மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 64


தூதர்கள்


சிபிச்செல்வன்

இரவுகள் சிறியவை

இரவுகள் அழகானவை

இரவுகள் நீளமானவை

இரவுகள் குரூரமானவை

இரவுகள் புணர்ச்சிக்கானவை

இரவுகள் கனவுகளுக்கானû9வ

இரவுகள் கடைசி மூச்சின் கணங்களுக்கானவை

இரவுகளின் இருள் அடர்த்தியானது

இரவுகளில் நமது பயங்கள் பதுங்குகின்றன

மௌனத்தின் நாடி

இதயத்தில் துடிக்கிறது

இரவு உறங்குவதற்கானது

சாவு போல்.

நன்றி : கறுப்புநாய் – கவிதைகள் – சிபிச்செல்வன் – அமுதம் பதிப்பகம் – முதல் பதிப்பு : டிசம்பர் 2002 – விலை : ரூ.30

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 62

கொட்டாவி

சச்சிதானந்தன்

தமிழில் : சிற்பி

கொட்டாவி
ஒரு இயற்வை விதி மட்டுமல்ல
மறுப்பின் அடையாளமும் கூட.
தனிமனிதர்களோடும், நாடுகளோடும்.

மசூதி இடிக்கப்படும் போது
நாம்ல் கொட்டாவி விடுகிறோம்.

புத்தர் சிலை உடைக்கப்படும்போது
கொட்டாவி விட்டு நாம் பழிதீர்த்துக் கொள்கிறோம்

கொட்டவி
யுத்தத்திற்கும் ஏகாதிபத்தியத்துக்கும்
எதிரான போராட்டத்தில் ஒரு புதிய போர்முறையாகும்
நண்பனே,

காதலின் தீவிரத்தை வெளிப்படுத்த
கொட்டாவியைவிட நல்ல சைகை
இல்லை யென்கிறாள் காதலி

புரட்சி கொட்டாவி வழியாக
என்கிறார் பழைய தோழர் சிவப்பு வண்ணத்தில்
விடுதலை கொட்டாவி வழியாக
என்கிறது சுவர் அறிவிப்பு பச்சையில்
ஆதியில் கொட்டாவி இருந்தது
என்கிறது புதிய சுவிசேஷம்

வேதங்கள் கடவுளின் கொட்டாவி
என்கிறார் அவிவேகானந்தன்
தன் கலையின் தரிசனம் ஒரு கொட்டாவியில்
அடங்கும் என்கிறார் பரிசுத்த அழகியல் வாதி

கொட்டாவியில் நிர்வாணம் என்கிறது காவி
கொட்டாவி விட்டு மனித உரிமைப் பிரகடனம்
கொட்டாவியால் சாதிகளுக்கெதிரான சங்கிலி
கொட்டாவியின் நூறு பூ விரிவது கண்டு
உணர்ச்சி வசப்படுகிறான் கவிஞன்.

அயல்நாட்டு உறவுத்துறை
அமைச்சரின் கொட்டாவி
பாலஸ்தீனத்துக்காகவா, இசுரேலுக்காகவா என்று
அதிகாரிகளுக்கிடையே விவாதம்.

கண்டனக் கூட்டத்தில் சொற்பொழிவுக்குப் பதில்
ஒரு நீண்ட கொட்டாவி:

கொட்டாவியின் மேகங்களுக்கு இடையில்
கொட்டாவிப் பறவைகள் பறக்கின்றன
கொட்டாவியின் சூரியன் இதோ மேலே சுடர்விடுகிறான்
அச்சம் வேண்டாம் மனிதர்களே, கடவுளின்
கொட்டாவிக்குள் நம் உலகம் பத்திரமாக இருக்கிறது.


நன்றி : ஆலிலையும் நெற்கதிரும் - சச்சிதானந்தன் - தமிழில் : சிற்பி - முதல் பதிப்பு : 2016 - விலை : ரூ.250 - குணா பில்டிங்க்ஸ் - 443 அண்ணா சாலை - தேனாம்பேட்டை - சென்னை 18

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 61

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 61

பயிற்சி

ஞானக்கூத்தன்

மனிதன் எங்கும் போக விரும்பவில்லை
ஆனால் போய்க்கொண்டுதான் இருக்கிறான்
மனிதன் யாருடனும் போக விரும்பவில்லை
ஆனால் யாருடனாவது போய்க் கொண்டிருக்கிறான்
மனிதன் எதையும் தூக்கிக் கொண்டு போக விரும்பவில்லை
ஆனால் எதையாவது தூக்கிக் கொண்டுதான் போகிறான்
குன்றுகளைக் காட்டிலும் கனமுள்ள சோகங்களைத்
தூக்கிக் கொண்டு நடக்க மனதில் பயிற்சி வேண்டாமா?

நன்றி : இம்பர் உலகம் - கவிதைகள் - ஞானக்கூத்தன் -
பக்கங்கள் : 182 - விலை : ரூ.170 -
விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ் , 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33 - தொலைபேசி எண் : 9444113205

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 60

அழகியசிங்கர்

 

வாழ்க்கைப் பிரச்சினை

 

தாமரை

 

அந்த மழைநாள் இரவை

எங்களால் மறக்கவே முடியவில்லை

கோடை மழையல்ல அது

கொட்டும் மழை!

நானும் குட்டித் தம்பியும்

கடைசித் தங்கையும்…

எனக்குதான் வயது அதகிம்

எட்டு!

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்

தெருவெல்லாம் ஆறாக நீர்…

மின்னலும் இடியுமாய்

வானத்திலே வன்ம யுத்தம்!

எதிர்சாரியிலிருந்த குடிசைகளெல்லாம்

மூழ்கிக் கொண்டிருந்தன

கூச்சலும் குழப்பமும் எங்கெங்கும்…

உயிர்ப் பிரச்சினையும் வாழ்க்கைப்

பிரச்சினையுமாக

ஊரே ரெண்டுபட்டது

வேடிக்கை பார்த்த என்னை

எட்டி இழுத்தாள் குட்டித் தங்கை

üஉள்ளே வா அண்ணாý…

அந்த மழைநாள் இரவை

எங்களால் மறக்கவே முடியவில்லை

அன்றுதான் அப்பா

எங்களுடன் இருந்தார்

அம்சவேணி வீட்டுக்குப் போகாமல்!

நன்றி : ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் – தாமரை – கவிதைகள் – காந்தளகம், 834 அண்ணாசாலை, சென்னை 600 002 – தொலைபேசி : 8354505 – விலை : ரூ.25 – வெளியான இரண்டாம் பதிப்பு : 30.6.2000

மனதுக்குப் பிடித்த கவிதைகள்

அழகியசிங்கர்
 
 
ஒரு கவிதை படிப்பவருக்குப் புரிய வேண்டுமா? வேண்டாமா? இந்தக் கேள்விக்கு ஒரு கவிதை வாசிப்பவருக்குப் புரிய வேண்டும் என்று நான் அழுத்தமாகக் கூறுவேன். பிரம்மராஜன் கவிதைகள் அவ்வளவு எளிதாகப் புரியாது. இதை பிரம்மராஜன் காதுபட சொல்லாதீர்கள் என்று என் நண்பர்கள் சிலர் சொல்வார்கள். காரணம். நான் சொல்வதைக் கேள்விப்பட்டு பிரம்மராஜன் பெருமிதம் அடையக் கூடும் என்றுதான். ஆனால் உண்மையில் பிரம்மராஜன் கவிதை அவ்வளவு சுலபமாகப் புரியாது. ஒவ்வொரு வரியாக புரியும். ஆனால் முழு கவிதைக்குள் போவதற்குள் பெரிய பாடாக இருக்கும். முபீன் சாதிகா கவிதைகளும் அப்படித்தான். கவிதை எப்படி எழுத வருகிறது என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். தானாகவே எழுதுகிறது என்பது போல் சொன்னார். என்னால் நம்ப முடியவில்லை. ஆட்டோமெடிக் ரைட்டிங் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அதுமாதிரி உண்டா என்பதும் தெரியாது. அன்பின் ஆறாமொழி என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தக் கவிதையை எடுத்துக்கொண்டால், முதலில் தலைப்பு அவருக்குத் தோன்றியதா? அல்லது கவிதை வரிகள் முன்னதாக தோன்றியதா? எது தலைப்பை தீர்மானித்தது? இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் இக் கவிதையை வாசிக்கும்போது இதன் ரிதம் என்னை ஆச்சரியப்படுத்துகிறது.
 
59) அன்பின் ஆறாமொழி
 
முபீன் சாதிகா
 
மீன் படரும் நீரிலும்
கருமை புகா வானிலும்
தொட்டுணரா தீயிலும்
பிளவு காணா கல்லிலும்
வருந்தும் வருந்தா வளியிலும்
நகையோடு பகையும் துயரிலும்
மெலியதில் வலியாய் மலரிலும்
நேரில் எதிரா திசையிலும்
முகம் கலக்கும் ஆடியிலும்
முற்றோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு சுவையாய் அமுதிலும்
முறிவோடு தூண்டா நஞ்சிலும்
ஒளிபுகா திரையின் இருளிலும்
அடரும் வெளியாய் கானிலும்
தளிரோடு துளிரும் முளையிலும்
முழுமையின் உருவாய் அண்டத்திலும்
விரைந்துழலும் ஒளியிலும்
ஒடுக்கும் துடியின் இடியிலும்
பொழிவில் வெருளா புயலிலும்
திரளும் தீரத்தின் பிணியிலும்
எம்மில் மாறா எச்சத்திலும்
நிச்சயமில்லா நிதர்சன நேசத்திலும்
தீரா வெகுளலலின் இறுதியிலும்
நிறையுமேûô நெறியின் நசை
 
நன்றி : அன்பின் ஆறாமொழி – கவிதைகள் – முபீன் சாதிகா – வெளியீடு : பாலம் பதிப்பகம் பி விட், 25 அபிராமி அபார்ட்மெண்ட்ஸ், 3வது பிரதான சாலை, தண்டிஸ்வரர் நகர், வேளச்சேரி, சென்னை 42 முதல் பதிப்பு : நவம்பர் 2011 – விலை : ரூ.60.
 
 

100 கவிதைப் புத்தகங்களிலிருந்து 100 கவிதைகள்.

அழகியசிங்கர்

 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் இதுவரை 57 கவிதைகள் கொண்டு வந்துள்ளேன்.  இப்போது 58 கவிதையை கொண்டு வர உள்ளேன். இப்படி 100 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வர உள்ளேன்.  கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்.  நான் தேர்ந்தெடுக்கும் கவிதையைக் குறித்தும், முடிந்தால் கவிஞர் பற்றியும் எதாவது எழுத வேண்டுமென்று தோன்றியது.  1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்த நாளிலிருந்து என்னிடம் கவிதைப் புத்தகங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளன. இந்தக் கவிதைப் புத்தகங்களையும் அதில் குறிப்பிடப்பட்ட கவிதைகளையும் நான் மதிக்கிறேன்.

58வது கவிதையாக நான் நேசன் புத்தககத்திலிருந்து  எடுக்கிறேன். ‘ஏரிக்கரையில் வசிப்பவன்’ என்பதுதான் கவிதையின் புத்தகம்.  இத் தொகுப்பில் பல கவிதைகள் குறிப்பிடும்படி உள்ளன.  நேசன் ஒரு திறமையான கவிஞர்.  ஆரம்ப காலத்தில் நேகனும், ராணிதிலக் அவர்களும் போஸ்டல் காலனியில் உள்ள என் வீட்டிற்கு வருவார்கள்.  அவர்கள் எழுதிக்கொண்டிருந்த கவிதைகளை என்னிடம் காட்டுவார்கள்.  அவர்களை அக் கவிதைகளை வாசிக்கச் சொல்வேன்.  அவர்களும் கவிதைகளை வாசிப்பார்கள்.  உடனடியாக அக் கவிதைகளை வாங்கிக்கொண்டு விருட்சம் இதழ்களில் பிரசுரம் செய்வேன்.  அவர்களைப் பார்க்கும்போது உண்மையாக கவிதைக்காகவே வாழ்ந்தவர்கள் போல் தோன்றும்.

இத் தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் என்னை கவர்ந்தாலும், ‘என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்’ என்ற கவிதையை நான் தொகுப்பில் சேர்க்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு நிலவையும் பார்க்கும்போது ஏற்படுகிற அனுபவங்களை நேசன் விவரித்துக்கொண்டு போகிறார்.  ஏழாவது நிலவு ‘எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்,’ என்று முடிக்கிறார். படிப்பவரின் ஆன்மிக உணர்வை தட்டி எழுப்பும் விதமாய் இக் கவிதை உள்ளதாக தோன்றுகிறது.   எளிமையான நேசனின் இந்தக் கவிதையை எப்போதும் வாசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 58

 என்னைச் சுற்றும் ஏழு நிலவுகள் 

ஸ்ரீநேசன்

முதல் நிலவை எப்போதும்

எறும்புகள் மொய்த்தவண்ணம் உள்ளன

இரண்டாவது நிலவு

குழந்தைகளால் மட்டுமே ரசிக்கக்கூடியது

மூன்றாவது நிலவு போலீஸ்காரனின் துப்பாக்கிச் சூட்டுக்குக்

காத்திருக்கும் ஒரு போராளியின் இதயம்

நான்காவது நிலவு எப்போதும் என்னை அழைத்துக்

கொண்டேயிருக்கும் வறண்ட மலையின் குன்று

ஐந்தாவது நிலவு

மதுக்கோப்பையாகத் தளும்பிக்கொண்டிருக்கிறது

ஆறாவது நிலவுக்குள் சிவை உருவாகிக் கொண்டிருக்கிறாள்

ஏழாவது நிலவு

எனக்குப் பிடிபடாமல் நழுவிக்கொண்டிருக்கும் ஒரு சொல்.

நன்றி : ஏரிக்கரையில் வசிப்பவன் – கவிதைகள் – ஸ்ரீ நேசன் – மொத்தப் பக்கங்கள் : 80 – வெளியீடு : ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600 024 – தொலைபேசி : 044-23722939 – விலை : ரூ.60

  

மனதுக்குப் பிடித்த கவிதைகள் 57

அழகியசிங்கர்
 
காடு
 
வஸந்த் செந்தில்
 
ஒருவர் சென்று
மழையோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
மலர்களோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
சுள்ளிகளோடு திரும்பி வந்தார்
 
ஒருவர் சென்று
பழங்களோடு திரும்பி வந்தார்
ஒருவர் சென்று
பறவைகளோடு திரும்பி வந்தார்
 
பச்சயங்களோடு ஒருவர்
மிருகங்களோடு ஒருவர்
மீளவேயில்லை ஒருவர்
 
ஒருவர் பயந்து
உள் செல்லவேயில்லை
 
அவரவர் தேவைகளை
அவரவரக்கு அளித்து
வழிதொலைத்த பாதைகளை
வழியெல்லாம் வைத்து
 
அடர்ந்து கிடக்கிறது காடு
 
நன்றி : மழையும் நீயும் – கவிதைகள் – வஸந்த் செந்தில் – பதிப்பகம் : இலக்குமி நிலையம், ப எண் : 53, பு எண் : 115, கௌடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை 600 014 – முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2001 – விலை : ரூ.30 – பக்கம் : 144
 
 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 56

அழகியசிங்கர்

 

 அவதார ஆசை

 

திலகபாமா

 

மலராய் இருந்திருந்தேன்
மகரந்தத்துள் உனைத் திணிக்கப் பார்க்கின்றாய்
தென்றலாய் இருந்திருந்தேன்
என்னில் சுகம் கண்டு
உனதென்று எனை உன்
சுவாசமாய் உள்ளிழுக்கப் பார்க்கின்றாய்

தீங்கனியாய் இருந்திருந்தேன்
தோலுரித்து விதையெடுத்து
மண்ணில் புதைக்க நினைக்கின்றாய்

சங்கீதமென்றிருந்தேன்
தாளங்களுக்குள் சிக்கவென்று
தொடைதட்டிப் பார்க்கின்றாய்

நெருஞ்சிமுள்ளாய்
அவதார மெடுக்க ஆசை
எனை நானாய் இருக்க
விட்டு விடுவாயென்பதாலும்
மிதிப்பவர்கள் சதை மீறி
குத்திவிடலாமென்பதாலும்

நன்றி : சூரியாள் – கவிதைகள் – திலகபாமா – வெளியீடு : மதி நிலையம் – விலை : ரூ.35 – வெளிவந்த ஆண்டு : 2002

 பெண்கள் தினம்

அழகியசிங்கர்

 

 

இன்றைய தினம் பெண்கள் தினம். இந்தத் தினத்தை ஞாபகப்படுத்தும் விதமாக என் பாட்டியின் ஞாபகம் வந்தது.  பாட்டியை வைத்து நான் எழுதிய ஜாடி என்ற கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

 

 ஜாடி

 

பழக்கப்படுத்தினாள்

ஜாடியைப் பாட்டி

ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்

நிறத்தில் நீண்ட ஜாடியின் இடுப்பு

பொருத்தமாய் மாநிறத்தில் மூடி

உண்டு உண்டு கல்லூரி நாட்களில்

இரசாயனக்கூடத்தில்

குடுவைகளும் அமில ஜாடிகளும்

கண்டிப்பைக் காட்டும் பேராசிரியர் வழியில்

கிலியைத் தோற்றுவிக்கும்

உபயோகம் அவற்றுக்கு

மணமும் சுவையும் நிரம்பிய ஜாடி

பாட்டி பாதுகாத்த ஜாடி

காலம் காலமாய்

ஊறும் மாவடு வைத்திருக்கும் ஜாடி

சுருங்கியத் தோற்றத்தில் சுவைதரும் ஜாடி

நீண்ட சாதாரண ஜாடி

மலர்ச்செடி வைக்க முடியாத

பாட்டி வைத்திருக்கும் ஜாடி

மாவடு வைத்திருக்கும் தருணத்தில்

நிரம்பி வழியும் ஜாடி

பார்க்கும்போதே

சுவை ஊறும் விதம்விதமான தேர்ந்த மாவடுகள்

பழகிய மாவடுவின்

சுருங்கியத்தோற்றம்

பாட்டியின் ஊறுதியை ஞாபகமூட்டும்

கையில் தெரியும் மாவடுவின் கறை

பாட்டியின் கவனத்திற்குச் செல்லும்

கண்டிப்பு நிறைந்த அவள் குரலை

அலட்சியப்படுத்தி

ஊறும் முன்னே சுவைத்து மகிழ்வோம்

மாவடுவை ஜாடியில் எப்போதும் நிரப்ப

üபென்சன்ý பணம் பயன்படும்

ஆயிற்று

பாட்டிபோய் நான்கு ஆண்டுகள்

ஜாடியுமா?

எங்கள் கவனத்திலிருந்து தப்பி

பரண்மீது கிடக்கிறது

இடம் மாற்றம் செய்தபோது

காலி செய்தோம் பரணை

நினைவுச் சுவடுகளைப் பதித்த

எத்தனையோ பொருட்களில்

தூசிகளுடன் காட்சி தந்த ஜாடியுமொன்று

எடுத்தவுடன்

பழக்க தோஷத்துடன் கை ஜாடியுள் நுழைய

பழைய ஞாபகம்

மாவடு வாசனையில்

பாட்டியும் தென்பட்டாள்

மாவடு கலைந்ததுபோல்

நாட்களும் கரைந்து போயிற்று

எடுத்தவுடன்

எதைக் கேட்கிறது?

மாவடுவையா

பாட்டியையா

 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 55

 

அழகியசிங்கர்  

 தவிர்த்த கவிதை

பா வெங்கடேசன்

மன்னிக்கவும் நண்பரே நான்

தவறுதலாக எதையும்

பேசிவிடவில்லை.

அந்த அறையின் உத்திரங்களுடன்

உரையாட முடியுமானால்

உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

நீங்கள் கவிதை எழுதுபவரா,

எனக்குத் தெரியாது.

அங்கே உலவ விட்டிருந்த கவிதை

உங்களுடையதுதானா,

அதுவும் எனக்குத் தெரியாது.

அங்கே ஒரு கவிதை இருந்தது.

அதைச் சுற்றிச் சிலர் அமர்ந்திருந்தார்கள்.

நானும் அவர்களுடனிருந்தேன்.

எல்லோருக்கும் அது

செல்லமாய் இருந்தது.

எல்லோரும் அதைத் தன்னிடமே

வருமாறு  அழைத்துக்கொண்டிருந்தார்கள்.

யாரிடம் செல்வதெனத் தெரியாமல்

அது விழித்துக்கொண்டிருந்தபோது

குழப்பத்தைக் குறைக்குமென்று

நம்பி மட்டுமே நான் அதனிடம்

என்னை வேண்டுமானால்

கழித்துக்கொள்ளேனென்று சொல்லிவைத்தேன்.

ஆனால் நண்பரே

நிச்சயமாக எனக்குத் தெரியும்

அங்கே ஒரு கவிதை

இருந்ததென்று.

மேலும் நண்பரே

அதை நான் தவிர்த்த கணத்தில்

அங்கே இருந்திராத உங்களை

நிச்சயம் அது

நானாக உணர்ந்திருக்கும்.

(நரனுக்கு)

நன்றி : நீளா – கவிதைகள் – பா வெங்கடேசன் – முதல் பதிப்பு : டிசம்பர் 2014 – வெளியீடு : காலச்சுவடு பப்பளிகேஷன்ஸ் (பி) லிட் – 669 கே பி சாலை, நாகர்கோவில் – 629001 – விலை : 70 – 04652 – 278525