மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 85

நண்பனுக்கு

கு ப ராஜகோபாலன்

ஓயாமல் எண்ணியும் பேசியும்,
சளைத்துப் போய்விட்டோம் அல்லவா?
வார்த்தையை வைத்து வாதாடி
வீண்வித்தியாசம் கொண்டோம், போதும்!

மாயையும் தத்துவமும் என்ன
என்று தெரியவே வேண்டாம் ;
கண்கண்ட சுகத்தைக் கடைந்து
உண்போம், இனிமேல், வா!

இல்வாழ்க்கை நதி வரண்டு
மணலாகும் மரணம் வரை
அதன் கரை புரளும் வெற்றியை
ஒப்புக் கொள்வோம், அதனாலென்ன?

உயிரின் இன்ப ஊழியத்தில்
அடிமைகளாவோம், பாதகமில்லை!
ஆத்மா, பரமாத்மா – இந்தப் பேச்சு –
யுகம் யுகமாக, காது துளைத்துப்போச்சு!

அது வேண்டாம் நமக்கு !
மதுக் கிண்ணத்தைப் பற்றி பேசினானே –
அவன் யார் ? – உமர்கயாம் –
அவனைத் தொடர்வோம், அப்பா!

நன்றி : சிறிது வெளிச்சம் – கு ப ராஜகோபாலன் – வாசகர் வட்டம் – 14 தணிகாசலம் செட்டி ரோடு, தியாகராய நகர், சென்னை 17 -வெளிவந்த ஆண்டு : 1969 – விலை : ரூ.7

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 84

அமர்ந்திருக்கும் நெடுங்காலம்

ஸ்ரீஷங்கர்

நீ என்பது
எனக்கு
துலங்கும்
வெம்மைமிகு தாபச் சொற்கள்
என்னில் புத்துயிர்களை ஈணுவது

நான் என்பது உனக்கு
உனது நீர்மையில்
அடியுறக்கம் கொள்ள அனுமதித்திருக்கும் மீன்

சிலவேளை
சிறு சலனம்கூட அற்ற
பூட்டிய கதவுகளுக்குக்கீழ்
அமர்ந்திருக்கும் என் நெடுங்காலமும்தான் நீ

நானென்பது
உன் விருப்பத்துக்கென குற்றங்கள் புரிய
நீ நியமித்திருக்கும் ஒப்பந்தக்காரன்

எனக்கு நீ
உறங்கும் என் குறியின்மேல்
அலைந்து கொண்டிருக்கும் பூரான்
அதன் துளைக்குள் பரபரத்து நுழைவது

மேலும்
நீ என்பது எனக்கு
தனித்து கரையில் அமர்ந்திருக்கும்
பசித்த உயிரை
இரை காட்டி அழைக்கும் தெப்பம்

நானோ
நீ தரும் மாமிசம் உண்டு
உயிர்த்திருக்குமுன் வளர்ப்பு விலங்கு

நீயோ
என்னைத் தெரிவிக்கமுடியாதபோது
தரித்தயென் ஆடைகளிலிருந்து
கழற்றிவிட்டுக்கொள்ளும் முழுப்பொத்தான்களும்தான்

நானுனக்கென்பது
உனை மீட்டெடுக்கும் கனவுகளின்மேல் நீ
உருவாக்கிக்கொண்டிருக்கும்
சித்திரத்தய்யல்

நீயெனக்கென்பது
உன்னோடு கிடந்து
நாம் இல்லாது போக விரும்பும் புலன்களின் காமத்தை
ஆராதிப்பவள்
மற்றும்
எனது வீடு பேறு

நன்றி : திருமார்புவல்லி – ஸ்ரீஷங்கர் – கவிதைகள் – ஆதி பதிப்பகம் – மாரியம்மன் கோயில் தெரு, பவித்திரம், திருவண்ணாமலை – விலை ; ரூ.60 செல் : 999488000

கு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பல் கல்யாணராமன் பேசிய பேச்சின் முதல் பகுதி

கிட்டத்தட்ட முக்கயமான சில கதைகளைக் குறித்த கல்யாணராமன் ஆற்றய உரை மூன்று பகுதிகளாக வந்துள்ளன. முதல் பகுதியை இன்று அளிக்கிறேன். உங்கள் கருத்துக்களைப் பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

சுக்வீர் கவிதைகள்

2. வண்ணங்கள்

வண்ணங்கள் சாவதில்லை
அவை கரைந்து விடுகின்றன
அல்லது அடித்துக் கொண்டு போகப்படுகின்றன
அல்லது பூமியின் அந்தகாரத்தில்
விதைக்கப்படுகின்றன.
வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன,
மேகங்களின் ஒளிர்ந்து
உதடுகளில் புன்னகை பூக்கின்றன,
கண்ணீரைப் பெருக்கி
ஒளியை ஈன்றெடுக்கின்றன.

