மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 80

பிரதீபன் கவிதை

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பதுபோல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை

நன்றி : கண்மறை துணி – கவிதைகள் – பிரதீபன் – வெளியீட்டாளர் : பிரதீபன், 25கே, ஜோதிநகர் 4வது தெரு, காமராஜ் மீட்டிங் ஹால் எதிரில், கோவில்பட்டி – 628 501 – விலை : ரூ.125 – பக்கங்கள் : 240

மறந்துபோன பக்கங்கள்

இலக்கிய அனுபவம்

தி.சோ. வேணுகோபாலன்

சொல்வ திரண்டு வகை;
சிந்தித்துச் சொல்லல்;
சிந்தை இலையாதல்;
கரகம் அல்லது
கண்கட்டு :
இரண்டுக்கும்
பொருள்
சொன்னவன் புலவன்!
கண்டவன் கவிஞன்!
முழிப்வன்
நீயும் நானும் கேவலம்
வாசகக் கும்பல்!

கோடை வயல் புத்தகத்திலிருந்து எடுத்தது.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 79

 

அடகுக் கடை

 

பத்மஜா நாராயணன்

 

எல்லா அடகுக் கடையுள்ளும்

எப்போதும் ஒரு பெண்

எதையாவது அடகுவைக்க

காத்திருக்கிறாள்.

அது அவள்

புன்னகையாக நிச்சயம் இருக்காது

விற்றுவிட்ட ஒன்றை

அவள் எப்படி திருப்பிவைக்க இயலும்?

சிலநேரம்

அதிகாலையில் அடகுக்கடைக்குச்

செல்பவள்

ஏதோ ஒன்றை திருப்பத்தான்

சென்றிருப்பாள்

அப்போது அவள் தொலைத்த புன்னகையை

அக்கடைக்காரன்

கொசுறாக அவளிடம் கொடுத்துவிடுகிறான்.

மற்றோர் இரவு

மீண்டும் அங்கு வரும் வரையில்

அவள் அதை சுமந்துகொண்டு

அலைகிறாள்

எது எப்படியிருந்தும்

இரவு நேரங்களில்

அடகுக் கடை ஏகும்

பெண்களின் எண்ணிக்கை

குறையவே போவதில்லை

அவர்களின்

துயரைப் போலவே!

நன்றி : தெரிவை – கவிதைகள் – பத்மஜா நாராயணன் – மொத்தப் பக்கங்கள் : 64 – வெளியீடு : டிசம்பர் 2013 – விலை : ரூ.50 – வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிட் – 6 முனுசாமி சாலை, மேற்கு கே கே நகர், சென்னை 600 078 – தொலைபேசி : 044 – 65157525

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 78


கனவுச் சிறைகள்


மு நடராசன்


இயற்கை அழகில்

அடிமைப்பட்டு

இலட்சிய வெறியில்

அலைந்து திரிந்து

கனவுச் சிறையினில்

கைதியானேன்.

நன்றி : நிலாமுற்றம் வெளியீடு – மு நடராசன் – கவிதைகள் – வெளியான ஆண்டு : 1981 – மொத்தப் பக்கங்கள் : 64 – விலை : ரூ.4 – இந்தப் புத்தகம் இப்போது விற்பனைக்கில்லை.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 77

அம்மாவும் அப்பாவும்

 

ஹேச் ஜீ ரசூல் 

ஒன்றும் சொல்லவில்லை அப்பா

 

சாயங்காலம் முழுவதும்

நான்பாண்டி விளையாடியபோதும்

தம்பி கிட்டிப்புள் விளையாடிவிட்டு

பக்கத்து வீட்டுப்பையனை

அடித்துவிட்டு வந்தபோதும்

 

கிளாஸிலே முதல் மார்க்கெடுத்து

நான் பாஸôன போதும்

எட்டாம் கிளாஸில்

இரண்டாவது தடவை

தம்பி பெயிலான போதும்

 

இடையே ஒரு தடவை

வாய்திறந்தார் அப்பா.

 

இப்போதெல்லாம்

ஏழுமணிக்கே பொங்கி சமச்சு

சாதம் கெட்டி கொடுக்கணூம்

காலேஜ÷க்கு போகும் தம்பிக்கு

 

இப்போதைக்கு ஒன்றும் சொல்வதில்லை

அம்மா மட்டும்

அப்பா எதைச் சொன்னாலும்

தலையாட்டிக் கொண்டே.

 

நன்றி : பூட்டிய அறை – ஹெச் ஜி ரசூல் – மொத்தப் பக்கங்கள் : 88 – வெளியீடு : திணை வெளியீட்டகம், 30 பகவதி லாட்ஜ், நாகர்கோவில் – வெளியான ஆண்டு : மே 1998 – விலை : ரூ.30

பின் குறிப்பு : மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் நான் 100 கவிதைகளை கவிதை நூல்களிலிருந்து மட்டும் எடுத்துப் புத்தகமாகக் கொண்டு வர உள்ளேன்.  ஆனால் என்னிடம் கைவசம் 400க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.  இன்னும் சில கவிதைப் புத்தகங்கள் நான் வாங்கவும் வேண்டும்.  எப்படி இதில் 100 கவிதைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை.  அதனால் முதல் நூறு, இரண்டாவது நூறு என்று கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன்.  ரசூல் அவர் கைப்பட கையெழுத்துப் போட்டு அனுப்பிய கவிதைத் தொகுதி இது. சில தினங்களுக்கு முன் தற்செயலாக இந்தப் புத்தகம் கண்ணில் தட்டுப்பட்டது.  எளிமையான வரிகளின் மூலம் பல உண்மைகளை சொல்லாமல் சொல்வதுதான் கவிதை.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 76

அந்நியன்

 

சிற்பி

எப்போதும்

என் பின்னால்

யாரோ வருகிறார்கள்

அவன் முகத்தை

நான் அறியேன்

ஆயினும் அவன் இருக்கிறான்

கண்ணுக்குத் தெரி0யாத

மாயாவி அவன்

என் அசைவு ஒவ்வொன்றும்

அவனுக்குள் பதிவாகி விடுகிறது

உண்ண அமர்ந்தால்

உடன் அவனும்

அமர்வதுபோல் தெரிகிறது

தெருவில் நடந்தால்

உரசிக் கொண்டே

நடப்பதாய் உணர்கிறேன்

பத்திரிகை வாங்கினால்

எனக்கு முன்

அவன் அதைப் படித்து விடுவதாய்

பிரமை

யாரையேனும் சந்தித்தால்

அவர்கள் அடையாளங்களும்

குறிக்கப் படுவதாய்த் தெரிகிறது

மேடையில் போனிôல்

üஜாக்கிரதைý என

எச்சரிக்கப்படுவதாய்

உள்ளூணர்வு

படுக்கை அறையில்

மனைவியின் முகம் பார்க்க

எத்தனிக்கையில்

சுற்றியது இனம்புரியா

மூச்சுக் காற்றின்

வெப்பம்

எப்போதும் என் பின்னால்

யாரோ வருகிறார்கள்

நன்றி : கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை – சிற்பி – கவிதா பப்ளிகேஷன், தபால் பெட்டி எண் : 6123,  8 மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி நகர், சென்னை 600 017 – தொலைபேசி எண் : 2436423 – வெளியான ஆண்டு : மே 2016 – விலை : ரூ.80

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 75

 

இருளில் நகரும் யானை

மனுஷ்ய புத்திரன்

வனப்பாதையின்

இரவுப் பயணத்தில்

திடீரென காரோட்டி

‘யானை யானை’

என்று கிசுகிசுத்தபடி

விளக்குகளை அணைத்தான்.

சாலைக்கு வெகு அருகாமையில்

மூங்கில் வனம் நடுவே

யானைக் கூட்டம்

இருளில் மேகக் கூட்டங்கள்போல

நகர்ந்து கொண்டிருந்தன

எத்தனை ஆயிரம் ஆண்டுகள்

இரவெல்லாம் இதுபோல

யானைகள்

இருளிலேயே நடந்துகொண்டிருக்கின்றன

வேறொரு இடத்தில்

காரோட்டி

ஒரு புதருக்குள் ஹெட் லைட்டைத்

திருப்பிக்காட்டினான்

ஒரு பெரிய ஒற்றை யானை

தனியாக நின்றுகொண்டிருந்தது

அதன் கண்களில் நீர்

‘இருளில் அழும் யானைகள்’

ஒரு வாக்கியம் மனதை அழுத்தியது

‘நாம் நம் குடிலுக்குத் திரும்பிவிடலாம்’

என்றேன்.

இப்போதெல்லாம்

நான் என் அறையில்

விளக்கைப் போடாமல்

இருளிலேயே குளிக்கிறேன்

இருளிலேயே தொலைபேசியில் பேசுகிறேன்

இருளிலேயே துணி துவைக்கிறேன்

இருளிலேயே மேசையை ஒழுங்குபடுத்துகிறேன்

இருளிலேயே தரையை பெருக்குகிறேன்

இருளில் ரேடியத்தில் ஒளிரும்

கைக்கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்

இருளில் புழங்குவதில்

ஒரு எடையற்ற தன்மை இருப்பதை

நான் வெகு அண்மையில்தான் கண்டுபிடித்தேன்

வனத்தின் இருளில் நகரும்

ஒரு யானை

எப்படியோ

என் அறைக்குள் வந்துவிட்டது

நன்றி : இருளில் நகரும் யானை – மனுஷ்ய புத்திரன் – கவிதைகள் – உயிர்மை பதிப்பகம் – 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 016 – பக்கங்கள் : 232 – விலை : ரூ.275 – தொலைபேசி எண் : 044 24993448

பின் குறிப்பு :

80களில் சிறுபத்திரிகைகளில் பிரம்மராஜனும், விக்கிரமாதித்யனும்தான் அதிகமாகக் கவிதைகள் எழுதுவார்கள். பிரம்மராஜனின் கவிதைகள் ஒருவிதம் என்றால், விக்கிரமாதித்யன் கவிதைகள் வேறு விதம்.  இறுக்கமான நடையில் பிரம்மராஜன் கவிதைகளை எழுதி விடுவார். விக்கிரமாதித்யனோ வெகுசுலபமாய் கவிதைகளை எழுதித் தள்ளிவிடுவார்.  படிப்பவர்கள் விக்கிரமாதித்யன் கவிதைகளைப் பார்த்து நாமும் எழுதலாமா என்று நினைப்பார்கள். ஆனால் பிரம்மராஜன் கவிதைகளை நெருங்கவே மாட்டார்கள். இவர்கள் இருவரில் இன்று பிரம்மராஜன் கவிதைகள் எழுதுகிறாரா என்று தெரியவில்லை.  ஆனால் விக்கிரமாதித்யன் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்.

மேலே சொன்ன இருவர்களைப் போல் இன்று அதிகமாக கவிதைகள் எழுதும் மனுஷ்யப்புத்திரன் பிரம்மராஜனைப் போல் இறுக்கமான நடையில் எழுதவில்லை.   விக்கிரமாதித்யனைப் போல் தாராள நடையிலும் எழுதவில்லை. இந்த இரண்டு கவிதை முறைக்கும் நடுவில் உள்ள ஒரு போக்கு இவர் கவிதைகளில் தென்படுகின்றன. கவிதையை ஒரு முறை படித்தப் பின்பும் இன்னொரு முறை எடுத்துப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது.

விருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள் – 2

 
ஜோர்ஜ் லூயி போர்ஹே
 
 
 
தற்கொலை
 
 
தனித்த ஒரு நட்சத்திரத்தைக்கூட விட்டுவைப்பதாயில்லை இரவில்
இந்த இரவையும் விட்டுவைப்பதாயில்லை
 
நான் மடிந்து விடுவேன். என்னுடன்
சகிக்க முடியாத இந்த அண்டத்தின் சுமையும்.
 
பிரமிடுகளையும், பெரும் பதக்கங்களையும்,
கண்டங்களையும், வதனங்களையும் நான் துடைத்துவிடுவேன்.
 
சேமிக்கப்பட்ட கடந்த காலத்தையும் நான் துடைத்துவிடுவேன்
 
நான் உண்டாக்குவேன் புழுதியை, வரலாற்றிலிருந்து, புழதியிலிருந்து
 
இப்போது நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் அந்திமகால அஸ்தமனத்தை
 
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இக் கடைசிப் பறவையை.
 
நான் தருகிறேன் சூன்யத்தை இங்கு ஒருவருமே இல்லாதபோது
 
மூலம் : ஸ்பானிய மொழி
ஆங்கிலம் வழி தமிழில் : அஷ்டாவக்ரன்
 
(நவீன விருட்சம் ஜனவரி – மார்ச்சு 1989)

விருட்சத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புக் கவிதைகள்

விருட்சம் ஆரம்பித்த 1988ஆம் ஆண்டிலிருந்து மொழிபெயர்ப்புக் கவிதைகளும் விருட்சத்தில் பிரசுரம் ஆகிக் கொண்டிருந்தன.  பலர் மொழிபெயர்ப்புக் கவிதைகளை விருட்சத்தில் எழுதி உள்ளார்கள்.  அவற்றை எல்லாம் தொகுக்கும் எண்ணம் உள்ளதால், ஒவ்வொன்றாய் முகநூலிலும், பிளாகிலும் வெளியிடுகிறேன்.

நார்மன் மேக்கே 

கவிஞன்

சம்பவங்கள்

அவனை

நெருக்கடியான நிலையில்

தள்ளித்

துன்புறுத்தின.

வறுமை, சமுகம், நோய் –

எல்லாப் பக்கங்களிலிருந்தும்

அவனைத் தாக்கின.

அவற்றால்

அவனை மௌமாக்க முடியவில்லை

கல்லெறியப்பட்ட காக்கை

முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத

வகையில் எல்லாம்

தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல

முன்னைவிட

மேலும் பல கவிதைகள்

அவன் எழுதினான்

எல்லாம் வெவ்வேறாக

இப்போது

சிரமமில்லாது

சமநிலையில் பறப்பதைத்

தொடருமுன்

மக்களின் தலைகளுக்கு மேலே

அவர்கள் வீசியெறியும் கற்கள்

தன் மீத படாத உயரத்தில்

சில சமயங்களில்

திடீரென

அவன்

தடுமாறுகிறான்

தடைப்பட்டு நிற்கிறான்

பக்கவாட்டில் சுலு;கிறான்

இதில் என்ன ஆச்சர்யம்!

மூலம் : ஆங்கிலம்

தமிழில் : கன்னி

நார்மன் மேக்கே ஒரு பிரபல ஸ்காட்லாந்து கவிஞர்.  தனது 75வது வயதில் 26.02.1986ல் காலமான இவர், 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார்.  இத் தொகுதியிலிருந்து பல கவிதைகளும் இதுவரை வெளியிடாதிருந்த நூறு கவிதைகளையும் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியை 1985ல் வெளியிட்டார்.  இதற்கு இங்கிலாந்து அரசின் தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டது.  ராபர்ட்கிரேவ்ஸ், டபிள்யூ எச் ஆடன், ஸீக்ஷபிரிட் ஸஸரன், ஸ்டிஃபன் ஸ்பென்டர் முதலியவர்கள் இப் பரிசை முன்பே பெற்றுள்ளனர்.  

                                                                    (நவீன விருட்சம் அக்டோபர் – டிசம்பர் 1988)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 74

ஒழிந்த நேரங்கள்
 
 
காளி-தாஸ்
 
 
 
நான்
ஒழிந்த நேரத்தில் பிறந்தேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் வளர்ந்தேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் படித்தேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் எழுதினேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் விளையாடினேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் காதலித்தேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் சம்பாதித்தேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் கல்யாணம் செய்தேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் புணர்ந்தேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் பிள்ளை பெற்றேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் குடித்தேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் தூங்கினேன்
 
நான்
ஒழிந்த நேரத்தில் சாமி கும்பிட்டேன்
 
நண்பர்களே வாருங்கள்
ஒழிந்த நேரம் பார்த்து
ஒழிந்த நேரம் ஒன்றில்
நான் செத்துப் போகும் முன்…….
 
 
நானும் நானும் – காளி-தாஸ் – கவிதைகள் – மொத்தப் பக்கங்கள் : 48 – விலை : ரூ.50 – முதல் பதிப்பு : மையம் வெளியீடு – இரண்டாம் பதிப்பு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை – 33 – தொடர்புக்கு : 9444113205
 
பின் குறிப்பு :
 
காளி-தாஸ் என்ற பெயரில் கவிதைகளை எழுதியவர் ஸ்டெல்லா புரூஸ். அவர் இயற்பெயர் ராம் மோகன். கவிதைகள் மட்டும் அல்ல, சிறுகதைகள், நாவல்கள் என்று எழுதிய பிரபல எழுத்தாளர். அவருடைய பிறந்த நாள் 08 ஆகஸ்டில் வருகிறது. இன்றிருந்ôôல் அவருக்கு 77வயது நிரம்பியிருக்கும். மனைவி இழந்த துக்கம் தாங்காமல் மார்ச்சு 2008ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கவிதைகள் எளிமையானவை. எனக்கு இரண்டு விதமான கவிதைப் போக்கு இருப்பதாக தோன்றுகிறது. புரிகிற கவிதை புரியாத கவிதை என்று. புரியாத கவிதை வகையில் பாதி புரிந்த கவிதை, பாதி புரியாத கவிதை என்று உண்டு. பாதி புரியாத கவிதையைப் படிப்பவர்கள் கவிஞர் எதாவது எழுதியிருப்பார், படிப்பவர் ஏதோ புரிந்து கொள்வார். தன் மனநிலையை எளிதாக மற்றவர்கள் அறியும்படி காளி-தாஸ் புரியும்படி கவிதைகள் எழுதி உள்ளார். ஆனால் அவர் தற்கொலைதான் எனக்குப் புரியவில்லை. அவர் பிறந்த தினம் ஞாபகமாக இக் கவிதையை இங்கு அளிக்கிறேன்.