நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …17

அழகியசிங்கர்

இன்று மாலை 6 மணி சுமாருக்கு அம்ஷன் குமார் க.நா.சு வின் üவாழ்ந்தவர் கெட்டால்ý என்ற புத்தகத்தைப் பற்றி அறிமுக உரையை நிகழ்த்தினார். அவரை தமிழ்மணவாளன் அறிமுகப்படுத்தினார்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …14


அழகியசிங்கர்

கடந்த 20 ஆண்டுகளாகப் புத்தகக் காட்சியில் இடம் பெறுகிறேன்.   அதன் மூலம் பல அனுபவங்கள்.  அலுவல் பொருட்டு ன் வெளியூரிலிருந்தாலும் புத்தகக் காட்சியின் நினைப்போடு இருப்பேன்.  

இரண்டு விஷயங்களைக் குறித்துப்  பேச விரும்பவில்லை. ஏன்னென்றால் நான் தினமும் நடைப்பயிற்சி செய்யும்  ஒரு விசாலமான மரத்தின் முன் பேச மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்திருக்கிறேன். 

விருட்சம் ஸ்டாலில் என் புத்தகம் மட்டுமல்லாமல் பலருடைய புத்தகங்களையும் வாங்கி விற்கிறேன்.  நான் பெருமைப்படக் கூடிய பல புத்தகங்களை என் நண்பர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றையும் அறிமுகப் படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.  இதோ முதல் புத்தகத்தை அறிமுகப் படுத்துகிறேன்.

என் நண்பர் அம்ஷன் குமார் அவருடைய சொல் ஏர் பதிப்பகம் மூலம் ஒரு புத்தகம் கொண்டு வந்துள்ளார்.  புத்தகத்தின் பெயர் ‘ஆவணப்பட இயக்கம்.’  206 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தின் விலை ரூ.200தான். இப் புத்தகம் இரண்டு பிரிவுகளைக் கொண்டது.  முதல் பிரிவு ஒரு ஆவணப்படத்தை எப்படி இயக்குவது என்பது பற்றி, 

இன்னொரு பகுதி ஆவணப்பட வரலாறு.  இதுவும் முக்கியமான பகுதியாகக் கருதுகிறேன்.  

அம்ஷன்குமார் ஆரம்பத்திலிருந்து பல ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார்.  ஒரு ஆவணப்படத்தைத் தயாரிப்பதில் தீவிரத்தன்மையைக் கொண்டவர்.  என்னால் மறக்க முடியாத அவருடைய ஆவணப்படங்களில் ஒன்று அசோகமித்திரனைப் பற்றியது. இன்னொன்று பாரதியார் பற்றியது. யாழ்பாணம் தட்சிணாமூர்த்தியைப் பற்றி அவர் எடுத்த ஆவணப்படம்.   தட்சிணாமூர்த்தியின் புகைப்படங்களைத் தவிர வேற எதுவும் இல்லை. ஆனால் அம்ஷன் குமார் தன் ஆவணப்படம் மூலம் தட்சிணாமூர்தியை உயிரோடு கொண்டு வந்ததுபோல் தோன்றியது.

கூடியவிரையில் இப் புத்தகம் ஒரு பாடப் புத்தகமாக திரைப்படக் கல்லூரிக்குப் போய்விடும் என்று தோன்றுகிறது.

இப் புத்தகம் விருட்சம் ஸ்டாலில் விற்பனைக்கு உள்ளது. விலை ரூ.200தான்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 99

அழகியசிங்கர்

ஈனிப்பு

ரா ஸ்ரீனிவாஸன்

கண்ணாடிப் பெட்டகத்துள்
கண்ணை ஈர்த்தது
விற்பனைக்கிருந்த
வண்ண இனிப்புகள் –

இனிப்பின் மணம்
அழைத்தது போல
வந்து சேர்ந்தன
ஈக்களிரண்டு-

முட்டி மோதி
எட்டாத இனிப்பை ஏங்கி
கண்ணாடிப் பெட்டகத்தின் மேல்
ஒட்டிக் கொண்ட ஈக்களுக்கு –

இனிப்பை நாடி
இனிப்பை உண்டு
இனிக்க இனிக்க
இனிப்பிற்குள்ளேயே
மரித்துக் கிடக்கும்
உடன்பிறப்பு ஈக்கள் –

கண்ணில் பட்டது –
கருத்தில் படாதது.

நன்றி : கணத் தோற்றம் – கவிதைகள் – ரா ஸ்ரீனிவாஸன் – விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 42 – வெளியான ஆண்டு : 2001 – விலை : ரூ.20.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 98

அழகியசிங்கர்

தீவட்டித் திருடர்கள்

லாவண்யா

தீவட்டித் திருடர்கள் மூவர் பண்டொரு நாளில்
அம்மணி அம்மாளின் வீடு புகுந்தார்.
அரிவாளொருவன் கையில் இரும்புத்தடியும்
தீவட்டியும் மற்றிருவர் கையிலுமாக.

மருமகளும் பேரனும் முற்றத்திலுறங்கினார்.
அகமுடையாரும் பிள்ளையும் அயலூர் சென்றவர்
அடுத்த நாள்தான் வரவிருந்தார்கள்.

அமைதியாய் இருக்கச் சொல்லி அரிவாளைக்
கும்பிட்டாளம்மணி. நெல்லொரு சாக்கிலும்
கம்பங்கருதும் மல்லாக்கொட்டையும்
மற்றுமிரு சாக்கிலவர் முன் வைத்தாள்
தங்க வளையல்களிரண்டோடு.

தண்ணீர் கேட்டதட்டினானொருவன்.
பயத்தில் வெண்கலச் சொம்பிலிருந்த பாலைத்
தந்தாள் நீரென்றெண்ணி.
பாலைக் குடித்தவன் தீமிதித்தவன் போலானான்.
புறப்பட்டானிருவரோடும். எதையும்
எடுத்துச் செல்லாமல். நல்லாயிரம் மணியென்று..
பின்னாறிரண்டாண்டுகள் ஆடிப்பெருக்கன்றிரவு
சுங்கடிச் சேலையும் மஞ்சள்கொத்தும்.
தீவட்டித் திருடர்கள் தலைவாசலில் வைத்தாரென
அம்மணி அம்மாளின் சந்ததிகள் சொல்வார்கள்.

எப்போதேனும் நினைவில் வருவாள் அம்மணி,
அப்போதெனக்குத் தோன்றும்.

நன்றி : கடலின் மீது ஒரு கையெழுத்து – கவிதைகள் – லாவண்யா – விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 59 – வெளியான ஆண்டு : 2009 – விலை : ரூ.30

ஒப்பனை நகரம்

பிரபு மயிலாடுதுறை

அந்நகரம்
ஒப்பனையாளர்களைக் குறைவாகவும்
சுயமாக ஒப்பனை செய்து கொள்பவர்களை அதிகமாகவும்
கொண்டு
பரபரப்பாக
ஒப்பனை செய்து கொண்டிருந்தது

எதிரேயிருக்கும் மனிதர்களை
ஆடிகளாய்ப் பெரும்பாலானோர்
எண்ண எண்ண
ஒவ்வொருவரின் பிம்பமும்
முடிவிலா சாத்தியங்களுடன் பெருகியது

நாடக மேடைகளின் பின்பக்கமென
அந்நகரில்
வஸ்திரங்களும் ஆபரணங்களும்
விரவிக் கிடந்தன

ஒரு சிறிய முக்கில்
பாலகர்கள் பத்து பேர்
ஒரு பாக்கெட் சீனி வெடியை
மெழுகுவர்த்தி
ஊதுவத்தி

வைத்துக் கொண்டு
வெடித்து வெடித்து
ஆரவாரித்தனர்
அவ்வப்போது

அவர்களைப் பார்த்து
மகிழ்ந்து மகிழ்ந்து
சிரித்தான்
சேலைத் தொட்டிலில்
உட்கார்ந்திருந்த குழந்தை

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 97

ஏழுமணிச் சண்டை

கல்யாணராமன்

ஹிண்டு பேப்பர்
காலை ஏழு மணிக்கு வரும்

எடிட்டோரியல் படிக்க அப்பாவும்
எண்டர்டெயின்மெண்ட் பார்க்கத் தங்கையும்
மேட்ரிமோனியல் மேய அம்மாவும்
வான்டட் காலத்தை அலச அக்காவும்
ஸ்போர்ட்ஸ் புரட்டத் தம்பியும்

இவர்கள் படிக்காத ஏதாவதொன்றை
வெறுமனே கையில் பிடித்திருக்க நானும்
ஒரே சமயத்தில் பரபரத்துப் பாய்வோம்

மணியடித்து ஓயும்
சுவர்க் கடிகாரத்துக்குத் தெரியும்

இன்னும் சற்று நேரத்தில்
சீந்துவாரின்றிப்
பேப்பர் புரளப் போகும்
வெற்றுத் தரைக்கும் கொஞ்சம் தெரியும்
இந்த ஏழுமணிச் சண்டைக்குத்தான்
எல்லாமுமென்று.

நன்றி : நகரத்திலிருந்து ஒரு குரல் – கல்யாணராமன் – கவிதைகள் -பக்கங்கள் : 96 – பதிப்பாண்டு : ஜøன் 1998 – விலை : ரூ.30-தாமரைச் செலவி பதிப்பகம்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 96

பதிவுகள்

தி சோ வேணுகோபாலன்

இன்று வாசலில்
சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறது
நாளைக்கு
இறுகி விடும்.

காக்கையின் கால் விரல்
கழுதையின் குளம்படி
குழந்தையின் காலடி
பிச்சைக்காரன்
குடுகுடுப்பைக்காரன்
உஞ்சி விருத்தி பிராமணன்
தெரிந்தவர், தெரியாதவர்
ஸ்கூட்டர் சக்கரம்
இரவின் சுவர் நிழலில்
எவனுக்கோ
இரகஸியமாய் காத்து நின்ற
கால் மெட்டி நெளிவு

இளங்கன் றின் வெள்ளை மனம்
பசுவின் நிதானம்
காளையின் கம்பீரம்
நாயின் குலப்பகை
பூனையின் கபடம்
பன்றியின் அவலட்சணம்

இறு கிய தரையில்
நிரந்தரம்
விரிசல் கண்டு
தூள் ஆனாலும்
புதியவை பதியாது
பதிந்ததும் நிலைக்காது

உருண்டுவரும் கோலிகள்
நில்லாது போகலாம்
அல்லது
குழிக்குள் விழிக்கலாம்

நன்றி : மீட்சி விண்ணப்பம் – கவிதைகள் – தி சோ வேணுகோபாலன் – க்ரியா வெளியீடு – பக்க எண் குறிப்பிடப்படவில்லை – வெளிவந்த ஆண்டு : 1977 – விலை : ரூ.5

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 95

எனது சைக்கிள் திருடனுக்கு ஒரு கவிதை

தேவதேவன்

நண்பா ,
பூமியில் நான் கால் பாவா தபடிக்கு
என்னைச் சுமந்து செல்லும்
மறைக்கப்படாத ஒரு ரகஸ்யம் அது .
தவறுதான் ; அதை நான் பூட்டி வைத்துப் பழகியது.

என்னை மீறிய ஓர் அபூர்வப்பொழுதில்
அது தன து அனாதி கோலத்தில் நின்றிருந்தபோது –
அதை நீ கவர்ந்து சென்று விட்டாய்.
நான் அதைப் பூட்டி வைத்தது போலவே.
என து துக்கம் : நாம் இருவருமே குற்றவாளிகளானதில்.

அந்தச் சிலுவையுடன்
கெண்டைக்கால் சதைகள் நோக
பூமியில் எனது தூரம் கடக்கப்படவும்;
உன து தூரம் நெடுந்தொலைவு ஆகிவிடும்போது –
வாகனம் தான் எனினும் –
உன் கால்களும் தான் நோகும்.
நண்பா ,
பூமியில் நம் சுக – துக்கத்தின் கதை இவ்வளவு தானே !

பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளம் ;
வெற்றிடத்தை நோக்கி ஓடி வரும் வாயு;
புனித துக்கத்தை நோக்கிப் பாய்ந்து வந்தது கருணை;
”இதை வைத்துக் கொள்ளுங்கள்,
நீங்களாய் இன்னொன்று பெறும் வரை.
அல்லது உங்களுடையது மீட்கப்படும்வரை.
நன்றியுணர்வாலோ , திருப்பிக் கொடுக்கப்பட
வேண்டுமென்ற கடப்பாட்டுணர்வாலோ
உங்களைத் தொந்தரவு செய்து கொள்ளவேண்டாம்.
அவசரமின்றி, சிரமமின்றி, இயல்பாய்
நீங்கள் ஒன்று பெற்றுக்கொள்ளும் வரை
இதை வைத்துக்கொள்ளுங்கள்.”

அது வெறும் வாகனம் அல்ல ;
இரு நண்பர்களுக்கிடையேயுள்ள உறவு;
புனித துக்கத்தை நோக்கிப் பாய்ந்து வந்த கருணை;
அவ்வளவு அழகாய், அற்புதமாய், புத்தம் புதியதாய்
ஆனந்தமாய் இருந்தது அது.

என து நண்பனே,
மதிப்பிற்குரிய எனது சைக்கிள் திருடனே,
இப்போது முன்னெப்போதையும்விட
அதிக அளவில் அச்சத்தின் விலங்கால்
நான் பூட்டப்பட்டதை உணர்கிறேன்.
இப்போது என் சுற்றுமதிலுக்குள்ளும் கூட
அதைப் பூட்டிவைக்கிறேன்.
அந்த வாகனத்தை விட்டு நான் இறங்கும்போதெல்லாம்
நட்புகாட்டும் உன் புன்னகையில் நான் வெட்குகிறேன்.
என து துக்கம் : நாமிருவருமே குற்றவாளிகளானதில்.

மதிப்பிற்குரிய நண்பனே !
மதிப்பிற்குரிய ‘ என்று ஏன் அழைக்கிறேன் என்றால்
உன் மீது எனக்குப் பகைமையோ அன்போ இல்லை.
என் வாகனத்தை நான் பெற வேண்டும் என்ற
நியாயமான உந்தலால் போலீஸில் புகார் செய்கிறேன்.
அவர்கள் கடமை வீரர்கள். அவர்கள் உன்மீது
என்னை விட மேலும் ஒரு மடங்கு மதிப்புடையவர்கள்.
என் வாகனத்தை மீண்டும் புதியதாய்
எனக்குப் பெற்றுத்தருவதற்குக் காரணன் நீயல்லவா ?


என் வாகனத்தைப் பெற்றுக் கொள்ள
காவல் நிலையம் வந்தபோது, அப்படியே
உன்னையும் பார்த்துப்போக நின்றேன்.
கண்ணாடியில் தெரியும்
பிம்பம் தன் உருவை உற்றுப்பார்ப்பதுபோல்,
சிறைக் கம்பிகளுக்கு அப்பால் நீ இப்பால் நான்.

அந்த இரும்புத் திரையைத் தொட்டேன்.
எத்தனையோ மெல்லிய திரைகளைத் தொட்டிருக்கிறேன்.
அப்படி ஒரு மெல்லிய திரை தான் இப்படி இரும்பாகிவிட்டிருக்கிறது
எனினும் தர்சனத்தை மறைக்காத இரும்புத்திரை அது.
என்னுள் ஒரு கொந்தளிப்பு, அதை உடைத்துக் கிழிக்க.

நன்றி : சின்னஞ்சிறிய சோகம் – கவிதைகள் – தேவதேவன் -எக்ஸ்பியர் புக்ஸ் – 4/5 மணி நகர், தூத்துக்குடி 628 003 – பக் : 40 – விலை : ரூ.15 – ஆண்டு : அக்டோபர் 1992

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 94

‘மனதுக்குப் பிடித்த கவிதைகள்’ என்ற தொகுப்பை கூடிய விரைவில் கொண்டு வர உள்ளேன். இது முதல் தொகுப்பு. இதைத் தொடர்ந்து இரண்டாவது தொகுப்பு மூன்றாவது தொகுப்பு என்று வர உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் 100 கவிதைகள் வரை இடம் பெறும். தொகுப்பாளராக நான் இருந்தாலும் இத் தொகுப்பில் முன்னுரை எதுவும் இடம் பெறாது. ஏன் என்றால் கவிதைகள்தான் முன்னுரை. தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளை ஒருவர் வாசித்தால்தான் இதன் அருமை தெரியும்.

நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வைத்திருக்கிறேன். ஒருநாள் தற்செயலாக ஒரு கவிதைத் தொகுதியை எடுத்து வாசித்தேன். அத் தொகுதியில் உள்ள கவிதைகளைப் படித்து நான் அசந்து விட்டேன். நாம் ஏன் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எதாவது ஒரு கவிதையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அப்போது தோன்றியது. அந்த முயற்சிதான் தொடருகிறது. இப்போது என்னிடம் உள்ள கவிதைத் தொகுதியிலிருந்து 400க்கும் மேற்பட்ட கவிதைகளை என்னால் எடுக்க முடியும். இதெல்லாம் கவிதைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள். இதே பத்திரிகைகளில் பிரசுரமாகும் கவிதைகளை நான் தேர்ந்தெடுத்தால் அது ஆயிரக்கணக்கில் போய்விடும்.

தமிழில்தான் அதிகமாகக் கவிதைத் தொகுதிகள் வருகின்றன என்பது என் யூகம். அதேபோல் கவிதைப் புத்தகம் போல் விற்காமல் இருப்பதும் தமிழில்தான். நான் இதுமாதிரியான கவிதைத் தொகுப்புகளிலிருந்து கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது நம்மிடம் எவ்வளவு திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் இருப்பதில்லை.. நாம் யாரையோ ஒரு கவிஞரை மட்டும் கடவுளாக நினைத்துத் தொழுகிறோம். உண்மை அப்படி இல்லை. யாருக்கும் தெரியாமல் நம்மிடம் பல கவிஞர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.

இளையபாரதி கவிதை

முக்காலத்து
மழையையும் வெயிலையும் எதிர்க்கும் சக்தியை
என் கவிதைகளுக்கு ஊட்டிச் செல்கிறேன்
அண்டவெளியைத் தழுவி காலப்புழுதி படியாமல்
காற்றைச் சிறகாக்கி நீச்சலிடும் கலை
கலந்திருக்கிறது அதன் குருதி அணுக்களில்.
அதனுடன் பிறந்த கூரிய வாளும் கேடயமும் உண்டு
அதன் கைகளில்.
அதன் சொற்களில் சூடேறிக்கிடக்கின்றன
ஆயிரம் தலைமுறைக்கான வெப்பமும் வெளிச்சமும்.
அதன் வரிகளில் காற்றில் உலராத கண்ணீரின் இசை. –
அமுதக் கடலுறங்கும் அதன் தனங்கள்
அனாதை உதடுகளுக்காகச் சுரந்துகொண்டே இருக்கின்றன.
மானும் மழுவும் ஏந்திய மனசில்
காலங்களால் அணையாத அக்னிச்சட்டிகள்.
கண்களில் கருணையும் காந்தமும் கொண்ட அதன்
கொவ்வைச் செவ்வாயின் குமிழ் சிரிப்பில்
பூரணம் புன்னகையாகிறது.
காலத்தின் கம்பிகளில்
இடைவிடாத பயணம் நடத்திடும் மின்சாரத்தைக்
குமுறும் இருதயங்களிலிருந்தே
திரட்டிக் கொட்டியிருக்கிறேன்.
கொத்தும் மரணக் குருவியின் அலகிலிருந்து தப்பிய தானியம் நான்.
என் இனத்தின் பசிக்கான கனிகள்
இந்த ஒற்றை விதையிலிருந்தே விளைந்து பெருகும்.
பறிக்க முடியாத ஆழத்தில் பாவியிருக்கின்றன
என் தொன்மத்தின் வேர்கள்
தொப்புள்கொடியின் தொடர்ச்சியாய்.

நன்றி : மரணத்தின் நட்சத்திரங்கள் – கவிதைகள் – இளையபாரதி – பக்கங்கள் : 110 – வெளிவந்த ஆண்டு : 1999 – விலை : ரூ.35 – சாந்தி பிரசுரம் – 7 முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நனர், அசோக்நகர், சென்னை 600 083

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 93

வாழ்வும் சாவே

தஞ்சை ப்ரகாஷ்

க.நா.சு. போயாச்சு!
ரொம்ப நல்லதாச்சு!

பாபாஜான்
உனக்குத் தெரியுமா?
ரொம்பபேருக்கு
யோசிக்கவே வராது என்று!
ரொம்பபேருக்கு
நல்லது தேடிப்படிக்கத் தெரியாதே!
தெரியுமா? அவர்தான் சொல்வார் அப்படி!

க.நா.சு. ரெண்டு மூணுஸ்வீட்
ஏக நேரத்தில் சாப்பிடுவார்!
காப்பி என்னமோ அவருக்கு
இனிச்சிண்டே கசக்கணும் நல்லா
கசந்துண்டே இனிச்சாகணும்

இலக்கியம்ன்னா பாவம்! அவருக்கு
உணர்ச்சி வசப்பட்டு வழியப்படாது

கவிதைன்னா அட! க.நா.சு.வுக்கு
புதுக்கவிதைன்னாலும் கவிதையா ஒலிக்கப்
படாது!
பாபாஜான்
ஆமா
அவருக்கு வாழ்க்கைன்னா கூட
அவர் வாழ்க்கை மாதிரி இன்னொண்ணு
இருக்கப்படாது!
வாழறது ஒண்ணு ஒண்ணும்
புதூசா ஒவ்வொரு நாளும்
கசக்கணும்! சிக்கலாயிருக்கணும்
விடுவிக்க ஏலாததா!

ஆமா கோணா மாணான்னுதான் இருக்கனும்
பாபாஜான் – உனக்கு
நகுலன் சொல்றா மாதிரி அப்டி ஒண்ணும்
ஒடனே வாழ்க்கை நமக்கெல்லாம்
க.நா.சு. ‘து’ மாதிரி “படக்”ன்னு
முடிஞ்சுறாது!
தெரியும்

வாழ்க்கை மாதிரியே அவருக்கு சாவும்
உணர்ச்சி வசப்படுத்தாமை
கடைசி வரைக்கும் ப்ரக்ஞையோட
விமர்சிக்கவே முடியாத
“புதுஸ்ஸா ” இருந்திருக்கு
எழுதிகிட்டே
சாவையும் வாழ்ந்திருக்கார்

நன்றி : என்றோ எழுதிய கனவு – கவிதைகள் – தஞ்சை ப்ராகாஷ் – மொத்தப் பக்கங்கள் : 140 – வெளிவந்த ஆண்டு : டிசம்பர் 2010 – விலை : ரூ.60 – நந்தி பதிப்பகம், 62 பொன்னம்மாள் இல்லம், ராஜராஜன் நகர், மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் 613 501