பெண்கள் தினம்

அழகியசிங்கர்

 

 

இன்றைய தினம் பெண்கள் தினம். இந்தத் தினத்தை ஞாபகப்படுத்தும் விதமாக என் பாட்டியின் ஞாபகம் வந்தது.  பாட்டியை வைத்து நான் எழுதிய ஜாடி என்ற கவிதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்.

 

 ஜாடி

 

பழக்கப்படுத்தினாள்

ஜாடியைப் பாட்டி

ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்

நிறத்தில் நீண்ட ஜாடியின் இடுப்பு

பொருத்தமாய் மாநிறத்தில் மூடி

உண்டு உண்டு கல்லூரி நாட்களில்

இரசாயனக்கூடத்தில்

குடுவைகளும் அமில ஜாடிகளும்

கண்டிப்பைக் காட்டும் பேராசிரியர் வழியில்

கிலியைத் தோற்றுவிக்கும்

உபயோகம் அவற்றுக்கு

மணமும் சுவையும் நிரம்பிய ஜாடி

பாட்டி பாதுகாத்த ஜாடி

காலம் காலமாய்

ஊறும் மாவடு வைத்திருக்கும் ஜாடி

சுருங்கியத் தோற்றத்தில் சுவைதரும் ஜாடி

நீண்ட சாதாரண ஜாடி

மலர்ச்செடி வைக்க முடியாத

பாட்டி வைத்திருக்கும் ஜாடி

மாவடு வைத்திருக்கும் தருணத்தில்

நிரம்பி வழியும் ஜாடி

பார்க்கும்போதே

சுவை ஊறும் விதம்விதமான தேர்ந்த மாவடுகள்

பழகிய மாவடுவின்

சுருங்கியத்தோற்றம்

பாட்டியின் ஊறுதியை ஞாபகமூட்டும்

கையில் தெரியும் மாவடுவின் கறை

பாட்டியின் கவனத்திற்குச் செல்லும்

கண்டிப்பு நிறைந்த அவள் குரலை

அலட்சியப்படுத்தி

ஊறும் முன்னே சுவைத்து மகிழ்வோம்

மாவடுவை ஜாடியில் எப்போதும் நிரப்ப

üபென்சன்ý பணம் பயன்படும்

ஆயிற்று

பாட்டிபோய் நான்கு ஆண்டுகள்

ஜாடியுமா?

எங்கள் கவனத்திலிருந்து தப்பி

பரண்மீது கிடக்கிறது

இடம் மாற்றம் செய்தபோது

காலி செய்தோம் பரணை

நினைவுச் சுவடுகளைப் பதித்த

எத்தனையோ பொருட்களில்

தூசிகளுடன் காட்சி தந்த ஜாடியுமொன்று

எடுத்தவுடன்

பழக்க தோஷத்துடன் கை ஜாடியுள் நுழைய

பழைய ஞாபகம்

மாவடு வாசனையில்

பாட்டியும் தென்பட்டாள்

மாவடு கலைந்ததுபோல்

நாட்களும் கரைந்து போயிற்று

எடுத்தவுடன்

எதைக் கேட்கிறது?

மாவடுவையா

பாட்டியையா

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன