தற்கொலைக் குறிப்பு

படிக்கட்டின் விளிம்பில்
நின்றவாறு
இடதா,வலதா என
யோசித்தான்
தொப்பலாக
மழையில் நனைந்த பிறகு
குடை பையிலிருப்பது
ஞாபகம் வந்தது அவனுக்கு
கோயிலுக்குள் சென்ற பிறகும்
அவன் மனம்
கழட்டிப் போட்ட
காலணிகளையே
வட்டமிட்டுக் கொண்டிருக்கும்
தினமும்
ஏதாவது ஒரு வரிசையில்
நிற்க நேர்வது
எரிச்சலைத் தந்தது அவனுக்கு
தனது அலைவரிசையை
ஒத்தவர்களை
சந்திக்க நேரும்
தருணங்களிலெல்லாம்
டைரிக் குறிப்பில்
சிவப்பு மையால்
அடிக்கோடிடுவான்
வாழ்க்கை மீது
நம்பிக்கை இழக்கும்
தருணங்களிலெல்லாம்
பர்ஸை திறந்து
அதிலுள்ள புகைப்படத்தை
கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருப்பான்
சில நாட்களாக
தற்கொலைக் குறிப்பை
சட்டைப் பையில்
வைத்துக் கொண்டே
நடமாடி வந்தான்
வலி இல்லாமல் சாக
வழி சொல்லும் புத்தகம்
எங்கேயாவது கிடைக்குமா
எனத் தேடிக்கொண்டிருந்தான்.

நிசி

இலைகளற்று
மூளியாய் நிற்கும் மரம்
பீதியைக் கிளப்பியது
கும்மிருட்டில்
கள்வனைக் கண்டது போல்
வெற்று வெளியைப்
பார்த்து
நாய்கள் குரைத்துக்
கொண்டிருந்தன
தாகம் தணிக்க
அடுக்களைக்கு
போன என்னை
வரவேற்றது
திருட்டுப்பூனை
தூக்கம் வராத
இரவுகளில்
மொட்டை மாடியில்
வானம் பார்த்துக் கிடப்பது
வழக்கம்
படுக்கையில்
தலையணை மட்டும்
இருக்கட்டும்
மனதிற்கு சஞ்சலம் தரும்
நிகழ்வுகள் வேண்டாமென்று
வானம் போதனை செய்தது
தூக்கம் வராமல்
புரண்டு படுத்துக் கொண்டிருக்கும்
எல்லோரிடமும்
எப்படி இந்தச்
சங்கதியை சொல்வது
எனத் தெரியாமல்
பள்ளிக்கூட மாணவனைப் போல்
மலங்க மலங்க
விழித்தேன் நான்.

மையம்

நிர்மாலியப்படாத பூக்கள்
தெய்வத்தின் திருமேனியை
அலங்கரிக்கும்
பால் வற்றிப் போன
தாயின் முலை சப்பும்
குழந்தை
பள்ளிக் கூட வாசலில்
வியாபாரியின் கைபட்டவுடன்
புதுப்புது வடிவெடுக்கும்
பஞ்சுமிட்டாய்
ஏனோ சிறுவர்களை
ஈர்க்கும்
வாழை இலை அசைவைப்
பார்த்து
பயந்து போன சிநேகிதன்
ஜுர வேகத்தில்
உளறிக்கொண்டிருந்தான்
பேயைப் பார்த்ததாக
சிட்டுக் குருவியின் சீண்டல்களைப்
பார்த்து செவ்வந்தியின் மனம்
சிறகடிக்கும்
அந்தி நேரம்
கணவனின் வருகைக்காக
முகம் கழுவி பவுடர் பூசி
வாசலில் காத்திருக்கும்
தோப்புக்காரன்
தேங்காய் தலையில் விழுந்து
கபாலம் சிதறி
இறந்து போனான்
உச் கொட்டிய கூட்டம்
தேங்காய் சிரட்டை கூட
ஈயமாட்டாரு
போறப்ப என்னத்த
எடுத்துகிட்டு போனாரு
என்றது.

ஒளிவட்டம்

மழை வலுத்தது
உனது குடைக்குள்
என்னை அழைத்தாய்
ஏனோ அன்று
குடைக்குள் இருந்தும்
நனைந்து போனேன்
நாய்களுக்குப் பயந்து
என்னை துணைக்கழைத்தாய்
என்னைக் கண்டதும்
நாய்கள் வாலாட்டியதைக்
கண்டு
மெலிதாக இதழ் விரித்துச்
சிரித்தாய் நீ
நூறு ரூபாய் கொடுத்து
சில்லறை கேட்டாய்
கொடுத்தேன்
நன்றி என்றாய்
அன்று முதல்
உண்டியலில் போட்டு வைத்த
சில்லறைகளை உடைத்தள்ளி
வருகிறேன்
இருசக்கர வாகனம்
ஸ்டார்ட் ஆக மறுக்கிறது
என்றாய்
பழுது நீக்கிக் கொடுத்தேன்
வண்டியில் அமர்ந்து
விடைபெற்றாய்
நான் ஆயில் கறை படிந்த
கைகளையே வெகுநேரம்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அன்றைய
பத்திரிகை செய்தியைப் பற்றி
அலுவலகத்தில் பரபரப்பாக
பேசிக் கொண்டார்கள்
உன்னையும் பரபரப்பு
தொற்றிக் கொள்ள
என்ன செய்வதென்று
தெரியாமல்
நீ என்னை பெயர் சொல்லி
அழைத்தாய்
உனது சிரசை சுற்றி
ஒளிவட்டம் தோன்றலாம்
நீ எனக்கு ஞானமளித்ததால்.

திருஷ்டி

உனது வார்த்தைகளை
எந்த அகராதியிலிருந்து
எடுத்தாள்கிறாய்
பெய்ய மறுக்கிறது மழை
முதல் துளியை
உனது ஸ்பரிசத்தில்
விழச் செய்து
ஜென்ம சாபல்யம்
அடையத் துடிக்கிறது
உனது திருவடிகளை
எனது வீட்டை நோக்கி
திருப்ப மாட்டாயா
உன்னை உரசிய தென்றல்
மண் மீது ரதியைக் கண்டேன்
என துள்ளிக் குதிக்கிறது
தேவதை உலகம்
களையிழந்து போயிருந்தது
தேவி அவள் பிறந்து
பூமிக்கு வருகை தந்ததினால்
கோயில் பிரகாரத்தை
வலம் வருகிறாய்
தெய்வம் உனது வீட்டில்
குடியிருப்பதை அறியாமல்
ஊர் கண்ணெல்லாம்
உன் மீது தான்
அத்தையிடம் சொல்லி
வைக்க வேண்டும்
தினமும் திருஷ்டி
கழிக்கச் சொல்லி.

பிறிதொன்று

கோலமிட குனிந்தவள் மீது
பனித்துளி விழுந்தது

ஊரையே கழுவி
துடைத்து வைத்திருந்தது
நேற்றிரவு பெய்த மழை

சகதியில் உழலும் பன்றிகள்
சந்தன வாசனையை அறியாது

நரகல் தின்னும் நாய்
காலை வேளையில்
குளத்துக் கரையையே
சுற்றி வரும்

காற்று கேட்ட கேள்விக்கு
விடைதெரியாமல்
மரங்கள் இலை உதிர்த்தன

வெண்மேகம் மயிலுக்கு
என்ன துரோகம் செய்தது

வீதியில் நடப்பவர்கள்
மற்றவர் முகம் பார்த்து
நடப்பதில்லை

நெல் கொறிக்கும்
சிட்டுக்குருவி
எப்படி விளைந்ததென்று
அறியாது.

ரோகி

ரணத்தில் நிணம் கசிய
வீதியில் நின்றிருந்தேன்
பாதசாரிகளின் பார்வைகள்
விநோதமாயிருந்தது
தனக்கு வந்து விடுமோ
என அஞ்சி விலகினர் சிலர்
சிலர் அருவருப்புக் கொண்டு
மண்ணில் காறி உமிழ்ந்தனர்
புண்ணிலிருந்து வீசி்ய
வாடையை காற்று
வாங்கிச் சென்று
இன்னொருவர் நாசிக்குள்
நுழைத்தது
உச்சி வெயிலால்
காயங்கள் எரிந்தன
உடலின் மேல்
மற்றொரு உடல்
போர்த்தியது போலிருந்தது
உடலின் கனத்தால்
பாரம் தாங்க இயலாத
தோணி ஆடுவது போல
உடம்பு அங்குமிங்கும்
அசைந்தது
மரணம் வந்து விடுதலை
தரும் வரை
வேறு கதிமோட்சம்
இல்லையென்று
உள்ளம் புலம்பி அழுதது.

கோபுரம் தாங்கி

பழுத்த இலைகளை
உதிர்த்துச் சென்றது
காற்று
நரகல் தின்னும்
பன்றியின் மீது
ஒன்றுக்கிருக்கும் சிறுவன்
அடுக்களையில்
பாத்திரத்தை உருட்டும்
திருட்டுப் பூனை
விசேஷ நாட்களில்
காகங்களுக்கு ஏற்படும்
கிராக்கி
வண்ணத்துப்பூச்சி
பறக்கும் பாதைகளில்
உதிர்த்துச் செல்லும்
வண்ணங்களை
தங்கப் பரிதி
யாரும் களவாட முடியாத
உயரத்தில்
வெள்ளி நிலவு
ரசிக்க யாருமின்றி
காய்கிறது
திண்ணைகள்
ஒட்டுக் கேட்கின்றன
தெருவின் ரகசியங்களை
கோபுரம் தாங்கிகள்
கோபுரங்களை தாங்குவதில்லை.

பால்ய பொழுதுகள்

பட்டம் விடுவது
பம்பரம் சுற்றுவது
விடியும் பொழுதெல்லாம்
விளையாட்டுக்களிலும்
அதைப் பற்றிய நினைவுகளிலும்
கழியும்
பள்ளிக் கூட வாத்தியாருக்கு
இடது கையால்
வணக்கம் வைத்து
வாங்கிக் கட்டிக் கொள்வது
சிதறுதேங்காய்க்காக
சண்டையிடுவது
தோட்டத்து மாமரத்தில்
கல்லெறிவது
குளத்தில் பனங்காயை
தூக்கி எறிந்து
அதைத் தொட
சகாக்களுடன்
போட்டியிட்டு நீச்சலடிப்பது
இளவட்ட பசங்களின்
சேஷ்டைகளை ரசிப்பது
அவர்களின் காதலுக்கு
தூதுவனாக இருப்பது
விரக்தி ஏற்படும் தருணங்களில்
பால்யத்தின் கனவுகளை
அசைபோட்டவாறு இருப்பது
அம்புப்படுக்கையில் இருக்கும்
பீஷ்மரைப் போல்
வாழ்க்கை கொடிய கணைகளால்
எனது நெஞ்சத்தைத் தைத்தது
ஓர் நாள்
விடாது பெய்த மழையில்
நனைய யோசித்த பொழுதே
எனது பால்யம் தொலைந்தது.

வீடு

மூதாதையர்கள் வாழ்ந்த இடம்
நாங்களனைவரும் வளர்ந்த இடம்
ஓடிவிளையாட நிறைய மறைவிடங்கள்
இருந்த இடம்
எப்பொழுதும் சந்தன வாசம்
கமழும் இடம்
சமையலறையில் விறகு அடுப்பு
அணைக்கப்படாமல்
சதா எரிந்து கொண்டேயிருந்த இடம்
தாத்தா, பாட்டி புழங்கிய பொருட்களால்
அவர்களது ஞாபகங்களை மீட்டெடுக்கும்
பணிகளைச் செய்த இடம்
வீசிய புயலுக்கு தாங்காமல்
ஆங்காங்கே விரிசல் கண்டது சுவர்கள்
இதோ பொக்லைன் இயந்திரம்
தரைமட்டமாக்கிக் கொண்டுள்ளது
எங்கள் பொக்கிஷத்தை
இனி எங்கள் ஞாபகங்களில் தான்
வாழும் இந்த வீடு.