ஆவலுடன் காத்திருக்கிறேன்

இன்று மாலை 4வது சென்னை புத்தகத் திருவிழாவில் என் கதைப் புத்தகமான அழகியசிங்கர் சிறுகதைகள் முழுத் தொகுப்பு பற்றி முனைவர் ஜெ கங்காதரன் என்பவர் நூல் திறனாய்வு செய்கிறார்.
64 சிறுகதைகளும், 7 குறுநாவல்களும், ஒரு நாடகமும், சில சின்னஞ்சிறு கதைகளும் எழுதி உள்ளேன். 664 பக்கங்கள் கொண்ட முழுத் தொகுதியை என் கதைகளை எல்லோரும் வாசிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ரூ.300க்குக் கொடுக்கிறேன்.
ஆரம்ப காலத்திலிருந்து நான் எழுதிய கதைகளின் தொகுப்பு இது. இன்னும் கூட கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். உதாரணமாக 4வது சென்னை புத்தகத் திருவிழாவை முன் வைத்து நல்லவன் கெட்டவன் என்று கதை எழுத உள்ளேன்.
என் கதைகளின் முக்கிய அம்சமாக நான் கருதுவது அதிகப் பக்கங்கங்கள் போகாமல் பார்த்துக் கொள்வது. படிப்பவர்கள் ஒரு சில நிமிடங்களில் என் கதையைப் படித்து முடித்து விடலாம்.
என்னுடைய 7 குறுநால்கள் இத் தொகுதியில் வெளிவந்துள்ள. இக் குறுநாவல்கள் தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் வெளிவந்தவை. இப்போதெல்லாம் அவ்வளவு பக்கங்கள் கொண்ட குறுநாவல் எழுத எனக்குப் பொறுமை இல்லை.
கணையாழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட என் குறுநாவல்களை அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதிதான் தேர்ந்தெடுத்தார்கள். அதில் விபத்து என்ற என் குறுநாவலைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.
அந்தக் குறுநாவல் எழுதும்போது நான் உஸ்மான் ú8ôடில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அப்போது நடந்த விபத்து மாதிரியான ஒரு விபத்தைப் பற்றிதான் அந்தக் குறுநாவல்.
குறுநாவலில் வங்கியில் பணிபுரிகிறவனைப் பற்றி வரும். இக் கதையை வங்கியில் உள்ள யாராவது படிக்க நேர்ந்து ஒரு மொட்டைக் கடுதாசி எழுதி என் வேலைக்கே உளை வைத்துவிடுவார்களோ என்று
தேவையில்லாமல் அஞ்சினேன். உடனே அசோகமித்திரன் வீட்டிற்கு ஓடினேன். அன்று அவருக்கு சுரம். என்னைப் பார்த்தவுடன் என்ன என்று கேட்டார். விபத்து என்ற குறுநாவல் நான்தான் எழுதினேன் என்றேன். நீங்கள் தானா அது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் என்று அந்தக் குறுநாவலை அப்படியே ஒப்பித்தார். எனக்கு ஆச்சரியம். அதில் வங்கியில் பணிபுரிகிறவன் என்று எழுதியிருக்கிறேன். வங்கி என்பதற்குப் பதில் எல்ஐசி என்று எழுதி விடலாமா என்று கேட்டேன். அதல்லாம் வேண்டாம். அப்படியே இருக்கட்டும் என்றார்.
அப்புறம்தான் தெரிந்தது. என் வங்கியில் இருப்பவர்களில் பலருக்கு கணையாழி என்ற பத்திரிகை தெரியாது என்றும், பணிபுரிபவர்கள் பலரும் படிக்காத விரும்பி என்றும். இதை நினைத்தால் இப்போது சிரிப்பு வருகிறது. மேலும் என் வீட்டில் உள்ளவர்களே என் கதைகளை முழுவதும் படித்ததில்லை. அதனால்தான் பயந்துகொண்டு நானே முழுத் தொகுதியைக் கொண்டு வந்துவிட்டேன். இனி நான் எழுதும் எல்லக் கதைகளையும் இத் தொகுப்பில் சேர்த்துக்கொண்டு வருவேன்.
இப்படித்தான் பல திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் தொகுக்கப்படாமல் போய்விட்டன. இது ஒரு சோகம். இந்த அனுபவம் எனக்கு ந பிச்சமூர்த்தி கதைகளைத் தொகுக்கும்போது தெரிந்தது. அவர் வீட்டில் உள்ளவர்களே அவர் கதைகளின் முழுத் தொகுதிகளை வைத்திருக்கவில்லை. நாங்கள்தான் தடுமாறி கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இந்தச் சங்கடம் பி எஸ் ராமையாவின் கதைகளுக்கும் ஏற்பட்டு விட்டது. அவர் எத்தனைக் கதைகள் எழுதி உள்ளார் என்ற விபரம் சி சு செல்லப்பா எழுதிய ராமையாவின் சிறுகதை பாணி புத்தகத்தில் மட்டும் தெரியும். பல கதைகள் நஹி.
இன்று என் புத்தகத்திற்கான நூல் திறனாய்வு நடைபெற உள்ளது. முனைவர் ஜெ கங்காதரன் பேச உள்ளார். என்ன பேசப் போகிறார் என்பதை அறிய நான் -.

விருட்சத்தில் வெளிவந்த வாஜ்பேயி ஒரு கவிதை

ஆரம்பத்தில் விருட்சம் இதழில் மொழிப்பெயர்ப்பு கவிதைகள் அதிகமாக வரும். பலர் பல மொழிகளிலிருந்து மொழிப்பெயர்த்து விருட்சத்திற்கு அளித்துள்ளார்கள்.
ü முன்னாள் பிரதம மந்திரி வாஜ்பேயி கவிதைகளை சௌரி அவர்கள் ஹிந்தியிலிருந்து நேரிடையாக மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார். அதுவரை அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவிதைகள் எழுதுவார்கள் என்பதை நான் நம்பாமல் இருந்தேன்.

வாஜ்பேயி கவிதையைப் படித்ததும் அசந்து விட்டேன் அக் கவிதையை நான் திரும்பவும் இங்கு அளிக்க விரும்புகிறேன்.

‘உயரத்தில்” என்ற வாஜ் பேயி இந்தக் கவிதை அக்டோபர்-டிசம்பர் 1991ஆம் ஆண்டு பிரசுரமாகியிருந்தது. அதை இங்கு அளிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

உயரத்தில்

தமிழில் – செளரி

மகோன்னத இமயமலை முகட்டில்
மரம் செடி கொடிகள் வேரூன்றுவதில்லை
சவச் செல்லாபோல் சரிந்து பரவிய
சாவைப்போல் குளிர்ந்தடங்கிய
பனிப்படலம் மட்டும்
படிந்து பரவிக்கிடக்கும்;
அந்த உன்னத உயரம்
நீரைப் பனிக்கட்டியாக்கும்
நிமிர்ந்து நோக்குபவர் உள்ளம் குறுகும்
பயபக்தியுடன் பணிவு கொள்ள
உரிமையுடன் உத்தரவிடும்.

மலையேறிகளை வரவேற்கும்
தன் மீது கொடிக்கம்பம் நாட்டலாம்,
ஒரு குருவிகூட கூடுகட்டாது
களைத்துச் சோர்ந்த யாத்திரிகன்
களைப்பாற. கண்ணயற அங்கு இடமில்லை;

உண்மை இதுதான்
உயர்ந்திருப்பது போதாது.
தனியாக விலகி எழும்பி
சூனியத்தில் நிமிர்ந்துயர்ந்து
தம்மவர்களையும் தவிர்த்து
ஒதுங்கி உன்னதமாய் நிற்பதில்
மன்னும் மாமலைக்குப் பெருமையில்லை
பலவீனம், வலுக்கட்டாயம்,
பிரிந்து விலகிப் போனதும் இங்குதான்;

உயர்ந்து வளர்ந்து
காலடியில் புல் பூண்டு படாமல்
கல்லும் முள்ளும் தைக்காமல்
சிறுமலரும் முகிழ்த்து மலராமல்
இள-முது வேனில்களும் இலையுதிர் பருவமும்
காணாமல் தனித்து நிற்பானேன்?

உயர் உயர் ஒருவன்
தனியனாகிறான்
சுமைகளைத் தானே சுமக்கிறான்
போலிப் புன்னகை புலர்த்தி
மனத்துள் புலம்பி அழுகிறான்;

உயரத்துடன் பரப்பும் விரிவும்
கூடிக்குலாவ வேண்டும்
மனிதன் தனித்து, தவித்து
‘மரக்கொம்பாய் வாழவேண்டாம்
பிறருடன் கூடி வாழ்ந்து
பிறரோடு இணைந்து செயல் பட்டு
பலரையும் உடனழைத்துச் சென்று
உள்ளத்தால் உயர்ந்து
உணர்வில் பரந்து
உயரத்தில் நிமிர்ந்து வாழட்டும்.

[ அடல் பிஹாரி வாஜ்பேயி சிறந்த கவிஞர், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர். ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர். ‘ராஷ்டிரா தர்ம’ என்றும் மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தவர். தலைசிறந்த பேச்சாளர். இதுவரை இரு கவிதைத் தொகுதிகள் வெளிவந்துள் ளன).

இதோ முப்பது…….

வழக்கம்போல சீத்தாலட்சுமி அபார்ட்மெண்டிலிருந்து கிளம்பினேன். பிளஷர் வண்டியில். அப்போது ஒரு குரல் கேட்டது. ‘இதோ முப்பது’ என்று. ‘இதோ முப்பதா’ என்னவென்ற புரியவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். கோவிந்தன் ரோடைத் தாண்டிக் கொஞ்ச தூரம் போனேன். திரும்பவும் குரல் : இதோ முப்பது. ஏய் சும்மாயிரு என்று என்னைக் கடிந்து கொண்டேன். ஆனால் இதோ முப்பது என்ற வார்த்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது.

என் நண்பருடன் தினமும் ஒரு பூங்காவில் வாக் செய்வேன். அவரைப் போய்ப் பார்த்தேன். அவரும் என்னுடன் வாக் செய்ய கிளம்பினார். ‘இதோ முப்பது’ என்று குரல் கேட்டது. நண்பரிடம் கேட்டேன், ‘உங்களுக்கு எதாவது குரல் கேட்டதா?’ என்று.

‘இல்லையே?’ என்று சொன்னார்.

நானும் நண்பரும் தினமும் வாக் செய்வதை ஒரு கடமையாக வைத்துக்கொண்டிருக்கிறோம். ஒருவருக்கொருவர் உரசிக் கொள்ளும் இடமும் கூட. நான் எதாவது சொல்வேன். அவர் எதாவது சொல்வார் இரண்டு பேரும் சண்டைப் போடுவோம்.
கொஞ்சதூரம் வாக் பண்ணிக்கொண்டு இருக்கும்போது, அவரும் சொன்னார். ‘ஆமாம். இதோ முப்பது என்று குரல் கேட்கிறது,’ என்று.

‘என்னது முப்பது என்று தெரியவில்லை.

காலையிலிருந்து இந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது,’

‘புரியவில்லை. உங்கள் வயதை எதற்காவது குறிப்பிடப்படுகிறதா?’

‘இல்லை. எனக்கு 64வயது. அப்படியென்றால் முப்பது என்று ஏன் சொல்ல வேண்டும்?’

வாக்கிங்கை முடித்துவிட்டு நாங்கள் இருவரும் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்றோம். ஒரு காப்பி வாங்கிக் குடித்தோம். ஆனால் இதோ முப்பது கேட்காமல் இல்லை.

“ஏன் இப்படி ஒரு குரல் கேட்கிறது என்று எனக்கும் புரியவில்லை,” என்றார்.

நான் தீவிரமாக யோசித்தேன்.

“இப்போது புரிந்துவிட்டது,” என்று உற்சாகமாகக் கத்தினேன்.

“ஏன் கத்துகிறீர்கள்? சாதாரணமாக சொல்லக் கூடாதா?” என்றார் நண்பர்.

“உண்மைதான் சாதாரணமாகச் சொல்லலாம்,”

“சரி என்ன கண்டுபிடித்தீர்கள்?”

“அதுதான் விருட்சம். இந்த ஜøலை மாதம்தான் நான் விருட்சம் கொண்டு வந்து முப்பது வருடம் முடிகிறது,”

“விருட்சம் வந்து முப்பது வருடம் ஆகிவிட்டதா?”

“ஆமாம்.”

“பெரிய முயற்சி,”

“எனக்கே தெரியவில்லை. நான் கொண்டு வந்த பத்திரிகைக்கு முப்பது வருடம் முடிந்துவிட்டது.
முதல் இதழ் 1988ல் வந்தது…”

“என்ன செய்யப் போகிறீர்கள்?”

“ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யலாமென்று நினைக்கிறேன்,”

“எங்கே?”

“ரைட்டர்ஸ் கேப்பில்.”

“எப்போது?”

“106வது இதழ் வந்த பிறகு.”

போஸ்டல் காலனியில் விருட்சம் லைப்ரரியில் அமர்ந்திருந்தபோது விருட்சம் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அட்டைப் பெட்டிகள் நிறையா விருட்சம் இதழ்களை அடுக்கி வைத்திருக்கிறேன். இப்படி ஏகப்பட்ட அட்டைப் பெட்டிகள். ஒவ்வொரு முறையும் விருட்சம் அடிக்கும்போது இதழ்கள் மீந்து போய்விடும்.
ஒருமுறை சி சு செல்லப்பா அவர்களின் புதல்வனைச் சந்தித்தேன் பழைய இதழ்கள் எழுத்து கிடைக்குமா என்று அவரைக் கேட்டேன். எதுவுமில்லை என்றார். ஏன் என்ன ஆயிற்று என்று கேட்டேன். நிறையா இதழ்கள் மீந்து போய் கிடந்தன. என்ன செய்வதென்று தெரியவில்லை. பேப்பர் கடையில் போட்டுவிட்டேன் என்றார் அவர். சி சு செல்லப்பா இருக்கும்போதே அது மாதிரி செய்ததாக அவர் சொன்னார்.

அவர் சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இதோ என் முன்னாலும் பல அட்டைப் பெட்டிகள் நிறையா விருட்சம் பழைய இதழ்கள். ஒவ்ùôவன்றாக எடுத்துப் பார்க்கும்போதெல்லாம் எப்படி இப்படியெல்லாம் கொண்டு வந்தோம் என்ற வியப்புதான் கூடிக்கொண்டே போகிறது.
என் கையில் 92வது இதழ் கிடைத்தது. அதில் ஒரு கவிதை செ சுஜாதா என்பவர் எழுதியது

நதி இலை எறும்பு

உன் வார்த்தைகளின் தடம் பற்றி
நான் நடந்துகொண்டிருக்கிறேன்

நீ ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறாய்

அன்பை
காதலை
நம்பிக்கையை
துரோகத்தை
கோபத்தை
வன்மத்தை
வெறுமையை
நிறைவை

கொழுத்த உன் கன்னத்தில்
திரண்டிருக்கும் அம் மச்சம்
என் கண்களில் விழுந்து உறுத்துவதை
அறியாமலேயே

இதோ அட்டைப் பெட்டிகள் நிறையா பழைய இதழ்களை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருக்கிறேன். அட்டைப் பெட்டியில் இருக்கும் பழைய இதழ் என்னைப் பரவசப்படுத்தத் தவறவில்லை. கட்டாயம் எதிர்கால வாசகர்கள் வருவார்கள். என்னிடமிருந்து விருட்சம் பழைய இதழ்களைக் கேட்டு வாங்காமல் இருக்க மாட்டார்கள். அட்டைப் பெட்டிகளும் காலி ஆகி விடும்.

