வருகை

பழுத்த இலைகள்
மண்ணில் உதிர்கின்றன
இன்று காலையிலேயே
வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது
ரிடையர்டு ஆன பின்பு
சூரல் நாற்காலி தானே கதி
ஆளரவமற்ற வீதியில்
காற்று அலைகிறது
நேற்று நடமாடியவர்கள்
இன்று காணாமல் போகும்போது
மரணம் என்னைப் பார்த்து
பல் இளிக்கிறது
அந்தி வேளையில்
கண்களை மூடி
பறவைகளின் சப்தத்தை
கேட்கும் போது
மனம் இலேசாகிறது
தூரத்தில் யார் வருவது
இந்தக் கண்ணாடியை
எங்கே வைத்தேன்
ஓ பரந்தாமனா –
எங்கிருந்து என்று கேட்டேன்
காதோரம் வந்து சொன்னான்
கைலாயம் என்று.

வரும்போகும்

முற்றத்தில் அடிக்கும்
வெயிலும்
பெய்யும் மழையும்
இப்போது இல்லை
ஓட்டிலிருந்து
தேள் வந்து விழும் என்ற
பயமுமில்லை
குளியலறையை
வசிப்பிடமாக்கிக் கொண்ட
கரப்பான்பூச்சியைக்
காணவில்லை
வாங்கி வைத்த
மாம்பழங்களை
குதறிச் செல்லும்
பெருச்சாளிகளின்
தொல்லை இல்லை
மழை பெய்தால்
ஆங்காங்கே ஒழுகும் என்ற
சிரமமில்லை
வெளவாலுக்கு
அடைக்கலம் தரும்
இடமாக இல்லம்
இனி இருக்கப்போவதில்லை
இனி நெஞ்சை நிமிர்த்தி
நடக்கலாம்
எங்கள் வீடு
ஓட்டு வீடு இல்லை
மாடி வீடென்று.

கதிரொளி

மழையில் நனைந்த பறவை
சிறகை உலர்த்தியது
மின்னல் நரம்புகள்
வானை வெளிச்சமிட்டுக்
காட்டியது
இடியோசை
ஆகாயம் இடிந்து
விழுவதைப் போல
பயங்காட்டியது
இயற்கை வரைந்த
ஏழு வண்ண ஓவியத்தை
ஜனக்கூட்டம் ரசித்தது
மரங்களின் பாஷை
பறவைக்கு புரிந்தது
வீதியில் நடப்பவர்கள்
மழைக்கெதிராய்
கறுப்புக் குடை பிடித்தார்கள்
மெல்ல பரிதி
எட்டிப் பார்த்ததும்
சகஜ நிலை திரும்பியது
அடுத்த மழைக்கு முன்னே
இரையைத் தேட எறும்பு
சாரை சாரையாய்
ஊர்ந்து சென்றது.

மாற்றம்

நிலைக்கண்ணாடி முன்பு
தான் தொலைத்த
இளமையைத் தேடுகிறார்கள்
தன் பிம்பம் தான் இது
என்று ஏற்றுக் கொள்ள
மறுக்கிறார்கள்
கடவுளால் பரிசளிக்கப்பட்ட
பேரழகை
சாத்தான் களவாடிவிட்டதாக
எண்ணுகிறார்கள்
வயதைக் காட்டிக் கொடுக்கும்
நரைத்த முடியை
டை அடித்து மறைக்கிறார்கள்
பருவத்தில் மினுமினுத்த மேனியில்
சுருக்கம் விழுவதை பார்த்து
பதறுகிறார்கள்
இன்று எந்தக் கண்களுமே
ஆச்சர்யத்துடன் தன் எழிலை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை
என்பதை எண்ணும் போது
நிலைக்கண்ணாடி முன்பு நின்று
கேவி அழுகிறார்கள்.

தீற்றல்

நிலைக்கண்ணாடி பிரதிபலித்த
முதல் நரை
மரணம் விரிக்கும் வலை
மழை நாள்
சூரியனைக் காணோம்
இரவு வெகு நீளம்
கழுகின் நிழலைக் கண்டு
அஞ்சும்
கோழிக் குஞ்சுகள்
மணி அடித்தாகிவிட்டது
தண்ணீர் போத்தல்
வாங்கப் போனவர்
இன்னும் வரவில்லை
வார இதழ்களை
கடைசி பக்கத்திலிருந்து
படிப்பது
பழக்கமாகிவிட்டது
சூரல் நாற்காலியில்
நாளிதழ், வானொலி
கேட்பாரற்றுக் கிடக்கிறது
முதியவரை மரணஅலை
அடித்துச் சென்றுவிட்டது
தெரு விளக்குகள் எரியவில்லை
அந்தகனைப் போல்
இருளில் துழாவித் துழாவி
வீடு வந்து சேர்ந்தேன்.

யாக்கை

 
ஆழ்கடல்
அமைதியாக இருக்கும்
கூட்டம் கடலலையை
கண்டு ரசிக்கும்

மேகக் கூட்டம்
படையெடுக்கும்
வானம்பாடி பாட்டுப் படிக்கும்

காட்டுப் பாதையில்
பூத்த மலர்
பறிக்க எவருமில்லை

வைகறை
மூடுபனி
உறக்கம் கலையவில்லை

திருத்தேர் வீதிஉலா
பலூன் வியாபாரியை
மொய்க்கும் சிறார்கள்

தீபாவளி நள்ளிரவு
வெடிச்சத்தம் ஓயவில்லை

தக்கை அசைகிறது
தூண்டிற்புழுவுக்கு
ஆசைப்பட்ட மீன்
பாத்திரத்தில் துள்ளுகிறது.

 

 
 
 
 

 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சில்லறை

கடிகார முள்

எதை துரத்துகிறது

உச்சி வெயில்

சாலை வெறிச்சோடியது

வானில் ஒரு பட்டம்

நிலவு காய்ந்தது

என்னன்னமோ யோசனைகள்

விடிந்துவிட்டது

பைகளைத் துழாவினேன்

சில்லறை இல்லை

என் அதிர்ஷ்டம்

வீட்டுக்குத் திரும்பினேன்

கதவு பூட்டப்பட்டிருந்தது

நேற்று திறந்திருந்ததே

குடை விரிக்க

யோசிக்கிறேன்

நனைந்தால் ஒன்றும்

கரைந்துவிட மாட்டேன்

இன்று கடிதம்

வரவில்லை

என்று தான் வந்தது

நாய் துரத்தியது

தப்பினால் போதுமென்று

ஏதோவொரு வீட்டில் நுழைந்தேன்

நாய்கள் ஜாக்கிரதை என்ற

போர்டை கவனிக்காமல்.

ஓயாத அலைகள்

நீரலை அடியில்
நீந்தும் மீன்கள்
எப்போது வலையில்
வேடன் குறி
தப்பியது கிளி
அசைவின்றி மரம்
ஓயாத அலைகள்
நீல வானம்
படகின் பயணம்
நிழல்
வளரும் தேயும்
தண்ணீரில் முகம் தெரியும்
மின்விசிறி சுழல்கிறது
விளக்கு எரிகிறது
படுக்கையில் யாருமில்லை
சாலையில் ரோஜா
சருகாகும் வரை
பிணத்தின் வாடை
நடைபாதையில் பணமுடிப்பு
கையேந்தும்
குருட்டுப் பிச்சைக்காரன்
கும்மிருட்டு
நகரும் நட்சத்திரம்
மின்மினிப்பூச்சி
காட்டுப் பாதை
மேடு பள்ளம்
விநோத ஒலி.

கிளிஞ்சல்கள்

மின்விசிறி
புத்தகத்தின் பக்கங்களைப்
புரட்டுகிறது
கோடுகள் தான்
ஓவியமாகிறது
நதியின் போக்கிலே
சடலம் மிதக்கிறது
சுவரொட்டி
மனிதர்களுக்கா
மாடுகளுக்கா
தண்ணீர்க் குழாயிலிருந்து
தவளை வெளிவந்தது
வானம் கறுத்தது
காற்று கலைத்தது
ரசமிழந்த கண்ணாடி
குப்பைத் தொட்டியில்
சாக்கடையில் மிதக்கிறது
ரப்பர் பந்து
காகம் கரைந்தது
வாழை இலை நறுக்கினேன்
விருந்தினர்களை எதிர்பார்த்து
கடலைப் பார்த்ததற்கு
சாட்சியாக
இந்தக் கிளிஞ்சல்கள்.

பின்எப்போதும்

எண்ணத்திற்கும்
செயலுக்கும்
இடைப்பட்ட தருணத்தில்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
கண்ணீர் நதியில்
அலுப்பு தீர
குளித்துக் கொண்டிருந்தேன்
மயானத்தில்
சடலம் எரிவதை
பார்த்துக் கொண்டிருந்தேன்
மொட்டுக்கள்
இதழ் விரிப்பதை
ரசித்துக் கொண்டிருந்தேன்
வானம்பாடி
கானம் பாடுவதை
கேட்டுக் கொண்டிருந்தேன்
அதிசயமாக
பெய்த மழையில்
தொப்பலாக
நனைந்து கொண்டிருந்தேன்
கூண்டில் அடைத்து
பறவையின் சுதந்திரத்தை
பறித்தவர் மீது
கோபம் கொண்டிருந்தேன்
அலையோசையில்
மெய்மறந்து
தன்னிலையை
இழந்து கொண்டிருந்தேன்
வெளி மட்டுமே
நிலையானது என
எண்ணிக்கொண்டே
வானத்தில் சிறகின்றி
பறந்து கொண்டிருந்தேன்.