வண்ணங்களாகிய நாம்;
வண்ணங்கள் உருவாக்கும் நாம்
வாழ்க்கையை
நம் முதுகுகளில் சுமந்து கொண்டோ
நம் பின்னால் இழுத்துக் கொண்டோ
நம் சிறகுகளில் அலைத்துக்கொண்டோ
இங்கு வந்து சேர
நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம்,

இருள் முதல் ஒளிவரை உள்ள
எல்லா வண்ணங்களுமான நாம்
பல தடவைகளில்
அடித்துக்கொண்டுபோகப்பட்டு
மறுபடியும் பிறந்திருக்கிறோம்.
இன்றும்
காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம்

அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம்
வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால்
இன்றும்
நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச்
சுவைக்கிறோம்
கனவுகளை உருவாக்குகிறோம்

மூலம் : பஞ்சாபி தமிழில் : மேலூர்

சுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. நாற்பத்தைந்து நூல் களுக்கு மேலாக பஞ்சாபியில் மொழி பெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளும் கதைகளும் ஆங்கிலத்திலும் வேறுபல இந்திய, அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 83

தேவராஜ் விட்டலன் கவிதை

வளைந்த
மரக்கிளையில்
அமர்ந்து கொண்டு
சப்தமிடுகிறது
ஒரு சிட்டுக் குருவி…
.விடுபட்ட
சொந்தங்களை
சப்தமிட்டு
அழைக்கிறது…
யாரும் வராத
கணத்தில்
ஏக்கத்தோடு
பறந்து செல்கிறது
மரக்கிளையை
விட்டு.

நன்றி : ஜான்சிராணியின் குதிரை – கவிதைகள் – தேவராஜ் விட்டலன்- வாசகன் பதிப்பகம், 167 ஏவிஆர் காம்ப்ளக்ஸ், அரýசுக் கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007, கைபேசி : 9842974697 – பக்கங்கள் : 64 – விலை : ரூ.50

சுக்வீர் கவிதைகள்

1. நடத்தல்

நான் நடக்கிறேன்
என் கால்களால் அல்ல
கண்களால் –
சாலைகளையும் தெருக்களையும்
இதயத் தொகுதிகளையும்
இரவின் இருளையும்
கடந்து செல்கிறேன்
சுற்றிலும்
மக்களின் காடு.
என் கண்களின் துணையோடு
அதைக் கடந்து செல்கிறேன்
கண்களுக்கே
அதனூடு செல்லும் திறன் உண்டு.

என் கால்கள் களைத்துவிட்டன
மிகவும் களைத்துவிட்டன.
ஆனால்
நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்
மக்கள் கூட்டங்களில் சிக்குண்டு
நான் முன்னேறிப் போகிறேன்.
என்றாலும்
இதயங்களின் வலி என்னும்
எல்லையைக் கடக்க
என்னால் இயலவில்லை.

நான் நடக்கிறேன்
என் கால்களால் அல்ல
கண்களால் –
ஒரு நீண்ட பயணம்
(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 82

400 கவிதைகளைத் தொகுக்கிறேன்…

இன்னும் சில தினங்களில் மனதுக்குப் பிடித்த கவிதைகளின் தொகுதி 1 பிரசுரமாகிவிடும். 100 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக அது இருக்கும். இதுமாதிரி 100 கவிதைகள் விகிதம் 400 கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன். ஏற்கனவே வெளிவந்த கவிஞர்களின் கவிதைகள் மற்றத் தொகுதிகளில் இடம் பெறாது. எல்லாக் கவிதைகளும் கவிதைப் புத்தகங்களில் வெளியாகி இருக்க வேண்டும். இதுமாதிரி 300 க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகளை வைத்திருக்கிறேன். அதிலிருந்து இன்னும் 300 கவிதைகள் எடுக்க உள்ளேன்.

