம், விலை ரூ.100)

2. பேயோனின் வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை

துயர்

அழுகிறேன்
அழுவதை உணர்கிறேன்
உணர்வதைப் பார்க்கிறேன்
பார்ப்பதை நினைக்கிறேன்
நினைப்பதை உணர்கிறேன்
உணர்வதைப் பார்க்கிறேன்
பார்ப்பதை நினைக்கிறேன்
அழுவதை மறக்கிறேன்.

(வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை – பேயோன் – சஹானா வெளியீடு – விலை : ரூ200)

3. பெருந்தேவியின் வாயாடிக் கவிதைகள்

உடைமை

என் லேப்டாப்பில் அமர்கிறது
குட்டிப் பூச்சி
ஒரு கீ-யின் பாதிகூட இல்லை
எல் லிருந்து ஓ வுக்கு
நடக்கிறதா தத்துகிறதா
அதற்காவது தெரியுமா
குந்துமணிக் கண்
முழித்துப் பார்க்கிறது
அதன் பார்வையில்
நான் பொருட்டேயில்லை
என் விரல்நுனியில்
ஒரு நொடி பட்டுத் தாவுகிறது
இந்த உலகமே
அதனுடையதாக நகர்கிறது
நான்தான்
எங்கிருந்தோ வந்து
குந்தியிருக்கிறேன்
(வாயாடிக் கவிதைகள் – பெருந்தேவி – விலை ரூ.100)

4. ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்

சிரிப்பு

எத்தனை நேரம்தான்
நீடிக்கும் சொல்லுங்கள் ஒரு
விற்பனைப் பெண்ணின்
சிரிப்பு.

(இம்பர் உலகம் – ஞானக்கூத்தன் – விலை : ரூ.100)

5. அழகியசிங்கரின் வினோதமான பறவை

உறவு

தினமும்
நான் யாரையோ நினைத்துக்கொண்டிருக்கிறேன்
நீங்களே சொல்லுங்கள்
யாரை நினைத்துக் கொண்டிருக்கிறேனென்று
யாரையும் நினைத்துக்கொள்வில்லை
சும்மா சொன்னேன்
அதேபோல்
என்னையும் யாரும் நினைத்தக்கொள்ளவில்லை
உலகில் ஒழுங்கு தப்பி விட்டது
என்னிடமும் தப்பி விட்டது
எல்லோரிடமும் தப்பி விட்டது
உறவுமுறைகள் தாறுமாறாய் போய்விட்டன

(வினோதமான பறவை – அழகியசிங்கர் – விலை ரூ.80)

இன்று புத்தகக் காட்சியில் விருட்சம் 600வது ஸ்டாலில் மாலை 6 மணிக்குக் கவிதையைக் குறித்து உரையாடல் நடக்கிறது. அவசியம் கலந்து கொள்ளவும்.

விருட்சம் வெளியீடு

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 49

அழகியசிங்கர்

      இன்னும் கேள்விகள் (?) 
சொல்லித் தந்து நகரும்
வாழ்க்கை


கலாப்ரியா 

‘இன்னும் ஒரு கட்டுப்போலதான்
பாக்கியிருக்கும்…’

சிமினி விளக்கு
கருகத் தொடங்கும் வரை
பீடி சுற்றிக் கொண்டிருப்பாள்…

‘இன்னும் விளக்கை
அணக்யலையா..’ என்பான்

எல்லாரும் பசியுடன்

பசியுடன்
படுத்துக் கொள்ள,

‘இன்னும் புத்தி வரலையா
கெழவனுக்கு…’ என
அம்மா அப்பாவிடம்
செல்லக் கோபத்துடன்

குசுகுசுக்கும்
இருட்டு நாடகத்தை
மனசுள் பார்த்து
வெட்கத்துடன் குப்புறப்
படுப்பாள்….

