வன்முறையின் சாட்சி

எட்டுக்காலம் அளவில்
அந்தச் செய்தி வந்திருந்தது.

ரத்தம் வழியும் புகைப்படங்களுடன்
பேருந்தும்
பேருந்தும் பேருந்தும் மோதி
முப்பத்தாறு பேர்
சம்பவ இடத்தில் பலி

பிய்ந்த கைகள்
உடைந்த கால்கள்
சிதைந்த தலை

ஆதி வன்முறையின்’
கடைசி சாட்சியென
இன்னும் அதிகமாய்
இரண்டு லட்சம் பிரதிகள்
விற்றிருக்கிறது பத்திரிக்கை.

ஒளிவட்டம்

மழை வலுத்தது
உனது குடைக்குள்
என்னை அழைத்தாய்
ஏனோ அன்று
குடைக்குள் இருந்தும்
நனைந்து போனேன்
நாய்களுக்குப் பயந்து
என்னை துணைக்கழைத்தாய்
என்னைக் கண்டதும்
நாய்கள் வாலாட்டியதைக்
கண்டு
மெலிதாக இதழ் விரித்துச்
சிரித்தாய் நீ
நூறு ரூபாய் கொடுத்து
சில்லறை கேட்டாய்
கொடுத்தேன்
நன்றி என்றாய்
அன்று முதல்
உண்டியலில் போட்டு வைத்த
சில்லறைகளை உடைத்தள்ளி
வருகிறேன்
இருசக்கர வாகனம்
ஸ்டார்ட் ஆக மறுக்கிறது
என்றாய்
பழுது நீக்கிக் கொடுத்தேன்
வண்டியில் அமர்ந்து
விடைபெற்றாய்
நான் ஆயில் கறை படிந்த
கைகளையே வெகுநேரம்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அன்றைய
பத்திரிகை செய்தியைப் பற்றி
அலுவலகத்தில் பரபரப்பாக
பேசிக் கொண்டார்கள்
உன்னையும் பரபரப்பு
தொற்றிக் கொள்ள
என்ன செய்வதென்று
தெரியாமல்
நீ என்னை பெயர் சொல்லி
அழைத்தாய்
உனது சிரசை சுற்றி
ஒளிவட்டம் தோன்றலாம்
நீ எனக்கு ஞானமளித்ததால்.

சில க.நா.சு கவிதைகள்

இன்னொரு ராவணன்

இன்னொரு ராவணன் தோன்ற வேண்டும்.
இன்றுள்ள ராவணர்கள்-ராவணர்களுக்கு
என்றுமே பஞ்சமில்லை-சினிமா வில்லன்களாக
லங்கைக்குப் போகும் வழியிலேயே காரியத்தை
முடித்துக்கொண்டு விடுகிறார்கள். üüஐயகோ
என் பெண்மையைக் குலைத்து விட்டார்களே
என் கற்பை உறிஞ்சி விட்டார்களே,ýý என்று
கதறும் சீதைகளைப் பார்த்து அனுதாபப்
படுபவர்கள்போல இன்றைய ராவணர்கள்
கூட்டத்தோடு கோவிந்தா போட்டு விளம்பரம்
தேடுகிறார்கள். ராமனின் அணையைக் கட்ட
முன்னேற்றம் என்கிற பெயரால் அவர்களே
உதவுகிறார்கள். ராமனின் வரவை எதிர்
நோக்கிக் காத்திருக்கும் சீதைகளும்
இன்று இல்லை. அவன் இல்லாவிட்டால்
இவன்-இருவரும் அரசர்களே என்று
திருப்தியுற்று விடுகிறார்கள்.
ராமன்
ராமனாகவும் ராவணன் ராவணனாகவும்
சீதை சீதையாகவும் இருக்க ஒரு
லங்கைத் தெம்பு வேண்டும் இன்று
லங்கையே லங்கையாக இல்லையே!
எப்படி ராமனும் சீதையும் ராவணனும்
தோன்றுவார்கள்? தோன்றினாலும்
தெரிந்து சொல்லும் வால்மீகிகள் எங்கே?

எதையாவது சொல்லட்டுமா?……..41

இன்று மதியம் சாய்பாபா மறைந்த செய்தியை டிவி மூலம் அறிந்தேன். அவர் உடல்நிலை குன்றி மருத்துவமனையில் படுத்துக் கிடந்தசெய்தியை அறிந்தபோது எனக்கு வருத்தமாகவே இருந்தது. ஆனால் அவருக்கு 85 வயது. பெரிய மகான்கள் மரணம் அடையும்போது ஒன்று புற்று நோயால் அவதிப்பட்டு இறந்து போவார்கள். ரமணர், யோகி ராம்சுரத்குமார், ஜே கிருஷ்ணமூர்த்தி. பலருடைய கவலைகளை, பிரச்சினைகளை கேட்டு கேட்டு தீர்வளிக்கும் மகான்கள், தங்கள் மரணத்தைப் பற்றி சரியாக கணிக்க முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

சாய்பாபா படுத்த படுக்கையாக ஆனபோது, அவருக்கு இதுமாதிரி ஒரு மரணம் நிகழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் 98 வயது வரை வாழப்போவதாகத்தான் சொல்லிக்கொண்டிருந்தார் என்று செய்தி சொல்கிறது.

கடவுளின் அவதாரமாகத்தான் சாய்பாபாவை எல்லோரும் பார்த்தார்கள். ஒரு முறை ஒயிட் பீல்டில் என் குடும்பத்தோடு சாய்பாபாவை தரிசனம் செய்யச் சென்றேன். ஒரே கூட்டம். ரஷ்யாவிலிருந்து பலர் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்தவே போதும் போதும் என்றாகிவிட்டது.
சாய்பாபா மெதுவாக நடந்து வந்தார். எல்லோருடைய குறைகளையும் கடிதம் மூலம் எழுதித் தந்ததை வாங்கிக் கொண்டு மெதுவாக வந்தார். பின் கையை வீசினார். எல்லோர் முன்னும் சாக்லேட்டுகள் வந்து விழுந்தன. நான் அவரை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என் பக்கம் வராமல் போய்விட்டார்.

என் நண்பர் ஒருவர் சாய்பாபாவைப் பற்றி குறிப்பிடும்போது, அவர் மற்றவர்கள் மனதை உடனடியாகப் புரிந்து கொண்டு விடுவார், என்று குறிப்பிட்டார். எனக்கும் அது உண்மை என்று பட்டது. அவருடைய சுருள் சுருளான தலைமுடியும், அகன்ற முகமும் மனதிலிருந்து அகலவே அகலாது. கோடான கோடி மக்கள் உலகம் முழுக்க அவருக்கு பக்தர்களாக இருந்திருக்கிறார்கள். அவர் யாரை குறை கூறியது கிடையாது. நன்மைதான் செய்திருக்கிறார். சென்னை மக்களுக்கு எப்போதும் குடிநீர் கிடைக்கும் வசதியை ஒரு அரசாங்கத்தால் செய்ய முடியாத ஒன்றை, அவரால் செய்து முடிக்க முடிந்தது.

அவரைப் பற்றி பல குற்றச்சாட்டுகளும் உண்டு. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்வதில்லை. அவர் மரணம் அடைந்தாலும், தொடர்ந்து எல்லார் மனதிலும் இருந்துகொண்டுதான் இருப்பார்.

நீதிக்கிளி

என் நெஞ்சுக்குள் உட்கார்ந்துகொண்டு
நான் எதையும் செய்து முடித்துவுடன்
இது தப்பு, இது சரி, இது ஏன் தப்பு இது
ஏன் சரி என்று ஒலிக்கும் அருவமாக
டிக் டிக் கென்று ஏதேதோ சொல்லிக்
கொண்டிருக்கும் நீதிக் கிளியே!

நீ உன் வாதத்தையெல்லாம் அறிவுடன்
எடுத்து நான் எதையும் செய்ய
ஆரம்பிக் குமுன் சொல்வதற் கென்ன?
ஏன் எதையும் செய்த பின்
சொல்லித் தொலைத்து என் அமைதியையும்
தொலைக்கிறாய்? சரி தப்பு
என்று நான் செய்து விட்டது பற்றித்
தீர்மானிக்க முடியாமல்
தவிக்கும்போது நீ வேறு குட்டையைக்
குழப்புகிறாயே – அது ஏன்?
செய்யலாமா வேண்டாமா? எப்படிச்
செய்யலாம் என்று நான்
யோசிக்கும் வேளையில் நீ எங்கேதான் போயிருந்தாய்? அப்போது
உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும்
இல்லாததுபோல் இருந்து
விட்டாயே! – அது ஏன்? உன் பொறுப்பு
அப்போது உனக்குத் தெரியவில்லையா?

என் உள்ளத்தில் ஓயாத சந்தேகங்கள்
எழுந்து இது இப்படி நடந்திருந்தால்
சரியாகியிருக்குமா இப்படி ஏன் நடக்க
வில்லை. ஏன் இப்படி நடந்தது என்று
சஞ்சலப்பட்டு ஊசலாடிக்கொண்டு என்னை
அலக்கழிக்கும்போது நீயும் உன்
குற்றம் சாட்டும் குரலை எழுப்புகிறாயே
சனியனே – நீ ஏன்
துருத்திக்கொண்டு வருகிறாய்?
உன்குரலை அமுக்குவது எப்படி?

வாழ்க்கை என்பது சிக்கலில்லாமல் சுலபமாக
இருந்துவிடக் கூடாதே என்பதற்காகவே
நீ உன் குரலை எழுப்பி எனக்கு எதிராக
உலகமெல்லாம் பரவத் தீ மூட்டுகிறாய்?
எதிலுமே சரி – தம்மை சரிவர அறிந்து
கொள்ளமுடியாது என்பதை
அறிந்துதான் நீ ஒதுங்கி இருந்தாயா?
காரியம் முடிந்து மாற்ற இனி ஒரு போதும்
முடியாது என்று ஏற்பட்டபின்தான்
உனக்கும் உன் நீதிக்கும் நேர்மைக்கும்
உயிர் வருகிறதா? சாக்ஷியம் சந்தர்ப்பங்களையும்
பொறுத்ததா அல்லது நிரந்தரமானதா?

எந்த வழியில் சென்றாலும் ஏற்கத் தகாத
முடிவையே எட்டமுடியும் என்பது
சரித்திர அனுபவமா? அல்லது எந்த முடிவுமே
ஒரு முடிவற்ற முடிவுதான் வேறு வித
மாகவும் இருக்கலாம் என்கிற நினைப்பில்
ஆறுதல் அளிக்கிறதா?
குழப்பத்தை விளைவிக்கிறதா?
முடிவெடுப்பதைத் தடுக்கிறதா?

நீதிக் கிளியே! உனக்கு இதெல்லாம்
தெரியாது, சரி தப்பு என்று
கிளிப்பிள்ளை மாதிரி மாற்றி மாற்றி
சொல்லத்தான் தெரியுமே தவிர
வேறு எதுவும் தெரியாது
உன்னை கழுத்தை முறித்துப்போட்டு விட்டால்
வாழ்க்கை வழி சுலபமாகிவிடும்.

திருஷ்டி

உனது வார்த்தைகளை
எந்த அகராதியிலிருந்து
எடுத்தாள்கிறாய்
பெய்ய மறுக்கிறது மழை
முதல் துளியை
உனது ஸ்பரிசத்தில்
விழச் செய்து
ஜென்ம சாபல்யம்
அடையத் துடிக்கிறது
உனது திருவடிகளை
எனது வீட்டை நோக்கி
திருப்ப மாட்டாயா
உன்னை உரசிய தென்றல்
மண் மீது ரதியைக் கண்டேன்
என துள்ளிக் குதிக்கிறது
தேவதை உலகம்
களையிழந்து போயிருந்தது
தேவி அவள் பிறந்து
பூமிக்கு வருகை தந்ததினால்
கோயில் பிரகாரத்தை
வலம் வருகிறாய்
தெய்வம் உனது வீட்டில்
குடியிருப்பதை அறியாமல்
ஊர் கண்ணெல்லாம்
உன் மீது தான்
அத்தையிடம் சொல்லி
வைக்க வேண்டும்
தினமும் திருஷ்டி
கழிக்கச் சொல்லி.

அவனின் தேடல்

சில்லென உடையும்

உன் சிரிப்பில்

அரசியல்வாதியின் சில்லரை

சப்தம் கேட்கிறது..

பகட்டான உன் வாசம்

என்னை பயமுறுத்துகிறது..

உன் உபச்சாரத்தை

பலரும்

விபச்சாரம் என்கின்றனர்.

உன்னில் விழும்

வார்த்தைகளில்

விதவிதமான ஆயுதங்கள்.

உன் பேச்சின் முடிச்சுக்களில்

பரிதாபமாய் இறுகித்

துடிக்கும் பலரின்

இளங் கழுத்துக்கள்

ஒண்ணும் வேண்டாம்

எனக்கு…

ஒண்ணுமில்லாத

வெறும் இதயம்

ஒன்று போதும்

என் மனசாட்சியை

வைப்பதற்கு.

ஆறாவது அறிவு

கிழக்கு மேற்காய் வடக்கு தெற்காய்
நேர்க் கோட்டில் சில கணங்கள்

வளைந்து திரும்பி,
இராட்டினக்குதிரை போல்
உயர்ந்தும் தாழ்ந்தும் சில கணங்கள்

கைக்கெட்டும் தூரத்தில்
கைக்கெட்டா கனவொன்றைப் போல்
பறந்து கொண்டிருந்த பருந்தினை

விடாமல் பின்தொடர்ந்தது
அங்குல இடைவெளியில்
இரண்டாம் பருந்து.

மேகங்கள் கூடிக் கூடி
வேடிக்கை பார்த்திருக்க

மூன்றாவதாய் ஓர் பருந்து
வேகமாய் இவற்றைக் கடக்க

ஆவலாய் முதல் பருந்து
அதனைத் தொடர ஆரம்பிக்க

விக்கித்து விலகிய இரண்டாவது
செய்வதறியாத நிலையில்
உயர உயர எழும்பி
சுற்றிச் சுற்றி வந்தது
தன்னந்தனியாகக் காற்றுவெளியில்..

தாழப் பறந்து கொண்டிருந்த
புறாவொன்று கண்ணில் படவும்

அதிவிரைவாய்
காற்றைக் கிழித்துக் கீழிறங்கி
ஆக்ரோஷமாய்
துரத்தத் தொடங்கியது

வாழ்வோ பணியோ
பதவியோ பந்தயமோ

ஏமாற்றத்தின் வலியை
தோல்வியின் துயரை

எளியோனிடம் கடத்தும்
மனிதனைப் போலவே.
***

சின்னஞ்சிறு கதைகள்…..

அகாலம்

நான் பத்து வயதாக இருக்கும்போது, என் சித்தப்பாவோடு மாயூரத்தில் இருந்து வரும் கடைசிப் பஸ் போய்விட நெடுஞ்சாலையில் இரண்டு மணிநேரம் நின்று, லாரி ஒன்றில் இடம் பிடித்து, இரவு 1 மணிக்கு வீடு வந்து சேர்ந்தபோது, வெளிச்சத்தில் கண்களை இடுக்கிக்கொண்டு, வந்த கூன் பாட்டி கேட்டாள் : வாங்க, வாங்க ரொம்ப அகாலமாயிடுச்சு…கொஞ்சம் உப்புமா கிண்டித் தரச் சொல்றன…” பேசியபடி அடுப்பைப் பற்ற வைத்து, சூடான உப்புமாவையும், தொட்டுக்கொள்ள (வேறு ஒன்றும் இல்லாததால்) சீனியும் சுபையோ சுவை.

என் முப்பதாவது வயதில் இரவு 12.30க்கு ஸ்கூட்டர் பஞ்சர் ஆனதால், இருட்டில் தேடி, பஞ்சர் ஒட்டிக்கொண்டு பிறகு, வந்து சேர்ந்தேன். மனைவி சரிந்த வயிறோடு மெதுவாக நடந்து வந்து, “தயிர் சாதம் சாப்பிடறீங்களா?” என்றாள்.

ஐம்பத்தெட்டாவது வயதில் முதல் மருமகள் தூக்கம் கலைந்து விடும் என்ற பயத்தில் மகன் வாசலிலேயே விளக்கைப் போட்டுக்கொண்டு காத்திருந்தான். “தம்பி, தூங்கலியாப்பா?” என்று துவங்குமுன்பே, “பகல் டிரெயினில் வந்திருக்கலாமே, அப்பா?” என விளக்கை அணைத்துவிட்டு ஓசையின்றி நடந்து சென்றான்.

இன்று எழுபத்தொன்பதில் இரவு 12.30 மணிக்கு விமானம் வந்து சேர்ந்தாலும் கூட, வெளியே செல்லவில்லை. காலை பொழுது விடியட்டும் என்று காத்திருக்கிறேன். பேரனும், அவன் மனைவியும் குடியிருக்கும் மூடிய சமூகம் இரண்டு அடுக்கு பாதுகாப்பு கொண்டது. இரவு 10 முதல் காலை ஆறு வரை கதவு திறக்க அவர்களே எழுந்து வந்து அனுமதி தர வேண்டும். எனவே அகாலம் ஆகாது.

இது அகாலம்தான்…

சில க.நா.சு கவிதைகள்

மழை பெய்யும்போது அதில் நனைந்தால்
சளி பிடிக்கும் என்று நனைய மறுத்துவிட்டேன்
காற்று அடிக்கும்போது தொண்டையில்
புழுதிபடியும் இருமல் வந்து துôங்க
விடாது துன்புறுத்தும் என்று
ஜன்னல்களைச் சாத்தி விட்டேன்
யாரோ எழுதிய நூல்களைக் கிடைக்கும்போது
படித்துப் படித்துப் பார்வை
குறுகிப் போகிறதே தவிர ஞானம்
பிறக்கவில்லை என்று படிப்பதை
நிறுத்தி விட்டேன் புஸ்தகங்களைத்
தலைமாட்டில் வைத்துக்கொண்டு
படிக்காமல் இருக்கப் பழகிவிட்டேன்
காதலிகள் தேடி வந்தபோது ஆசை
அடித்துக்கொண்டாலும்
ஊரார் ஏதாவது சொல்வார்கள்
ராஜி ஆúக்ஷபிப்பாள் என்று
பயந்து ஒதுங்கி ஒதுங்கிப்
போய் விட்டேன். காதலி
வேறு யாரையோ நாடிப்
போய் விட்டாள். அவள்
போவதை சாத்திய கதவு
வழியாகப் பார்த்துப் பெரு
மூச்சு விட்டு நின்றேன்.
சாவு என்கிற அனுபவம் ஏற்படும்போது
மறுபடி அதை விவரிக்க ஒரு
சந்தர்ப்பம் ஏற்படும் என்று
இரண்டாவது சாவுக்கும்
காத்து நிற்கிறேன்.