சில கதைகள்

1986ஆம் ஆண்டிலிருந்து தி ஜானகிராமன் குறுநாவல் போட்டியில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 குறுநாவல்களை üசில கதைகள்ý என்ற பெயரில் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன். அப் புத்தகத்தை நேற்று அமேசான் கின்டலில் சேர்த்து உள்ளேன். அதைப் பார்க்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.

ரொம்ப துணிச்சல் வேண்டும்..

துணிச்சல் வேண்டும் கால சுப்பிரமணியத்திற்கு. பிரமிளின் படைப்புகள் அனைத்தையும் ஆறு தொகுதிகளாக ரூ.3000 க்குக் கொண்டு வந்துள்ளார். 3400 பக்கங்கள்.
சமீபத்தில் அவரைச் சந்தித்தப்போது அவர் இதைத் தெரிவித்தார். இந்த முழுத் தொகுதியை தயாரிப்பதற்கு அவர் செலவு செய்யும் தொகையைக் கேட்டவுடனே எனக்கு சங்கடமாக இருந்தது. அன்று முழுவதம் அது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். ஏன் எனில் அதிகப் பிரதிகள் புத்தகங்கள் அச்சடித்துத் திண்டாடுபவனின் நானும் ஒருவன். இன்றைய தமிழ்ச் சூழலில் விற்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ரூ.3000 கொடுத்து யார் வாங்க முன் வருவார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
ஆனாலும் அவர் முயற்சிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். ஒரு தொகுதி வாங்கிக்கொள்கிறேன் என்று அவரிடம் அப்போதே சொல்லிவிட்டேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 87

தோன்றி மறையும்

கடற்கரய்

குட்டிக் கைப்பையோடு
உத்யோகத்திற்கு விரையும்
சீனத்துக்காரி வெளியேறுவதற்கு
முன்னதாக ஆடியில் காண்கிறாள் முகத்தை.
குட்டைப் பாவாடை குறுஞ்சிரிப்பு
தோன்றி மறைகிறது அதில்.
அலுவல் அழைக்கும் நேரம்
முகத்திற்குப் பொலிவு கூடுகிறது.
மாலை காய்ந்த குப்பையாகிவிடும் என்பதை அறிவாள். ஆடியில் விழும் முகம் மெல்ல அலையுறத் தொடங்குகிறது. தலைக்கு அவள் சூடியிருந்த வாசனை மலர்கள் தழைத்து அரும்புகின்றன
ஒரு வைகறைத் தோட்டத்தின் வைராக்கியத்தோடு.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 86

வீடும் நண்பனும்

அப்பாஸ்

காலை வந்தது
குளித்து, சாப்பிட்டு,
அலுவலகம் புறப்பட்டேன்.
என் கையெழுத்து பதிவுடன்
உனக்கான கோப்புகள் நகர்த்தப்பட்டன
மாலை வந்தது

தேநீரும், நண்பர்களும், சமூகமும்
இரவு வந்தது
புஸ்தகங்களும் குழந்தையும்
தூக்கமும்.
காலை வந்தது
மாலை வந்தது
இரவு வந்தது
கோப்புகள் நகர்த்தப்படுகிறது
தேநீரும் புஸ்தகங்களும்
பிரயாணமும்.
காலை வந்தது
மாலை வந்தது
இரவு வந்தது
ஒரே அலையில் யாவும் மூழ்கும்
அதிசயத்தில்
எனது அலுவலகம், புஸ்தகம்
வீடும், நண்பனும்,

நன்றி : வரை படம் மீறி – கவிதைகள் – அப்பாஸ் – சமி வெளியீடு
21/7 எ அசோக் நகர் 2வது தெரு, கதிரேசன் கோவில் ரோடு, கோவில்பட்டி 627702 – பக்கங்கள் : 64 – விலை : 6 – ஆண்டு : 1990

உலகப் புத்தகத் தினத்தை ஒட்டி கவிதைகள்

ஒன்று

கட்டிலில் கிடந்த புத்தகங்கள்
என்னையே பார்த்துக்கொண்டிருந்தன
‘எப்போது எங்களைத் தொடப் போகிறாய்\
என்றன ஒவ்வொன்றும் முறைப்பாக.
நாற்காலியில் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்த
நான், ‘இருங்கள் சற்று நேரம் சும்மா, யோசிக்கிறேன்,’
என்றேன். ‘போதும் நீ யோசித்தது…அல்லயன்ஸ்
போட்ட குபரா புத்தகத்தையே இப்போதுதான் தொடுகிறாய்.’
‘உனக்குத் தெரியுமா? சிறிது வெளிச்சம் என்ற வாசகர்
வட்டம் நூலை எப்போதோ படித்துவிட்டேன்,’
‘இருக்கட்டும்..இன்று உலகப் புத்தகத் தினம்..
உன்னைச் சுற்றிலும் அமைதி இழந்த உலகம்..
எங்களிடம் வந்தால் நாங்கள் அளிப்போம்
ஆறுதல் உனக்கு..’

இரண்டு

பக்கத்து வீட்டு மல்லிகாவிடம்
காட்டினேன் என் முழுச் சிறுகதைத் தொகுதியை
ஒன்றும் சொல்லாமல் முகத்தைச் சுழித்தாள்
எதிர் வீட்டு ராமனிடம் நீட்டினேன்
‘நான் இந்தத் தெருவில் நடக்க வேண்டாமா?’
என்றார் எக்காளமாய்
கோடி வீட்டு கோவிந்தனிடம் சொன்னேன்
‘இன்னும் கதை எழுதுவதை நிறுத்தவில்லையாய்,’
என்றான் படுபாவி

மூன்று

அந்தத் தெருவில் உள்ள
லைப்ரரி முன்னால்
புத்தகங்களை வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்
சிலுசிலுவென்று காற்று வந்தது.
வெயில் சுளீரென்று அடித்தது
கோடான கோடி ஜனங்கள் போய்க்கொண்டிருந்தார்கள்
புத்தகங்கள் என்னைப் பார்த்தன
நான் புத்தகங்களைப் பார்த்தேன்
ஏனோ தெரியவில்லை கொட்டாவி விட்டேன்

நான்கு

ஐயா, வணக்கம்.
எதிர்வீட்டில் குடியிருந்த அலுவலக நண்பரை அழைத்தேன்
என்ன?
உலகப் புத்தகக் காட்சி. உங்கள் வீட்டு எதிரில்
சரி சரி
வரவேண்டும் ஒரு முறை
சரி சரி
வாங்க வேண்டாம் புத்தகம். என்னைப் பார்த்தால் போதும்
சரி சரி

உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு

ஞாயிறு, திங்கள் (22, 23) இரண்டு நாட்களிலும் உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு விருட்சம் புத்தகங்களை 40% தள்ளுபடியில் ராகவன் காலனி அரசாங்க கிளை நூலகத்தில், ஜாபர்கான்பேட்டையில் புத்தகங்களை விற்க உள்ளேன். புத்தகங்களை வாங்க வரவும்.

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

எம். கோவிந்தன்

நானும் சைத்தானும்

தேவனுக்குரியதை தேவனுக்கும்
தேசத்திற்குரியதை அதற்கும்
தர நான் முன் வந்த போது
யாரோ என் முன் வந்து சொன்னான்
‘எனக்குரியதை கொடு’
‘யார் நீ’ என்றேன்
‘தெரியாதோ சைத்தானை’ என்றான்
‘கேட்டுக் கொள்
என்னுடையவை எல்லாமே எனக்குத்தான்
என்பதே இன்றுமுதல் என்வேதம்’ என்றேன்
சைத்தான் உரக்க சிரித்தான்
என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான்
செவியில் மெல்ல சொன்னான்
‘எனக்கு வேண்டியதைத்தான்
தந்தாய் நன்றி’

(சமீபத்தில் காலமான மலையாள அறிஞர், கவிஞர் எம். என். ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறை யிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்)

மொழிபெயர்ப்பு : ஜெயமோகன்
(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)