மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 73


கொள்கை 


சுந்தர ராமசாமி                                                                                     

மேற்கே

ரொமான்டிசிஸம்

நாச்சுரலிஸம்

ரியலிஸம்

அப்பால்

இம்பிரஷனிஸம்

என் மனைவிக்குத்

தக்காளி ரஸம்.

அப்பால்

ஸிம்பலிஸம்

கூபிஸம்

ஸர்ரியலிஸம்

மீண்டும்

வெறும்

ரியலிஸம்

அப்பால்

அதற்கும்

அப்பால்?

சொல்லும்

எட்மண்ட் வில்சன்

நீர் சொல்லும் கனிவாய்.

சொல்லும்

மிஸ்டர் பிரிச்செட்

நீர் சொல்லும்

தயைகூர்ந்து

ஸôத்ரேக்கு

எக்ஸிஸ் –

டென்ஷலிஸம்

காமுவுக்கு

இன்னொன்று

பின்னால்

வேறொன்று.

காமுவின் விதவைக்கு

மற்றொன்று.

பிறிதொன்று

அவள் அருமைப்

பாட்டிக்கு.

கரடிக்கு கம்யூனிஸம்

கதர்க் குல்லா சோஷலிஸம்

டாலர் ஹ÷மனிஸம்

பீக்கிங்கு

என்ன?

சொல்லும்

ஏ.ஐ.ஆரே

சொல்லும்

மிக விரைவாய்.

நாம எல்லாம்,

டமில் எழுத்தாளர்

நமக்கோ

பிளேஜியரிஸம்

நன்றி : நடுநிசி நாய்கள் – கவிதைகள் – சுந்தர ராமசாமி – வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் பி லிமிடெட் -669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 – பக்கங்கள் : 72 – விலை : ரூ.75

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 72


கவிதை தலைப்பிடப் படாதது


ஆத்மாநாம்                            

                                           

இந்தக் கவிதை

எப்படி முடியும்

எங்கு முடியும்

என்று தெரியாது.

திட்டமிட்டு முடியாது

என்றெனக்கத் தெரியும்

இது முடியும்போது

இருக்கும் (இருந்தால்) நான்

ஆரம்பத்தில் இருந்தவன் தானா

ஏன் இந்தக் கேள்வி

யாரை நோக்கி

இன்றிரவு உணவருந்தும்

நம்பிக்கையில் இங்கிருப்பேன்

இப்படியும் ஓர் நம்பிக்கை

இருந்த நேற்று

எனக்கிருண்ட கணங்கள்

அவற்றின் தவளைக் குரல்கள்

கேட்கும் அடிக்கடி

அதனை ஒதுக்கத் தெரியாமல்

தவிக்கையில்

நிகழ்ச்சியின் சப்தங்கள்

செவிப்பறை கிழிக்கும்

நாளை ஓர் ஒளிக்கடலாய்

கண்ணைப் பறிக்கும்

இருதயம்

இதோ இதோ என்று துடிக்கும்.

நன்றி : காகிதத்தில் கோடு – ஆத்மாநாம் – வெளியீடு : ழ, 39 ஈஸ்வரதாஸ் லாலா தெரு, திருவல்லிக்கேணி சென்னை 5 – வெளியீடு : மே 1981 – விலை : ரூ.4 – பக்கங்கள் : 40

குறிப்பு :

மனதுக்குப் பிடித்தக் கவிதை பகுதியில் ஆத்மாநாமின் கவிதை ஒன்றை சேர்த்துள்ளேன்.  ஆறாம்தேதி ஆத்மாநாமின் நினைவு நாள்.  கிட்டத்தட்ட 34 ஆண்டுக்கு மேல் ஓடிவிட்டது ஆத்மாநாம் மறைந்து.  03.12.1981 அன்று ஆத்மாநாம் கையெழுத்திட்ட அவர் புத்தகத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன்.  அது ஒரு இனிமையான மாலை பொழுது.   அவருடைய இந்தக் கவிதையை பலமுறை படித்திருக்கிறேன்.  ஏதோ விதமான சோகம் இந்தக் கவிதையில் ஒட்டிக்கொண்டிருப்பதாக தோன்றுகிறது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 71

உங்கள் வீட்டு முயல்குட்டி

 

 

பெருந்தேவி                                                                   

                                                                                                                  

நீங்கள் முயல்குட்டி வாங்கியதாகச் சொன்னீர்கள்

சற்று பொறாமையாக இருந்தது

அது கிளிபோல் பேசுகிறது என்றீர்கள்

சற்று சந்தேகமாக இருந்தது

அதன் பாசிக்கண்ணில் பிரபஞ்சத்தைக்

கண்டதாகக் கூறினீர்கள்

சற்று ஆச்சரியமாக இருந்தது

அதன் பெயர் மிருது என அறிவித்தீர்கள்

தொடவேண்டும் போலிருந்தது

தொட்டும் தொடாமலும் அதைத் தீண்ட

கடவுளால் மட்டுமே முடியும் என்றீர்கள்

கடவுள்மேல் சற்று நம்பிக்கைகூட வந்தது

வெல்வெட் துண்டு அதன் காது என

வர்ணீத்தீர்கள்

வெல்வெட் வெல்வெட் என்று

சொல்லிப் பார்த்துக்கொண்டேன்

அது கேரட்டைக் கடிக்கும் அழகுக்குத்

தலையையே தந்துவிடலாமெனப் பரவசப்பட்டீர்கள்

என் தலையையும் கூடவே தரத்

தயாராக வைத்திருந்தேன்

இன்றுதான் உங்கள் முயலை

முதன்முதலில் பார்த்தேன்

என் வீட்டுச் சுற்றுச் சுவரில்

ஒன்றுக்கடித்துக்கொண்டிருந்தது

என்னவாகவும் இருக்கட்டுமே

உங்கள் வீட்டுக்குள் வைத்துக்கொண்டு

நீங்களே பீற்றிக்கொள்ளுங்கள்

நன்றி : வாயாடிக் கவிதைகள் – பெருந்தேவி – பக்கம் : 112 – விலை : 100 – முதல் பதிப்பு : டிசம்பர் 2016 – வெளியீடு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 – தொலைபேசி எண்: 9444113205 – 9176613205

பின் குறிப்பு : 

பெருந்தேவியின் முதல் கவிதை விருட்சம் இதழில்தான் பிரசுரமானது.  ரொம்ப வருடங்களுக்கு முன்னால்.  சமீபத்தில் அவருடைய இரண்டு கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன்.  ஒரு தொகுப்பின் பெயர் அழுக்கு சாக்ஸ். மே 2016ல் இத்தொகுப்பு வந்தது.  அந்த முறை புத்தகக் கண்காட்சியில் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆன புத்தகம் இது.  ஒரு கவிதைத் தொகுதி இந்த அளவிற்கு விற்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை.  உடனேயே அவருடைய இரண்டாவது கவிதைத் தொகுதியான வாயாடிக் கவிதைகளையும் டிசம்பர் 2016ல் கொண்டு வந்துள்ளேன்.  ஒரே ஆண்டில் பெருந்தேவியின் இரண்டு கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்துள்ளேன்.  குறிப்பிடும்படியான பெண் கவிஞர் பெருந்தேவி.  அவர் கவிதைகள் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியாகவும் மேலும் விதவிதமான உணர்வுகளை கவிதை மூலம் உருவாக்குவதிலும் பெரும் வெற்றி அடைந்துள்ளன.  ஒவ்வொரு கவிதைத் தொகுதியிலும் வேறு வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  வாயாடிக் கவிதைகள் தொகுதி அழுக்கு சாக்ஸ் கவிதைத் தொகுதியை விட வித்தியாசமான தொகுப்பு.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 70

மிதிவண்டித் திருடன்

 

ராணிதிலக்

                                                                                                              

மாட்டி இருக்கவேண்டிய இடத்தில் சாவி இல்லை.  தேடத் தொடங்கினேன்.  எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத ஒருவன் அந்தத் தெருவில் பிறந்து, இந்தத் தெருவில் நுழைகிறான்.  நான் சாவியைத் தேடுகிறேன்.  பூட்டப்படாத வண்டியைத் தொடுகிறான். நான் சாவியைத் தேடுகிறேன்.  திறந்த தெருவில் ஒருவன் வண்டியை ஓட்டிச் செல்கிறான்.  சாவி எனக்குக் கிடைத்து விட்டது.  பூட்டின கதவைத் திறந்து, வெளியே பார்த்தேன்.  தன்னைப் பூட்டிக்கொண்டு வண்டி நிற்கிறது.  நெருக்கமான சாலையில், யாருடைய வண்டிகளையோ, யார் யாரோ ஓட்டியபடி மறைகிறார்கள்.  அவர்களுக்கு இடையில், என் கற்பனையில் காணாமல் போன மிதிவண்டியை, இன்னும் பிறக்காத, இப்போது எங்கோ வாழ்கிற, எப்போது இறந்த, நான் பார்த்து, யாரும் பார்க்காத ஒருவன், எனக்குத் தெரிந்து, யாருக்கும் தெரியாத மிதிவண்டியை, பூமியின் எல்லா சாலைகளிலும் ஓட்டிக்கொண்டே இருக்கிறான்.  சாவித் திறந்து விட்டது.  அவன் ஓட்டுவரை நிறுத்தவே இல்லை.

நன்றி : நாகதிசை – கவிதைகள் – ராணிதிலக் – உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்றை 600 018 – பக்கங்கள் : 80 – விலை : 40 ரூபாய்  

பின் குறிப்பு : 

ஸ்ரீ நேசனும், ராணிதிலக்கும் நண்பர்கள். கவிதைகள் எழுதுபவர்கள். இருவரையும் அப்போதெல்லாம் அடிக்கடி பார்ப்பேன். இப்போது இல்லை. இருவர் கவிதைகளையும் ஒரு முறை என் வீட்டு மொட்டை மாடியில் தென்னங்கீற்று நிழலில் அவர்கள் மூலம் வாசிக்கக் கேட்டேன். உடனே விருட்சத்தில் அவற்றை பிரசுரித்தேன்.  அவர்களுடைய நண்பர்களின் கவிதைகளையும் பிரசுரம் செய்தேன். இருவரும் திறமையான கவிஞர்கள்.  ஸ்ரீ நேசன் நேரிடையாக கவிதைக்கு வந்து விடுவார்.  ராணி திலக் அப்படி இல்லை.  ஆனால் நாகதிசை என்ற இத் தொகுதி வித்தியாசமாக இருக்கிறது.

க நா சு, நகுலன் பாணியில் வித்தியாசமாக எழுதியிருக்கிறார்.  அந்தத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 69

நீ மணி; நான் ஒலி!

கவிஞர் கண்ணதாசன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்;

üஅனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவ னேநீ ஏன் எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
அனுபவம் என்பதே நான்தான்ý என்றான்!

நன்றி : கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் – தொகுப்பு : சி ஆர் ரவீந்திரன் – மொத்தப் பக்கங்கள் : 365 – விலை : ரூ.150 – இரண்டாம் பதிப்பு : 2014 – வெளியீடு : சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018 –

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 67

வீடு

அய்யப்பமாதவன்

அந்தரத்தில் தேடுகிறேன் ஒரு வீடு
சதுரம் சதுரமாய்
நீள்கின்றன குறுகுகின்றன
வைரங்களுக்குப் போல் விலைகள்
இன்னும் இன்னும் சுற்றுகின்றேன்
கற்பனையில் சொந்தமாகும்
வீடுகளில் புத்தக அலமாரிகளை
நிர்மாணிக்கின்றேன்
பால்கனியில் மனைவி பூந்தொட்டிகள்
வாங்கி பராமரிக்கின்றாள்
சமையலறை அவள் விருப்பத்திற்கு
விட்டுவிட்டேன்
நடு கூடத்தில் கலர் டிவி
இரண்டு சேர் வைத்தாகிவிட்டது
குழந்தை படங்கள்
மாட்டியாகிவிட்டது
சாமி அறையைத் தீர்மானிப்பதில் குழப்பம்
படுக்கையறையில் பீரோக்கள் வைத்தாயிற்று
கட்டில் போட இடமில்லை
நானும் அவளும்
புனையும் கற்பனையில்
வீடுகளை சொந்தமாக்கிக்
கொண்டே இருக்கிறோம்.

நன்றி : நீர்வெளி – கவிதைகள் – அய்யப்ப மாதவன் – வெளியீடு: அகரம், மனை எண் 1. நிர்மலா நகர், தஞ்சாவூர் – வெளியான ஆண்டு : டிசம்பர் 2003 – விலை : ரூ.35

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 66

இன்னும் சில பிணங்கள்

ந பிச்சமூர்த்தி

பணமென்றால் பிணமும் வாய்திறக்கும்
எனக்குத் தெரியாது
பணமென்றால்
ந. எண்ணையும்
தே. எண்ணையும்
கத்திரிக்காயும்
கல்யாண மண்டபமும்
இன்னம் என்னவெல்லாமோ
வாய்பிளப்பது
எனக்குத் தெரியும்
நாமும் வாயைப் பிளக்க வேண்டியது தான்.

நன்றி : ந பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கவிதைகள் – தொகுப்பு : ஞானக்கூத்தன் – வெளியீடு ; சாகித்திய அக்காதெமி, தலைமை அலுவலகம், ரவீந்திர பவன், 35 பெரே8ôஸ்ஷா சாலை, புதுதில்லை 110 001 – மொத்தப் பக்கங்கள் : 176 – விலை : 65 – முதல் வெளியீடு : 2000

கவனம் 7வது இதழ் கிடைத்துவிட்டது

 

1981ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் கவனம் என்ற சிற்றேடு ஞானக்கூத்தன் ஆசிரியர் பொறுப்பில் வெளிவந்தது.  அந்த இதழைக் குறித்து ஒரு சிறிய குறிப்பு கணையாழி பத்திரிகையில் அசோகமித்திரன் எழுதியிருந்தார்.  அந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணி சென்று ஆர் ராஜகோபாலன் என்பவரின் வீட்டில் கவனம் பத்திரிகையின் முதல் இதழை விலைக்கு வாங்கினேன்.  முதல் இதழ் விலை 75 காசுக்கள்.  நான் மேற்கு மாம்பலத்திலிருந்து பஸ்ûஸப் பிடித்து திருவல்லிக்கேணி வந்து கவனம் பத்திரிகையை வாங்கினேன்.

கவனம் என்ற பத்திரிகை மார்ச்சு 1981 ஆண்டிலிருந்து மார்ச்சு 1982 வரை 7 இதழ்கள்தான் வெளிவந்தன.  நான் இந்த கவனம் இதழ்களை பத்திரமாக எடுத்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்.  ரொம்ப ஆண்டுகள் ஆகிவிட்டதால், 6 இதழ்கள் கொண்ட கவனம் இதழ்களைத்தான் பைன்ட் செய்திருந்தார்.

ஆனால் 7வது இதழ் என்ற ஒன்று வரவில்லை என்று நினைத்திருந்தேன்.  என் நண்பர் ஒருவர் 7 இதழ்கள் கவனம் வந்திருக்கிறது என்று சொன்னவுடன், அந்த 7வது இதழைக் குறித்து என் கற்பனை போகாமல் இல்லை.

இனிமேல் 7வது இதழ் கிடைப்பதற்கே வாய்ப்பு இல்லை என்றே எனக்குப் பட்டது.  ஆனால் எதிர்பாரதாவிதமாக நேற்று என் புத்தகக் குவியலைப் பார்த்தபோது, 7வது இதழும் கண்ணில் பட்டது. எனக்க ஒரே ஆச்சரியம்.  அதில் பிச்சை என்ற தலைப்பில் ஆத்மாநாம் ஒரு கவிதை எழுதியிருப்பார்.  ஆத்மாநாமின் இந்தக் கவிதையைக் காட்டி இதற்கு என்ன அர்த்தம் என்று ஒரு பெண் அதிகாரியிடம் கேட்டிருக்கிறேன்.  ஓரளவு தமிழ் படிக்கிற அதிகார் என் வங்கிக் கிளையில் அவர் ஒருவர்தான்.  அந்தப் பெண்மணிதான் ஒருமுறை டூவீலரில் கணவருடன் ஜிஎஸ்டி ரோடில் செல்லும்போது விபத்தில் கீழே வந்து வயிற்றில் பின்னால் வந்த வண்டி ஏறி இறந்து போய்விட்டார்.

இந்த இதழில் வெளிவந்த ஆத்மாநாமின் பிச்சை என்ற கவிதையைப் படிக்கும்போது இந்தச் சம்பவம் என் ஞாபகத்திற்கு வந்து மனதை சங்கடப்படுத்தும்.

பிச்சை என்கிற கவிதையை இங்கு தர விரும்புகிறேன்

பிச்சை

நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் பúô

பிச்சை பிச்சை என்று கத்து

பசி இன்றோடு முடிவதில்லை

உன் கூச்குரல் தெரு முனைவரை இல்லை

எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்

உன் பசிக்கான உணவு

சில அரிசி மணிகளில் இல்லை

உன்னிடம் ஒன்றுமே இல்லை

சில சதுரச் செங்கற்கள் தவிர

உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை

உன்னைத் தவிர

இதைச் சொல்வது

நான் இல்லை நீதான்…..

 

.

இரண்டு பூனைகள்

ஒரு கருப்புப் பூனை
நாற்காலி மீது அமர்ந்து கொண்டு
என்னைப் பார்த்து
மியாவ் என்றது..

இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும்
கலந்த நிறத்தில்
நாற்காலி கீழே அமர்ந்திருந்தது.
என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று
இரண்டு முறை கத்தியது

நான் பேசாமல் வந்து விட்டேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 65

குழந்தைகள்

 

பொன். தனசேகரன்

 

காகிதங்களில் கிறுக்கட்டும்

குழந்தைகள் விருப்பம்போல;

திட்டாதீர்கள்.

சுதந்திரமாக

வார்த்தைகளைக் கொட்டட்டும்;

தடுக்காதீர்கள்.

விரும்பாததைக் கேட்டு

முரண்டு செய்யலாம்:

அடிக்காதீர்கள்.

உங்கள் பழக்கங்களை

மிரட்டித் திணிக்காதீர்கள்.

விளையாட்டுப் பொருள்களைக்

கொடுத்து

கவனத்தைத் திசை திருப்பாதீர்கள்.

நடைவண்டி இல்லாமலே

நடை பழகும்

குழந்தைகள்


நன்றி : காற்றிலும் மழையிலும் கைவிளக்கு – கவிதைகள் – பொன்.தனசேகரன் – பக்கம் : 80 – வெளியான ஆண்டு : 2005- விலை : ரூ.50. – வெளியீடு : கலைஞன் பதிப்பகம், தி நகர், சென்னை 17.