மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்

சார்லஸ் போதலேர்

கேரளக் கன்னிக்கு
உன் பாதங்கள் உன் கைகளைப்போல்
மென்மையானவை.உன் இடை மிக அழகிய
வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும்
சிந்தனைமிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும்.
வெல்வட்டுப் போன்ற உன் கண்கள்
உன் மேனியை விடக் கரியவை.
நீல மேகங்களும் புழுக்கமும் நிறைந்த
உன் தாய் நாட்டில் உன் முதலாளியின்
புகை பிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து
பாத்திரங்களில் நீரை நிரப்பி
வாசனைத் திரவியங்கள் கலந்து,
தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப்
படுக்கையினின்றும் விரட்டியடித்து,
புலர்ந்து புலராப் பொழுதில்
அத்திமர இலைகளின் வழி
காற்று இசை எழுப்பும்போது
அங்காடியில் அனாசிப் பழமும்
நேந்திர வாழைப்பழமும் வாங்குகிறாய்.
நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம்
வெறுங்காலுடன் சென்று
மறந்துபோன பழம் பாடல்களை
மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய்
மேற்கே சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு
சாயும்போது கோரைப்பாயில் நீயும்
மெதுவாகத் தலை சாய்க்கிறாய்
மிதக்கும் உன் கனவுகளில்
குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும்
களித்துத் திரியும் கன்னியே,
கடலோடிகளின் வன் கரங்களில்
உன் வாழ்க்கையை ஒப்படைத்து
உனக்குப் பிடிக்கும் புளிய மரங்களிடம்
இறுதி விடைபெற்று,
கும்பல் மிகுந்து அல்லலுறும் எங்கள்
பிரான்ஸை, நீ ஏன் பார்க்க விரும்புகிறாய்?
மென்துகிலை இடைவரை உடுத்து இங்கு
நீ வெண்பனியிலும் ஆலங்கட்டி மழையிலும்
குளிரால் நடுங்குவாய். மிகவும் இறுகிய
முலைக்கச்சை அணிந்து
உன் அரிய வனப்பின் மணமனைத்தையும் விற்று
எங்கள் ஒழுக்கக் கேடுகளில்
உன் வயிறைக் கழுவ நேர்ந்தால்
உன் இனிய, எளிய, அமைதியான வாழ்வை
எண்ணி எண்ணி எவ்வாறு நீ ஏங்குவாய்?
எங்கள் நாட்டுக் கனத்த மூடுபனியூடே
மறைந்து போகும் உன் நாட்டுத்
தென்னை மரங்களின் பொய்தோற்றங்களை
எப்படித் தேடுவாய்?

மூலம் : பிரேஞ்சு

ஆங்கில வழி தமிழில் : அமுதன்

(சார்லஸ் போதலேர் (1821/1867) ஃபிரெஞ்சு நாட்டுக் கவிஞர்களில் சிறந்த ஒருவர். வறுமை, பிணி, மனக்கசப்பு எல்லாம் அவர் வாழ்க்கையைப் பாழடித்தன. அவரது கவிதைத் தொகுதி தீயது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது. ஆனால், அவரைக் குற்றமற்றவர் என்றார்கள். 1946-ல் ஒரு பிரத்யேகச் சட்டத்தை இயற்றி, அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டு மத்தியில் போதலேர் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இக் கவிதை எழுதப்பட்டிருக்கலாம்).

நவீன விருட்சம் இதழ் – 4
1989 ஆண்டு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன