நகுலனும் நானும்

அழகியசிங்கர்

ஒருமுறை நகுலன் வீட்டிற்கு வந்திருந்தார்

வாருங்கள் என்று அப்பா கூப்பிட்டு

ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தார் குடிக்க

நானும் நகுலனும்

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்

என்னைப் பார்த்து கண் சிமிட்டினார் நகுலன்

‘அந்தத் தண்ணீ கிடைக்குமா?’ என்று

அப்பாவுக்குப் புரியவில்லை

பின் நடந்தோம்

தெருவில்

18கே பஸ் திருப்பத்திலுள்ள

ஒயின் ஷாப்பில்

குவார்டர் ரம் வாங்க

நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு நின்றார்

ஏனோ பொருத்தமில்லாமல் பட்டது

ஒரு பிராமணக் கிழவன் என்று

முணுமுணுத்தான் ஒயின்ஷாப்காரன்.

12.04.2019-பீனிக்ஸ்

அமெரிக்கா

மொழிப்பெயர்ப்பு கவிதை 1

ரேமண்ட் கார்வர்


மகிழ்ச்சி

கொஞ்சம் கொஞ்சமாக இருள் விலகிக்கொண்டிருக்கிறது

நான் ஜன்னல் பக்கத்தில் கையில் காப்பியுடன்

எப்போதும்போல் காலை நேரம்

என்ற எண்ணம் மனதில்.

நான் அந்தப் பையனையும் அவன் நண்பனையும் பார்க்கிறேன்.

தெருவில் நடக்கிறார்கள்

செய்தித்தாள்களை வினியோகிப்பதற்கு.

குல்லாயும் ஸ்வெட்டரையும் அணிந்திருக்கிறார்கள்.

தோள்பட்டையில் ஒரு பையை ஒருவன் சுமந்துகொண்டிருக்கிறேன்

அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அவர்கள் பேசிக்கொள்வதில்லை

இருவரும் இணைந்து செல்கிறார்கள்

இளம் காலைப்பொழுதில்

அவர்கள் மெதுவாகச் செல்கிறார்கள்.

வானம் பளிச்சிடத் தொடங்குகிறது

ஆனால் சந்திரன் ஒளி நீரில் மங்கலாகத் தெரிகிறது

அந்த அற்புதம் ஒரு சில நிமிடம் மட்டும்.

மரணம், வேட்கை, காதல் கூட

இதில் நுழையா.

மகிழ்ச்சி. அது ஏற்படுகிறது

எதிர்பாராதவிதமாய். உண்மையில் தாண்டிப் போகிறது.

எந்தக் காலை நேரத்தைப் பற்றியும் பேசுவதற்கு.

மொழியாக்கம் : அழகியசிங்கர்

(Good Poems for Hard Times selected and introduced by Garrison Keillor)

தெருவில் ஒளிரும் குழல் விளக்கு

அழகியசிங்கர்

தெருவில் ஒளிரும் குழல் விளக்கு

அழகியசிங்கர்

நீண்ட குழல் விளக்கொன்று
ஒளிர்ந்து கம்பீரமாக நின்றது
குறுகிய வட்டத்தில்
ஒளியைச் சிந்திய வண்ணம்
வெளியே தலையைக் காட்டி
போகலாமாவென்று யோசித்தேன்
வேண்டாம் என்றது
ஒளிர் விளக்கு
வாழ்க்கை வித்தியாசமாக இருக்கிறது
எண்ணங்கள் எங்கங்கோ
சென்றவண்ணம் உள்ளன

                    27.03.2019
                    பீனிக்ஸ்
                    27.03.2019

துளி : 36 – குளிர் போய்விட்டது..

அழகியசிங்கர்

இன்று குளிர் போய்விட்டது.  வெயில் தொடங்கிவிட்டது.  பீனிக்ஸ்ஸில் வெயில் தாங்க முடியாது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.  வெளியே தலை காட்ட முடிôதாம். இதன் உக்கிரம் மே மாதத்தில்தான் இருக்குமென்று நம்புகிறேன்.  பேர்ன்ஸ் அன்ட் நோபல் என்ற புத்தகக் கடையைப் பார்த்து அசந்து விட்டேன்.  நாம் விருப்பப்படி தேடும் புத்தகம் கிடைக்கவில்லை.  ஆனால் ஒரு புத்தகம் கிடைத்து விட்டது.  நான் ரொம்ப நாட்கள் தேடிக்கொண்டிருக்கும் புத்தகம்.  எர்னஸ்ட் ஹெமிங் வேவின் முழு சிறுகதைத் தொகுதி. இப் புத்தகத்தைப் பற்றி அடிக்கடி என்னிடம் படிக்கும்படி கூறுபவர் என் நண்பர் ஆர் ராஜகோபாலன் (ஆங்கிலப் பேராசிரியர்).  அவர் சொன்ன நாளிலிருந்து எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருப்பேன்.  இப் புத்தகம் இன்றுதான் இங்குக் கிடைத்திருக்கிறது.  650 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை 22 டாலர்கள்.  நான் இங்கே வந்தபோது ஒவ்வொரு டாலரையும் இந்தியன் பணமாகக் கணக்குப் போடுகிறேன்.  இது ஆபத்தானது.  அப்படியெல்லாம் நாம் யோசிக்கக் கூடாது.  அதனால்தான் முதன் முறையாக நான் இப் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்க வேண்டாமென்று வைத்துவிட்டேன்.  திரும்பவும் இன்னொரு முறை வந்தபோது வாங்கிவிட்டேன்.  இதைப் படிப்பதோடல்லாமல் இதில் உள்ள எதாவது ஒரு கதையைத் தமிழில் மொழி  பெயர்த்துப் பார்க்க வேண்டும்.  இந்தக் கடையின் தோற்றத்தைப் படம் பிடித்திருக்கிறேன்.   

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 108

அழகியசிங்கர்  



வேணு வேட்ராயன் கவிதை 

யாரையும் குறை சொல்வதற்கில்லை

சம்பவங்களால் ஆனது வாழ்வெனில்

எச்சம்பவத்தின் தலைமேல்

எவ்வளவு பொறுப்பை சுமத்துவது?

எக்கணத்தில் எத்திசையில் எடுத்துவைத்த

காலடி

என்னை இங்கு கொண்டு சேர்த்தது?

பிரிந்தும் சேர்ந்தும் மாறிமயங்கும்

வண்ணப்பிரிகைகளான உறவுகளில்

எந்நிறத்தை தொட்டெடுத்து பூசிக்கொள்வது?

இயல்பென்றும் இருப்பென்றும்

மெய்யென்றும் பொய்யென்றும்

அறிந்ததும் அறியவொண்ணாததுமாய்

பெருமரமாய் கிளைத்து பரவி

விழுதில் வேரூன்றிக் கிடக்கிறது அது.

சிறுமனக்கூட்டில் கூச்சலிட்டபடி

ஆயிரம் அலகுகளால்

தீராத எண்ணங்களை

தின்றுகொண்டிருக்கின்றன குருவிக்குஞ்சுகள்.

மரக்கிளையில் தனித்துவிடப்பட்ட

பறவைக்கூடொன்று

தரையில் விழுகிறது சத்தமின்றி.

நன்றி : அலகில் அலகு – வேணு வேட்ராயன் – விருட்சம், சீத்தாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 600 033 – 9444113205 – பக் : 82 – விலை : ரூ.60

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 107



அழகியசிங்கர்  


ப்ரியாராஜ் கவிதை 

சிறுவயதில் கனவில் நான்

வந்தியத்தேவன்!

குதிரையையும், குந்தவியையும்

தேடிக் களைத்திருந்தேன்!

பின்னாளில் நான் பாரதியாய்

மீசையுடன் மாறி கவி எழுதி

தோற்றிருக்கிறேன்!

பாம்பு சட்டையை உரிப்பதுபோல

நான் அவ்வப்போது, சிவாஜியாய்,

ரஜினியாய், கமலாய் மாறி கனவில்

நாயகிகளைப் புணர்ந்திருக்கிறேன்!

ஆனாலும்,

இப்போதெல்லாம் நான் நானாக

இருக்க ஆசைப்படுகிறேன்!

முடியவில்லை! பழக்க தோஷம்!

நன்றி : இன்னொரு முகம் – ப்ரியாராஜ் – வெளியீடு : சந்தியா பதிப்பகம், ப எண் : 57, 53ஆவது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 600 083 – பக் : 160 – விலை : ரூ.80 – வெளியான ஆண்டு : 2009 

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – –>

– 106

அழகியசிங்கர்  

அவன்

ரமேஷ் பிரேதன்

வாழ்ந்த நினைவுகளை

அசைபோட்டபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான்

குறுக்காக ஒரு வெள்ளைப் பசு

சாலையைக் கடக்கிறது

மடி கனக்கிறது

உணவகத்தின் வாசலில் வைத்துக் கறக்க

சைக்கிள் கேரியரில்

வைக்கோல் திணித்த கன்றோடு

அவன்

வாழ்ந்த நினைவுகளை

அசைபோட்டபடி வாழ்ந்துகொண்டிருக்கிறான்

சாலையைக் குறுக்காகக் கடக்கிறான்

பசுவைப் பின்தொடர்ந்து

நன்றி : சாராயக் கடை – ரமேஷ் பிரேதன் – வெளியீடு ; உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018 – பக்கங்கள் :72 – விலை : ரூ.40 – வெளியான ஆண்டு : டிசம்பர் 2008.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 105



அழகியசிங்கர்  



பிளாஸ்டிக்கை சுவைத்தலும் சுவை கூட்டல் உத்திகளும்



றாம் சந்தோஷ்

பிளாஸ்டிக் சுவைப்பதை

நான் முதலில்

ஒரு கழுதையிடமும்

பிறகு இரண்டு நாட்டு, ஜெர்ஸி மாடுகளிடமும்

கற்றுக் கொண்டேன்

அவற்றின் பற்களைப் போன்றே

நல்ல திடமானவைகளுக்கு

நாம் நம் கடைவாய்ப் பற்களைத்

தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாயினுள் திணித்து மெல்லும்போது

சுவிங்கம் போல் ஒட்டாது, இம்சிக்காது;

கரைந்தும் போகாது; காசும் மிச்சம்.

நல்ல சுவைக்கு

ஒன்று : உங்கள் எச்சில் சுவையாக இருக்க வேண்டும்.

அல்லது : பிளாஸ்டிக் மண்ணிடைப்பட்டதாய் இருக்க வேண்டும்.

நன்றி : சொல் வெளித் தவளைகள்  – றாம் சந்தோஷ் – வெளடியீடு : சொன்மை பதிப்பகம், 25 முதல் தளம், எம்.எல்.ஏ அலுவலகம் எதிரில், ஜின்னா ரோடு, காதர் பேட்டை, வாணியம்பாடி 635 751  பக்கங்கள் : 100 – விலை : 110 

காதலர் தினம் என்றால் என்ன…….

அழகியசிங்கர்

நான் இதுவரை

காதலர் தினத்தன்று

எந்தப் பெண்ணையும் காதலிக்க

வேண்டுமென்று நினைத்ததில்லை

காதல் என்பதே ஒரு அபத்தமென்றும்

அந்த அபத்தத்திலும் அபத்தம் 

காதலர் தினம் என்று நினைப்பதுண்டு

நான் நடமாடும்

பூங்காவில்

தினமும் காலையில்

ஒரு ஜோடி கைக்கோர்த்து 

தங்களை மறந்து நடந்தபடியே செல்வார்கள்

அவர்கள் இருவரும் காதலர்கள் என்றாலும்

அந்தப் பெண் முகம் மட்டும் தினம் தினம்

பார்க்கும்போது பூரணமாக ஒளிர்வதைக் காண்கிறேன்.

பின் 

நான் அவர்களைப் பார்க்காத மாதிரி

நடந்து சென்று விடுவேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 104

அழகியசிங்கர்  



வாழ்க்கை



சுகந்தி சுப்ரமணியன்

வாழ்க்கை பூராவும் தியாகம் செய்வதா?

நான் கேட்டேன் அந்தப் பெண்களை.

இதுதான் வாழ்க்கை என்றாள் ஒருத்தி.

எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்

வாழ்கிறேன் என்றாள் மற்றவள்.

ஜடமாய் உணர்கிறேன் என்றாள் இன்னொருத்தி.

வெள்ளிக்கிழமையும், வியாழனும்

விரதமிருக்கிறேன் அம்மனுக்கு,

தீரும் என் கவலைகள் என்றாள்

மற்றுமொருத்தி.

இவர்களின் அனுபவங்கள் என்னுள் அடங்க மறுத்து அதிர

மௌனமானேன்.

வாழ்வின் தாக்குதல்கள் புரியாமலும்

வலுவுடன் எதிர்க்க முடியாமலும் ஓய்ந்துபோன

கால்கள் நடக்கின்றன மெதுவாய்

தலைகள் நிலத்தைப் பார்த்தபடி

நிமிர முடியாமல்.

நன்றி : சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள் – டிஸ்கவரி புக் பேலஸ்,

கே கே நகர் மேற்கு, சென்னை 600 078 – தொலை பேசி : 044-65157525 – பக்கங்கள் : 350 – விலை : 330