கதிரவன் எழுதுகிறான்

அழகியசிங்கர்

ஒரு தாளை எடுத்து
கதிரவன் எழுதினான்
இரண்டு வரிகள்
பின் அம்மாவிடம் காட்டினான்

இதெல்லாம் கவிதை
இல்லை என்றாள் அம்மா

கதிரவன் விடவில்லை
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்
பின் அப்பாவிடம் காட்டினான்

உனக்கு அதெல்லாம் வராது என்றார்
அப்பா
பல்லை நறநறவென்று கடித்தான் கதிரவன்

பின்
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்

அலுவலகம் போகும் பிகுவில்
இருந்த அக்காவிடம் காட்டினான்

வேலையைப் பார், கதிரவா..
உனக்கெல்லாம் வராது இதெல்லாம்..என்றாள்.

இன்று யாருடன் சுற்றப் போகிறாள் இவள்
என்று கோபமாக முறைத்தான்.

பின் சற்றும் மனம் தளராமல்
இன்னும் இரண்டு வரிகளைச் சேர்த்தான்

துள்ளிக் குதிக்கும் வயதில் நடமாடும்
தங்கையிடம் காட்டினான்

போடா…இங்க கொண்டு வராதே
வெட்டியாய்ப் பொழுதைக் கழிக்காதே
கலீல் கீப்ரான் என்ற நினைப்போ என்றாள்..

அவளை அடிக்கப் போனான் கதிரவன்
அம்மா கதிரவனைத் திட்டினாள்
பெண் குழந்தையைத் தொடாதே..என்றாள்

கதிரவன் தான் எழுதிய காகிதத்தை
ஒருமுறை படித்தான்..திரும்பவும்
இன்னொருமுறை படித்தான் பிறகு
கிழித்து எறிந்தான் துண்டங்களாக..

ஒருமுறை கதிரவன் வீடு திரும்பும்போது
அம்மா பக்கத்து வீட்டாரிடம் பேசிக் கொண்டிருந்தாள்

என்மகன் கதிரவன் கவிதை எழுதுகிறான் என்று..

(10.04.2013)

One Reply to “கதிரவன் எழுதுகிறான்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *