பகுதி 1ஆத்மாநாம் என்ற மதுசூதன் வாழ்க்கையில் முதல் முறையாக நான் சந்தித்தது திருவல்லிக்கேணியின் ஒரு தெரு முனையில். 1972 – ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. மாலை நாலரை மணி இருக்கும். நானும் நண்பர் ஷர்மாவும் ஹோட்டல் ஒன்றில் டிபன் சாப்பிட்டுவிட்டு என் அறையை நோக்கி மெதுவாக நடந்துகொண்டிருந்தோம். கடை ஒன்றில் நின்று ஷர்மா சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக்கொண்டிருந்தபோது, “ஹலோ ஷர்மா,” என்ற குரல் கேட்க திரும்பிப் பார்த்தோம், 20 வயது மதிக்கத்தக்க அழகிய இளைஞனாக ஆத்மாநாம் நின்று கொண்டிருந்தார். நானும், ஆத்மாநாமும் அதற்குமுன் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டதில்லை. எங்களுடைய முதல் சந்திப்பு அது. ஷர்மா எங்கள் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். அந்த நேரத்தில் நான் மூன்று சிறுகதைகள் மட்டுமே எழுதியிருந்தேன். ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ஞானரதம் இதழில் பிரசுரமாயிருந்த என் ஒரு சிறுகதையை வாசித்திருப்பதாக ஆத்மாநாம் சொன்னார். நண்பர் மகா கணபதியைப் பார்ப்பதற்காக சென்றுகொண்டிருப்பதாகவும், இன்னொருமுறை திருவல்லிக்கேணி வரும்பொழுது என் அறையில் வந்து என்னைச் சந்திப்பதாகவும் சொல்லி ஆத்மாநாம் விடைபெற்றுக் கொண்டார். திருவல்லிக்கேணி பைக்கிராஃப்ட் சாலையில் எங்களின் இந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது. 1984 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் நானும் ஆத்மாநாமும் மௌன்ட் ரோட் அரசாங்க நூல் நிலையக் கட்டடித்தின் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலக்கிய கூட்டத்திற்குச் சென்றிருந்தோம். நண்பர் ராஜகோபாலனும் எங்களுடன் வந்திருந்தார். கடுமையான அடிதடியாக மாறக்கூடிய அபாயத்தை நோக்கி அந்த இலக்கிய கூட்டம் சரிந்துகொண்டிருந்ததால், அங்கிருந்து நாங்கள் மூன்று பேரும் கூட்டத்தின் மத்தியிலேயே வேகமாக வெளியேறிவிட்டோம். டீ ஷாப் ஒன்றில் டீ சாப்பிட்டவாறு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பின் மெதுவாக நடந்தோம். ஆத்மாநாம் அம்பத்ததூர் செல்ல வேண்டும். நான் தியாகராயநகர். அதனால் நாங்கள் சர்ச்பார்க் கான்வென்ட் அருகில் ஆளுக்கொரு பஸ் ஸ்டாப்நோக்கிப் பிரிந்தோம். சில தினங்களில் ஆத்மாநாம் பெங்களூர் செல்லப் போவதாகவும் எப்போது மெட்ராஸ் திரும்புவேன் என்பதைச் சொல்ல முடியாதுயென்றும் கூறி விடை பெற்றார். எங்களுடைய கடைசிச் சந்திப்பு அதுவே. 1984 ஜøலை ஆறாம் தேதி பெங்களூரில் ஆத்மாநாம் காலமான செய்தி சிறு அஞ்சல் அட்டைச் செய்தியாக விருதுநகரில் இருந்த எனக்கு அறிவிக்கப்பட்டது. பன்னிரெண்டு வருஷங்களில் நானும் ஆத்மாநாமும் நாட்குறிப்பின்படி 1200 நாட்கள் சந்தித்திருக்கிறோம். நானும் அவரும் நண்பர்களாக இருந்தோம் என்று சொல்லிக்கொள்வது வெறும் மேலோட்டமான கூற்று என்பது என் அபிப்பிராயம். நட்பு என்ற தளத்திற்கு மேலான ஆழ்ந்த வெளியில் எங்களுடைய சந்திப்பு நிகழ்ந்துகொண்டிருந்தது. அறிமுகமான சில நாட்களிலேயே அதற்கான வெளி இயல்பாக உருவாகிக்கொண்டது. என்னை நான் தங்கியிருக்கும் லாட்ஜின் அறையில் வந்து சந்தித்துப் பேசுவதில் நாள் கிழமை நேரம் காலம் என்ற எந்தத் தடங்கல்களும் ஆத்மாநாமுக்கு இல்லாமல் இருந்தது மிகவும் குறிப்பிடும்படியானது. என்னைப் பார்ப்பதற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். எப்போது வேண்டுமானாலும் கிளம்பிச் செல்லலாம். இடையே உணவுவேளை வந்தால் என்னுடனேயே சாப்பிடலாம். ஆத்மாநாம் என்னைப் பார்க்க இரவு பதினொரு மணிக்குக்கூட மோட்டார் சைக்களில் வருவார். இரண்டுபேரும் கிளம்பி மௌண்ட்ரோட் புஹாரி ரூஃப் போவோம். டீ குடித்தவாறு அதிகம் பேச்சு இல்லாமலேயே கூட உட்கார்ந்திருப்போம். ஆத்மாநாம் ஜ்யூக் பாக்ஸில் காசு போட்டு பிடித்தமான பாட்டு எதையாவது அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பார். சில விஷயங்களில் நானும் ஆத்மாநாமும் நேர் எதிரான குணம் கொண்டவர்கள். நான் எதையும் திட்டமிட்டு செய்வேன். ஒரு புத்தகம் வாங்குவதென்றால்கூட நான் எந்தக் கடையில் போய் வாங்கலாம்; எந்தத் தேதியில் எந்த நேரத்தில் போய் வாங்க வேண்டும் என்பதையெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே தீர்மானம் பண்ணி விடுவேன். ஆத்மாநாம் திடீரென்று “வாங்க போகலாம்,” என்று கிளம்புவார். மௌண்ட் ரோட், பாண்டிபஜார், பாரீஸ் கார்னர்; சில நேரங்களில் புரசைவாக்கம்கூட போவார். என்ன வாங்கலாம் என்ற தீர்மானம் – வீதிகளில் நடந்து கொண்டிருக்கும்போது தோன்றும். இசைத் தட்டுகள் விற்பனை செய்கிற கடைகளுக்குள் நுழைவார். பத்துப் பதினைந்து இசைத்தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லி கேட்பார். ராக், ஜாஸ், பாப் – என்று எந்தவித இசைத்தட்டாக இருந்தாலும் வாங்குவதற்காக தேர்வு செய்வார். சிலவேளைகளில் எனக்கும் ஒரு இசைத் தட்டு பரிசாக வாங்கித் தருவார். அவர் தேர்வு செய்யும் இசைத்தட்டு கேள்வியே பட்டடிராததாகக்கூட இருக்கும். பத்துப் பன்னிரெண்டு இசைத் தட்டுக்களை போட்டுக் காட்டச் சொல்லிவிட்டு எதையும் வாங்காமல் அவர் வெளியேறி விடுவதும் உண்டு. அந்த மாதிரி ஆத்மாநாம் வெளியேறும்போது ஏமாற்றத்துக்குள்ளாகும் கடை விற்பனையாளரின் முகம் போனபோக்கை அவர் வெளியேறிச் செல்கையில் குழந்தையின் குதூகலத்துடன் சொல்லிச் சிரிப்பார். பிடிக்காத பட்சத்தில் வாங்க வேண்டும் என்பது கட்டாயமில்லையென்று வாதிடுவார். நான் எதிர்வாதம் செய்வதில்லை – ஆயினும் நான் அந்த மாதிரி ஒரு நாளும் நடந்துகொள்வதில்லை. நானும் ஆத்மாநாமும் அடிக்கடி போகிற ஒரு இடம் – கன்னிமாரா ஹோட்டலில் இருக்கும் புத்தகக் கடை ஒன்றுக்கு. ரொம்பச் சின்ன கடை அது. தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டும்மிக நேர்த்தியாக அடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கடையின் அமைப்பே ரம்மியமாக இருக்கும். அங்கேதான் நான் ஒருநாள் “ஜோன் பேஸ்” என்ற அமெரிக்க நாட்டுப்புறப் பாடகியின் சுயசரிதைப் புத்தகத்தை வாங்கினேன். ரொம்ப ரொம்பச் சின்னப் புத்தகம்தான் அது. ஆனால் அருமையான புத்தகம். இன்றும் என்னால் மறக்க முடியாத புத்தகம் அது. என்னிடமிருந்து அதை வாங்கிப்போய் படித்த ஆத்மாநாம் அவருக்காக மற்றொரு பிரதியை உடனே வாங்கி விட்டார்….ஒன்றே ஒன்று – அந்தப் புத்தகக் கடையில் மட்டும் ஆத்மாநாம் எதுவும் வாங்காமல் வெளிவருவதில்லை. எப்போதும் அந்தக் கடையில் புத்தகம் வாங்கியதும் கன்னிமாராவின் ரெஸ்டாரண்ட்டில் நானும் அவரும் காஃபி சாப்பிடுவோம். அந்த ரெஸ்டாரண்டின் காஃபியும் மறக்க முடியாதது. ஒருநாள் இரவு ஒன்பது மணியாக இருந்தது. இரவு உணவு ஆத்மாநாம் என்னுடன்தான் சாப்பிட்டிருந்தார். அதனால் அவசரமாகக் கிளம்பி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. சாவகாசமாக நாற்காலியில் சாய்ந்தவாறு என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். சட்டென ஞாபகம் வந்தவராக, “ராம்மோஹன் – கிளம்புங்க; எனக்கு ஒரு ஷர்ட் துணி வாங்கி வேண்டியிருக்கு; மௌண்ட் ரோடுல எங்கேயாவது வாங்கலாம்..”என்றார். இருவரும் மோட்டார் சைக்கிளில் கிளம்பிப் போனோம். மணி அப்போது ஒன்பது இருபது ஆகியிருந்தது. ஒரு கடைக்குள் நுழைந்தோம். சில நிமிடங்களில் கடையை மூடுவதற்கான அடையாளங்கள் தெரிந்தன. சிப்பந்திகள் சற்று சோர்வுடன் பார்த்தார்கள். மூடப்போகிற நேரத்தில் வருகிறார்களே என்ற ஆயாசம் அவர்களுடைய முகங்களில் இருந்தது. ஆத்மாநாம் துணிகளை எடுத்துக் காட்டச் சொல்லி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு சிப்பந்தி மட்டும் உற்சாகம் இல்லாமல் துணிகளை எடுத்து காட்டிக்கொண்டிருக்க மற்றவர்கள் அவரவர் இடங்களில் வெறுமே நின்றார்கள். எல்லோருடைய கவனமும் ஆத்மாநாம் மேலேயே இருந்தது. பொதுவாகவே எந்தப் பொருளை வாங்கப் போனாலும் பார்த்தோம் வாங்கினோம் என்ற சமாச்சாரமெல்லாம் கிடையாது ஆத்மாநாமிடம். எடுத்து எடுத்து காட்டச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவசரமே இருக்காது. அன்றும் அதே மாதிரிதான். நிதானமாக ஒவ்வொரு துணியாக பார்த்துக்கொண்டேயிருந்தார். மேலும் மேலும் துணிகளை எடுத்துக்காட்டும் படியும் சொல்லிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு துணியைத் தேர்வு செய்தார். கடைப் பணியாளர் அந்தத் துணியில் ஆத்மாநாமுக்குத் தேவையான அளவை கேட்டு கிழித்தார். அவரிடம் ஆத்மாநாம் தான் எவ்வளவு பணம் தர வேண்டும்? என்று கேட்க பணியாளும் கணக்கிட்டுச் சொன்னார். ஆத்மாநாம் உடனே மணிபர்ûஸ எடுத்தார். அந்தத் துணிக்கான பில் தொகை அவரிடம் இல்லை. பணம் மிகவும் குறைவாக இருந்தது. ஷர்ட் பாக்கெட்; பேண்ட் பாக்கெட்; ப்ரீஃப் கேஸ் – எல்லாவற்றிலும் தேடினார். பணம் இல்லை. என்னிடம் இல்லை. கடைச் சிப்பந்தி பொறுமை இழந்து ஆத்மாநாமையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆத்மாநாம் சிறிதுகூட பதட்டமடைந்துவிடவில்லை. “நோ ப்ராப்ளம்; செக் புக் இருக்கிறது. செக் குடுத்திடலாம்…” என்றார். துணியை ‘பேக்’ பண்ணி கையில் வைத்திருந்த பணியாள் விருட்டென்று சொன்னார்,”செக்கெல்லாம் வாங்க மாட்டோம் சார்..” “ஏன் வாங்க மாட்டிங்க…ஏமாத்தற ஆள் இல்லை நாங்க…என்ன பண்றது ..கேஷ் எல்லாம் செலவாயிடிச்சி – கவனிக்காம வந்திட்டேன்… செக் தர்றேன்..வாங்கிக்கோங்க..” “ஸாரி, சார்..செக் வாங்க மாட்டோம்..” “உங்க முதலாளிகிட்ட என்னை கூட்டிட்டுப் போங்க, அவர்கிட்ட நான் பேசறேன்..” கல்லாவில் நின்றபடி கடை முதலாளி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்! பணியாள் முன்னே செல்ல நானும் ஆத்மாநாமும் அவரிடம் சென்றோம். கடை முதலாளியிடமும் ஆத்மாநாம் பணியாளரிடம் சொன்னதையே சொன்னார். தானே ஏற்றுமதி ஆடைகள் தயாரிக்கும் தொழிலில்தான் இருப்பதாக சொல்லி, தன்னுடைய ‘விசிட்டிங் கார்டை’ எடுத்துக்காட்டினார். கடை முதலாளி அதை வாங்கிப் பார்த்தார்…”ஓ கே சார் – போனா போகட்டும்…இந்தத் தடவை உங்ககிட்ட செக் வாங்கிக்கிறேன்..ஆனா – உங்க கிட்ட இல்லை; யார் கிட்டேயிருந்தும் செக் வாங்கற வழக்கம் கிடையாது எங்களுக்கு.. இன்னொரு தடவை இந்த மாதிரி செய்யாதீங்க..” என்றார் கடை முதலாளி. ஆத்மாநாம் கடை முதலாளிக்கு நன்றி சொன்னார். செக் என்ன பெயரில் தரட்டும் என்று கேட்டு எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார். கடை முதலாளியும் நன்றி சொல்லி செக்கை வாங்கிக்கொண்டு துணிப் பார்சலை ஆத்மாநாமிடம் கொடுத்தார். ஆத்மாநாமும் நன்றி சொல்லி வாங்கி கடை முதலாளியிடம் கை குலுக்கினார். நாங்கள் வெளியில் வந்தோம். ஆத்மாநாம் சில நிமிடங்களுக்கு இந்தச் சம்பவத்தை நினைத்து நினைத்து குதூகலமாய் சிரித்தார். செக் தருவதாக சொன்னதும் கடைப் பணியாளர்கள் எல்லோருமே எப்படி ஆற்றாமையோடு விழித்தார்கள் என்பதைக் கூறி சிரிப்பு. இந்தச் சம்பவத்தை நான் சொல்லிக் கேட்பவர்களுக்கு ஆத்மானாமின் குதூகலமும் சிரிப்பும் கொஞ்சம் விகற்பமாகவோ சிறுபிள்ளைத் தனமாகவோ தெரியலாம். ஆனால் அப்படி இல்லை உண்மையைச் சொன்னால் இதே மாதிரியான சம்பவங்களை நிறையவே சொல்லமுடியும். ஆனால் இந்த மாதிரியான சிரிப்பும் குதூகலமும் சிறுபிள்ளைத்தனமானவை கிடையாது. ஆத்மாநாமுக்கே உரித்தான கள்ளம் கபடம் இல்லாத குழந்தைத்தனமான சுபாவம் இது. அடிப்படையில் ஆத்மாநாம் கண்ணியமும் மேன்மையும் கொண்ட மனிதர். கண்டிப்பான சில நாகரீகங்களை பின்பற்றுகிறவர். மிக மென்மையான் சிறிது சங்கோஜமான நண்பர் அவர். எப்போதாவது இரவு நேரங்களில் என் அறையிலேயே தங்கிக் கொள்ளும்போது நான் தரும் புதிய வேட்டியையோ லுங்கியையோ கட்டிக்கொண்டு பனியன் அணிந்த தோற்றத்தோடு தூங்குவதற்குக்கூட அவரால் முடியாது. வெட்கப்படுவார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில்வெளி வராந்தாவில் இருக்கும் பாத்ரூமில் குளிக்கப் போகும்போதுகூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டோடேயே தூங்குவார். காலையில் வெளி வராந்தாவில் இருக்கும். பாத்ரூமில் குளிக்கப் போகும்போதும் கூட துண்டு கட்டிக்கொண்டு போகலாம். மாட்டார். பேண்ட் ஷர்ட்டுடன்தான் செல்வார் – இதே ஆத்மாநாம் பேண்ட்டையும் ஷர்ட்டையும் கழற்றி படிகளில் வைத்துவிட்டு உள்ளாடையுடன் ஒருநாள் கிணற்று நீரில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். ஆத்மாநாம் 1984 ஜøலை 6ஆம் தேதி தற்கொலை செய்து உயிர் இழந்தார். (ஸடெல்லா புரூஸின் கட்டுரைகள் என்ற தொகுப்பு நூல் விருட்சம் வெளியீடாக வர உள்ளது. அதில் ஆத்மாநாம் பற்றி அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இங்கு பிரசுரம் ஆகிறது. அடுத்த பகுதி நாளை பிரசுரம் ஆகிறது)
Author: virutcham
தனலட்சுமி டாக்கீஸ்
இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது?
துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
வீடு செல்லும் வழியில்தான் “தனலட்சுமி டாக்கீஸ்” இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை
நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார்.
தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான்கு மணிக்குமேல் சுற்றியுள்ள கிராமத்து மக்கள் தனலட்சுமி டாக்கீஸை நோக்கி படையெடுப்பார்கள்.
நான்கரை மணிக்கெல்லாம் ஒலிப்பெருக்கியில் பாடல்கள் தொடங்கிவிடும்.
அந்த பாட்டுச்சத்தத்தை வைத்துதான் மணி என்னவென்று சொல்வார்கள் கடிகாரமில்லாத வீட்டு மக்கள்.
கட்டையனுக்கு திரையரங்கம் மீதுள்ள காதலால் அவருக்கு பிறந்த பெண்ணுக்கு தனலட்சுமி என்று பெயரிட்டார்.
கட்டையனுக்கும் அவர் மனைவிக்கும் அடிக்கடி வாய்ச்சண்டை நடக்கும்”எனக்கு சக்களத்தி இல்லைன்னு தியேட்டர கட்டிக்கிட்டீகளோ? நிதமும் அங்கேயே குடியிருக்கீக..பொட்டப்புள்ளைய பெத்துவச்சுக்கிட்டு நான் படுறபாடு எனக்கும் அந்த திருச்செந்தூரு முருகனுக்கும் மட்டும்தான் தெரியும்”
“ஆமா நீயும் நானும் இளவட்டம் பாரு! கொஞ்சி குலாவ…இங்க கிடந்தா திண்ணையில கெடப்பேன்…அங்க கிடந்தா பெஞ்சுல கிடப்பேன்…அவ்வளவுதான்டி வித்தியாசம்…போயி கஞ்சு காச்சற வழிய பாரு”
எப்பொழுதும் தியேட்டரை விட்டுக்கொடுத்ததில்லை கட்டையன். படம்பார்க்க வருபவர்களுக்கு முறுக்கும்.அதிரசமும் செய்து தன் மகள் தனலட்சுமியிடம் கொடுத்தனுப்புவாள் கட்டையனின் மனைவி.
ஒரு நார்க்கூடையில் முறுக்கையும் அதிரசத்தையும் எடுத்துச்சென்று விற்று வருவாள் சிறுமி தனலட்சுமி. வறுமையென்றாலும் எப்பொழுதும் அதை வெளிக்காட்டியதில்லை கட்டையன். செய்கின்ற வேலையை நன்றாக செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர் குறிக்கோள். படம் பார்க்க வருகின்றவர்கள்
அனைவருக்குமே கட்டையனின் சிரித்த முகம் பிடிக்கும்.
“என்ன மாமோய் நீங்களே ஹீரோ கணக்காதான இருக்கிய படத்துல நடிச்சா நாங்க பார்ப்போம்ல” டிக்கெட் வாங்க வரும் குமரிகளின் கிண்டலுக்கெல்லாம் அசந்துவிடமாட்டார் கட்டையன்.
“வாடி என் மச்சினிச்சி….நீயும் என் கூட நடிச்சா நான் நடிக்க மாட்டேன்னா சொல்லுவேன்…வர்றியா ரெண்டுபேரும் டூயட்டு பாட அமெரிக்கா போவலாம்” என்று மடக்கிப்பேசுவதில் வல்லவர்.
இன்பங்கள் மட்டுமே இருந்துவிடில் அது வாழ்க்கை அல்ல என்பதுபோல திரையரங்கின் சொந்தக்காரர் சில வருடங்கள் கழித்து திடீரென்று பட்டணத்திலிருந்து ஊர் வந்தார்.
தியேட்டரில் வேலைபார்க்கும் அனைவரையும் அழைத்து அந்த இடிபோன்ற செய்தியை சொன்னார்.
“எல்லாரும் நல்லாத்தான் வேல செஞ்சிய…ஆனா என்னத்த பண்றது முந்தி மாதிரி தியேட்டரால வருமானம் இல்ல… நானும் புள்ளக்குட்டிக்காரன் எத்தனை நாளைக்குத்தான் இதைக் கட்டிக்கிட்டு அழுவறது..அதான் தியேட்டர ஒரு கம்பெனிக்காரனுக்கு வித்துப்புட்டேன்…இதுல உங்க எல்லாத்துக்கும் சேர வேண்டிய சம்பளப் பணம் இருக்கு பிரிச்சு எடுத்துக்கிட்டு வேற வேலை இருந்தா பார்த்து பொழச்சுக்குங்க அப்பு,நான் வாரேன்”
அவருடைய கார் கிளம்பிச்செல்லும் வரை ஒருவரும் அசைவில்லை. கட்டையன் வேப்பமரத்தில் சாய்ந்து உட்கார்ந்துவிட்டார். கண்ணிலிருந்து நிற்காமல் நீர் கசிந்துகொண்டிருந்தது.
மறுநாள் தனலட்சுமி டாக்கீஸ் மூடப்பட்டது. வீட்டிலேயே முடங்கிகிடந்தார் கட்டையன். முன்பு போல் யாரிடமும் பேசுவதில்லை. அடிக்கடி மூடப்பட்ட திரையரங்கின் இரும்புக் கதவின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கன்னம் பதித்து தியேட்டரை பார்த்தபடியே மெளனமாய் கண்ணீர் வடிப்பார்.
தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்தால் அந்த மகிழ்ச்சியில் மீண்டும் கட்டையன் சகஜநிலைக்கு வந்துவிடுவார் என்றெண்ணி அவசரமாக ஒரு மாப்பிள்ளை பார்த்து தனலட்சுமிக்கு திருமண ஏற்பாட்டை செய்தாள் கட்டையனின் மனைவி.
திருமண நாளும் வந்தது.
பட்டணத்திலிருந்து இரண்டு லாரி நிறைய கூலிஆட்கள் திரையரங்கம் முன்பு வந்து இறங்கினார்கள். மாலைச்சூரியனின் மஞ்சள் வெய்யிலில் அவர்களது கையிலிருந்த கடப்பாரைகளின் கூர்மை மினுங்கியது.
நெஞ்சு முழுக்க சோகமிருந்தும் பிள்ளையின் திருமணத்தை கண்டவுடன் சோகம் மறந்து சிரித்தபடியே திருமணத்திற்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தார் கட்டையன்.
அன்று மாலை தனலட்சுமியின் திருமண ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்திற்கு எதிரே பெயர்த்தெடுத்த செங்கலும் மண்ணும் சுமந்தபடி வந்துகொண்டிருந்தன இரு லாரிகள்.
பின் கதைக்குறிப்பு:
ஏழை வர்க்கத்தின் மிக முக்கிய பொழுதுபோக்கு கிராமத்து கொட்டகைகளில் திரையிடப்படும் திரைப்படங்கள்தான். அவர்களுக்கு திரைப்படம் என்பது திருவிழாபோல..கேபிள் டிவிகளின் படையெடுப்பில் பல திரையரங்கங்கள் நஷ்டத்தில் மூடப்பட்டன. இந்த நொடி எங்கோ ஒரு திரையரங்கின் செங்கல் பெயர்க்கப்படலாம்.
நஷ்டத்தில் மூடப்பட்ட எங்கள் கிராமத்தின் “தனலட்சுமி டாக்கீஸ்”க்கும் இந்த நிமிடத்தில் எங்கோ மரணத்தை எதிர்கொள்ளும் திரையரங்கங்களுக்கும் இந்தக் கதை சமர்ப்பணம்.
(நவீன விருட்சத்திற்குப் படைப்புகளை navina.virutcham@gmail.com என்ற இணையத் தளத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். தேர்ந்தெடுக்கும் படைப்புகள் முதலில் நவீன விருட்சம் blog லும் பின் நவீன விருட்சம் இதழிலும் பிரசுரம் ஆகும்)
சந்தி
அஞ்சலி அண்மையில் இயற்கை எய்திய ஓவியர் ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ் ஆகியோருக்கு என் அஞ்சலி. வாழ்க்கையில் இழப்புக்கள் தவிர்க்க இயலாதவை, சில இழப்புக்கள், சிந்தையில் ஆழமாக, வடுவாக, காலம் மட்டுமே ஆற்றக்கூடிய இரணங்களாகக் கூடிக் களித்த நினைவுகளே ஆறுதல் தரக்கூடியதாக அமைந்து விடுகின்றன. பல இரங்கல் பேச்சுகள், இறந்தோர் மாட்சியைவிட பேசுபவரின் பெருமையை இறந்தவர் எப்படிப் பாராட்டினார் என்று பீற்றிக்கொள்வதாக, கேட்பவர், படிப்பவர் கூசும்படியாக இருக்கின்றன. ஆதலால் இங்கு இயற்கை எய்திய அருமை நண்பர்களைப் பற்றி இவர்கள் சிறந்த கனவான்களாக இருந்தார்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றையும் கூற உத்தேசமில்லை. நீங்களும் அவர்களைப் போலவே என் உணர்வுகளைப் புரிந்துகொள்வீர்கள். ************************* தாய் நாடு, திரு நாடு, எந்தையும் தாயும் குலவி மகிழ்ந்த நாடு, இந் நாடு. விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குமேல் ஓடிவிட்டன. குடிமக்கள் இன்னும் வறுமையிலிருந்து, நோயிலிருந்து, அறியாமையிலிருந்து, அச்சத்திலிருந்து முழுமையாக விடுதலை பெறவில்லை. நெஞ்சை நிமிர்த்தி பெருமையுறவும் ஏற்றங்களும் கண்டோம், முதல் பெருமை முற்றிலும் கர்வம் கொள்ள இன்று உலகிலேயே பெரிய மக்களாட்சி கொண்ட நாடு இந்தியா என்பதுதானே. சந்தித்த பெரிய சோதனை, 32 ஆண்டுகளுக்கு முன், June 25, 1975 இந்திரா காந்தி அம்மையார் பிரகடனம் செய்த “உள்நாட்டு நெருக்கடி நிலைமை.” நள்ளிரவில் எதிர் அணியில் முன்னணியில் இருந்த தலைவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி முதலியோர் சிறையில் அடைக்கப்பட்டனர், மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, செய்தி இதழ்கள் வாய் பூட்டு இடப்பட்டு, அரசிற்கு எதிரான செய்திகள் வெளியிடக் கூடாதென்ற தடுப்பு அறிக்கை கொடுக்கப்பட்டு, குடிமக்களுக்கு நீதி முற்றிலும் மறுக்கப்பட்டது. கவிந்தது காரிருள். இவ்வாண்டு பிப்ரவரி 25-ல் காலமான நீதிபதி ராஜ் ஹன்ஸ் கன்னா (அகவை 95), மக்களின் மரியாதைக்கும், போற்றதலுக்கும் உரியவர், பொறுமை, பணிவு, கூர்ந்த மதிநுட்பம், எல்லாவற்றிற்கும் மேலாக வீரமும் கொண்டவர். 1912-ம் ஆண்டு பிறந்த அவர் 1971-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளில் ஒருவராக பதவியேற்றார். உள்நாட்டு நெருக்கடி நிலைமை என்ற அரசின் கொடூர நடவடிக்கைக்கு எதிராக பல ‘ஆள்கொணர்வு’ வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும்போது, ‘ஏடி. எம் ஜபல்பூர் எதிர் சிவகாந்த சுக்லா’ என்ற பேர் பெற்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஐவர் கேட்டு தீர்ப்பளித்தனர் – அந்த வழக்கின் தீர்ப்பு, அரசின் நிலையை ஆராய்ச்சிக்கும், கண்டனத்திற்கும் உட்படுத்தக் கூடிய ஒன்று. நான்கு நீதிபதிகள் அரசின் நிலையை – உள்நாட்டு நெருக்கடி நிலைமையை ஆதாரித்து எழுதினார்கள். நீதிபதி ஹன்ஸ் ராஜ் கன்னாவின் தீர்ப்பு, நியாயத்தையும், நீதியையும் வலியுறுத்தி, அரசின் நிலையைக் கேள்விக்குரியதாக்கிய எதிரான ஒன்று. அவ்வாறு அரசின் நிலையை எதிர்த்துக் கொடுத்தத் தீர்ப்பிற்காக, அவர் கொடுத்த விலை, அவருக்கு முறைப்படி கிடைக்க வேண்டிய தலைமை நீதிபதி என்ற பதவி உயர்வைப் பறித்தது. அப்பதவி, அவருக்கு இளையவரான மற்றொரு நீதிபதிக்கு அளிக்கப்பட்டது. நீதியரசர் ஹன்ஸ் ராஜ் கன்னா தன் பதவியைத் துறந்தார். அன்னாரின் வீரமும், தியாகமும் இந்திய நீதித்துறையின் மானத்தையும் கண்ணியத்தையும், நேர்மையையும் காப்பாற்றியது. நீதியரசர் ஹன்ஸ்ராஜ் கன்னாவின் உருவப்படம் சுப்ரீம் கோர்ட் இரண்டாம் வளாகத்தை அலங்கரிக்கின்றது. இன்று.(நன்றி : திரு அனில் திவான் கட்டுரை வீர நீதியின் ஒரு முகம் – ஹிந்து நாளிதழ் 07.05.2008). ******************************* புகழுக்கு மூன்று வழிகள், ஒன்று, புதிதாகச் செய்வது, இரண்டு, பெரியதாய் செய்வதாம், மூன்றாவது சிறப்பாகச் செய்வது. எழுத்திலும் இதேதான். வழிகள் நேராக இருந்தால் குறுக்கு வழிகள் இருக்காதா என்ன? அதில் ஒன்று, மாற்றி சொல்வது. உங்கள் வீட்டு பெண்மணிகளைக் கேட்டுப் பாருங்கள்: தமிழ் திரைப்பட இசையில் இது ரீமிக்ஸ் காலம். பார்த்தார் ஒரு சுஜாதா சிஷ்யக்குஞ்சு, சிறுகதைகளில் புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றை ரீ மிக்ஸ் செய்து உலவவிட்டுவிட்டார். இலக்கியத்தில் வேண்டாமே இந்த ரீ மிக்ஸ். ******************************* சென்ற இதழ் ‘சந்தி’யில், தன் ‘இனிய’ வாசகர்களுக்காக, கொம்பன், ரெசினாகுன்றுக்குக்கூட போவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறியிருந்தான். கடவுளால் தலையில் தைலம் தடவப்பட்டவர், காப்பாற்றப்பட்டார். குறைந்தபட்ச தகுதியே அவருக்கு இல்லையாம். போகட்டும். கொம்பனிடம், ஆசிரியர் அழகியசிங்கர், பேசும்போதெல்லாம்,’உங்கள் வாசகர் வட்டம் விரிந்துகொண்டே வருகின்றது. சந்தியை நிறுத்தி விடாதீர்கள்,’ என்று கூறி வருகின்றார். அப்படித்தானே!! “ஆம்” என்கிற கடலோசை.(நவீன விருட்சம் 79/80 வது இதழில் வெளிவந்த கட்டுரை)
புட்டா சுந்தரசாமியின் சென்னை விஜயம்
பெங்களூரிலிருந்து வந்திறங்கினார்
புட்டா சுந்தரசாமி
எங்களூருக்கு.
ஹஸ்தினாபுரம் கிளையை
ஒரு கலக்கு கலக்க ஏபிஎம் ஆக.
பாதி கன்னடம், பாதி தமிழ்
எல்லோரும் அரைகுறை ஆங்கிலத்தில்
அவருடன் உரையாடுவோம்
ஏறக்குறைய என் வயது
அவரைப் போல தோற்றத்தில்
முன் வழுக்கையோடு
உயரம் சற்று கூடுதலாக
இன்னொருவர் இருக்கிறார் எங்கள்
அலுவலகத்தில்
வியாதிகளிலே எங்கள் இருவருக்கும்
பொதுத் தன்மை உண்டு
குடும்பத்தினரை விட்டு விட்டு
தனிமை வாசம்
அதுவே தனி விசாரம்
தற்போது இருக்குமிடம்
பெரும் குழப்பம்
மாதம் ஒன்று ஆகப் போகிறது
தங்கும் இடம் தேடி தேடி
தளர்ந்து போகிறார் புட்டா சுந்தரசாமி
தினம் தினம்
எங்களில் ஒருவரோடு
வீடு தேடும் படலம்
பார்க்கும் வீடெல்லாம்
ஏனோ கோணலாய்த் தெரிகிறது
வசதியாய் பங்களுரில் இருந்தவருக்கு
வாழுமிடமெல்லாம் நரகமாய்த் தெரிகிறது
நீண்ட கூடம்போன்ற
அறை இருந்தால் வாடகை
மலைக்க வைக்கிறது
கொஞ்சம் மிச்சம் பிடித்து
வீட்டிற்கும் பணம் அனுப்ப வேண்டுமென்று
நினைக்கிறார் பாவம் புட்டா சுந்தரசாமி
அலுவலகத்திற்கு எதிரே ஒரு இடம்
இருந்தது. போய்ப் பார்த்தார்
இடமும் பிடித்திருந்ததுஆனால்
இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாம்
பாத்ரூமையும், லெட்ரீனையும்
கேட்டவுடன் மூக்கைப் பொத்தியபடியே வந்துவிட்டார்
புட்டா சுந்தரசாமி
நாற்றம் அவரைச் சூழ்ந்து கொண்டதோ
இன்னும் சில இடங்கள்
வாகாய் இல்லை
சுகாதார கெடுதலை தரும்
இடமெல்லாம் கண்ணில் பட்டு
வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க வைக்கிறது
ஒரு இடத்தில்
கொசுக்கள் தொல்லை அதிகம்
எதாவது சமயத்தில்
மழைப் பெய்தால்
பாம்புகள் நெளியுமாம்
போதுமடா புட்டா சுந்தரசாமி
தன் துயரங்களை
வெளிவாசலில் நின்றபடி
புகை ஊதியபடி
எல்லோரிடம் ஆங்கிலமும் தமிழும்
கலந்துரையாடியபடியே
அழுக்கு ரூம் ஒன்றில்
தற்காலிகமாகக் காலத்தைக் கழிக்கிறார்
புட்டா சுந்தரசாமி
கட்டாயம் சனிக்கிழமைகளில்
பங்களூருக்கு ஓடி விடுகிறார்
குடும்பத்தைப் பார்க்க..
எங்களூருக்கு வந்த பங்களூர்
ஏபிஎம் புட்டா சுந்தரசாமி படும்பாட்டைப் பார்த்தீரா?
ஆதிமூலம், சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ்……
நமக்கிருப்பது
தன்
கண்களை, காதுகளை வாயை
பொத்திக்கொண்டிருக்க வேண்டுமென்று……….
என் ஏகாந்த வனம்
என்றிருந்த வனதேவதை நான்
என் அடர்ந்த வனங்களில்
படர்ந்த முதல் சூரியக் கிரணம் நீ
ஏனோ இப்போது
என் காட்டில் குயில்கள் எல்லாம்
கூவித் திரிகின்றன
உன் பெயரை….
உன் வருகைக்குக் காத்திருக்கும்
என் வாசனைப் பூக்கள்….
நீ கால் நனைக்க
கன்னம் சிவக்கும்
என் காட்டு நீரோடை…..
எப்போதும் ஏகாந்தம்
என்றிருந்த வனதேவதை நான்
ஏனோ இப்போது
என் வசமில்லை என் வனம்
ஏன் நுழைந்தாய் உன் புல்லாங்குழலுடன்
என் ஏகாந்த வனத்தில்……?
என் அம்மா
அவளுக்கு நன்றகவே தெரியும்
மகாபாரதமும் இராமயணமும்-
தினமும் எங்களுக்கு ஏதாவது ஒரு கதை
சொல்லுவாள் அவற்றிலிருந்து
தினமும் ஒரு புதிய கதை உண்டு –
அவற்றில் ஆயிரக்கணக்கில்
கதைகள் உண்டல்லவா?
எப்போதும் அவளுக்கு அவைதான்..
படித்துக்கொண்டிருப்பாள்-
பிரார்த்தனையின்போதும் அவைதான்
சில பகுதிகள் சில காண்டங்களிலிருந்து நிதமும்
ஒரு மண்டலம் ஒரு குறிப்பிட்ட பலனைத்தருமென்று.
நாங்களெல்லாம் பிரசாதத்திற்கெனவே காத்திருப்போம்
அதுவுமல்லவா என்ன எப்படிச் செய்ய
என்று சொல்லப்பட்டுள்ளது….
சீதை மற்றும் இலவகுசர்களின் கட்டங்கள்
அவளுக்குத் தெரிந்திருந்தும்
அவற்றைச் சொல்லும் போது
கண்ணில் நீர் வந்தபோதும்-
இராமனின் மேல்.
சீதையின் மேல் சந்தேகித்து
அக்னிப்பிரவேசம் செய்யவைத்த
இராமனின் மேல்
அவளுக்கு கோபம் வந்ததாக
எங்களுக்குத் தெரிந்ததில்லை-
அந்த வயதில்
நாங்கள் கேட்டதுமில்லை
அது அவளுக்கும் பிடித்திருக்குமாவென்றும்
எங்களுக்குத் தெரியாது..
எங்களுக்குத் தெரிந்ததெல்லாம்
அது பற்றிப் பெரியதாக விவாதித்தவர்களை
அவளுக்குப் பிடித்ததில்லை என்பதே-
அது.
ஒரு மாதிரியான,
பிணம்தின்னிக்கொள்ளிகளைப் பற்றி
நினைக்கையில் வருமே
அது போன்றவொரு
அருவருப்பு….
நான் வயதுக்கு வந்தபின்னர்
ஒருநாள்
அம்மா சொன்னாள்
ஏ அது அப்படித்தான்
பாஞ்ஞாலியை வைத்து
விளையாடியது
இதே கணக்கு தானே?
மற்றதெல்லாம் வெறும் கண்ணாமூச்சி
குழந்தைக்கு நிலா காட்டுவது-
ஒவ்வொரு அம்மாவும்
ஆங்கிலத்தில் சொல்வது போல
சர்ரகேட் மதர் ஒன்லி
(Surrogate mother only)
அவளது கர்ப்பப்பை வாடகை ஊர்தி மட்டுமே
வரும் கிராக்கி
அவளது கணவனேயானாலும் …ஏ
சரி,
புரியவேயில்லை…
ஆனாலும்
மகாபாரதமும் இராமாயணமும்
ஏன் கடைசிவரை
படித்துக்கொண்டேயிருந்தாளென்று.
புரிவதில்லை கவிதை
உன்னுடைய
இந்தக் கவிதைக்கு
என்ன அர்த்தம்
ஒன்றும் புரியவில்லை
ஆச்பிரின்
கடித்துப் பாதியாகக்
கிடக்கும்
ஒரு ஆப்பிள் துண்டு
காபியோ
அல்லது டீயோ
ஏதோ ஒன்றின்
ஒரு காய்ந்துபோன கோப்பை-
ஒரு இளம் பெண்
அரைகுறை ஆடையில்
ஒரு மூலையில்
சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது-
நாற்காலி மீது
ஜென் புத்தகம் பாதி
திறந்த நிலையில் –
தண்ணீர் கொட்டி
அது கோடிட்டாற் போல
இதுபோன்ற சில வார்த்தைகள்
வேறொன்றும்
இல்லை –
கேட்டால் –
புரியாது
உனக்கு என்கிறாய்
அது சரி
இது ஒரு
ஓவியமல்லவா
எனக்கு
கவிதைப் புரிவதில்லை தான்
ஒரு வேண்டுகோள்
சமீபத்தில் 79-80-வது இதழ் கொண்டு வந்துள்ளேன். நவீன விருட்சம் என்ற இதழ் ஜூலை மாதம் 1988 ஆம் ஆண்டு கொண்டு வரும்போது, கவிதைக்கான இதழாக மாறிவிடுமா என்ற கேள்விக்குறி தொக்கி நின்றது. இன்றும் அதிகமாக கவிதைகளைப் பிரசுரம் செய்யும் இதழாக நவீன விருட்சம் திகழ்கிறது. வாசகர்கள் வட்டமும் சரி, இதழுக்காக ஆகும் செலவும் அதிகமில்லைதான். முதல் இதழ் தயாரிக்கும்போது எனக்கு ரூ.500 வரை செலவு ஆனாது. 16 பக்கம். (தபால் செலவு சேர்க்கவில்லை) இப்போது ஒரு இதழ் (100 பக்கம்) தயாரிக்க ரூ10000 மேல் ஆகிறது (தபால் செலவும் சேர்த்து).
இந்த இதழ் 79/80 இதழ்களின் தொகுப்பு. காலாண்டு இதழாகவே இதைக் கொண்டுவர வேண்டும் என்ற என் எண்ணம் இன்னும் பசுமையாக இருக்கிறது. இதழ் தயாரிக்க எனக்கு 6 மாத கால அவகாசம் ஆகிவிடுகிறது. ஆனால் இரண்டு நாட்களில் அச்சாகி விடுகிறது. பின் அதை அனுப்ப 3 வாரம் ஓடிவிடுகிறது. இப்போதுதான் எல்லோருடைய முகவரிகளையும் தயார் செய்து கொண்டு வருகிறேன்.
சந்தா கட்டுங்கள் என்று முன்பு கேட்டு கடிதம் எழுதுவேன். இப்போது ஏனோ முடிவதில்லை? இந்த ஏனோ ஏன் என்பதும் புரியவில்லை. தற்போது கம்புயூட்டரில் அடித்து அதை பிரிண்ட் எடுத்து எல்லோருக்கும் அனுப்பலாம் என்ற எண்ணத்தில் உள்ளேன். முதலில் விருட்சத்தை எல்லோருக்கும் அனுப்பிய பிறகுதான் உடனடியாக அந்தப் பணியைத் துவங்க வேண்டும்.
இந்த வலை மூலம் எல்லோரிடம் ஆண்டுச் சந்தா கேட்கலாம் என்று பலவாறு யோசித்தே இதை எழுதுகிறேன். 21ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நவீன விருட்சத்திற்காக ஆண்டுச் சந்தா ரூ 40 ஐ அனுப்புங்கள். இந்த இதழ் ரூ 20 தான். இதைப் பெற விரும்பும் வெளி நாட்டில் உள்ள அன்பர்கள் ரூ50 அனுப்புங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
NAVINA VIRUTCHAM
6/5 POSTAL COLONY FIRST STREET
WEST MAMBALAM
CHENNAI 600 033
INDIA
எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
அழகியசிங்கர்
12.07.2008