படிக்கட்டுகளில் அமர்ந்திருப்பவன்

அனார்

கோடை அந்தி நிழல் சாயும்
சதுக்கமொன்றின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தான்

தொலைவுப் பாலத்தின் மேலே
சூரியனையும்
படிக்கட்டுகளில் கீழே
செவ்விரத்தம் பூக்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்

‘முழுச் சிவப்பேறிய சூரியன் பாலத்தின் மத்திக்கு வந்ததும்
கொலை முயற்சி நடந்து கொண்டிருக்கையில்
எதையும் ரசிக்க முடியாதென’
அன்று எழுந்து சென்றுவிட்டான்

படித்துறையில் அமர்ந்தவாறு
தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில்
சேர்ந்து குளிக்கையிலும்
üசடுதியாக வெடித்து
வித்துக்களை உதிர்க்கின்ற பருத்திகள்ý என உலைந்து
நிலை குலையுமொரு துயரப் பாடலையே
விடாமல் பாடிக்கொண்டிருந்தான்

நேர்ந்த விபத்தொன்றின் பிறகு
கடைசியாகப் பார்த்தபொழுது
மணல் குன்றுகளும் தாழை மரங்களும் தாண்டி
பாழைடைந்த பேய் வீட்டின்
உடைந்த குட்டிச் சுவரருகே
காளான்களும் புற்களும்மண்டிய எட்டாவது படிக்கட்டில்

அவன் அமர்ந்திருந்தான்

நன்றி : பெருங்கடல் போடுகிறேன் – கவிதைகள் – அனார் – பக்கங்கள் : 64 – விலை : ரூ.60 – காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், 669 கே பி சாû, நாகர்கோவில் 629001 தொலைப்பேசி : 91-4652-278525

கேரளக் கன்னிக்கு

உன் பாதங்கள் உன் கைகளைப்போல
மென்மையானவை. உன் இடை மிக அழகிய
வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும்
சிந்தனை மிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும்.
வெல்வெட்டுப் போன்ற உன் கண்கள்
உன் மேனியை விடக் கரியவை
நீலமேகங்களும் புழுக்கமும் நிறைந்த
உன் தாய் நாட்டில் உன் முதலாளியின்
புகைபிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து
பாத்திரங்களில் நீரை நிரப்பி
வாசனைத் திரவியங்கள் கலந்து,
தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப்
படுக்கையினின்றும் விரட்டியடித்து,
புலர்ந்து புலராப் பொழுதில்
அத்திமர இலைகளின் வழி
காற்று இசை எழுப்பும் போது
அங்காடியில் அனாசிப் பழமும்
நேத்திர வாழைப்பழமும் வாங்குகிறாய்.
நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம்
வெறுங்காலுடன் சென்று
மறந்துபோன பழம் பாடல்களை
மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய்.
மேற்கே, சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு
சாயும்போது கோரைப்பாயில் நீயும்
மெதுவாகத் தலை சாய்க்கிறாய்.
மிதக்கும் உன் கனவுகளில்
குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும்.
களித்துத் திரியும் கன்னியே,
கடலோடிகளின் வன் கரங்களில்
உன் வாழ்க்கையை ஒப்படைத்து,
உனக்குப் பிடிக்கும் புளிய மரங்களிடம்
இறுதி விடை பெற்று,
கும்பல் மிகுந்து அல்லலுறும் எங்கள் நாட்டை
ஃபிரான்ûஸ, நீ ஏன் பார்க்க விரும்புகிறாய்?
மென்துகிலை இடைவரை உடுத்து. இங்கு
நீ வெண்பனியிலும் ஆலங்காட்டி மழையிலும்
குளிரால் நடுங்குவாய் மிகவும் இறுகிய
முலைக்கச்சை அணிந்து.
உன் அரிய வனப்பின் மணமனைத்தையும் விற்று.
எங்கள் ஒழுக்கக்கேடுகளில்
உன் வயிறைக்ட கழுவநேர்ந்தால்
உன் இனிய, எளிய, அமைதியான வாழ்வை
எண்ணி எண்ணி எவ்வாறு நீ ஏங்குவாய்?
எங்கள் நாட்டுக் கனத்த மூடுபனியூடே
மறைந்து போகும் உன் நாட்டுத்
தென்னை மரங்களின் பொய்த்தோற்றங்களை
எப்படித்தேடுவாய்?

