மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 103

அழகியசிங்கர் 

அணு முட்டை

மாலதி மைத்ரி

ஒரு குடம் நீரை

ஒரு கூடை மீனை 

ஒரு மூட்டை தானியத்தை 

ஒரு கட்டு புல்லை

ஒரு சுமை விறகை

சுமப்பது போல் 

அவள் கர்வத்துடன் 

உலகைச் சுமந்தலைந்தாள் 

பெரிய தலையுடன் 

ஒளிரும் வால் நட்சத்திரமாய்

வசீகரமாய் இருந்தாள் 

தன் குஞ்சுக்கு

இரையூட்டும் பறவையென

உலகை ஊட்டிக் காத்தாள்

ராட்சஸப் பறவையாய் வளர்ந்த அது 

அவள் தலைமேல் 

அணுவுலையை 

முட்டையிட்டு அடைக்காக்கிறது.

நன்றி :  முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை – மாலதி மைத்ரி – பக்கங்கள் : 92 – விலை : ரூ.90 – அணங்கு பெண்ணியப் பதிப்பகம், 3 முருகன் கோவில் தெரு, கணுவாப்பேட்டை, வில்லியனூர், புதுச்சேரி 605110 – பேசி : 998454175, 9599329181

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …37



அழகியசிங்கர்  

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் வாங்கிக் குவித்தப் புத்தகங்கள் போன ஆண்டை விட அதிகம் என்றுதான் தோன்றுகிறது.  எத்தனைப் புத்தகங்கள் என்று எண்ணவில்லை.  ஒவ்வொரு நாளும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன்.  நினைப்பதோடு சரி.  எண்ணியதில்லை.

இந்த முறை தேசாந்திரி பதிப்பகத்திலிருந்து எஸ் ராமகிருஷ்ணனின் ஐந்து புத்தகங்கள் வாங்கினேன்.  1. சிவப்பு மச்சம் 2. பெயரற்ற நட்சத்திரங்கள் 3. கதைகள் சொல்லும் பாதை 4. ரயில் நிலையங்களின் தோழமை 5. பறந்து திரியும் ஆடு.

பறந்து திரியும் ஆடு என்ற தலைப்பில் சிறார்களுக்கு ஒரு நாவல் எழுதி உள்ளார்.  உள்ளே ஓவியங்களுடன் சிறப்பாக எழுதப் பட்டிருக்கும் நூலாக எனக்குத் தோன்றுகிறது.  இந்தப் புத்தகத்தை எடுத்தால் படிக்காமல் இருக்க முடியாது.  மேலும் இது சிறார்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களும் வாசிக்க வேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன்.

சிறார்களுக்கு ஒரு புத்தகம் எழுதுவது அவ்வளவு சுலபமாக இருக்குமா என்பது தெரியவில்லை.  ரொம்ப ரொம்ப புரியும்படி கதைகள் எழுத வேண்டும்.

பள்ளிக்கூடம் படித்தக் காலத்தில் நான் ரசித்தப் புத்தகம். தென்னாட்டுப் பழங்கதைகள்.  சைவ சித்தாந்தப் பதிப்பகம் கொண்டு வந்தப் புத்தகம்.  7 புத்தகங்கள்.  ஒவ்வொரு புத்தகமும் 300 பக்கங்கள் இருக்கும்.  ராமசாமி புலவரால் தொகுக்கப்பட்ட புத்தகம்.  ஒவ்வொரு முறையும் சைவசிந்ததாந்தப் பதிப்பகத்திற்குச் சென்று இந்தப் புத்தகம் திரும்பவும் அச்சிடப்பட்டுள்ளதா என்று கேட்பேன்.  ஏமாற்றத்துடன் திரும்பி வருவான்.  அதற்குக் காரணம் இருக்கிறது. இன்றைய சிறார்கள் ஆங்கிலத்தில் வாசிப்பதில் அக்கறை காட்டுகிறார்கள் தவிர தமிழில் இல்லை.  அந்தக் காலத்தில் அம்புலிமாமா என்ற பத்திரிகை வந்தது.  இப்போது இல்லை.  தமிழில் சிறார்கள் புத்தகங்கள் வரவேண்டும்.  தமிழில் எல்லோரும் வாசிக்க வேண்டும்.  80 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.100தான்.  ராமகிருஷ்ணன் அதிகமாகச் சிறார்களுக்கான புத்தகங்கள் எழுதி உள்ளார்.  

கதைகள் சொல்லும் பாதை என்ற இன்னொரு புத்தகம்.  நான் வளசரவாக்கம் வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அலுவலகத் தோழி ஒருவர், இராமகிருஷ்ணனை புகழ்ந்து பாராட்டாமல் இருக்க மாட்டார். அவரும், அவர் பையனும் காலையில் எழுந்தவுடன் ராமகிருஷ்ணன் என்ன எழுதியிருக்கிறார் என்று படித்துவிடுவார்கள்.  முதலில் அந்தப் பெண்மணி சொன்னது என்னால் நம்ப முடியாமல் இருந்தது.   இப்படி ஒரு எழுத்தாளருக்கு தீவிர வாசகராக ஒருவர் இருப்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். 

சாகித்திய அக்காதெமி பரிசு ராமகிருஷ்ணனுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அறிந்திருப்பார்.   அந்த வாசகப் பெண்மணி மகிழ்ச்சியின் எல்லைக்கே போயிருப்பார்.  23 எழுத்தாளர்களைப் பற்றி பல தகவல்களுடன் இக் கட்டுரைத் தொகுப்பு உள்ளது.  கேள்விப்பட்ட கேள்விப்படாத பல எழுத்தாளர்கள் இதில் இருக்கிறார்கள். 

தமிழ் எழுத்தாளர்களான வைதீஸ்வரன் பற்றியும், அனார் பற்றியும் இத் தொகுப்பில் கட்டுரைகள் எழுதி உள்ளார்.  அவசியம் வாசிக்க வேண்டிய இன்னொரு புத்தகம்.  136 பக்கங்கள் கொண்ட இப் புத்தகம் விலை ரூ.150 தான்.  

பெயரற்ற நட்சத்திரங்கள் என்ற பெயரில் ஒரு புத்தகம்.  பல சினிமாப் படங்களைக் குறித்து சுவாரசியமான தகவல்கள் பல கொண்ட புத்தகம் இது.  200 ரூபாய் விலையுள்ள புத்தகம் இது.

சிவப்பு மச்சம் என்ற பெயரில் ஒரு சிறுகதை வெளிவந்துள்ளது. 20 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.  எனக்குத் தெரிந்து இப்போது எழுத ஆரம்பித்திருக்கும் எழுத்தாளர்கள்.  ராமகிருஷ்ணன் புத்தகங்களைப் படித்துவிட்டுத்தான் கதைகள் எழுத ஆரம்பிக்க வேண்டும்.  அவருடைய கதைகள் எல்லாம் வினோதமான கலவைக் கொண்ட எழுத்து நடையைக் கொண்டது.  ஒவ்வொரு சமயத்திலும் சோதனை முயற்சிகளை அவருடைய கதைகளில் உருவாக்காமல் இருக்க மாட்டார்.  புறாப் பித்து என்ற கதையை நான் ஆனந்தவிகடனில் வாசித்திருக்கிறேன்.  இது குறித்து ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறேன்.

நம்ப முடிகிற தகவல்களைக் கொண்டு நம்ப முடியாத சம்பவங்களை உருவாக்குவது ராமகிருஷ்ணனின் பாணி என்று எனக்குத் தோன்றுகிறது.  இப் புத்தகம் விலை ரூ.250.  

ராமகிருஷ்ணன் பயணங்களைப் பற்றி அதிகமாக புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.  பயணங்களுடன் தகவல்களையும் சேகரித்துக் கூறுவதில் வல்லமைப் பெற்றவர்.  நயாகராவின் சாரல் என்ற கட்டுரை ஒன்று இப் புத்தகத்தில் உள்ளது.  ஒரு இடத்திற்குப் போய் அந்த இடத்தின் தன்மைகளை நம் கண் முன்னால் கொண்டு வந்து விடுகிறார்.   இப் புத்தகத்தைப் படிக்கும் வாசகர்களும் தாங்களும் அவருடன் பயணம் செய்யும் அனுபவத்தை உணருவதாக தோன்றும். ரயில் நிலையங்களின் தோழமை என்ற புத்தகம் விலை 125.  

இன்னும் சில புத்தகங்களைப் பற்றியும் எழுத உள்ளேன்.

துளி : 26 – அஜித்தின் விசுவாசம்

அழகியசிங்கர்

ரஜினியின் பேட்டையைப் பார்த்தபிறகு, அஜித்தின்     விசுவாசம் படத்தையும் பார்க்க வேண்டுமென்று நினைத்தோம்.  என் வீட்டிலிருந்து பக்கத்திலிருந்தது உதயம் தியேட்டர் காம்பளெக்ஸ்.  6 மணிக்குக் கிளம்பிப் போனோம்.  பேட்டைக்கும் விசுவாசத்திற்குத்தான் கூட்டம்.  இன்னும் இரண்டு படங்களுக்குக் கூட்டம் வரவில்லை.  ஒரு படம் பிரபுதேவா நடித்த சார்லி சாப்பிளின் 2.  இன்னொரு படம் டப்பிங் படம்.  இந்த இரண்டு படங்களுக்கும் யாரும் பார்க்க வரவல்லை என்பதால் படக் காட்சி ரத்து.   டூ வீலரை ஸ்டாண்டில் வைக்கும்போது, üஎன்னப்பா இப்படி காலி அடிக்குது,ý என்று வினவினேன்.  அவன் சொன்னான் : ýýஞாயிற்றுக்கிழமை வரை கூட்டம் சார், 20 நாள் ஓடி விட்டது,ýý என்றான்.  படம் பார்த்து திரும்பி வரும்போது இன்னும் காலியாக இருந்தது தியேட்டர்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 101

அழகியசிங்கர்  

பசுவும் கன்றும்

கவிமணி சி தேசிக விநாயகம் பிள்ளை

தோட்டத்தில் மேயுது
வெள்ளைப் பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது
கன்றுக் குட்டி

அம்மா என்குது
வெள்ளைப் பசு -உடன்
அண்டையினல் ஓடுது
கன்றுக் குட்டி
ü
நாவால் நக்குது
வெள்ளைப் பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது
கன்றுக் குட்டி

முத்தம் கொடுக்குது
வெள்ளைப் பசு – மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக் குட்டி

நன்றி : மலரும் மாலையும் – கவிமணி சி தேசிக விநாயகம் பிள்ளை – பூம்புகார் பதிப்பகம், 127 பிரகாசம் சாலை, சென்னை 600 108 – தொலை பேசி : 044-25267543 – பக்கம் : 286- விலை : 120

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …36

அழகியசிங்கர் 

புத்தகக் காட்சியில் நான் இருந்த பகுதியிலேயே எதிர் வெளியீடும் இருந்தது.  எதிர் வெளியீடு கொண்டு வரப் போகும் ஒரு புத்தகத்தைப் பற்றி அறிவிப்பு முன்னதாகவே வந்திருந்தது.   அந்தப் புத்தகத்தின் பெயர் கசார்களின் அகராதி. மிலோராத் பாவிச் எழுதிய புத்தகம்.  ஆண் பிரதி, பெண் பிரதி என்று இரண்டு பாகங்கள் கொண்ட புத்தகம்.  

இந்தப் புத்தகம் வந்துவிட்டதா வந்துவிட்டதா என்று பலமுறை போய் கேட்பேன்.   எதிர் வெளியீட்டில் பெரும்பாலான புத்தகங்கள் மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்.  பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.  இன்னும் சில புத்தகங்களை வாங்கலாம் என்று நினைத்தாலும் மொழிபெயர்ப்பாளரின் பெயரைப் பார்த்து வாங்க வேண்டாமென்று தோன்றியது.

மொழி பெயர்ப்பைப் பொறுத்தவரை க நா சு கொள்கையை நான் முழுவதும் விரும்புகிறேன்.  க நா சு ஒரு புத்தகத்தை மொழி பெயர்க்கும் முன் ஒரு முறை படிப்பார் பின் அப்படியே மொழி பெயர்த்து விடுவார்.  மொழிபெயர்க்கப்படும் புத்தகத்தின் ஆன்மாவைக் கொண்டு வருவதுதான் அவருடைய நோக்கமாக இருக்கும்,

கசார்களின் அகராதி என்ற இரு பகுதிகள் கொண்ட புத்தகத்தை மொழி பெயர்த்தவர் ஸ்ரீதர் ரங்கராஜ்.   

செர்பிய க்ரவோஷிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது.  இந்தப் புத்தகங்களை வாங்கிக்கொண்ட பிறகு ஆண் பிரதியை முதலில் படிப்பதா பெண் பிரதியைப் படிப்பதா என்ற குழப்பம் இப்போது இருக்கிறது.  அதே எதிர் வெளியீடில் இன்னும் சில புத்தகங்களையும் வாங்கினேன்.

உலகச் சிறுகதைகள் 3 பாகங்களை வாங்கினேன். மொழி பெயர்த்தவர் கார்த்திகைப் பாண்டியன்.  எருது, சுல்தானின் பீரங்கி, துண்டிக்கப்பட்ட தலையின் கதை என்ற தலைப்புகளில்.   நான் எதாவது ஒரு புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்கிவிட்டால் திரும்பத் திரும்ப அதே கடைக்குச் சென்று இன்னும் எதாவது புத்தகம் வாங்கச் சுற்றிக்கொண்டிருப்பேன்.  இந்த முறை எதிர் வெளியீட்டைச் சுற்றி சுற்றி வந்தேன்.  இன்னும் ஒரு புத்தகம் சூன்யப் புள்ளியில் பெண்  நவல் எல் சாதவி எழுதியது.  தமிழில் சசிகலா பாபு.  இது ஒரு நாவல். கொய்ரா அருகில் உள்ள சிறு கிராமத்தில் 1931ல் பிறந்தவர் நவல் எல் சாதவி.  அரேபியா பெண்களின் நலத்திற்காகப் போராடியவர்.

எதிர் வெளியீட்டில் எனக்குப் பிடித்த அம்சம்.  புத்தகங்களில் அமைப்பு.  பார்த்தவுடன் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான அட்டை அமைப்பு.  ஆலிஸ் வாக்கர் எழுதிய அன்புள்ள ஏவாளுக்கு என்ற புத்தகத்தையும் வாங்கி உள்ளேன். தமிழில் மொழி பெயர்த்தவர் ஷஹிதா அவர்கள்.  எதிர் வெளியீட்டிலிருந்து 7 புத்தகங்களை வாங்கிவிட்டேன்.  

நான் இப்படி அந்நியாயமாக புத்தகங்கள் வாங்கிக் குவிப்பதைப் பார்த்து நீங்கள் மரத்திடம் போய் புகார் கொடுப்பது எனக்குத் தெரியும்.  ஆனால் நீங்கள் கேட்க விரும்பும் ஒரு கேள்விக்கு மாத்திரம் நான் பதில் சொல்ல மாட்டேன்.  இன்னும் சில புத்தகங்களைப் பற்றி தொடர்வோம்.   

சரி மேலே குறிப்பிட்ட நூல்களில் முதலில் நான்  எதை எடுத்துப் படிக்க வேண்டும்? 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …33

இன்னும் புத்தகக் காட்சி முடிந்துவிட வில்லை.  புத்தகக் காட்சி 4ஆம் தேதியிலிருந்து ஆரம்பித்து 20ஆம் தேதி முடிந்து விட்டது.  ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லை.  புத்தகக் காட்சி ஆரம்பிக்கும்போது இரும்பு அலமாரிகளில் உள்ள எல்லாப் புத்தகங்களையும் சாக்கில் கட்டி வைத்து விடுவேன்.  பின் இரும்பு அலமாரிகளை புத்தகக் காட்சி எடுத்துக்கொண்டு போவது வழக்கம்.  புத்தகக் காட்சி முடிந்தவுடன் திரும்பவும் இரும்பு அலமாரிகளை எடுத்துக்கொண்டு வந்து விடுவேன். இரும்பு அலமாரியில் உள்ள ஒரு தட்டில் உள்ள புத்தகங்கள் ஒரு சாக்குப் பை நிரம்பும் அளவிற்கு இருக்கும்.  இது மாதிரி 30அல்லது 40 சாக்கு மூட்டைகளில் புத்தகங்களை வைத்திருப்பேன்.  ஒவ்வொரு தட்டிலும் புத்தகங்களை வைப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. 
இரண்டு நாட்களாக இதுதான் என் வேலை.  ஒவ்வொரு இரும்பு அலமாரியையும் நகர்த்தி வைத்து புத்தகங்களை அடுக்குவது. கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் புத்தகங்கள் என்னைக் கைவிடவில்லை.  
இந்தப் புத்தகக் காட்சியில் இரண்டு படைப்பாளிகள் என்னைக் கௌரவம் செய்தார்கள்.  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் புத்தகக் காட்சியில் பங்குக் கொண்டிருக்கிறேன்.  இதுவரை யாரும் என்னை மேடைக்கு அழைத்துப் போய் அவர்கள் எழுதிய புத்தகங்களை வழங்கியதில்லை. எந்தப் புத்தகக் காட்சியிலும் யாரும் கௌரவம் செய்ததில்லை.   இந்த முறை மட்டும் அப்படி நடந்தது.  ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போதும் பல எழுத்தாளர்கள் எனக்குப் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுப்பார்கள்.   நானும் சிலருக்கு என் புத்தகங்களை நன்கொடையாகக் கொடுப்பேன்.  நான் நன்கொடையாக வாங்க நினைக்கும் புத்தகங்களûப் படித்து எழுத நினைப்பேன்.  சில புத்தகங்களைப் படித்தும் எழுதியிருக்கிறேன்.  இந்த முறை என்னை கௌரவம் செய்த இரண்டு படைப்பாளிகளின் பெயர்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.  ஒருவர் பெயர் üமுகங்கள்ý என்ற பெயரில் எழுதிய சத்யா ஜி பியின் புத்தகம்.  இன்னொரு புத்தகம் உஷாதீபனின் சிறுகதைத் தொகுப்பு.  நிலைத்தல் என்ற சிறுகதைத் தொகுப்பு.  காவ்யா ஏற்பாடு செய்த கூட்டத்தில் அதைப் பெற்றுக்கொண்டேன்.  
எப்போதுமே அரங்கை விட்டு வெளியே வந்தால், அதுவும் அதிக நேரம் ஆகிவிட்டால், எனக்கு அரங்கு ஞாபகம் வந்து திரும்பி விடுவேன்.   எனக்கு உதவி செய்யும் நண்பரின் மனம் நோகக் கூடாது என்று நினைப்பவன்.  அதனால் உஷாதீபன் கூட்டத்தில் பேச முடியாமல் போய்விட்டது.   இது சற்று வருத்தம்தான்.
கிட்டத்தட்ட 10 புத்தகங்கள் நன்கொடையாகக் கிடைத்தன.  அப் புத்தகங்களைப் பட்டியலிட விரும்புகிறேன்.
1. சத்யா ஜி பி எழுதிய முகங்கள்
2. உஷாதீபனின் நிலைத்தல் சிறுகதைத் தொகுப்பு
3. படித்தேன்......எழுதுகிறேன்  - உஷாதீபன் கட்டுரைத் தொகுப்பு
4. முபீன் சாதிகா கட்டுரைகள்
5. இருளும் ஒளியும் - கவிதைகள் - பிருந்தா சாரதி
6. மேசை மேல் செத்த பூனை - கவிதைகள் - இந்திரன்
7. 84 கவிதைகள் - இரா. மதிபாலா
8. வருகைக்கான ஆயத்தங்கள் - சிறுகதைகள் - இதயா ஏசுராஜ்
9. சாமானிய மனிதனின் எதிர்க்குரல் - கட்டுரைகள் - விஜய் மகேந்திரன்
10. ஆவணப்பட இயக்கம் - கட்டுரைகள் - அம்ஷன் குமார்

இந்த முறை என் புத்தகங்களை வாங்கியவர்கள் புத்தகத்தில் கையெழுத்துப் போடும்படி கேட்டுக்கொண்டார்கள்.  இதுவும் முன்பு நடந்ததில்லை.  இனி வாங்கிய புத்தகங்களைப் பற்றி நாளை எழுதுகிறேன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …26

அழகியசிங்கர் 


வளவ துரையனின் கவிதைத் தொகுதியின் பெயர் அப்பாவின் நாற்காலி.  இந்தக் கவிதைத் தொகுதியைப் பற்றி ஆர் கே ராமனாதன் இன்று உரை நிகழ்த்தினார்.  அதை இங்கு ஒளி பரப்புகிறேன்.

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …19



அழகியசிங்கர்

எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  ஒவ்வொரு பதிப்பாளரும் கொண்டுவரும் புத்தகங்களைப் பார்க்கும்போது.   இந்தப் புத்தகங்களை விற்கிறேனோ இல்லையோ நானே புத்தகங்களை வாங்கி விடுவேன் என்று தோன்றுகிறது.  

முதலில் என் கடையில் என்னன்ன புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறேன் என்பதை ஓரளவாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.  ஏனென்றால் புத்தகங்களைப் பற்றி சொல்லிவிட்டு உடனே நான் ஸ்டால் எண் 403க்கு ஓட வேண்டும். 

திரும்பவும் வீடு திரும்பும்போது அதிக நேரம் ஆகிவிடும்.  ஒருவிதத்தில் என் ஸ்டாலில் விற்க வைத்திருக்கிற புத்தகங்களை நானே வாங்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது.  அதனால்தான் யாவரும் பதிப்பகம் புதிதாகக் கொண்டு வந்த புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன்.  ஒன்று விற்க முயற்சி செய்வேன்.  அல்லது நானே வாங்குவேன்.  இந்த முறை புத்தகக் காட்சியில் நான் வாங்கிச் சேமித்துக்கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றி பிறகு சொல்கிறேன். 

இப்போது பா ராகவனின் யதி என்ற பிரம்மாண்டமான நாவலைப் பற்றி எதாவது சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன். 926 பக்கங்கள் கொண்ட யதி என்ற நாவலை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  பா ராகவன் எத்தனை நாட்கள் எழுதினார் என்பது இருக்கட்டும்.  ஒரு வாசகன் எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வான் இதைப் படிக்க.

புத்தகக் காட்சியில் இரா முருகனுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவருடைய அரசூர் வம்சத்திலிருந்து தொடர்ந்து அவர் எழுதிய நாவல்களில் 200க்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களை உருவாக்கி இருப்பதாகக் கூறி உள்ளார்.  கேட்பதற்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு வாசகன் எத்தனைக் கதாப்பாத்திரங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வான் என்றும் தோன்றியது.   ஆனால் யதியைப் பற்றி சி ஜே ஆனந்தகுமார் ஒரு இடத்தில் இப்படி கூறுகிறார். எப்படி குறைவான பாத்திரப்படைப்பை வைத்துக்கொண்டு இப்படி ஒரு பிரம்மாண்டமான நாவலைக் கட்டி எழுப்பினார் என்று. 

அப்பாவின் புத்தகச் சேமிப்பில் கண்டு பிடித்த ஜாபால உபநிடதம்தான் எழுதத் தூண்டியதாக பா ராகவன் வெளிப்படுத்தி உள்ளார்.  இந் நாவலை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும்.  இந் நாவலின் அதிகப்பக்கங்கள் என்னை மிரட்டத்தான் செய்கிறது.   ஆனால் அதிகப் பக்கங்கள் உள்ள ஒரு நாவலை மிரளாமல் வாசிப்பது எப்படி என்ற பயிற்சியை ஒரு வாசகன் தெரிந்துகொள்வது அவசியம் என்று தோன்றுகிறது.  

நாவலின் அட்டையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது.

‘üஇந்த நாவல், துறவிகளின் வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது.  நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை.  இந்தியக் கலாச்சாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்காவது முடியும். இது பா ராகவனுக்குக் கூடி இருக்கிறது.ý 

புத்தகக் காட்சியில் இப் புத்தகத்தை விற்பதற்காக வைத்துக்கொண்டிருக்கிறேன் என்பதில் பெருமை படுகிறேன். 

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …18


அழகியசிங்கர்

இந்தப் புத்தகச் சந்தையில் செம்மையாக மாட்டிக்கொண்டவர் வேணு வேட்டராயன் அவர்கள்.  அவர் அழகியசிங்கர் கவிதைகள் என்ற புத்தகத்தைக் குறித்தும், க நா சுவின் விமர்சனக் கலை என்ற புத்தகத்தைப் பற்றியும் பேசினார்.  இதோ அவருடைய ஒளிப்பதிவு, விடுமுறை தினமாக இருந்ததால் ஒரே சத்தம்.  அதனால் ஸ்டால் உள்ளேயே வேணு வேட்டராயணன் பேசியதைப் படம் பிடித்தேன். 

https://youtu.be/JdOWgM5X4Bs

நானும் சென்னைப் புத்தகக் காட்சியும் …16

அழகியசிங்கர்

புத்தகக் காட்சியை இரண்டு விதமாகப் பயன்படுத்துகிறேன். விருட்சம் வெளியீடாக வந்துள்ள புத்தகங்களையும் விற்பனைக்காகக் கொடுத்துள்ள புத்தகங்களையும் விற்கிறேன்.  இது முதல் வகை.  இதில் வெற்றியோ தோல்வியோ நான் பொருட்படுத்தப் போவதில்லை. மரத்தின் முன் உறுதிமொழி எடுத்துள்ளதால் இது குறித்து எழுதப் போவதில்லை. 
நான் புத்தகங்களை வாங்குகிறேன்.  இது இரண்டாவது வகை. இதனால் வீட்டில் எனக்கு வசவு கிடைக்கிறது.  படிக்க வேண்டும் என்கிற புத்தகங்களை வாங்குகிறேன்.  கிட்டத்தட்ட நான் வாங்கிக் குவிக்கும் புத்தகங்கள், விற்கும் புத்தகங்களை விட அதிகமாகப் போய்விடும்.  அதனால் இரண்டு விதங்களில் புத்தகக் காட்சி எனக்கு முக்கியமாகப் படுகிறது.  ஒன்று நான் விற்க முயற்சி செய்கிறேன்.  இரண்டு  வாங்கிச் சேகரிக்கிறேன்.
இப்போது என் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு எழுத்தாளர் புத்தகங்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.  நேற்று அம்ஷன் குமார் புத்தகத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். 
இன்று விமலாதித்தன் மாமல்லன்.  அவருடைய மூன்று புத்தகங்களை விருட்சம் ஸ்டால் விற்கிறது.  1. விமலாதித்த மாமல்லன் கதைகள். 2. புனைவு என்னும் புதிர். 3. ஷோபாசக்தியின் கதைகளை வைத்து புனைவு என்னும் புதிர் இரண்டாம் பாகம். 
முதல் புத்தகமான விமாலாதித்த மாமல்லன் கதைகளை எடுத்துக்கொள்வோம்.  விமலாதித்த மாமல்லன் கதைகள் என்ற புத்தகத்தை எடுத்துக்கொள்வோம்.  344 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் இரண்டு குறுநாவல்கள், நான்கு நெடுங்கதைகள், 24 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.
1980லிருந்து 1994வரை எழுதப்பட்ட சிறுகதைகள், நெடுங்கதைகள், குறுநாவல்கள் அனைத்தும் அடங்கிய தொகுப்பு.  சிறுமி கொண்டு வநத் மலர் என்ற கதையை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். 
விமலாதித்த மாமல்லனின் இன்னும் இரண்டு புத்தகங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஒன்று புனைவு என்னும் புதிர்.  இத் தொகுதியில் உள்ள கட்டுரைகள் தமிழ் இந்துவில் தொடராக வந்தது.  ஆனால் இப் புத்தகத்தில் சிறுகதையும் அந்தச் சிறுகதையைப் பற்றி அவருடைய அலசலையும் முன் வைக்கிறார்.  உதாரணமாக வண்ணநிலவனின் கதையான மிருகம் பற்றி சொல்லும்போது மிருகம் என்ற கதையையும் அது குறித்து மாமல்லனின் அலசலும் வெளிவருகிறது.  இது முக்கியமான விஷயமாக எனக்குப் படுகிறது.  அதேபோல் ஷோபாசகத்தியின் 12 கதைகளும் அவை குறித்த விமலாதித்த மாமல்லனின் பார்வையும் வெளிப்படுகிறது. 
இந்த மூன்று புத்தகங்களும் விற்பனைக்கு  விருட்சம் ஸ்டால் 403ல் உள்ளது.  வாங்க வரவும்.