நானும் பார்க்கிறேன் சினிமாக்களை……

அழகியசிங்கர்

நான் பார்த்த மலையாளப் படம் பெயர் ‘முன்னறியுப்பு|’அதாவது ‘எச்சரிக்கை’ என்று தமிழில் குறிப்பிடலாம்.  வேணு என்பவர் இதை இயக்கி உள்ளார்.  அவர் இயக்குநர் மட்டுமல்ல.  இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரும் கூட. இந்தப் படத்தில் மம்முட்டி நடிப்பு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் நடித்திருக்கிறார். சி கே ராகவன் (மம்முட்டி) இரண்டு பெண்களைக் கொலை செய்த குற்றத்தால், 20 ஆண்டுகளாக ஜெயில் வாசத்தில் இருக்கிறான்.  ஜெயிலைப் பாதுகாக்கும் அதிகாரிக்கு உதவியாக இருக்கிறான்.  நல்ல கைதி என்று பெயர் எடுத்தவன்.  தண்டனை முடிந்தாலும், ஜெயிலை விட்டு எங்கும் போக விரும்பாதவன். அந்த ஜெயில் அதிகாரிக்கு தன்னுடைய வாழ்க்கையை ஒரு சரிதமாக எழுத வேண்டுமென்ற ஆசை.  அவர் பதவி மூப்பு அடைய நான்கு மாதங்களுக்குள் தன் சுயசரிதையை எழுத ஆசை.  ஆனால் அவரால் எழுத வராது.  அதனால் அஞ்சலி என்ற பெண் எழுத்தாளரை அந்தப் பணிக்கு கோஸ்ட் எழுத்தாளராக நியமிக்கிறார்.  அஞ்சலி அவரைப் பார்க்க வரும்போது, சி கே ராகவன் என்கிற ஆயுள் கைதியைப் பார்க்கிறாள்.  ஜெயில் அதிகாரி ராகவனை அஞ்சலிக்கு அறிமுகப்படுத்துகிறார்.  üüஇவன் இரண்டு பெண்களைக் கொலை செய்தவன்,ýýஎன்கிறார்.  அஞ்சலி அதைக் கேட்டு திகைப்படைகிறாள்.  தனியாக இருக்கும்போது, ராகவன் அஞ்சலியிடம், üüதான் அதுமாதிரி எந்தக் கொலையும் செய்யவில்லை,ýý என்கிறான்.  
அஞ்சலிக்கு அவன் மீது அக்கறை ஏற்படுகிறது.  அவனைப் பற்றி மீடியாவில் வெளிப்படுத்த விரும்புகிறாள்.  அவனைத் தனியாக சந்தித்து அவனைப் பேட்டி எடுக்கிறாள்.  அவன் பேச்சைக் கேட்டு அவளுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 
கைதியாக இருந்தாலும் ராகவன் வித்தியாசமானவன்.  கடந்த 20 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் அவனைப் பார்க்க யாரும் சிறைக்கு வந்ததில்லை.  அவன் அங்கு இருப்பதையே சுதந்திரமாகக் கருதுகிறான்.  விடுதலை ஆகி வெளியே வர வேண்டுமென்று அவன் விரும்பவில்லை.  ராகவனின் எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு தத்துவப் போக்கு படத்தில் திறமையாகப் பயன் படுத்தப்பட்டுள்ளது.  ஒரு இடத்தில் அஞ்சலியும் ராகவனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  
“இருட்டான இடத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட ஒரு பல்ப் இருப்பதுபோல, ஏன் வெளிச்சமான இடத்தில் ஒரு பகுதியை இருட்டாகக் காட்ட பல்ப் மாதிரி எதாவது உள்ளதா?” என்று கேட்கிறான். அவன் குற்றமற்றவனா இல்லையா என்பதை அஞ்சலியால் கண்டுபிடிக்க முடியவில்லை.  
“ஏன் தண்டனை முடிந்தும் இந்த இடத்திலிருந்து வெளிவர விரும்பவில்லை?” என்று ராகவனை அஞ்சலி கேட்கிறாள்.  
“வெளியில் வந்தாலும் ஒன்று, இங்கயே இருந்தாலும் ஒன்று,” என்கிறான் ராகவன்.
20 ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பதா? என்று ஆச்சரியப்படுகிறாள் அஞ்சலி.
20 ஆண்டுகள் என்பது ஒன்றுமில்லை என்கிறான் ராகவன்.  தன்னைப் பற்றி எது கேட்டாலும் வெளிப்படையாக அவன் எதுவும் பேசுவதில்லை.  அஞ்சலி வைத்திருநத பேசுவதைப் பதிவு செய்யும் கருவியைப் பார்த்து என்ன என்று தெரிந்து கொள்கிறான்.  “நல்லகாலம், நாம் பேசுவதை மட்டும்தான் இது பதிவு செய்யும்.  எண்ணங்களை அல்ல,” என்கிறான். மேலும், “அதையும் இனிமேல் கண்டுபிடித்து விடுவார்கள்,” என்கிறான்.  
சி கே ராகவன் என்ற ஆயுள் கைதி அஞ்சலி மூலம் பத்திரிகையில் பிரபலமாகிவிடுகிறான். அவன் புகைபடத்துடன் பத்திரிகையில் பெரிய செய்தி வருகிறது. அஞ்சலி மீது ஜெயில் அதிகாரிக்குக் கோபம்.  “என்னைப் பற்றி எழுதச் சொன்னால், ராகவனைப் பற்றி எழுதியிருக்கிறாயே?” என்று அஞ்சலியைத் திட்டுகிறார்.  ராகவனைப் பற்றி எழுதியதால், அஞ்சலியின் புகழும் உயர்ந்து விடுகிறது.  ஒரு பிரபல புத்தக நிறுவனம், அஞ்சலிக்கு அதிகம் பணம் தருவதாகவும்,  ராகவன் மாதிரி தண்டனைப் பெறும் கைதியின் வாழ்க்கைப் பற்றி  எப்படியாவது ஒரு சுய சரிதம் அவர்களை வைத்தே எழுதும்படி வேண்டுகிறது.  அந்தப் புத்தகம் ஆங்கிலத்தில்தான் எழுத முடியும். ராகவனை மலையாளத்தில் எழுத வைத்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க தீர்மானிக்கிறாள் அஞ்சலி. 
அவனை ஜெயிலிலிருந்து வெளியே ஒரு இடத்தில் தங்க ஏற்பாடு செய்கிறாள்.  அவன் சாப்பாட்டிற்கு என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறாள்.  அவனை எழுதச் சொல்கிறாள்.  அவனுக்கு ஏனோ எழுதத் தோன்றவில்லை.  அஞ்சலிக்கு அவன் மீது கோபம் வருகிறது.  கண்டிப்பாக அவனுடன் பேசுகிறாள்.  ராகவனுடன் அப்படிப் பேசுவது தவறு என்று அவளுடைய தோழர் அறிவுரை கூறுகிறார்.  ராகவன் ஒரு கைதி.  அவனை இங்கே அழைத்து வந்து ஒரு கைதி மாதிரி நடத்துவது சரியில்லை என்கிறான்.  
பெரிய புத்தக நிறுவனம் அஞ்சலிக்கு நெருக்கடியைக் கொடுக்கிறது.  அவள் மீது கேஸ் போடப்போவதாக மிரட்டுகிறது.  அதற்குள் ராகவனைப் பற்றி கேள்விப்பட்டு தில்லியிலிருந்து இன்னொரு பெண் நிருபர் ராகவனைப் பார்த்துப் பேசி ஒரு புத்தகம் எழுத நினைக்கிறாள்.  அஞ்சலி அவளைத் திட்டி அனுப்பி விடுகிறாள்.  ராகவனை இன்னும் மறைவான இடத்திற்கு அழைத்து வருகிறாள்.  அந்த இடத்தில் யாரும் ராகவனைப் பார்க்க முடியாது.  ஆனால் ராகவன்தான் எழுத எந்த முயற்சியும் எடுக்க வில்லை.
ஒவ்வொருமுறையும் ராகவனைப் பார்க்க வரும் அஞ்சலி கொடுக்கும் தொந்தரவு அதிகம்.  அந்த இடத்தில் ஒரு சுதந்திரமனிதனாக ராகவனால் இருக்க முடியவில்லை.
அஞ்சலி அவனைச் சந்திக்க கடைசி முறையாக வருகிறாள்.  அவனைப் பார்த்து, üüநீ இங்கே இருக்க வேண்டாம், எங்கே வேண்டுமானாலும் போ,ýý என்கிறாள் வெறுப்புடன்.
அவளைப் பார்த்து சிரித்தபடியே, ராகவன் அவளிடம் தான் எழுதியதைப் படிக்கக் கொடுக்கிறான்.  அஞ்சலிக்கு அவன் எழுதியதைப் பார்க்க திகைப்பாக இருக்கிறது.  அவன் எழுதியதைப் படிக்கிறாள்.
  
ராகவனும் அந்த இடத்தை விட்டுக் கிளம்ப தயாராகிறான்.  அவன் கொண்டு வந்த பொருட்களைச் சேகரித்துக் கொள்கிறான்.
அஞ்சலியும் படித்துக் கொண்டே வருகிறாள்.  அவள் முகம் இறுக்கமாகிக் கொண்டே வருகிறது.
ராகவன் கடைசியாக அவளிடம் சொல்வது : “நான் எங்கே போக வேண்டுமென்று எனக்குத் தெரியும்.  நான் திரும்பவும் ஜெயிலுக்குப் போகிறேன்,” என்கிறான்.  இரும்பு கட்டையால் அவளைத் தாக்கி கொலை செய்து விடுகிறான்.
இந்தப் படத்தில் இருந்து தெரிவது.
பெண்களால் ராகவன் துன்பப்படுகிறான். அவன் ஏன் இரண்டு பெண்களைக் கொலை செய்தான் என்பதைக் குறிப்பிடவில்லை.  ஜெயிலில் இருந்து வெளியே வந்தாலும், அஞ்சலியால் அவன் தொல்லைப் படுகிறான்.  அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.  சுதந்திரம் என்பது ஜெயிலில் இருப்பதாலே வெளியில் இருப்பதாலோ இல்லை.  சூழ்நிலை ஏற்படுத்தும் அழுத்தம்தான் சுதந்திரத்தைக் கெடுக்கிறது.
இந்தப் படம் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை விறுவிறுப்பாக இருக்கிறது.
  மறக்க முடியாத ராகவன் பாத்திரத்தில் மம்முட்டியை நடிக்க வைத்திருக்கிறார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *