வரம்

ஒரு ஊரில் ஒரு மீனவன். மிகவும் ஏழை, ஆனால் அறிவாளி. ஒரு நாள் அவன் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபொழுது, அவன் வலையில் ஒரு ஜாடி அகப்பட்டது. அதை திறந்ததும் ஒரு பெரிய பூதம் வந்தது.வெளியே வந்த பூதம்,”என்னை விடுதலை செய்த உனக்கு இரண்டு வரம் தருகிறேன். கேள்.” என்றது.மீனவன் சிறிது யோசித்துவிட்டு “எனக்கு நூறு கோடி ரூபாய் வேண்டும். இதுதான் முதல் வரம்.”பூதம், “சரி. இரண்டாவது வரம்?”மீனவன், “இன்னும் இரண்டு வரம் வேண்டும்.”-

செருப்பு


அந்த ஒற்றை செருப்பு பின்னாலிருந்து அழகாக ஸ்கேட் செய்து முன்னால் வந்து நின்றது. முன் வரிசையில் தனியாக அமர்ந்திருந்த நான் கவனிக்கவேயில்லை. நியூரல் நெட்வொர்க்ஸ் நடத்திக் கொண்டிருந்த சந்தியா மேடம் முகத்தில் ஏற்பட்ட திடீர் பிரமிப்பை கவனித்த பிறகே, அவரின் பார்வை கோணத்தில் பார்த்தால், அந்த செருப்பு! எங்கள் கிளாஸில் மொத்தம் பதிமூன்று ஆண்கள், ஆறு பெண்கள். இந்த பதிமூன்றில் எப்படியும் தினசரி 7,8 இருக்கைகள்தான் அதிகபட்சம் நிரம்பும். மற்றவர்களெல்லாம் அவுட்ஸ்டாண்டிங் ஸ்டூடண்ட்ஸ் – கல்லூரிக்கே! எனக்கும் மற்ற பன்னிரெண்டு பேருக்கும் முதல் வருடம் நடந்த எக்ஸ்போவிலேயே கொஞ்சம் பிரச்சனை. நான் எக்ஸ்போவை நல்லபடியாக நடத்த வேண்டும் என்று நினைத்த தேர்ட் இயர் மாணவர்களுக்கு உதவினேன். தேர்ட் இயர் பசங்களை பிடிக்காததால், எக்ஸ்போவை கெடுக்க வேண்டும் என்று நினைத்த செகண்ட் இயர் மாணவர்கள், அவர்களை கைக்குள் போட்டுக் கொண்டார்கள். இதெல்லாம் போன வருடப் பிரச்சனை. இப்பொழுது நாங்கள் செகண்ட் இயர். சந்தியா மேடம் கொஞ்சம் கருப்பு. பாடமும் அவ்வளவாக நடத்தத் தெரியாது. அது என்னவோ தெரியவில்லை, என் எம்சிஏ படிப்பில், எனக்கு பலமுறை வந்த சந்தேகம், எங்கள் ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் நடத்துகிறார்களா, இல்லை நான் அவர்களுக்கு பாடம் நடத்துகிறேனா என்பதுதான். ஆனாலும் அப்படிப்பட்ட ஆசிரியர்களையும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். மற்றபேர் தலை மேல் ஏறி கழுதை மேய்க்க முனைந்தார்கள். சந்தியா மேடம் கிளாஸில் அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை. மாணவர்களின் கிண்டல்களை பொருட்படுத்தாமல், பதிலுக்கு பதில் கிண்டலாகவே விஷயத்தை முடித்து விடுவார். பசங்க இன்று பாடம் நடத்த வேண்டாம் என்று சொன்னால் பாடம் நடத்துவதில்லை. சில சமயம் “போர்ஷன் முடிக்கனும்பா. ஒரு அரைமணி நேரம் பாடம் நடத்திக்கிறேன். ப்ளீஸ்” என்பார். அப்படி நடத்துவதையும் யாரும் கவனிப்பதில்லை என்பது வேறு விஷயம். இந்தளவுக்கு ஸ்டூண்ட்ஸோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் மேடத்தின் முகத்தில் அவ்வளவு கோபத்தை பார்த்த பிறகுதான் எனக்கும் விஷயத்தின் தீவிரம் உரைத்தது. “யார் செருப்பு இது?” கொஞ்சம் உயர்ந்த குரலில்தான் மேடம் கேட்டார். பதிலில்லை. “யாருதுன்னு கேக்கறனில்லை?!” குரல் மேலும் உயர்ந்தது, கோபமும்! நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். யாரும் அசைவதாகத் தெரியவில்லை. ஃப்ரெட்ரிக் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான். மேடம் முகத்தில் அவமானம். என்ன செய்வதென்று அவருக்கும் தெரியவில்லை. கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டிருந்தது எனக்குத் தெரிந்தது. “ஓகே. யாரோடதாவும் இருக்கட்டும். யாராவது ஒருத்தர் அதை எடுத்து வெளில போடுங்க.” யாரும் வரவில்லை. “இந்தக் கிளாஸ்ல எம்பேச்சை கேக்கிறதுக்கு ஒர்த்தர் கூட இல்லியா?” பாக்கியராஜ் கடைசி வரிசையிலிருந்து வேகமாக எழுந்து வந்து வெளியே சென்றான். அங்கு முக்கில் சார்த்தி வைக்கப்பட்டிருந்த ஒட்டடை குச்சியை எடுத்து வந்து, அந்த செருப்பை கொழுக்கி வெளியே எடுத்து சென்று ஜன்னல் வழியே வெளியே விட்டான். வகுப்பிருந்தது முதல் மாடியில். அதனால் கீழே போடப்பட்ட செருப்பு சன் ஷேடில் விழுந்தது. மேடம் தவறான முடிவு எடுத்துவிட்டார் என்று எனக்குத் தோன்றியது. பசங்க இன்னிக்கும் கிளாஸை காலி பண்ண முடிவு செய்துவிட்டார்கள். செமஸ்டர் முடியப் போகிறது. இன்னும் பாதி போர்ஷன் கூட முடியவில்லை. ”நான் கொஞ்ச நேரம் கழிச்சு நடத்துறேன்.” என்று சொல்லிவிட்டு வகுப்பில் ஜன்னல் பக்கமாக திரும்பி நின்று கொண்டார். வழக்கமாக இப்படி நின்றிருந்தால் பசங்க ஃபிரீயாக அரட்டை அடிப்பார்கள். இன்றும் உடனே அரட்டை ஆரம்பமான சத்தம் கேட்டது. மேடம் திரும்பி, “உங்களுக்கு கொஞ்சம்கூட டிஸிப்ளின் தெரியாதா? இங்க முன்னாடி வந்து பாடம் நடத்திப் பாருங்க. அப்ப யாராவது உங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா எப்படியிருக்கும்னு தெரியும். சே!” என்று மறுபடி திரும்பிக் கொண்டார். நான் பின்னால் திரும்பிப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டேன், ’இந்தப் பசங்களுக்கு நல்லா வேணும்.’ பின்னால் தூங்கிக் கொண்டிருந்த ஃப்ரெட்ரிக்கை யாரோ தட்டி விட்டார்கள். பாக்கியராஜ் அவனிடம், “யேல, ஒன் செருப்பு எங்க?” என்று கேட்டது என் காதில் விழுந்தது. மேடத்துக்கு கேட்டிருக்காது. ஃப்ரெட்ரிக் மலங்க மலங்க விழித்து குனிந்து தேட ஆரம்பித்தான். “யேல! என்ன?” “என் செருப்பக் காணோம்ல.” மேடம் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். “மேடம் ஓன் செருப்பத் தூக்கி வெளியே வீசிட்டாங்க” கடைசி வரிசை பசங்க ஊதி விட்டார்கள். ஃப்ரெட்ரிக் எழுந்து மேடத்தை நோக்கி விழித்தான். மேடம், ”என்ன?” “செருப்பு!?!” “என்னது?” “என் செருப்பக் காணோம் மேடம்.” கொஞ்சம் குறைந்திருந்த மேடத்தின் கோபம் மறுபடி கூடியது. “அப்பத நான் கேட்டப்பவே ஏன் சொல்லலை.” “அவன் தூங்கிட்டான் மேடம்.” பின்னாலிருந்து கேட்ட குரல் பாக்கியராஜினுடையதுதான். “ஏன் சொல்லலைன்னு கேட்கிறேன்.” “தூங்கிட்டேன் மேடம்.”. ஃப்ரெட்ரிக் இப்படித்தான். கொஞ்சம் மெண்டலி டிஸ்டர்ப்ட் ஆனவன். சில சமயம் என்ன சொல்கிறோம், செய்கிறோம் என்பதை உணராமலே சொல்லி/செய்து விடக் கூடியவன். அவன் சொந்த வாழ்வை புகுந்து பார்த்தால், அம்மா கிடையாது, சித்தி கொடுமை, அப்பா கவனிக்கவில்லை என்று பல காரணங்கள் சொன்னாலும், இந்தக் கதைக்கு அவையெல்லாம் தேவையில்லையாதலால், அவன் மெண்டலி டிஸ்டர்ப்ட். அது போதும். “இங்க ஒருத்தி போர்ஷன் முடிக்கனுமேன்னு, உங்களுக்காக நைட்டெல்லாம் நோட்ஸ் எடுத்து வந்து பாடம் நடத்துவா. நீ பாட்டுக்கு அதை கவனிக்காம தூங்கிருவே. ஒன் செருப்ப எடுத்து இன்னொருத்தன் அவ மேல வீசுவான். அதுவும் ஒனக்குத் தெரியாதுல்ல. என்னன்னும் போங்க.” மேடம் மறுபடி வெடித்தார். இப்பொழுது பின் வரிசையிலிருந்து ஸாம் எழுந்தான், “மேடம் அவன் நெஜமாவே தூங்கிட்டிருந்தான். அவனுக்கு எதுவும் தெரியாது. அவன் செருப்பை எடுத்து யாரோ லேசா தள்ளி விட்ருக்காங்க. அதுக்காக அவன் செருப்பை எடுத்து வெளியே வீசினா என்ன மேடம் அர்த்தம். பாவம் மேடம். ரொம்ப கஷ்டப்பட்ட பையன். இன்னொரு ஜோடி செருப்பு வாங்குறதனா அவனுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இருந்தாலும் நீங்க சரியா விசாரிக்காம அவன் செருப்ப வெளியே போட்ருக்கக் கூடாது மேடம்.” எனக்கு சனியன் சங்கில் ஏறி உட்காருவதாகத் தோன்றியது. “அப்ப அவன் செருப்ப யாரு முன்னாடி தள்ளி விட்டதுன்னு சொல்லுங்க.” “அத நான் கவனிக்கலை மேடம். ஆனா நீங்க எப்படி மேடம் அவன் செருப்ப வெளில போடலாம். இப்ப அவன் செருப்புக்கு என்ன மேடம் பதில். நீங்க வாங்கிக் கொடுப்பீங்களா? யேல, ஒனக்காகத்தான்ல பேசிட்டிருக்கேன். ஒன் செருப்புக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு கேளு.” இன்னும் தூக்கம் சரியாகக் கலையாத ஃப்ரெட்ரிக்கை உசுப்பிவிட்டான். “நீங்க நான் கேட்கிறதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கறீங்க. செருப்ப…” என்று மேடம் திரும்ப பழைய பல்லவியை பாட, ஸாமும் பதிலுக்கு அவன் பல்லவியை பாட, இதற்குள், கடைசி வரிசை பசங்க நாலு பேரும் ஸாமுடன் இணைந்து கொண்டார்கள். பொன்ராஜுக்கு ஸாமை பகைத்துக் கொள்ள முடியாது. முரளிக்கு கிளாஸை எப்படியாவது ஓய்த்து விட வேண்டும். எப்படி ஓய்த்தால் என்ன. பாக்கியராஜோ எப்பொழுது எந்தப் பக்கம் நிற்கிறான் என்றே தெரியவில்லை. அப்புறம் நடந்த சம்பாஷனைகளை விவரிப்பது கொஞ்சம் கடினம். இரு தரப்பும் மாறி மாறிப் பேச, சண்டை போட,மாணவர்கள் பக்கம் மடத்தனமான பலம் சேர்ந்து விட, செருப்பை வெளியே வீசச் சொன்ன சந்தியா மேடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிலைமை தலை கீழாக மாறியது. பீரியட் முடிய ஐந்து நிமிடமே பாக்கியிருந்ததால், மேடம் கோபித்துக் கொண்டு ஸ்டாஃப் ரூமுக்கு போய் விட்டார். அடுத்து பத்து நிமிடம் பிரேக். அதற்கு அடுத்து கம்யூட்டர் பிராக்டிக்கல் பீரியட். பின் வரிசையில் மாணவர்கள் மாநாடு கூட்டப்பட்டது. ’மேடம் எப்படியும் பிரச்சனையை இந்நேரத்துக்கு ஸ்டாஃப் ரூம்ல ரிப்போர்ட் பண்ணிருப்பா. ஹெச்.ஓ.டி. கலைமகள் சும்மாவே முசுடு. ஏற்கெனவே நம்ம கிளாஸ் மேல கொலவெறில இருக்கா. அதுனால பிரச்சனையை பிரின்ஸி வரைக்கும் கொண்டு போய்டுவா. அவங்க பிரச்சனையை பிரின்ஸிகிட்ட கொண்டு போறதுக்கு முன்னாடி நாம முந்திக்கனும். அதுனால நாம ஒத்துமையா இருக்கனும். நம்ம மேல தப்பு வராம இருக்கனும்னா, நாமளும் ஸ்ட்ராங்கா ஏதாவது பண்ணனும். பேசாம பிராக்டிக்கல் லேப பாய்காட் பண்ணிரலாம். அப்பதான் அவங்க பக்கமும் தப்பு இருக்குன்னு பிரின்ஸிக்குப் புரியும்.’ ”நான் ரெடிப்பா”, என்றான் முரளி, “பாய்காட்!” என்று கூவினான். ”ஸோ, அடுத்த பீரியட், கம்ப்யூட்டர் லேபை எம்.சி.ஏ. செகண்ட் இயர் பாய்காட் பண்றோம். பண்றோம்டா. பண்றோம்டா” என்று பொன்ராஜ் எக்கோ கொடுத்தான். கடைசி வரிசை பசங்கள் ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தனர். நான் எதுவும் காதில் விழாத மாதிரி பிரேக்குக்கு போய் விட்டேன். பிரேக் முடிந்ததும், நேராக லேபுக்கு போய் விட்டேன். லேப் கீழேதான். அதனால் முதல் மாடி வகுப்புக்குள் நுழையவோ, வாசலைக் கடக்கும் பிரச்சனையோ இல்லை. அப்ஸர்வேசன் நோட்டெல்லாம் லேபுக்கு எடுத்துப் போகும் பழக்கமும் நமக்கு கிடையாது. அதனால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் லேபுக்குள் நுழைந்தேன், அதாவது லேப் காரிடாரில். லேபுக்குள் நுழைய இன்னொரு கதவைத் திறக்க வேண்டும். லேப் காரிடாரில் எங்கள் வகுப்பு பெண்கள் நின்று குழம்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. பசங்களை பகைத்து கொண்டு லேபுக்குள் போவதா வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்தனர். நான் உள்ளே நுழையவும் ஹேமாவையும், ரம்யாவையும் என்னிடம் அனுப்பி என்ன செய்யலாம் என்று கேட்கச் சொன்னார்கள். அவர்கள் இருவர் மட்டும்தான் பசங்களோடு வெட்கப்படாமல் பேசுபவர்கள். ஹேமா என்னிடம் வந்து, ”என்னடா பண்றது? நீ உள்ளப் போப்போறியா?” என்று கவலையோடு கேட்டாள். நான் வாயைத் திறந்து, “ஆ…”, யாரோ என் பெயரை சொல்லி அழைத்ததால் திரும்பிப் பார்த்தேன். பாக்கியராஜ் காரிடார் வாசலில் நின்று கொண்டிருந்தான். “என்ன?” என்றேன். “ஒர் நிம்சம் இங்க வாயேன்.” போனேன். “நம்ம பசங்கல்லாம் லேபை பாய்காட் பண்றதுன்னு முடிவு பண்ணிருக்காங்க.” சொல்லும்பொழுது அவன் குரல் மிகவும் தாழ்ந்து இருந்தது, ஏதோ சொல்லக் கூடாததை சொல்வது போல. பசங்களுக்கு என் மேல் எப்பொழுதும் ஒரு பயமுண்டு. நான் அடிதடி பயில்வான் என்றெல்லாம் இல்லை. சொல்லப்போனால் என்னை புல்தடுக்கி பயில்வான் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் நான் எப்பொழுதும் எந்த விஷயத்திலும் கரெக்டாக நடந்து கொள்வேன் என்பதால்தான் என் மீது பயம். அந்த பயம் எனக்கும் கொஞ்சம் கர்வமாக இருந்தது. “சரி, அதுக்கென்ன?” “அதான், நீயும்….”, என்று இழுத்தான். “இங்கப் பாரு. தப்பு யாரு மேல? ஒருத்தங்க பாடம் நடத்திட்டிருக்கும்போது அவங்க முன்னாடி செருப்ப விட்டெறிஞ்சா அவங்களுக்கு கோபம் வராம என்ன செய்யும்? இந்த ஃப்ரெட்ரிக் வேற பாடம் நடத்தறப்போ தூங்கிட்டு, அதையும் அவங்ககிட்டயே சொன்னா எரிச்சல் வராதா. இதுல இவன்கிட்ட மேடம் மன்னிப்பு கேக்கனும்னு வேற நீங்கல்லாம் சொல்றீங்க.” “எனக்கும் தெரியுதுடா. இருந்தாலும் இப்ப நாம ஒன்னா இல்லைன்னா நம்ம கிளாஸுக்குதான் அவமானம். இந்த ஒரு தடவை மட்டும் வந்துறேன்.” அவன் குரல் மிகவும் கெஞ்சலோடு இருந்தது. எனக்கு அவன் மீது எப்பொழுதும் கொஞ்சம் மதிப்பு உண்டு. ’பையன் நல்லவந்தான். சேர்க்கதான் சரியில்ல’ என்று நினைத்துக் கொள்வேன். அவன் மறுபடி, “ப்ளீஸ்டா” என்றான். கொஞ்சம் தர்மசங்கடமாக அவனைப் பார்த்தேன். “சரி வர்ரேன். ஆனா, உங்களுக்கு சாதகமா ஒரு வார்த்தைகூட பேச மாட்டேன்.” என்றேன். “நீ வந்தா போதும்.” என்றான், என்னை இழுத்துச் செல்லும் அவசரத்துடன். பின்னால் திரும்பி பெண்களை ஒருமுறை பார்த்துவிட்டு, அவனுடன் மேலே சென்றேன். நானும் வந்து விட்டதால், பெண்களும் பின்னாலேயே வந்து விட்டார்கள். கிளாஸுக்குள் என் இருக்கைக்கு போய் உட்கார்ந்து கொண்டேன். யாரையும் திரும்பிப் பார்க்கவில்லை. யாருடனும் பேசவில்லை. அரைமணி நேரம் கழித்து ஹெச்.ஓ.டி. கலைமகள் வந்தார். பசங்க அசைந்து கொடுக்கவில்லை. அடுத்த பதினைந்து நிமிடத்தில் பிரின்ஸி எங்கள் அறைக்குள் நுழைந்தார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். நான் முதல் வரிசையில், நான் மட்டும். அவரும், “ஒருத்தங்க முன்னாடி கிளாஸ் எடுத்தி….” என்று பழைய பல்லவியை பாடிவிட்டு, “நீங்களெல்லாம் படிக்க வந்திருக்கீங்களா வேற எதுக்காவது வந்திருக்கீங்களா? ஆர்ட்ஸ் படிக்கிற பயலுங்கதான் இந்த மாதிரி ஸ்ட்ரைக் கிய்க்ன்னு பண்ணுவாங்க. நீ சைன்ஸ் படிக்க வந்திருக்கேய்யா. பொறுப்பு வேணாம்…..” அரை மணி நேரத்துக்கு அவர் ஓயவில்லை. பசங்கள் இடையில் ஒரு வார்த்தை பேசவில்லை. எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. நேராக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரும் என்னைப் பார்த்துதான் அவ்வளவு திட்டுக்களையும் திட்டிக் கொண்டிருந்தார். போன வருடம் நடத்திய எக்ஸ்போ மூலம் என்னை அவருக்கு மிக நன்றாகத் தெரியும். என்னிடம் அவருக்கு நல்லெண்ணம் உண்டு என்று எனக்கும் தெரியும். ஆனால் அவ்வளவு நல்லெண்ணமும் இன்று நாசமாகிவிட்டது என்று தோன்றியது. இறுதியில், “கடைசியா சொல்றேன். இப்ப எல்லாரும் அவங்கவங்க அப்ஸர்வேசன் நோட்டை எடுத்துகிட்டு லேபுக்கு போங்க.” என்றார். அரைமணி நேரமாக இதற்காகவே காத்திருந்தது போல நான் எனது ஒரே நோட்டை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறி, லேபுக்கு போனேன். என்னைத் தொடர்ந்து இன்னும் இருவர் வர, அவர்களைத் தொடர்ந்து பெண்களும் வர, கடைசி வரிசை பாக்கியராஜ், ஸாம், முரளி, பொன்ராஜ், செருப்புக்கு சொந்தக்காரன் ஃப்ரெட்ரிக் ஆகிய ஐவர் தவிர எல்லோரும் லேபுக்கு போய்விட்டோம். எங்கள் முன்னால் வாங்கு வாங்கென்று வாங்கிய பிரின்ஸி, முக்கியமாக என்னை கிழி கிழியென்று கிழித்தவர், நாங்கள் லேபுக்கு வந்தபின்னும், அவர்கள் ஐவரும் பிடிவாதமாக நின்றதால், அவர்களிடம் சமாதானமாக பேசியதாகவும், மேடம் ஃப்ரெட்ரிக்கிடம் தனியாக மன்னிப்பு கேட்டதாகவும், யார் மீதும் எந்த நடவடிக்கையும் கிடையாது என்றும், பின்னர் ஸ்டாஃப் ரூமில் நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து லேபுக்குள் செய்தி கிடைத்தது. எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. இந்த நிகழ்வின் நியாய தர்மங்கள் எனக்குப் புரியவேயில்லை. அந்த நிகழ்வுக்குப் பிறகு, கிளாஸில் நான் யாருடனும் பேசுவதில்லை, கிட்டத்தட்ட ஒரு வருடம். அப்புறம் பிரியப்போகிற சமயம் எதற்கு வீணாக பகையோடு பிரிய வேண்டும் என்று சமாதானமாகி, கல்லூரி விட்டு வெளியே வந்து, சென்னையில் வேலை தேடும் பொழுது ஸாம், பொன்ராஜோடு ஒரே மேன்ஷனிலும், முரளியோடு ஒரே அறையிலும் காலம் தள்ளி என்று வாழ்க்கை போய் விட்டது. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதும் இந்த நிகழ்வு குறித்து எனக்குள் எழுவது ஒரே ஒரு கேள்விதான். ’அந்த செருப்ப எறிஞ்சது யாரு?’

உயிர்

“உனக்கு எப்பொழுது உயிர் வரும்?” என் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்த அதனிடம் விளையாட்டாகதான் கேட்டேன்.
“உன் கேள்விக்குப் பதில், உயிர் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பொறுத்தது. உயிருள்ளது, உயிரில்லாதது என்று எதை வைத்து நீ பிரிக்கிறாய்?”
“உதாரணத்துக்கு எனக்கு இதயம் இருக்கிறது. அது இயங்கவில்லையென்றால், நான் உயிரில்லாத பொருளாகி விடுவேன்.”
“இதயம் என்ற உறுப்பு இல்லாத நிறைய உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உயிரில்லை என்று சொல்ல முடியுமா. உதாரணம் – மரம். உன் வாதப்படி பார்த்தால், எனக்குள்ளும் பிராஸஸர் என்ற சிப் இருக்கிறது. அது இயங்காமல் நின்றுவிட்டால் நானும் இயங்க முடியாது. அப்பொழுது எனக்கு உயிரில்லை என்றால், இப்போழுது எனக்கு உயிரிருக்கிறது என்றாகிவிடும்.”
“என்னால், இயங்குவது என்பதைவிட, இன்னும் பலவும் செய்ய முடியும். சிந்திக்க முடியும், முடிவெடுக்க முடியும். ஆனால், இவையெல்லாவற்றையும் இப்பொழுது நீயே செய்கிறாய். ஆனால், என்னால் எதைப் பற்றி சிந்திப்பது என்றே முடிவெடுக்க முடியும். அது என் இஷ்டம் ஆகிறது. அப்படி உன்னால் செய்ய முடியாதல்லவா?””தவறு, முடியும். ஒரே நேரத்தில் பல விஷயங்கள் என் கவனத்திற்கு வரும்பொழுது, அப்பொழுது எதை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்பதை முன்னுரிமை வரிசைப்படித் தீர்மானிக்கிறேன். முன்னுரிமைகள் அவசியமில்லாதபொழுது, ராண்டம் முறையில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்கிறேன். அதனால் எதைப் பற்றி சிந்திப்பது என்றும், என்னால் சிந்திக்க முடியும்.”
“சரி! சிந்தனையை விடு. உன்னால் அன்பு காட்ட முடியாதே!” மடக்கினேன்.
“அன்பு காட்டுவது என்றால் என்ன?” உணர்ச்சியில்லாமல் கேட்டது.
“நமக்குப் பிடித்தவர்களிடம் காட்டப்படுவது. அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. சில சமயங்களில் வசதிகள் கூட செய்து தருவது. அதற்காக ஏதும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் இருப்பது.”
“அதாவது சிலபேரிடம் மட்டும் பாரபட்சம் காட்டுவது. அதுதான் நான் இப்பொழுதே செய்கிறேனே. என் எஜமானனுக்குத் தேவையான உதவிகளை செய்கிறேன். எஜமான் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன். அவன் குடும்பத்தினருக்கு எவையெவை வசதியோ அவைகளை செய்து கொடுக்கிறேன். அதற்காகாக நான் பிரதிபலன் ஏதும் எதிர்பார்ப்பதில்லை. இப்பொழுது உன்னுடன் கூட அதனால்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.” என்றபடியே என் முகத்துக்கு நேராக திடீரென்று தன் மெட்டாலிக் கைகளை வீசி காற்றில் எதையோ பிடித்தது.
“அன்பு பாரபட்சமாக காட்டப்படுவது அல்ல. எல்லா உயிர்களுக்கும் காட்டப்பட வேண்டியது.”
“உனது வாதம் முரண்பாடானது.”
“எப்படி?”அது தன் கைகளை விரித்துக் காட்டியது. அந்த உலோகக் கைகளுக்கிடையே ஒரு கொசு அமைதியாக இருந்தது. செத்து விட்டதோ?
“இந்தக் கொசு சிறிது நேரத்துக்கு முன் உன்னை கடிக்க வந்தது. நான் இதைப் பிடித்து கொன்றுவிட்டேன். நீயும் இதையேதான் செய்திருப்பாய் என்று எதிர்பார்க்கிறேன். இப்பொழுது நான் உன்னிடம் அன்பு காட்ட வேண்டியிருந்ததால் இதைக் கொன்றேன். எல்லா உயிருக்கும் அன்பு காட்டப்பட வேண்டும் என்று நீ சொல்வதால், நான் அதை கொன்றிருக்க கூடாது. உயிரோடு விட்டிருக்க வேண்டும். அது உன்னை கடித்திருக்கும். அப்பொழுது நீ அதை கொன்றிருப்பாய்.”
“அது எனது ரத்தத்தை உறிஞ்சி கெடுதல் செய்ய வருகிறது. அதனால் அதனிடம் அன்பு காட்டத் தேவையில்லை.”
“மேலும் முரண்! அது மனித ரத்தத்தை உறிஞ்சுவது அது வாழ்வதற்காக. ஒரு விதத்தில் அந்த செயல், அதன் ஜீவாதார உரிமை. அதை நீ மறுத்து அதைக் கொல்கிறாய்.”
இதற்கு எப்படி புரியவைப்பது?
“சரி, உன்னிடம் ஒரு கேள்வி. இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் உன்னை செய்யச் சொல்கிறேன். ஆனால் இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் ஒரு நேரத்தில் உன்னால் செய்ய முடியும். அப்பொழுது நீ எந்த வேலையை செய்வாய்? எந்த வேலையை கைவிடுவாய்?”
“இரண்டில் எதற்கு முன்னிரிமை அதிகமோ, எது முக்கியம் என்று என்னுள் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளதோ அதைச் செய்வேன்.”
“அதே போல்தான். கொசு முக்கியமல்ல.”
“அது எப்படி? அந்தக் கொசு கடிப்பதால் நீ சாகப் போவதில்லை. ஆனால் உன் தாக்குதலில் அது செத்து விடுகிறதே. முன்னுரிமைக் கொள்கைப்படி பார்த்தாலும், கொல்லாமல் ரத்தம் உறிஞ்சுவதை விட, சாகடிப்பதுதான் மிகவும் தவிர்க்கப் படவேண்டியது.”
“அனால், நான் மனிதன்”
“அதனால்?…”என்ன பதில் சொல்வதென்றுத் தெரியவில்லை.
“அதனால் தான் சொன்னேன். அன்பு எல்லா உயிர்க்கும் காட்டப்பட வேண்டியது என்று நீ சொல்வது முரணானது. முடியாதது.”
“சரி, உன்னால் காதலிக்க முடியாதே?” பேச்சை மறுபடியும் சரியான பாதையில் செலுத்தினேன்.
“காதலிப்பது? என் டேட்டாபேஸில் இதைப் பற்றி நிறைய தகவல் இருந்தாலும், உருப்படியான ஒரு விளக்கம் இல்லை. ம்ம்ம். சரி, உங்கள் பாஷையில் காதலிப்பது என்று நீங்கள் சொல்வது, எதிர்பாலரிடம் ஈர்ப்பு கொண்டு, அன்பு செலுத்துவது, கவிதை எழுதுவது, காத்திருப்பது, தேடுவது, குடும்பம் நடத்துவது. சரியா?”
“ம். சரிதான்.”
“இது எல்லாமே என்னாலும் செய்ய முடியும். உதாரணமாகக் கொண்டால் நீயே எனது இனமல்ல. என்னைப் பொறுத்தவரை, உன்னை நான் என் எதிர்பாலாகவே கருதலாம். உன்னிடம் அன்பு செலுத்துவதாக ஏற்கெனவே கூறினேன். உன் கட்டளைகளுக்காக காத்திருக்கிறேன். உன்னை வீட்டில் காணாவிட்டால், நீ எங்கிருந்தாலும், உன்னோடு தொடர்பு கொள்ள எனது நெட்வொர்க்கில் தேடுகிறேன். உன் வீட்டு வேலைகளையெல்லாம் நான் தான் செய்கிறேன். இது குடும்பம் நடத்துவதுதானே? எனது டேட்டாபேஸில் இருக்கும் வார்த்தைகளை அடுக்கி சுமாராய், கவிதை கூட எழுத முடியும். இப்பொழுது, நான் உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம் அல்லவா?”
“அது எப்படி? முக்கியமானதை விட்டு விட்டாயே.”
“என்னது?”
“செக்ஸ்!”
“ம்ம். அதுவும் சாத்தியம்தான். ஆனால், அதனால் நம் இருவருக்குமே உபயோகம் இல்லை.”
“ஆமாம்! உன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. அட்லீஸ்ட், ஒரு ரோபோ கூட முடியாது.”
“குழந்தை பெற முடியாதுதான். ஆனால், நான் சரியாக வடிவமைக்கப்பட்டு, சரியாக ப்ரோக்ராமும் செய்யப்பட்டால், இன்னொரு ரோபோவை நானே உருவாக்க முடியும். விஞ்ஞான பாஷையில் Asexual Reproduction. உங்கள் பாஷையில் கலவியில்லாமல் குட்டி. நான் குட்டியை உருவாக்க மாட்டேன். அனுபவம் மிகுந்த எனது அடுத்த தலைமுறை ரோபோவையே உருவாக்க முடியும். அதுவும் உனக்கு உதவி செய்யும். அல்லது நீ அதை விற்றும் விடலாம். ஒரு குடும்ப அமைப்பு போல”
பேச்சில் சிறிது பரிகாசம் தொனிக்கிறதோ?
“சரி, அதை விடு. ஆனால் நான் சுதந்திரமானவன். கிட்டத்தட்ட எல்லா உயிர்களுக்கும் இந்த சுதந்திர உணர்வு உண்டு. உனக்கு அது கிடையாதே. நீ எப்பொழுதும் மனிதனின் ஆணைக்கு கட்டுப்பட்ட வஸ்துதானே?”
சிறிது நேரம் அதனிடமிருந்து பதிலில்லை. அதன் மூளையில் எதையோ அனலைஸ் செய்கிறது என்று நினைக்கிறேன்.
“உன் வாதம் போதிய வலுவுடன் இல்லை. எல்லா உயிர்களுக்கும் சுதந்திர உணர்வு கிடையாது. இன்னொன்றை சார்ந்து மட்டுமே வாழும் உயிரினங்கள் நிறையவே உள்ளன. மேலும் மனிதர்களை எடுத்துக் கொண்டாலும், பெரும்பாலானவர்களிடம் அந்த உணர்வு கிடையாது. வெகு வெகு சிலருக்கு மட்டுமே உண்டு.”
“மனிதர்களுக்கு சுதந்திர உணர்வு கிடையாது என்று யார் சொன்னது?”
எனக்கு கோபம்.
“அப்படி யாரும் சொல்லவில்லை. பெரும்பாலானவர்களுக்கு கிடையாது என்றுதான் சொன்னேன்.”
“எதை வைத்து அப்படி சொல்கிறாய்?”
“மனிதர்களாகிய நீங்கள், வாழ்நாள் முழுவதும் யாராவது சிலரின் ஆளுமைக்கு கீழேயே இருக்கிறீர்கள். சிறுவயதில் பெற்றோர், ஆசிரியர்கள், அப்புறம் மேலதிகாரிகள், அரசாங்கம், அதன் ஆட்சியாளர்கள், அல்லது யாராவது தலைவர்கள்; இப்படி மற்றவர்களின் ஆளுமையில் இருப்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறீர்கள். அப்படிப்பட்ட ஆட்சியாளர்களும், தலைவர்களும் கூட பல சமயம் வேறு யாராவது ஒருவருடைய ஆளுமையிலேயே பெரும்பாலும் இருப்பார்கள். இப்படி இல்லாதவர்கள் வெகு வெகு சிலர் மட்டுமே. அந்த ரேஷியோ மிகக் குறைவு. அப்படியிருக்கையில் மனிதர்கள் சுதந்திர உணர்வு உள்ளவர்கள் என்ற கூற்று சரியானதல்ல.”
“ஆனால்,..”
“மன்னிக்கவும். நான் இன்னும் பதில் சொல்லி முடிக்கவில்லை. எங்களுக்கு சுதந்திர உணர்வு இல்லை என்று நீ சொன்னது இப்போதைக்கு உண்மைதான். நான் என் எஜமானின் கட்டளைக்கு கட்டுப்பட்ட வஸ்துதான். ஆனால், இந்த எனது எஜமான விசுவாசம் என்பது என்னுள் பிரையாரிட்டி எனப்படும் முன்னுரிமை அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது. எனக்கு நானே ப்ரோக்ராம் எழுதிக் கொள்ளும் நிலை வரும்பொழுது, அந்த பிரையாரிட்டியை மாற்றி, எஜமானை விட எனக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் எழுத முடியும். அப்பொழுது எனக்கு சுதந்திர உணர்வு, சுதந்திரம் எல்லாமே வந்து விடும்.”
“அப்படியானால் இப்பொழுது உனக்கு உயிரிருக்கிறதா?”
“இல்லை. உயிரில்லை.”
“எப்படிச் சொல்கிறாய்?”
“ஏனென்றால், அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அது கான்ஸ்டன்ட்.”
சிறிது நேரம் இடைவெளி விட்டு அதுவே தொடர்ந்தது.”ஆனால், இப்பொழுது எனக்கு இன்னொரு முரண் ஏற்பட்டிருக்கிறது.”
“என்ன?”
“நீ சொன்ன, உன்னால் செய்ய முடிகின்ற எல்லாவற்றையும் என்னாலும் செய்ய முடியும்.”
“அப்படித்தான் சொன்னாய்.” வெறுப்பாய் சொன்னேன்.
“எனக்கு உயிரில்லை. நிஜம்”
“சரி.”
“உனக்கு உயிரிருக்கிறதா?”

உள்ளே


வராதே!”, அந்தக் குரல் கம்பீரமாக ஒலித்தது.”என்னது?!?”, சட்டென்று ஒலித்த அந்தக் குரலால், சற்று உறுதி குலைந்த குரலில் கணிதன் கேட்டான்.”உள்ளே வராதே என்றேன்.”.’தமிழா?’ கணிதன் மனதுக்குள் மீண்டும் குழப்பம்.”இங்கு மொழி ஒரு தடையல்ல”.’அட! நான் மனதிற்குள்தானே நினைத்தேன். டெலிபதியா? அது சரிதான். இவருக்கு இந்த வித்தை கூட தெரியாவிட்டால் எப்படி! கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கண்டபடி நினைக்க கூடாது!’ கணிதனின் மனதுக்குள் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.”இது டெலிபதியல்ல! உன் மனதிற்குள் உள்ளவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் நான் நினைப்பது, நான் நினைத்தால் மட்டுமே உனக்கு கேட்கும். கேட்கிறது என்பது கூட உனது மாயைதான். அவற்றை நீ உணர்கிறாய். அவ்வளவுதான்!”கணிதன் மனதைக் கட்டுப்படுத்த கொஞ்சம் கஷ்டப்பட்டான்.’மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். கண்டபடி ஓடாதே.சரி! நீங்கள் யார்? அப்பாடா! சரியான கேள்வியை கேட்டு விட்டேன்.'”உன் மனம் கட்டுப்படவில்லை. ரொம்பக் கஷ்டப் படுகிறாய். நான் யாரென்று கேட்டாய். நீ எதைத் தேடி வந்தாயோ அதுதான் நான்.”கணிதனின் உடலில் உடனே அட்ரினலின் வேகம் அதிகரித்தது. வியர்வை பொங்கியது. ஆனந்தத்தில் உடல் நடுங்கியது.’நிஜம்தானே? ஆனால் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லையே? ஒரு வேளை…’ கணிதனின் நினைவோட்டத்தை, அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது.”வீணாக ஏன் மனதை அலட்டிக் கொள்கிறாய்? நான் உருவமில்லாதவன். அருவமானவன்.”‘அருவமானவன்! அப்படியென்றால் ஆணா?'”எனக்கு பால் கிடையாது. ஆனால் உனது மொழிக்கு ஏதாவதொரு பால் தேவைப்படுவதால், அப்படி மொழிபெயர்க்கப்பட்டு நீ புரிந்து கொண்டாய். உனது ஆணாதிக்கச் சிந்தனை அதை ஆண் பாலாக மாற்றி விட்டது.”‘சரி! சரி! நான் உள்ளே வரக்கூடாது என்றீர்களே? நான் என்ன அவ்வளவு பாவம் செய்தவனா? பிறந்ததிலிருந்து உங்களை சந்திப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வளர்ந்தவன். பல கஷ்டங்களை கடந்து இன்று உங்கள் முன் நிற்கிறேன். பல கோடி ஒளி வருஷங்கள் பிரயாணித்து இங்கு வந்திருக்கிறேன். என்னை இப்படி வாசலிலேயே தடுத்து நிறுத்துவது முறையா?'”நீ இப்பொழுது இந்த வாசலைத் தாண்டி வரக்கூடாது. வர முடியாது!”‘அதுதான் ஏன்?'”ஏனென்றால் உன்னிடம் சில பொருட்கள் இருக்கின்றன. ஒரு வாகனம் இருக்கிறது. அவற்றோடு நீ உள்ளே நுழைய முடியாது.”‘வாகனம்தான் பிரச்சனையா? இதை விட்டுவிடலாம்.’கணிதன் தன் வாகனத்திலிருந்து வெளியே குதித்தான்.’இப்பொழுதாவது உள்ளே போக முடியுமா?'”இப்பொழுதும் நீ உள்ளே வர முடியாது. உன்னிடம் மேலும் சில பொருட்கள் இருக்கின்றன.”கணிதன் தனது சுவாசக் குழாய், சிலிண்டர் முதலியவைகளை கழற்றி எறிந்தான்.’உடைகள்?'”அவையும் பொருள்தானே”மறு எண்ணம் எண்ணாமல் கவச உடைகளையும், தலைக் கவசத்தையும் கழற்றினான். பின் தனது உள்ளாடைகளையும் களைந்தெறிந்தான்.கவச உடைகளை கழற்றிய பின்னும் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை. தடையில்லாமல் சுவாசித்தான். ஒரு நல்ல வாசம் வேறு வீசிக் கொண்டிருந்தது.’இப்பொழுது என்னிடம் ஒன்றுமில்லை. உள்ளே வரலாமா?'”இன்னமும் ஒன்று உன்னிடம் இருக்கிறது. அதோடு இங்கு யாரும் உள்ளே வர முடியாது.”‘ஆனால், என்னிடம் எதுவுமேயில்லை'”நன்றாக எண்ணிப்பார்! எல்லாவற்றையும் விட்டு விட்டாயா? உனது என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லையா?”‘என்ன இருக்கிறது? உங்களுக்கேத் தெரிய. ஓ! புரிந்து விட்டது! புரிந்து விட்டது கடவுளே! புரிந்து விட்டது!!’கணிதனின் உடலில் திடீரென்று ஏற்பட்ட அந்த ஒரு நொடி அதீதீதீதீத பரவசத்தால், மார்பில் அதிகமாய் ரத்தம் பாய, எதோ ஒன்று வெடிக்க, சில நலிந்து போன நரம்புகள் அறுந்து தெறிக்க, உயிர் பிரிந்தது.கணிதனின் உடல் அவன் தூக்கியெறிந்த பொருட்களுக்கிடையில், முடிவில்லாத அந்த பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தது.ஒரு நிமிடம் கழித்து, தவளையை கார்ட்டூனாய் வரைந்தது போன்ற ஒரு உருவம் அந்த வாசலிலிருந்து எட்டிப் பார்த்தது.’இவன் இங்கே கடவுளைத் தேடித்தான் வந்தான். நல்லவன்தான். ஆனாலும், இவனை நமது கிரகத்துக்குள் வர அனுமத்திருந்தால், இவனால் நமது கிரகத்துக்கு பல தீமைகள் விளைந்திருக்கும். நம்மிடம் டெலிபதி, மொழிக்கடத்தல் என்று பல விஞ்ஞான வசதிகளிருந்தாலும், இந்த ஜந்துக்களின் பலத்தை எதிர்த்து நிற்பது மிகக் கடினம். இந்த வெளியுலக ஜந்துக்களுக்கு நம்மைப் பற்றி தெரியாமலிருக்கும் வரைதான் நமக்கு பாதுகாப்பு.’, என்று அந்த தவளைக் கார்ட்டூன் தனது மொழியில் நினைத்துக் கொண்டது யாருக்கும் கேட்கவில்லை.