மூலம் : பிரெஞ்சு

ஆங்கிலம் வழி தமிழில் : அமுதன்

சார்லஸ் போதலேர் (1821-1867) ஃபிரென்சு நாட்டுக் கவிஞர்களில் சிறந்த ஒருவர். வறுமை, பிணி, மனக் கசப்பு எல்லாம் அவர் வாழ்க்கையைப் பாழடித்தன. அவரது கவிதைத் தொகுதி தீயது எனத் தீர்ப்புக்கூறப்பட்டது. ஆனால் அவரைக் குற்றமற்றவர்கள் என்றார்கள். 1946-ல் ஒரு பிரத்யேகச் சட்டத்தை இயற்றி, அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டு மத்தியில் போதலேர் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இக் கவிதை எழுதப்பட்டிருக்கலாம்.

(நவீன விருட்சம் ஏப்ரல் – ஜ÷ன் 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 81

கண்ணாடி

குட்டி ரேவதி

இறுகி மௌனித்துக் கிடக்கிறது
குளம்

ஒரு கல்லாய் நிழலை எறிந்து போகிறது
பறவை

இப்பொழுதும் குளம்
இறுகிய முகத்துடன்

நன்றி : யானுமிட்ட தீ – கவிதைகள் – குட்டி ரேவதி – பக்கங்கள் : 78 – வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310, திருச்சி மாவட்டம் – விலை : ரூ.60.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள் – 3

ஆற்றங்கரை வணிகனின் மனைவி

ஒரு கடிதம்

என் தலைமயிற் வருடாக நெற்றியில் வெட்டியிருக்கும் போதே
வாசல் முற்றத்தில் பூ பறித்து, நான் விளையாடியிருக்க
நீர் வந்தீர். மூங்கில் பொய்கால் ஏறி குதிரை விளையாடி வந்தீர்.

நீலக் கொடிமுந்திரிகளை வைத்து விளையாடிக்
கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்தீர்.
நாம் சொக்கான் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தோம்.
இரு சிறுவர்கள் வெறுப்பும் சந்தேகமும் இன்றி

பதினாலு வயதில் ஐயனே உம்மை மணம் புரிந்தேன்
நான் ஒரு போதும் சிரிக்கவில்லை, நாணத்தினால்
தலை குனிந்து சுவரைப் பார்த்து நின்றேன்.
ஆயிரம் தடவை அழைத்தும் ஒரு பொழுதாவது நான் திரும்பிப்
பார்க்கவில்லை.
பதினைந்து வயதில் முகம் சுளிப்பதை நிறுத்தினேன்
என் தூசு உங்கள் தூசுடன் கலக்க விரும்பினேன்
என்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்குமாக
ஏன் நான் வெளியைப் பார்க்க ஏறிவர வேண்டும்?

பதினாறில் நீங்கள் பிரிந்தீர்கள்
குமரி மறையும் நீர்ச் சுழிகள் நிறைந்த நதி வழியாக
தொலைவிலுள்ள கோடு யென்னுக்கு சென்றீர்கள்
நீங்கள் போய் மாதங்கள் ஐந்தாகி விட்டன.
மேலே குரங்குகள் சோகமாய் கரைகின்றன.
நீங்கள் போகும்போது
மனதில்லா மனதுடன் கால்களை இழுத்துச் சென்றீர்கள்
வாசலில் பாசி படர்ந்திருக்கிறது
பலவிதமான பாசிகள் அகற்ற முடியாத அடர்த்தியுடன்.
இந்த இளவேனிலில் காற்றில் இலைகள் உதிர்கின்றன
இந்த ஆகஸ்டிலேயே வண்ணத்தி ஜோடிகள் மஞ்சளித்து விட்டன.

மேற்கு தோட்டத்து புல் தரைகளில்
அவை எனக்கு úவெதனை தருகின்றன
எனக்க வயது ஆகிறது.
சியாங் நதியின் இடுக்கன் வழியாக நீங்கள் வருகிறீர்கள் என்றால்
என்னை முன்னமே தெரிவியுங்கள்
நான் உங்களைப் பார்க்க வருகிறேன்

லி போ வின் சீனக் கவிதை. எஸ்ரா பவுண்டின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து – காசியபன்

(நவீன விருட்சம் ஜனவரி – மார்ச்சு 1989)