கசடதபற பிப்ரவரி 1971 – 5வது இதழ்

மூன்றாவது வகை


                                                             இந்தி மூலம் : டாக்டர் பச்சன்
                                                                                                                                                     

தமிழில் : கோ.ராஜாராம்ஒருநாள்
பயந்த நெஞ்சுடன்
அவலக் குரலுடன்,
அதனினும் அதிகமாய்த்
துளிர்த்த விழிகளுடன்
நான் சொன்னேன்:

என் கையைப் பற்றிக்கொள்
ஏனெனில்,
என் வாழ்க்கைப் பாதையின் துன்பத்தைத்
தனியாய் சகிக்க இயலாது
நீயுந்தான் யாரிடமேனும்
இதையே சொல்ல நினைத்திருப்பாய்;
தனிமைப் பாதை
உன்னையும் உறுத்தியிருக்கும்.
ஆனால், என்னைப்போல் நீ
பயந்த வார்த்தை பகர்ந்திடவில்லை;

சரி, வாழ்க்கையில்
ஏற்ற, இறக்கம் நாமும்
ஏராளம் கடந்துவந்தோம்
இருட்டு, வெளிச்சம்
புயல், மழை, வெளிச்சம்
சேர்ந்தே சகித்தோம்.
காலத்தின் நெடும் பயணத்தில்
ஒருவர் மற்றவர்க்கு
உதவியாய், துணையாய் இருந்தோம்.

ஆனால்,
தள்ளாடும் கால்களுடன்,
நானும், நீயும்
ஒருவருக்கொருவர் போதுமாயில்லை,
வேறொரு மூன்றாவது கை
எனதையும் உன்னதையும் தாங்கிட வேண்டுமென
ஒப்புக்கொள்வதில்
நாணமென்ன நமக்கு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *