பூனைகள்…….பூனைகள்……பூனைகள்……31

பூனைக்குட்டி                                    

அழகு இராமானுஜன்

மனசைக் கவரும் பூனைக்குட்டி
மஞ்சள் நிறக்குட்டி
எனது காலைப் புண்படாமல்
பிராண்டும் செல்லக்குட்டி

எங்கள் அப்பா மெத்தை மீது
ஏறிப்படுக்கும் குட்டி
தங்கை பள்ளி போகும்போது
வழியனுப்பும் குட்டி

தனது அம்மா கற்றுத் தந்த
üமியாவ்ý….மியாவ்  மொழியில்
தனக்குத் தெரிந்த கீதம் பாடி
மகிழ வைக்கும் குட்டி

குட்டி இன்பம் கோடி இன்பம்
கூறக்கூறப் பெருகும்
குட்டி ஒன்று வாங்கிப் போய் நீ
வளர்த்தால் உண்மை புரியும்

போ…………போ……..போ…………

(நன்றி : சிறுவர் மணி – 14.03.2015 )

முதற்சான்றிதழ் !

 
டாக்டர் ஜெ.பாஸ்கரன்

 

 
பண்டாரம், சங்கு, தட்டு மணி
ஏதுமின்றி அந்த சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஈரத்தலை, ஈர உடையுடன்,
உடல் பூரா திருநீறு பூசி, கையில் தீச்சட்டியுடன் முதியவர் ஒருவர் முன்னே
செல்ல, முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நான்கைந்து பேர் அவருடன் மெதுவாக
நடந்து கொண்டிருந்தனர்….
 
அலங்காரம், ஜோடனைகள், கட்சிக்
கொடிகள், பட்டாசு வெடிகள், குத்தாட்டங்கள் ஏதுமின்றி புதிதாக வேய்ந்த
பச்சைப் பாயில், அந்தப் பாட்டி – இப்போது வெறும் பிரேதம் – நெற்றியில் ஒரு
ரூபாய்க் காசோடு, கண் மூடிக் கிடந்தது..
 
மூலை திரும்பி,
இடுகாட்டுக் கப்பி சாலையின் ஏற்ற இறக்கங்களில் மூங்கில் தூக்கிகள் சென்ற
போது, பாட்டியின் உடல் லேசாக ஆடியது – அப்போதுதான் எதிர்பாராத அந்த
நிகழ்ச்சி நடந்தது. பாட்டி திடீரென்று கண்களைத் திறந்து உருட்டிப்
பார்த்தாள். ‘ கட்டேல போறவங்களா…. எங்கெடா என்னெ தூக்கிட்டுப் போறீங்க ? ‘
என்றபடி கையையும் காலையும் உதைக்க, நெருப்புச் சட்டியை தடாலென போட்டுவிட்டு
திருநீறு சட்டைக்காரர் ஓடி வர, மூங்கில் தூக்கிகள் தொப்பென்று பாயுடன்
பாட்டியை சாலையில் இறக்கி விட்டு, திசைக்கொருவராய் ஓட, பாட்டி மெதுவாய்
எழுந்தமர்ந்து, என் முகத்தருகே முழித்து, கழுத்தில் கை வைத்து ‘ நீயெல்லாம்
ஒரு டாக்டராடா ? ஒரு டெத் சர்டிபிகேட் கொடுத்து, என்னைக் கொனுட்டயேடா,
பாவி ‘ என்றபடி என் கழுத்தை உலுக்கினாள் !
 
திடுக்கிட்டுக் கண் விழித்தேன் – கனவு ! வியர்த்திருந்தது.
இரவு
அகாலத்தில் டாக்டர் வீட்டுக் காலிங் பெல் சத்தம் எப்போதுமே சங்கு
மாதிரிதான் ஒலிக்கும் ! அரைத் தூக்கத்தில், பாதிக் கதவைத் திறந்தேன் –
பக்கத்து வீட்டு முதியவர் நின்று கொண்டிருந்தார் – முகத்தில் கவலையா,
எரிச்சலா என்று உறுதியாய்த் தெரியவில்லை.
 
‘ டாக்டர், என்னோட அம்மா, தொண்ணூறு வயசாகிறது ‘ தயங்கினார் ..
 
‘சரி, ஆகட்டும், இப்பொ என்ன ?’ என்றேன் தூக்கம் கலைந்த வெறுப்பில்.
 
‘இல்லே.. மூச்சு பேச்சில்லாம இருக்கா அரை மணி நேரமா… என்னமோ மாதிரி இருக்கு.. நீங்க கொஞ்சம் வந்து பாத்தீங்கன்னா தேவலை’ இழுத்தார்.
முடியாதுன்னு
நெனச்சாலும், சொல்லமுடியாத ஒரு தர்ம சங்கடமான ப்ரொஃபஷன் ! ஹவுஸ்சர்ஜன்சி
முடித்து, தனியார் நர்சிங்ஹோம் டியூட்டி  டாக்டராகி ஒரு வாரம் கூட ஆகலை –
அதுக்குள்ள இது என்ன சோதனை ?
உள்ளுக்குள்ள பயம் – வெளியில்
காட்டிக்கொள்ளாமல் ‘என்ன ப்ராப்ளம் பாட்டிக்கு ‘ என்றேன். ( சொன்னா மட்டும்
வெளங்கிடறா மாதிரி – ஆயிரம் பேரக் கொன்னாத்தான் அரை டாக்டர்; நீ இன்னும்
காலேஅரைக்கால் டாக்டரா கூட ஆகலை என்றது உள்ளுக்குள்ள சாத்தான் !).
 

ஒண்ணுமில்லே, நேத்தி வரைக்கும் நல்லாத்தான் இருந்தா – காலைல ரெண்டு தரம்
லூஸ் மோஷன் ஆச்சு – மோர் குடிச்சிட்டு ஒன்பது மணிக்கே தூங்கப் போய்ட்டா –
பத்து நிமிஷம் முன்னாலெ ஏதோ இருமினாப்போல இருந்தது. போய்ப் பார்த்தா மூச்சு
பேச்சில்லே “ என் பதட்டத்தில் பாதி கூட இல்லாமெ பொறுமையாய்ச் சொன்னார்.
 
அவசரமா
ஒரு சட்டைய மட்டும் மாட்டிக் கொண்டு, டார்ச், ஸ்டெத் சகிதம் பக்கத்து
வீட்டுக்குள் பாய்ந்தேன் – தேவை இல்லாமெ பாதி ராத்திரிலெ வெள்ளைக் கோட்
போட்டுகிட்டு ஹவுஸ் விசிட் பண்ற சினிமா டாக்டர் மனத்துக்குள் வந்து போனார் !
 
ஆஸ்பத்திரிக்கு
வெளியில் நான் பார்க்கப் போகிற முதல் எமர்ஜென்சி கேஸ் இது – தொண்ணூறு
வயசுப் பாட்டிக்கு என்னவாயிருக்கும் – மோருன்னு பினாயில் குடிச்சிருக்குமோ ?
பாத்ரூம்ல வழுக்கி விழுந்திருப்பாளோ ? வலிப்பு ? ஸ்ட்ரோக் ? ஹார்ட்
அட்டாக் ? ஆஸ்பிரேஷன் ? குழம்பியவாறே நடந்தேன் – பாட்டிக்கு நேரம்
சரியில்லைன்னு மட்டும் நிச்சயமாய் நம்பினேன் !
ஹாலில் ரெடாக்ஸைட்
போட்ட தரையில் பாட்டியைத் தெற்குப் பார்த்தவாறு கிடத்தியிருந்தார்கள் –
சிறிது அபசகுனமாய்ப் பட்டது. இரண்டு வெண்பஞ்சுத் தலைக் கிழவர்களும், ஒரு
கூன்விழுந்த குண்டு அம்மணியும், சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தார்கள்.
 
‘ஒண்ணுமே
இல்லெ டாக்டர்; எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். நீங்க பாத்து
சொல்லிட்டீங்கன்னா….’ முடிவே செய்து விட்டிருந்தார்கள் – கட்டைவிரலில்
ரிப்பன் கட்டுவதுதான் பாக்கி !
 
ஒரு சுமாரான பாயில் பாட்டி
கிடந்தாள். மெல்லிய புடவை மெலே போர்த்தியிருந்தது. மூச்சு விடுகிறாளோ ?  –
அருகில் சென்று மெதுவாகத் தட்டாம்பூச்சி பிடிப்பவனைப் போல குத்துக்கால்
இட்டு உட்கார்ந்தேன். பாட்டி ஸ்நேகமாய்ச் சிரிப்பது போலிருந்தது. சீலிங்
பேன் காற்றில் மேல்புடவை வேறு மெதுவாகச் சிணுங்கியது. கையில், கழுத்தில்,
தேடிய இடத்தில் எல்லாம் பல்ஸ் இல்லை.
 
எங்கே ’இன்னும் உயிர்
இருக்கிறது’ என்று விபரீதமாக நான் சொல்லி விடுவேனோ என்ற அச்சமோ என்னவோ
தெரியாது – மூன்று ஜோடிக் கண்கள் என்னைக் கவலையுடன் உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தன.
நான் என் பயத்தை மறைக்கக் கையில் கட்டிக்கொள்ளாத வாட்சைத் தேடினேன்.
 

ஆ.. இப்பொது பல்ஸ் கையில் தெரிகிறது . டக்..டக்…டக் ’  விரல்களை மேலும்
கீழும் உருட்டி, பாட்டியின் மணிக்கட்டில் வீணை வாசித்தேன். ஒரு வினாடி ஒரு
யுகமாய்க் கழிந்தது. வியர்த்தது – நெஞ்சு ‘லப்’ டப்’ ’லப்’ ‘டப்’ என்றது.
அமைதி – உற்றுக் கவனி… சே…பயத்தில் என் பல்ஸ்தான் பாட்டியின் பல்ஸாய்த்
தெரிந்தது ! ஒரு மாதிரி தெளிந்து, கண்களில் டார்ச் அடித்தேன் –ஒரு பக்கம்
கரு விழி நட்சத்திரம் போல் கோணலாய் இருந்தது – கேட்ராக்ட் செய்த கண்ணாம்.
மறு கண்ணில் கரு விழி அகன்று, அணைந்த லாரி ஹெ.ட் லைட் மாதிரி
சலனமற்றிருந்தது
 
ஸ்டெத் வைக்கும் முன்பே ‘லப் டப்’ என் காதில்
கேட்டது – வேறென்ன, என் இதயத் துடிப்புதான் ! பாட்டிக்கு இதயம் நின்று சில
மணி நேரங்கள் ஆகியிருந்தது – லேசாக விரைத்திருந்தாள், ரைகர் மார்டிஸ் !
எழுந்து, இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு தலையை இரண்டு முறை பக்கவாட்டில் அசைத்தேன் – சினிமா பாணியில்.
 
‘என்ன டாக்டர், போய்ட்டாளா ?’ சோகத்தை விட, எதிர்பார்ப்பும், அவசரமுமே அதிகமாகத் தெரிந்த தொனியில் கேள்வி வந்தது !
 
‘ஆமாம், மஸ்ட் ஹேவ் ஹாட கார்டியாக் அரெஸ்ட்’ என்றேன். எங்கிருந்துதான் இக்கட்டான சமயத்துல இப்படி இங்க்லீஷ் வருமோ ?
மெதுவாகத்
திரும்பிப் பார்த்தேன். பாட்டியின் புடவை மேலும் கீழும் அசைந்தது – “
மூச்சு விடுகிறாளோ ? “ பயந்தவாறே மேலே சீலிங்கைப் பார்த்தேன் – ‘ மூச்சுக்
காத்தே நின்னுபோச்சு, இன்னும் எதுக்குய்யா மேல பேன் காத்து ?’ நான்
கேட்கவில்லை !
 
 “ வயதின் காரணமாய், இதயம், நுரையீரல்கள் வேலை
செய்வதை நிறுத்தி விட்டதால் இயற்கையில் மரணம் – நேரம், இடம், பெயர், வயது
இத்தியாதி எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தேன் “  முதல் சான்றிதழ், மரணச்
சான்றிதழ் !
வீட்டுக்கு வந்து, அரைத்தூக்கத்தில் கண்ட கனவில்தான்
பாட்டி என் கழுத்தை நெறிக்க வந்தாள் ! ஜன்னல் வழியே அடுத்த வீட்டு ஹாலில்
பாட்டி – தலை மாட்டில் அகல் விளக்கு; அழுகை ஓய்ந்து தூக்கம். பாட்டியும்
தூங்குகிறாளோ ? பொல்லாத பாட்டி !
 
மறு நாள் காலை அவசரமாகச் செல்ல
வேண்டியிருந்தது – வேலை முடிந்து வருவதற்குள் இரவாகி விட்டது. நாள்
முழுதும் செல்போன் பயமுறுத்தியவாறே இருந்தது. ‘ டாக்டர், உங்களுக்கு போன் ‘
என்று யார் அழைத்தாலும், பாட்டியின் முகம் என்னை மிரட்டியது. ஒவ்வொரு
முறையும் பாட்டியே கூப்பிடுவதைப் போல இருந்தது !
 
இரண்டாம் நாள் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற பால் சொம்பு பார்த்த பிறகுதான் என் வயிற்றில் பால் வார்த்ததைப் போல் இருந்தது !

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்

நிழல்கள்

ந மகாகணபதி

விரல்களை சுருட்டி பிரித்து
வாழ்வின் முறையை விளக்கினார் வகுத்து
விரல்களின் நிழல்கள்
சுவற்றில் விழுந்தன
வேறுவேறு வல்லூறுகள் 

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

அழகியசிங்கர்

நான் பார்த்த மலையாளப் படம் பெயர் ‘முன்னறியுப்பு|’அதாவது ‘எச்சரிக்கை’ என்று தமிழில் குறிப்பிடலாம்.  வேணு என்பவர் இதை இயக்கி உள்ளார்.  அவர் இயக்குநர் மட்டுமல்ல.  இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட. இந்தப் படத்தில் மம்முட்டி நடிப்பு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் நடித்திருக்கிறார். சி கே ராகவன் (மம்முட்டி) இரண்டு பெண்களைக் கொலை செய்த குற்றத்தால், 20 ஆண்டுகளாக ஜெயில் வாசத்தில் இருக்கிறான்.  ஜெயிலைப் பாதுகாக்கும் அதிகாரிக்கு உதவியாக இருக்கிறான்.  நல்ல கைதி என்று பெயர் எடுத்தவன்.  தண்டனை முடிந்தாலும், ஜெயிலை விட்டு எங்கும் போக விரும்பாதவன். அந்த ஜெயில் அதிகாரிக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒரு சரிதமாக எழுத வேண்டுமென்ற ஆசை.  அவர் பதவி மூப்பு அடைய நான்கு மாதங்களுக்குள் தன் சுயசரிதையை எழுத ஆசை.  ஆனால் அவரால் எழுத வராது.  அதனால் அஞ்சலி என்ற பெண் எழுத்தாளரை அந்தப் பணிக்கு கோஸ்ட் எழுத்தாளராக நியமிக்கிறார்.  அஞ்சலி அவரைப் பார்க்க வரும்போது, சி கே ராகவன் என்கிற ஆயுள் கைதியைப் பார்க்கிறாள்.  ஜெயில் அதிகாரி ராகவனை அஞ்சலிக்கு அறிமுகப்படுத்துகிறார்.  üüஇவன் இரண்டு பெண்களைக் கொலை செய்தவன்,ýýஎன்கிறார்.  அஞ்சலி அதைக் கேட்டு திகைப்படைகிறாள்.  தனியாக இருக்கும்போது, ராகவன் அஞ்சலியிடம், üüதான் அதுமாதிரி எந்தக் கொலையும் செய்யவில்லை,ýý என்கிறான்.  
அஞ்சலிக்கு அவன் மீது அக்கறை ஏற்படுகிறது.  அவனைப் பற்றி மீடியாவில் வெளிப்படுத்த விரும்புகிறாள்.  அவனைத் தனியாக சந்தித்து அவனைப் பேட்டி எடுக்கிறாள்.  அவன் பேச்சைக் கேட்டு அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 
கைதியாக இருந்தாலும் ராகவன் வித்தியாசமானவன்.  கடந்த 20 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் அவனைப் பார்க்க யாரும் சிறைக்கு வந்ததில்லை.  அவன் அங்கு இருப்பதையே சுதந்திரமாகக் கருதுகிறான்.  விடுதலை ஆகி வெளியே வர வேண்டுமென்று அவன் விரும்பவில்லை.  ராகவனின் எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு தத்துவப் போக்கு படத்தில் திறமையாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது.  ஒரு இடத்தில் அஞ்சலியும் ராகவனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  
“இருட்டான இடத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட ஒரு பல்ப் இருப்பதுபோல, ஏன் வெளிச்சமான இடத்தில் ஒரு பகுதியை இருட்டாகக் காட்ட பல்ப் மாதிரி எதாவது உள்ளதா?” என்று கேட்கிறான். அவன் குற்றமற்றவனா இல்லையா என்பதை அஞ்சலியால் கண்டுபிடிக்க முடியவில்லை.  
“ஏன் தண்டனை முடிந்தும் இந்த இடத்திலிருந்து வெளிவர விரும்பவில்லை?” என்று ராகவனை அஞ்சலி கேட்கிறாள்.  
“வெளியில் வந்தாலும் ஒன்று, இங்கயே இருந்தாலும் ஒன்று,” என்கிறான் ராகவன்.
20 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதா? என்று ஆச்சரியப்படுகிறாள் அஞ்சலி.
20 ஆண்டுகள் என்பது ஒன்றுமில்லை என்கிறான் ராகவன்.  தன்னைப் பற்றி எது கேட்டாலும் வெளிப்படையாக அவன் எதுவும் பேசுவதில்லை.  அஞ்சலி வைத்திருநத பேசுவதைப் பதிவு செய்யும் கருவியைப் பார்த்து என்ன என்று தெரிந்து கொள்கிறான்.  “நல்லகாலம், நாம் பேசுவதை மட்டும்தான் இது பதிவு செய்யும்.  எண்ணங்களை அல்ல,” என்கிறான். மேலும், “அதையும் இனிமேல் கண்டுபிடித்து விடுவார்கள்,” என்கிறான்.  
சி கே ராகவன் என்ற ஆயுள் கைதி அஞ்சலி மூலம் பத்திரிகையில் பிரபலமாகிவிடுகிறான். அவன் புகைபடத்துடன் பத்திரிகையில் பெரிய செய்தி வருகிறது. அஞ்சலி மீது ஜெயில் அதிகாரிக்குக் கோபம்.  “என்னைப் பற்றி எழுதச் சொன்னால், ராகவனைப் பற்றி எழுதியிருக்கிறாயே?” என்று அஞ்சலியைத் திட்டுகிறார்.  ராகவனைப் பற்றி எழுதியதால், அஞ்சலியின் புகழும் உயர்ந்து விடுகிறது.  ஒரு பிரபல புத்தக நிறுவனம், அஞ்சலிக்கு அதிகம் பணம் தருவதாகவும்,  ராகவன் மாதிரி தண்டனைப் பெறும் கைதியின் வாழ்க்கைப் பற்றி  எப்படியாவது ஒரு சுய சரிதம் அவர்களை வைத்தே எழுதும்படி வேண்டுகிறது.  அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில்தான் எழுத முடியும். ராகவனை மலையாளத்தில் எழுத வைத்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தீர்மானிக்கிறாள் அஞ்சலி. 
அவனை ஜெயிலிலிருந்து வெளியே ஒரு இடத்தில் தங்க ஏற்பாடு செய்கிறாள்.  அவன் சாப்பாட்டிற்கு என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறாள்.  அவனை எழுதச் சொல்கிறாள்.  அவனுக்கு ஏனோ எழுதத் தோன்றவில்லை.  அஞ்சலிக்கு அவன் மீது கோபம் வருகிறது.  கண்டிப்பாக அவனுடன் பேசுகிறாள்.  ராகவனுடன் அப்படிப் பேசுவது தவறு என்று அவளுடைய தோழர் அறிவுரை கூறுகிறார்.  ராகவன் ஒரு கைதி.  அவனை இங்கே அழைத்து வந்து ஒரு கைதி மாதிரி நடத்துவது சரியில்லை என்கிறான்.  
பெரிய புத்தக நிறுவனம் அஞ்சலிக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது.  அவள் மீது கேஸ் போடப்போவதாக மிரட்டுகிறது.  அதற்குள் ராகவனைப் பற்றி கேள்விப்பட்டு தில்லியிலிருந்து இன்னொரு பெண் நிருபர் ராகவனைப் பார்த்துப் பேசி ஒரு புத்தகம் எழுத நினைக்கிறாள்.  அஞ்சலி அவளைத் திட்டி அனுப்பி விடுகிறாள்.  ராகவனை இன்னும் மறைவான இடத்திற்கு அழைத்து வருகிறாள்.  அந்த இடத்தில் யாரும் ராகவனைப் பார்க்க முடியாது.  ஆனால் ராகவன்தான் எழுத எந்த முயற்சியும் எடுக்க வில்லை.
ஒவ்வொருமுறையும் ராகவனைப் பார்க்க வரும் அஞ்சலி கொடுக்கும் தொந்தரவு அதிகம்.  அந்த இடத்தில் ஒரு சுதந்திரமனிதனாக ராகவனால் இருக்க முடியவில்லை.
அஞ்சலி அவனைச் சந்திக்க கடைசி முறையாக வருகிறாள்.  அவனைப் பார்த்து, üüநீ இங்கே இருக்க வேண்டாம், எங்கே வேண்டுமானாலும் போ,ýý என்கிறாள் வெறுப்புடன்.
அவளைப் பார்த்து சிரித்தபடியே, ராகவன் அவளிடம் தான் எழுதியதைப் படிக்கக் கொடுக்கிறான்.  அஞ்சலிக்கு அவன் எழுதியதைப் பார்க்க திகைப்பாக இருக்கிறது.  அவன் எழுதியதைப் படிக்கிறாள்.
  
ராகவனும் அந்த இடத்தை விட்டுக் கிளம்ப தயாராகிறான்.  அவன் கொண்டு வந்த பொருட்களைச் சேகரித்துக் கொள்கிறான்.
அஞ்சலியும் படித்துக் கொண்டே வருகிறாள்.  அவள் முகம் இறுக்கமாகிக் கொண்டே வருகிறது.
ராகவன் கடைசியாக அவளிடம் சொல்வது : “நான் எங்கே போக வேண்டுமென்று எனக்குத் தெரியும்.  நான் திரும்பவும் ஜெயிலுக்குப் போகிறேன்,” என்கிறான்.  இரும்பு கட்டையால் அவளைத் தாக்கி கொலை செய்து விடுகிறான்.
இந்தப் படத்தில் இருந்து தெரிவது.
பெண்களால் ராகவன் துன்பப்படுகிறான். அவன் ஏன் இரண்டு பெண்களைக் கொலை செய்தான் என்பதைக் குறிப்பிடவில்லை.  ஜெயிலில் இருந்து வெளியே வந்தாலும், அஞ்சலியால் அவன் தொல்லைப் படுகிறான்.  அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.  சுதந்திரம் என்பது ஜெயிலில் இருப்பதாலே வெளியில் இருப்பதாலோ இல்லை.  சூழ்நிலை ஏற்படுத்தும் அழுத்தம்தான் சுதந்திரத்தைக் கெடுக்கிறது.
இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கிறது.
  மறக்க முடியாத ராகவன் பாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைத்திருக்கிறார். 

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்

செருப்புகள்




தி க கலாப்ரியா



நாங்கள் பிறந்த
உடனே
இணைந்து விட்டோம்
அந்தப் பாவத்திற்காகக்
காதலிக்கத் தொடங்கும்போது
அடிமைகளாகி விட்டோம்.

மனிதர்கள் உறங்கும்போதுதான்
எங்களால் – சிரித்துப் பேசிச் சேர முடிகிறது.

மீதி நேரங்களில்
ஒரே பாதையில்
ஒரே திசையில்
அருகருகே போனாலும்
அணைத்துக் கொள்ள
முடிவதில்லை

எங்கள் வாலிபத்தை
மனிதர்கள் மிதித்தே
சிதைத்து விடுகிறார்கள்.

வீதிகளே சொந்தமான
விபச்சாரிகள் – நாங்கள்
வீடுகளுக்குள் புகவே
முடியாது

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்


ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி

ஐராவதம்

என் இடம், உன் இடம், நோக்ஷல்பாரி
போய் பணம் கொண்டு வா
போய் பணம் கொண்டு வா
இன்னும் ஒருநாள் என் வசமில்லை
சோறும் குழம்பும் ஆக்குவதற்குப்
போய் பணம் கொண்டு வா
போய் பணம் கொண்டு வா

வேலையற்று வெறித்து நோக்கு.
நகரத் தெருக்களில் பிரமாதங்கள்
விரைந்து போகும் ; விரைந்து வரும்

உன்னுடைய பட்டினி
குழிந்த
உன் தலையினுள் இன்னும் தொடரும்.

உன்னுடைய இதயத்தின்
இடையறா ஓசை
ஓயத் தொடங்கும்.
உன்னுடைய சாமான்
சலித்துத் தொங்கும்

அசைவற்று, பசியுடன்
அழுக்காய் இருக்கும் நீ
பிறப்பு என்ற, சாவு என்ற
இரு பெரும் எல்லைகளை
மீறத் துணிந்தாய்.
உன்னுடைய சட்டைப் பையில்
காகிதத் துண்டுகள்,
ஆணிகள்,
தீப் பெட்டி.
சிலுவையில் அறையவோ?
சிதையில் வைக்கவோ?

ஹமார்பாரி, துமார்பாரி, நோக்ஷல்பாரி

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்

பாவக் குழந்தை              

அம்பைபாலன்

என் மனைவியின் தோழி
அழகின் அவதாரம்
அவள் குழந்தை
புட்டியில் வளர்ந்த
பாவக் குழந்தை.

எனது மனைவியும்
அழகில் சளைத்தவளல்ல
தோழியைப்
பழித்தவள்
பாலே கொடுத்தாள்.
பாவக் குழந்தைக்குப்
பால்தான் இல்லை.

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்

மூன்றாவது வகை


                                                             இந்தி மூலம் : டாக்டர் பச்சன்
                                                                                                                                                     

தமிழில் : கோ.ராஜாராம்







ஒருநாள்
பயந்த நெஞ்சுடன்
அவலக் குரலுடன்,
அதனினும் அதிகமாய்த்
துளிர்த்த விழிகளுடன்
நான் சொன்னேன்:

என் கையைப் பற்றிக்கொள்
ஏனெனில்,
என் வாழ்க்கைப் பாதையின் துன்பத்தைத்
தனியாய் சகிக்க இயலாது
நீயுந்தான் யாரிடமேனும்
இதையே சொல்ல நினைத்திருப்பாய்;
தனிமைப் பாதை
உன்னையும் உறுத்தியிருக்கும்.
ஆனால், என்னைப்போல் நீ
பயந்த வார்த்தை பகர்ந்திடவில்லை;

சரி, வாழ்க்கையில்
ஏற்ற, இறக்கம் நாமும்
ஏராளம் கடந்துவந்தோம்
இருட்டு, வெளிச்சம்
புயல், மழை, வெளிச்சம்
சேர்ந்தே சகித்தோம்.
காலத்தின் நெடும் பயணத்தில்
ஒருவர் மற்றவர்க்கு
உதவியாய், துணையாய் இருந்தோம்.

ஆனால்,
தள்ளாடும் கால்களுடன்,
நானும், நீயும்
ஒருவருக்கொருவர் போதுமாயில்லை,
வேறொரு மூன்றாவது கை
எனதையும் உன்னதையும் தாங்கிட வேண்டுமென
ஒப்புக்கொள்வதில்
நாணமென்ன நமக்கு?

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்


– நீலமணி


கண்ணகி

பாதச் சிலம்பால்
பதியை இழந்தவள்
பருவச் சிலம்பைத்
திருகி எறிந்தனள்

பர்ட்ஸ் வ்யு

இரண்டாம் உலகத்
தமிழ் மாநாட்டுக்குத்
திறக்கப்பட்டன சென்னையில்
இருபத்தியொரு
புதிய லெட்ரீன்கள்.

கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்

ப கங்கைகொண்டான்

தலைவிதி

நான்
ஏழை
என்பதற்கு
இன்னுமொரு
எடுத்துக்காட்டு:
எனது
தலைமயிர்கள்
இரும்புச் சரிகைகள
– வெள்ளியல்ல