அகத்தின் அழகு


இன்னொரு நாளின்
தொடக்கம்.
எல்லோருக்கும் கை அசைத்தபடி
வந்து கொண்டிருந்த மகனின்
மகிழ்ச்சி இழைகளால் ஆன
முகத்தை அணிந்தபடி
சென்று கொண்டிருந்தேன்.
இவனின் கை அசைப்பிற்கு
எதிர்வினை  ஏதுமின்றி
எதிர்ப்பட்ட முகமொன்றில் 
அத்தனை இறுக்கம். 
உற்றுப் பார்க்கையில்
சற்று முன் இறக்கி வைத்த

என் முகம்.

காவேரி

 
         உடைகளில்லாதிருப்பதிலொரு
         உல்லாசத்தை உணர்கிறேன்
         உடலில் கவிந்த ஊர்ப்பழுதியை
         ந்தியில் நனைந்து கரைக்கிறேன்
         என் நேற்றைய வானவில்
         நுரைக்குமிழிகளாகிக் கரையும் காட்சியை
         ந்தியில் கப்பல்விட்ட சிறுவனாகி
         வேடிக்கை பார்க்கிறேன்
         புலரியின் இளஞ்சூட்டில் வியர்க்க
         இலைகளால் விசிறிக்கொள்ளும்
         கரையோர வாழைமரங்கள்
         ந்தியின் நடுவில் உலர்ந்த மணற்திட்டில்
         உறுமீன் வருமுன் உடற்பயிற்சி
         செய்யுமொரு கொக்கு.
         மாமரத்துக் கிளிகளுக்கெப்போதும்
         மாளாத சந்தோஷம்
         உடல் கவ்விய உடைகளுடன்
         அவள் அருகில் வருகிறாள்.
         அவளுள் நுழைய இசைவை விழையும்
         என் விண்ணப்பங்களை
          நிராகராக்கவில்லையெனினும்
          சம்மதிக்காமலென்னைக் கொல்லும்
         மல்யுத்த உடற்கட்டுக்காரி
         கொங்கை குலுங்க சிரித்தபடி வருகிறாள்
         கிளிகடித்த மாம்பழமொன்றை
         என்மீது விட்டெறிந்து
         கரையேறிப் பறக்கிறாள்
         பின்தொடரும் பரபரப்போடு நான்
         நீந்திக் கரைசேர்கையில்
         களவு போயிருந்தததென்
         அம்மணம் மறைக்கும் திரை.
 
 
     
 

பயணத் துணை

தேரியின் சிவந்த மண்ணில்
மரங்களும் பறவைகளும் பார்த்திருக்க பசியாறினோம்
மேல்தளம் இருந்தவர்கள்
ஒன்றிரண்டு படியேறியவர்கள் குறித்து
நம்பிக்கையை நதியாக்கினர்
முதல் படியில் இருப்பவனுக்கு தேவைப்படும் கவனத்தையும்
பிடித்துக்கொள்ள வேண்டிய கைப்பிடிச் சுவற்றின் ரகசியங்களையும்
அன்பால் செலுத்திக் கொண்டிருந்தனர்
அருகிருந்த நெல்லி
மெல்ல மெல்ல பெருக்கத் துவங்கியது
தன் துவர்ப்பை இழந்துவிடாது
சற்றைக்குப் பின் மதுக்குடுவைகள் வந்தமர
அறை அன்பின் தேவாலயமானது
பல்படாது செய்நேர்த்தியோடு செயலாற்றுபவனென்றும்
இத்தனைபேர் இருக்க எனக்கென்னடாவென
ஆசுவாசப் பறவைகளை மிதக்கச் செய்தும்
இதேதான் பற்றிக்கொண்டாய்
விட்டுவிடாது தொடரென்றும்
வார்த்தைகள் குலைந்து குலைந்து
பூ முத்தங்களாக மிளிர்ந்து அடங்கியது
பயணிக்கிறேன்
மயில்தோகையின் வருடல்களோடும்
ஓயாது கூவிய சேவலின் இசையோடும்…

கிழிபடும் மிச்சத்தின் பட்டியல்

பழைய பெயர் பட்டியலின்
கிழிபட்ட மிச்சத்தின் மீது புதிய பட்டியல்
ஒட்டப்படுகிறது

ஒரு பிரிவு
ஓர் ஏக்கம்
ஒரு காதல்
ஒரு புன்னகை
ஒரு காமம்
ஒரு பசலை
ஒரு துக்கம்
ஒரு வஞ்சம்
ஒரு கருணை
ஒரு துரோகம்
ஒரு யாசிப்பு

மற்றுமோர் பிரிவு
மற்றுமொரு தொடக்கம்
முற்றிலும் விடைபெறல்

பயணத்தைத் தொடங்குகிறது ரயில்
இன்னும் தீர்ந்திராத தவிப்புகளோடு 
பழைய பயணிகளின் ஸ்டேஷன்களை நோக்கி 

*******

எதையாவது சொல்லட்டுமா………69

21ஆம் தேதி ஜனவரி மாதம் சீர்காழி கிளையிலிருநந்து  எனக்கு விடுதலை தந்துவிட்டார்கள்.  திடீரென்று திரும்பவும் சென்னை என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வாரம் ஒருமுறை நான் சென்னைக்கு வராமலிருக்க மாட்டேன்.  திரும்பவும் சென்னையில் என் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பது திகைப்பாகவே இருந்தது.
காலையில் 9 மணிக்கு பஸ்ஸைப் பிடித்து ரம்மியமான வயல்வெளிகளைப் பார்த்தபடி மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்குச் செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். அதை திரும்பவும் இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது. 
என்னால் மறக்க முடியாத இன்னொரு இடம் திருவல்லிக்கேணி.  நான் இங்குதான் கோஷ் மருத்துவமனையில்தான் பிறந்தேன். நான் மாம்பலவாசியாக மாறினாலும், திருவல்லிக்கேணிக்கு அடிக்கடி வருவேன்.  என் நண்பர்கள் இங்குதான் அதிகம்.  மேலும் விருட்சம் அச்சடிக்கிற இடமும் திருவல்லிக்கேணிதான். 
நான் கல்லூரியில் முதலில் காலடி எடுத்து வைத்தபோது, கணக்கு என்றால் ஒன்றும் தெரியாது.   அதைக் கற்றுக்கொள்ள திருவல்லிக்கேணியில் உள்ள என் உறவினர் வீட்டிற்கு வருவேன். ஒரு குறுகலான சந்தில்தான் அந்த வீடு. என் பெரியப்பா பையன் மாடிக்கு என்னை அழைத்துக்கொண்டு போவார்.  அங்கு டிரிகனாமென்டிரி கற்றுக்கொள்வேன்.
ஒருமுறை என் பெரியப்பா பையன் சில தாள்களில் எழுதி மறைத்து வைத்துக்கொண்டிருந்தார்.  நான் ஆவலாக என்னவென்று பார்க்க முயற்சி செய்தேன்.  ‘ஐயோ ஐம்பது’ என்கிற அவருடைய கதை.  முத்து முத்தான கையெழுத்தில் தாளின் ஒரு பக்கத்தில் கதையை எழுதியிருப்பார்.  அவர் எழுதுகிற மாதிரி என்னால் முதலில் எழுத வராது.  கதை என்று எதாவது எழுத ஆரம்பித்தால் அது கோணலாகப் போகும்.  என்னவென்று சொல்லத் தெரியிவில்லை என் பெரியப்பா பையன் தொடராத ஒன்றை நான் இன்னும் எழுத்து மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
என் பெரியப்பா பையன் மலர்த்தும்பி என்ற சிற்றேட்டைத் துவங்கினார்.  அதுதான் எனக்கு சிறுபத்திரிகை தொடர ஒரு காரணம்.
பல ஆண்டுகள் கழித்து என் பெரியப்பா குடும்பம் திருவல்லிக்கேணியிலிருந்து போனபிறகு கூட என் வாழ்க்கை திருவல்லிக்கேணியில் தொடராமலில்லை.  கணையாழி என்ற பத்திரிகையில் ஒருமுறை கவனம் என்ற பத்திரிகைப் பற்றி விளம்பரம் வந்திருந்தது.  அந்த கவனம் என்ற சிற்றேடை வாங்குவதற்கு திரும்பவும் நான் திருவல்லிக்கேணி வந்திருக்கிறேன்.  ஆர். ராஜகோபாலன் வீடைத் தேடிக் கண்டுபிடித்து கவனம் இதழை வாங்கிப் படித்திருக்கிறேன்.   அப் பத்திரிகை மூலம் பல எழுத்தாள நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன். 
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வைத்தியநாதன் என்ற நண்பரை மயிலாப்பூரில் சந்தித்து பின் திருவல்லிக்கேணியில் உள்ள கடற்கரைக்குச் செல்வேன். ஞானக்கூத்தன், ஆனந்த், ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன், காளி-தாஸ், வைத்தியநாதன் என்று பல நண்பர்களைச் சந்திப்பேன். 
ஒருமுறை பார்த்தசாரதி கோயில் பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டிருந்தேன்.  கூட ராஜகோபாலன், வைத்தியநாதன்.  அங்குதான் நரசிம்மரின் இன்னொரு பெயரான அழகியசிங்கர் என்ற பெயரைக் கண்டுபிடித்தேன்.  அதுமுதல் என் படைப்புகள் இன்னமும் அந்தப் பெயரில்தான் வந்து கொண்டிருக்கிறது. 
விருட்சம் என்ற பத்திரிகைக்கும் பெரிய தெருவில் உள்ள சேகர் அச்சகத்திற்கு நெருங்கிய பிணைப்பு உண்டு.  இப்போதோ அந்தத் தெருவில் இருக்கும் எங்கள் வங்கிக்கிளைக்கு நான் தினமும் டூ வீலரில் வந்து கொண்டிருப்பேன் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் திருவல்லிக்கேணியின்  மகிமையைப் பற்றி தொடர்ந்து எழுதுவேன்.

ஒரு கவிதை

ஒரு கவிதை
தன்னை எழுதிக்கொள்ள
சொற்களை எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறது.
என்னிடம்.

இடையே வந்த தென்றல்
கொஞ்சம் அதன் முடியை
மயிலிறகு கொண்டு
நீவிச்சென்றது

அவ்வப்போது பெய்த
சிறு மழைத்துளிகள்
கலைந்த முடிகளை
சிறு கற்றைகளாக்கிச்சென்றது

அக்கற்றைகளிலிருந்து
வடிந்த மழைத்துளிகள்
காதோர மணிகளில்
தொக்கி நிற்க, அதில்
சூரியன் தன் முகம்
பார்த்துச்சென்றது.

இன்னும் தான்
உனக்குப்போதுமான
சொற்கள்
கிடைக்கவில்லையா
என அக்கவிதை
என்னை கேலி
செய்துகொண்டிருக்கிறது.

ஒரு புன்முறுவல்
கிடைத்தால்
இந்தக்கவிதை
முழுமை பெறும்
யாரேனும் அதனிடம்
சொல்வீர்களா..?!

ஜப்பான் பேனா நண்பி

முன்னர் அவள் அனுப்பியவை
நீண்ட கடிதங்களுடன்
காய வைக்கப்பட்ட செர்ரி மொட்டுக்களும்
செக்கச் சிவந்த மேப்பிள் இலைகளும்

புகைப்படங்களில்
பனி நிறைந்த சோலைகளில்
ரோஸா நிறத்தில் மலர்ந்திருந்தாள்
அனைத்து மடல்களிலும்
ஆங்கில வகுப்பினைக் குறித்தும்
குளிர்தினங்களில்
நீச்சலை விரும்பாத குளத்தின்
தங்க மீன்களைப் பற்றியுமே
எழுதியிருந்தாள்

காலம் செல்லச் செல்ல தற்பொழுது
என்றாவது வருகிறது கடிதம்
அதே இடம்தான் இது
பெரிய கட்டிடத்தின் அடியில்
வீட்டுக் குருவிப் பார்வையோடு
அவளிருக்கும் இப் புகைப்படம்
இப்பொழுதுதான் வந்தது எனக்கு
‘நித்திரையேயில்லை இரவில்
புகைபிடிப்பதை நிறுத்த முடியவில்லை
என்ன செய்ய வேண்டும்?’
புகைப்படத்தின் பின்னால்
அவளது உடைந்த கையெழுத்து

மூலம் – இஸுரு சாமர சோமவீர

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்



ஐயன்மீர்!
தொடக்கத்தில்
திரையில் காட்டப்பட்ட  
பாதுகாப்பு அட்டைகள் பற்றி
எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு.
அடுத்து முன்வைக்கப்பட்ட  
வரவு செலவு கணக்கு பற்றியோ
எதிர்கால திட்டங்கள் குறித்தோ
நாங்கள் சொல்ல விரும்புவதும்
ஏதுமில்லை.
விடைபெறுவதற்கு முன்
விருந்தோம்பல் சகிதம்
திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே
எங்களின் இந்த தாழ்ந்த விண்ணப்பம்.
எங்களைப் போலவே உங்களின்
வாகனங்களின் வருகைக்கும்
காத்திருக்கும்
எதிர்பார்ப்பின் கண்களுக்கு
என்னவிதமான உத்திரவாதத்தை
தரப் போகிறோம்

நாம்.

பறத்தலின் மீதான புரிதல்

உனக்கான இடம் இதுவல்ல
உள்ளுணர்வு சொல்லிய போது
உணர்கிறான் தோளோடு இருந்த
வலுவான இறக்கைகளை
அடைய வேண்டிய உயரமும்
போக வேண்டிய பாதையும்
வரைபடமாக விரிந்த போதும்
இறகுகளை நீவி அழகு 
பார்த்தபடி நிற்கிறான் 
எவருக்கும் தனை நிரூபிக்கும்
விருப்பங்கள் அற்றவனாய்
பறக்க அஞ்சுவதாக எழுந்த
பரிகாசங்களைப் புறந்தள்ளுகிறான்
வானத்துக்கு மட்டுமே புரிந்த புதிராக
மேகங்களின் வேகமும்
மாறும் அதன் வடிவங்களும்
பறத்தலின் மீதான நம்பிக்கையை விடவும்
பறத்தலின் மீதான புரிதல் மிகுந்திருக்க
இறக்கைகளை இன்னும் இறுக்கிக் கொண்டு
பாதங்கள் மண்ணில் பதியப்பதிய நடக்கிறவன்
வானம் தாண்டிக் கோடானு கோடிக்
கோள்களைப் பார்க்க இயலும்
பிரபஞ்சத்தின் உச்சியை 
அடைகின்ற பொழுதில்..
விரிக்கக் கூடும் தன் சிறகுகளை
அளவற்ற ஆனந்தத்தில்.
***

உதிர்வு

நெடிதாய் பேசி களிக்க
ஆவலில் சோளமாய் பொறிந்திடுவேன்
பக்கத்து வீட்டக்கா வந்திருக்காங்க
அப்புறமென அணைச்சிச் செல்லவும்…
உன் மலர்ச்சியை
இந்நாள்வரை கண்டிலேன் எப்பூவிலுமெனும்
எஸ் எம் எஸ்களை ஒருவழிப்பாதையில் கிடத்திடவும்…
ஒரு இலையை உலர்த்தி
உதிரச்செய்யும் செடியாகவும்
மாற்றங்கொள்வதேன் மதுவாகினி.