முடியாத யாத்திரை – காசியபன் – கவிதைகள் – விலை ரு.60 – பக்கம் 63 – வெளியீடு : விருட்சம், 7 ராகவன் காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33
Category: Uncategorized
ஐராவதம் பக்கங்கள்
நவீன தோட்டிகள்
திரும்பவும்…
அழகியசிங்கர்
ஏதோ ஒரு சுழற்சி
நடந்துகொண்டே இருக்கிறது
நாம்
ஆரம்பித்த இடத்தில்
வந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது
நமக்குப் பதில்
நம் புத்திரர்கள் தொடர்கிறார்கள்
அவர்களும்
நம்மைப் போல் வியர்வைச் சிந்துகிறார்கள்
சம்பாதிக்க எங்கோ
ஓட்டமாக ஓடுகிறாரகள்
ஒரே குரலில் சத்தம் போடுகிறார்கள்
மகிழ்ச்சியை நம்மைப்போல் அனுபவிக்கிறார்கள்
நமக்கு ஏற்பட்ட துன்பமும் துயரமும்
அவர்களிடமும் தொடர்கின்றன
எதைப் பற்றியும் கவலைப்படாமல்
எஞ்சிய வருடங்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்
நாம் எதையோ எதிர்பார்த்துக்
காத்துக்கொண்டிருக்கிறோம்
சுழற்சி
திரும்பவும்…. (19.04.2013)
புதையல்
வெயில் கவிதை
ரவிஉதயன்
முதல் வரியிலிருந்து
கடைசிக்கு முந்தின வரிவரைக்கும்
ஒரே வெயில்…
ஒரே அனல்…
ஒரே சூடு…
கடைசி வரிக்கடியில்
ஒரு எறும்புநிழல்
அதில் இளைப்பாறுகிறேன்.
ஓர் ஒழுங்கற்ற தெருவில் இருக்கிறேன்
அழகியசிங்கர்
நான் குடியிருப்பது
ஓர் ஒழுங்கற்ற தெரு
இங்கே கட்டடங்கள் நீளம் நீளமாக
வளர்ந்துகொண்டே வருகின்றன..
குடியிருப்புகள் நாளுக்குநாள்
பெருகிக்கொண்டே போகின்றன
கட்டடங்களில் வாகனங்களை
நிறுத்த முடியாதவர்கள்
தெருவில்
நிறுத்துகிறார்கள்
அத்தனை வாகனங்களா என்று பயப்படும் அளவிற்கு
வாகனங்களை இடிக்காமல்
தெருவில் நடப்போர் அவதிப் படுகிறார்கள்
மாலை நேரங்களில்
எல்லோரும் தெருவில் நின்று
பேசிக்கொண்டிருக்கிறார்கள்
சிலர்
விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்
சத்தம் போட்டபடியே
சைக்கிள் ஓட்டிச்செல்லும்
பொடியன்களும் இருக்கிறார்கள்.
வளர்ப்பு நாய்களை
தெருவில் உலாவ விடுகிறார்கள்
தெருவை பாத்ரூமாக
அவை பயன்படுத்துகின்றன
தெருமுனையில்
வாலை சுழற்றியபடி
மாடுகளை கட்டி வைத்திருக்கிறார்கள்
ஒழுங்கற்ற தெருவில்
நாங்கள் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.
(12.04.2013)
ழ 6வது இதழ் – பிப்ரவரி / மே 1979
தேவதச்சன்
மூன்று கவிதைகள்
வாழ்வு சாவெனத்தன்
வேசம் மாற்றிக் கொள்ளுமுன்
உன் சீட்டைக் காலிபண்ணு
நீ பாத்திரம் அது
பார்வையாளனெனத்
தலைகீழாய் நாடகம் மாறப்போகிறது.
ஜ
மேகம் தெரியாத
மீனின் கோஷத்தை
ஓரத்தில்லை
இரண்டும் தெரிந்த
பறவையின் பாட்டை
ஏற்றிப்பார்.
ய
விதையாய் தொடர
வேறுவழி உண்டோ
மரமாய் பெருகி
பழமாய் கனியாமல்
ம்
என்றும்
சோற்றால் பசியை
ஜெயிக்கணு மென்றால்
பசியால் சோற்றை
ஜெயீக்கணும் தான்.
2. பகலிலிருந்து
உதிர்ந்தவனுக்கு
பகலெல்லாம் துவக்கம்
பகல் தொறும் துவங்கும் என்கனம்
ஒரு வெளிறிய சந்தேகம்
இடையறாது மிதந்து தொங்கும்
பயமேகம்
இடையறாதுசிரித்தோடும்ஒடைப்புனலில்
பகலுக்கொரு
பார்வைச் சன்னல்
3. திறந்து கிடக்கிறது
வரம்
நீ விரும்புவதுன்
உடல் முழுவதும்
ஆகுக
கதிரவன் எழுதுகிறான்
அழகியசிங்கர்
ஒரு தாளை எடுத்து
கதிரவன் எழுதினான்
இரண்டு வரிகள்
பின் அம்மாவிடம் காட்டினான்
இதெல்லாம் கவிதை
இல்லை என்றாள் அம்மா
கதிரவன் விடவில்லை
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்
பின் அப்பாவிடம் காட்டினான்
உனக்கு அதெல்லாம் வராது என்றார்
அப்பா
பல்லை நறநறவென்று கடித்தான் கதிரவன்
பின்
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்
அலுவலகம் போகும் பிகுவில்
இருந்த அக்காவிடம் காட்டினான்
வேலையைப் பார், கதிரவா..
உனக்கெல்லாம் வராது இதெல்லாம்..என்றாள்.
இன்று யாருடன் சுற்றப் போகிறாள் இவள்
என்று கோபமாக முறைத்தான்.
பின் சற்றும் மனம் தளராமல்
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்
துள்ளிக் குதிக்கும் வயதில் நடமாடும்
தங்கையிடம் காட்டினான்
போடா…இங்க கொண்டு வராதே
வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்காதே
கலீல் கீப்ரான் என்ற நினைப்போ என்றாள்..
அவளை அடிக்கப் போனான் கதிரவன்
அம்மா கதிரவனைத் திட்டினாள்
பெண் குழந்தையைத் தொடாதே..என்றாள்
கதிரவன் தான் எழுதிய காகிதத்தை
ஒருமுறை படித்தான்..திரும்பவும்
இன்னொருமுறை படித்தான் பிறகு
கிழித்து எறிந்தான் துண்டங்களாக..
ஒருமுறை கதிரவன் வீடு திரும்பும்போது
அம்மா பக்கத்து வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்
என்மகன் கதிரவன் கவிதை எழுதுகிறான் என்று..
(10.04.2013)
வளசரவாக்கம்
அழகியசிங்கர்
காலையில் பொழுது விடிந்ததும்
தூங்கியும் தூங்காமலும்
எழுந்து கொஞ்சம் உட்கார்ந்தபிறகு
ஞாபகம் வருகிறது
வளசரவாக்கம் என்று
8.30மணி அளவில்
ஓடி ஆடிப் போக முடியாத வயதில்
ஏதோ தொத்தல் வண்டியில்
ஏறி
எதிர்படும் கூட்டத்தைப்பற்றி
கவலைப்படாமல்
முகத்தில் புன்னகை மாறாமல்
இதோ
வளசரவாக்கம்
வந்து நுழைந்தவுடன்
என் சீட்டில் போய் அமர்ந்து கொள்வேன்
ஏதோ கனவுலகில் இருப்பதுபோல்
தோற்றம்
பலவிதமான மனிதர்களைப்
பார்த்து பார்த்து
அவர்கள் ஏதோ சொல்ல
நானும் கேட்பேன்
பின் நான் ஏதோ சொல்ல
அவர்களும் கேட்பார்கள்
வளசரவாக்கம் வளசரவாக்கம்
சக ஊழியர்கள் அவர்கள்
இருக்கைகளில் போய் அமர்ந்து
எதிர்படும் நீண்ட கூட்டத்தை
சமாளிப்பார்கள்
வளசரவாக்கத்தில்தான்
இருக்கிறோமா
என்பது தெரியாமல்
வாகன நெரிசல்
பிரதான சாலை வழியாக
போய் வந்தவண்ணம் இருக்கும்..
நான் வெளியே வரும்போது
இருட்டாகிவிடும்..
வீடு போய் சேர்வதற்குள்
போதும் போதுமென்றாகிவிடும்
இப்படித்தான் கிலி உண்டாக்குகிறது
வளசரவாக்கம்..
09.04.2013