மனதுக்குப் பிடித்த கவிதைகள் 92

அசடு என்ற நாவல் மூலம் புகழ் பெற்றவர் காசியபன். கேரளா பல்கலைக் கழகத்தில் எம் ஏ தத்துவத்தில் கோல்ட் மெடல் வாங்கி உள்ளார். ‘முடியாத யாத்திரை’ வரும்போது அவர் உயிரோடு இல்லை. ஒரு நீண்ட கவிதையுடன் சேர்த்து 25 கவிதைகள் உள்ளன. இத் தொகுப்பை 300 பிரதிகள் அச்சடித்திருந்தேன். ஆனால் பாதிக்குமேல் என்னிடம் உள்ளன. இத் தொகுப்பு விலை ரூ.60. பாதி விலைக்கு அதாவது ரூ.30க்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும்.

மின்கம்பி மேலே

காசியபன்

மின்கம்பி மேலே
அந்த குருவிகள் இரண்டும்
எத்தை நோக்கி
தியானம் புரிகின்றன?
கிழக்கே
நாளை பிறப்பிக்கும்
செக்கச் செவந்த
சூரியனையா?
இல்லை ,
மேற்கே
இரவெலாம் பிரகாசித்து
களைத்து அணையமுயலும்
ஒளியற்ற சந்திரனையா?
எத்தை நோக்கி
தியானம் செய்கின்றன?
தெற்கே
ஓங்கி உயர்ந்து நிற்கும்
பாறை குன்றையும்
அதன் உச்சியில் நிற்கும்
மொட்டை மரத்தையுமா?
இல்லை, இல்லை
தலைகளைக் குனிந்து
தங்களை நோக்கி

இது முன்னமே எனக்கு
தெரியாமல் போனதேன்?
பரவாயில்லை .
இப்போது அவைகள்
எங்கோ பறந்து
மறைந்துவிட்டன.
மின்கம்பியும் நானும்
வெறிச்சென்றிருக்க.

நன்றி : முடியாத யாத்திரை – கவிதைகள் – பக்கங்கள் : 62 – விலை : ரூ.60 – விருட்சம் வெளியீடு, சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 – தொடர்புக்கு : 9444113205

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

டேவிட் சட்டன்

கம்ப்யூட்டர் அறை, நடு இரவு

குகையின் சில்லிப்பாய்க் காற்று…
இரண்டு மேலங்கிகளாவது இங்கே வேண்டும்.
பருவகாலங்களில்லை, வேறுபாடுகளுமில்லை.
சுவர்களின் ரீங்காரமே இரவிலும் பகலிலும்.
அலமாரி அடுக்குகளில் ஏறி வீழ்கிறது .
வெள்ளோட்டுக் கூரையின் வெளிச்சம்.

எல்லாமே இங்கு நிழலின்றிச் சுதந்திரமாயுள்ளன.
சந்தேகமின்மையின் இருப்பிடம் இதுவே;
இங்கேதான் நான் வாசம் புரிகிறேன்.
கட்டளைக் கிணங்கும் அசரீரிகளினிடையில் இயங்கி
பாதுகாப்பாய் உணர்கிறேன்.
இந்தத் திரையைப் பார்த்து
நடுநிசியின் குழிந்த கண்களுடன் குறிப்பெடுக்கத்
தாமதிக்கையில்
உடனே தோன்றுகிறது
பசுமைத் தீயில் ஒளிரும் எழுத்தாகக் காவியத்தின் பதில்:
‘ஆரம்பி.’
இதன் சமாச்சாரங்களெல்லாம் எனக்குப் புரியும் :
ஆணையிடுகிறேன்.
இந்த விசித்திர விலங்குகள் புர்ரிட்டுக்கொண்டு அடி பணிகின்றன.
அர்த்தமற்ற ஆனால் அழகான இவற்றை
வசப்படுத்த எனக்கு 15 ஆண்டாயிற்று.
சுண்டெலி சமைத்த, நேர்த்தியான தர்க்க வளைகளாய்
எலித்தன்மையுடன் ஓடும் போட்டித்திறனால்
கட்டுப்பட்ட இதன் உட்புறத்தில்
பிரமிக்கிறது குறிகளின் மின்சாரம்.

வீடு செல்லும் நேரம்… வெளிப்பக்கத்தில் குறியிடல்…
காவல்காரனுக்கு நல்லிரவு’ வாழ்த்து.
கொடூரமான வெளிப்புற இருட்டு.
மங்கிய நிலவின் வெள்ளித் தீவிரத்தை
அலங்கோலப் படுத்தும் முரட்டு அந்தகாரம்.
உயர எழுந்த பெருத்த மேகங்கள்.
காலியான நடைபாதைகளில் நடந்து
கட்டுப்பாடற்ற காற்றின் தாக்குதல்களில் சரணடைகிறேன்.
உள்முகத்தின் பின்னே –
எதிர்காலத்தின் கருத்த பூட்ஸ்களில்
இளகியோடுகின்றன. மனதின் உறைபனித் துகள்கள்.

மூலம் : ஆங்கிலம் தமிழில்: கால. சுப்ரமணியம்

(நவீன விருட்சம் அக்டோபர் – டிசம்பர் 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 91

மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் நான் 100 கவிதைகள் கொண்டு வர உள்ளேன் முதலில். அதன்பின் தொடரந்து 200, 300 கவிதைகள் என்று கொண்டு வர உள்ளேன். முதல் 100ஐப் புத்தகமாகக் கொண்டு வருகிறேன். முதல் தொகுதிக்கு என் கவிதை
உட்பட இன்னும் 9 கவிதைகள்தான் தேவை. இக் கவிதைகளை கவிதைப் புத்தகங்களிலிருந்து தயாரிக்கிறேன். இதில் விட்டுப்போன கவிதைகளும் பின்னால் உருவாகப் போகும் கவிதைத் தொகுதிகளில் சேர்க்கப்படும்.
இக் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை என்று எதுவும் கிடையாது. இக் கவிதைகளை வாசிக்கிறவர்கள் ஒவ்வொருவரும் கவிதைகள் மூலம் தங்களுக்கான் முன்னுரையைப் புரிந்துகொள்ள வேண்டும.
ராஜமார்த்தாண்டன் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் இந்தக் கவிதையில் ஒரு வரி எழுதியிருப்பார். விதிக்கப்பட்ட என் காலமோ மணித்துளிகளாய் விரைகிறது என்று. இந்த வரிகள்தான் என்னை யோசிக்க வைக்கிறது.

அதுவரை

ராஜமார்த்தாண்டன்

எனக்கான மலர்
எங்கோ மலர்ந்திருக்கிறது
எத்திசையில் என்பதறியேன்

அதன் நறுமணம்
இதழ்களின் நிறம்
யாதொன்றுமறியேன்

விதிக்கப்பட்ட என் காலமோ
மணித்துளிகளாய் விரைகிறது

எனினும்
என்றேனும் கண்டடைவேன்
எனக்கான மலரை

நம்பிக்கையுடன் தேடியலைகிறேன்

அதுவரை
குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பாய்
மலர்ந்திருக்க வேண்டுமது.

நன்றி : அப்படியே நிற்கட்டும் அந்த மரம் – கவிதைகள் – ராஜமார்த்தாண்டன் – பக்கங்கள் : 72 – அஜிதா பதிப்பகம் – முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2000 – விலை : ரூ.20

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 89

மனதுக்குப்பிடித்த கவிதைகள் என்ற தொகுப்பில் முதலில் 100 கவிதைகளைத் தேர்ந்தெடுக்க உள்ளேன். கூடிய சீக்கிரம் புத்தகம் உருவாகிவிடும்.முதல் தொகுதியில் விட்டுப்போன கவிஞர்களின் கவிதைகள் இரண்டாவது தொகுப்பில் இடம் பெறும். இரண்டாவது தொகுதியிலும் விடுப்பட்ட கவிதைகள் மூன்றாவது தொகுதியில் வந்து விடும். ஒவ்வொரு தொகுதியும் 100 கவிதைகள் கொண்ட புத்தகம். இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை என்று எதுவும் கிடையாது. கவிதைகள்தான் முன்னுரை. கவிதைகளைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவை வெளிப்படுத்தும் விதத்திலிருந்து தங்களைப் புரிந்துகொள்ள முடியும். . பெரும்பாலும் இக் கவிதைகள் யாவும் கவிதை நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிவருகின்றன.

90) இனி வாழ்நாளில்

தேன்மொழி தாஸ்

இனி வாழ்நாளில்
கடவுளைக் காணவே இயலாது
என்ற சத்தியத்திற்குப் பின்
எனது நாய் குட்டியை
சர்வ வல்லமையுள்ள கடவுளே
என அழைக்கத் துவங்கினேன்

நன்றி : நிராசைகளின் ஆதித்தாய் – கவிதைகள் – தேன்மொழி தாஸ் – மொத்தப் பக்கங்கள் : 56 – வெளியீடு : உயிர்மை பதிப்பகம், புதிய எண் : 79, ப.எண் 39 மேற்கு போயஸ் சாலை (இளங்கோ சாலை – அண்ணா அறிவாலயம் பின்புறம்) தேனாம்பேட்டை, சென்னை 600 018 – செல் எண் : 9003218208 – விலை : ரூ.50

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ்

நித்தியம்

அதிகாலை விழித்த கிழவன பார்வையில்
வாசல் முன் அன்றைய சுமை.

நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல்,
வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சு
அனைத்துமே அடக்கம் அச்சுமையில்

அவிழ்க்கப்பட்ட சுமையில்
ஆற்றவேண்டிய காரியங்களால்
நிறைந்து போனது முற்றம் முழுதும்.
கதவின் கீச்சொலி

வைக்கோலின் குசுகுசுப்பு
ஜன்னலின் பளிச்சிடல்
கால்நடைகளின் பெருமூச்சு
பறவைகளின் இன்னிசை
மனிதர்களின் பேச்சரவம்
சக்கரங்களின் சடசடப்பு

அந்தியும் வந்தது
இன்பமயமான நீண்ட அந்திமாலை.

மூலம் : லிதுவேனியக் கவிதை

ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன்.

(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 89

அழகியல்

கி பி அரவிந்தன்

நாரினில் பூத்தொடுக்க
மாலை வரும்.

மாலையில் பூவுதிர
நாரிழை எஞ்சும்

நாரினைக் கடைவிரித்தால்
கொள்வாரும் உளரோ

தேடிப் பலவண்ணத்தில்
பூக்கொய்யலாம்

நாரின்றேல்…!

என்னிடத்தே நாருண்டு
எப்பூவையும் நான் தொடுப்பேன்
ஆனால் அது
பூக்களை விற்பதற்கல்ல…

நன்றி : கனவின் மீதி – கி பி அரவிந்தன் – பக்கம் : 96 – விலை : ரூ.40 – பொன்னி, 29 கண்ணகி தெரு, மடிப்பாக்கம், சென்னை 600 091 வெளியான ஆண்டு : ஆகஸ்ட் 1999

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 87

ப கங்கைகொண்டான்

பழைய சுசீலாக்கள்

பத்தாவது பாரம் படித்தோம்
பாவை சுசீலாவும் நானும்
ஆசிரியர் வெளியே போனால்
மானிட்டர் என்னை நோக்கி
ஒன்றுக்குப் போக வேண்டி
ஒரு விரல் காட்டி நிற்பாள்
ஆள் பார்க்க இல்லாவிட்டால்
அக்கம் பக்கம் நோக்கி விட்டு
ஒண்ணரைக் கண்ணில் சிரிப்பாள்
அரைக்கால் டிராயர் துறந்து
முழுக்கால் மாட்ட வைத் தாள்
ஒரு நாள் ஒரே மாதிரி
சொல்லி வைத்தாற் போலச்
சாக்கு நிறக் காக்கிப் பையில்
புத்தகங்கள் தூக்கி வந்தோம்
பையன் கள் மாற்றி வைத்தார்
பைமாற்றிப் போனாள் அந்நாள்
கைமாறிப் போனாள் மறு நாள் ……..

நன்றி : கூட்டுப் புழுக்கள் – கவிதைகள் – ப கங்கைகொண்டான் – வெளியீடு : கங்கை நூலகம், 100 மலரகம் – பொத்தனூர் அஞ்சல் – சேலம் 638 181 – ஆண்டு : 1974 – விலை : ரூ.10

செப்டம்பர் மூன்றாம் தேதி

38 ஆண்டுகளுக்கு முன்னால்
நடந்த நிகழ்ச்சியை
இப்போது நினைத்துப் பார்க்கிறேன்
இன்னும் ஒருவரை ஒருவர்
புரிந்துகொண்டோமா என்றெல்லாம்
தெரியவில்லை

காலையில்
ஹனுமார் கோயிலுக்குச் சென்றோம்

இன்று கடைக்குச் சென்று
எனக்கு வேண்டிய துணிமணிகளை
வாங்கிக்கொண்டேன்
அவளும் கூடவே வந்தாள்

புத்தகக் கடையில் புத்தகங்களை
வாங்கி வெறுமனே சேர்ப்பதை அவள் விரும்பவில்லை
ஆனால் தடுப்பதில்லை
அவள் விருப்பம் என்னவென்று தெரிவதில்லை

இன்று செப்டம்பர் மூன்றாம் தேதி

(Photo taken by Srinivasan Natarajan)

மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன் பகுதி 1

சமீபத்தில் ராயப்பேட்டை ஒய்எம்சி மைதானத்தில் ஒரு புத்தகக் காட்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியைப் பற்றி எதாவது சொல்வதா அல்லது என்னைப் பற்றி எதாவது சொல்வதா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என்னைப் பற்றித்தான் சொல்ல வேண்டுமென்று தோன்றியது. நான் மூன்று அவதாரங்கள் எடுத்துள்ளேன். என் அவதார நிகழ்ச்சியைச் சொன்னாலே போதுமென்று எனக்குத் தோன்றியது. ஆரம்பிக்கிறேன்.

1. புத்தகப் பதிப்பாளர் கம் விற்பனையாளரான அழகியசிங்கரின் கூற்று.

நான் 30 ஆண்டுகளாக விருட்சம் என்ற பத்திரிகையை நடத்தி வருகிறேன். கூடவே புத்தகங்களை அச்சடிக்கிறேன். கிட்டத்தட்ட 80 புத்தகங்களை அச்சடித்து விட்டேன். பெரும்பாலும் கவிதைப் புத்தகங்கள். கவிதைகளை அடித்து விற்பது என்பது சாத்தியமில்லை என்று என் அறிவுக்குத் தெரிந்தாலும் கவிதைகளை மட்டும் புத்தகம் அடிக்க என்னிடம் கொடுப்பார்கள் பலர். புத்தகக் காட்சியில் என் புத்தகங்களை மட்டும் விற்க முடியாது என்று எனக்குத் தெரிந்து விட்டது. மற்ற பதிப்பாளர்கள் புத்தகங்களோடு என் புத்தகங்களையும் விற்று வருகிறேன். புத்தகம் விற்று லாபம் சம்பாதிப்பது என்பது நிகழ்ந்தால் அது அற்புதமான கணமாக இருக்கும்.
இந்த முறை ராயப்பேட்டையில் நடந்த புத்தகக் காட்சியில் முதல் நாளே எனக்குத் தெரிந்து விட்டது. எவ்வளவு பணம் நஷ்டமடையப் போகிறோம் என்று. அதனால் நஷ்டத்தை எண்ணி பதற்றமடையாமல் என்னைத் தேற்றிக்கொண்டேன். ஏன் இப்படி ஆயிற்று என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது போதிய விளம்பரம் இல்லை என்று மனதில் பட்டது. இவ்வளவு வருடங்கள் புத்தக விற்பனையில் ஈடுபட்டாலும் பெரிய அளவில் பொருள் ஈட்ட முடியாது என்பதும் எனக்குத் தெரியும். என்னிடம் ஆள் இல்லை இல்லை. நான் மட்டும்தான் எல்லாம். புத்தகம் தயாரிப்பதிலிருந்து எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்வது வரை. ஆனால் பலர் புத்தகம் தயாரிக்காமல் புத்தகம் விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். நான் சற்று யோசித்துப் பார்த்தேன். இந்த முறை புத்தகக் காட்சியில் பராமரிப்பு செலவு அதிகமாகிவிட்டது. அரங்கு வாடகை சற்று அதிகம். புத்தகங்களை எடுத்துக்கொண்டு வருகிற செலவும் கூடி விட்டது. ஆனால் இதன் மூலம் பல அனுபவங்களைச் சேகரிக்க முடிந்தது. ஒரு விற்பனையாளர் கூறினார். ‘நீங்கள் வெளியூருக்கெல்லாம் போய் புத்தக விற்பனையைச் செய்யாதீர்கள்,’ என்று. உண்மையில் என்னால் டெம்போகாரர்களுக்கு பணம் கிடைத்தது. டீ விற்பவர்களுக்குப் பணம் கிடைத்தது. வெளியே தின்பண்டம் விற்பவருக்குப் பணம் கிடைத்தது. ஆனால் எனக்குத்தான் புத்தகம் விற்றுப் பணம் கிடைக்கவில்லை.
பெரும்பாலான புத்தகப் பதிப்பாளர்கள் என்ன புத்தகங்களைக் கொண்டு வருகிறார்கள் என்று போய்ப் பார்த்தேன். திருக்குறள், பாரதியார் இல்லாத கடைகளே இல்லை. மேலும் கல்கியின் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் பல பதிப்பாளரின் வருமானத்தை உயர்த்துகின்றன. ரூ.200க்கு நான்கு நாவல்கள் என்று ஆங்கிலப் புத்தகங்களை விற்கிறார்கள். அங்கே கொஞ்சம் கூட்டம். என் அரங்கில் சுஜாதா புத்தகங்கள் ஏனோ இந்த முறை சரியாக விற்கவில்லை. அதனால் சுஜாதா புத்தகங்களுக்கான கவர்ச்சி குறைந்து விட்டது என்று சொல்ல முடியுமா என்பது தெரியவில்லை. பல புத்தகங்களின் விலை கடுமையாக இருக்கிறது. இது கூட புத்தகங்கள் வாங்குபவரை யோசிக்க வைக்கிறதோ? விருட்சம் மூலம் கொண்டு வந்துள்ள பெரும்பாலான புத்தகங்களுக்கு விலை மிகக் குறைவு. ஆனால் வாங்க வருபவர்கள் அதை விடக் குறைவு.
(photo taken by Srinivasan Natarajan)

(இன்னும் வரும்)

கேட்டாலும் சொல்ல மாட்டேன்…..

தினமும் புத்தகக் காட்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது என் மனைவி ஒரு கேள்வி கேட்பார். “எவ்வளவு இன்று விற்றது?” இதற்கு என் பதில் மௌனம்…பலத்த மௌனம். எங்கே தவறிப் போய்ச் சொல்லி விடுவேனோ என்று பயந்துகொண்டே மௌனமாக இருப்பதைப் பலமாக முயற்சி செய்வேன். அதில் நான் வெற்றி அடைந்துவிட்டேன். இதுவரை சொல்லவில்லை. ஆனால் புத்தகக் காட்சியிலிருந்து நான் என்னன்ன புத்தகங்கள் வாங்குகிறேன் என்பதைக் குறிப்பிடுவதில்லை. ஆனால் அது தெரிந்து விடுகிறது. என் பையைத் திறந்து பார்த்தால் புத்தகங்கள் இளிக்கத் தொடங்கி விடுகின்றன.

ஜென் தத்துவமெல்லாம் எத்தனையோ புத்தகங்களில் நாம் படிக்கிறோம். அதையெல்லாம் இது மாதிரியான புத்தகக் காட்சியின்போதுதான் நாம் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் முன்னால் சாரி சாரியாக நடந்து போவார்கள், ஆனால் உள்ளே வரமாட்டார்கள்.

இதில் என்ன ஜென் தத்துவம். இனிமேல்தான் இருக்கிறது.

என் அரங்குக்குள் நுழைந்தால் அரங்கு நிரம்பி வழியும், இது தெரிந்துதான் எல்லோரும் பார்த்துக்கொண்டே போகிறார்கள்.

உள்ளே புத்தகங்கள் இருக்கின்றன. வெளியே நாங்கள் இருக்கிறோம். சிலர் புத்தகங்களுடன் வெளியே செல்கிறார்கள். சிலர் வெறுமனே செல்கிறார்கள்.

நானும் நண்பரும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டு டீ அருந்திக்கொண்டிருக்கிறோம்.. இன்னும் சில மணி நேரம் கழித்தும் டீ அருந்திக்கொண்டிருக்கிறோம்.

டேபிளில் பில் புக் இருக்கிறது..பேனா இருக்கிறது. நாங்கள் டீ அருந்திக் கொண்டிருக்கிறோம்.

கேட்டாலும் சொல்ல மாட்டேன் எவ்வளவு விற்றது என்று. இப்போது நிம்மதியாக இருக்கிறேன். மனைவியிடம் சொன்னால் போதும் நிம்மதி போய் விடும்.