தன்னிச்சையாய்
விரல் சொடுக்க நினைத்துப் பின்
சாக்கிரதையாய் தவிர்ப்பாள்

சமைந்தகுமரி

நன்றி : கலாப்ரியா கவிதைகள் – சந்தியா பதிப்பகம், பு எண் : 77 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 – பக்கங்கள் : 292 – விலை : ரூ. 240 – தொலைபேசி : 044-24896979 – இரண்டாம் பதிப்பு : 2015 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 48

அழகியசிங்கர்  

மாலதி
                                                                                               

சங்கர ராமசுப்ரமணியன்

மாலதி
நடந்து செல்லும் வீதிகளில்
வீடுகள்
வினோத சோபை கொள்கின்றன
கனவெனத் தோன்றும்
மஞ்சள் ஒலியை
அறையெங்கும்
நிரப்பிச் செல்கிறாள் அவள்

அவளின்
உடல் மணம் படர்ந்துü
விழிக்கின்றன புராதன நாற்காலிகள்

மாலதி
நகரத்தின் வெளியே
வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு
வெளிறிய கனவொன்றினைக்
கண்டுகொண்டிருக்கக்கூடும்

இல்லையெனில்
தன் அம்மாவின்
இடையில் அமர்ந்து
கோவில் சப்பரத்தை
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கக் கூடும்

நன்றி : மிதக்கும் இருக்கைகளின் நகரம் – கவிதைகள் – சங்கர ராமசுப்ரமணியன் – வெளியீடு : மருதா, கடை எண் : 3, கீழ்த்தளம், ரியல் ஏஜென்ஸி, 102 பாரதி சாலை, சென்னை 600 014 – விலை : ரூ.40 – வருடம் : டிசம்பர் 2001 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் -47

அழகியசிங்கர்

 கடைசி பக்கத்தை நிரப்ப



தமிழ்மணவாளன்








கவிதைகளாலான புத்தகத்தின்
காலியாயிருக்குமிக்
கடைசி பக்கத்திற்காக
கவிதை கேட்கிறார்கள்

யாரிடம் கேட்டால்
மழை பெய்யும் மேகம்

யாரின் வேண்டுகோளுக்கு
தலையசைக்கும் மரங்கள்
காற்றடித்து.

வேண்டும் எனில் இயலுமோ
கவிதை.

ஆயினும்
ஒன்று செய்யலாம்
அடுத்து இயல்பாய்
பெய்யும் மழையை
வீசும் காற்றை
இந்தப் பக்கத்திலிருந்து தொடங்குமாறு.

நன்றி : அலமாரியில் ஓர் இராஜகிரீடம் – கவிதைகள் – தமிழ்மணவாளன் – கோமளவல்லி பதிப்பகம், 18 பத்மாவதி நகர், மாதவரம் பால் பண்ணை, சென்னை 600 051 – பக்கங்கள் : 96 – விலை : 30.00 – வெளிவந்த ஆண்டு : 2000




மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 46

அழகியசிங்கர்  

கிளிக்கதை


ப கல்பனா




கிளிக்கதை கேட்டான் குழந்தை
சொன்னேன்

எங்கள் வீட்டில் முன்பொரு கிளி இருந்தது
தளிர் போல் மென்மையாய்ü

சிறகு விரித்தால்
பச்சை விசிறி போலிருக்கும்
சில நேரங்களில் பேசும்

வீடு திரும்பும்போது
தோள்களில் அமர்ந்து காதைக் கவ்வும்
தாத்தாவின் மடியிலமர்ந்து
செய்தித்தாள் ஓரத்தைக் கொத்திக் கிழிக்கும்

இடது ஆள்காட்டி விரலில் சுமந்து
வலக்கையில்
வாழைப்பழத்துடன் திரிவான் கடைக்குட்டி

எல்லோரையும் மகிழ்வித்தது
எல்லாம் கிடைத்தது அதற்கு

தங்களுடனேயே இருக்கட்டுமென்று
சிறகு கத்திரித்து
அழகு பார்ப்பர் மாதமொரு முறை

தத்தித் தத்திப் பறந்து
மரக்கிளையில் அமர்ந்த அன்று மட்டும்
அதிகமாய்க் கத்தரித்து ரசித்தனர்
தடுக்கித்தடுக்கி விழுவதை

“அச்சச்சோ….கடைசியில் என்னவாயிற்று?”
பதறினாள் குழந்தை

“எல்லாக் கிளிகளையும் போலவே
அதையும் ஒரு துரதிர்ஷ்ட நாளில்
பூனை பிடித்துக்கொண்டு போனது

பிறகென்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது”

நன்றி : பார்வையிலிருந்து சொல்லுக்கு – கவிதைகள் – ப கல்பனா – காலக்குறி பதிப்பகம், 18, 2வது தெரு, அழகிரிநகர், வடபழனி, சென்னை 600 026 – பக் : 80 – விலை : ரூ.25 – வெளியான ஆண்டு : டிசம்பர் 1998