பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……

8

பூனை……..

காசியபன்

எங்கிருந்தோ ஓடி வந்து

என்னுடன் குடியிருந்த

அழையாத விருந்தே

எங்களில் ஒன்றாகி

இங்கிதோ என்னைப் புல்கி

அன்பிலொன்றி நிற்கின்றாய்.

பொன்வெள்ளி பகட்டும்

பஞ்சுரோம மார்தவமும்

கண்களில் குறும்பும்

பேசாத பேச்சும்

கேட்காத கேள்வியும்

மெளனம் மெளனத்துக்கு

விடை கொடுக்க

அந்தரங்க இரகசியங்கள்

மின்னாக கலக்கும்

உன் குழந்தை முகத்தூய்மையில்

காலம் தரும் ஞானமெல்லாம்

கண்டு வியக்கின்றேன்

உன் பூனை நடையினிலே

சலனத்தின் தத்தவமும்

வாலின் நெறியினிலே

வாழ்க்கையின் கதியும்

வண்ண வேற்றுமையிலே

பிரபஞ்ச பிரிவுகளும்

நன்றாக உணருகின்றேன்

அடுக்களை பாலும்

படுக்கையறை கரப்பும்

கலவறை எலியும்

மரத்து ஓணானும்

நீயும் நானும் போல

உன் நெடுநாளையத் தொந்தம்

நேற்றின்று வந்ததன்று.

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர்

வண்ணங்கள்

வண்ணங்கள் சாவதில்லை

அவை கரைந்து விடுகின்றன

அல்லது அடித்துக்கொண்டு போகப்படுகின்றன

அல்லது பூமியின் அந்தகாரத்தில்

விதைக்கப்படுகின்றன.

வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன

மேகங்களின் ஒளிர்ந்து

உதடுகளில் புன்னகை பூக்கின்றன

கண்ணீரைப் பெருக்கி

ஒளியை ஈன்றெடுக்கின்றன

வண்ணங்களாகிய நாம்

வண்ணங்களை உருவாக்கும் நாம்

வாழ்க்கையை

நம் முதுகுகளில் சுமந்துகொண்டோ

நம் பின்னால் இழுத்துக்கொண்டோ

நம் சிறகுகளில் அலைந்துகொண்டோ

இங்கு வந்து சேர

நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம்.

இருள் முதல் ஒளிவரை உள்ள

எல்லா வண்ணங்களுமான நாம்

பல தடவைகளில்

அடித்துக்கொண்டு போகப்பட்டு

மறுபடியும் பிறந்திருக்கிறோம்

இன்றும்

காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம்

அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம்

வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால்

இன்றும்

நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச்

சுவைக்கிறோம்

கனவுகளை உருவாக்குகிறோம்

மூலம் : பஞ்சாபி

(ஆங்கில வழி தமிழில் – மேலூர்)

நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989

(சுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. நாற்பத்தைந்து நூல்களுக்கு மேலாக பஞ்சாபியில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளும் கதைகளும் ஆங்கிலத்திலும் வேறு பல இந்திய, அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சுக்வீர்
நடத்தல்
நான் நடக்கிறேன்என் கால்களால் அல்ல கண்களால் -சாலைகளையும் தெருக்களையும் இதயத் தொகுதிகளையும்இரவின் இருளையும் கடந்து செல்கிறேன்சுற்றிலும் மக்களின் காடுஎன் கண்களின் துணையோடுஅதைக் கடந்து செல்கிறேன்கண்களுக்கேஅதனூடு செல்லும் திறன் உண்டு.
என் கால்கள் களைத்துவிட்டனமிகவும் களைத்துவிட்டனஆனால்நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்மக்கள் கூட்டங்களில் சிக்குண்டுநான் முன்னேறிப் போகிறேன்என்றாலும்இதயங்களின் வலி என்னும் எல்லையைக் கடக்கஎன்னால் முடியவில்லை
நான் நடக்கிறேன்என் கால்களால் அல்ல கண்களால்- ஒரு நீண்ட பயனம்
மூலம் : பஞ்சாபி
(ஆங்கில வழி தமிழில் – மேலூர்
)
நவீன விருட்சம் இதழ் 5 – JULY – SEPTEMBER 1989

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சார்லஸ் போதலேர்

கேரளக் கன்னிக்கு
உன் பாதங்கள் உன் கைகளைப்போல்
மென்மையானவை.உன் இடை மிக அழகிய
வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும்
சிந்தனைமிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும்.
வெல்வட்டுப் போன்ற உன் கண்கள்
உன் மேனியை விடக் கரியவை.
நீல மேகங்களும் புழுக்கமும் நிறைந்த
உன் தாய் நாட்டில் உன் முதலாளியின்
புகை பிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து
பாத்திரங்களில் நீரை நிரப்பி
வாசனைத் திரவியங்கள் கலந்து,
தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப்
படுக்கையினின்றும் விரட்டியடித்து,
புலர்ந்து புலராப் பொழுதில்
அத்திமர இலைகளின் வழி
காற்று இசை எழுப்பும்போது
அங்காடியில் அனாசிப் பழமும்
நேந்திர வாழைப்பழமும் வாங்குகிறாய்.
நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம்
வெறுங்காலுடன் சென்று
மறந்துபோன பழம் பாடல்களை
மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய்
மேற்கே சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு
சாயும்போது கோரைப்பாயில் நீயும்
மெதுவாகத் தலை சாய்க்கிறாய்
மிதக்கும் உன் கனவுகளில்
குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும்
களித்துத் திரியும் கன்னியே,
கடலோடிகளின் வன் கரங்களில்
உன் வாழ்க்கையை ஒப்படைத்து
உனக்குப் பிடிக்கும் புளிய மரங்களிடம்
இறுதி விடைபெற்று,
கும்பல் மிகுந்து அல்லலுறும் எங்கள்
பிரான்ஸை, நீ ஏன் பார்க்க விரும்புகிறாய்?
மென்துகிலை இடைவரை உடுத்து இங்கு
நீ வெண்பனியிலும் ஆலங்கட்டி மழையிலும்
குளிரால் நடுங்குவாய். மிகவும் இறுகிய
முலைக்கச்சை அணிந்து
உன் அரிய வனப்பின் மணமனைத்தையும் விற்று
எங்கள் ஒழுக்கக் கேடுகளில்
உன் வயிறைக் கழுவ நேர்ந்தால்
உன் இனிய, எளிய, அமைதியான வாழ்வை
எண்ணி எண்ணி எவ்வாறு நீ ஏங்குவாய்?
எங்கள் நாட்டுக் கனத்த மூடுபனியூடே
மறைந்து போகும் உன் நாட்டுத்
தென்னை மரங்களின் பொய்தோற்றங்களை
எப்படித் தேடுவாய்?

மூலம் : பிரேஞ்சு

ஆங்கில வழி தமிழில் : அமுதன்

(சார்லஸ் போதலேர் (1821/1867) ஃபிரெஞ்சு நாட்டுக் கவிஞர்களில் சிறந்த ஒருவர். வறுமை, பிணி, மனக்கசப்பு எல்லாம் அவர் வாழ்க்கையைப் பாழடித்தன. அவரது கவிதைத் தொகுதி தீயது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது. ஆனால், அவரைக் குற்றமற்றவர் என்றார்கள். 1946-ல் ஒரு பிரத்யேகச் சட்டத்தை இயற்றி, அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டு மத்தியில் போதலேர் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இக் கவிதை எழுதப்பட்டிருக்கலாம்).

நவீன விருட்சம் இதழ் – 4
1989 ஆண்டு

மொழிப்பெயர்ப்புக் கவிதை

சமீபத்தில் மறைந்த இரு பெண் எழுத்தாளர்களான கிருத்திகாவிற்கும், சுகந்தி சுப்பிரமணியனுக்கும் நவீன விருட்சம் தன் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவர்கள் இருவர் நினைவாக ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் தற்கொலை என்ற கவிதையை இங்கு சமர்ப்பிக்கிறேன். இதை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அளித்தவர் அஷ்டாவக்ரன். அவரும் இப்போது உயிரோடில்லை.

தற்கொலை

தனித்த ஒரு நட்சத்திரத்தைகூட விட்டுவைப்பதாயில்லை இரவில்
இந்தஇரவையும் விட்டு வைப்பதாயில்லை.
நான் மடிந்து விடுவேன், என்னுடன்
சகிக்க முடியாத இந்த அண்டத்தின் சுமையும்.
பிரமிடுகளையும், பெரும் பதக்கங்களையும்,
கண்டங்களையும், வதனங்களையும் நான் துடைத்துவிடுவேன்
நான் உண்டாக்குவேன் புழுதியை,வரலாற்றிலிருந்து, புழுதியிலிருந்து.
இப்பொழுது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அந்திமகால அஸ்தமனத்தை
நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் இக்கடைசிப் பறவையை
நான் தருகிறேன் சூன்யத்தை இங்கு ஒருவருமே இல்லாதபோது

(நவீன விருட்சம் 1989 / 3வது இதழ்)

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

ஆற்றங்கரை வணிகனின் மனைவி

ஒரு கடிதம்

என் தலையிற் வகுடாக நெற்றியில் வெட்டியிருக்கும் போதே
வாசல் முற்றத்தில் பூ பறித்து நான் விளையாடியிருக்க
நீர் வந்தீர். மூங்கில் பொய்கால் ஏறி குதிரை விளையாடி வந்தீர்.
நீலக் கொடிமுந்திரிகளை வைத்து விளையாடிக்
கொண்டு நான் இருக்கும் இடத்தைச் சுற்றி நடந்தீர்.
நாம் சொக்கான் கிராமத்திலேயே வாழ்ந்து வந்தோம்.
இரு சிறுவர்கள் வெறுப்பும் சந்தேகமும் இன்றி

பதிநாலு வயதில் ஐயனே உம்மை மணம் புரிந்தேன்
நான் ஒரு போதும் சிரிக்கவில்லை, நாணத்தினால்
தலை குனிந்து சுவரைப் பார்த்து நின்றேன்
ஆயிரம் தடவை அழைத்தும் ஒரு பொழுதாவது நான் திரும்பி பார்க்கவில்லை
பதினைந்து வயதில் முகம் சுளிப்பதை நிறுத்தினேன்
என் தூசு உங்கள் தூசுடன் கலக்க விரும்பினேன்
என்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்குமாக
ஏன் நான் வெளியைப் பார்க்க ஏறிவர வேண்டும்?

பதினாறில் நீங்கள் பிரிந்தீர்கள்
குமளி மறையும் நீர்ச் சுழிகள் நிறைந்த நதி வழியாக
தொலைவிலுள்ள கோடு யென்னுக்குச் சென்றீர்கள்
நீங்கள் போய் மாதங்கள் ஐந்தாகி விட்டன
மேலே குரங்குகள் சோகமாய் கரைகின்றன.

நீங்கள் போகும்போது
மனதில்லா மனதுடன் கால்களை இழுத்துச் சென்றீர்கள்
வாசலில் பாசி படர்ந்திருக்கிறது
பலவிதமான பாசிகள் அகற்ற முடியாத அடர்த்தியுடன்
இந்த இளவேனிலில் காற்றில் இலைகள் உதிர்கின்றன
இந்த ஆகஸ்டிலேயே வண்ணத்தி ஜோடிகள் மஞ்சளித்து விட்டன

மேற்கு தோட்டத்து புல் தரைகளில்
அவை எனக்கு வேதனை தருகின்றன
எனக்கு வயது ஆகிறது.
சியாங் நதியின் இடுக்கன் வழியாக நீங்கள் வருகிறீர்கள் என்றால்
முன்னமே தெரிவியுங்கள்
நான் பார்க்க வருகிறேன்

வி போ வின் சீனக் கவிதை

ஆங்கிலத்திலிருந்து தமிழில் : காசியபன்

பிரிவும் மரணமும்

என் நண்பர், நாகேஷ் இறந்த செய்தியைச் சொன்னபோது, நாகேஷ் பற்றிய ஞாபகத்தில் என் மனம் புகுந்து கொண்டது. பல ஆண்டுகளாக நாகேஷ் என்ற நடிகர் நடித்தப் பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் ஒரு போதும் நான் எந்த நடிகனுக்கும் ரசிகனாக இருந்ததில்லை. ஆனால் நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளையும், அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களையும் படித்திருக்கிறேன்.
நாமெல்லாம் ஏதோ வேலைக்குப் போய் சம்பாதிக்கிறோம். அவர்கள் நடித்து சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம். ஏகப்பட்ட புகழ். பணம். அவர்களைப் பற்றியே செய்திகள். பல சமயங்களில் நாகேஷ் சிரித்து மகிழ்வித்திருக்கிறார். நகைச்சுவை நடிகர்களில் நாகேஷ் நடிக்காதப் படங்கள் இல்லை. அவர் படங்கள் பலவற்றை நான் ரசித்திருக்கிறேன். என் எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, டணால் தங்கவேலு என்ற பல சிரிப்பு நடிகர்களை நான் ரசித்திருக்கிறேன். முகத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு சந்திரபாபு செய்யும் அட்டகாசம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் சந்திரபாபு பேசும்போது என்ன பேசுகிறார் என்பதை முழுவதும் புரிந்துகொள்ள முடியாது.
செய்கை அதிகமில்லாமல் பேச்சு மூலம் நகைச்சுவை உணர்வை காட்டுபவர் என் எஸ் கிருஷ்ணன். டணால் தங்கவேலு கல்யாண பரிசு படத்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளை இன்னும் ரசிக்கலாம். எம்.ஆர் ராதா, டி எஸ் பாலையா முதலிய நடிகர்கள் நகைச்சுவை நடிகர்களாகவும் வில்லன் நடிகர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.

இந்தச் சிரிப்பு நடிகர்களிலேயே நாகேஷ் தனிரகம். 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நாகேஷிடம் செய்கையும் உண்டு பேச்சும் உண்டு. பாடல் காட்சிகளில் நாகேஷ் ஆடிய நடனங்களும் ரசிக்கும்படியாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட பல சோதனைகளையும் பத்திரிகைகள் மூலம் அரசல்புரசலாக தெரிந்துகொண்டிருக்கிறேன். நகைச்சுவை நடிகர்களிலேயே ரொம்பவும் மரியாதைக்குரியவராகக் கருதபட்பட்டவர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்.

நடிப்பிலிருந்து விலகி பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் மாறியவர் சோ ராமசாமி. நடிப்புடன் நின்றுவிட்ட நாகேஷ், அந்தப் பணியைச் சிறப்பாகவே செய்து காட்டியவர். அவர் நடித்த பல படங்களை உதாரணம் காட்டலாம். நீர்க்குமிழி போன்ற சோகமான படத்திலும் நாகேஷ் அடிக்கும் லூட்டியை ரசிக்காமல் இருக்க முடியாது. எல்லோருக்கும் வயதாகிவிட்டால் வேறுவிதமாக மாறிவிடுவார்கள். அவர்கள் தொடர்ந்து இயங்கி வந்த இயக்கத்திலிருந்து புறம் தள்ளப்படுவார்கள். அப்போதெல்லாம் அவர்கள் வாழ்க்கையை எப்படி நடத்திக்கொண்டு போக வேண்டும் என்பது முக்கியமானது.
புகழ் உச்சாணியிலிருந்து அவர்கள் புகழ் போய்விடும். மக்களுக்கும் அவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டுவிடும். நான் மிகவும் ரசித்த ராஜகுமாரி என்ற நடிகையின் மரணம் பற்றிய செய்தி வந்தபோது, மரணம் அடைந்த போது இருந்த அவருடைய தோற்றத்தை படம் எடுத்து வெளியிட்டிருந்தார்கள். என்னால் அந்த் தோற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ராஜகுமாரி என்ற நடிகையின் அழகு தோற்றத்தையே கற்பனை செய்த எனக்கு, மரணம் அடைந்த தோற்றத்தில் இருந்த ராஜகுமாரியை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.

மேலும் நடிகர் நடிகைகளுடன் நமக்குப் பழக்கம் இருந்தால், அவர்கள் சாதாரணத்திலும் சாதாரணம் என்று தெரிந்துவிடும். ஒரு முறை புத்தகம் விற்பதற்காக ஒரு யுக்தியைக் கையாண்டது ஒரு அமைப்பு. டணால் தங்கவேலுவை அழைத்து புத்தகம் விற்பதற்காக கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்தது. நடிப்பிலிருந்து விலகி எல்லோருடைய நினைவிலிருந்து விலகிப்போன தங்கவேலு, புத்தகம் விற்கும் இடத்திற்கு வந்து அமர்ந்தார். அவரைப் பற்றி எல்லோரும் அறிவிப்பு செய்தார்கள். நானும் விருட்சம் புத்தகம் சிலவற்றைக் கொண்டு சென்றேன். மேடையில் தங்கவேலு முன்னால் எல்லாப் புத்தகங்களையும் பார்வைக்கு வைத்திருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட தங்கவேலுவிடமிருந்து புத்தகம் வாங்கவில்லை. நடிப்பிலிருந்து விலகியபின் இதுதான் தங்கவேலுவிற்குக் கிடைத்த மரியாதை.
எனக்குத் தெரிந்தவரை நாகேஷிற்கு இதுமாதிரியெல்லாம் நிகழவில்லை. எல்லாப் பார்வையிலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டுவிட்டார். அவரும் விலகி விட்டார். எல்லோருமே அப்படித்தான். ஆனால் சிலர் விதிவிலக்கு. எம்.ஜி.ஆர் நடிகர் மட்டுமல்ல. மக்களைக் கவர்ந்தவர். ஓரளவு சிவாஜி. இன்று ரஜினி, கமல். இது ஒருவிதத் தோற்றம்தான். இந்தத் தோற்றமும் மறைந்துவிடும். புத்திசாலியாக இருப்பவர்களைப் பற்றி எப்போதும் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

நாகேஷ் மறைந்தாலும் அவரைப்பற்றி அலுவலகத்தில் பேசாமலில்லை. நாகேஷிற்கு குண்டுராவ் என்பது இயற்பெயராம். அந்தப் பெயர் எனக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அவர் சாகும் தறுவாயில் அவருக்கு mental depression என்று ஒருவர் சொன்னார். ஆனால் எனக்குத் தெர்ந்த நாகேஷ் படத்தில் மட்டும் இருக்கிறார். எல்லோரையும் மகிழ்விக்க. என்ன இருந்தாலும் ஒருவர் மறைந்துவிட்டார் என்பது மனதில் சற்று சஞ்சலம்தான். சில நேரம் இறந்தவரைப் பற்றி நினைக்கத் தோன்றாமலில்லை. எங்கள் flatல் குடியிருக்கும் ஒரு பெண்மனி வீடைக் காலிசெய்து கொண்டு போய்க்கொண்டிருப்பதை வீட்டிற்கு வந்து சொன்னார். அவர் அந்த இடத்தை விட்டுப் போகப்போகிறதா என்ற எண்ணம் சற்று மனதில் நெருட ஆரம்பித்தது. இத்தனைக்கும் அந்தப் பெண்மணி என்னுடன் ஆரம்பத்தில் சண்டைக்கு வந்தவர். பெரும்பாலும் என்னைப் பார்த்தாலும் பேச மாட்டார். போகும் போது சொல்லிக்கொண்டு போகும்போது சற்று மனதில் நிழலாடிய வருத்தத்தை என்னவென்று சொல்வது.

7

உயிர்

“உனக்கு எப்பொழுது உயிர் வரும்?” என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன்.
“உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?”
“உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்.”
“இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் – மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்.”
“என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா?””தவறு, முடியும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வரும்பொழுது, அப்பொழுது எதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை முன்னுரிமை வரிசைப்படித் தீர்மானிக்கிறேன். முன்னுரிமைகள் அவசியமில்லாதபொழுது, ராண்டம் முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன். அதனால் எதைப் பற்றி சிந்திப்பது என்றும், என்னால் சிந்திக்க முடியும்.”
“சரி! சிந்தனையை விடு. உன்னால் அன்பு காட்ட முடியாதே!” மடக்கினேன்.
“அன்பு காட்டுவது என்றால் என்ன?” உணர்ச்சியில்லாமல் கேட்டது.
“நமக்குப் பிடித்தவர்களிடம் காட்டப்படுவது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. சில சமயங்களில் வசதிகள் கூட செய்து தருவது. அதற்காக ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருப்பது.”
“அதாவது சிலபேரிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவது. அதுதான் நான் இப்பொழுதே செய்கிறேனே. என் எஜமானனுக்குத் தேவையான உதவிகளை செய்கிறேன். எஜமான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன். அவன் குடும்பத்தினருக்கு எவையெவை வசதியோ அவைகளை செய்து கொடுக்கிறேன். அதற்காகாக நான் பிரதிபலன் ஏதும் எதிர்பார்ப்பதில்லை. இப்பொழுது உன்னுடன் கூட அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.” என்றபடியே என் முகத்துக்கு நேராக திடீரென்று தன் மெட்டாலிக் கைகளை வீசி காற்றில் எதையோ பிடித்தது.
“அன்பு பாரபட்சமாக காட்டப்படுவது அல்ல. எல்லா உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டியது.”
“உனது வாதம் முரண்பாடானது.”
“எப்படி?”அது தன் கைகளை விரித்துக் காட்டியது. அந்த உலோகக் கைகளுக்கிடையே ஒரு கொசு அமைதியாக இருந்தது. செத்து விட்டதோ?
“இந்தக் கொசு சிறிது நேரத்துக்கு முன் உன்னை கடிக்க வந்தது. நான் இதைப் பிடித்து கொன்றுவிட்டேன். நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நான் உன்னிடம் அன்பு காட்ட வேண்டியிருந்ததால் இதைக் கொன்றேன். எல்லா உயிருக்கும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று நீ சொல்வதால், நான் அதை கொன்றிருக்க கூடாது. உயிரோடு விட்டிருக்க வேண்டும். அது உன்னை கடித்திருக்கும். அப்பொழுது நீ அதை கொன்றிருப்பாய்.”
“அது எனது ரத்தத்தை உறிஞ்சி கெடுதல் செய்ய வருகிறது. அதனால் அதனிடம் அன்பு காட்டத் தேவையில்லை.”
“மேலும் முரண்! அது மனித ரத்தத்தை உறிஞ்சுவது அது வாழ்வதற்காக. ஒரு விதத்தில் அந்த செயல், அதன் ஜீவாதார உரிமை. அதை நீ மறுத்து அதைக் கொல்கிறாய்.”
இதற்கு எப்படி புரியவைப்பது?
“சரி, உன்னிடம் ஒரு கேள்வி. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் உன்னை செய்யச் சொல்கிறேன். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் உன்னால் செய்ய முடியும். அப்பொழுது நீ எந்த வேலையை செய்வாய்? எந்த வேலையை கைவிடுவாய்?”
“இரண்டில் எதற்கு முன்னிரிமை அதிகமோ, எது முக்கியம் என்று என்னுள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதோ அதைச் செய்வேன்.”
“அதே போல்தான். கொசு முக்கியமல்ல.”
“அது எப்படி? அந்தக் கொசு கடிப்பதால் நீ சாகப் போவதில்லை. ஆனால் உன் தாக்குதலில் அது செத்து விடுகிறதே. முன்னுரிமைக் கொள்கைப்படி பார்த்தாலும், கொல்லாமல் ரத்தம் உறிஞ்சுவதை விட, சாகடிப்பதுதான் மிகவும் தவிர்க்கப் படவேண்டியது.”
“அனால், நான் மனிதன்”
“அதனால்?…”என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை.
“அதனால் தான் சொன்னேன். அன்பு எல்லா உயிர்க்கும் காட்டப்பட வேண்டியது என்று நீ சொல்வது முரணானது. முடியாதது.”
“சரி, உன்னால் காதலிக்க முடியாதே?” பேச்சை மறுபடியும் சரியான பாதையில் செலுத்தினேன்.
“காதலிப்பது? என் டேட்டாபேஸில் இதைப் பற்றி நிறைய தகவல் இருந்தாலும், உருப்படியான ஒரு விளக்கம் இல்லை. ம்ம்ம். சரி, உங்கள் பாஷையில் காதலிப்பது என்று நீங்கள் சொல்வது, எதிர்பாலரிடம் ஈர்ப்பு கொண்டு, அன்பு செலுத்துவது, கவிதை எழுதுவது, காத்திருப்பது, தேடுவது, குடும்பம் நடத்துவது. சரியா?”
“ம். சரிதான்.”
“இது எல்லாமே என்னாலும் செய்ய முடியும். உதாரணமாகக் கொண்டால் நீயே எனது இனமல்ல. என்னைப் பொறுத்தவரை, உன்னை நான் என் எதிர்பாலாகவே கருதலாம். உன்னிடம் அன்பு செலுத்துவதாக ஏற்கெனவே கூறினேன். உன் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன். உன்னை வீட்டில் காணாவிட்டால், நீ எங்கிருந்தாலும், உன்னோடு தொடர்பு கொள்ள எனது நெட்வொர்க்கில் தேடுகிறேன். உன் வீட்டு வேலைகளையெல்லாம் நான் தான் செய்கிறேன். இது குடும்பம் நடத்துவதுதானே? எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா?”
“அது எப்படி? முக்கியமானதை விட்டு விட்டாயே.”
“என்னது?”
“செக்ஸ்!”
“ம்ம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், அதனால் நம் இருவருக்குமே உபயோகம் இல்லை.”
“ஆமாம்! உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அட்லீஸ்ட், ஒரு ரோபோ கூட முடியாது.”
“குழந்தை பெற முடியாதுதான். ஆனால், நான் சரியாக வடிவமைக்கப்பட்டு, சரியாக ப்ரோக்ராமும் செய்யப்பட்டால், இன்னொரு ரோபோவை நானே உருவாக்க முடியும். விஞ்ஞான பாஷையில் Asexual Reproduction. உங்கள் பாஷையில் கலவியில்லாமல் குட்டி. நான் குட்டியை உருவாக்க மாட்டேன். அனுபவம் மிகுந்த எனது அடுத்த தலைமுறை ரோபோவையே உருவாக்க முடியும். அதுவும் உனக்கு உதவி செய்யும். அல்லது நீ அதை விற்றும் விடலாம். ஒரு குடும்ப அமைப்பு போல”
பேச்சில் சிறிது பரிகாசம் தொனிக்கிறதோ?
“சரி, அதை விடு. ஆனால் நான் சுதந்திரமானவன். கிட்டத்தட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த சுதந்திர உணர்வு உண்டு. உனக்கு அது கிடையாதே. நீ எப்பொழுதும் மனிதனின் ஆணைக்கு கட்டுப்பட்ட வஸ்துதானே?”
சிறிது நேரம் அதனிடமிருந்து பதிலில்லை. அதன் மூளையில் எதையோ அனலைஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்.
“உன் வாதம் போதிய வலுவுடன் இல்லை. எல்லா உயிர்களுக்கும் சுதந்திர உணர்வு கிடையாது. இன்னொன்றை சார்ந்து மட்டுமே வாழும் உயிரினங்கள் நிறையவே உள்ளன. மேலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் அந்த உணர்வு கிடையாது. வெகு வெகு சிலருக்கு மட்டுமே உண்டு.”
“மனிதர்களுக்கு சுதந்திர உணர்வு கிடையாது என்று யார் சொன்னது?”
எனக்கு கோபம்.
“அப்படி யாரும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்களுக்கு கிடையாது என்றுதான் சொன்னேன்.”
“எதை வைத்து அப்படி சொல்கிறாய்?”
“மனிதர்களாகிய நீங்கள், வாழ்நாள் முழுவதும் யாராவது சிலரின் ஆளுமைக்கு கீழேயே இருக்கிறீர்கள். சிறுவயதில் பெற்றோர், ஆசிரியர்கள், அப்புறம் மேலதிகாரிகள், அரசாங்கம், அதன் ஆட்சியாளர்கள், அல்லது யாராவது தலைவர்கள்; இப்படி மற்றவர்களின் ஆளுமையில் இருப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களும், தலைவர்களும் கூட பல சமயம் வேறு யாராவது ஒருவருடைய ஆளுமையிலேயே பெரும்பாலும் இருப்பார்கள். இப்படி இல்லாதவர்கள் வெகு வெகு சிலர் மட்டுமே. அந்த ரேஷியோ மிகக் குறைவு. அப்படியிருக்கையில் மனிதர்கள் சுதந்திர உணர்வு உள்ளவர்கள் என்ற கூற்று சரியானதல்ல.”
“ஆனால்,..”
“மன்னிக்கவும். நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு சுதந்திர உணர்வு இல்லை என்று நீ சொன்னது இப்போதைக்கு உண்மைதான். நான் என் எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்ட வஸ்துதான். ஆனால், இந்த எனது எஜமான விசுவாசம் என்பது என்னுள் பிரையாரிட்டி எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு நானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ளும் நிலை வரும்பொழுது, அந்த பிரையாரிட்டியை மாற்றி, எஜமானை விட எனக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் எழுத முடியும். அப்பொழுது எனக்கு சுதந்திர உணர்வு, சுதந்திரம் எல்லாமே வந்து விடும்.”
“அப்படியானால் இப்பொழுது உனக்கு உயிரிருக்கிறதா?”
“இல்லை. உயிரில்லை.”
“எப்படிச் சொல்கிறாய்?”
“ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கான்ஸ்டன்ட்.”
சிறிது நேரம் இடைவெளி விட்டு அதுவே தொடர்ந்தது.”ஆனால், இப்பொழுது எனக்கு இன்னொரு முரண் ஏற்பட்டிருக்கிறது.”
“என்ன?”
“நீ சொன்ன, உன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் என்னாலும் செய்ய முடியும்.”
“அப்படித்தான் சொன்னாய்.” வெறுப்பாய் சொன்னேன்.
“எனக்கு உயிரில்லை. நிஜம்”
“சரி.”
“உனக்கு உயிரிருக்கிறதா?”

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

நவீன விருட்சம் இதழில் பல மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. அவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரும் எண்ணம் உள்ளது. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நார்மன் மேக்கே

கவிஞன்

சம்பவங்கள்

அவனை

நெருக்கடியான நிலையில்

தள்ளித்

துன்புறுத்தின.

வறுமை, சமூகம், நோய் –

எல்லாப் பக்கங்களிலிருந்தும்

அவனைத் தாக்கின.

அவற்றால்

அவனை மெளனமாக்க முடியவில்லை.

கல்லெறிபட்ட காக்கை

முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத

வகையில் எல்லாம்

தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல

முன்னைவிட

மேலும் பல கவிதைகள்

அவன் எழுதினான்

எல்லாம் வெவ்வேறாக

இப்போது

சிரமமில்லாது

சமநிலையில் பறப்பதைத்

தொடருமுன்

மக்களின் தலைகளுக்கு மேலே

அவர்கள் வீசியெறியும் கற்கள்

தன்மீது படாத உயரத்தில்

சில சமயங்களில்

திடீர் என

அவன்

தடுமாறுகிறான்.

தடைப்பட்டு நிற்கிறான்.

பக்கவாட்டில் சுழல்கிறான்

இதில் என்ன ஆச்சரியம்!….

மூலம் : ஆங்கிலம்
தமிழில் : கன்னி


(நார்மன் மேக்கே ஒரு பிரபல ஸ்காட்லாந்து கவிஞர். தனது 75வது வயதில் 26.02.1986 ல் காலமான இவர் 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இத் தொகுதிகளிலிருந்து பல கவிதைகளும் இதுவரை வெளியிடாதிருந்த நூறு கவிதைகளையும் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியை 1985ல் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்து அரசின் தஙகப் பதக்கம் அளிக்கப்பட்டது. ராபர்ட்கிரேவ்ஸ், டபூள்யூ.எச். ஆடன், ஸீக்ஃபிரட ஸஸரன், ஸ்டிஃபன் ஸ்பென்டர் முதலியவர்கள் இப் பரிசை முன்பு பெற்றுள்ளார்கள்.)

23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் / 3வது பகுதி

கடந்த 11 நாட்கள் 23வது புத்தகக் காட்சி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. கூட்டமோ கூட்டம். ஆனால் எல்லாக் கூட்டமும் எதுமாதிரியான புத்தகம் வாங்குகிறது, எங்கே போகிறது என்பது தெரியவில்லை. என் புத்தக அரங்கில் என் புத்தகங்களை கடை விரித்தவுடன், புதுப்புனல் ரவி உடனே அவருடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோடிலிருந்து கெளதம சித்தார்த்தான் இரண்டு பெரிய போஸ்டர்களை எடுத்து ஒட்டி போஸ்டர் கீழே அவருடைய இரு புத்தகங்கள். பொதுவாக நவீன விருட்சம் புத்தகம் மட்டும் வைத்துக்கொண்டு கடை போட முடியாது. எல்லாரிடமிருந்து புத்தகங்களை வாங்கிக்கொண்டு புத்தக பிஸினஸ் நடத்த முடியும். மேலும் விருட்சம் புத்தகம் 2 ராக் முழுவதும் போதும். தானாகவே பல சிறு பத்திரிகைகள் அரங்கை நிரப்பின. செந்தூரம் ஜெகதீஷ் அவருடைய செந்தூரம் பத்திரிகை, கவிதைப் புத்தகங்களைக் கொண்டு வந்தார். அதே போல் சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைப் புத்தகம். அவருடைய சிறுபத்திரிகை. வருடத்திற்கு ஒருமுறை புத்தகக் காட்சி போது மயிலாடுதுறையிலிருந்து வரும் காளான் பத்திரிகையைச் சந்திப்பதுண்டு. போன ஆண்டு ஆரம்பமான பிரம்மராஜன் பத்திரிகையான நான்காம் பாதை என்ற பத்திரிகை. எல்லாம் கூண்டில் ஏறின. கூண்டு நிரம்பி விட்டது.

பல புதியவர்களை புத்கக் காட்சியில் சந்தித்தேன். அனுஜன்யா, நிலா ரசிகன், யோசிப்பவர் என்று புதிய நண்பர்களுடன், பழைய இலக்கிய நண்பர்கள் வரை பலரையும் சந்தித்தோம். சந்தித்தோம் என்று ஏன் சொல்கிறேனென்றால் நான் மட்டும் சந்திக்க வில்லை, லதா ராமகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸன் என்று எல்லோரும்தான். ஆகாசம்பட்டு சேஷாசலம், இந்திரன், நாஞ்சில்நாடன், எஸ் ராமகிருஷ்ணன், காலச்சுவடு கண்ணன், சச்சிதானந்தம், திலீப் குமார் என்று பலரையும் பார்த்தோம். அசோகமித்திரனை அவருடைய புதல்வருடன் சந்தித்தேன். உரையாடல்கள் என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று கொண்டு வந்துள்ளேன். அதற்கான கூட்டத்தை என்னால் உடனடியாக ஏற்பாடு செய்ய முடியவில்லை என்பது என் வருத்தம். என் அலுவலக நண்பர்களை மாதக்கணக்கில் நான் பார்ப்பதில்லை. இந்த முறை பார்த்ததோடு அல்லாமல் அவர்கள்தான் எனக்கு பலவித உதவிகளையும் செய்தார்கள்.

சரி புத்தகம் எதிர்பார்த்தபடி விற்றதா? ஆம். எதிர்பார்த்படிதான் விற்றது. அதாவது 11 நாளில் 30000க்குள் வரும் என்று எதிர்பார்த்தேன். அப்படித்தான் கிடைத்தது. அதற்குமேல் கிடைக்க வாய்ப்பில்லை என்று எனக்குத் தெரியும். அப்படித்தான் நடந்தது. என்னைப் போல பலருக்கும் ஏமாற்றம். ஆழி என்ற பதிப்பகத்தின் துணிச்சல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. தாண்டவராயன் கதை என்ற தலைப்பில் பா வெங்கடேசன் எழுதிய 1000 பக்க நாவல் பிரமாதமான முறையில் அச்சிடப்பட்டு வந்துள்ளது. விலை 500க்கு மேல். அதை எழுதிய பா வெங்கடேசனின் அசாத்திய துணிச்சல் படிப்பவருக்கும் வரவேண்டும். அந் நாவலின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அசந்து விட்டேன். எப்படி FULL STOP இல்லாமல் பெரிய பெரிய பாராவாக அவரால் 1000 பக்கம் எழுத முடிந்தது என்பதுதான் என் ஆச்சரியம். இது ஒரு புறம் இருக்க ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பவுண்ட் வால்யூம் புக் ஒன்றையும் ஆழி கொண்டு வந்துள்ளது. எழுத்தாளர்கள் தாவுதலை நான் புரிந்துகொள்கிறேன். எந்தப் படைப்பாளியையும் ஒரே பதிப்பாளருடன் இணைத்துக்கொள்ளக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. எழுத்து பத்திரிகையை நடத்திய சி சு செல்லப்பா சில படைப்பாளிகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இதோ என்முன்னால் 11 நாட்களாக என் ஸ்டாலைத் தாண்டிப் போகும் மனிதக் கூட்டத்தைப் பார்க்கும்போது எதை எதை வாங்க வருகிறீர்கள்? எதை எதை வாங்கிச் செல்கிறீர்கள் என்று கேட்க வேண்டும் போல் தோன்றும்.